Monday, March 5, 2012

மின்தடையை சமாளிக்க உதவும் இன்வர்டர்: விரிவான அலசல்

மின் வெட்டு தமிழகம் முழுதும் பல வருடங்களாக தீராத ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது.

தற்போது வரலாறு காணாத அளவு மின்வெட்டு படு மோசமாய் உள்ளது. சென்னையில் செவ்வாய் கிழமை அனைத்து நிறுவனங்களுக்கும் "மின் விடுமுறை" மார்ச் மாதம் முதல் அமுல் படுத்தியதால், பல நிறுவனங்கள் செவ்வாய் அன்று அலுவலகம் விடுமுறை விட்டு ஞாயிறு வேலை நாள் ஆக்கியுள்ளனர். வாரம் இரு நாள் விடுமுறை விடும் நிறுவனங்கள் செவ்வாய் (மின் தடைக்காக) மற்றும் ஞாயிறு விடுமுறை அறிவித்துள்ளன.

வீட்டில் கரண்ட் இன்றி எப்படி சமாளிப்பது? இங்கு தான் வருகிறது இன்வர்டர் !


எங்கள் குழந்தை சின்னவளாக இருந்த போது பல முறை இரவில் கரன்ட் போய் விடும். அப்போது குழந்தையும் தூங்காமல் நாமும் தூங்க முடியாமல் செம கடுப்பாய் இருக்கும். சில நேரம் அந்த ஒரு நாள் எங்காவது அருகில் இருக்கும் லாட்ஜில் ரூம் போட்டு தூங்கலாமா என்று கூட யோசித்துள்ளேன். (ஒரு முறையும் செய்ததில்லை).

சொந்த வீடு கட்டி குடியேறும் போது செலவோடு செலவாக inverter வாங்கி விட்டோம். வீடு கட்டும் போதே இதற்காக வயரிங் செய்ய சொல்லியாகி விட்டது. Inverter நிறுவன ஆட்களும் ஒரு முறை வந்து பார்த்து Inverter எங்கு வரும், வயரிங் எப்படி தேவை என சொல்லி சென்றனர். ஆறு வருஷத்துக்கு முன் புது வீடு போகும் போதே இன்வர்டர் உடன் எங்கள் வாழ்க்கை துவங்கியது.

இன்வர்ட்டர் குறித்த அனுபவங்களை உங்களுக்கும் உதவும் என்பதால் இங்கு பகிர்கிறேன்:

இன்வர்டரில் முக்கியமானவை இரண்டு: ஒன்று இன்வர்டர் என்கிற மெஷின். அடுத்தது அதன் பேட்டரி. இவை இரண்டும் சேர்ந்து கிட்டத்தட்ட இருபதாயிரம் ரூபாய் போல் ஆகும். இது மூன்று மின் விசிறி மற்றும் மூன்று டியூப் லைட் எட்டு மணி நேரம் ஓட உதவும் என்கிறார்கள். ஒரு டியூப் மற்றும் ஒரு மின் விசிறி வரை மட்டும் என்றால் விலை இன்னும் குறைவாக 10,000 to 15,000 ருபாய் ஆகும் என நினைக்கிறேன்.

"மூன்று மின் விசிறி மற்றும் மூன்று டியூப் லைட்" என்று சொன்னாலும், வீட்டில் உள்ள அனைத்து மின் விசிறி மற்றும் டியூப் லைட்கள் எரிகிற மாதிரி நாங்கள் செய்து விட்டோம். அதாவது அவர்கள் அனைத்து இடங்களுக்கும் கனக்ஷன் தந்து விடுவார்கள். நாம் எங்கு தேவையோ அதை மட்டும் உபயோகித்து கொள்ளலாம். இதனால் கரண்ட் இல்லா விட்டாலும் எந்த ரூமுக்கு வேண்டுமானாலும் வழக்கம் போல் போய் வரலாம். கரண்ட் இல்லாமல், இன்வர்டர் ஓடுகிறது என்றால் ஒரு மின்விசிறி மற்றும் ஒரு டியூப் லைட் மட்டும் ஓடுகிற மாதிரி தான் நாங்கள் பார்த்து கொள்வோம். தேவையின்றி இன்வர்டரை அதிகம் உபயோகிப்பதில்லை.

