Friday, December 9, 2011

எழுத்தாளர் சுஜாதாவின் சொர்க்கத்தீவு

சொர்க்க தீவு என்கிற சுஜாதா நாவல் சமீபத்தில் (மீண்டும்) வாசித்தேன். சுஜாதாவின் எழுத்துக்கள் என்றும் இளமையானவை. சொர்க்க தீவும் இதே விதம் தான்.

கதை


அய்யங்கார் என்கிற சென்னையை சேர்ந்த கணினி இஞ்சினீயர் சில நபர்களால் நைச்சியமாக பேசி, தனி விமானத்தில் கடத்தப்படுகிறார். அவரை கடத்தி, வெளி உலகத்துக்கு தெரியாத ஒரு தனி நாட்டிற்கு அழைத்து செல்கிறார்கள். அந்த நாட்டை நிர்வகிக்கும் சத்யா என்கிற நபரை அவர் சந்திக்கிறார். அவர் தங்கள் கணினி வேலை செய்ய வில்லை என்றும் அதை சரி செய்யவே அவரை அழைத்து வந்ததாகவும் சொல்கிறார். அய்யங்காருக்கு தன்னை கடத்தி வந்ததில் கோபம் இருந்தாலும் தனக்கு நன்கு தெரிந்த கணினி சரி செய்யும் வேலை என்பதாலும் தப்பி செல்ல வேறு வழி இல்லாததாலும் ஒப்பு கொள்கிறார்.

அந்த நாட்டில் பல விஷயங்கள் விநோதமாக உள்ளன. அவர்கள் தமிழ் பேசுகிறார்கள் எனினும் பல வார்த்தைகளுக்கு அவர்களுக்கு அர்த்தம் புரிய வில்லை. உதாரணமாய் செக்ஸ், அப்பா, அம்மா போன்ற வார்த்தைகள் அவர்களுக்கு தெரியவில்லை !

ஒரு நாள் அய்யங்கார் தங்கிய அறைக்கு ஒரு போன் வருகிறது. அதில் ஒரு குரல் "அவர்கள் சொல்வதை செய்யாதே" என கூறுகிறது. அப்படி பேசிய நபரை ஒரு நாள் பீச்சில் இரவில் சந்திக்கிறார் அய்யங்கார். கெளதம் என்னும் அந்த நபர் "சத்யா அனைவருக்கும் மருந்து கொடுத்து உணர்வுகளை மறக்கடிப்பதாகவும், தனக்கு குடுக்கும் மருந்தில் தவறிருந்ததால் தன் உணர்வுகள் விழித்து கொண்டன என்றும் சொல்கிறார். மேலும் இயற்கைக்கு மாறாக இவர்கள் செய்வது தவறு என்றும் அய்யங்கார் கணினியை ரிப்பேர் செய்து விட்டால், மனிதர்கள் விழித்து கொள்வார்கள் என்றும் கூறுகிறார். ஆனால் இப்படி சில நபர்கள் இருப்பது சத்யாவிற்கு தெரிய வர அவர்கள் நசுக்கப்படுகிறார்கள். அய்யங்கார் கணினியை சரி செய்து விட்டு சென்னை கிளம்புகிறார். விமானத்தில் இருக்கும் போது கடைசியாக கதை வாசிக்கும் நமக்கு மட்டும் இப்படி சொல்கிறார்

"நான் கணினியில் ஒரு லேபிளை மாற்றி விட்டேன். அதனால் அனைத்து மக்களுக்கும் கொடுக்கிற மருந்து அடுத்த ஒரு மாதம் வேலை செய்யாது. அனைவரும் விழித்து கொள்வார்கள்" என்று!

