Monday, March 26, 2012

இறையன்பு எழுதிய "ஓடும் நதியின் ஓசை"

இறையன்பு அவர்களின் பேச்சை நேரிலோ டிவியிலோ பார்த்திருக்கிறீர்களா? அருவி போல் தங்கு தடையின்றி அழகிய தமிழில் பேசுவார். அதே போல் தான் உள்ளது அவர் எழுத்தும். நல்ல பேச்சாளர் நல்ல எழுத்தாளர் ஆகவும் உள்ளதை காணும் போது ஆச்சரியமாக உள்ளது.


இறையன்பு எழுதிய "ஓடும் நதியின் ஓசை" கட்டுரை தொகுப்பை சமீபத்தில் வாசிக்க முடிந்தது. துவக்கத்திலேயே இவ்வாறு சொல்கிறார் எழுத்தாளர்:

"சுய முன்னேற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை ஜடா முனிவரை போல் அமர்ந்து அறிவுரை கூறவும் எனக்கு ஆசை இல்லை. நான் பகிர்ந்து கொள்ள விரும்புபவை என் அனுபவங்களை"

ஆயினும் புத்தகம் நிச்சயம் நம்மை குறித்து நிறையவே சிந்திக்க வைக்கிறது. 

சின்ன சின்ன விஷயங்களை உடனுக்குடன் செய்து முடித்தால் நம் முன்னேற்றம் இன்னும் துரிதமாகும் என்பதை தன் அனுபவம் கொண்டே சொல்கிறார். 

நடைபயிற்சி குறித்த பகுதியில் ஜே. கிருஷ்ணமூர்த்தி யாருடனும் சேர்ந்து நடப்பதை விரும்பவே மாட்டாராம். உடன் வருபவர் இயற்கையை உற்று நோக்குவதை, ரசிப்பதை தடை செய்து விடுவார் என்பதே காரணமாம் என்று சுவாரஸ்ய தகவல் கூறுகிறார். 

எதிர்காலம் பற்றி சொல்லும் போது " கணினி எல்லாம் நிறைந்திருக்கும்.... காற்று  மட்டும் குறைந்திருக்கும்" என அவர் சொல்லும் போது நம்மால் பெருமூச்சு விடாமல் இருக்க முடிய வில்லை. 

படிப்பு மட்டுமே வாழ்வல்ல என்பதற்கு இவர் கூறும் நண்பரின் வாழ்க்கை மாணவர்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும். எப்போதும் பாடத்தில் முதல் வகுப்பெடுக்கும், சினிமா கூட பார்க்காத, கதை புத்தகம் வாசிக்காத நண்பன் பின்னாளில் வாழ்க்கையில் சற்று குழம்பி, யாருடனும் படிப்பு தவிர வேறு எந்த விஷயமும் பேச முடியாமல் நின்ற நிலையை பகிரும் போது சற்று அதிர்ச்சியாக தான் உள்ளது. 

ஒவ்வொரு மனிதனும் அங்கீகாரம் தேடவே செய்கிறான். அது கிடைக்கா விடில், என்னை யாரும் அங்கீகரிக்க வில்லை என மனதுக்குள்ளோ, வெளியிலோ புலம்புகிறான். இது பற்றி விரிவாய் பேசும் இறை அன்பு, "நாம் யாரை அங்கீகரித்துள்ளோம் ..பிறர் நம்மை அங்கீகரிக்க?" என கேள்வி எழுப்புகிறார். பின் இவ்வாறு நெத்தியடியாக சொல்கிறார். " உண்மையான அங்கீகாரம் என்பது நமக்கு நாமே கொடுத்து கொள்கின்ற அங்கீகாரம் மட்டும் தான்" 

"நிகழ் காலத்தில் வாழுங்கள்"  என்பது குறித்த அத்தியாயத்தில் அவர் மேற்கோள் காட்டும் "நொடிக்கு நொடி வாழுங்கள்" என்கிற ஜென் தத்துவ வரிகள் அருமை ! 

