Monday, September 19, 2016

வானவில் - Walk விமர்சனம்- ராம்குமார் மரணம்-பஸ்ஸில் ஒரு குடிகாரர்

பார்த்த படம்: வாக் (ஆங்கிலம்)

மிக உயரமான இரட்டை கோபுரங்கள் இடையே நடந்த நபரின் கதை ! அண்மையில் வெளியான சல்லி போல இதுவும் நியூ யார்க்கில் நடந்த ஒரு உண்மை சம்பவம்..
Image result for philippe petit lying down

ஒரு மனிதன் கனவு காணும் எதையும் அடைய முடியும் என்கிற விஷயமே படத்தின் அடிநாதம்.

துவக்க காட்சிகள் - பாதிவரை ஆங்காங்கு டல் அடித்தது; தூக்கம் எட்டி பார்த்தது. ஆனால் இறுதி பகுதி அருமை.

முக்கிய பாத்திரத்தில் நடித்தவரின் நடிப்பு, காமிரா , இயக்கம் என அனைத்தும் அசத்துகிறது.

1974-ல் நிஜமாய் கயிற்றின் மேல் நடந்தவர் படத்தில் நடித்தவருக்கு பயிற்சி தந்து பின் அவர் நடித்தாராம் !

Image result for philippe petit
1974 -ல் நிஜமாய் நடந்த பிலிப் !
சென்ற வருடம் வெளியாகி நல்லா வரவேற்பையும் பெரும் வெற்றியையும் பெற்ற இப்படத்தை நல்ல சினிமா விரும்புவோர் அவசியம் காணுங்கள் !

நானே சிந்திச்சேன் ...

இந்த மனசு இருக்கே.....வருத்தப்பட ஏதாவது ஒரு விஷயம் கிடைக்குமான்னு தேடி பார்த்துட்டு - அதையே  பெரிசு பண்ணி யோசிக்குது. உண்மையில் நாம் பயப்படுறதில் முக்கால் வாசி நடக்க போறதே கிடையாது.

நிஜமா நம்ம மனசு என்ன பண்ணனும் .. சந்தோஷ பட என்னென்ன விஷயம் இருக்கோ.. அதை இன்னும் பெரிதாக்கி பார்க்க வேணாமா? ஆனா அதை பண்ணாமல் - வருத்தப்பட இருக்கும் சின்ன விஷயத்தை பெரிசு பண்ணி யோசிக்கிறது சரியா???

இந்த விஷயம் புரிஞ்சாலே நம்ம செய்ற இந்த தப்பு ஓரளவு குறையலாம் இல்லையா ?

வித்யாச நிகழ்ச்சி : ஜெயா டிவியில் அன்கட் வெர்ஷன் 

சினிமாவில் இடம்பெறாத - நேரம் காரணமாக கட் செய்யப்பட காட்சிகளில் தேர்ந்தெடுத்து நல்ல சீன்களை ஒளி பரப்புகிறார்கள். பசங்க -2 படத்தில் இருந்து இடம் பெறாத சில காட்சிகள்.. அவற்றில் பல ரசிக்கும் படியே இருந்தது !

என்னா பாட்டுடே - பூக்களே சற்று ஓய்வெடுங்கள் 

டிபிக்கல் ரகுமான் பாட்டு ! சில பாடல்களை கேட்டாலே இது ராஜா பாட்டு என சொல்லி விடலாம்.. போலவே சில ரகுமான் பாடல்களும்..

இத்தனை மெலடியை தர நிறையவே தைரியம் வேண்டும் ! அருமையான மெட்டு, ஷங்கரின் படமாக்கம் என ரசிக்கும்படி பல விஷயங்கள் !


பஸ்ஸை விட்டு இறங்க மறுத்த குடிகாரர்

அண்மையில் அம்பத்தூருக்கு ஒரு திருமணத்திற்கு சென்று விட்டு பஸ்ஸில் வரும்போது நடந்த சம்பவம் இது. அம்பத்தூர் பஸ் டெர்மினஸில்  நடத்துனர் ஏறி டிக்கெட் போட ஆரம்பித்தார். ஒரு மனிதர் தூங்குற மாதிரி அமர்ந்திருந்தார். அவரிடம் " எங்கே போகணும் ?" என்பதை நடத்துனர் பல விதமாய் கேட்டு  பார்த்துட்டார்.ஒரு பதிலும் இல்லை; பின் சட்டையை பிடித்து உலுக்கி  கேட்டார்.ஊஹூம் ! மனுஷன் அசைந்து கொடுக்கலை.

