Wednesday, April 18, 2012

வானவில் 84: ரஹானே -வல்லமை -பள்ளி குழந்தைகள்

ஐ.பி.எல் கார்னர் - ரஹானே !!

ஐ.பி. எல்.லில் ஆரம்ப ஊகங்களை பொய்யாக்கி இதுவரை எதிர்பார்க்காத அணிகள் நன்கு ஆடி வருகின்றன. குறிப்பாய் ஸ்டார் பிளேயர்கள் யாரும் இல்லாத ராஜஸ்தான் மிக அற்புதமாய் ஆடுகிறது. ஒவ்வொரு ஐ.பி. எல்லும் ஒரு புது ஸ்டாரை தரும். இம்முறை அது ரஹானேயாக இருக்க கூடும் ! என்ன ஒரு ஆட்டம் ! I am fully impressed !!

இந்திய அணியில் டிராவிட் ரிட்டயர்ட் ஆகி விட்டார். லக்ஷ்மன் மற்றும் சச்சின் விரைவில் ரிட்டயர் ஆக உள்ள நிலையில் இப்படி ஒரு புது வீரர் வருவது செம மகிழ்ச்சி. யூசுப் பதான், வல்தாட்டி போல ஐ.பி எல் ஸ்டாராக இருந்து fade அவுட் ஆகாமல், இவர் இந்தியாவுக்கு நிலைத்து ஆடவேண்டும்.

இந்திய அணியில் சேர்ந்து ரஹானே நன்கு ஆடுவார் என நிச்சயம் நம்புகிறேன் !
 
 பெற்றோர் இல்லாமல் பரிசு வாங்கும் குழந்தைகள் 

என் பெண்ணின் பள்ளியில் ஒரு விழா. வார நாளில் மதிய நேரம் வைத்தார்கள். அலுவலகத்துக்கு அரை நாள் லீவு போட்டு போக வேண்டியதாயிற்று. மொட்டை வெய்யிலில் ஷாமியானா கூட போடாமல் ஸ்போர்ட்ஸ் மற்றும் வருடாந்திர பேச்சு, கட்டுரை போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் தரப்பட்டது.

பரிசு வாங்கும் போது போட்டோ எடுக்க ஸ்டூடியோ ஆட்கள் வந்திருந்தனர். முப்பது ரூபாய் தந்து விட்டால், பசங்க சட்டையில் சிறு ரிப்பன் துண்டு குத்தி விடுறாங்க. அந்த ரிப்பன் குத்திய குழந்தை வந்தால் போட்டோ எடுக்குறாங்க.

பெற்றோருடன் வராமல் தனியே வந்த பள்ளி மாணவர்கள் இந்த முப்பது ரூபாய் இல்லாமல் போட்டோ எடுத்து கொள்ள வில்லை. இது பற்றி வருத்தமும் இயலாமையும் அவர்கள் முகத்தில் தெரிந்தது. தங்கள் குழந்தை பரிசு வாங்கும் போது பெற்றோரில் ஒருவர் கூட வந்து ஊக்குவிக்காதது வருத்தமாய் இருந்தது.

மேடையில் ஏறிய LKG, UKG குழந்தைகளை பார்த்தால் செம காமெடியாக இருந்தது. மேடை ஏறி போட்டோவிற்கு போஸ் கொடுக்க தெரியலை. ரொம்ப நேரம் காத்திருந்து பரிசு வாங்க மேடை ஏறியதால், ஏறியதுமே சில குழந்தைகள் அழ ஆரம்பித்தன. இறங்கிய பின் அம்மாவிடம் வந்து விட்டு "எங்கே சாக்லேட்? அதை குடு முதல்லே "என்று வாங்கிய குழந்தைகளை பார்த்து ரசித்து கொண்டிருந்தேன்....

ஹெல்த் பக்கம்

ஒரு நாளைக்கு குறைந்தது ஒண்ணரை லிட்டராவது தண்ணீர் குடிக்க வேண்டும். இது பல மருத்துவர்களும் நிறைய முறை சொன்னது. பலரும் அறிவோம், ஆனால் ஒரு நாளைக்கு அதிக பட்சம் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்? இதற்கு ஏதேனும் அளவு உள்ளதா?

