Thursday, July 21, 2016

வானவில்: கபாலி ஜுரம் : அப்பா; ஆக்ஷன் ஹீரோ பிஜு விமர்சனம்

பார்த்த படம்: அப்பா 

இயக்குனர் சமுத்ரகனிக்கு கருத்து சொல்வதென்றால் ரொம்ப ஆசை போலும்; நாடோடிகள் துவங்கி அவர் இயக்கும் எல்லா படங்களிலும் கருத்து சொல்லி  விடுவார்; இம்முறை கொஞ்சம் ஓவர் டோஸ்...

மகனை அவன் போக்கில் வளர்க்கும் அப்பா சமுத்திரக்கனி. படிப்பை மட்டுமே கருத்தில் கொள்ளும் இன்னொரு அப்பா; இருக்கிற இடமே தெரிய கூடாது என சொல்லி வளர்க்கும் மற்றொரு அப்பா - இப்படி மூவரின் கதை எனும் அவுட்லைன் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் Execution என்று வரும்போது - பள்ளி கூடங்களின் பணம் பறிக்கும் (கொலை கார???) கும்பல், இள வயது காதல் என பல்வேறு பக்கம் ஊசலாடி இறுதியில் தேவையான தாக்கத்தை தராமல் போகிறது..

சாட்டை படமும் பள்ளி மாணவர்கள் குறித்தானது தான்.. அது மிகச் சரியே எந்த விஷயத்தை பேசுகிறதோ அதனை சுற்றியே சூழன்றது.. வெற்றியும் கண்டது.. இங்கு இலக்கு எது என்ற தெளிவில்லை.. எனவே இறுதி அவுட்புட் சரியில்லாமல் போய் விட்டது..

அழகு கார்னர் ரசித்த எழுத்து 

கீழ்க்காணும் முடிவெட்டும் அனுபவம் வாசித்து பாருங்கள். எழுதியது யாராய் இருக்கும் என ஊகியுங்கள்; விடை.. இதே வானவில்லில் இருக்கிறது !!
************
மெரிக்காவில் முடிவெட்டிக் கொள்ள முதலில் சலூனுக்குப் போன் செய்து 'அப்பாயிண்ட்மென்ட்' வாங்கிக் கொள்ள வேண்டும். (இங்கே இறந்து போவதற்குக் கூட 'அப்பாயிண்ட்மென்ட்' இல்லையெனில் கஷ்டம் தான்.) முடிவெட்டகம் உள்ளே போனால் சுத்தமாக வெளிச்சமாக இருக்கிறது. 'ஸ்க்ரீன்' தந்தி பேப்பர்கள் எல்லாம் கிடையாது. கல்லாவில் ஒருத்தனைத் தவிர மற்ற எல்லாரும் பெண்கள் தான். இளம் பெண்கள் !

முதலில் ஒருத்தி மல்லாக்க வைத்து பின்னாலிருந்து நெற்றி வரை வெந்நீர் கொட்டி, ஷாம்பூ போட்டு அலம்பி விடுகிறாள். அதன்பின், மார்புவரை பிளாஸ்டிக் போர்த்தி சொட்டச் சொட்ட மற்றொருத்தியிடம் அனுப்புகிறாள். அவள்தான் பிரதான முடிவெட்டி; நளினமான விரல்களையே சீப்பாக உபயோகப்படுத்தி பிரித்து பிரித்து உச்சியில் கத்திரி போடுகிறாள். ஈரத் தலையாதலால் மயிர் நாலா பக்கமும் பறப்பதில்லை. பேச்சு அதிகம் இல்லை.

அவ்வப்போது, ஒரு டயட் - கோக்கை சப்பிக் கொள்கிறாள். சில வேளைகளில் நிறுத்தி, எதிர்க் கண்ணாடி மூலம் "ஓகே?" என்று கேட்கிறாள். நானும் 'ஓகே' என்று தலையாட்ட தொடர்கிறாள். அதன் பின் வாசனாதி திரவியங்களை பிஸ்ஸ்ஸி ஏர்டிரையர் போட்டு உஷ்ணக் காற்றால் கூந்தலை உலர்த்தி 'பப்' என்று பண்ணி விடுகிறாள்.

இப்போது எலக்ட்ரிக் மிஷினால் அங்கங்கே கொரிக்கிறாள். கடைசியில் சிற்சில சிற்ப வேலைகள்; நம் ஊர் போலவே கழுத்தில் பவுடர் போட்டு போர்வையை உதறிவிட்டுப் பின்னாடி கண்ணாடி காட்டுகிறாள். "ஓகே?". நான் தலையை ஆட்ட, நாற்காலியை காலால் அழுத்தி விடுவிக்கிறாள். சார்ஜ் ? 20 டாலர் ! அவளுக்கு டிப் தனி !

