Wednesday, November 11, 2009

அடுத்த வீட்டு பெண் -'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009'


தெருவில் நுழையும் போதே மக்கள் ஆங்காங்கு நின்று பேசியவாறு இருந்தனர். ஏதோ வித்யாசமாய் உணர்ந்தேன். வண்டியை நிறுத்தி விட்டு அருகில் சென்றேன்.

" வித்யா தீ வச்சுகிட்டா சார் !" அதிர்ந்தேன்.

வித்யா என் பக்கத்து வீட்டு பெண். கல்யாணமாகி ஏழு வருடமாகிறது. ஒரு பெண் பள்ளியில் படிக்கிறாள்.

"இப்போ வித்யா ?"

"ஆஸ்பத்திரிலே இருக்கா "

"அவங்க அம்மா அப்பாவுக்கு சொல்லியாச்சா?'

"வந்துட்டாங்க... வீட்டுக்குள்ளே போலீஸ் இருக்காங்க. நாங்க உள்ளே போகலை. நீங்க வக்கீல்னு சொல்லிட்டு கொஞ்சம் போலீசில் பேசி பாருங்க. "

நான் அவள் வீட்டுக்குள் நுழைந்தேன். போலீஸ் அதிகாரியிடம் என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன். அவர் என்னிடம் விசாரிக்க தொடங்கினார்.

"அடிக்கடி சண்டை வருமா சார்?"

"ஆமாம். வழக்கமா உள்ளது தான்"

" அவங்க ஹஸ்பண்ட் குடிப்பாரா?"

தயங்கினேன். "சும்மா சொல்லுங்க"

"ஆமாம். அதனால் தான் பல நேரம் சண்டை"

"ம்ம்..நான் இப்ப ஹாஸ்பிட்டல் போறேன். நீங்க வர்றீங்களா?'

"சரி.. வீட்டில் சொல்லிட்டு வந்துடுறேன்".

வழியில் சப் இன்ஸ்பெக்டர் பொதுவான சில விஷயமும் வித்யா பற்றியும் பேசி கொண்டிருந்தார். வித்யா, கணவனிடம் பட்ட கஷ்டங்களை எனக்கு தெரிந்த வரை சொல்லி கொண்டிருந்தேன்.

"சில நாள் குடி போதையில் தெருவிலயே விழுந்து கிடப்பார். பல நேரம் அவர் அடிச்சு வித்யா, பொண்ணு ரெண்டு பேருக்கும் காயம் ஆயிருக்கு"

"வாரத்துக்கு ரெண்டு கேசாவது பாக்கிறோம் சார். அநேகமா ஒன்னு புருஷன் பொண்டாட்டி சண்டை.. இல்லாட்டி மாமியார் நாத்தனார் கொடுமை..அந்த பொண்ணோட புருஷன் நம்பர் இருக்கா? "

"இல்லை சார்"

" பாருங்க.. பக்கத்துக்கு வீட்டு காரங்க நம்பர் கூட இல்லாம வாழ்றோம்".

மருத்துவ மனை வந்து விட்டது. வித்யா பெற்றோர் கதறியவாறு இருந்தனர். என்னை பார்த்ததும் அழுகை அதிகமானது. "நீங்க எல்லாம் இருக்கீங்கன்னு இருந்தோமே!! அந்த சண்டாள பாவி தான் இப்படி பண்ணிட்டான். பணம் வேணும்ன்னு கேட்டுருக்கான். இவள் பீஸ் கட்டணும்னு தரலை. எரிச்சுட்டான் படு பாவி"

"உங்க மருமகன் எங்கே?"

" தெரியலே சார். போன் பண்ணா சுவிட்ச் ஆப்-ன்னு வருது".

" அநேகமா அந்த ஆள் வேலையா தான் இருக்கும். ... உங்க பொண்ணு ஏதாவது பேசினாளா? "

"உள்ளே விடலை சார்"

சப் இன்ஸ்பெக்டர் எங்களை உள்ளே அழைத்து போனார். தீ காயம் அதிகம் என்றும் பிழைப்பது கடினம் என்றும் தெரிய வந்தது.

வித்யாவை அந்த நிலையில் பார்ப்பது கொடுமையாக இருந்தது. கழுத்துக்கு கீழ் அநேகமாய் எரிந்திருந்தது.

சப் இன்ஸ்பெக்டர் குனிந்து மெல்ல பேசினார். "ஏம்மா.. எப்படி நடந்தது?"

வித்யா ஏதும் பேசலை. விழித்து எங்களை பார்க்க முயற்சித்தாள்.