ஆம் உள்ளது. ஒரு நாளைக்கு மூன்றரை லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிப்பது நல்லதில்லை என டாக்டர் விகடன் இதழில் படித்தேன் . அதிகம் தண்ணீர் குடித்தல் சிறுநீரகம் அதை வெளியேற்ற அதிகம் உழைத்து உழைத்து சோர்ந்து போக வாய்ப்புண்டு. எனவே மூன்றரை லிட்டர் அளவில் தண்ணீர் குடிப்பதே நல்லது. ( மிக அதிக வியர்வை வெளியேற்றம் இருக்குமானால், அதற்கு ஏற்றார் போல் குடிக்கும் தண்ணீர் அளவு சற்று கூடலாம்)

ரசித்த கவிதை


பூக்காரியே
இந்த பூக்களை விற்று
இதனை விட உன்னதமான
எதனை வாங்க போகிறாய்?

- (எழுதியவர் தெரியவில்லை)

அய்யாசாமி கார்னர்


Mrs. அய்யாசாமி கிச்சனில் அரக்க பறக்க வேலை செய்ய, அய்யாசாமி தன்னால் முடிந்த அளவு உதவுவார். அல்லது இடையில் புகுந்து டென்ஷன் ஏத்துவார். காய்கறிகள், மல்லி, கருவேப்பிலை இவற்றையெல்லாம் சமையல் முடிந்ததும் எடுத்து சென்று பிரிட்ஜ் உள்ளே வைப்பது அய்யாசாமி வேலை. ஒரு நாள் இப்படி தான் ஒரு கவரை பிரிட்ஜ் உள்ளே வைக்க எடுத்து சென்றார். வைக்கும் முன் குரல் கேட்டது " அது குப்பை பை ! பிரிட்ஜில் வச்சிடாதீங்க" நல்ல வேளை ! குப்பை பையை தூக்கி பிரிட்ஜ் உள்ளே வைத்திருந்தால், மாலை Mrs அய்யாசாமி வந்து பார்த்த பின் என்ன ஆகியிருக்கும் !
சென்னைக்கு வந்த ஜஸ்ட் புக்ஸ்


ஜஸ்ட் புக்ஸ் என்கிற நிறுவனம் பெங்களூர் உள்ளிட்ட பல நகரங்களில் கிளைகள் கொண்டது. நல்ல புத்தகங்களை வாடகைக்கு படிக்க, டோர் delivery செய்வதே இவர்கள் சிறப்பு. பக்காவான கார்பரேட் கம்பனி போல இருக்கிறது இவர்கள் இணையம் மற்றும் அதில் உள்ள விஷயங்கள். இப்போது இவர்கள் சென்னைக்கும் வந்து விட்டனர். ஜஸ்ட் புக்ஸ் இணைய தள முகவரி: http://justbooksclc.com/

சுஜாதா, தி.ஜா உள்ளிட்ட தமிழ் எழுத்தாளர் புத்தகங்களும் கிடைக்கின்றன. இவர்கள் வெப்சைட்டில் மேலேயே இருக்கும் Search பாக்ஸ் உள்ளே வேண்டிய நாவலாசிரியர் பெயர் டைப் அடித்தால் அவரின் புத்தகங்கள் என்னென்ன இருக்கிறது என தெரிகிறது.

இவர்கள் சேவையை ஏற்கனவே நீங்கள் பெற்றிருந்தால், ஜஸ்ட் புக்ஸ் எப்படி இருக்கும் என பின்னூட்டத்தில் சொல்க !


வல்லமையில் சட்ட கேள்வி பதில் 

வல்லமை என்கிற இணைய இதழில் தமிழ் புத்தாண்டில் இருந்து "சட்ட கேள்வி பதில்" துவக்கி உள்ளனர். சட்டம் குறித்த கேள்விகளுக்கு பதில் தருவது அடியேன் தான். இந்த லிங்கில் சென்று பாருங்கள். சட்டம் குறித்த சந்தேங்களை மெயிலிலோ (snehamohankumar@yahoo.co.in)பின்னூட்டத்திலோ கேட்கலாம். பதில்கள் முதலில் வல்லமையிலும் பின் இங்கும் பகிர படும் !

