Monday, December 21, 2009

வயது 13

"பள்ளி மாடியிலிருந்து மாணவன் விழுந்தான்" என்ற செய்தி நீங்கள் தமிழ் பத்திரிக்கை வாசிப்பவரானால் சென்ற வாரம் கவனித்திருக்கலாம்.

சென்னை: டிசம்பர் 3. அம்பத்தூர் சிவாஜி நகரை சேர்ந்தவர் குமரன். இவரது மகன் சதீஷ். அம்பத்தூர் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். சம்பவ தினத்தன்று பள்ளி முடிந்து மாணவர்கள் அனைவரும் கீழே இறங்கும் போது படியின் அருகிலுள்ள துவாரம் வழியாக இவன் கீழே விழுந்து விட்டான். பள்ளியை சேர்ந்தோர் இவனை அருகிலுள்ள மருத்துவ மனைக்கு கூட்டி சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர் அவனுக்கு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவன் மறுபடி நடக்க ஆரம்பிக்க சில மாதங்கள் ஆகும் என்றும் அவனுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தெரிவித்தனர். போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் விசாரணை இருக்கட்டும்.. அன்று நடந்த சம்பவங்களை பார்ப்போமா?

**********

மூணாவது பெல் அடித்து விட்டது. " அப்பா சீக்கிரம்" அவரமாக அப்பாவின் வண்டியிலிருந்து இறங்கி புத்தகம் மற்றும் சாப்பாட்டு பையுடன் வேகமாக ஓடினான் சதீஷ். " ஹோம் வொர்க் செய்ய வில்லை" என்ற பயம் வேறு உறுத்தி கொண்டிருந்தது.

சதீஷ் மிக சுமாராக படிப்பவன். அவனுக்கு ஆர்வமெல்லாம் விளையாட்டில் தான். எப்போதும் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் தான் பார்ப்பான். ஓட்ட பந்தயம், கால் பந்து இவற்றில் கில்லாடி. ஆனால் அம்மா அப்பா இருவரும் சொல்வது "படிடா; விளையாட்டா சோறு போடும்? "

எவ்வளவு படித்தாலும் மண்டையில் ஏற மாட்டேங்குது. சில மிஸ் நடத்தினால் நன்கு புரிகிறது. ஆனால் பல மிஸ் சுத்த மோசம். போன வருடம் வரலாற்று பாடத்திற்கு வந்த மிஸ் எவ்வளவு நல்லவங்க!! பாடம் மட்டுமல்லாது அதன் முழு விவரமும் பொறுமையாய் சொல்வார்கள். அந்த பாடத்தில் மட்டும் சதீஷ் ஐம்பதுக்கு மேல் வாங்கினான். மற்ற பாடங்களில் பாஸ் செய்வதே எப்போதோ ஒரு முறை தான் நடக்கும்.

சுந்தரி மிஸ் கிளாஸ் டீச்சர். ஏற்கனவே வந்து சேர் முழுக்க உட்கார்நிதிருந்தார் . இவன் தயங்கி தயங்கி நின்றான். நிமிர்ந்து அவனை பார்த்தார். " ஏன் லேட்? "

" கெஸ்ட் வந்திருந்தாங்க மிஸ்"

" கெஸ்ட் வந்தா நீ என்ன பண்ணே? சமைச்சியா ? "

இப்போது வகுப்பில் சிரிப்பு சத்தம். " இல்ல அப்பா கொண்டு வந்து வர லேட் ஆகிடுச்சு"

" கெஸ்ட்டால் லேட்டா? அப்பாவால் லேட்டா?"

" அவங்க வந்ததால அப்பா கொண்டு வந்து விட லேட். '

" ஏதோ ஒரு காரணம்.... போ. இனிமே காரணம் கீரணம் சொன்னே பாரு"

உள்ளே போய் அமர்ந்தான். " சீக்கிரம் வந்து தொலைய வேண்டியது தானடா" கணபதி கிசு கிசுத்தான்.