இன்வர்டர் டிவிக்கும் கூட கனக்ஷன் தந்து விடலாம். லோக்கல் கேபிள் டிவி எனில் அங்கு கரண்ட் இல்லை எனில் உங்கள் வீட்டில் இன்வர்டர் இருந்தாலும் நிகழ்ச்சி வராது. ஆனால் டிஷ் அல்லது சண் டைரக்ட் இருந்தால் கரண்ட் இல்லா விட்டாலும் டிவி பார்க்க முடியும். சீரியல் பார்ப்போருக்கு டென்ஷன் இல்லை பாருங்க :)))

இந்த இருபதாயிரம் ருபாய் ரேஞ்சில் உள்ள இன்வர்டரில் மிக்சி, ஹீட்டர், ஏசி போன்றவை ஓட்ட முடியாது. அதற்கு அநேகமாய் இன்னும் அதிக சக்தி உள்ள இன்வர்டர் தேவை அல்லது ஜெனரேட்டர் இருந்தால் தான் முடியும். இந்த இன்வர்டரில் பேன், டியூப் லைட், கணினி, டிவி இவை மட்டும் தான் இயங்கும். எந்தெந்த இடங்களில் ஏ.சி அல்லது ஹீட்டர் இருக்கோ அந்த லைன் முழுதுக்கும் இன்வர்டர் கனக்ஷன் தர மாட்டார்கள். உதாரணமாய் பாத் ரூமில் ஹீட்டர் உள்ளதால், அந்த ரூம் முழுதும் இன்வர்டர் கனக்ஷன் இருக்காது. இதனால் ஹீட்டர் மட்டுமின்றி, பாத் ரூம் விளக்குகளும் எப்போதும் இன்வர்டர் மூலம் எரியாது !

நடு இரவில் கரண்ட் போய் விட்டால், கரண்ட் போனதே நமக்கு தெரியவே தெரியாது. எப்போது கரண்ட் போனது, எப்போது திரும்ப வந்தது என தெரியாமல் நிம்மதியாக தூங்கலாம். இது தான் இன்வர்டரின் மூலம் கிடைக்கும் பெரிய பயன் என்பேன். அடுத்து பரீட்சைக்கு தயார் செய்யும் குழந்தைகள், கரண்ட் இல்லா விடில் சிரமமின்றி படிக்க முடியும். ( நாம் எல்லாம் பள்ளியில் படித்த போது மெழுகு வர்த்தி அல்லது சிம்னி விளக்கில் படிப்போம்.....)

ஒரு முறை இன்வர்டர் வாங்கினால் அடுத்தடுத்து வரும் செலவு குறித்து பார்ப்போம்:

இன்வர்டரில் உள்ள பேட்டரிக்கு ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். நீங்கள் இன்வர்டர் வாங்கும் நிறுவனத்துக்கு சொன்னாலே வந்து ஊற்றி விடுவார்கள். வரும் பையனுக்கு அவன் வந்து போக பெட்ரோல் செலவுக்கென மட்டும் ஐமபது ருபாய் தர வேண்டும். உங்களுக்கு ரெண்டு மாதத்துக்கு ஒரு முறை ஐம்பது ரூபாய் செலவு. இது மட்டும் தான் தொடர்ந்து வரும் recurring expenditutre.

இதில் உள்ள பேட்டரி ரெண்டு அல்லது மூன்று வருடம் தான் வரும். பின் அதனை மாற்ற வேண்டும். இது தற்போதைய விலையில் எட்டாயிரம் வருகிறது. மேலும் நாம் வாங்கும் இன்வர்டர் instrument ஐந்து அல்லது ஆறு வருடம் தான் உழைக்கும். பின் மாற்ற வேண்டும். இது பத்தாயிரம் ரூபாய் ஆகும்.

ஆக ரெண்டு அல்லது மூன்று வருடத்துக்கு ஒரு முறை எட்டாயிரம் (பேட்டரி ); ஐந்து வருடத்துக்கு ஒரு முறை பத்தாயிரம் ரூபாய் (புது இன்வர்டர்) ஆகிய செலவுகளுக்கு நீங்கள் தயாராய் இருக்க வேண்டும். புதுசாய் இன்வர்டர் விற்பனை செய்வோர் இதனை உங்களிடம் சொல்ல மாட்டார்கள். நாம் சில வருடங்கள் இன்வர்டருக்கு பழகி விட்டால், பின், மூக்கால் சற்று அழுதவாறே இந்த செலவு செய்ய தயார் ஆகி விடுவோம்.

நாங்கள் இன்வர்டர் வாங்கியது மைக்ரோடெக் (Microtech ) பிராண்ட். இதன் செயல்பாடு ஓகே. பெரிய அளவு பிரச்சனை இல்லை. மற்ற நிறுவன இன்வர்டர்கள் எப்படி வேலை செய்கிறது என தெரியவில்லை. பேட்டரி வாங்குவதானால் Exide போன்ற நல்ல பேட்டரியாக வாங்க வேண்டும்.