"சொல்லும்மா.. அந்த படு பாவி தானே.. சொல்லு...அந்த சண்டாளன் தான்னு சொல்லு;"

வித்யா முதலும் கடைசியுமாய் மெல்ல முனகினாள். "அவுக தான்.. அவுக தான்.. அவுக தான்.. "

48 comments:

 1. தன் மரண வாயிலிலும் ‘அவுகதான்... அவுகதான்...’ என்று தன் கணவனை மிக மரியாதையாகக் குறிப்பிடும் வித்யா என் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

  ReplyDelete
 2. மனதைத் தொட்ட கதை. வித்யாக்களின் கதை எப்போது தான் தீருமோ?

  என்றென்றும் அன்புடன்
  வெங்கட், புது தில்லி
  www.venkatnagaraj.blogspot.com

  ReplyDelete
 3. நச் முடிவுதான். நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. நன்றி ரவி பிரகாஷ் அவர்களே.. தங்கள் பதிலுக்கும், பின்னோட்டத்திற்கும்.. உங்களை பற்றி ஏற்கனவே கேள்வி பட்டுள்ளேன். ரேகா ராகவன் மூலம் தங்களுடன் நட்பு வந்ததில் மிக மகிழ்ச்சி.

  ReplyDelete
 5. நன்றி வெங்கட் .. தங்கள் பதிலுக்கும், பின்னோட்டத்திற்கும்..தாங்களும் கதை போட்டியில் கலந்து கொண்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. " பாருங்க.. பக்கத்துக்கு வீட்டு காரங்க நம்பர் கூட இல்லாம வாழ்றோம்".
  - Lots of messages to us (society) thru this phrase

  - D. Prakash

  ReplyDelete
 8. விறுவிறுப்பை கடைசி வரை தக்கவைத்துக் கொண்டது

  ReplyDelete
 9. க‌தை ம‌ன‌தை க‌ன‌க்க‌ வைத்த‌து... குறிப்பாக அந்த‌ முடிவு ரொம்பவே நெகிழ்ச்சி...

  வாழ்த்துக்க‌ள் மோக‌ன் குமார்...

  ReplyDelete
 10. நன்றி பிரகாஷ். தற்போது எங்கு உள்ளீர்கள்?சிங்கப்பூர்? இந்தியா?

  ரிஷபன் சார். மிக்க நன்றி. தங்களை போல் பெரியவர்கள் வந்து பார்த்து வாழ்த்தியது மிக மன நிறைவை தருகிறது. தொடர்ந்து படித்து கருத்திடுங்கள்.

  ReplyDelete
 11. வாருங்கள் ராம் குமார் அமுதன். முதல் முறை வந்துள்ளீர்கள். அடிக்கடி வந்து கருத்திடுங்கள் மிக்க நன்றி.

  வாருங்கள் கோபி. நன்றி.முடிவு புரியாமல் போய் விடுமோ என ஐயம் இருந்தது. நண்பர் ஒருவர் இன்னும் இரு வரி எழுத சொன்னார். எனக்கென்னவோ கதை அவுக தானுடன் தான் முடிய வேண்டுமென தோன்றியது.

  பலர் புரிந்து கொண்டு முடிவை பாராட்டும் போது மகிழ்வாக உள்ளது.

  ReplyDelete
 12. கதை நன்றாக இருக்குதுண்ணு சொல்ல முடியாமல்... நெஞ்சு வலிக்கிறது. இன்னும் எத்தனை பெண்கள் இப்படி துன்பங்களிலிருந்து மீளமுடியாமல்...
  நன்றி.. பலரையும் இது யோசிக்க வைக்கும்...

  ReplyDelete
 13. மனதை தொடும் முடிவு. வாழ்த்துக்கள்! --கே.பி.ஜனா

  ReplyDelete
 14. நன்றி பூங்கோதை நீங்கள் சொல்வது உண்மை தான். இன்னும் பல பெண்கள் இந்த நிலையில் உள்ளனர்.

  ஜனா சார் மிக்க நன்றி. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

  இருவருக்கும்: முதல் முறை வந்துள்ளீர்கள். அவ்வப்போது வருக. ஆதரவு தருக. (அரசியல் வாதி ஸ்டைலில் இருக்கோ?)

  ReplyDelete
 15. உருக்கமான கதை. நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. மனதை கனக்க வைத்த கதை :(

  என் அக்காள்(பெரியப்பா மகள்) என் சிறுவயதில் இப்படிதான் தீ குளித்து இறந்து போனாள்..இல்லை தீ வைத்து கொளுத்தப்பட்டாள்..