அனைவரிடமும் ஹோம் வொர்க் நோட்டுகள் ஒரு பெண் வாங்கி கொண்டிருந்தாள். ஹோம் வொர்க் செய்யாத சதீஷ் எப்படி தப்பிப்பது என யோசிக்க ஆரம்பித்தான். "இப்போ தான் காரணம் சொல்லதேன்னு சொன்னாங்க. அதுக்குள் அடுத்த பிரச்சனை".

நேற்று இரவு சித்தப்பா வெளி நாட்டிலிருந்து வந்தார். அவனுக்கு சித்தப்பாவை ரொம்ப பிடிக்கும். சட்டை, பந்து, சென்ட்டு என நேற்று முழுதும் குஷி ஆக இருந்தது. காலை எழுந்தது லேட். அவனுக்கு பள்ளி வரவே விருப்பமில்லை. " அப்பா நான் ஹோம் வொர்க் செய்யலை. ஸ்கூல் போகலைப்பா" என்றான். " அங்கே போய் எழுதிக்க கிளம்பு" என்று சிம்பிள் ஆக முடித்து விட்டார் அப்பா. அவர் சொன்னால் அதற்கு மேல் பேச்சு இல்லை.

என்ன சொல்லலாம்? "நோட்டு கொண்டு வரலைன்னு சொல்லிடலாமா? " நேற்று ஒருத்தன் அப்படி தான் சொல்லி தப்பித்தான். அந்த பெண் அருகில் வந்து விட்டாள்.

" நோட்டு மறந்திட்டு வந்துட்டேன்"

முறைத்தாள். " ஏன்"

" மறந்துட்டேன்"

அவள் சதீஷை நம்ப தயாரில்லை. " மிஸ் சதீஷ் ஹோம் வொர்க் கொண்டு வரலை " உரக்கக் குரல் கொடுத்தாள்.

" ஏன் என்னவாம்?"
" மறந்துட்டானாம் "

உடனடியாக மிஸ் சொன்னாள் " அவன் பைய்ய பாரு". சதீஷுக்கு தொண்டை அடைத்தது. அந்த பெண் பையை கேட்டாள். சதீஷ் தயங்கினான். அவளே பிடுங்கினாள். திறந்து தேட, ஆங்கில ஹோம் வொர்க் நோட்டு வந்து விட்டது. அவளே பிரித்து பார்த்தாள். பின் மிஸ்ஸிடம் எடுத்து சென்று தந்தாள். கண்ணாடியை அணிந்து கொண்டு சுந்தரி மிஸ் பார்த்தார். ஹோம் வொர்க் எழுதலை என தெரிந்ததும் நோட்டு பறந்தது. அவனது பெஞ்சுக்கு முதல் பெஞ்சில் விழுந்தது.

"எழுதலை; கேட்டா பொய் சொல்றியா? யார் கிட்டே கத்து கிட்டே? "

முதல் பெஞ்ச் நபர்களிடமிருந்து ஸ்கேல் எடுத்து கொண்டாள். சதீஷ் கையிலும் முதுகிலும் சரா மாறியாக விழுந்தது அடி." கெட் அவுட்; வெளியே போ"

" மிஸ் கெஸ்ட் வந்ததாலா தான் மிஸ். நாளைக்கு எழுதுறேன்"

" கெட் அவுட். வந்தது லேட்டு. ஹோம் வொர்க் எழுதலை. பொய் வேற. மத்த சப்ஜக்ட்டாவது எழுதினியா? "

தயங்கி சொன்னான். " இல்ல மிஸ்"

"அப்படியா இன்னிக்கு முழுக்க வெளியே நில்லு. லாஸ்ட் பீரியட் நான் வருவேன் இல்ல.. வச்சிக்குறேன் "

சதீஷ் தலை கவிழ்ந்தவாரே வெளியேறினான்.