இன்வர்டர் வாங்கும் போது மறக்காமல் கவனிக்க வேண்டியவை:

1 . டியூபுலர் பேட்டரி வாங்குவது நலம். சற்று விலை அதிகம் எனினும் அதிக வருடங்கள் வரும். இதற்கு Replacement வாரண்டி ஐந்து வருடம் போல் தருகிறார்கள் !

2 . இன்வர்டர் & பேட்டரி விலை மற்றும் வாரண்டி நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். மூன்று நான்கு இடங்களில் விசாரித்து விட்டு பெஸ்ட் டீல் எதுவோ அதை பார்த்து வாங்குங்கள்

3 . கணினி உள்ளிட்ட இடங்களுக்கு கனக்ஷன் தந்து விட்டதா என பாருங்கள். எங்களுக்கு கணினிக்கு கனக்ஷன் முதலில் தரலை. சில ஆண்டுகளுக்கு பின் அதை தனி வேலையாக செய்ய வேண்டியதாயிற்று !

4 . வாங்கிய பின் ஓரிரு மாதத்துக்கு ஒரு முறை பேட்டரிக்கு "ஆசிட் " மறக்காமல் ஊற்றவும். இல்லா விடில் லைப் அதிகம் வராது.

5. இன்வர்ட்டர் மற்றும் பேட்டரி இரண்டும் ஒரே இடத்தில வாங்குவதே நல்லது. வெவ்வேறு இடம் என்றால், ரிப்பேர் வரும்போது ஒவ்வொருவரும் மற்றவர் மேல் குறை சொல்வார்கள். ரிப்பேர் சரியாகாது.
**********************************
ஐந்து வருடங்களுக்கு முன் நாங்கள் இன்வர்டர் வாங்கிய போது இரவில் தெரு முழுக்க கரண்ட் இல்லாத போது, எங்கள் வீட்டில் மட்டும் லைட் எரிவது வித்யாசமாக தெரியும். இப்போது தெருவில் பாதி வீடுகளில் இன்வர்டர் உள்ளது !! எங்களுக்கு சர்வீசுக்கு வரும் ஆட்களே இன்வர்டருக்கு டிமாண்ட் மிக அதிகமாகி விட்டது என்கின்றனர். எல்லாம் ஆற்காட்டார் மற்றும் அம்மா மகிமை !

இந்த பதிவின் பின்னூட்டமாக ராமலட்சுமி அவர்கள் சொன்னதை இங்கேயே பகிர்ந்திட விரும்புகிறேன் (சிலருக்கு கமன்டுகள் வாசிக்கும் பழக்கம் இருப்பதில்லை. இந்த தகவல் அனைவருக்கும் சேர, இங்கேயே பகிர்கிறேன் ):

திருமதி. ராமலட்சுமி

எனது அனுபவத்தைப் பகிர்வது சிலருக்கு உபயோகப்படலாமென எண்ணுகிறேன். 5 வருடங்களாக APC BI1000I உபயோகிக்கிறோம். அப்போது 30 K ஆயிற்று. 4 ஃபேன், லைட் மற்றும் மிக்ஸி க்ரைண்டர் என 5 ஆம்ப் எல்லாம் வேலை செய்யும்.

நமது எல்லா 5 ஆம்ப் இணைப்புகளுக்கும் இன்வெர்டருடன் இணைப்புக் கொடுத்து விடுவார்கள். 15 ஆம்ப்பில் இயங்கக்கூடிய கீசர், ஏசி, மைக்ரோவேவ் மட்டும் உபயோகிக்க முடியாது.

முடிந்தவரை குறைந்தபட்சமாகவே உபயோகிப்போம். டாடா ஸ்கை என்பதால் டிவி தடைபடாதென்றாலும் ப்ளாஸ்மா மிக அதிகமாக மின்சாரத்தை இழுப்பதால், லோகல் கேபிளில் ஒளிபரப்பு இருந்தால் இன்னொரு டிவியில் முக்கிய செய்தி என்றால் மட்டும் பார்ப்பது வழக்கம்.

முக்கியமாக நான் பகிர்ந்திட விரும்புவது:

1. AMC (வருடப் பராமரிப்பு ஒப்பந்தம்) எடுப்பது சாலச் சிறந்தது. இதனால் வாங்கிய 2 வருடத்தில் ஃபேனில் கோளாறு வந்த செயலிழந்தபோது புதியது மாற்றித் தந்தார்கள். இல்லையெனில் தனியாக 12K கொடுக்க நேர்ந்திருக்கும்.