  இந்த கயவர்களை நாம் என்னதான் செய்வது..

  இது போன்ற கொடுமை எப்பதான் தீருமோ..

  வெற்றி பெற வாழ்த்துகள் மோகன்

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

  ReplyDelete
 17. அடுத்த வீட்டுப் பெண்களுக்கு அடுத்தடுக்கு காலகாலமாய் நடந்து வருகிற ஒன்று:(! உருக்கம். முடிவில் வரும் 'நச்'சில் எவர் மனமும் கனக்கும்.

  நல்ல கதை. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. பின்னோக்கி சுவாசிகா ராமலக்ஷ்மி .. தங்கள் comment-களுக்கு நன்றி.

  எனது கல்லூரி காலத்தில் மேடை பேச்சில் ஒரு நண்பன் சொன்ன உண்மை சம்பவம் (முடிவு பகுதி)உடன், முன் புறம் என் கற்பனை சேர்த்து இந்த கதை செய்தேன்.

  இந்த அளவு பலரும் ரசிப்பார்கள் என எண்ணவில்லை..மீண்டும் நன்றிகள்

  ReplyDelete
 19. ஆமாம் ரவிபிரகாஷ் சொன்ன பின்னூட்டத்தை நானும் வழிமொழிகிறேன்.நல்ல கதை நச் முடிவு நண்பரே!!! வாழ்த்துக்கள்.

  நல்ல எழுத்துநடை உங்களுக்கு

  ReplyDelete
 20. நீங்க வந்து என் ப்ளாக்ல இந்த தகவல் சொன்னதும் வந்து படிச்சிட்டேன்..முடிவு நச்!

  ReplyDelete
 21. நல்ல புளோ. ரவிபிரகாஷ் சார் சொன்னது போல் அவுகதான் என்னும் போது நெஞ்சில் ஒரு சோகம் தாக்குகிறது

  ReplyDelete
 22. நன்றிகள் பல அடலேறு, ஷைலஜா மற்றும் முரளி கண்ணன். சர்வேசன் செய்திருப்பது நல்ல காரியம். அதனால் தான் நாம் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆகிறோம்.

  ReplyDelete
 23. intha mathri husband melah pasam irukadhu thapila ana antha aunty husbandum avanga melah ithe alavu pasama iruntha nalam.

  ReplyDelete
 24. கதைசின்னதாக இருந்தாலும் நச்சுன்னு இருக்கு...
  பெண் சுதந்திரம் இன்னும் முழுமையடைவில்லை. நல்ல சமுக சிந்தனை உள்ள கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. நல்ல கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. நல்லா இருக்கு.கடைசி நச்சும் நல்லா இருக்கு.

  ReplyDelete
 27. இந்த நச் எதிர்பாராதது..,

  ReplyDelete
 28. //பக்கத்துக்கு வீட்டு காரங்க நம்பர் கூட இல்லாம வாழ்றோம்"//

  உண்மைதாங்க...

  முடிவு ரொம்ப நெகிழ்வுங்க...

  வெற்றி பெற வாழ்த்துக்க‌ள்...
  ஆங்... உங்க பொண்ணை ரொம்ப கேட்டதாக சொல்லுங்க...

  ReplyDelete
 29. நல்ல நடை போட்டியிலே வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 30. அந்த நிலையிலும், அவனை 'அவுக' என்று தான் அழைக்க வேண்டும் என்று பழக்கப்படுத்தி வைத்து இருக்கும் இந்த சமுதாயமும் ஒரு குற்றவாளி தான்.. என்பது என் கருத்து!

  கதை அருமையா இருக்கு..

  ReplyDelete
 31. நல்ல நடை. அருமையா வந்துருக்கு.

  அக்கம்பக்கத்துத் தொடர்பு இல்லாமத்தான் இருக்கோம்(-:

  வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.

  ReplyDelete
 32. ஏஞ்சலின் நன்றி. இந்த வயதில் நீ தனி blog வச்சிருக்கே. வெரி குட்.

  நன்றி நாஞ்சில் பிரதாப். நீங்கள் சொல்வது உண்மை தான். பெண் சுதந்திரம் இன்னும் முழுமை அடைய வில்லை.

  சாம்ராஜ்ய பிரியன் நன்றிகள் பல.

  ReplyDelete
 33. ரவி ஷங்கர் நன்றி. உங்க கதை எனக்கு ரொம்ப பிடித்தது.