20 comments:

 1. பூக்காரி அந்தப் பூக்களை விற்ற காசில் சாப்பிட்டால்தானே மறுநாள் மறுபடியும் அந்தப் பூக்களைக் கொண்டு வர முடியும்?!!
  வல்லமை முயற்சிக்குப் பாராட்டுகள். ஏதாவது சந்தேகம் வந்தால் அவசியம் கேட்பேன்.
  ஜஸ்ட்புக்ஸ் பக்கம் சென்று பார்த்தேன். மேலும் விவரம் அறிந்தவர்கள் சொல்வதைக் கேட்க நானும் மிக ஆவலாய் இருக்கிறேன்.
  அளவாகத் தண்ணீர் குடிப்பது பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். மேலும் எங்கள் பதிவுகளில் சிறுநீர்க் கல் பதிவில் எழுதியும் இருக்கிறோம்.

  ReplyDelete
 2. சட்டக் கேள்வி-விளக்கம் பகுதிக்கு பாராட்டுக்கள். தற்போதைக்கு வந்த ஒரு கேள்வி,
  நீதிமன்றத்தில் ஒரு நபரின் சார்பாக வாதட குறைந்தபட்ச தகுதி என்ன? ஏதேனும் சிறப்பு விலக்கின் படி BL/ML பட்டம் பெறாதவர் வாதாட முடியுமா?

  ReplyDelete
 3. வல்லமையில் ஏற்றிருக்கும் பொறுப்பு நல்லதொரு சேவை. வாழ்த்துகள்!

  ReplyDelete
 4. ஜஸ்ட் புக்ஸ் நல்ல பகிர்வு. பெங்களூரில் பல இடங்களில் உள்ளது போலிருக்கிறதே. நேரில் சென்று பார்க்கிறோம். நன்றி.

  ReplyDelete
 5. வல்லமை பொறுப்பு -வாழ்த்துகள்

  ReplyDelete
 6. குழந்தைகள் பாவம்! பெற்றோர் அருகில் இல்லாமல் பரிசு வாங்கும் போது மனசு ஏங்கியிருக்கும்.
  எல்.கே.ஜி, யூ.கே.ஜி குழந்தைகள் மேடையில் நின்றதும் செய்யும் விஷமங்கள் ரசிக்க தக்கவை. நாங்கள் ரோஷ்ணியின் பள்ளியில் பார்த்திருக்கிறோம்.

  ஹெல்த் பக்கம் உபயோகமானது.

  கவிதை அருமை.

  அய்யாசாமி கார்னர்: குப்பையை ஃப்ரிட்ஜில்.....:))
  பாவம் மிஸஸ் அய்யாசாமி.

  ஜஸ்ட் புக்ஸ் தகவலுக்கு நன்றி.

  வல்லமையில் ஏற்றிருக்கும் பொறுப்புக்கு வாழ்த்துகள் சார்.

  ReplyDelete
 7. அருமையான பதிவு.
  வல்லமையில் பொறுப்பு ஏற்றிருப்பது மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. யூசுஃப் பதானின் அவுட் ஆஃப் ஃபார்ம்தான், இப்போதைக்கு கொல்கட்டாவின் மிகப்பெரிய லெட்டவுன்!

  //தங்கள் குழந்தை பரிசு வாங்கும் போது பெற்றோரில் ஒருவர் கூட வந்து ஊக்குவிக்காதது வருத்தமாய் இருந்தது//

  எவ்வளவு பத்திரிக்கைகள், எவ்வளவு சேனல்கள்....எல்லா ஊடகங்களும் இதைப் பற்றி நிறைய பேசுகின்றன. ஆனாலும் இன்னமும் குழந்தைகளின் சைக்காலஜியை பெற்றோர்கள் புரிந்துகொள்ளாமலிருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

  //ஒரு நாளைக்கு மூன்றரை லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிப்பது நல்லதில்லை என டாக்டர் விகடன் இதழில் படித்தேன் //

  எந்த புத்தகத்தில் படித்தேன் என்று எனக்கு சரியா நினைவில்லை மோகன். ஆனால் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 6 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று எழுதியிருந்தார்கள்!