2. ஃப்ளாட்களில் வசிப்பவர்கள் ஹாலில் அல்லது பெட்ரூமில் வைக்க நேரலாம். இதிலிருந்து சிலசமயங்களில் கசிகிற அமிலப் புகை உடல்நலத்துக்கு மிகக் கேடு. இந்தப் பிரச்சனை முதலிரண்டு வருடம் இடையிடையே ஏற்பட அதன் பிறகு பராமரிப்பே தேவைப்படாத Exide invasafe 400-க்கு மாறி விட்டோம். 2 பாட்டரிகள் வாங்க வேண்டிவரும். விலை சற்று அதிகமானாலும் உடலுக்குத் தீங்கு விளைவிக்காது என்பதால் இந்தப் பரிந்துரையை பரீசிலிக்கலாம். இரண்டரை வருடங்கள் வரை வருகின்றன (பெங்களூரில் அதிகமாய் மின் தடை இல்லாததால்).
********************
மின் வெட்டால் மிக அவதி படுகிறீர்கள் என்றால், மேலே சொன்ன செலவுகளுக்கு ஓகே என்றால், இன்வர்டர் வாங்குவது பற்றி நிச்சயம் யோசியுங்கள் !

ஆறு வருடமாய் வீட்டில் இன்வர்டர் உபயோகிப்பவன் என்பதால், இன்வர்டர் குறித்து வேறு கேள்விகள் உங்களுக்கு இருந்தால், பின்னூட்டத்தில் என்னிடம் நீங்கள் கேட்கலாம் !

44 comments:

 1. மிக விவரமான பதிவு சார். தகவல்களுக்கு நன்றி!

  ReplyDelete
 2. வாவ் நல்ல பிசினஸ்..அய்யா இப்போ நீங்க தான் இதுக்கு அனுபவம் வாய்ந்த பதிவரி இதில் என்று நினைக்கிரேன்...

  ஹிஹி..இந்த இன்வர்ட்டர் போட்டு கொடுக்கும் நபர்கள் ரொம்ப நல்லவங்கோ!...பத்து முறை போன் பன்னி கத்துனாத்தான் வருவாங்கோ...ஒரு முறை துட்டு வாங்கிட்டா அப்புறம் செக்கிங் துட்டு கம்மி பாருங்க்கோ அதான்!..இதுக்கு தான் இப்போ 5 வருசத்துக்கு ஒரு முறை மாத்துனா போதும்னு வர்ற use and through பெட்டருங்க்கோ..8 வருசமா யூஸ் பன்னிட்டு வர்ர பாவப்பட்ட ஜீவன் சொல்லுதுங்கோ!

  ReplyDelete
 3. எம் அப்துல் காதர் said...

  மிக விவரமான பதிவு சார். தகவல்களுக்கு நன்றி!

  **
  மகிழ்ச்சி நன்றி அப்துல் காதர்

  ReplyDelete
 4. விக்கி அண்ணே: தங்கள் பின்னூட்டம் ரசித்தேன்.

  எங்கள் வீட்டுக்கு தண்ணீர் ஊற்ற வரும் ஆட்கள் சொல்லும் நாளன்று வந்துடுறாங்க. இத்தனைக்கும் நாங்கள் சனி அல்லது ஞாயிறு தான் வர சொல்லுவோம். வார நாட்களில் அல்ல. ஆனா சரியா வந்துடுறாங்க. இது பற்றி அவங்க சொல்வது: "தொடர்ந்து நாங்க ஒழுங்கா உங்களுக்கு சர்விஸ் செய்தால் நீங்க எங்களை விட்டு போக மாட்டீங்க; இல்லாட்டி அடுத்த முறை இன்வர்ட்டர் மற்றும் பேட்டரி வேற ஆளிடம் வாங்கிடுவீங்க "

  ReplyDelete
 5. Distilled water filling is so easy.search in google. Dont pay for it.

  ReplyDelete
 6. //Samy said...

  Distilled water filling is so easy.search in google. Dont pay for it.//

  நீங்கள் சொல்வது சரி தான் சாமி. ஆனால் நாமும் டிஸ்டில் வாட்டர் காசு குடுத்து தானே வாங்கணும். அதுக்கு பதில் வெறும் அம்பது ரூபா குடுத்தால் அவர்களே வந்து ஊற்றி விட்டு போயிடுறாங்க. என்னை போன்ற சிலர் இந்த வேலை செய்ய சோம்பல் பட்டுக்கொண்டு அவர்களிடம் கொடுப்பதும் ஒரு காரணமே

