Thursday, March 15, 2012

எழுத்தாளர் சுஜாதாவின் பத்து செகன்ட் முத்தம்

குமுதம் இதழில் வெளியான நாவல் பத்து செகன்ட் முத்தம் !  ஓட்ட பந்தய
வீராங்கனையின் கதை. 18 அத்தியாயங்களே கொண்ட சிறிய நாவல் இது .

கதை


படம் RVS  Facebook-லிருந்து சுட்டது 
தமிழரசி (சுருக்கமாக ரசி ) ஏசியாட் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள திருச்சியில் இருந்து டில்லி வந்திருக்கிறாள். உடன் அவளது டிரைனரும், தாய் மாமாவுமான ராஜ் மோகன். பயிற்சி ஓட்டத்தில் இவளது ஓட்டத்தை கண்டு இவளை பேட்டி எடுக்க முயல்கிறான் மனோகர் என்கிற பத்திரிக்கையாளன். ஆனால் ரசியின் மாமா அவனை அவமானபடுத்தி அனுப்புகிறார்.

ரசி நூறு மீட்டரை பத்து செகண்டுகளுக்குள் கடக்க வேண்டும் என்பது அவள் மாமாவின் விருப்பம். அவளை அந்த இலக்கை நோக்கி தான் அவர் செலுத்துகிறார். ஏசியாட் போட்டியில் ரசி தங்க பரிசு வெல்கிறாள். வெற்றியை கொண்டாட அவளை மனோகர் உடன் வெளியே சென்று வர அனுமதிக்கிறார். ஒரு ஓட்டல் செல்லும் ரசி முதல் முறையாக மது அருந்தி விட்டு வீடு வருகிறாள். இதனால் கோபமாகும் மாமா அவளை அறைக்குள் போட்டு பூட்டி விடுகிறார்.

மனோகர் இதனை தெரிந்து கொண்டு கோர்ட்டில் மாமா அவளை அடைத்து வைத்திருப்பதாக வழக்கு தொடுக்கிறான். வழக்கு விசாரணையில் மாமா தன்னை தனி அறையில் அடைத்து வைத்தது உண்மை தான் என்று ரசி சொல்ல, கோர்ட் அவளை அப்படி அடைத்தது தவறு என்றும், அவள் தன் விருப்பபடி இருக்கலாம் என்றும் தீர்ப்பு கூறுகிறது.

ரசியை மனோகர் தன்னுடன் அழைத்து செல்கிறான். மாமா அவளிடம் வந்து "என்னுடன் வா" என கெஞ்சுகிறார். மனோகர் ரசியை தான் மணக்க போவதாக சொல்கிறான். ரசியும் மனோகரும் டில்லியின் பல இடங்களை சுற்றி பார்த்து கொண்டிருக்க "மாமா தற்கொலை செய்து கொண்டார்" என்கிற செய்தி அவர்களை அடைகிறது. !! அவர் எழுதிய கடைசி கடிதத்தை ரசி வாசிக்கிறாள். கடிதத்தில் அவர் ரசி மேல் கொண்ட காதலும், விளையாட்டில் அவள் சாதித்த பின் அவளை மணக்க எண்ணியிருந்ததையும் எழுதி உள்ளார். அவள் ஓட்டத்தில் பெரிதாய் சாதிக்க வேண்டும் என்கிற தன் ஆசையையும் வெளிப்படுத்தி உள்ளார்.

கடிதத்தை படித்து முடித்த ரசி, " ஓட்டத்தில் தான் சாதிப்பதே முக்கியம்" என்றும் அதன் பின் தான் நம் கல்யாணம் என்றும் மனோகரிடம் சொல்வதோடு கதை முடிகிறது.
**
சிறிய நாவல் என்பதால் ஒன்றரை மணி நேரத்தில் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். ரசி அவள் மாமா, மனோகர் மற்றும் அவன் நண்பன் (புகை படக்காரன்) ஆகிய நான்கு பாத்திரங்களை சுற்றியே கதை செல்கிறது.

ஓட்ட பந்தயத்துக்கு எப்படி எல்லாம் தயார் ஆக வேண்டும் என்பதை detailed-ஆக விளக்கி உள்ளார் சுஜாதா. அந்த மாமா மேல் கோபப்படுவதா வேண்டாமா என்று நமக்கே சற்று யோசனையாக தான் உள்ளது. கதையில் ஒரு இடத்தில் ஒரு பாத்திரம் வழியே சுஜாதா இப்படி சொல்கிறார்.

