Tuesday, May 16, 2017

மின்ட் ஸ்ட்ரீட்டில் ஒரு சுவாரஸ்யமான Food Walk...

Food Walk ...சென்னையின் சில இடங்களில் மிகப் பிரபலம் ! அதில் முக்கியமானது ... சென்னை பாரிஸ் கார்னர் அருகிலுள்ள மின்ட் ஸ்ட்ரீட் Food walk.

அண்மையில் நண்பர்கள் சிலர் மின்ட் ஸ்ட்ரீட்டில் Food Walk சென்றோம்..ஏற்கனவே சென்று அனுபவம் உள்ள திரு.  முரளி ரங்கராஜன் எங்களை முன்னின்று அழைத்து சென்றார்

மாலை 4 மணிக்கு எங்கள் பயணம் வேளச்சேரி ரயில் பயணத்தில் துவங்கியது. ரயிலை விட்டு இறங்கியதும் முதல் மற்றும் முக்கிய வேலையை பார்த்து விட்டு (வேறென்ன செலஃபீ தான் !) நடக்க துவங்கினோம்அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி வழியே பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் அருகே சென்று இடது புறம் திரும்பி சற்று தூரம் சென்றால் மின்ட் ஸ்ட்ரீட் வந்து விடுகிறது

மேத்தா பிரதர்ஸ் மித்தாய் வாலா

நாங்கள் முதலில் சென்ற கடை..இங்கு வடா பாவ் தான் பிரசித்தி பெற்றது. நாங்கள் சாப்பிட்டதும் அதுவே !

வடா பாவ்.........உருளை கிழங்கு நன்கு வேக வைக்கப்பட்டு ஒரு தவாவில் கடுகு, பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள் மற்றும் உப்பு  உள்ளிட்டவை சேர்க்கப்படுகிறது. சூடு குறைந்த பின் எலுமிச்சம் பழம் சைசில் உருண்டையாக உருட்டப்படுகிறது. இது பெங்கால் கிராம் மற்றும் கடலை மாவுடன் கலந்து  - உடன் சோடா மற்றும் உப்பு சேர்த்து  நன்கு வறுக்கப்படுகிறது. அற்புதமான போண்டா தயார். இதனுடன் சுவையான சட்னி (Green Chutney made of Coriander and garlic powder)  மற்றும் ஒரு Stuffed  Pav/ Bun சேர்த்து பரிமாறுகிறார்கள்.நண்பர்கள் பலரும் ரசித்து சாப்பிட்ட உணவுகளில் இதுவும் ஒன்று !

காக்கடா ராம்பிரசாத் 

நாங்கள் சென்ற கடைகளில் குளிரூட்டப்பட்ட வசதியுடன், அமர்ந்து சாப்பிடும் படி இருந்த ஒரே கடை இது தான். பாதி பேர் தான் உள்ளே சென்று அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.   பெரும்பாலான மக்கள்   வெளியில் வாங்கி அங்கேயே சாப்பிட்டு .விடுகிறார்கள்.


ஆலூ டிக்கா, பாதாம் பால்  மற்றும் ஜிலேபி ஆகியவை இங்கு சாப்பிட்டோம்.

ஆலூ டிக்கா - தவாவில் நெய் ஊற்றி மிக நன்றாக வறுக்கப்பட்டு (deep fry ) செய்யப்படும் ஒரு உணவு. டிக்காவை துண்டு துண்டாக்கி - கடைந்த தயிர் அதன் மேலே ஊற்றப்பட்டு - சாட் மசாலா, ஜீரக பவுடர், தனியா, இனிப்பு சட்னி உள்ளிட்டவை சேர்க்கப்படுகிறது. இதனுடன் ப்ரெஷ் பன்னீர்  மற்றும் சீஸும் சேர்ந்து தரும்போது.. சாப்பிட ஓஹோ என்று இருக்கும். வயிறும் சீக்கிரம் நிரம்பிவிடும்.பாதாம் பால் .. Simply Superb !

பாதாம் பால் பற்றி ஒரு நண்பர் சொன்னது "காலையில் ஓடும் முன் குடிக்க சிறந்த beverage இது !  பால் மற்றும் Almond இரண்டும் ஓடும் முன் குடிக்க மிகவும் உகந்தவை  !! "

(ரன்னிங் பிரியர்களாயிற்றே.. பல நேரம் .. ரன்னிங் பற்றி பேச்சு வராமல் இருக்காது !)