  //சட்ட கேள்வி பதில்//

  பொது நல வழக்கு தொடர்வது எப்படி? வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வர எத்தனை நாட்கள் (மாதங்கள்/வருடங்கள்) ஆகும்?

  ReplyDelete
 9. ஸ்ரீராம்: கவிதையை வாசித்த உடன் ரசித்தாலும், பின் நீங்கள் சொன்ன அதே விஷயம் எனக்கு தோன்ற தான் செய்தது. பூக்களை பெருமை படுத்தும் விதமாய் சொன்ன அழகுணர்ச்சி கவிதை என்கிற அளவில் எடுத்து கொள்ள வேண்டியது தான் !

  ஜஸ்ட் புக்ஸ் பற்றி பெங்களூர் நண்பர்கள் தான் சொல்லணும்

  ReplyDelete
 10. நீச்சல் காரன்: தங்கள் கேள்விக்கு நன்றி நிச்சயம் வல்லமையில் முதலில் பதில் சொல்லி விட்டு பின் இங்கும் பகிர்கிறேன்

  ReplyDelete
 11. ராமலட்சுமி : நன்றி ஜஸ்ட் புக்ஸ் பெங்களூரில் தான் நிறைய உள்ளது. வேறு தகவல் தெரிந்தால் பின் பகிருங்கள்

  ReplyDelete
 12. ரிஷபன் சார்: நன்றி

  ReplyDelete
 13. கோவை2தில்லி மேடம் : அய்யாசாமியின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. பள்ளி பற்றி நீங்கள் சொன்னது சரியே

  ReplyDelete
 14. ரத்னவேல் ஐயா: நன்றி தங்களை போன்ற பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் வல்லமையில் தொடருவோம்

  ReplyDelete
 15. ரகு: நன்றி. உங்கள் கேள்விக்கு நிச்சயம் பதில் சொல்கிறேன்
  பள்ளி குழந்தைகள் விஷயம்: போட்டியில் பரிசு வாங்குவது சாதாரணம் அல்ல. நூற்றில் ஒரு குழந்தை தான் பரிசு வாங்கியது. அந்த நிகழ்வை படம் பிடித்து வைத்து கொள்வது அவர்களுக்கு எத்தனை முக்கியம். பிற குழந்தைகள் பணம் தந்து போட்டோ எடுக்க, வெறும் முப்பது ரூபாய் இல்லாமல் அவர்கள் கூனி குறுகுவது காண கஷ்டமாய் இருந்தது

  ReplyDelete
 16. I am a member of bangalore indira nagar branch.They said soon justbooks ll be opening many branches in chennai also.The best part is I can order the book in website and they deliver the book to my home and pickup book frm my home :)

  ReplyDelete
 17. மோகன்குமார்,

  //நீச்சல் காரன்: தங்கள் கேள்விக்கு நன்றி நிச்சயம் வல்லமையில் முதலில் பதில் சொல்லி விட்டு பின் இங்கும் பகிர்கிறேன்//

  காரியக்காரரா தான் இருக்கீங்க,இங்கே கேட்டக்கேள்விக்கு இங்கே சொன்னா என்னவாம்?

  ஆனாலும் நான் குட்டைய குழப்பாம விடப்போறதில்லை...

  ஒருவர் அவருக்கு அவரே வாதாடிக்கொள்ள சட்ட படிப்பு தேவை இல்லை, ஆனால் இன்னொருத்தருக்காக வாதாட சட்டப்படிப்பு தேவை அப்படினு கேள்வி.

  இப்போ ஏதோ சட்ட திருத்தம் கொண்டுவரப்போறதா பேச்சு , வழக்குறைஞர்/அறிஞர் இல்லாமல் யார் வேண்டுமானாலும் வாதாடிக்கலாம்னு , அதுக்கான சட்ட முன்வறைவு ஆலோசனைக்கே எல்லா வழக்கு அறிஞர்/உரைஞரும் எதிர்ப்பு காட்டியதாக கேள்வி.

  மேலும் சினிமாவில் வருவது போல எல்லாம் துப்பறிஞ்சு கேச விசாரிப்பதில்லை எல்லா செக்‌ஷணுக்கும் என்ன முன் உதாரண தீர்ப்பு இருக்குனு மேற்கோள் காட்டி இல்லை வழக்கு நடத்துறாங்க.

