Friday, January 6, 2017

கோத்தகிரி.. என்ன பார்க்கலாம்.. எங்கு தங்கலாம் + கொடநாடு எஸ்டேட் ஒரு விசிட்

கோத்தகிரியில் என்ன விசேஷம்?

இரண்டு விஷயங்கள்.. ஒன்று கிளைமேட்.. பெரும்பாலான மாதங்கள் குளிர் இருக்கும் ஊர்.அடுத்தது எங்கெங்கு காணினும் தேயிலை தோட்டங்கள் .. இதனால் எங்கும் பசுமை நிறைந்து அழகு ததும்புகிறது.

பார்ப்பதற்கு என்ன இருக்கிறது?

ஒரு சில .இடங்கள் உண்டு. முக்கியமாக கொட நாடு. (ஆம்.. ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது அடிக்கடி சென்று தங்குவாறே .. அதே கொட நாடு தான்.இது கோத்தகிரியில் இருந்து 18 கி. மீ தூரத்தில் உள்ளது.அங்கு ஒரு வியூ பாயிண்ட் உள்ளது. அதனை விட முக்கியம் செல்லும் 18 கி. மீட்டரும் பசுமை போர்த்தி ரசிக்கும் வண்ணம் உள்ளது.மற்றபடி கிளைமேட்டை என்ஜாய் செய்தபடி ரிலாக்ஸ் செய்யலாம். தேயிலை தோட்டங்களில் காலாற நடக்கலாம். அவ்வளவு தான்.

மலை வாசஸ்தலம் என்றால் - மலை மேல் பயணம் செய்யணும் இல்லியா? நாமே கார் ஒட்டி செல்லலாமா? கடினமான மலையா?

மலை வாசஸ்தலம் தான். ஆனால் இதுவரை நாங்கள் சென்றவற்றில் இவ்வளவு உயரத்தில் உள்ள ஹில் ஸ்டேஷன் ஏற அவ்வளவு எளிதில் இருப்பது - இங்கு தான் பார்க்கிறோம். பிரிட்டிஷ் காரர்கள் போட்ட மிக மிக மிக அற்புத சாலைகள் மற்றும் அதன் வடிவமைப்பு அட்டகாசம். சம தளத்தில் பயணிக்கிற உணர்வு தான் வருகிறதே ஒழிய மலை மேல் ஏறுவது போல தோன்றவே இல்லை; வளைவுகள் அப்படி திட்டமிட்டுள்ளனர். அற்புதம் ! குறிப்பாக எல்லா மலை ஏறும்போதும் வாமிட் செய்வோர் கூட கோத்தகிரி செல்லும் போது வாமிட் செய்ய மாட்டார்கள் !கார் ஓட்ட முடியுமெனில் தைரியமாக நாமே கார் ஒட்டி செல்லலாம்; எந்த பிரச்னையும் இல்லை.

தங்க இடம்?

50க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்கள் உள்ளன. முழு லிஸ்ட்டை எந்த ஒரு பயண வலை தளத்திலும் பார்க்கலாம்.

நாங்கள் தங்கியது பீக் வியூ என்கிற ரிசார்ட்டில்.

பீக் வியூ ரிசார்ட் அனுபவம் எப்படி இருந்தது?

நிச்சயம் மிக இனிமையாக இருந்தது.

கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து 3 கி. மீ தொலைவில் உள்ளது இந்த பீக் வியூ ரிசார்ட். ஊட்டி- கோத்தகிரி நெடுஞ்சாலை மீதே உள்ளது; எனவே கோத்தகிரியில் இருந்து ஊட்டி/ குன்னூர் செல்லும் எந்த பஸ்ஸில் ஏறினாலும் இங்கு இறங்கி  கொள்ளலாம்.மேலும் ஏராள மினி பஸ்கள் ஓடுகின்றன. அவற்றின் மூலமும் இங்கு வந்து  சேரலாம்.இது நந்த குமார் என்பவரின் குடும்பம் பராமரிக்கும் ரிசார்ட். இவர்களும் அதே காம்பவுண்டில் தனியே ஒரு வீட்டில் இருப்பதால் - பாச்சிலர்ஸ் தங்க அனுமதிப்பதில்லை; குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி தருகிறார்கள்.மொத்தம் 4 ரூம். சிறிய ரூம் வாடகை 2400; பெரிய ரூம் 2700.