  ReplyDelete
 7. மோகன் குமார்,

  எளிமையாக தலைகீழ் மின்மாற்றி சேமகலன்(இன்வெர்ட்டர்) குறித்தும்,அதன் பயன்பாட்டினையும் சொல்லி இருக்கிறீர்கள். மின்வெட்டுக்காலத்தில் ஆபத்பாந்தவன் என்றே சொல்லலாம்.நிறைய விலைகளில் இருக்கு, நாம் வாங்கும் திறனைப்பொறுத்து ஏ.சி கூட இயக்கும் வகையில் இன்வெர்டெர் இருக்கு. 30 ஆயிரம் வரும்.மைக்ரோ டெக் விட தொழில்நுட்ப ரீதியாக அமரான், மகிந்திரா ஆகியவை மேம்பட்டவை.மைக்ரோ டெக், அமரன் ஆகிய இரண்டு இன்வெர்டர்களும் பயன்படுத்தி வருகிறேன்.எப்பொழுதும் அருகாமையில் உள்ள டீலர்களிடம் வாங்குவது நல்லது.

  மேலும் இன்வெர்டர் வாங்கும் போது கவனிக்க வேண்டிய காரணிகளை விளக்கி நான் முன்னர் போட்ட பதிவின் சுட்டி கீழே,

  மின்வெட்டில் மின்னல் வெட்டும் தலைகீழ் மின்மாற்றி

  ReplyDelete
 8. //இன்வர்டர் குறித்து வேறு கேள்விகள் உங்களுக்கு இருந்தால், பின்னூட்டத்தில் என்னிடம் நீங்கள் கேட்கலாம்//

  ம்... (மின்வெட்டு)காலம் அப்பிடி ஆகிப்போச்சு!! :-))))))

  ReplyDelete
 9. நல்ல பகிர்வு.

  எனது அனுபவத்தைப் பகிர்வது சிலருக்கு உபயோகப்படலாமென எண்ணுகிறேன். 5 வருடங்களாக APC BI1000I உபயோகிக்கிறோம். அப்போது 30 K ஆயிற்று. நீங்கள் சொல்லியிருப்பது போல் 4 ஃபேன், லைட் மற்றும் மிக்ஸி க்ரைண்டர் என 5 ஆம்ப் எல்லாம் வேலை செய்யும்.

  / பாத் ரூமில் ஹீட்டர் உள்ளதால், அந்த ரூம் முழுதும் இன்வர்டர் கனக்ஷன் இருக்காது. இதனால் ஹீட்டர் மட்டுமின்றி, பாத் ரூம் விளக்குகளும் எப்போதும் இன்வர்டர் மூலம் எரியாது !/

  இங்கு அப்படி அல்ல. நமது எல்லா 5 ஆம்ப் இணைப்புகளுக்கும் இன்வெர்டருடன் இணைப்புக் கொடுத்து விடுவார்கள். 15 ஆம்ப்பில் இயங்கக்கூடிய கீசர், ஏசி, மைக்ரோவேவ் மட்டும் உபயோகிக்க முடியாது.

  முடிந்தவரை குறைந்தபட்சமாகவே உபயோகிப்போம். டாடா ஸ்கை என்பதால் டிவி தடைபடாதென்றாலும் ப்ளாஸ்மா மிக அதிகமாக மின்சாரத்தை இழுப்பதால், லோகல் கேபிளில் ஒளிபரப்பு இருந்தால் இன்னொரு டிவியில் முக்கிய செய்தி என்றால் மட்டும் பார்ப்பது வழக்கம்.

  /ரிப்பேர் வரும்போது ஒவ்வொருவரும் மற்றவர் மேல் குறை சொல்வார்கள். ரிப்பேர் சரியாகாது./

  இது ரொம்ப சரி. போராடிதான் சரி செய்ய வேண்டி வந்தது ஆரம்பத்தில்.

  முக்கியமாக நான் பகிர்ந்திட விரும்புவது:

  1. AMC (வருடப் பராமரிப்பு ஒப்பந்தம்) எடுப்பது சாலச் சிறந்தது. இதனால் வாங்கிய 2 வருடத்தில் ஃபேனில் கோளாறு வந்த செயலிழந்தபோது புதியது மாற்றித் தந்தார்கள். இல்லையெனில் தனியாக 12K கொடுக்க நேர்ந்திருக்கும்.