நிச்சயம் செல்ல வேண்டிய / தவற விடக்கூடாத கடைகளில் ஒன்று இது

லஸ்ஸி கடை

காக்கடா கடைக்கு அருகிலேயே உள்ளது ஏரியாவில் புகழ் பெற்ற லஸ்ஸி கடை.

காக்கடா கடைக்கு பக்கத்தில் ஒரு ஜைஜான்டிக் மனிதர் நின்று கொண்டிருக்கிறார். அவர் தான் லஸ்ஸி கடை ! அகில உலகிலும் இப்படி ஒரு லஸ்ஸி கடையை காண முடியாது ( கடை என ஒன்று இல்லாமல் தெருவில் நிற்கும் ஒரு மனிதரே கடை !)

அவரிடம் லஸ்ஸி வேண்டும் என்றதும், எத்தனை வேண்டும் என விசாரிக்கிறார். நாங்கள் காக்கடாவில் ஏற்கனவே ரவுண்ட் கட்டியதை பார்த்ததாலோ என்னவோ, உங்களால் முழு டம்பளர் லஸ்ஸி குடிக்க முடியாது; பாதி டம்பளர் எல்லாருக்கும் தருகிறேன் என்றார்.

பாதி டம்பளர் லஸ்ஸி 70 ரூபாய். முழு லஸ்ஸி  140 ரூபாய்.

அருகில்.. எதோ ஒரு சிறு இடத்தில் லஸ்ஸி தயாராகிறது; மொபைல் மூலம் ஆர்டர் தர அதிக காத்திருப்பின்றி,  சில நிமிடத்தில் லஸ்ஸி வந்து விட்டது.

எவ்ளோ பெரிய டம்பளர் !!!!!

கெட்டியான தயிர், சர்க்கரை, saffron இவை சரியான விகிதத்தில் சேர்க்கப்பட்டு - பெரிய சைஸ் கிளாசில் தரப்படுகிறது.

பாதி டம்பளர் லஸ்ஸி குடிக்க குறைந்தது 5 நிமிடம் எடுத்து கொண்டேன். லஸ்ஸியை சிறிது சிறிதாக முழுக்க என்ஜாய் செய்து ரசித்து ருசித்து குடிக்க வேண்டும்..நாக்கில் சென்று ஒட்டி கொள்கிறது லஸ்ஸி.. முடியும் போது ஒரு பிளசண்ட் ஷாக். அடியில் அட்டகாசமான பால்கோவா.. வாவ் !

தஞ்சை அன்பு லஸ்ஸியை பீட் செய்ய உலகில் இன்னொரு லஸ்ஸி இருக்குமா என நினைத்து கொண்டிருந்தேன்.. சென்னையின் இந்த லஸ்ஸி நிச்சயம் அன்பு லஸ்ஸியை தோற்கடித்து விடும்.ஓனர் தினேஷ் சோனி.. ராஜஸ்தானில் இருந்து இங்கு வந்து செட்டில் ஆன wrestler ! குடித்து முடித்து விட்டு ஓனருடன் ஒரு செலஃபீ எடுத்து கொண்டோம். கிளம்பும் முன் அவரிடம் "இதுவரை இவ்வளவு அருமையான லஸ்ஸி குடித்ததே இல்லை; ரொம்ப அருமையா இருந்தது" என சொல்ல " எல்லாம் கடவுள் செயல் " என சொல்லிய படி வானத்தை பார்த்தார் . முகத்தில் மகிழ்ச்சியும் நிறைவும் தெரிந்தது.

அகர்வால் மிஸ்தான் பந்தர் 

நாங்கள் பானி பூரி சாப்பிட்ட இந்த கடை - வழக்கமாய் நாம் சாப்பிடுகிற பானி பூரி தரத்திலேயே இருந்தது.இங்கு நாங்கள் வேறு எதுவும் சாப்பிட்டு பார்க்க வில்லை

கணேஷ் கூல் பார் (கரும்பு ஜுஸ் கடை)

மின்ட் தெருவில் இருந்து ஆவுடையப்பன் தெரு செல்லும் முனையில் உள்ளது இந்த கரும்பு ஜுஸ் கடை. எப்போதும் கூட்டம் அள்ளுகிறது.12 ரூபாய்க்கு ஐஸ் போட்ட ஜுசும், 15 ரூபாய்க்கு ஐஸ் இல்லாத ஜுசும் கிடைக்கிறது. ஆஹா ஓஹோ இல்லை. கொடுத்த காசுக்கு நிச்சயம் நல்ல ஜுஸ்.நிறைய நடப்பதாலும், இனிப்பு சாப்பிடுவதிலும் நிறையவே தாகமாய் இருக்கும். எனவே கரும்பு ஜுஸ் தாகத்தை தணிக்க பெரிதும் உதவியது !

