Thursday, May 10, 2012

சொத்தை ஏமாற்றும் அண்ணன்- சட்ட தீர்வு என்ன?

கேள்வி : ரவி, செங்கல்பட்டு

எனது தந்தை தற்போது உயிரோடு இல்லை. இறக்கும் முன் அவரது சொத்துக்கள் அனைத்தும் எனது அண்ணனுக்கும் எனக்கும் சரி பாதியாக சேரவேண்டும் என உயில் எழுதி வைத்து விட்டார். ஆனால் எனது அண்ணன் சொத்துக்கான அனைத்து பத்திரங்கள் மற்றும் லீகல்  ஹேர்  சர்டிபிகேட் உட்பட அனைத்தையும் தான் வைத்து கொண்டு, எனக்கு அவற்றின் நகலை கூட தர மறுக்கிறார். நான் என் தந்தையின் லீகல்  ஹேர் சர்டிபிகேட் இன்னொரு காப்பி வாங்க முடியுமா? எனது அண்ணன் வெளி நாட்டில் வேலை செய்கிறார். தற்போது இந்தியா வந்துள்ளார். சொத்தில் எனக்கும் எல்லா உரிமையும் இருந்தும், எனக்கு சரி பாதி சொத்தை தர மறுக்கும் அண்ணனிடம் எப்படி சொத்தை கேட்டு வாங்குவது? இந்த விஷயத்தில் என்னிடம் எந்த கோப்புகளும் இல்லாமல் என்னால் வழக்கு தொடர முடியுமா?

பதில்:

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். “ஐந்து வயது வரை அண்ணன்-தம்பி; பத்து வயதில் பங்காளி ” என்று. எத்தனை அண்ணன் – தம்பிகளிடையே பங்காளி சண்டை வந்து சொத்துக்காக நீதி மன்றம் வருகிறார்கள் என்பது வழக்கறிஞர்களுக்கும் நீதிமன்றத்தில் பணி புரிவோருக்கும் தான் தெரியும்.

உங்கள் விஷயத்தில் உங்களுக்கு எல்லா உரிமைகள் இருந்தும், அண்ணன் உங்களுக்கு சொத்தை தர மறுக்கிறார். தவறு முழுதும் அவர் மீது தான். இவ்விஷயத்தில் நீங்கள் சொத்தை பிரித்துத் தருமாறு உங்கள் அண்ணன் மீது ” பார்டிஷன் சூட் ” (Partition Suit) போட வேண்டும். இந்த வழக்கு தொடர, சொத்து சம்பந்தமான தாக்கீதுகள் கூட தேவையில்லை.

உங்கள் பெயர், நீங்கள் வசிக்கும் முகவரி இவை இரண்டுக்குமான அடையாளங்கள் ( ரேஷன் கார்ட் போன்ற போட்டோ ஐடன்டிடி கார்ட் மற்றும் வீட்டு விலாசம் காட்டும் ஒரு தாக்கீது ) இவை இருந்தாலே போதும். உங்கள் அண்ணன் எல்லா முக்கிய தாக்கீதுகளையும் தன் வசம் வைத்துக் கொண்டு இருப்பதால் உங்களால் அவற்றின் நகலை கூட சமர்ப்பிக்க முடியவில்லை என வழக்கில் சொல்லலாம். பிரச்சனை இருக்காது.

உங்கள் சொத்து எங்கு இருக்கிறதோ அந்த எல்லைக்குட்பட்ட சிவில் நீதிமன்றத்தில் (சொத்தின் மதிப்பை பொறுத்து முன்சீப் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்) வழக்கு தொடரவேண்டும்.

அண்ணன் மீது வழக்கு தொடர யோசனையாக இருந்தால் இருவருக்கும் பொதுவான பெரியவர்கள் மூலமாக பேசிப் பாருங்கள். அதிலும் அவர் சரி வரவில்லையெனில் வழக்கு தொடர்வதைத் தவிர வேறு வழி இல்லை.