அங்கேயே உள்ள கிச்சனில் வசந்தி என்கிற குக் மிக மிக அற்புதமாக சமைத்து தருகிறார். டிவைன் ! விலையும் மிக நியாயமாக உள்ளது.முன்பு இவர்கள் தங்கிய வீட்டை தான் இப்போது ரிசார்ட்  ஆக்கியுள்ளனர். குளிக்க ஹீட்டர் உள்ளது; அறையினுள் - அறையை சூடாக்கும் ஹீட்டர் இல்லை; மாலை நேரம் குளிர் உள்ளே வராமல் கதவுகளை சாத்தி வைத்து விட்டால் சமாளித்து  விடலாம்.

இவர்களது ஆர்கானிக் கார்டன் அருமையான பராமரிப்பு. கேரட், பீன்ஸ், டபுள் பீன்ஸ், உருளை கிழங்கு  உள்ளிட்ட பல காய்கறிகள்  இவர்கள் விளைய வைத்து - இவர்களும் பயன்படுத்தி விற்கவும் செயகிறார்கள்.இவர்களது டீ எஸ்டேட்ட்டும் பின்னாலேயே உள்ளது; அதனையும் சுற்றி பார்க்கலாம்.

மாலை நேரம் 500 ரூபாய் சார்ஜ் செய்து காம்ப் பாயர் ஏற்பாடு செய்கிறார்கள். தேவையெனில் சொல்லலாம்.

கோத்தகிரியில் எத்தனை நாள் தங்கலாம்?

சிலர் ஊட்டியில் தங்குவதற்கு பதில் இங்கு தங்கி கொண்டு - இங்கிருந்து பஸ் அல்லது காரில் ஒரு நாள் குன்னூர் சென்று அங்குள்ள  இடங்களை பார்த்து வருகிறார்கள். போலவே மற்றொரு நாள் ஊட்டி சென்று திரும்புகிறார்கள். இப்படி ஊட்டி மற்றும் குன்னூர் சேர்த்து விசிட் அடித்தால் 3 அல்லது 4 நாள் தங்கலாம். வெறும் கோத்தகிரி எனில் 2 அல்லது அதிக பட்சம் 3 நாள் தங்கலாம்.

பீக் வியூவில் தங்கினால் - ஊட்டி சாலையில்  பீக் வியூவிற்கு சற்று மேலே - 5 முதல் 10 நிமிடம் நடந்தால் சில அழகிய காட்சிகளை காணலாம்..உயரமான சாலையின் கீழ் பள்ளத்தாக்கு .. சுற்றிலும் மலைகள் மற்றும் மேலிருந்து கீழ் வரும் தேயிலை தோட்டங்கள்..என மனதை கொள்ளை அடிக்கும் காட்சிகள்..

கொடநாடு?

முதலில் சொன்னது போல, கோத்தகிரியில் இருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது கொடநாடு. இது சற்று உயரத்தில் இருப்பதால், வியூ பாயிண்ட் ஒன்று  அமைத்துள்ளனர்.நல்ல சூழல் எனில் மேகங்கள் தவழ்வதை கண்டு மகிழலாம்; மதியம் 3 மணிக்கு மேல் மேகங்கள் அதிகம் தெரியாது என்கிறார்கள். எனவே காலை நேரம் செல்வது சிறப்பு.இங்குள்ள வியூ பாயிண்ட்டை விட கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லும் ரூட் தான் அமர்க்களம். நீங்கள் ட்ரெக்கிங்/ நடை பிரியர் எனில் 18 + 18 = 36 கிலோ மீட்டர் நடக்கலாம் ! ஒரு நாள் ஆகும்.. தப்பே இல்லை. அல்லது செல்லும்போது பஸ்ஸில் சென்று விட்டு வரும்போது நடந்து வரலாம். அற்புதமான பசுமை/ காட்சிகளில் சொக்கி போவோம் !

கொடநாடுக்கு எப்படி செல்வது?

நீங்கள் காரில் வந்திருந்தால் எளிதில் அதில் செல்லலாம்.

 அல்லது அங்குள்ள கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்.

இன்னும் எக்கனாமி தேவை எனில் கோத்தகிரியில் இருந்து ஒரு மணிக்கொரு பஸ் கொடநாடு செல்கிறது; 9 ரூபாய் மட்டுமே டிக்கெட்; போலவே அங்கிருந்தும் - கோத்தகிரிக்கு ஒரு மணிக்கொரு பஸ் வருகிறது. நாங்கள் இதில் தான் சென்று வந்தோம்.

