Sunday, July 31, 2016

வானவில்: முத்தின கத்திரிக்காய்- மெட்ரோ - ஏ.. சண்டக்காரா

பார்த்த படம்: முத்தின கத்திரிக்காய்

சுந்தர் சி. நடித்த படம் - நிச்சயம் கொஞ்சம் காமெடியாய் இருக்கும்; ஒரு சனிக்கிழமை மாலை நல்ல விதமாய் போகும் என நினைத்து பார்த்தோம்; பெண் 7 மணிக்கே தூங்கி விட்டாள் ! ஹவுஸ் பாஸ் வேறு வேலை பார்க்க போய் விட்டார். இதிலேயே படம் எப்படி என புரிந்திருக்கும் !

ஜனரஞ்சக மனிதரான சுந்தர் சி எப்படி தவறான படத்தை ரீ மேக் செய்ய திட்டமிட்டோரோ !!

ஒரு காலத்தில் அம்மாவை லவ் பண்றார்.. 20 வருஷம் கழிச்சு அவரின் பெண்ணை மணக்கிறார் ஹீரோ..இதில் பழைய அம்மணி (இப்போ மாமியார்) வேற லவ் பார்வை பாத்து கிட்டே  இருக்கார்  கொடுமைடா சாமி.. !

படத்தின் இறுதியில் வரும் டுவிஸ்ட் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் சுவாரஸ்யம்.. அதற்காக உங்களின் ரெண்டரை மணி நேரத்தை வீணாக்க வேண்டாம் !

அழகு கார்னர் 




ஹெல்த் கார்னர்

வாக்கிங் செல்லும் போது பின் பற்ற கூடிய முக்கியமான விஷயம் ஒன்று: சாலைகளின் வலது பக்கம் நடக்கவும் !

வாகன ஓட்டிகள் இடது பக்கம் வருவார்கள்.. நாம் நமது வலப்பக்கம் நடப்பது நல்லது.. இப்படி நடக்கும் போது வாகனங்கள் நமக்கு முன்னர் வரும்.. எனவே உரசி வந்தால் கூட தள்ளி போய் விடுவது எளிது.. வாகனங்களும் சேர்ந்து நாமும் இடப்பக்கம் நடந்தால் பின்னாலிருந்து ஒரு கார் வந்து முட்டினால் கூட நமக்கு தெரியாது.. அரிதாக வாக்கிங் செல்லும் போது நடக்கும் விபத்துகள் இப்படி நடக்கவும் வாய்ப்புண்டு..

இது எனது சொந்த கருத்தல்ல; உடல்பயிற்சி குறித்த பல்வேறு புத்தகங்களில்  சொல்லப்பட்ட ஒரு கருத்து.. முடிந்தவரை நான் பின்பற்றுகிறேன் !

பார்த்த படம் 2: மெட்ரோ 

நிச்சயம் ஒரு வித்தியாச கதைக்களன். செயின் பறிப்பு என்கிற பின்னணி ... ஒரு குடும்பம் ... செயின் பறிக்கும் இளைஞர் கும்பல் மறுபுறம்.. விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள். அனாவசிய பாடல், சண்டைகள் இன்றி எடுத்த விஷயத்துக்கு நியாயம் செய்திருக்கிகின்றனர்.

இருப்பினும் வன்முறை அதிமாகியதால் படத்துக்கு A Cerficate கிடைத்தது. இந்த படத்தை அவசியம் காண வேண்டிய பெண்களை இது வராமல் செய்து விட்டது.. படம் பரவலாக பாராட்ட பட்டாலும் தோல்வி படமாகி விட்டது

நல்ல படம் விரும்புவோர் ஒரு முறை நிச்சயம் காணலாம் இந்த மெட்ரோவை !

என்னா பாட்டுடே  - ஏ.. சண்டக்காரா 

இறுதி சுற்று படமே - மிக ரசித்து பார்த்த ஒன்று; படம் எப்படி என்பதற்கு ஒரு சாம்பிள் இந்த பாடல்.

