Sunday, September 9, 2012

கூர்க்கா வாழ்க்கை அறியாத தகவல்கள்: பேட்டி

எஸ். ராமகிருஷ்ணன் கூர்க்காக்கள் பற்றி எழுதியதை வாசித்துள்ளீர்களா? படித்துப் பாருங்கள். வாசிக்கும்போதே மனதைப் பிசையும் எழுத்து. கூர்க்காக்கள் என்போர் எத்தனை பரிதாபமான ஜீவன்கள் என்று தெரியும்.

அந்த கூர்க்காவை ஒரு ஞாயிறன்று வீட்டில் சமையல் செய்ய மீன் வாங்கி விட்டு திரும்பும் வழியில் பார்த்தேன். ஒல்லியான உருவம். தலையில் தொப்பி. காக்கி பேன்ட். கலர் சட்டை. மிக வேகமான நடை. அவருடன் பேசினால் என்ன என தோன்றியது. வண்டியை நிறுத்தி விட்டு, நான் தமிழிலும் அவர் ஹிந்தியிலும் பேச, ஒரு நிமிடம்கூட தாக்கு பிடிக்க முடிய வில்லை.

இது சரிப்படாது என புரிந்து அருகில் உள்ள ஒரு அடகு கடைக்கு நம்மை கூட்டி போனார் கூர்க்கா. அடகு கடை காரரிடம் நான் என்ன கேட்கிறேன் என வினவினார். " உங்களை படம் பிடிச்சு உங்கள் வாழ்க்கையை பத்தி எழுதணுமாம்; அதுக்கு எதோ கேட்கணுமாம்" என மொழி பெயர்த்தார் அடகு கடைக்காரர். லேசான தயக்கத்துக்கு பின் பேச சம்மதித்தார் கூர்க்கா.பேச்சு முழுவதுமே இரண்டு பக்கமும் மொழி பெயர்த்தவர் அடகு கடைக்காரர் தான் ! நேரம் போக போக வீட்டின் உள்ளே இருந்து அடகு கடைக்காரர் மனைவியும், புடவையை தலையில் சிறு முக்காடு போல் போட்டவாறு வந்து அமர்ந்து நாங்கள் பேசுவதை கேட்க ஆரம்பித்து விட்டார் ! அவர் கூடவே இரு குட்டி பசங்கள்.. !

அடகு கடைக்காரருக்கு " மொழி பெயர்ப்பாளர்" என்கிற புதிய அந்தஸ்து மிக பிடித்து விட்டது ! நடுவில் ஒரு ஆள் சீட்டு பணம் கட்ட வந்து, நின்று நின்று பொறுமை இழந்து " என் பணத்தை வாங்கிகிட்டு அப்புறம் பேசுங்க" என்றார் கடைக்காரரிடம் ! இப்படி சிறு கூட்டத்தோடு கூர்க்காவிடம் எடுத்த பேட்டி இதோ:
****
நீங்க எந்த ஊரு? உங்க அண்ணன் தம்பி எல்லாரும் என்ன செய்றாங்க?

எனக்கு ஊரு நேப்பால். ஆனா நாப்பது வருஷத்துக்கு மேலே இங்கே தான் இருக்கேன். என்னோட அப்பா இதே ஊரில் இதே தொழில் தான் பார்த்தார். அவர் இறந்த பிறகு அதே ஏரியாவில் நான் கூர்க்கா வேலை பாக்குறேன். எங்க அப்பாவுக்கு நான் ஒரே பையன். ஆணோ பெண்ணோ வேறு பிள்ளைகள் அவருக்கு கிடையாது

நேப்பாலில் இருந்து இங்கே வர பாஸ்போர்ட், விசா இதெல்லாம் வேணுமா?

இல்லை. நேபாளில் இருந்து இந்தியா வரவோ, இங்கிருந்து அங்கே போகவோ பாஸ்போர்ட் விசா எதுவும் தேவை இல்லை

உங்களுக்கு எத்தனை பசங்க? அவங்க என்ன செய்றாங்க?