வழக்கமான சுஜாதா கதை போல், அந்த விழிப்புணர்வு நிச்சயம் நடக்குமா, சத்யா அதை கண்டுபிடித்து சரி செய்துவிடுவாரா என்கிற யோசனையுடனும், கேள்விகளுடனும் கதையை முடிக்கிறோம் நாம்.
********
கதை எழுதப்பட்ட வருடம் 1971 ! இதை படிக்கும் மனிதர்களில் பலரும் அப்போது பிறந்திருக்க கூட மாட்டார்கள் ! அப்போதே கணினி பற்றி இவ்வளவு விரிவாகவும், கணினி ஆட்சி செய்ய போகிறது என்றும் எழுதி உள்ளார் சுஜாதா !

புத்தகத்தை கையில் எடுத்தால் அடுத்த ஓரிரு மணி நேரம் நம் அனைத்து கவலைகளையும் மறந்து விட்டு வாசித்து முடித்து விட்டு தான் கீழே வைக்கும் விதத்தில் எழுத பட்டுள்ளது.

சுஜாதா எல்லா புத்தகத்திலும் முன்னுரை அல்லது விளக்கம் தருபவரில்லை. ஆனால் முன்னுரையில் , புத்தகம் வெளி வந்த போது பலரும் ஆங்கில நாவல்களில் இருந்து எடுக்க பட்டதாக சொன்னதாகவும், அது எப்படி உண்மை இல்லை என்றும் சொல்கிறார். மேலும் தான் எழுதிய முதல் சயின்ஸ் பிக்ஷன் கதை இது தான் என்கிறார்.

அய்யங்கார் என்கிற கணினி இஞ்சினியர் பாத்திரத்துக்கு நான் சுஜாதாவை தான் கற்பனை செய்து கொண்டேன். இப்படி நினைக்க ரொம்ப வேடிக்கையாக இருந்தது.

நாவலில் சில சுவாரஸ்யங்கள்:

அந்த நாட்டில் வாழும் எல்லோருக்கும் இரு எழுத்து பெயர்கள் தான். சத்யா என்கிற தலைவருக்கு மட்டுமே மூன்றெழுத்து பெயர். இவர்களை எதிர்க்கும் புரட்சி காரர்கள் முதலில் செய்வது தங்கள் பெயரை நான்கெழுத்தாக மாற்றி கொள்வது தான் ! எதிர்ப்பை காட்ட ஒரு குறியீடு !

பிறப்பு, இறப்பு இரண்டையுமே அங்கு கண்ட்ரோல் செய்கிறார்கள். இயல்பான செக்ஸ் கிடையாது. மனிதர்களின் உணர்வுகள் மழுங்கடிக்க படுவதால் அந்த ஆசை அவர்களுக்கு இல்லை. 54 வயதானால் மனிதர்களை கொன்று விடுகிறார்கள். (நமக்கும் தூக்கி வாரி போடும் இடம் இது !)

உள் வட்டம், வெளி வட்டம் என இரு பிரிவுகள் உண்டு. சத்யா மற்றும் அவரை சார்ந்தவர்கள் உள் வட்டம். இவர்கள் புகைக்கலாம். பெண்களுடன் உடலுறவு வைத்து கொள்ளலாம். (நம்ம ஊர் அரசியல் வாதிகள் வழக்கில் கைதாகும் வரை மற்ற எந்த சட்டங்களுக்கும் உட்படாமல் இருப்பார்களே அந்த மாதிரி !!) மற்ற மக்கள் எல்லாரும் வெளி வட்டம். உள் வட்ட ஆண்கள் பிற பெண்களை தங்களுக்கு வேண்டிய படி உபயோகிக்கிறார்கள். இது குறித்து எந்த உணர்வும் இன்றி அந்த பெண்கள் சம்மதிக்கிறார்கள் !

பல இடங்கள் சுஜாதா முத்திரையுடன் வாய் விட்டு சிரிக்கும்படி இருந்தது. ஆனால் அதை இங்கே சொன்னால் நன்றாக இராது . கதையுடன் சேர்த்து படிக்க தான் சுவாரஸ்யமே !

இந்த கதையை சிலர் சினிமாவாக எடுக்க விரும்பினர் என்று சுஜாதா சொன்ன நியாபகம் ! நல்ல வேளை படமாக வில்லை !

