Sunday, February 20, 2011

நெகிழ்வான நட்சத்திர வார அனுபவங்கள்

தமிழ் மண நட்சத்திர வாரம் மிக நெகிழ்வான உணர்வுகளையும், புது அனுபவம் மற்றும் நண்பர்களையும் தந்து விட்டு இன்றுடன் முடிகிறது.

சொந்த கதை ஓரளவு இருந்தாலும்,  இனி நட்சத்திர பதிவர் ஆவோருக்கு  உதவும் என்ற எண்ணத்தில் இந்த பதிவு...

எந்த ஒரு பெரிய விஷயம் தனி மனிதன் திட்டமிட்டாலும், அதை செயல் படுத்த ஒரு குழு நிச்சயம் தேவைப்படுகிறது . இந்த வார பதிவுகளுக்கு பின்னால் சிறு குழு உதவி உள்ளது. அவர்களை அறிய செய்யவும் நன்றி சொல்லவும் இது ஒரு வாய்ப்பு. 

தமிழ் மணம், தனது நட்சத்திர பதிவர்களை எப்படி தேர்ந்தெடுக்கிறது என அறியேன். ஆனால் நம் வாரம் துவங்க 15 நாட்கள் முன்பு ஒரு மெயில் அனுப்பி, நட்சத்திர பதிவராக இருக்க சம்மதமா என கேட்கின்றனர். பொதுவாய் இத்தகைய அரிய வாய்ப்புகள் வாழ்க்கையில் வந்தால், தவற விடுவதில்லை (தொலை காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மட்டும் தற்போது "எஸ்" சொல்வது கொஞ்சம்;  "நோ" சொல்வது நிறைய ) 

தமிழ் மணம் மெயில் வந்த அன்று எனக்கு போர்ட் மீட்டிங். மேலும் அடுத்த பத்து நாட்களுக்கு என்னுடன் டிப்பார்ட்மண்டில் இருக்கும் ஒரே நபரும் விடுப்பில் செல்கிறார். இதனால் அதிக வேலை என்பதோடு தினம் வீட்டுக்கு செல்லவும் தாமதமாகும். எனவே இரு நாள் யோசித்தேன். வாய்ப்பை தவற விட வேண்டாம் என்று இரு நாளுக்கு பின் சரி சொன்னேன்.

சரி சொன்ன அன்றிலிருந்தே என்னை பொறுத்த வரை நட்சத்திர வாரம் துவங்கி விட்டது. தினம் ஒவ்வொரு பதிவாக எழுத ஆரம்பித்தேன். சனி ஞாயிறில் இன்னும் சற்று அதிக பதிவுகள் எழுதப்பட்டன. நட்சத்திர வாரம் காதலர் தினத்தில் துவங்கி உலக கோப்பை துவங்கும் நேரத்தில் முடிவது தெரிந்தது. இரண்டுக்கும் சிறப்பு பதிவுகள் தேவை என புரிந்தது.

மேலும் நட்சத்திர வாரம் துவங்கும் திங்கள் கிழமைக்கு முன் நான்கு நாட்கள் (வியாழன் முதல் ஞாயிறு வரை ) அலுவல், பின் சொந்த வேலையாக ஊரில் இருக்க மாட்டேன்.இந்த நான்கு நாட்களும் இணையம் பக்கமே வர முடியாது. இது தெரிந்து அனைத்து பதிவுகளும் மிக முன்பே தயார் செய்யப்பட்டது.