எனக்கு ரெண்டு பசங்க. முதல் பையன் பீ. ஏ. முடிச்சிருக்கான். எங்க ஊரில் டீச்சர் வேலை பாக்குறான் ( இதை மிக பெருமையாக சொன்னார்) அடுத்த பையனுக்கு படிப்பு ஏறலை. பதினொன்னாவது வரை படிச்சான். நான் கூட அவ்ளோ தான் படிச்சேன். அவனை ஏதாவது கம்பனியில் செக்யூரிட்டி வேலையில் சேர்த்து விட முடியுமான்னு பாத்துகிட்டு இருக்கேன்

உங்களை மாதிரி கூர்க்கா இந்த ஊர் முழுக்க இருக்காங்களா? யார் உங்களுக்கு ஏரியா பிரிச்சு குடுப்பாங்க ?

நிறைய கூர்க்கா சென்னை முழுக்க இருக்காங்க. எங்களுக்கு அரசாங்கமோ பஞ்சாயத்தோ ஏரியா பிரிச்சு தருவது இல்லை. நாங்களே பாத்து பிரிச்சுக்குறது தான். என் அப்பா இந்த ஏரியா பார்த்தார். அவர் இறந்த பிறகு நான் பாக்குறேன். என்னோட எல்லைக்கு வேறு கூர்க்கா வர மாட்டாங்க.

இரவு நேரத்தில் உங்க டியூட்டி எப்படி இருக்கும் சொல்லுங்க.

இரவு பன்னிரண்டு மணியிலிருந்து காலை நாலு மணி வரை எங்க டியூட்டி நேரம். என்னோட ஏரியா முழுக்க மூணு தடவை சுத்தி வருவேன். ஒரு தடவை முழுக்க நடக்க ஒரு மணி நேரம் ஆகும். ஒரு மணி, ரெண்டு மணி, மூணு மணி இப்படி மூணு ரவுண்டு நான் தினம் சுத்தி வருவேன்.

எப்போ தூங்குவீங்க?

காலை நாலு அல்லது அஞ்சு மணிக்கு தான் என் வீட்டுக்கு போவேன் . ரெண்டு மணி நேரம் தூங்கிட்டு அப்புறம் கலக்ஷனுக்கு போயிடுவேன். மதியம் சாப்பிட்டுட்டு பன்னிரண்டு மணிக்கு படுத்தா அஞ்சு மணி வரை தூங்குவேன்.

தினம் கலக்ஷன் போகணுமா என்ன ? மாச ஆரம்பத்தில் போனா போதாதா ?
ஒவ்வொருத்தர் "நாளைக்கு வா நாளைக்கு வா"ன்னு சொல்லுவாங்க. ( இதனை மிக வெறுப்புடன் சொன்னார். அந்த மனிதருக்கு பிடிக்காத வார்த்தை "நாளைக்கு வா" என்பது தான் என அவர் பேசும் விதத்திலேயே தெரிந்தது) தினம் போய் கேட்டா தான் மாசம் மூவாயிரம் ரூபாயாவது கிடைக்கும். தினம் போகாட்டி மாசம் ரெண்டாயிரம் கிடைப்பதே கஷ்டம் தான்"

" ஒவ்வொரு வீட்டில் எவ்வளவு வாங்குவீங்க?"

"இவ்வளவு என நான் கேட்பது இல்லை. அவங்களாக தருவது தான். சில பேர் பத்து ரூபாய் தருவாங்க. சில பேர் இருபது ரூபாய். ஐந்து ரூபாய் தரும் ஆளுங்க கூட இருக்காங்க"

" மூவாயிரம் ரூபாயில் எப்படி குடும்பம் நடத்த முடியும்? உங்கள் மனைவி ஊரில் இருக்காரா?"