வாய்ப்பு கிடைத்தால் இந்த வித்தியாச கதையை வாசித்து பாருங்கள் !!

திண்ணை நவம்பர் 28 தேதியிட்ட இதழில் வெளியானது. 

12 comments:

 1. சொர்க்கத் தீவு... படித்ததில்லை... உங்கள் விமர்சனம் படிக்கத்தூண்டும் விதமாய் இருக்கிறது. வாங்க வேண்டிய புத்தகங்கள் பட்டியலில் சேர்த்து விடுகிறேன்....

  ReplyDelete
 2. On a related note...

  சொர்க்கத் தீவு - சுஜாதா

  http://balhanuman.wordpress.com/2010/10/08/

  ReplyDelete
 3. அறிவியல் விளுப்புனர்சியை நாவல்கள் மூலம் தமிழர்களுக்கு தந்த ஒரே நாவலாசிரியர் திரு. சுஜாதா அவர்கள். அறிவியலை நாவல்கள் மூலம் தந்த நாவல் ஆசிரியர்கள் இந்தியாவில் வேறு யாரேனும் உண்டா என்று எனக்கு இது வரை தெரியாது.

  ReplyDelete
 4. சயன்ஸ் ஃபிக்ஷனை மெலிதான நகைச்சுவை கலந்து சொன்ன லெஜண்ட் சுஜாதா. இந்தக் கதையை தினமணி கதிரில் ஜெ வரைந்த படங்களுடன் படித்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும். நான் மிக ரசித்ததுண்டு.

  ReplyDelete
 5. அருமையான விமர்சனம்.ஏற்கனவே படித்திருந்தாலும் உடனடியாக திண்ணைக்கு சென்று விட்டேன் மறுபடியும் படிக்க.

  ReplyDelete
 6. நேரமிருந்தால், சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகள் தொகுப்பையும் வாசியுங்கள். உங்களுக்கு பிடிக்குமென நினைக்கிறேன்.

  ReplyDelete
 7. பல இடங்கள் சுஜாதா முத்திரையுடன் வாய் விட்டு சிரிக்கும்படி இருந்தது. ஆனால் அதை இங்கே சொன்னால் நன்றாக இராது . கதையுடன் சேர்த்து படிக்க தான் சுவாரஸ்யமே !


  சத்தியமான வார்த்தை. சுஜாதா கதைகளைப் படிக்க.. மீண்டும் படிக்க.. மீண்டும் மீண்டும்..

  எவர் ப்ரெஷ்!

  ReplyDelete
 8. இந்தக் கதை படித்த ஞாபகமில்லை ஆனால் விமர்சனம் படிக்கும் போது என் இனிய இயந்திரா சாயல் அடிக்கின்றதே?

  ReplyDelete
 9. அவருடைய எல்லா கதைகளும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்.
  பகிர்விற்கு நன்றி நண்பரே!
  நம்ம தளத்தில்:
  "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

  ReplyDelete
 10. நன்றி வெங்கட். வாசியுங்கள்
  **
  பால ஹனுமான். நன்றி வாசிக்கிறேன்
  **
  ஆதி மனிதன். உண்மை நன்றி
  **
  கணேஷ்: அட ! புத்தகத்தில் வந்த போதே வாசித்தீர்களா? மகிழ்ச்சி நன்றி
  **
  நன்றி ராம்வி

  ReplyDelete
 11. நன்றி வித்யா வாசிக்கிறேன்
  **
  ரிஷபன் சார் . உண்மை நன்றி
  **
  வாசகன் : Science fiction என்பதால் உங்களுக்கு அப்படி தோன்றி இருக்கலாம் நன்றி
  **
  நன்றி ரத்னவேல் ஐயா
  **
  நன்றி தனபாலன்

  ReplyDelete
 12. கண்டிப்பாக வாசிக்கவேண்டும் சொர்க்கதீவை.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...