ச்சும்மா ! உங்களை குஷிப்படுத்த

தினம் ஒரு பதிவு வெளியிடுவதா, ரெண்டு பதிவு வெளியிடுவதா என சற்று குழப்பம். முந்தய நட்சத்திரங்களை பார்க்க பலர் தினம் ரெண்டு பதிவுகள் போட்டிருந்தனர். சிலர் தினம் ஒரு பதிவும் வெகு சிலர் அந்த ஒன்று கூட ஒரு சில நாட்களில் போடாமலும் இருந்தனர். சரி நாம் புதியதாய் ஏழெட்டு பதிவுகளும், பழையவனற்றில் அதிகம் வாசிக்க படாத நல்ல பதிவுகள் நான்கைந்தும் ரீ ரைட் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. இதன்படி கிட்ட தட்ட அனைத்து பதிவுகளும் நட்சத்திர வாரம் துவங்க நான்கு நாட்கள் முன்பே தயார்.

முதல் நாள் காதலர் தின சிறப்பு பதிவுக்கு பின்னூட்டங்கள் (வழக்கம் போல் வாழ்த்து சொல்லி) நிறைய வந்தது. மதியம் போட்ட பெண்கள் டயலாக்ஸ்க்கு அதிக பின்னூட்டங்கள் இல்லை. "சரி தினம் இரண்டு போடுவது தவறோ? ஏகப்பட்ட பதிவு எழுதுறான்" என மக்கள் வெறுக்கிறார்களோ என ஒரு எண்ணம். சரி இன்னொரு நாள் பார்க்கலாம் என நினைத்தேன். மறு நாள் பால குமாரன் பதிவுக்கு எதிர்பார்த்த படி பின்னூட்டங்கள் & ரெஸ்பான்ஸ் செம. பின்னூட்டங்கள் தவிர மெயில் & போனில் பதிவர் அல்லாத பழைய & புது நண்பர்கள் இந்த பதிவு பற்றி பேசினர். இதை விட ஆச்சரியம் இந்த ஒரு வாரத்தில் எழுதிய பதிவுகளில் மிக அதிக ஹிட்ஸ் வாங்கியது செவ்வாய் மதியம் வெளியிட்ட வேலை நீக்கம் என்கொயரி அனுபவம் பதிவு தான். இது ஓர் மீள் பதிவு!! தினம் ரெண்டு பதிவு போடலாமா, மீள் பதிவு போடலாமா என்ற ரெண்டு தயக்கங்களையும் வேலை நீக்கம் பதிவுக்கான வரவேற்பு உடைத்தது.

இந்த வாரத்தில் எனக்கு மிக பிடித்த பதிவுகள் அம்மா, சீனு சார் & பால குமாரன் சந்திப்பு ஆகியவை. நண்பர்கள் வரவேற்பு அதிகம் கிடைத்தது என்பதற்காக மட்டுமில்லாமல் "Straight from my heart " & மனதில் நீண்ட நாள் ஊறி கிடந்து பின் வெளி வந்ததாலும் பிடித்தவை.

பதிவில் மிக முக்கியமாய் கடைசி பகுதி அனைவரையும் கவரும் படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்ததும் இந்த வாரம் தான். அந்த கடைசி பாரா படிப்பவர்களை நெகிழ்த்துவதாகவோ, சிறு ஷாக் தருவதாகவோ, புன்னகை புரிய வைப்பதாகவோ இருத்தல் நலம் என உணர்ந்தேன்.

ஒரு குழுவே உதவியது என்றேன்; அவர்கள்:

நண்பன் தேவா: கல்லூரியில் எனது ஜூனியர். சில பதிவுகளை இவனுக்கு அனுப்பி கருத்து கேட்டேன். வாசித்து விட்டு உடன் சில மாற்றங்கள் சொன்னான். அவன் சொன்ன மாற்றங்கள் அனைத்தும் நண்பர்களால் பின்னூட்டங்களில் பாராட்டப்பட்டன. தில்லியில் இருந்தாலும் அநேகமாய் இந்த ஒரு வாரம் தினம் ஒரு முறை பேசி கொண்டிருந்தான். அவனால் ஒரு குறிப்பிட்ட நாள் இணையம் பக்கம் வர முடியாமல் இருந்த போதும் எஸ். எம். எஸ் அனுப்பி இன்றைக்கு ரெஸ்பான்ஸ் எப்படி என்று கேட்டான். இது போன்ற ஆதரவும் எதிர் பார்ப்பும் எழுதும் யாருக்கும் பெரிய பலம்.