" என் மூடை கெடுக்குரதுக்குன்னே வர்றானுங்க.. முதல் கிளாசே இப்படியா?"

கைகளை கட்டி கொண்டு தலை குனிந்தவாறு வாசலுக்கு சற்று வெளியே நிற்க துவங்கினான்.

சதீஷ் நின்ற சில நிமிடத்தில் இன்னோர் மாணவன் தாமதமாய் வந்தான். அவன் நன்கு படிப்பவன். சுந்தரி மிஸ் " கோ.. கோ.. " என்று கூறி விட்டார். "படிப்பவனுக்கு ஒரு சட்டம். படிக்காதவனுக்கு ஒரு சட்டம். ஹும்"

மிஸ் பாடத்தை துவங்கி விட்டார். பாடத்தில் மனம் செல்ல வில்லை. மெளனமாக கீழே பார்த்தான். காரில் பிரின்சிபால் வந்து இறங்குவது தெரிந்தது. " போச்சு இன்னிக்கு வந்திருக்காரா? அப்ப ரவுண்ட்ஸ் வருவாரே?"

"சே! இன்னிக்கு நான் வந்திருக்கவே வேணாம். எல்லாம் இந்த அப்பாவால் வந்தது"

பெண்கள் இவனை பார்த்து சிரித்து சிரித்து பேசிய மாதிரி இருந்தது. அவர்களை பார்ப்பதை தவிர்க்க முயன்றான். ஆனாலும் கண்கள் தானாக அவ்வபோது சென்றது.

சற்று நேரத்தில் பிரின்சிபால் ரவுண்ட்ஸ் வந்து விட்டார். " என்ன..? என்ன விஷயம்" இவனை பார்த்து கேட்டார்.

சுந்தரி மிஸ் முன்னே வந்து பதில் சொன்னார். " லேட்டா வந்தான் சார். ஹோம் வொர்க் செய்யலை. இதில நோட்டு கொண்டு வரலைன்னு பொய் சொல்றான்"

ஒன்னு விடாம சொல்றாளே பாவி என நினைக்கும் போதே பிரின்சிபால் அடிக்க ஆரம்பித்து விட்டார். " ஹோம் வொர்க் எழுதுறதை விட வேற என்ன ...........வேலை? "
" உன் மேல ரெகுலர் கம்பலேயின்ட் வருது. உங்க அப்பாவை கூட்டிட்டு வா நாளைக்கு" அடி கொடுத்தவாரே பேசினார்.

சதீஷுக்கு கிட்டத்தட்ட அழுகை வந்தது. " பொண்ணுங்க முன்னாடி அழுவ கூடாது" என்ற வைராக்கியத்தில் அழாமல் நின்றான்.

அடுத்ததடுத்த வகுப்புகள் மிஸ்கள் வந்து குசலம் விசாரித்தனர். கோ- எட் பள்ளி என்பதால் அனைத்தும் மிஸ்கள் தான்.

மதியம் சாப்பிடவே பிடிக்க வில்லை. தன் இருக்கைக்கு சென்று கணபதி அருகே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். "இப்பவாவது உட்காரலாமா? கிளாஸ் மிஸ் வந்துட கூடாதே" என்ற பயம் வேறு. பாதி சாப்பிட்டு விட்டு மீதத்தை கொட்டினான்.

"இந்த பத்து வருஷத்தில் எந்த மிஸ்சும் யாரையும் முழு நாள் வெளியே நிற்க வச்சதில்ல. இந்த மிஸ் ஏண்டா இப்படி பண்றாங்க? " கணபதி புலம்பினான்

மதியம் வந்த மிஸ்ஸிடம், தலை வலி கிளும்புரேன் என சொல்லி பார்த்தான். " என்னடா நடிக்கிறியா? போய் கிளாஸ் டீச்சர் கிட்டே கேட்டுட்டு வா"

"அதுக்கு கேக்காமலே நிக்கலாம்" என எண்ணியவாறு நின்றான்.