" எதையுமே, எந்த லட்சியத்தையுமே அடையலாம். அதுக்கு என்ன விலை குடுக்குறோம்கிறது தான் முக்கியம். ஆத்மாவை விற்று கிடைக்கிற எதுவும் வொர்த் இல்லை"

சுஜாதா கதையில் சொல்ல வரும் ஆதாரமான செய்தி இது தான் !

மனோகரின் நண்பனாக வரும் திரிபாத்தி என்கிற கேமரா மேன் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். ஓட்டலுக்கு போகும் போது சாப்பிட்டு முடித்து விட்டு ஸ்பூனை எடுத்து தன் பையில் போட்டு கொள்வது ஒரு உதாரணம் !

மாமா இறந்த பிறகு ரசி என்ன பேசி கொண்டே அழுகிறாள் என சுஜாதா சொல்வது செம சுவாரஸ்யம் : " என்கிட்டே நீ இல்லாட்டா செத்து போயிடுவேன்னு சொல்லி இருக்க கூடாதா மாமா?"

மாமா " என்னை எரிக்காதீர்கள். புதைத்து விடுங்கள். என்னை புதைத்த இடம் மீது யாராவது ஓடினால் நான் மகிழ்வேன்" என சொல்லும் இடம் நெகிழ்வு.

ஓட்ட பந்தயம் என்கிற வித்தியாச கதை களத்தில் சுஜாதா முத்திரையுடன் எழுதப்பட்ட இந்த நாவலை அவசியம் வாசியுங்கள் !

24 comments:

 1. வாங்க வேண்டிய புத்தகங்கள் லிஸ்டில் இதுவும் இருந்தது....

  உங்கள் பதிவு பார்த்தவுடன் நிச்சயம் வாங்க வேண்டும் எனத் தோன்றியது....

  நல்ல பகிர்வுக்கு வாழ்த்துகள் மோகன்.

  ReplyDelete
 2. விவரித்ததுக்கு நன்றிகள்

  ReplyDelete
 3. " எதையுமே, எந்த லட்சியத்தையுமே அடையலாம். அதுக்கு என்ன விலை குடுக்குறோம்கிறது தான் முக்கியம். ஆத்மாவை விற்று கிடைக்கிற எதுவும் வொர்த் இல்லை"

  Super !

  ReplyDelete
 4. " எதையுமே, எந்த லட்சியத்தையுமே அடையலாம். அதுக்கு என்ன விலை குடுக்குறோம்கிறது தான் முக்கியம். ஆத்மாவை விற்று கிடைக்கிற எதுவும் வொர்த் இல்லை" மனதைத்தொடும் வரிகள்.

  ReplyDelete
 5. அசலின் சுவை குன்றாமல் இருந்தது நகலின் சுவை. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 6. விமர்சனம் அருமையா இருக்கு சார். படிக்க வேண்டும் இந்த நாவலை சீக்கிரம்.

  ReplyDelete
 7. //வெங்கட் நாகராஜ் said...

  வாங்க வேண்டிய புத்தகங்கள் லிஸ்டில் இதுவும் இருந்தது.... //
  ****
  நிச்சயம் வாசியுங்கள் வெங்கட்! நன்றி !

  ReplyDelete
 8. விக்கியுலகம் said...

  விவரித்ததுக்கு நன்றிகள்

  **
  நன்றி விக்கி

  ReplyDelete
 9. ரிஷபன் சார்: நன்றி

  ReplyDelete
 10. ராஜி said...

  அசலின் சுவை குன்றாமல் இருந்தது நகலின் சுவை. பகிர்வுக்கு நன்றி

  ***
  தங்கள் பின்னூட்டம் மிக மகிழ்ச்சி தந்தது நன்றி !

  ReplyDelete
 11. கோவை2தில்லி said...

  விமர்சனம் அருமையா இருக்கு சார். படிக்க வேண்டும் இந்த நாவலை சீக்கிரம்.