சீனா பாய் டிபன் சென்டர் 

டிபன் சென்டர் என ஹோட்டல் போல பெயர் இருந்தாலும், இதுவும் ஒரு சிறு கடை தான்.


NSC போஸ் ரோடில் இருக்கும் இக்கடையில் சீஸ் முறுக்கு மற்றும் காக்ரா சாண்ட் விச் இரண்டுமே .. மிக ரசிக்கும் வண்ணம் இருந்தது.சீஸ் உள்ளிட்டவை சிக்கனம் பார்க்காமல் போடுகிறார்கள். சின்ன கடை என்றாலும் லாபம் பார்க்காமல் - கொடுத்த பணத்திற்கு நியாயம் செய்கிறார்கள்...அவசியம் செல்ல வேண்டிய சாப்பிட்டு பார்க்க வேண்டிய உணவு வகைகள் இவை. சின்ன விஷயம்: இவை இரண்டுமே தயார் செய்ய சற்று நேரம் எடுக்கிறது !

பொடி இட்லி கடை

பயணத்தின் இறுதியில் சாப்பிட்டது பொடி இட்லி கடை. சிறிய சைஸ் இட்லிகள் (மினி இட்லி அளவு அல்ல.அதை விட நிச்சயம் பெரிது; நமது வழக்கமான இட்லியை விட சற்று சிறிது )


பொடியுடன் நெய் ஊற்றப்பட்டு இட்லி மணக்கிறது. வயிறு ஏற்கனவே நிரம்பி இருந்ததால் ஆளுக்கு ஒவ்வொரு இட்லி மட்டுமே சாப்பிட்டோம். நிச்சயம் வித்தியாச சுவை; முயற்சித்து பார்க்க வேண்டிய கடை

சில குறிப்புகள் :

* வார நாட்களின் மாலை ஏராள மக்கள் பர்சேஸ் செய்ய வருவதால் கூட்டம் அதிகமாயிருக்கும். ஞாயிறு பாதி கடைகள் இருக்காது. எனவே சனிக்கிழமை மாலை Food walk க்கு செல்வது நல்லது 

* காரில் செல்வதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. மின்ட் ஸ்ட்ரீட்டில் பார்க் செய்வது மிக கடினம். ஒருவேளை கார் எடுத்து சென்றால் உயர் நீதி மன்றம் அருகே நிறுத்தி விட்டு நடக்க வேண்டும். 

* ரயில் என்றால் Fort ஸ்டேஷனில் இறங்கி நடக்கவேண்டும். கிட்டத்தட்ட முக்கால் கிலோ மீட்டர் நடை இருக்கும். அல்லது Fort ஸ்டேஷனில் இருந்து ஒரு ஆட்டோ மூலம் மின்ட் ஸ்ட்ரீட் வரை சென்று அங்கிருந்து நடையை துவங்கலாம்.* மின்ட் ஸ்ட்ரீட் ரொம்ப நீட் ஆகவெல்லாம் இருக்காது. இதை மனதில் கொள்க ! கார், பைக், சைக்கிள், ரிக் ஷா, ஆட்டோ எல்லாம் - இரண்டு பக்கமும் செல்லும்; ( ஒன் வே என்று சொல்கிறார்கள். பார்த்தால் அப்படி தெரியலை ) வாகனங்களுக்கு இடையில் கிடைத்த கேப்பில் புகுந்து செல்லவேண்டும்.  

மின்ட் ஸ்ட்ரீட் 

* வாங்கும் உணவு வகைகளை அவசியம் பிரித்து சாப்பிடவும்.கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டால் தான் பல இடங்களில் சாப்பிட்டு முயல முடியும். 

* அவசியம் ஏழெட்டு நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் செல்லுங்கள். உணவு சாப்பிடுவது ஒரு சந்தோசம் என்றால் அரட்டை அடித்தபடி அவர்கள் தரும் கமெண்ட்களுடன் செல்வது தான் சிறப்பே !