ஒரு வழியாய் கடைசி வகுப்பு வந்து விட்டது.

காலையில் இங்கிலீஷ் I எடுத்த சுந்தரி மிஸ் இப்போது இங்கிலீஷ் II எடுக்க வந்திருந்தார்.

" நாளைக்காவது ஹோம் வொர்க் எழுதிட்டு வருவியா?" கேட்டவாரே அவன் பதிலுக்கு காத்திராமல் உள் சென்றார்

இந்த மிஸ்ஸை ஏதாவது பண்ணனும் என வெறுப்பு வந்தது. சதீஷ் அமைதியாய் நின்று கொண்டிருந்தான்.

கடைசி மணி அடிக்க ஐந்து நிமிடம் இருந்தது.

" மிஸ்"

பெரும் சத்தம் கேட்டு சுந்தரி மிஸ் திரும்பினாள்.

" என்னை அவமான படுத்திட்டீங்க இல்ல! நாள் முழுக்க வெளியே நிக்க வச்சிடீங்க.. எவ்ளோ அடி அடிச்சீங்க. நான் போறேன் மிஸ்" சொல்லியவாறு கிளாசை விட்டு ஓடினான் .

" டேய் டேய்" என கத்தியவாறு சுந்தரி மிஸ் வெளியே வந்து பார்த்த போது, குட்டி சுவர் மீது ஏறி மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து கொண்டிருந்தான் சதீஷ்.

25 comments:

 1. இதுபோன்ற வருந்தத்தகு நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தவாறே உள்ளன:(!

  ReplyDelete
 2. யாரைக்குற்றம் சொல்வது வீட்டிற்கு வந்த சித்தப்பாவையா, ஹோம் ஒர்க் எழுதாத மாணவனையா? லேட்டா கொண்டு போய் விட்ட அப்பாவையா? லேட் ஆகவும் ஹோம் ஒர்க் எழுதவில்லை என்று பொய் சொன்னதறஙகு அடித்த டீச்சரையா? வெளியில் நின்ற மாணவனை அடித்த தலைமை ஆசிரியரையா? யாரைச்சொல்வது?
  வித்தியசமான பகிர்வு.........

  ReplyDelete
 3. மிகவும் கவலை தருகுது... பிள்ளைகளை வளர்ப்பு பற்றி கட்டாயம் பெற்றோருக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். பெற்றோர் எவ்வளவு படித்தவர்களாக இருந்தபோதும் பிள்ளைகளின் கல்வி மற்றும் வளர்ப்பில் சில தவறுகளை விடுகின்றனர்.
  அத்தோடு பிள்ளைகளும் யோசிக்கணும்க...

  ReplyDelete
 4. அன்பின் மோகன்

  பல நிகழ்வுகளில் இப்படித்தான் உண்மைக் காரணம் தெரியாமலேயே போய்விடுகிறது

  நல்ல நடை - கதை நன்று

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 5. நன்றி ராம லக்ஷ்மி, ரமேஷ், சங்கவி & சீனா.

  பத்திரிக்கை செய்தியும், கடைசி பகுதியும் நிஜம். மிக சமீபத்தில் எனக்கு தெரிந்த பள்ளியில் நிகழ்ந்தது

  Corporal punishment கூடாது என்கிறது சட்டம். நடை முறையில் அது தொடர்ந்து கொண்டே உள்ளது என்ன செய்வது நாம்?

  ReplyDelete
 6. குழந்தைகள், வீட்டு பாடங்கள் மட்டும் செய்யும் கருவிகள் அல்ல. அவர்கள் குழந்தைகளாக இருந்து குழந்தைகளாக வாழ்வை ரசிப்பதற்கு (சித்தப்பாவின் வருகை தரும் சந்தோஷ தருணங்கள் pola) இடம் தரும் வகை மாறுதல்கள் வேண்டும். நெகிழ வைத்து யோசிக்க வைத்த kadhai.