" என் கூட தான் இருக்கார். ஒரே ரூம் தான் எங்க வீடு. ஆயிரம் ரூபாய் வாடகை. மீதம் பணத்தில் தான் சாப்பாடு, மத்த செலவு எல்லாம். எங்களுக்கு வர்ற ஒரே வருமானம் ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்கும் பணம் தான். அதை தவிர வேறு வருமானம் கிடையாது. "

"உங்கள் கல்யாணத்தில் வரதட்சணை எல்லாம் உண்டா?"

" அதெல்லாம் இல்லீங்க. அவங்கவங்களுக்கு முடிஞ்சதை போடுவாங்க. அதுக்கு மேலே வறுபுறுத்த முடியாது. சாப்பாடுக்கே கஷ்டப்புடுற ஆட்கள் நாங்க. நகை, பணத்துக்கு எங்கே போறது?"

" நேபாளில் எவ்ளோ பேர் கூர்க்கா வேலை பாப்பாங்க?"

" சரியா படிக்காதவங்க தான் இந்த வேலை பாக்குறாங்க. நல்லா படிச்சவங்க அங்கேயே கூட வேற தொழில் செய்றாங்க "

"திருடங்களை எப்பவாவது நேரில் பாத்துருக்கீங்களா ? திருடனை பிடிச்சிருக்கீன்களா?"
" நாங்க விசில் ஊதிக்கிட்டு கம்பை தட்டி சத்தம் எழுப்பி வந்தாலே திருடங்க ஒளிஞ்சுப்பாங்க. அதனால இதுவரை திருடனை பார்த்ததோ பிடிச்சு கொடுத்ததோ இல்லை"

" ஒரு தடவை கூட திருடனை பார்த்தது இல்லையா?"

சிரிக்கிறார் " எங்க விசில் சத்தம் கேட்டா அவன் எப்படி வெளியே வருவான்? பார்த்ததே இல்லை"

"உங்க ஏரியாவில் திருட்டு போயிட்டா போலிஸ் உங்களை விசாரிப்பாங்களா ?"

" ஆமாம். விசாரிப்பாங்க. நான் வேற பக்கம் போனவுடனே இந்த பக்கம் திருடுனா நான் என்ன செய்ய முடியும்? நான் பாக்கலைன்னு சொல்லுவேன். எனக்கு தகவல் தெரிஞ்சா சொல்லலாம். அவ்ளோ தான்”

அவருடன் இன்னும் பேசணும் என்று நினைத்தாலும் அவர் கலக்ஷன் போகணும் என துடிக்க ஆரம்பித்தார். ஞாயிறு அன்று தான் வேலைக்கு செல்வோரை வீட்டில் வைத்து பார்க்க முடியும். " சாப் . அடுத்த தடவை உங்க வீட்டுக்கு வருவேன் இல்ல. அப்போ பேசுவோம்" என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார் கூர்க்கா.

மொழிபெயர்த்து உதவிய கடைக்காரருக்கு நன்றியும் அவர் குடும்பத்தார்க்கு வணக்கமும் சொல்லி விட்டு கிளம்பும் போது " அடகு கடைக்காரரிடம் வச்சுக்கலாமா.. அடுத்த பேட்டியை" என யோசிக்க ஆரம்பித்திருந்தது நம்மோட நிருபர் மனது !
##########

அதீதம் செப்டம்பர் 1 இதழில் வெளியானது 

43 comments:

 1. உண்மையிலேயே கூர்க்கரின் வாழ்க்கை முறை பரிதபிக்கக கூடியதுதான்

  ReplyDelete
 2. உண்மையில் அவர்களின் வாழ்க்கை பரிதாபமானதுதான்.நல சங்கங்கள் அவர்களை சரியான முறையில் பயன் படுத்தி மாத சம்பளம் தரலாம்.

  ReplyDelete
 3. அறியாத தகவல்கள். தொடருங்கள்.

  ReplyDelete
 4. அடித்தட்டு மக்களையும் அடிக்கடி பேட்டி கண்டு வெளியிடும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. கூர்க்காவின் பேட்டி அவர்களின் மேல் ஒருவித பச்சாதாபத்தை வரவழைத்துவிட்டது .