எந்த வித மனச்சிக்கலும் இல்லாத நபரை சந்தித்தால் என்ன செய்வீர்கள் என ஒரு மன நல மருத்துவரை கேட்டார்கள். " அப்படி யாரேனும் ஒரு நபர் இருந்தால் அவரை நாங்கள் நிச்சயம் குணப்படுத்திவிடுவோம்"  என்கிற வரிகளை வாசித்தவுடன் சிரிப்பு வந்தாலும், அது நமக்கு பெரும் ஆறுதல் தரும் வரிகளாக இருப்பது நிஜம்! இந்த வரிகளில் உள்ள உண்மை புரிந்தால், நமக்கு அன்றாடம் வரும் மன குழப்பங்களுக்கு இனி பெரிதாக வருந்த மாட்டோம் !

உழைப்பு, முயற்சி, பொறுமை குறித்த கீழ் காணும் வரிகள் அற்புதம் !

ஒரு விதை ஜெயிப்பதற்கு மரம் எவ்வளவு முறை பூக்க வேண்டியிருக்கிறது? எத்தனை முறை காய்களை சுமக்க வேண்டியிருக்கிறது? 

திருப்பதியில் சுவாமியை தரிசிக்கும் நேரம் சில நொடி. ஆனால் அதற்கு சென்று வருகிற கால அளவு எவ்வளவு மணி நேரம்? 

தேர்வு எழுதுவது மூன்று மணி நேரம்.ஆனால் அதற்கு படிப்பு எத்தனை மாதங்கள்? சில தேர்வுக்கு எத்தனை வருடங்கள் !

நாம் வெகு சாதாரணமாக ஒரு சில நொடிகளில் கடக்கிற பாலம் எத்தனை வருடங்கள் எத்தனை பேரின் உழைப்பில் உருவாகிறது? 

உலகத்தில் மிக சிறந்த கண்டுபிடிப்புகளை தந்தவர்கள் எல்லாரும் ஞாபக திறனில் அதிக கவனம் செலுத்தாதவர்களாக இருந்தார்கள். ஐன்ஸ்டீனில்இருந்து எடிசன் வரை, ஆர்க்கிமிடசில் இருந்து ராமானுஜர் வரை ஞாபக சக்திக்கு முக்கிய துவம் தரவில்லை. தந்திருந்தால் அவர்களும் சராசரி மனிதர்களாக இருந்திருப்பார்கள் சரித்திர புருஷர்கள் ஆகியிருக்க மாட்டார்கள் என சொல்லி "அட!" போட வைக்கிறார்.

இறுதியாக புத்தகத்தில் சொன்ன ஒரு வரிகள் சொல்லியே இந்த விமர்சனத்தை நிறைவு செய்கிறேன். " நாம் ரசித்து செய்யா விட்டால் ரொட்டி கூட புளித்து போகும் -கலீல் கிப்ரான்" !

இறையன்பு அவர்கள் ரசித்து செய்த இந்த புத்தகம் அவசியம் நாம் , ஜப்பானியர்கள் தேநீர் அருந்துவது போல் நிதானமாய் ரசித்து வாசிக்க வேண்டிய புத்தகம் !

நூலின் பெயர்:  : " ஓடும் நதியின் ஓசை"
வெளியீடு நியூ சென்ச்சுரி புக் ஹவுஸ், சென்னை  
ஆசிரியர்: இறை அன்பு 
விலை: ரூ. 60
**********
திண்ணை மார்ச் 25,2012  இதழில் வெளியான கட்டுரை 

22 comments:

 1. நல்ல எழுத்தாளர். அதையும் விட நல்ல மனிதர். அவரின் சில புத்தகங்கள் படித்திருக்கிறேன். இந்தப் புத்தகமும் கேள்விப்பட்டு இருக்கிறேன். படிக்க வேண்டும் எனத் தூண்டும் விமர்சனம். நன்றி மோகன்.

  ReplyDelete
 2. சுய முன்னேற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை ஜடா முனிவரை போல் அமர்ந்து அறிவுரை கூறவும் எனக்கு ஆசை இல்லை. நான் பகிர்ந்து கொள்ள விரும்புபவை என் அனுபவங்களை" //

  அனுபவங்கள்தான் நமக்கு ஆசான் என்று சொல்கிறார் இல்லையா, வாழ்த்துக்கள்....!!!

  ReplyDelete
 3. //" உண்மையான அங்கீகாரம் என்பது நமக்கு நாமே கொடுத்து கொள்கின்ற அங்கீகாரம் மட்டும் தான்" //

  நாம், நம்மை சுயபரிசோதனை செய்து, நம்மை நாமே மதிப்பீடு செய்துக் கொள்வது மட்டுமே சரியாகும். இதை, நான் பல வருடங்களாகக் கடைப் பிடிப்பிடித்து வருகிறேன்.