  ***
  நன்றி மேடம்.

  ReplyDelete
 12. எப்பவோ படிச்சது. மீண்டும் நினைவு படுத்தியுள்ளீர்கள்! நான் இல்லாட்டா நீங்க செத்துடுவேன்னு சொல்லவே இல்லையே மாமா வசனம் படிக்கும்போது அப்புறம் வந்த நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் (அப்புறம்தானே வந்தது?!!) சுகாசினி ப்ரதாப்பிடம் சொல்லும் இதே போன்று வசனம் நினைவுக்கு வந்தது! :))

  ReplyDelete
 13. டெல்லியில் 1982-ல் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்த சமயத்தில் குமுதத்தில் எழுதப்பட்ட தொடர்கதை.

  கடமையிலிருந்து, சாதனையிலிருந்து ஒரு திறமையுள்ள பெண்ணின் கவனத்தைக் கலைக்க, அவளை நிதானப்படுத்த, ஒரு நல்லாசிரியன் உயிர்த் தியாகம் செய்யவேண்டியுள்ளது.

  ReplyDelete
 14. ஸ்ரீ ராம் இதே மாதிரி வசனம் நெஞ்சத்தை கிள்ளாதேயில் வந்ததா? ப்ளாக் எழுதுவதால் நிறைய இது மாதிரி தகவல் தெரிய வருது நன்றி ஸ்ரீராம்

  ReplyDelete
 15. பால ஹனுமான்: நாவல் குறித்த சில தகவல் நீங்கள் சொல்லி தான் அறிகிறேன் மிக நன்றி

  ReplyDelete
 16. மிக்க நன்றி.கதை முழுவதும் படித்த திருப்தி.சுஜாதா இருந்திருந்தால் இந்த விமர்சனத்திற்கு சந்தோஷப் பட்டிருப்பார்.நான் சுஜாதாவின் ரசிகை.

  ReplyDelete
 17. நமக்கு தலைவரோட த்ரில்லர் கதைகள் போதும் :)

  ReplyDelete
 18. //Asiya Omar said...
  மிக்க நன்றி.கதை முழுவதும் படித்த திருப்தி.சுஜாதா இருந்திருந்தால் இந்த விமர்சனத்திற்கு சந்தோஷப் பட்டிருப்பார்.நான் சுஜாதாவின் ரசிகை//

  **********
  மிக மகிழ்ச்சி. நன்றி ஆசியா

  ReplyDelete
 19. ரகு: த்ரில்லர் தாண்டி சுஜாதா வெளையாடிருக்கார். அவர் சிறுகதைகள் போல தாக்கம் எதில் கிடைக்கும் சொல்லுங்க

  ReplyDelete
 20. குமுதத்தில் தொடராக வந்தது. படித்திருக்கிறேன்.
  ஜேகே, நில் கவனி தாக்கு - படித்திருக்கிறீர்களா?
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 21. டீன் ஏஜில் படித்த நியாபகம். நல்ல கதை. மீண்டும் ஒரு முறை நியாபக படுத்தி விட்டீர்கள்

  ReplyDelete
 22. இந்த கதையை ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். மீள்வாசிப்பு செய்ய உங்கள் பதிவு ஆவலைத் தூண்டுகிறது.

  ‘பத்து செகண்ட் முத்தம்’ என்கிற தலைப்புதான் இந்த நாவலின் அட்ராக்‌ஷன் பாயிண்டே.

  நூறு மீட்டர் தூரத்தை பத்து செகண்ட் வேகத்தில் நாயகி கடக்கவேண்டும் என்பதே அவரது பயிற்சியாளரின் லட்சியம், வெறி எல்லாம் (இன்றுவரை பெண்கள் யாரும் இந்த வேகத்தில் கடந்ததாக தெரியவில்லை). இதைதான் ‘பத்து செகண்ட் முத்தம்’ என்கிறார் சுஜாதா.

  ReplyDelete
 23. இந்தக் கதையின் துவக்கத்தில் தமிழரசியின் அறிமுகத்தில் ஓரிடத்தில் அவரது விவரணை அவ்வளவு அருமையாக இருக்கும்; அவளது கால்கள்..அதைப் பாருங்கள் என்று தொடங்கிச் செல்லும் அந்த ஒரு பத்தி ஒரு முத்து..

  லட்சியங்களுக்குள் மூழ்கும் மனிதர்கள் பல நேரங்களில் அசாதாரணமான குணாதிசயப் பித்தில் மாட்டும் சாத்தியங்களை விவரிக்கும் புத்தகம்...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...