பதிவர் ராம லட்சுமி : மூத்த பதிவரான இவரிடம் பல ஆலோசனைகள் பெற்றேன். மேலும் இவர்தான், கூகிளில் ஒவ்வொரு பதிவுக்கும் எவ்வளவு ஹிட்ஸ் என தெரிவதை பார்க்க சொல்லி தந்தார் (இந்த வாரம் தான் இது தெரிந்தது; இன்னும் தெரியாமல் இருப்போருக்கு: நமது டேஷ் போர்டில் நியூ போஸ்ட், எடிட் போஸ்ட் என்றெல்லாம் இருக்கும் அல்லவா? அதன் கடைசியில் Stats என்று இருக்கும் பாருங்கள். அதனை கிளிக் செய்தால் இந்த வாரம், மாதம், ஆல் டைம் பாபுலர் பதிவுகளை பார்க்கலாம்)

யூ டியூப் மூலம் வீடியோ பதிவேற்ற தெரிந்தாலும் அதை பதிவில் அப்லோட் செய்ய தெரியாமல் இருந்தேன். கேபிள் மூலம் இவ்வாரம் தான் கற்றேன் (ஆதி மனிதன் ஒரு முறை பின்னூட்டத்தில் சொன்னாலும் அப்போ புரியலை)

மாலை நேரத்து பதிவுகளை வெளியிட , தமிழ் மணம் & இன்ட்லியில் சேர்க்க உதவியது நண்பர் மாதவன்! (அலுவலகத்தில் தமிழ் மணம் & இன்ட்லி Access இல்லை). ஒவ்வொரு முறையும் மிக சரியாக நான் சொன்ன நேரத்தில் சேர்ப்பித்தார் தம்பி மாதவன். (ஒரு நாள் மட்டும் அந்த வேலையை ஈரோடு கதிர் செய்தார்!..கதிரோட சர்வீசுக்கு எல்லையே இல்லை போல )

ஆணும் பெண்ணும் கதை வெளியிடுவதற்கு முதல் நாள் தான் எழுத பட்டது. பதிவர் ரேகா ராகவன் உடனே வாசித்து விட்டு, சற்று ரீ- ரைட் செய்து தந்தார். 

மற்றும் கிரிக்கெட் பதிவுக்கு குறைந்த நேரத்தில் பதில் சொன்ன அனைத்து பதிவர்கள் ! தமிழ் மணத்தின் சங்கர பாண்டி ! இப்படி இவர்கள் அனைவரின் உதவி இல்லா விடில் உங்களின் ஆதரவும் பாராட்டும் கிடைத்திருக்காது.

நட்சத்திர பதிவர்கள் ஆக போகிறவர்களுக்கு சொல்ல விரும்புவது: தகவல் வந்ததுமே வேலை துவக்கி விடுங்கள். உங்கள் வாரம் துவங்கும் முன் அனைத்து பதிவுகளும் தயாராய் வைத்திருங்கள். கடைசி நேரத்தில் எதுவும் வைத்து கொள்ள வேண்டாம். அப்போது தான் கரன்ட் போகும்; நெட் அவ்வப்போது வேலை செய்யாது. உங்களுக்கே ஜூரம் வரும்; அலுவலகத்தில் வேலை அதிகமாகும்; குழந்தையை டாக்டரிடம் கூட்டி போக வேண்டியிருக்கும் (இவை அனைத்தும் எனக்கு நடந்தது) பதிவுகளை சற்று பாலிஷ் செய்வது & வெளியிடுவது மட்டுமே அந்த வார வேலையாக இருப்பது நலம்.

