Tuesday, August 30, 2011

வானவில் :குள்ள நரி கூட்டமும், ஆத்மாநாமும்


பார்த்த படம்: குள்ள நரிக் கூட்டம்

பார்த்து ரொம்ப நாளானாலும் இப்போது பகிர காரணம் உள்ளது. அது அப்புறம். சாதாரண கதை, சொல்லப்பட்ட விதம் சுவாரஸ்யம். வெண்ணிலா கபடி குழு ஹீரோ விஷ்ணுவிற்கு இன்னொரு நல்ல படமாக இது அமைந்தது. ஹீரோயின் ரம்யா நம்பீசன் செம அழகு. குறிப்பாய் குறும்பு கொப்பளிக்கும் கண்கள். படத்தின் முதல் பாதி ஒரு சின்ன விஷயத்தை வைத்து மிக சுவாரஸ்யமாக செல்கிறது. ஹீரோ தனது தந்தை மொபைலுக்கு ரீ-சார்ஜ் செய்யும் போது தவறான எண்ணுக்கு ரீ-சார்ஜ் செய்து விடுகிறார். அது ஹீரோயின் போன் நம்பர். ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரீ-சார்ஜ் செய்ததால் பணத்தை திரும்ப தர சொல்லி கேட்கிறார். அப்படியே காதல் வளருகிறது. அந்த பணத்தை ஹீரோயின் எப்படி திரும்ப தருகிறார் என்பதை மிக அழகாக காண்பிக்கிறார்கள். அடிக்கடி சந்திக்க வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக பணம் தர, கடைசியில் சில்லறை காசுகளில் வந்து நிற்கிறது அந்த கடன்!

ஹீரோ அப்பா போலிசை வெறுக்க, ஹீரோயின் அப்பாவோ போலிசுக்கு தான் பெண்ணை தருவேன் என்கிறார். இதற்காக ஹீரோ எப்படி போலிஸ் ஆனார் என்பது தான் கதை. பிற் பாதியில் போலிஸ் வேலை செலக்ஷனில் உள்ள அரசியலையும் இன்டரஸ்டிங் ஆக காட்டுகிறார்கள். க்ளைமாக்ஸ் மட்டும் சற்று சினிமாடிக் ஆக இருந்தாலும், அதனை மறந்து நிச்சயம் ரசிக்கலாம். இந்த படம் இந்திய தொலை காட்சிகளில் முதன் முறையாக பிள்ளையார் சதுர் த்தி அன்று (வரும் வியாழன்) காலை 11 மணிக்கு விஜய் டிவியில் ஒளி பரப்பாகிறது. இதுவரை பார்க்காவிடில், பாருங்கள், நிச்சயம் ரசிப்பீர்கள்.

சன் இன்னும் சில படி மேலே போய் ஆடுகளம் படம் வியாழன் மாலை ஆறு மணிக்கு ஒளி பரப்புகிறார்கள் . ஆடுகளம் பற்றிய நம்ம விமர்சனம் இங்கே வாசிக்கலாம் !


ரசித்த பாட்டு : மூங்கில் காடுகளே (படம்: சாமுராய்)

இயற்கை எப்போதும் ரசிக்கிற விஷயம். அத்தோடு அற்புதமான இசையும் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்? இந்த படம் தோல்வி அடைந்தாலும், இந்த பாடல் கேட்கவும் பார்க்கவும் மிக இனிமையான ஒன்று


பாடலின் ஊடே ஒரு சோகம் இழையோடிக்கொண்டே இருக்கும். அதை புல்லாங்குழல் என்ன அருமையாய் சொல்கிறது பாருங்கள் ! கேரளாவிலும், ஹோக்கேநேக்களிலும் எடுக்கப்பட்ட இந்த பாடல் ஒரு விஷுவல் ட்ரீட் !


தூக்கு தண்டனை 

தூக்கு தண்டனையே வேண்டாம் என்று நினைக்கிற ஆள் இல்லை நான். நம் நாட்டில் இன்னமும் மிக கொடூரமான பல்வேறு குற்றங்கள் நடக்கவே செய்கின்றன. மரண தண்டனை என்கிற பயம் இருந்தாலாவது அவை ஓரளவு குறைய வாய்ப்புண்டு. ஆனாலும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மீதான குற்றங்கள் முழுமையாக நிரூபிக்கப்பட்ட மாதிரி தெரிய வில்லை. எனவே அவர்களை தூக்கிலிடுவது தேவையில்லை என்றே நினைக்கிறேன். பேரறிவாளன் தாயார், முருகன் மகள் ஆகியோரின் அவல குரல் மனதை வருத்துகிறது . இது தொடர்பாக தமிழர்கள் பெரும் எழுச்சி குரல் எழுப்புவது ஆறுதல் ! இன்னும் சில நாட்களில் நீதி மன்றம் மூலம் அவர்களுக்கு நீதி கிடைக்கிறதா என பார்ப்போம் !

ரசித்த கவிதை

இந்தச் செருப்பைப் போல்
எத்தனை பேர் தேய்கிறார்களோ
இந்தக் குடையைப் போல்
எத்தனை பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப் போல்
எத்தனை பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு.