  ரேகா ராகவன்.

  ReplyDelete
 5. கூர்காக்களைப்பற்றி முழுமையாக
  தங்கள் பதிவின்முலம் தான் அறிந்து கொள்ளமுடிந்தது
  எனக்குத் தெரிந்தும் எந்த கூர்க்காவும் திருடனைப்பிடித்ததாகக்
  கேள்விப்பட்டதே இல்லை
  வழக்கம்போல் சுவாரஸ்யமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. பேட்டி சிறப்பாக அமைந்திருக்கிறது! மேலும் தொடருங்கள்!

  வெளி நாட்டுப்பிரயாணத்திலிருந்தபோது உங்கள் வலைப்பூவை ஓப்பன் செய்த போது அன்றைக்கு உங்களுக்கு திருமண நாள் என்று படித்தேன். வாழ்த்து எழுதி பேஸ்ட் செய்ய முயன்றபோது அந்த நாட்டு கணினி தகராறு செய்ததால் முடியவில்லை. திரும்ப இங்கு வந்த‌‌ பின் ம‌றுப‌டியும் எழுதுகிறேன்.

  தாம‌த‌மாக‌ என்றாலும் உங்க‌ளின் திரும‌ண‌ நாளிற்கு உங்க‌ளுக்கும் உங்க‌ளின் இல்ல‌த்த‌ர‌சிக்கும் என் ம‌ன‌ங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 7. நிஜமாகவே அவர்கள் வாழ்க்கை கஷ்டமானது தான் மோகன்

  ReplyDelete
 8. நல்லதொரு பகிர்வு.

  ReplyDelete
 9. பரிதாபம் வரவழைத்த பேட்டி! 3000 ரூபாயில் சென்னையில் குடும்பம் நடத்துவது ஆச்சர்யம்தான்!

  இன்று என் தளத்தில்
  ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
  நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html


  ReplyDelete
 10. முக்கால்வாசிப்பேர் குடும்பத்தை ஊரில் விட்டு விட்டு இங்கு தனியாகவே வாழ்கிறார்கள்.ஊருக்குச் செல்லும் சில்ரிடம் குடுமப்த்துக்குப் பணம் அனுப்பி அதௌ போய்ச்சேராத பரிதாபக் கதை கூட உண்டு.
  அருமையான பகிர்வு மோகன் குமார்!

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. நல்ல பேட்டி சார்.. நீங்க கேட்ட கேள்விள் என்மனதில் இருந்தவை..ஆனால் கேட்க எனக்கு பயம்.. சரியாக பதில் கிடைக்குமா என்று!
  எங்கள் ஏரியா கூர்க்கா-விற்கு 20 ரூ குறைந்து கொடுக்க எனக்கு மனது வராது.. இருந்தால் இதவிட கூட அதிகமாக கொடுப்பேன்... இந்த காலத்தில் 3000ரூ வருமானத்தில் என்ன செய்ய முடியும்/... ஏழ்மை நிலையிலும் அவர் தன் பிள்ளைகளை நல்ல படி படிக்க வைத்து இருப்பது மிகவும் பாராட்டத்தக்கது ...எங்கள் பிளட்-இல் கூட பலர் இதுபோன்று நாளைக்கு வா டயலாக் மாற்றுவதே இல்லை...இவர்கள் திருந்தபோவது இல்லை...