இந்த ஒரு வாரத்தில் பெற்றதும் இழந்ததும்:


பெற்றது:

புதிதாய் 13 தொடரும் நண்பர்கள்
வழக்கத்தை விட அதிகமான ஹிட்ஸ்கள் (தினம் ரெண்டு பதிவு எழுதியதாலும் இருக்கலாம்)
நெகிழ்வான பின்னூட்டங்கள்.
ஸ்டோர் செய்து என்றைக்கும் வாசிக்கும் படியான சில நேரடி மெயில்கள் 
பழைய நண்பர்கள் தொலை பேசி செய்து பேசிய நெகிழ்வான நிமிடங்கள்
சுஜாதாவிற்கு ஸ்ரீ ரங்கம் போல எனக்கு நீடாமங்கலம் என உணர்ந்தது (அவரோடு ஒப்பீடு ரொம்ப ஓவர் என எனக்கே தெரிகிறது. "சொந்த ஊர் கதைகள் " என்ற அளவில் மட்டும் இதை உணர்க. இன்னும் 10 சதவீதம் கூட எங்க ஊர் & வித்யாச மனிதர்கள் பற்றி எழுதலை. இனி எழுதணும் )

இழந்தது:

10 நாளாக பத்திரிக்கை வாசிக்கவே இல்லை
தினம் கணினியில் அதிகம் இருந்து கண்கள் சிவந்து ஓய்வுக்கு கெஞ்சியது 
ஒரு சில நாள் ஓரிரு மணி நேரம் தூக்கம் குறைந்தது  (ஆம் ஒரு சில நாள் ஓரிரு மணி நேரம் மட்டுமே !! தூக்கத்தை பெரும்பாலும் தியாகம் செய்வதில்லை)
சில நாட்கள் யோகா & ஜிம்முக்கு ரெஸ்ட்
குழந்தை பாடத்தில் சுத்தமாய் கவனம் செலுத்த வில்லை

முக்கியமாய்: ஹவுஸ் பாஸ் " ஏங்க..உங்க கூட பேசியே நாளாச்சு; ஒரு அப்பாயன்ட்மென்ட் குடுங்க" என்று கேட்கும் நிலை வந்ததால், கடைசி ரெண்டு நாட்கள் ஒரு பதிவோடு நிறுத்தி விட்டேன். வேறு இரு பதிவுகள் கிட்ட தட்ட தயாராய் இருந்தாலும், பாலிஷ் செய்கிறேன் என கணினியில் உட்கார்ந்து, வார கடைசியிலும் மனைவி & குழந்தை உடன் நேரம் செலவிடாமல் போக விரும்பலை.

நண்பர்கள் கடந்த ஒரு வார வழக்கப்படி தினம் இங்கு வந்து ஏமாறாதீர்கள். இனி முன்பு போல் அதிக பட்சம் வாரம் இரு பதிவுகள் மட்டுமே வரும். 

உங்கள் அனைவரின் அன்பிற்கும், வாசிப்பிற்கும் நெகிழ்வான நன்றி.


மற்றொரு சிறு மகிழ்வான செய்தி: தமிழ் மணத்தின் இந்த வார சிறந்த பதிவர்களில் வீடு திரும்பலுக்கு நான்காம் இடம்! மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த ஒரு வாரத்தில் நீங்கள் ரசித்த பதிவு பற்றியும்,  ஒரு வாரமாய் இந்த ப்ளாக் வாசித்திருந்தால், பொதுவாய் எப்படி இருந்தது என்றும்  ஓரிரு வரிகள் சொன்னால் ஒரு சிறு  குழந்தையை மகிழ்வித்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும் ! (யப்பா பின்னூட்டம் போடுங்க என்பதை எப்படி டீசன்ட்டா கேக்குறான் பாருங்க )

கல்லூரி காலத்தில் நான் எழுதிய சிறு கவிதையுடன் இந்த நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறேன்:

இல்லாமல் போகுமோ
சரித்திரத்தில் ஒரு சிற்றிடம்
எனக்கு?