ஒரு பஸ்ஸில் சென்று கொடநாடு வியூ பாயிண்ட் பார்த்து விட்டு பின் நாங்களே இறங்க ஆரம்பித்து விட்டோம். ஆங்காங்கு நின்று ரசித்து படங்கள் எடுத்து 2 மணி நேரம் கழித்தோம்.பின் ஒரு பஸ் வர, அதனை பிடித்து கீழே வந்து சேர்ந்தோம்.

இங்கு சாப்பிட அவ்வளவு நல்ல கடைகள் இல்லை; எனவே மதிய உணவு நேரம் இங்கிருந்தால் பிஸ்கட் போன்றவை சாப்பிட்டு சமாதானம் அடைய வேண்டியது தான்.

ஜெ அவர்களின் எஸ்டேட்?அங்கு ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. அவற்றில் மிக அழகான ஒன்று ஜெ அவர்களின் எஸ்டேட் தான் ! வெளியில் இருந்து தான் பார்க்க முடிகிறது. நிறைய சாலைகள் அவர்களே அமைத்துள்ளனர். அனைத்தும் தனியார் சாலை; அனுமதி இல்லை என போர்டு தொங்குகிறது; மேலும் ஆங்காங்கு வாட்ச் மேன்கள் வேறு..

இருந்தும் அவரது ஒரு சில தோட்டங்கள் அதிக தடுப்பு/ வாட்ச் மேன் இல்லாமல் இருந்தது. அவற்றில் மட்டும் கொஞ்சம் உள்ளெ சென்று சில படங்கள் எடுத்தோம். (மற்றவற்றில் வெளியில் இருந்து பார்க்கலாம்; படம் எடுக்கலாம்)

அவர் எப்போதும் தங்கும் கொட நாடு பங்களாவை பஸ்ஸில் செல்லும்போதே காண்பிக்கிறார்கள். உள்ளே ஹெலிபேட் உள்ளதாம்; விமானத்தில் தான் வந்து செல்வாராம்.

அவரது எஸ்டேட் பெயரே கொடநாடு எஸ்டேட் தான். அதே பெயரில் தேயிலை நிறுவனமும் வைத்து - தேயிலை வெளிநாடுகளுக்கு மட்டும் மிக நல்ல விலையில் ஏற்றுமதி ஆகிறது என்கிறார்கள்.

பீக் வியூ மற்றும் டிரைவரின் தொலை பேசி எண்கள் 

Peak view Mr. Nandhu 94435 54025

Driver Mr. Sagai 94435 22199

இறுதியாக.. 

ஊட்டி போல இனிய கிளைமேட் .. ஆனால் அதை விட அழகிய சுற்றுப்புறம்.. அவசியம் ஒரு மினி ட்ரிப் அடிக்க வேண்டிய இடம் கோத்தகிரி !

தொடர்புடைய பதிவு

கோத்தகிரி - இனிய பயணம் - புகைப்படங்கள் - ட்ரைலர்

4 comments:

 1. சென்ற மே மாதம்தான் ஊட்டி சென்று வந்தேன். கோத்தகிரி போகவில்லை. மிஸ் செய்து விட்டோமே என்று இப்போது வருத்தமாக உள்ளது.

  அடுத்த முறை செல்லும்போதுதான் பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 2. அருமையாக எழுதி உள்ளீர்கள். நான், இந்த கோடையில் குன்னூர் சென்று (ஒரு நண்பர் அறிவுரை பேரில் தான் ) அங்கு தங்கி, அங்கிருந்து ஊட்டி, கோத்தகிரி சென்று வருவது சிக்கனம் என இருந்தேன். நீங்கள் கூறுவது பார்த்தால் கோத்தகிரி தங்கும் இடமாக கொள்ளலாம் போல. எது எடுத்தால், சிக்கனமாக முடிக்கலாம் சார்?

  ReplyDelete
 3. நல்ல தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 4. நன்றி வரதராஜலு சார்; அடுத்த முறை ஊட்டி செல்லும்போது சென்று வாருங்கள்

  பரமசிவம் சார்: குன்னூர் ஊட்டிக்கும் கோத்தகிரிக்கும் நடுவில் உள்ளது; அங்கு சில காணும் இடங்களும் உள்ளது; நிச்சயம் அங்கு தங்கலாம். கோத்தகிரி சென்று தங்குவதாய் இருந்தால், வெறுமனே கிளைமேட் என்ஜாய் செய்ய மட்டுமே.. மேலும் தேயிலை தோட்டங்களை காண..

  நன்றி வெங்கட்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...