  2. ஃப்ளாட்களில் வசிப்பவர்கள் ஹாலில் அல்லது பெட்ரூமில் வைக்க நேரலாம். இதிலிருந்து சிலசமயங்களில் கசிகிற அமிலப் புகை உடல்நலத்துக்கு மிகக் கேடு. இந்தப் பிரச்சனை முதலிரண்டு வருடம் இடையிடையே ஏற்பட அதன் பிறகு பராமரிப்பே தேவைப்படாத Exide invasafe 400-க்கு மாறி விட்டோம். 2 பாட்டரிகள் வாங்க வேண்டிவரும். விலை சற்று அதிகமானாலும் உடலுக்குத் தீங்கு விளைவிக்காது என்பதால் இந்தப் பரிந்துரையை பரீசிலிக்கலாம். இரண்டரை வருடங்கள் வரை வருகின்றன (பெங்களூரில் அதிகமாய் மின் தடை இல்லாததால்).

  ReplyDelete
 10. மிக்க நன்றி அண்ணா, யார்கிட்ட போய் கேட்கறதுனு நினைச்சுட்டு இருந்தேன், எங்க ஊர்ல இன்னும் அதிகம் பேர் இன்வர்ட்டர் உபயோகிக்க ஆரம்பிக்கலை, அதனால இங்க யாருக்கும் அதிகம் தெரியாது, உங்க பதிவு எனக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்

  ReplyDelete
 11. பதிவில் பின்னூட்டத்தை சேர்த்ததற்கு நன்றி. குறிப்பாக invasafe பேட்டரி பற்றியும் அனைவரும் தெரிந்து வைத்திருப்பது நன்று. இந்தக் கசிவு பற்றிய புகாருக்கு ’லேசான கசிவுதானே, அதனால் கேடு ஒன்றுமில்லை’ எனும் பொறுப்பற்ற பதிலையே தந்து வந்தனர் இன்வெர்டர் சர்வீஸ் செண்டரில்:(!

  ReplyDelete
 12. முதலில் எல்லாம் பேட்டரி ஆசிட் ஊற்ற 150 ரூபாய் charge செய்தார்கள் ஆனால் இப்போது நானே Petrol Station போய் 17 ரூபாய்க்கு ஒரு லிட்டர் வாங்கி நானே ஊற்றிவிடுகிறேன்.

  ReplyDelete
 13. இது ஒரு நல்ல பதிவு

  ReplyDelete
 14. நல்ல பகிர்வு மோகன். தில்லியில் மின்வெட்டு ரொம்பவே அதிகம் என்பதால் பல வருடங்களாகவே எல்லோரும் இன்வர்டர் வைத்திருக்கிறார்கள். எங்கள் ஏரியாவில் மின்வெட்டு கிடையாது - புது தில்லி முனிசபல் லிமிட் [வி.ஐ.பி ஏரியா!] என்பதால்!!!

  ReplyDelete
 15. கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பே, வீட்டில் இன்வர்ட்டர் கனெக்‌ஷன் கொடுத்துவிட்டோம் :)

  கணிணி, டிவி, ஃபேன், ட்யூப் லைட் என பலவற்றிற்கு கனெக்‌ஷன் கொடுத்திருந்தாலும், எதையும் தேவையை பொறுத்து உபயோகப்படுத்துவதால், இன்னும் நன்றாக வேலை செய்கிறது.

  ReplyDelete
 16. சீஸனல் போஸ்ட்:)))

  ReplyDelete
 17. எளிமையாக இன்வெர்டரின் பயனையும் பயன்பாட்டையும் புரிந்து கொண்டேன். நன்றி.

  ReplyDelete
 18. அருமையான, பயனுள்ள பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  எனது மகன் சரவணன் மூன்று வருடங்கள் முன்பே எங்கள் வீட்டில் மாட்டி விட்டான்.
  நன்றி.

  ReplyDelete
 19. ஈது ஒரு திருட்டு இல்லையா ? பட்ற்றக்குறை இறக்கும்போது நீங்கள் காசுள்ளவர்கள் கரன்ட் வரும்போது சமிப்பது மீண்டும் பற்றாக்குறையை ஒருவ்க்கும் எம்பது தெரியாத அல்லது அது பற்றி கவலை இல்லையா ?

  ReplyDelete
 20. தேவையான நேரத்தில் நல்ல பதிவு மோகன் குமார்.

  சுகி, உங்கள் அறிவின் பூரணம் என்னை வியக்க வைக்கிறது. ;-)

  ReplyDelete
 21. Anonymous3:17:00 AM

  இன்வர்டர் வாங்க யோசித்து கொண்டிருந்த வேளையில் வந்திருக்கும் பதிவு. அனைத்து தகவல்களுடன்.

  ReplyDelete
 22. Anonymous3:18:00 AM

  You are becoming one of my favourite bloggers, Mohan Sir!!