27 comments:

  1. முக்கியமாய்: ஹவுஸ் பாஸ் " ஏங்க..உங்க கூட பேசியே நாளாச்சு; ஒரு அப்பாயன்ட்மென்ட் குடுங்க" என்று கேட்கும் நிலை வந்ததால்

    கூடடல் கழித்தல் பெருக்கல் என்று எப்படி போட்டுப் பார்த்தாலும் உங்கள் வேலையை சிறப்பாகவே செய்து உள்ளீர்கள்.

    அப்புறம் மேலே சொன்னது இங்கே எப்போதும் நடந்து கொண்டிருப்பது தான். இனி திருத்த முடியாது என்று மனதிற்குள் தீர்மானம் உருவாகி விட்டதால் நம்மளை தண்ணீர் தெளித்து விட்டுட்டாங்க. உங்களுக்கு ஒரு நாள் அல்லது ஒரு வாரம் தானே?

    குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வெளியே ஒரு சுற்று சுற்றிவிட்டு வாங்க.

    சிவப்புக் கொடி இறங்கி, வெள்ளைக் கொடி பட்டொளி வீசி பறக்குது பாரீர் என்று பாடுவீர்கள்.

    தினமும் எத்தன பேர சமாளித்துக் கொண்டு இருகறோம். இது பெருசா மோகன்.

    நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வணக்கம் சார்,

    கணினி முன் அமர எனக்கு கிடைத்த குறைந்த நேரத்தையும்(அப்படி சொல்லிக்கிறதுல ஒரு பெருமை இருக்கு பாருங்க, அந்த சுகமே தனிதான்:-)))!) பயன்படுத்தி தங்களின் கடந்த வார பதிவுகளைப் படித்தேன். சிலவற்றிற்கு பின்னூட்டம் எழுத இயலவில்லை.

    கடந்த வாரத்தில் வந்தப் பதிவுகள் அனைத்துமே நன்று. தாங்கள் தரம் பிரித்தது (அம்மா, சீனு சார் & பால குமாரன் சந்திப்பு) சரியே.

    எதையும் 'திட்டமிட்டு செய்தால், வெற்றி நிச்சயம்' என்பதை புரிய வைத்துவிட்டீர்கள்.

    தங்களுக்காக உழைத்த சக பதிவர் நண்பர்களுக்கும், நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்த தமிழ்மணத்திற்கும் 'வீடு திரும்பல்' வாசகர்கள் சார்பாக நன்றி.

    ReplyDelete
  3. /சரித்திரத்தில் ஒரு சிற்றிடம்/

    பேரிடம் கிடைக்கட்டும்!!

    /ஒவ்வொரு பதிவுக்கும் எவ்வளவு ஹிட்ஸ்/

    இரண்டாம் நாள், மாலைப் பதிவைத் தொடர வேண்டுமா என எழுந்த சிறு தயக்கம் stats பார்த்த பிறகு சூரியனைக் கண்ட பனி போல விலகியதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்:)!

    மிகச் சிறப்பாக அமைந்தது வாரம். நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  4. நடசத்திர வாரம் மின்னியது!உங்க திட்டமிடல் ரொம்ப அருமை!பூங்கொத்து!

    ReplyDelete
  5. MAIL FROM TAMIL MANAM (SANKARA PANDI)

    அன்பின் மோகன் அவர்களுக்கு,

    வணக்கம்.

    உங்களுடைய விடைபெறும் பதிவை இப்பொழுது படித்தேன்.

    தமிழ்மணம் நட்சத்திர வாரத்தை மிகுந்த சிரத்தையெடுத்து நேரம் செலவழித்து சிறப்பாகச் செய்த உங்களுடைய அர்ப்பணிப்புக்கு தமிழ்மணம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி
    சங்கரபாண்டி
    தமிழ்மணம்

    ReplyDelete
  6. இந்த திட்டமிடல் அருமை. வாரம் ஒரு பதிவு எழுதவே மூச்சு வாங்கும். இதில் தினம் ரெண்டு பதிவுன்னா, இந்தளவாவது தயார்ப்படுத்துதல் இல்லாம முடியாது. வாசிச்ச எனக்கே மூச்சு வாங்குது!!