                                                                 - ஆத்மநாம்
நாட்டி கார்னர்

நாட்டியை கூண்டிற்குள் வைத்து பார்ப்பதை விட வெளியே வைத்து பார்ப்பது தான் அழகு. வெளியே என்பது அதனை பொறுத்த வரை கூண்டின் மேல் அமர்வது தான். நல்ல மூட் இருந்தால் தான் வெளியே வந்து கூண்டின் மேல் அல்லது கதவின் மேல் அமரும். தன் இறகை நீவுவது, தலை சாய்த்து பார்ப்பது என அது செய்கிற எல்லாமே அப்போது நன்கு ரசிக்க முடியும். சற்று தைரியம் வந்து விட்டால், வெளியில் இருக்கும் போது நாம் அருகில் போனால் கூட பேசாமல் பார்க்கும். வெளியில் வந்து அமர்ந்து நிறைய நேரம் வரை நாம் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும். அப்புறம் தைரியம் வந்த பின் நாம் அருகில் செல்லலாம். இந்த வாரம் சனிக்கிழமை முழுக்க வெளியில் இருந்தது. ஞாயிறு காலை குளிக்க வைக்க முயற்சித்ததால், கோபமாகி கூண்டிற்குள் போய் விட்டு அப்புறம் "உர்" என்று வெளியே வரவே இல்லை.

கல்யாண நாள் அப்டேட் 

கல்யாண நாள் எப்படி போச்சு என்று கேட்ட அனைத்து நண்பர்களுக்காகவும் இந்த அப்டேட் :

திங்கள் கிழமை என்பதால் வழக்கம் போல டென்ஷன் ஆக தான் போனது. பிறந்த நாளுக்கு கூப்பிடாத சில நண்பர்கள் கூட இந்த "நன்னாளை" நினைவு வைத்து அழைத்தார்கள். கூட படித்த அவர்கள் இந்த ப்ளாக் வாசிக்க மாட்டார்கள். குடுத்து வைத்தவர்கள் !!

நாங்கள் இருவருமே புது துணி அணியவில்லை என்பது இருக்கட்டும், சமையலை சொன்னால், எப்படி சிறப்பாக கொண்டாடினோம் என்பது புரியும். அன்று காலை உணவு (மகள் தவிர்த்து, எங்கள் இருவருக்கும்) தயிர் ஊற்றி பழைய சாதம் ! மதியம்? கார குழம்பு !! ம்ம் 14 வருஷம் ஆச்சுன்னு இப்படியா? எனக்கு தான் தைரியம் இல்லை. நீங்க யாராவது என் சார்பா நியாயம் கேட்க கூடாதா?

விட்டாச்சு லீவு !!

புதன் ரம்ஜான். வியாழன் விநாயகர் சதுர்த்தி. எனவே நிறைய நிறுவனங்கள் வெள்ளியும் லீவு விட்டு, தொடர்ந்து ஐந்து நாள் விடுமுறை விட்டுள்ளனர். இதனால் தென் தமிழகத்திலிருந்து சென்னை வந்து வேலை செய்யும் பலரும் தத்தம் சொந்த ஊருக்கு கிளம்பி விட்டனர். என்ஜாய் தி ஹாலிடிஸ் நண்பர்களே !!

16 comments:

 1. நல்ல விமர்சனம் .விடுமுறையில் மங்காத்தா பாருங்க

  ReplyDelete
 2. குள்ள நரி கூட்டம் படத்தை தவர விட கூடாது? சரி.
  மற்ற விஷயங்களை பற்றியும் நல்ல அலசல்..பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 3. அன்று காலை உணவு (மகள் தவிர்த்து, எங்கள் இருவருக்கும்) தயிர் ஊற்றி பழைய சாதம் ! மதியம்? கார குழம்பு !! ம்ம் 14 வருஷம் ஆச்சுன்னு இப்படியா? எனக்கு தான் தைரியம் இல்லை. நீங்க யாராவது என் சார்பா நியாயம் கேட்க கூடாதா?


  ...... And you didn't plan to take your wife out for a romantic dinner, either. நிச்சயமாக உங்க சார்பாக நியாயம் கேட்கவில்லை. ஹி,ஹி,ஹி, ஹி....

  ReplyDelete
 4. நீங்க வெளியே கூட்டிட்டு போகாம இருந்திட்டு மனைவியை திட்டுறீங்க.. ம்... ஆணாதிக்கம்.

  ReplyDelete
 5. அழகான விமர்ச்சனம்...

  ReplyDelete
 6. சித்ரா & கேபிள்: லீவு போட்டுட்டு அரை நாள் சுத்தலாம் என்றேன். ஒத்துக்கலை. இரவு டின்னரும் வெளியே போக முடியாத படி கெஸ்ட் வந்துட்டாங்க (இன்னிக்கு கல்யாண நாள் என கெஸ்ட்டுக்கு தெரியாது)

  ReplyDelete
 7. நல்ல பகிர்வு சார்.
  குள்ளநரி கூட்டம் படம் முடிந்தால் பார்க்க வேண்டும்.
  இந்த வருடம் எங்களுடைய கல்யாணநாளும் இப்படித் தான். வழக்கத்தை விட முன்பாகவே ஆபீஸ். வழக்கமான சமையல்....