  ReplyDelete
 7. இதில் ஆசிரியர் மீது எந்ததவறும் இல்லை. ஆசிரியர்கள் என்ன புதுசாவா தண்டனை தருகிறார்கள். இப்போதுள்ள மாணவர்களின் அறிவுவளர்ச்சி தொழில்நுட்பத்தை விட வேகமாக வளர்கிறது. வக்கிரம், ஹீரோயிசம், பழிக்குப்பழி இதுபோன்றவற்றை சினிமாக்களும், டிவிசீரியல்களும் சர்வசாதரணமாக காண்பிக்கின்றன.

  20 வருடஙகளுக்கு முன்பு இதேவயது மாணவனுக்கு சதீஷ் மாதிரி யோசிக்கவே தெரியாது. இதுப்போதுள்ள பள்ளிகளில் கண்டிப்பாக மனோதத்துவ முறையில் கவுன்சிலிங் அவ்வப்போது கொடுக்கவேண்டும். இல்லான்னா இதுமாதிரி நிறைய நடக்கும்...

  ReplyDelete
 8. கதையாக இருந்தாலும், சிறுவயதினர் இப்படி செய்வது வாடிக்கையாகிவிட்டது. பள்ளிகள், பல் பரிசோதனை, கண் பரிசோதனை போல் மனநல மருத்துவரின் அவசியமும் தேவை என்ற நிலமைக்கு வந்துவிட்டோம்.

  ReplyDelete
 9. ப‌ல‌பேர் எதிரே ந‌ம்மை அவ‌மான‌ப்ப‌டுத்தினால் (ந‌ம் மீது த‌வ‌றே இருந்தாலும்) எத்த‌னை பேரால் அதை தாங்கிகொள்ள‌முடியும். க‌வுன்சிலிங் குழ‌ந்தைக‌ளுக்கு ம‌ட்டும‌ல்ல‌, ஆசிரிய‌ர்க‌ளுக்கும், பெற்றோர்க‌ளுக்கும் தேவைதான். புத்த‌க‌ மூட்டை சும‌ப்ப‌திலிருந்து, அந்த‌ கோச்சிங், இந்த‌ கோச்சிங் என்று குழ‌ந்தைக‌ளை குழ‌ந்தைக‌ளாக‌ வ‌ள‌ர‌விடுவ‌தில்லை. தேவை க‌ல்வி முறையில் மாற்ற‌ம்!

  நான் சொல்வ‌து சினிமாத்த‌ன‌மாக‌கூட‌ இருக்க‌லாம். "தாரே ஸ‌மீன் ப‌ர்" ப‌ட‌த்தை ஒவ்வொரு ப‌ள்ளியிலும் ஆசிரிய‌ர்/ஆசிரியைக‌ளுக்கு போட்டு காண்பிப்ப‌து ந‌ல‌ம்.

  ReplyDelete
 10. மோகன்.. இதை ஒரு சிறுகதையாய் இல்லாவிட்டாலும் நல்ல பதிவாகத்தான் ஏற்று கொள்ள் வேண்டும் சிறுகதைக்கு இன்னும் வேண்டும் என்று தோன்றுகிறது..

  ReplyDelete
 11. Anonymous4:33:00 AM

  ஒரு நாள் வீட்டுப்பாடம் எழுதாட்டி மன்னிச்சு விடாதவங்க எல்லாம் என்ன ஆசிரியர்கள்.

  ReplyDelete
 12. நல்லா எழுதி இருக்கீங்க மோகன். சொன்ன விதம் நல்லா இருந்தது. சொல்லிய மேட்டர்.. வருத்தம்.

  ReplyDelete
 13. நன்றி சித்ரா. நீங்கள் சொன்னது சரியே.