அப்புறம் தான் அவர் "தண்ணி வண்டி " என கண்டக்டருக்கு புரிந்தது. பிடித்து இழுத்து வெளியே விட பார்த்தால் மனிதர் கம்பியை இறுக  பற்றி கொண்டு இழுக்க விட மாட்டேன் என்கிறார் !!

அதே ரூட்டில் செல்லும் அடுத்த பஸ் பின்னே நின்று கொண்டு கிளம்புங்க என ஹாரன் அடிக்கிறார் !

பின் 3 பேர் வலுக்கட்டாயமாய் இழுத்து கொண்டு சென்று கீழே தரையில் போட்டனர் ! அவரது செருப்புகள் சிதறி கிடக்க - அவற்றை தூக்கி எறிந்து விட்டு பஸ் விரைந்தது..

குடிக்க வேண்டியது தான் ... அதற்குன்னு இந்த அளவுக்கா !!

ராம்குமார் மரணம்

சுவாதி இறந்த  சில நாட்கள் மனம்  மிக  வருந்தியது; பெண்ணை பெற்ற ஒரு அப்பனின் கவலை  அது; ரயில் நிலையம் ஒன்றில் பட்டப்பகல் இவ்வளவு கொடூர கொலையா என மனம்  அரற்றியது.

நான் அடிக்கடி செல்லும் ரயில் நிலையம் அது. அடுத்த முறை செல்லும்போது மனது என்னவோ  செய்தது;மற்றவர்கள் எந்த சலனமும் இன்றி சென்று  கொண்டிருந்தனர்.

ராம்குமாரை கைது செய்த போது சற்றே நிம்மதி; ஆனால் இப்போது ராம்குமார் இறந்துள்ள விதம் மிக மிக சந்தேகிக்கும் வண்ணம் உள்ளது. இதற்கு முன் சிலர் ராம்குமார் சுவாதியை கொல்லவில்லை என  எழுதியபோது அதனை நான் சிறிதும் நம்ப தயாராய்  இல்லை;ஆனால் சிறையில் மின் கம்பியை கடித்து இறந்தார் என்பது தான் நம்ப சிரமமாக உள்ளது. யாரோ ஒருவர் செய்த கொலையை ராம்குமார் தலையில் சுமத்தி விட்டு,  இப்போது அவர் கதையை அவரசமாய் முடித்திருக்க கூடும் என்கிற ஊகம் நிச்சயம் எழுகிறது.

மின் கம்பியை தொட்டாலே இறந்து விடுவோமே ! அதெப்படி தொட்டு வாயில் வைக்க முடியும் ! அதனை தொடும் விதத்தில் ஏன் வைக்க வேண்டும்? சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரி உடன் சஸ்பெண்ட் செய்யப்பட்டாரா ?

இதற்கு முன் சிறையில் இந்த விதத்தில் யாரும் இறந்திருப்பார்களா தெரிய வில்லை .. மீடியா கள்ள மௌனம் சாதிக்கிறது ... இணைய நண்பர்கள் மட்டுமே இதனை எதிர்த்து குரல் கொடுத்து கொண்டுள்ளனர்..

ராம்குமார் தான் சுவாதியை கொன்றவர் எனில் அவர் தூக்கில் இடப்படவேண்டியவர்.. ஆனால் அது உறுதி செய்யப்படாத நிலையில் இப்படி நடந்துள்ளது பெரும் வருத்தம் தருகிறது.. சுவாதி கொலை போல இதுவும் ஒரு கொலை என்றே சந்தேகிக்க  வேண்டியுள்ளது. சுவாதியின் நடத்தை பற்றி எழுந்த கேள்விகளுக்கும் விடையே இன்றி போய் விட்டது

இந்த மரணத்துக்கு நீதி விசாரணை நிச்சயம் தேவை.

போஸ்டர் கார்னர்   

கீழே உள்ள போஸ்டர் சொல்லும் செய்தி எவ்வளவு கொடூரமானது !!




1 comment:

  1. போஸ்டர் கார்னர் நிஜம் சொல்கிறது!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...