  ReplyDelete
 23. நல்ல விவரமான பதிவு.
  எனக்கு இன்வர்ட்டர் உபயோகத்தைவிட அதின் கத்தல் தான் நாராசமாக இருக்கிறது. உங்கள் பதிவிலிருந்து பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். இப்போதுதான் பாட்டரி மாத்தினோம். டிஸ்டில்ட் வாட்டரும்தான். ஆசிட் பற்றித் தெரியாது. சொன்ன மாதிரி இன்வர்ட்டர் விற்றவருக்குப் பதினைந்து தடவை செய்தாச்சு. இன்னும் வந்தபாடில்லை.பவர் போவதற்கு முன்னால் ஃப்ரிட்ஜ்,கணினி எல்லாவற்றையும் அணைத்துவிடுகிறோம்.என் டாட்டா ஸ்கை போட்டால் அவருக்கு மின்விசிறி ஓடாது:))))நாங்களும் வாங்கி ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. இன்னோரு இன்வர்ட்டர் தான் வாங்கணும்னு நினைக்கிறேன்.மிக மிக நன்றி. எனக்கு உண்மையாகவே பயனுள்ளதாக இருந்தது.

  ReplyDelete
 24. ENgaL veetil naangale distilled water vittuk kolkirom. Battery naalu varudam vantha pin, ippothu matri ullom. Pazhaiya batteryai avarkale buy back-l eduthuk kolkiraarkal.

  Upayokamaana pakirvu.

  ReplyDelete
 25. This comment has been removed by the author.

  ReplyDelete
 26. இன்வர்டர் குறித்த மேலதிக தகவல்களுக்கு மிக்க நன்றி வவ்வால் அவர்களே !

  ReplyDelete
 27. ஹுசைனம்மா: செல்லாது ! செல்லாது ! நீங்கல்லாம் சின்னதா பின்னூட்டம் போட்டா அது செல்லாது :))

  ReplyDelete
 28. சார் ஒரு டவுட்.... நாங்கள் வாங்கியிருக்கும் இன்வர்டர் பாட்டரியில் (எக்ஸ்சைட்) ஒரு transparent ஆக ஒரு சிறு பைப் உள்ளது.. அதன் மேற் பகுதியில் ஒரு சிகப்பு மூடி (சிறிய அளவு) உள்ளது.. அது கீழ் இறங்கினால்தான் டிஸ்டில்ட் வாட்டர் போட வேண்டும் என்றார் அதன் சர்வீஸ்காரர்கள் நாங்கள் ஜீன் 2012 வாங்கினோம்... 8 மாதம் ஆகியும் அந்த சிகப்பு கேப் கீழ் இறங்கவில்லை... அவரிடம் சொன்னோம்..அவர்”சார் அது ஒண்ணும் ஆகாது சார்... 1 வருசத்துக்குப்பறம் கீழ எறங்கம் அப்ப பாக்கலாம்” என்கிறார்... so far no problem.....நாங்கள் குறைந்த அளவே பயன் படுத்துகிறோம்... ஆனால் என்னை அந்த கீழ் இறங்காத சிவப்பு cap கனவில் வந்து பயமுறுத்துகிறது... ஏதாவது வழி கூறவும்...

  ReplyDelete
 29. ராமலட்சுமி: பயனுள்ள தகவல்கள் + தங்கள் அனுபவத்தை அனைவரிடமும் சேர்க்க வேண்டும் என்கிற நல்ல எண்ணம் புரிகிறது, மிக்க நன்றி !

  ReplyDelete
 30. கதிர் ராத்: இத்தகைய பின்னூட்டங்கள் மிகுந்த மகிழ்ச்சி தருகின்றன Thanks a ton !

  ReplyDelete
 31. சிரிப்புசிங்காரம் said...

  இது ஒரு நல்ல பதிவு
  **
  நிஜமா தான் சொல்றீங்களா? :))

  (உங்க பேர் ரொம்ப நல்லாருக்குங்க )

  ReplyDelete
 32. வடுவூர் குமார் said...


  முதலில் எல்லாம் பேட்டரி ஆசிட் ஊற்ற 150 ரூபாய் charge செய்தார்கள் ஆனால் இப்போது நானே Petrol Station போய் 17 ரூபாய்க்கு ஒரு லிட்டர் வாங்கி நானே ஊற்றிவிடுகிறேன்.

  **
  150 ரூபாயா ? அடேங்கப்பா ! ரொம்ப நாளா இன்வர்டர் வச்சிருக்கீங்க போல !

  ReplyDelete
 33. Badri,

  Different inverters will require distilled water in different manner. If your battery is costly, it may require once in 6 months or 9 months only.