  ReplyDelete
 13. நான் அவர்களிடம் பலமுறை இன்று போய் நாளை வா எனச் சொல்லிஇருக்கிறேன்.இனிமேல் சொல்ல மாட்டேன்.
  ஆனால் ஏன் எத்தனை வருடம் தமிழ்நாட்டில் இருந்தாலும் கொஞ்சம் கூட தமிழ் கற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.தங்களது் பேட்டியில் கூட அவர் கடந்த நாற்பது வருடமாக தமழகத்தில் இருப்பதாகச் சொல்கிறாரே?
  நன்றி.வாழ்க வளமுடன்.
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 14. குறைவான சம்பளமென்றாலும் வேலைபார்த்து கிடைக்கும் பணத்தில் வாழும் கூர்க்காக்கள் வாழ்த்துக்குரியவர்களே!இதைப்படித்துவிட்டு ஒரு 10 பேராவது நாளைவா என சொல்லாமல் கூர்க்காக்களுக்கு பணத்தை கொடுத்தனுப்பினால் அதுவே உங்கள் பதிவுக்கு கிடைத்த பெரிய வெற்றி!

  ReplyDelete
 15. அவர்களது வாழ்க்கை மிக பரிதாபமானது. சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புக்களில் இருக்கும் கூர்க்கள் இவர்களை விட சற்று மேல். இவர்களிடமும் கொள்ளையடிக்கும் அப்பார்ட்மெண்ட் செகரட்ரிக்கள் உண்டு. ஆனாலும் வேறு வேறு வீடுகளில் இரண்டு ஷிப்ட் வேலை பார்த்து, கார்,பைக்குகள் கழுவி அதில் வரும் பணத்தை மிச்சம் பிடித்து ஊருக்கு அனுப்பும் கூர்க்ககளும் உண்டு.

  ReplyDelete
 16. நல்ல பகிர்வு. பெரும்பாலும் தமிழகம் வரும்போது இவர்களிடம் ஹிந்தியில் பேசுவதுண்டு. அவர்களுக்கும் மகிழ்ச்சி - தன்னுடைய சொந்த சோகங்களைப் பகிர்ந்து கொள்வதில்....

  கடைசி லைன் - :))) எங்கெங்கு காணினும் - பதிவு மேட்டர்! :))) அடகுக் கடைக்காரரிடம் இண்டர்வியூ - எதிர்பார்ப்புடன்...

  ReplyDelete
 17. அருமையான பேட்டி! கூர்க்கா என்றாலே என் ஞாபகத்திற்கு வரும் நபர் சத்தியராஜ்! மறக்க நினைக்கும் நபர் பரத்! :)

  //அடகு கடைக்காரரிடம் வச்சுக்கலாமா.. அடுத்த பேட்டியை//
  உண்மையில் இதை படிக்கத் தொடங்கிய போதே என் மனதில் ஓடிய எண்ணம் இதுதான்! :D அடுத்த பேட்டி இவருடையதாய்த்தான் இருக்கும் என்று! குறைந்த பட்சம் அவர் போட்டோ போட்டிருக்கலாம்! ;)

  ReplyDelete
 18. பதிவை படித்ததும் "அண்ணாநகர் முதல் தெரு" படத்தில் கூர்க்கா வேடம் போட்டு சத்யராஜ்,ஜனகராஜ் செய்யும் காமெடிதான் நினைவிற்கு வந்தது.

  ReplyDelete
 19. ஒரே நேரத்தில் இருவருக்கு தோன்றிய ஒருமித்த கருத்துக்கள்! :) ஆச்சரியங்கள்! :D
  Karthik Somalinga said... @ 9:09:00 AM
  துபாய் ராஜா said... @ 9:09:00 AM

  ReplyDelete
 20. ஆம் தமிழ் செல்வி உண்மை தான்

  ReplyDelete
 21. TN. முரளி : ஆம் பிளாட்டில் உள்ள சங்கங்கள் அப்படி தரலாம். ஆனால் நம்ம பக்கம் பிளாட்கள் ( Flats) குறைவு. இந்த ஏரியாவில் மட்டுமே அவர் சுற்றி வருகிறார்

  ReplyDelete
 22. ராமலட்சுமி மேடம்: அதீதம் தான் இத்தகைய வாய்ப்புகளை வழங்கியது நன்றி

  ReplyDelete
 23. ரமணி சார்: நன்றி நலமாய் உள்ளீர்களா?