- எழுதியவரை ஊகித்தீர்களா? வாத்தியார் சுஜாதா அன்றி வேறு யார் !

பார்த்த படம் 2: ஆக்ஷன் ஹீரோ பிஜு (மலையாளம்)

கதையே  இல்லாமல் ஒரு வெற்றிப்படம் எடுக்க முடியமா? முடியும் என நிரூபித்துள்ளது இந்த குழு.

முழுக்க முழுக்க சிறு சிறு சம்பவங்களால் மட்டுமே படம் நகர்கிறது.    கதை என்று எதுவும் இல்லை;

ஒரு போலிஸ் ஆபிசரின் டயரி குறிப்பே படம். அவர் சந்திக்கும் வழக்குகள் - அதை அவர் எப்படி டீல் செய்கிறார் என்பது தான் கதை- திரைக்கதை எல்லாமும்..

அலுவலகத்தில் சொல்வார்கள்.. ஒவ்வொரு ஊழியருக்கும் அவரது பாஸ் தான் முதல் HR மேனேஜர் என்று.. நிஜ HR அடுத்த கட்டம் தான். போலவே எந்த ஒரு கேசும் முதலில் வருவது போலீசிடம் தான் .. அவரால் தீர்க்க முடியாவிட்டால் தான் கோர்ட் என நம்புபவர் ஹீரோ நிவின் பாலி; இவர் தரும் தீர்ப்புகள் மற்றும் ட்ரீட் மென்ட்கள் வித்தியாசமானவை..

ஹீரோயின் என்று ஒருவர் எப்போதேனும் ஒரு முறை எட்டி பார்க்கிறார். மற்ற படி பெரிதாய் அவருக்கு ரோல் இல்லை.

நிச்சயம் ஒரு வித்தியாச முயற்சி.. ஒரு முறை காணலாம் !

 போஸ்டர் கார்னர் நம்முள் இருக்கும் குழந்தை தனத்தை தொலைக்காமல் இருப்பது பெரிய வரம்..  இல்லையா?

தமிழக மாணவரின் சாதனை 

மிக கடினமான CA தேர்வில் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்கிற மாணவர்  இந்தியாவில் முதல் இடம் பெற்றுள்ளார். 21 வயது மட்டுமே நிரம்பிய இந்த இளைஞர் இன்டெர்மீடியட் படிக்கும்போதும் ஏழாவது ரேங்க் வாங்கியவர்.


சேலத்தை சேர்ந்த இவர் சென்னையில் பயின்று வந்தார். CA, ACS போன்ற தேர்வுகளுக்கு தயார் செய்ய சென்னை ஒரு மிக சிறந்த  இடமாக திகழ்கிறது. சென்ற வருடமும் சென்னையை சேர்ந்த ஜான் பிரிட்டோ என்கிற மாணவர் தான் CA தேர்வில் இந்தியாவில் முதல் இடம் பெற்றார்..!!

கபாலி ஜுரம் 

தமிழகத்தை மட்டுமல்ல உலகின் பல இடங்களிலும் கபாலி ஜுரம் பரவிக்கொண்டிருக்கிறது. முதல் 3 நாட்களில் டிக்கெட் கிடைத்தால் பெரிய .விஷயம்.

இயக்குனர் பல்வேறு பேட்டிகளில் சொன்னதை வைத்து பார்க்கும் போது கதை இது தான்:

மலேஷியாவில் வாழும் தமிழர் கபாலி; அங்கு தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை வர பொங்கி எழுகிறார். மக்கள் தலைவர் ஆகிறார்..

இந்த கதையில் என்ன வித்யாசமாக இருக்கிறது என புரியவில்லை. திரைக்கதை நன்றாக இருந்தால் படம் சுவாரஸ்யமாக இருக்கும்..

எப்படி இருந்தாலும் குறைந்த பட்சம் 200 கோடி முதல் 3  நாளில் எடுத்து விடுவர்....

நாங்கள் இன்னும் டிக்கெட் எடுக்கவில்லை.. அநேகமாய் முதல் 4 நாள் கழித்தே பார்ப்போம் என ...நினைக்கிறேன்.

இணையத்தில் வெளியாகியிருக்கும் கபாலி பட விமர்சனம் இது .. உண்மையா..  கற்பனையா என்று தெரியவில்லை !

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...