  நல்ல புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 4. நான் இறையன்புவின் தீவிர அபிமானி.

  ReplyDelete
 5. இறையன்பு அவர்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். தெள்ளத் தெளிவாக பேசுவார்.

  தன்னுடைய சிறுவயது முதல் பயணங்கள் மேற்கொண்டதை குறித்து பொதிகையில் அழகாக ஒருநாள் பேசினார்.

  ReplyDelete
 6. "நிகழ் காலத்தில் வாழுங்கள்" என்பது குறித்த அத்தியாயத்தில் அவர் மேற்கோள் காட்டும் "நொடிக்கு நொடி வாழுங்கள்" என்கிற ஜென் தத்துவ வரிகள் அருமை ! \\

  இறையன்பு அரசு உயர்பதவியில் இருந்தபோதும் ஆன்மீகம் என்பதை எப்படி நமக்கு புரியவைக்கவேண்டுமோ அப்படி எழுதி புரியவைப்பார்.,

  அவரது அக்கறை நமது முன்னேற்றம்தான்...:)

  மதிப்புரைக்கு நன்றிகள் பல நண்பரே

  ReplyDelete
 7. எங்கள் ஊரில் மாவட்ட ஆட்சியராக பணியில் இருந்தபோது இவரை பற்றி நிறைய கேள்விபட்டிருக்கிறேன். மற்றவர்களை சார்ந்து இருக்காமல், நேரடியாக களத்தில் இறங்க ஆர்வம் காட்டியவர். ஒரு முறை, ஒரு திரையரங்கில் அதிகம் விலை வைத்து டிக்கெட் விற்பதை, மாறுவேடத்தில் சென்று கையும் களவுமாக பிடித்தார்.

  ReplyDelete
 8. அருமை.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. அருமையாக புத்தகவிமர்சனம் தந்துள்ளீர்கள்
  இந்த மாதப் பட்டியலில் இந்தப் புத்தகத்தை
  சேர்த்துவிட்டேன்.பதிவுக்கு நனறி

  ReplyDelete
 10. அருமையாக அறிமுகம் செய்துள்ளீர்கள் நூலினை. மிக்க நன்றி. இவர் எழுதிய ‘நரிப்பல்’ கதைத் தொகுப்பை வாங்கி வைத்துள்ளேன். விரைவில் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது உங்கள் பதிவு.

  ReplyDelete
 11. வெங்கட்: இறை அன்பு எழுத்திலும் பேச்சிலும் மிக நல்ல மனிதராகவே அறியப்படுகிறார். நன்றி

  ReplyDelete
 12. **
  ஆம் நன்றி மனோ
  **

  ReplyDelete
 13. இறை அன்பு உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் என தெரியும் நன்றி அமைதி அப்பா
  **

  ReplyDelete
 14. நன்றி கோவை தில்லி2மேடம். நீங்கள் குறிப்பிட்ட பேச்சை கேட்காமல் போனேனே என வருத்தமாய் உள்ளது
  **

  ReplyDelete
 15. சரியாய் சொன்னீர்கள் நிகழ் காலத்தில் சிவா நன்றி
  **

  ReplyDelete
 16. ரகு: நீங்கள் சொன்ன தகவல்கள் இறை அன்பு மீது மேலும் மதிப்பை கூட்டுகிறது நன்றி
  ***

  ReplyDelete
 17. முக நூல் புத்தகத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி ரத்னவேல் ஐயா
  **

  ReplyDelete
 18. ரமணி: மகிழ்ச்சி நன்றி வாக்களிதமைக்கும்
  ***

  ReplyDelete
 19. நன்றி ராமலட்சுமி இறை அன்பு சிறுகதை தொகுப்பும் வெளியிட்டுள்ளார் என்ற தகவல் ஆச்சரியமாய் உள்ளது

  ReplyDelete
 20. ரசித்தேன். பகிர்விற்கு நன்றி. அவரின் வேடிக்கை மனிதர்கள் என்கிற புத்தகம் கிடைத்தால் வாசித்துப்பாருங்கள். வயிறே வலித்துவிடும் சிரித்துசிரித்து. சிந்திக்கவும் வைப்பார். நானும் அவரின் ரசிகையே.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...