  பிரதாப்: உங்கள் கருத்திலிருந்து நான் மாறு படுகிறேன். ஆசிரியர் இந்த விஷயத்தை நிச்சயம் வேறு விதமாக அணுகியிருக்க வேண்டும். -வில் எந்த குற்றத்திற்கும் அதற்கு ஏற்ற தண்டனை மட்டுமே தர வேண்டும் என்பார்கள். உதாரணமாய் பிக் பாக்கெட் ஆசாமியை தூக்கில் போட முடியாது. ஹோம் வொர்க் கொண்டு வராமைக்கு நாள் முழுதும் வெளியில் நிறுத்துவதும் பல முறை அடிப்பதும் தவறு என்றே நினைக்கிறேன்

  மற்ற படி கவுன்செல்லிங் பற்றி நீங்கள் சொன்னது உண்மை

  வானம் பாடி சார்: ஆம் நன்றி

  ReplyDelete
 14. குறும்பன் said: //தாரே ஸ‌மீன் ப‌ர்" ப‌ட‌த்தை ஒவ்வொரு ப‌ள்ளியிலும் ஆசிரிய‌ர்/ஆசிரியைக‌ளுக்கு போட்டு காண்பிப்ப‌து ந‌ல‌ம்.//

  உண்மை தான். நான் மிக ரசித்த படங்களில் அது ஒன்று
  ****
  நன்றி கேபில்ஜி. உங்களை போன்றவர்களிடம் சேர்ந்து இன்னும் கொஞ்சம் better-ஆ எழுத ஆரம்பிச்சிடுவேன். நம்பிக்கை!!
  ***
  சின்ன அம்மிணி said...
  //ஒரு நாள் வீட்டுப்பாடம் எழுதாட்டி மன்னிச்சு விடாதவங்க எல்லாம் என்ன ஆசிரியர்கள்.//

  Fully agree with you. துரதிர்ஷ்ட வசமாக ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவன், பிடிக்காதவன் என பிரிக்கிறார்கள். பள்ளிகளில் Bias நிச்சயம் இன்னும் உள்ளது. என் குழந்தை மூலம் இதை அறிகிறேன்

  ReplyDelete
 15. நன்றி நரசிம். நீங்க சொன்னது நிஜமா சந்தோஷமா இருக்கு

  நன்றி ஸ்ரீ மதி. நீங்களும் அப்துல்லா பாணியில் sign languageல் இறங்கிட்டீங்க. நன்றிங்கோ

  ReplyDelete
 16. school teachers ah ethirthu kelvi kekka kudathu. intha students kum thapu nama melah yum irukunu puryathu. guest ku epo varanumnu theryathu. intha parents ku padi ngra word thavira vera word eh theryathu.
  intha circumstances la ipo ulla students most of them do this.

  ReplyDelete
 17. ஆகா அருமை

  ReplyDelete
 18. எப்டி மனசு வருது இவங்களுக்கெல்லாம்???

  விஷயம் :(
  பதிவு :)

  ReplyDelete
 19. உண்மை நிகழ்வை வைத்து சம்பவத்தைக் கோர்த்திருக்கிறீர்கள்!! வருத்தமாக இருக்கிறது!

  ReplyDelete
 20. குழந்தைகள் மனதில் எவ்வளவு காயம்.............கதை மனதை வலிக்கிறது.

  ReplyDelete
 21. எவ்வளவு உண்மையான விடயம் இது. குழந்தைகள் எப்பொழுதுமே மிகவும் மென்மையானவர்கள். அவர்களை அவர்கள் வழியே நடத்த வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் இல்லாமல் இருக்க விழிப்புணர்ச்சியை தான் எங்கும் ஏற்படுத்த வேண்டும்.... நல்லா சொல்லியிருக்கீங்க மோகன்...

  ReplyDelete
 22. நன்றி நிலா மதி & காவிரி கரையோன்

  ReplyDelete
 23. வேதனையாக இருக்கிறது.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...