Friday, December 16, 2011

ஐ யாம் கலாம் இந்தி பட விமர்சனம்

ஐ யாம் கலாம்’ என்கிற ஹிந்தி படம் சமீபத்தில் பார்த்தேன். முன்னாள் ஜனாதிபதி கலாம் அவர்களால் முன்னேற வேண்டும் என்கிற உந்துதல் ஏற்படும் ஏழைச் சிறுவன் குறித்த கதை.


கதை

சோட்டு என்கிற ஏழை சிறுவன் வறுமை காரணமாக அவனது உறவினரின் டீ கடையில் வேலைக்கு சேர்கிறான். எதையும் பார்த்த உடன் புரிந்து கொள்ளும், கற்று கொள்ளும் திறமை சாலி சோட்டு ! இவன் வேலை பார்க்கும் கடைக்கு அருகிலேயே ஒரு பழைய அரண்மனை உள்ளது. இதில் உள்ள பணக்கார சிறுவன் சோட்டுவுடன் நண்பனாகிறான். பணக்கார சிறுவனின் தந்தை தங்கள் அந்தஸ்துக்கு நிகரானவர்களுடன் தான் பழக வேண்டும் என்று சொன்னதை மீறி சோட்டுவுடன் பழகுகிறான். தனது உடை, பொருட்களை சோட்டுவிற்கு தருகிறான்.

பள்ளி கூடம் செல்லா விட்டாலும் படிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறான் சோட்டு. தானாகவே புத்தகங்களை வைத்து வாசிக்கிறான்.

சோட்டு ஒரு நாள் டிவியில் அப்துல் கலாம் பேசுவதை கேட்டு மிக ஈர்க்கபடுகிறான். அவரை போல நானும் பெரிய ஆள் ஆவேன் என்று கூறி தன் பெயரை கலாம் என மாற்றி கொள்கிறான்.

பணக்கார சிறுவனின் வீட்டில் உள்ள வேலை ஆட்கள் சோட்டு மீது திருட்டு பட்டம் சுமத்தி அவனை விரட்டுகின்றனர். மனமுடைந்த சோட்டு தனியே தில்லிக்கு செல்கிறான். கலாமை சந்தித்து கடிதம் தரவும் பேசவும் எண்ணுகிறான்.

சோட்டு திருடன் இல்லை என்பதை அவன் நண்பன் நிரூபிக்கிறான். அனைவரும் டில்லி சென்று சோட்டுவை தேடி கண்டுபிடிக்கின்றனர். தன் மகன் பேச்சால் மனம் மாறிய பணக்கார சிறுவனின் தந்தை, சோட்டு தன் மகனுடன் சேர்ந்து பள்ளியில் படிக்கலாமென்றும், அவன் அம்மா தன் இல்லத்தில் வேலை பார்ப்பார் என்றும் கூறுகிறார். சோட்டு பள்ளிக்கு செல்வதுடன் படம் முடிகிறது.

தொண்ணூறு நிமிட படம் ! பாடல்கள் என்று பெரிதாய் இல்லை. குட்டி பாடல்கள் சில பின்னணியில் வருகின்றன. சோட்டுவாக நடித்தவன் தில்லியை சேர்ந்த ஒரு குடிசை வாழ் சிறுவன் ! ஹர்ஷ் மயார் என்கிற இந்த சிறுவன் மிக இயல்பாக நடித்துள்ளான். அவனது வெள்ளந்தியான சிரிப்பும், எதையும் பாசிடிவ் ஆக எடுத்து கொள்ளும் குணமும் மிகை இன்றி உள்ளது. ஆர்வத்துடன் முயன்றால் எதையும் கற்று கொள்ளலாம் என்பது இவன் பாத்திரம் வழியே சொல்லப்படுகிறது.

சோட்டுவின் கடை முதலாளியாக, அவன் உறவினராக வருபவர் கேரக்டர் மிக சுவாரஸ்யம். இவருக்கு ஒரு வெளி நாட்டு பெண் மீது ஒரு தலை காதல் ! அதற்காக தன் நடை, உடையை மாற்றி கொள்கிறார். அந்த காதல் தோல்வி அடைய அந்த கோபம் சோட்டு மீது திரும்புகிறது.