 நிறைவாக ...

இந்த Food walk சென்ற பலரும் அண்மையில் நண்பர்களானவர்கள் தான். (எனக்கு மட்டுமல்ல.. ஒரு சிலர் தவிர்த்து ஏராளமானோர் ஓரிரு வருடத்தில் வைப்ரன்ட் வேளச்சேரி வந்தவர்களே) ஆயினும் எந்த சிறு தயக்கமும் இன்றி இந்த Food walkல் ஒரே தட்டில் .....ஆளுக்கு ஒரு கை எடுத்து சாப்பிட தயங்கவே இல்லை.

எந்த ஒரு உணவையும் யாரும் முழுமையாக சாப்பிட வில்லை ( கரும்பு ஜுஸ் தவிர) ..எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தான். அநேகமாய் பலரும் அன்று இரவு டின்னர் சாப்பிட்டிருக்க மாட்டார்கள் ! அந்த அளவு இனிப்பு மற்றும் ஸ்நாக்சிலேயே வயிறு நிரம்பி விட்டது.வேளச்சேரியில் கிளம்பி - சென்னை Fort சென்று - அத்தனை வகை உணவுகளை சாப்பிட்டு, ஆங்காங்கு தொடர்ந்து மினரல் வாட்டர் பாட்டில் வாங்கி குடித்த படியே இருந்தும் கூட, ஒருவருக்கான செலவு ..200 ரூபாயை கூட தாண்டவில்லை..

 இவ்வளவு குறைவான செலவில் - உணவால் வயிறும், உடன் வந்த நண்பர்களால் மனதும் நிறைந்து போனது.. !

அனைத்தும் கூடி வந்தால்.. ஒரு நான் வெஜ் Food walk (அத்தோஸ்) விரைவில் நடக்கலாம் !

நன்றி:

புகைப்படங்கள் -  வடிவேல் & ஆரத்தி

அடிஷனல் தகவல்கள் - ஹேமா ஸ்ரீகாந்த் & பாஸ்கர் 

9 comments:

 1. அருமையான அறிமுகம்
  அடுத்த முறை சென்னை வருகையில்
  நிச்சயம் நண்பர்களுடன் நட்க்க உத்தேசம்
  படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை
  பகிர்ந்து அறியத் தந்தமைக்கு
  நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. Enjoyed your jolly walk!! Tempting....

  ReplyDelete
 3. "அநேகமாய் பலரும் அன்று இரவு டின்னர் சாப்பிட்டிருக்க மாட்டார்கள்!"

  உண்மையாவா? நம்புறத்துக்கு ரொம்ப கஷ்டமா இருக்கே!
  (அடப்பாவிகளா, ஒரு வார சாப்பாட்டை ஒரே சாயந்தரத்துல சாப்பிட்டுட்டு இந்த டிஸ்கிளய்மர் வேற அவசியமா?!)

  ReplyDelete
 4. food walk....சுவையான சுவாரஸ்யமான நடை...

  ReplyDelete
 5. ரமணி சார்: அவசியம் செல்லுங்கள். நிச்சயம் ரசிப்பீர்கள்
  ***
  மாதவி மேடம்: நலமா? நன்றி
  ***
  கலை: ஹா ஹா.. எனக்கெல்லாம் சப்பாத்தி அல்லது அதே வகை உணவு சாப்பிட்டால் தான் இரவு உணவு சாப்பிட்ட மாதிரி இருக்கும். வெறும் இனிப்பு மற்றும் ஸ்னேக்ஸ் வகையுடன் தூங்கியது அன்று தான்

  ***
  நன்றி அனுராதா பிரேம் குமார்

  ReplyDelete
 6. என் மகன்கள் காக்கடாவுக்கு அவ்வப்போது சென்று வருவார்கள். அதே பெயரிலுள்ள உணவை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

  ReplyDelete
 7. அருமை சார். பார்த்தாலே பசிக்குது.

  ReplyDelete
 8. ஒரே நேரத்தில் எப்டிங்க இவ்வளவயும் சாப்பிட்டீங்க....

  ReplyDelete
 9. ஹலோ மோகன்,

  பழைய ஞாபகங்களை, தூசி தட்டி துடைத்து விட்டது உங்கள் வலைபூ பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...