  ReplyDelete
 8. பகிர்வு நன்று.

  // ம்ம் 14 வருஷம் ஆச்சுன்னு இப்படியா?//

  அதானே? அன்பாய் செய்த எதுவும் அமிர்தம்னு இன்னும் புரிய மாட்டேன்கிறதே உங்களுக்கு? அதிருக்கட்டும். நீங்க எங்காவது லஞ்சுக்கு அழைத்துக் கொண்டு போயிருக்க வேண்டியதுதானே?

  //நியாயம் கேட்க கூடாதா?//

  நல்லாக் கேட்டாச்சு:))!

  ReplyDelete
 9. எல்லோரும் அதையே கேட்டிருப்பதை இப்பதான் பார்க்கிறேன்:)!

  ReplyDelete
 10. திருமண நாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
 11. //முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மீதான குற்றங்கள் முழுமையாக நிரூபிக்கப்பட்ட மாதிரி தெரிய வில்லை. எனவே அவர்களை தூக்கிலிடுவது தேவையில்லை என்றே நினைக்கிறேன். பேரறிவாளன் தாயார், முருகன் மகள் ஆகியோரின் அவல குரல் மனதை வருத்துகிறது.//

  நிச்சயமாக, சுனாமிக்கு பிறகு நான் தொலைக்காட்சியைப் பார்த்து கலங்கியது இதற்குத்தான்.

  //இது தொடர்பாக தமிழர்கள் பெரும் எழுச்சி குரல் எழுப்புவது ஆறுதல்!//

  ஆமாம்...,எனக்கு வழக்கறிஞர்களின் போராட்டம் எப்போதும் ஒருவிதமான வெறுப்பைத்தான் தரும். இப்பொழுது அப்படி நான் உணரவில்லை.
  விதிவிலக்கு இன்று செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் எம்டிசி நடத்துனரிடம் சண்டைப்போட்டு அதன் காரணமாக சாலை மறியல் செய்தது.


  //இன்னும் சில நாட்களில் நீதி மன்றம் மூலம் அவர்களுக்கு நீதி கிடைக்கிறதா என பார்ப்போம் !//

  நீதி கிடைக்கும் என்பது மாதிரிதான் தோன்றுகிறது.

  *******

  ஒரே பதிவில் நிறைய செய்திகளை கொடுத்து அசத்திவிட்டீர்கள்.

  ReplyDelete
 12. உங்கள் பதிலையும் பார்த்து விட்டேன். திருமணநாள் வாழ்த்துக்களும்:)!

  ReplyDelete
 13. நல்ல பகிர்வு...

  ஐந்து நாட்கள் தொடர்ந்து லீவா... கொடுத்து வைத்தவர்கள்... எங்களுக்கு நாளை விடுமுறை... விநாயகர் சதுர்த்திக்கு இங்கு விடுமுறை கிடையாது. :)))

  ReplyDelete
 14. நன்றி கோபிராஜ். கூட்டம் குறைந்த பின் தான் பார்க்கணும். மேலும் எங்களுக்கு விநாயக சதுர்த்தி அன்று மட்டுமே விடுமுறை
  **
  நன்றி ராம்வி மேடம்
  **
  நன்றி சங்கவி
  **
  கோவை டு தில்லி மேடம்: உங்களுக்கும் இதே அனுபவமா? நன்றி
  **

  ReplyDelete
 15. ராமலட்சுமி: மேலே கேபிள் & சித்ராவுக்கு சொல்லிருக்கேன் பாருங்க. அதே பதில் தான். நன்றி.
  **
  அமைதி அப்பா: விரிவான அலசலுக்கு மிக்க நன்றி
  **
  வெங்கட்: எங்களுக்கும் ஒரு நாள் மட்டும் தான் லீவு :((

  ReplyDelete
 16. ராஜீவ் கொலையில் (ஒரு கோழைத்தனமான காரியம் ) சம்பத்தப்பட்ட அனைவரும் மாட்டினால் தூக்குதான் என்று தெரிந்தே அதில் ஈடுபட்டார்கள். சதிச் செயலில் இறங்கினார்கள். பல்வேறு வகைகளில் கொலைச் செயலுக்கு உதவி புரிந்தார்கள்.

  வழக்கு ஒழுங்காவே நடைபெற்றது. ஒழுங்காக நடைபெறவில்லை என்று இப்போது ஒப்பாரி வைப்பது ஏனோ?

  அரசாங்கத்தின் மெத்தனத்தால், கொலையாளிகளுக்கு சற்று அதிக நாட்கள் வாழும் வாய்ப்பு கிட்டியதற்காக மகிழ வேண்டும்.

  பிடிபட்ட பின்பு உயிர்ப் பிச்சை கேட்பது என்ன வீரமோ?

  ராஜீவ் காந்தியோடு உயிர் விட்ட குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க வேண்டாமா? ஏன் இதனைப்பற்றி ஒருவருமே பேசவில்லை?

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...