கடையிலிருக்கும் இன்னொரு வேலை ஆள் தான் படத்தில் சின்ன வில்லன். எப்போதும் சோட்டுவுடன் சண்டையிடுவதும், சோட்டுவின் புத்தகங்களை அடுப்பில் போட்டு எரிப்பதுமாக நம்பியார் வேலை செய்கிறார்.

பணக்கார சிறுவன் நம்ப முடியாத அளவு நல்லவனாக இருப்பது சற்று நெருடுகிறது. அழகாக இருப்பதால், அந்த பாத்திரத்துக்கு இயல்பாக பொருந்துகிறான்.

நிலா மதாப் பண்டா என்கிற இயக்குனர் படத்தை இயக்கி உள்ளார். நிறைய குறும் படங்களை இயக்கிய இவரின் முதல் திரைப்படம் இது. குழந்தைகள் படம் என்கிற விதத்திலும் பாசிடிவ் கருத்துகளை சொன்ன விதத்திலும் நிச்சயம் பாராட்டு பெறுகிறார்.

இந்த படம் இந்த ஆண்டு ஆகஸ்டில் இந்தியாவில் ரிலீஸ் ஆனது. பல உலக திரைப்பட விழாக்களில் திரை இடப்பட்டு வருகிறது. அப்துல் கலாமும் இந்த படம் பார்த்து தன் ஆசிகளை பட குழுவினருக்கு வழங்கினார் என்பது கூடுதல் தகவல்.

என் பன்னிரண்டு வயது மகளுடன் படத்தைப் பார்த்தேன். என்னை விட அவளுக்குப் படம் மிகப் பிடித்திருந்தது ! குழந்தைகளுக்கான இத்தகைய தரமான படங்கள் இன்னும் நிறைய வெளி வர வேண்டும் என்கிற எண்ணத்தைப் படம் தருகிறது !

***
டிசம்பர் 5, 2011  தேதியிட்ட உயிரோசை இதழில் வெளியானது

10 comments:

 1. Anonymous7:33:00 AM

  அண்ணே, காலை வணக்கம், இது போன்ற படங்கள் தமிழில் வருமா என்ற ஏக்கம் தான் மிஞ்சுகிறது. இதற்கு முந்தைய பதிவில் ஒரு செய்தி அனுப்பியிருந்தேன். இது வரை பதில் இல்லையே?

  ReplyDelete
 2. நல்லதொரு விமர்சனம். இத்தகையதொரு தரமான படங்கள் நிறைய வெளிவந்தால் நன்றாக இருக்கும்.

  வாய்ப்பு கிடைத்தால் பார்கிறோம்.

  ReplyDelete
 3. நல்லதொரு திரைப்படத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

  ஒரு சிறிய ஒற்றுமை. என்னுடைய இன்றைய பதிவு நம் ஜனாதிபதி மாளிகை பற்றியது.

  ReplyDelete
 4. நல்ல படத்தை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.

  ************

  //பணக்கார சிறுவன் நம்ப முடியாத அளவு நல்லவனாக இருப்பது சற்று நெருடுகிறது.//

  ???!!!

  ReplyDelete
 5. விமர்சனம் மிக அருமை.

  ReplyDelete
 6. விமர்சனம் அருமை.

  ReplyDelete
 7. சூப்ப‌ர் மோக‌ன். இப்ப‌ல்லாம் ந‌ல்ல‌ ப‌ட‌ங்க‌ளா தேர்ந்தெடுத்து பார்க்க‌றீங்க‌!

  ReplyDelete
 8. நல்ல ஒரு திரைப்படத்தை பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி நண்பா....!

  ReplyDelete
 9. நன்றி செந்தில். தங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி
  **
  நன்றி கோவை டு தில்லி மேடம்
  **
  நன்றி ஆதிமனிதன்
  **
  நன்றி அமைதி அப்பா

  ReplyDelete
 10. நன்றி ராம்வி
  **
  நன்றி ரிஷபன் சார்.
  **
  நன்றி ரகு. சில மொக்கை படங்களும் பாத்து கிட்டு தான் இருக்கேன் ரகு :))
  **
  நன்றி தமிழன் வீதி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...