Friday, July 22, 2016

உடல் எடை குறைக்க செய்யும் ஹெர்பாலைப் - ஒரு நேரடி அனுபவம்

மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள்..

அடையார் ஆனந்தபவனில் சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது சில பேர் நின்று கொண்டு உங்க உயரம்/ எடை செக் பண்றோம்; இலவச ஆலோசனை என்றார்கள். சரி.. சும்மாதானே என செக் செய்ததும் உங்க வெயிட் ரொம்ப அதிகம் - இதை எப்படி குறைப்பது, கொழுப்பு எப்படி குறையும் - இலவச ஆலோசனை - இந்த இடத்தில் நடக்குது; முடிஞ்சா நாளைக்கு வாங்க என்றனர்..

மறுநாள் தெரியாமல் அவர்கள் சொன்ன இல்லத்துக்கு சென்று விட் டேன்.

ஒரு நபர் ஹெர்பாலைப் மூலம் -  எப்படி இளைத்தேன் - அதனால் என்ன பலன் வந்தது; அப்புறம் இதனை ஒரு தொழிலாக செய்து மாதம் லட்ச கணக்கில் எப்படி சம்பாதித்தேன் என்ற விஷயம் பேசினார். பின் ஒரு சில நாட்கள் இந்த உணவு இலவசமாக தருகிறோம்; பிடித்தால் தொடருங்கள் என்றனர்.



சரி முயன்று தான் பார்ப்போமே என்று தொடங்கினேன்

க்ரீன் டீ போல ஒரு பானம்.. அப்புறம் மில்க் க்ஷேக் போன்ற ஒரு  பானம்.. இது தான் உணவு.

காலை மற்றும் இரவில் இந்த உணவை சாப்பிடுங்கள்; மதியம் வழக்கமான உணவை சாப்பிடுங்கள் என்கிறார்கள்; இது தொடக்கத்தில்; பின் 3 வேலையும் இது மட்டுமே உணவு.

எனக்கு காலை இந்த உணவு சாப்பிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை; மதியம் வழக்கமான உணவு சாப்பிட்டு விடுகிறோம்; இரவில் தான் பிரச்சனை; அந்த மில்க் க்ஷேக் சாப்பிட்டு சில மணி நேரங்களில் பசி வந்து விட - வேறு என்ன சாப்பிட இருக்கு என தேடி சாப்பிட்டு விடுவேன் (இவை நிச்சயம் சாப்பிட கூடாது !!அப்போது தான் பலன் கிடைக்கும் )

நான் துவங்கும் போது அவர்களிடம் தெளிவாக ஒன்று சொல்லி விட்டேன்; நான் மட்டும் தான் முயலுவேன்; வேறு யாரையும் இந்த டீலர்ஷிப்பில் சேர்க்கும் வேலை செய்ய மட்டேன் என..

முதல் சில நாட்கள் இலவசத்துக்கு பின் காசு கொடுத்து வாங்க வேண்டும். வாங்கினேன். அந்த பவுடர் சற்று விலை அதிகம்... மாதம் சில ஆயிரங்கள் வந்து விடும்..

சரியாக ஒன்னரை மாதம் சாப்பிட்ட நினைவு.. ஓரிரு கிலோ எடை குறைந்தது..

பின் வெவ்வேறு காரணங்கள் .. தொடராமல் விட்டு விட்டேன்..

இந்த ஹெர்பாலைப் குறித்து குமுதம் ஹெல்த் இதழில் வந்த கட்டுரையின் ஒரு பகுதி மட்டும் இங்கு தருகிறேன் 

உடலை இளைக்க செய்கிற சத்து பானங்கள் எவ்வளவு ஆபத்தானவை? உண்மையில் அவை என்ன செய்கின்றன? இது பற்றி மருத்துவர்களின் கருத்து என்ன? 

அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை மட்டும் தான் மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியும். அத்தகைய மருந்துகளில் இந்திய அரசின் மருத்துவ குறீயிடு சான்றிதழ் இருக்கும். மருந்துகள் 14 வகையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின் தான் இந்த அங்கீகாரம் கிடைக்கும். உடலை குறைக்கும் பவுடர்கள் இந்த வகையை சேர்ந்தவை இல்லை என்று கூறும் மருத்துவர்கள் இவற்றை தொடர்ந்து எடுத்து கொள்வோர் குடலும் ரத்த குழாய்களும் நைந்து போகும் என்கின்றனர். மேலும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மூளை மற்றும் நரம்பு மண்டலமும் கூட பாதிக்கப்படுமாம் !

பொதுவாக சிறுகுடலுக்குள் குறைந்த பட்சம் மூணு லிட்டர் தண்ணீர் இருக்க வேண்டுமாம், பருமனை குறைக்கும் பவுடர்கள் எடுத்துகொல்லும்போது அது உள்ளே போய் ஒரு ஸ்பான்ஜ் மாதிரி அத்தனை தண்ணீரையும் உறிஞ்சி விடுகிறதாம். இதன் காரணமாக கிட்னிக்கு செல்ல வேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டு கழிவுகள் வெளியேறாமல் கிட்னிகள் பாதிக்கப்படுகிறது. 
*********
மீண்டும் எனது அனுபவத்துக்கு வருவோம் 

வெறும் மில்க் க்ஷேக் வகை உணவு 3 வேளை சாப்பிட்டால் நிச்சயம் எடை குறையவே செய்யும். ஆனால் வாழ்நாள் முழுதும் இதனை தொடர்வது மிக கடினம்.. செலவும் மிக அதிகம். நிச்சயம் சற்று வசதியானவர்கள் மட்டுமே வாங்க முடியும் 

அடுத்து அவர்கள் இதனை ஒரு மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் ஆக அடுத்த ஆளை சேர்ப்பதில் மிக குறியாக இருக்கிறார்கள். இது பெரிதும் எரிச்சலை தரும் ஒரு விஷயம். எப்படி ஆம்வே என்றாலே காத தூரம் ஓடுகிறோமோ அவர்களை போன்ற இன்னொரு கூட்டம் தான் இந்த ஹெர்பா லைப் ...

இதனை வியாபாரமாக தான் அணுகுகிறார்கள். உடல் எடை குறைப்பு என்பது பலரும் விரும்புவதால் அதனை வைத்து மற்ற பொருட்கள் விற்பனையில் இறங்குகிறார்கள் 

உடல் எடை குறைய சரியான டயட்.. வாக்கிங்; ஜாகிங், ஜிம் சென்று ட்ரையினர் மூலம் நிதானமாக குறைப்பது இதுவே நன்று.. 

இப்போதும் சில ஹோட்டல்களில் சாப்பிட்டு விட்டு வரும்போது இந்த ஏமாற்று கும்பல் வந்து நம்மிடம் பேசுவதை காண்கிறேன்.. "வேண்டாம் சார் " என்று சிரிப்போடு மறுத்து விட்டு நகர்ந்து விடுகிறேன் 

அண்மை பதிவு 

கபாலி சினிமா விமர்சனம்

3 comments:

  1. சார்,

    அருமை. இப்ப கூட ஹெர்பா லைப்க்கு ஏகப்பட்ட பைன் விழுந்ததா கேள்வி. இது மாதிரியும் நீங்க எழுதுங்க சார். படிக்கிற சில பேருக்காவது விழிப்புணர்ச்சி கிடைக்கும்.

    ---தஞ்சை ரமணி

    ReplyDelete
  2. காதில நல்லாவே பூ சுத்தறாங்க போல இருக்குது.

    ReplyDelete
  3. இதுவும் ஒரு பிசினஸ்..... இங்கேயும் உண்டு!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...