  நன்றிகள் பல sureஷ் அடுத்த தடவை பழனி வரும் போது தங்களை பார்க்கலாமா?

  நன்றி ஸ்வர்ண ரேகா.. அட எனக்கு பிடிச்ச மேட்டர் டச் பண்ணிட்டீங்க (என் பொண்ணு தான். ) மற்ற பதிவுகளும் படிச்சிருக்கீங்கன்னு உணர்கிறேன். சந்தோசம் நன்றி.

  நசரேயன் துளசி கோபால் நன்றிகள். அடிக்கடி வந்து கருத்து சொல்லுங்க

  பிரசன்னா குமார் நீங்கள் சொல்வதை ஒப்பு கொள்கிறேன்

  ReplyDelete
 34. நல்ல கதைங்க.. வெற்றி பெற வாழ்த்துக்கள் !!

  ReplyDelete
 35. Anonymous1:17:00 AM

  Nice one,‘அவுகதான்... அவுகதான்...’ kinda sarcastic, isn't it??
  women like her still exist, and that's why the men like her husbands still could think of doing such a thing!

  ReplyDelete
 36. நச் முடிவு நல்லாயிருக்குங்க :)

  ReplyDelete
 37. அவுக அவுகன்னு சொல்லும்போது அடச்சேன்னு ஆகி விடுவது நச்சின் வெற்றி. வாழ்த்துக்கள்.
  என் வாழும் கலை பதிவில் இருந்த உங்கள் பின்னூட்டம் வழியாக வந்தேன். நானும் உள்ளேந்தான் :))

  ஜாக்கிரதை.. மழை பெய்கிறது - சர்வேசன்500 - கதையைப் படித்து பாருங்களேன். http://vidhoosh.blogspot.com/2009/11/500-2009.html


  அரவிந்தன் கதையை படிச்சாச்சா?

  http://vennilapakkangal.blogspot.com/2009/10/500-2009.html

  ====வித்யா

  ReplyDelete
 38. தீயின் நாக்குகளுக்கு பெண்கள் மீது அவ்வளவு பிரியமா? பெண்களே இன்னும் திருந்த வில்லையா?

  ReplyDelete
 39. Anonymous4:14:00 AM

  அருமையான கதை. கடைசீல அவுகதான் அப்படீன்னு சொல்லும்போது , எங்கியோ போயிட்டீங்க.
  வெற்றி பெற வாழ்த்துக்கள். நல்ல நடை.

  ReplyDelete
 40. மது கிருஷ்ணா, வித்யா, நிலாமதி, சின்ன அம்மணி (சூப்பர் பேருங்க) - நான்கு பெண்களுக்கும் நன்றிகள் பல. முதல் முறை வந்துள்ளீர்கள். அவ்வபோது எட்டி பார்க்கவும். இந்த கதை பெண்கள் பலருக்கும் பிடிப்பதை உணர முடிகிறது. எந்த வீட்டிலும் கணவன் எரிக்க பட்டதாக கேள்வி பட்டதில்லை. பெண்களுக்கு படிப்பு வந்த பின் இந்த நிலை குறைந்தாலும் இன்னமும் இந்த கொடுமை ஆங்காங்கு நடக்கவே செய்கிறது.

  நான் ஆதவன் தங்களுக்கும் நன்றி. அதி பிரதாபன் மூலம் உங்களை பற்றி கேள்வி பட்டுளேன். அடிக்கடி வாங்க

  ReplyDelete
 41. நல்லா இருக்கு மோகன்.வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 42. கதை நெகிழ்வுங்க. நெகிழ்வு என்று சொல்வதை விட, ஆத்திரமும் வேதனையும் மிஞ்சுகிறது. கடைசியிலும் "அவுக" என்று சொன்ன நம் மண்ணின் பண்பாட்டை மெச்சுவதா, தூற்றுவதா எனப் புரியவில்லை.

  வாழ்த்துக்கள் கதை டாப் 20 யில் வந்திருக்கிறது :)

  ReplyDelete
 43. நல்லா இருக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 44. Anonymous4:57:00 AM

  Top 20 ல வந்துட்டீங்க. நிச்சயம் டாப் ரெண்டுல வந்துருவீங்கன்னு நம்பறேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 45. Top 20 ல வந்துட்டீங்க... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 46. நல்ல திருப்பம். யாரும் யோசிச்சிருக்க மாட்டாங்க. வெற்றி மாலை சூட வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 47. சக்தி பிரபா
  சின்ன அம்மணி
  ஸ்வர்ண ரேகா
  தமிழ் பறவை
  காவிரி கரையான்

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...