மெலடியில் ஒரு வித்யாசமான முயற்சி.. சந்தோஷ் நாராயண் திறமை அட்டகாசமாக வெளிப்படும் பாட்டு,

எல்லாவற்றுக்கும் மேல் பாடலை பார்க்கும் போது ரசிப்பது ஒன்று மட்டுமே; ரித்திகாவின் நடிப்பு; முகபாவம் மற்றும் புன்னகை.. சான்ஸே இல்லை ! முதல் படம் போலவே இல்லை அவர் நடிப்பு.. ஒரு பாக்ஸர் ஆன அவர் சண்டை காட்சிகளில் நன்கு நடித்ததில் ஆச்சரியம் இல்லை; இப்பாடல் உள்ளிட்ட பிற காட்சிகளில் அவர் நடிப்பு மிக இயல்பாகவும் ரசிக்கும் படியும் இருந்தது தான் ஹை லைட்



தத்துவம் (நானே ஜிந்திச்சேன்!)

ஒவ்வொரு மனிதருக்கும் எப்போதும் - எதோ ஒரு விஷயம் அல்லது கவலை மனதை அழுத்தி கொண்டே தான் இருக்கும். தினசரி வேலைகள் எல்லாமே நன்கு செய்து கொண்டிருந்தாலும் மனதின் மூலையில் அந்த கவலை இருந்து கொண்டிருக்கும். மாணவர் எனில் - தேர்வில் என்ன மார்க் வாங்குவேன்.. பெரியவர்கள் எனில் - நம் பிள்ளைக்கு நல்ல வேலை/ திருமணம் நடக்குமா - இப்படி ஏதேனும் ஒன்று ...

இத்தகைய கவலைகள் இல்லாத நபர்களே இல்லை.. மனதில் சின்ன அளவில் இருக்கும்வரை இதில் பிரச்சனை இல்லை. சிலர் இதனையே திரும்ப திரும்ப யோசித்து Depression என்கிற நிலைக்கு சென்று விடுகிறார்கள்..

நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான  விஷயம்: எதற்கும் பெரிதாக கவலை கொள்ளாமல் இருப்பது தான்..

ஒரு வருடம் முன்பு எதோ ஒன்றுக்கு கவலை கொண்டோம்.. இன்று அதே கவலையா இருக்கிறது? வேறு ஒன்று இல்லை.. ?? அப்படி.. எல்லா பிரச்சனைகளும் சரியாகி விடும்..

காலத்தை விட அற்புத மருந்து எதுவுமே இல்லை !

தொலைக்காட்சி கார்னர் 

* விஜய் டிவி இரவு 9.30 -டன்  சீரியல்களை முடித்து விட்டு 45 நிமிட ப்ரோக்ராம்கள் இரண்டு ஒளிபரப்புகிறது; 9.30 முதல் 10.15 வரை கலக்க போவது யாரு நிகழ்வின் சிறந்த பகுதிகளை காண்பிப்பதால்- தூங்கும் முன் சற்று நேரம் மனம் விட்டு சிரித்து விட்டு உறங்கி செல்ல முடிகிறது !

* சென்ற வார நீயா நானாவில் - ஆண்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா என இரண்டு பக்கமும் பெண்கள் (மட்டும் ) பேசினர் .. அது என்ன சார் நியாயம்.. ஆண்கள் மகிழ்ச்சியா இருக்காங்களா என சொல்ல கொஞ்சம் ஆண்களாவது வேணாமா? நிகழ்ச்சி கொஞ்சம் செக்ஸ் சார்ந்தும் சென்றது... பெண்கள் ரொம்ப பூடகமாய்,  அதே நேரம் இந்த விஷயத்தை அழகாக பேசினார்கள்..

1 comment:

  1. கபாலி என்ற குப்பையை பற்றி ஏதாவது சொல்லுங்க சகோ!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...