  இப்போ தீர்ப்புகள் எல்லாம் கணினி மயமாக ,இணையத்திலும் போட்டு வைக்குறாங்க, கூடிய சீக்கிரம் எல்லாருமே வாதாடலாம், சட்டப்படி அனுமதி கிடைத்தால்.
  ---------------
  //பெற்றோருடன் வராமல் தனியே வந்த பள்ளி மாணவர்கள் இந்த முப்பது ரூபாய் இல்லாமல் போட்டோ எடுத்து கொள்ள வில்லை. இது பற்றி வருத்தமும் இயலாமையும் அவர்கள் முகத்தில் தெரிந்தது. தங்கள் குழந்தை பரிசு வாங்கும் போது பெற்றோரில் ஒருவர் கூட வந்து ஊக்குவிக்காதது வருத்தமாய் இருந்தது.//

  இந்த இடத்தில அய்யா சாமி தனது நிழற்பட கருவியுடன் உதயமாகி புகைப்படங்களை எடுத்து குழந்தைகளின் வாட்டத்தை போக்கினார்னு வர வேண்டாமா?
  ------
  1.5 லிட்டர் இல்லை சராசரியாவே 3 லிட்டர் குடிக்கலாம், அதுவும் சென்னைப்போல வேர்த்து வடியும் ஊரில் இன்னும் கூடுதலாக குடிக்கலாம்.

  வாட்டர் தெரபினு எடுக்கிறவங்க இன்னும் நிறைய குடிக்கிறாங்க அட பச்ச தண்ணிய தான் சொன்னேன் :-))
  ------

  ReplyDelete
 18. விஷ்ணு பிரசாத்: முதல் வருகைக்கு நன்றி.

  உங்கள் பதில் எனக்கு இரு விதத்தில் மகிழ்ச்சி தந்தது முதலில் ஜஸ்ட் புக்ஸ் பற்றி நீங்கள் விசாரித்து சொன்னமைக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். அடுத்து இதுவரை இங்கு பின்னூட்டமிடாத நீங்கள் பெங்களூரில் இருந்து இந்த ப்ளாகை தொடர்ந்து வாசிக்கிறீர்கள் என்று உணர்வும் மகிழ்ச்சி தருகிறது

  ReplyDelete
 19. வவ்வால்

  ஆஹா, கலாய்க்கிறீங்களே !!

  சட்ட கேள்வி பதில் பகுதியை துவக்கியது வல்லமை தான். எனவே அங்கு முதலில் பதில் தர வேண்டும் என்பதே ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தை மீறலாமா? எனவே தான் அங்கு முதலில் பதில் சொல்வதாக சொன்னேன். சொல்ல போனால் பதில் தயாரானதும் தனி மெயிலில் அவருக்கு முதலிலேயே சொல்ல எண்ணியுள்ளேன்

  // இந்த இடத்தில அய்யா சாமி தனது நிழற்பட கருவியுடன் உதயமாகி புகைப்படங்களை எடுத்து குழந்தைகளின் வாட்டத்தை போக்கினார்னு வர வேண்டாமா?//

  ஹா ஹா ; அய்யாசாமி பொண்ணும் பரிசு வாங்கினா. ஆபிசில் இருந்து நேரே போனதால் அவர் காமிரா கொண்டு போகலை. வெளி காமிரா ஆளிடம் பணம் தந்து தான் படம் எடுக்க வேண்டியதா போச்சு

  //1.5 லிட்டர் இல்லை சராசரியாவே 3 லிட்டர் குடிக்கலாம், அதுவும் சென்னைப்போல வேர்த்து வடியும் ஊரில் இன்னும் கூடுதலாக குடிக்கலாம்.//

  சரிதான் ! சிலர் 1.5 லிட்டர் கூட குடிப்பதில்லை. அதனால் தான் குறைந்தது இந்த அளவாவது குடியுங்க என சொல்வது அவசியமாகிறது .

  விரிவான கமண்டுக்கு நன்றி

  ReplyDelete
 20. புதிய பொறுப்புக்கு வாழ்த்துகள் :-))

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...