    பொதுவா தமிழ்மண நட்சத்திரப் பதிவுகள்னா, ரொம்ப இலக்கியத்தனமா அல்லது முன்/பின் நவீனத்துவமா பதிவுகள் இருப்பது வழமை. ஆனா, உங்க பதிவுகள் ஜனரஞ்சகமா (கலகலப்பா??) இருந்ததுதான், உங்களின் எல்லாப் பதிவுகளையும் விடாமல் வாசித்ததற்குக் காரணம். ஆனால் சிலவற்றிற்குப் பின்னூட்டங்கள்தான் எழுத முடியவில்லை. (சென்ற பதிவின் “ஹப்பாடா” பின்னூட்டத்திற்கு இதுதான் காரணம்!)

    இந்த வாரத்திற்காக உங்களை எப்படி தயார்ப்படுத்தினீர்கள் என்பதோடு, நண்பர்களின் உதவியையும் பகிர்ந்துகொண்டது, எதிர்கால நட்சத்திரங்களுக்கும் உதவும்.

    ReplyDelete
  7. அழகான, பயனுள்ள பதிவு! மிகவும் பாராட்டப்பட்ட நட்சத்திரமாக ஜொலித்தீர், இந்த வாரம்! இந்தப் பதிவில் "உண்மை பேசும் ஒரு வக்கீலை" நாங்கள் காண முடிந்தது (கோர்ட்டுக்குப் போவதை நிறுத்திவிட்ட காரணத்தினாலோ?):)))))
    மேன்மேலும் வளர்ந்து, உயர்ந்து, சிறந்து, மகிழ வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  8. கலக்கி விட்டாய் நண்பா, என் மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. நல்ல பகிர்வுகளை அளித்துக் கொண்டு இருக்கும் உங்களுக்கு தமிழ்மணம் நட்சத்திர பதிவர் அழைப்பு வந்ததில் ஆச்சரியமில்லை. நல்ல பதிவுகள் கொடுத்த உங்களுக்கு எனது நன்றிகள் மோகன்.

    ReplyDelete
  12. வித்யாசமான பதிவுகளுடம் உங்கள் பணியை சிறப்பாக செய்தீர்கள் மோகன்.

    நட்சத்திர வாரத்தில் வாங்க முன்னேறலாம் தொடரில் ஒரு பகுதி வெளியாகுமென எதிர்பார்த்தேன்.

    ReplyDelete
  13. நட்சத்திர வாரம் சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. சூப்பர் ஸ்டார் பதிவர் ஆக வாழ்த்துகள்..அப்பறம் எம்.எல்.ஏ, டெல்லி, சி.எம்...

    ReplyDelete
  15. இந்த வார இறுதியில் வாசித்தேன். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  16. நன்றாக பதிவுகளை திட்டமிட்டு வழங்கி இருந்தீர்கள். பாலகுமாரன் பதிவில் பாராட்ட வேண்டும் என்று நினைத்து விட்டுப் போன விஷயம் நீங்கள் அந்த சந்திப்புகளை வரிசைப் படுத்தியிருந்த விதம். அம்மாவின் ஆசை, குரு பக்தி, நட்பு என்று வகைப்படுத்தி, வித்தியாசம் காட்டி நன்றாக செய்திருந்தீர்கள்.

    ReplyDelete
  17. சிறப்பாக இருந்தது நட்சத்திரவாரம்.