  YOu have said that this issue follows you in your dreams also. Dont worry; nothing untoward will happen. The worst that can happen is : Charge will go down. It may not charge with water alone; in that case, they may take the batterty to their company and charge it there and bring back. (Similar to what you do to your vehicle battery; if it does not get charge properly by distilled water, they will put in charger for 1 day right? Similar to that, it will be done here).

  The simplest solution to your problem is: Call the service person & inform him that the water level has come down once in 6 months. He will come; though there is still some water inside, he will fill it fully & go. Once he comes, he will not go without filling. It will cost you about Rs. 50 only. Thus your inverter will also get the required distilled water and you can also have peace of mind.

  ReplyDelete
 34. வெங்கட்: டில்லியிலும் அதிக பவர் கட் என்பது ஆச்சரியமான தகவல். நல்ல வேளை உங்க ஏரியாவில் அதிக பவர் கட் இல்லை

  ReplyDelete
 35. nalla payanulla thakaval.. irul maraiyaa vendum nirantharamaaka ... inventer paynulla thakaval.. vaalththukkal

  ReplyDelete
 36. இன்வேர்ட்டர் வாங்குபவர்கள் எல்லாரும் அம்மாவின் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாதவர்கள் என்றே சொல்வேன்! ( புதுசா யோசிக்கிராங்கலாம்)

  ReplyDelete
 37. பயனுள்ள பதிவு சார் ! நன்றி ! (மக்கள் பாவம் !)

  ReplyDelete
 38. //BADRINATH said...//
  நண்பா,, அந்த சிவப்பு கேப் கீழே இறங்கும். டிஸ்டில் தண்ணீர் அளவு குறைந்தால் அந்த சிவப்பு கேப் கீழே இறங்கும்.
  ஒரு ரூபா நாணயத்தை கொண்டு பேட்டரி இன ஒரு மூடியை கலட்டி பார்த்து டிஸ்டில் தண்ணீர் அளவு பார்த்தீங்கன்னா சிவப்பு மூடி கீழே இருந்குமா இறங்காதான்னு நீங்களே சொல்லிருவீங்க !

  ReplyDelete
 39. இன்வெர்டர் கரண்ட் ல டீவி பயன்படுத்துவது தவறா?

  ReplyDelete
 40. SANDHIYA NANTHAKUMAR said...

  இன்வெர்டர் கரண்ட் ல டீவி பயன்படுத்துவது தவறா?

  பெரிய அளவு தவறில்லை. இந்த பதிவிலேயே சொல்லி இருக்கிறேன். நம் வீட்டில் கரண்ட் இல்லாத போது ஏரியா கேபிள் டிவி காரர்களுக்கும் கரண்ட் இருக்காதே? அல்லது டாட்டா ஸ்கை போல் இருந்தால் பார்க்கலாம். சென்னை போல ஓரிரு மணி நேரம் எனில் ஓகே. அதிக நேரம் எனில் தாங்காது

  ReplyDelete
 41. உங்க பதிவுக்கு நன்றி
  இப்பொழுது இன்வேர்ட்டர் அமைக்க இயலாத சூழ்நிலை, வாடகை வீட்டில் இருப்பதால்.

  என்னுடைய லேப்டாப் மற்றும் மோடம் இரண்டையும் ஒரு 3 மணி நேரம் பவர் பேக் கப் உடன் வேலை செய்ய எதாவது ஐடியா கொடுங்கள்.

  அப்புறம் UPSக்கும் Inverter க்கும் என்ன வித்தியாசங்கள்

  ReplyDelete
 42. // suki said...

  ஈது ஒரு திருட்டு இல்லையா ? பட்ற்றக்குறை இறக்கும்போது நீங்கள் காசுள்ளவர்கள் கரன்ட் வரும்போது சமிப்பது மீண்டும் பற்றாக்குறையை ஒருவ்க்கும் எம்பது தெரியாத அல்லது அது பற்றி கவலை இல்லையா ?
  //

  நீங்கள் சொல்ல்வது உண்மைதான். பணம் உள்ளவர்கள் இன்வெர்ட்டர் வாங்கி வைத்து விடுகிறார்கள்.இல்லாதவர்கள் அப்படியேதான் இருப்பார்கள். தமிழ்நாட்டில் முக்கிய மின் பற்றாகுறைக்கு காரணம் இந்த இந்வெர்ட்டர் தான். படித்த நாமே இவ்வாறு செய்துவிட்டு அரசாங்கத்தை குறை சொல்வது ஒன்று. முடிந்தவரை இன்வெர்ட்டர் உபயோகபடுத்தாமல் இருங்கள்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...