  ReplyDelete

 24. ரேகா ராகவன் சார்: உங்கள் மனம் திறந்த பாராட்டு மகிழ்ச்சி தருகிறது நன்றி

  ReplyDelete
 25. மனோ மேடம்: கல்யாண நாள் அன்று நீங்கள் மனதில் வாழ்த்தியதே பெரிய விஷயம் மிக நன்றி

  ReplyDelete

 26. சரவணன்: நன்றி

  ReplyDelete
 27. சுரேஷ்: நன்றி

  ReplyDelete
 28. குட்டன்: நீங்கள் சொல்வது உண்மைய நன்றி

  ReplyDelete
 29. சமீரா: உங்கள் உணர்வுகள் பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 30. தேவதாஸ் சார்: நானும் கூர்க்காவிர்க்கு பணம் தர யோசித்த ஆள் தான். அவரிடம் பேசியபிறகு நிச்சயம் என் மனதிலும் சின்ன மாற்றம் வந்துள்ளது. அந்த எண்ணம் இன்னும் சில பேருக்கு வர வைத்தால் இந்த பதிவு அதன் வேலையை செய்து விடும் மிக நன்றி உங்கள் கருத்துகளுக்கு

  ReplyDelete

 31. உமா மேடம்: சரியாய் சொன்னீர்கள் நான் மேலே தேவதாஸ் சாருக்கு சொன்னதும் நீங்கள் சொன்னதும் ஒன்றே

  ReplyDelete
 32. முத்து குமரன்: இவர்கள் பற்றி இன்னும் சில தகவல் சொன்னமைக்கு நன்றி

  ReplyDelete

 33. நம்பள்கி: ஒரு வரி சொல்லிருக்கலாம் ! :)

  ReplyDelete
 34. வெங்கட்: சும்மா ஜாலிக்கு தான் அப்படி முடித்தேன். அவரிடம் பேட்டி எடுக்கும் எண்ணம் அநேகமாய் இல்லை. பேசுவாரா என தெரியாது

  ReplyDelete
 35. கார்த்திக்: அடகுக் கடைக்காரரிடம் போட்டோ எடுக்கிறேன் என்றால் டென்ஷன் ஆனால் என்ன செய்வது? உதவி செய்பவரை போய்? கூடவே அவரின் அழகான மனைவி வேறு. கேட்க embarassing ஆக இருந்தது

  ஒரே நிமிஷத்தில் இருவர் சத்யராஜ் பற்றி எழுதியது ஆச்சரியம் தான்

  ReplyDelete

 36. துபாய் ராஜா: நாமெல்லாம் சினிமாவால் வளர்க்க பட்டுள்ளோம் :)

  ReplyDelete
 37. அறியாத தகவல்கள்.
  நம் ஊர்களில் கூர்க்கா முறைகள் இல்லை.

  ReplyDelete
 38. //Karthik Somalinga said...
  ஒரே நேரத்தில் இருவருக்கு தோன்றிய ஒருமித்த கருத்துக்கள்! :) ஆச்சரியங்கள்! :D
  Karthik Somalinga said... @ 9:09:00 AM
  துபாய் ராஜா said... @ 9:09:00 AM //


  கார்த்திக் & மோகன்,அதிசயங்களும், ஆச்சரியங்களும்தானே வாழ்க்கையை வழிநடத்தி செல்கின்றன.

  ReplyDelete
 39. சிறப்பான பேட்டி. பரிதாபம் அவர்களுடைய வாழ்க்கை....

  ReplyDelete
 40. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 41. கூர்க்கா வாழ்க்கை அறியாத தகவல்கள்: பேட்டி

  வீடு திரும்பல் - திரு மோகன் குமார் அவர்களின் அருமையான நேர்காணல். திரு நாஞ்சில் நாடன் அவர்கள் கூர்க்கா வாழ்க்கை பற்றி எழுதியிருக்கிறார்.
  திரு மோகன் குமார் அவர்களின் பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு மோகன் குமார்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...