    // தகவல் வந்ததுமே வேலை துவக்கி விடுங்கள். உங்கள் வாரம் துவங்கும் முன் அனைத்து பதிவுகளும் தயாராய் வைத்திருங்கள்//

    வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு அழைப்பு வந்ததும், நான் செய்ததும் இதைத்தான் :-))))

    ReplyDelete
  18. மோகன், எல்லாப் பதிவுகளையும் படிக்கவில்லை. என்கொயரி அனுபவம், கணவன் மனைவி சண்டை, ஹைதை பயண அனுபவம், இவை மூன்றை மட்டுமே படித்தேன்.

    படித்ததில் இவை மூன்றும் எல்லாமே நன்றாக இருந்தன.

    ReplyDelete
  19. மிக மகிழ்ச்சி ஜோதிஜி; நன்றி
    **
    மிக்க நன்றி அமைதி அப்பா.
    **
    சிற்றிடம் கிடைத்தாலே போதும் ராம லட்சுமி.:)) நன்றி
    **
    அருணா said//
    உங்க திட்டமிடல் ரொம்ப அருமை!பூங்கொத்து!//

    மிக மகிழ்ச்சி. நன்றி
    **
    சங்கர பாண்டி: மகிழ்ச்சியும் நன்றியும்
    **
    தொடர் வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி மனோ
    **

    ReplyDelete
  20. ஹுசைனம்மா: பதிவுகளுக்கு பின் உள்ள உழைப்பை குறிப்பிட்டு நீங்கள் எழுதியது மகிழ்ச்சி தருகிறது, மிக நன்றி
    **
    மனம் திறந்து மதி said//
    //உண்மை பேசும் ஒரு வக்கீலை" நாங்கள் காண முடிந்தது //

    எப்போதும் உண்மைக்கு ஒரு அழகுண்டு என நம்புவேன்.100 சதவீதம் இல்லா விடினும், முடிந்த வரை உண்மையாய் இருக்கலாமே ! இப்படி இருப்பது சுலபமாகவும், அழகாகவும் உள்ளதாய் எண்ணம். நன்றி
    **
    நன்றி பெயர் சொல்ல
    **
    ரதன்வேல்: நன்றி
    **
    மாதவி: முதலில் என் சிற்றறிவுக்கு உங்கள் பின்னூட்டம் புரியவில்லை. பின் தான் பைவ் ஸ்டார் தந்துள்ளீர்கள் என புரிந்து மகிழ்ந்தேன். நன்றி
    **
    நன்றி வெங்கட்
    **
    பழமை பேசி: நன்றி

    ReplyDelete
  21. வித்யா : மகிழ்ச்சி. வா.மு.பார்க்கலாம் எழுத அவகாசம் வேண்டும். இந்த வாரம் ஜெட் ஸ்பீடில் சென்றது. அப்போது எழுத சாத்தியமின்றி போனது. நினைவு வைத்து கேட்பதில் மகிழ்கிறேன்
    **
    மாதேவி: மகிழ்ச்சி
    **
    சிவ குமார்: அண்ணா? ஏன்?? :)) நன்றி
    **
    கணேசன்: முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    **
    ஸ்ரீராம்: மகிழ்ச்சி; நன்றி
    **
    அமைதி சாரல். உங்கள் அனுபவமும் பகிர்ந்ததற்கு நன்றி
    **
    கோபி ராம மூர்த்தி: நன்றி

    ReplyDelete
  22. //மற்றொரு சிறு மகிழ்வான செய்தி: தமிழ் மணத்தின் இந்த வார சிறந்த பதிவர்களில் வீடு திரும்பலுக்கு நான்காம் இடம்! மகிழ்ச்சியாக உள்ளது. //
    Congrats.

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் மோகன் ஜி

    ReplyDelete
  24. நன்றி இளங்கோ
    **
    நன்றி காவேரி கணேஷ்

    ReplyDelete
  25. பயனுள்ள பதிவு.
    கடைசிவரிக் கவிதை அருமை. வெட்டி என் அலுவலகத்தில் வைத்துக் கொள்ளலாம் போலிருக்கிறதே?

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...