அவர் வெளிநாட்டில் உள்ளார் என்கிறீர்கள். இதனை நீதிமன்றத்தில் கூறி அவர் வெளிநாடு செல்வதற்குள் இடைக்கால உத்தரவு ( Interim Order ) வேண்டும் என கேட்டு வாங்கலாம். இப்படி வழக்கு இருக்கும் போது , வெளிநாடு செல்வது பிரச்சனையாகும் என்பதால் உங்கள் அண்ணன் இறங்கி வர வாய்ப்பிருக்கிறது

ஒரு விஷயம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களை ஒருவர் கஷ்டப்படுத்துகிறார். ” நீங்கள் செய்வது என்னை கஷ்டப்படுத்துகிறது” என நீங்கள் எதோ ஒரு விதத்தில் அவருக்கு தெரிவிக்க வேண்டும். அப்போது தான் அவருக்கு உரைக்கும். மாறாக நீங்கள் பேசாமல் இருந்தால் “உங்கள் உரிமைகளை மறந்து நீங்கள் தூங்கி விட்டீர்கள் “You have slept over your rights” என்று நீதிமன்றம் பின்னாளில் உங்கள் வழக்கை எடுத்துக் கொள்ளாமல் போகவும் வாய்ப்புண்டு.

மீண்டும் சொல்கிறேன்: இருவருக்கும் பொதுவான பெரியவர்கள் மூலம் பேசிப் பாருங்கள். அதில் அவர் வழிக்கு வராவிடில் விரைவில் வழக்கு பதிவு செய்யுங்கள் !
************
கேள்வி: சரண்

எனது தாத்தாவின் விவசாய நிலத்திற்கான கிரய ஆவணம் 1981ம் ஆண்டில் பதிவுபெற்ற ஆவணமாக உள்ளது. அவர் 1987ல் காலமாகிவிட்டார்.எனது தாயார் மட்டுமே ஒரே வாரிசு. இந்நிலையில் 1985ம் ஆண்டு UDR என்னும் நில உடமை பதிவு மேம்பாட்டு திட்டம் செயல்பாட்டில் எனது தாத்தாவின் பெயரில் பட்டா வழங்காமல் அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒரு நபருக்கு UDR பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. அவர் அதை வைத்து பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற வருவாய் ஆவணங்களை ஏற்படுத்திக்கொண்டு, அவருக்கு இந்த பட்டா மூலம் அனுபவப்பாத்தியமும் கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் தவறான முறையில் அளித்து PERMANENT INJUNCTION ORDER ஐ பெற்றிருக்கிறார்.

உண்மையில் UDR பட்டா தவறான முறையில் வழங்கப்பட்டதாகும். இப்போது நீதிமன்றமும் அவர்களுக்கு INJUNCTION ORDER ஐ கொடுத்துவிட்டது. தற்போது இந்த வழக்கு எங்களுக்கு எதிராக முடிந்து 11 வருடங்களாகியும் எங்களது வழக்கறிஞர் 2வது மேல்முறையீட்டினை தாக்கல் செய்யாமல் ஏமாற்றியுள்ளார். எனது தகப்பனாரும் தாயும் படிப்பறிவில்லாதவர்கள். UDRக்கு முன்பு வரை இந்நிலம் எனது தாத்தா கிரயம் பெற்ற நபரிடம் தான் இருந்துள்ளது.

இவற்றிற்கான தீர்வு தான் என்ன? தயவுசெய்து எனது தாத்தாவின் விவசாய நிலத்தை மீட்டெடுக்க உதவிசெய்யுங்கள்…. நான் மிகவும் சாதாரணமான நடுத்தர வர்க்கம். எனக்கு நீதி கிடைக்க வேண்டும்.

பதில்:

” UDR என்கிற ஸ்கீம் தற்போது இல்லை. கிரைய பத்திரத்தை கணக்கில் எடுக்காமல் UDR ஐ வைத்து பட்டா கொடுத்தது தவறு. உங்கள் பக்கம் நியாயம் உள்ளது எனில் இந்த சொத்தை உங்கள் தாயார் திரும்ப பெறலாம்.

ஏற்கனவே ஒரு வழக்கு நடந்ததாக சொல்கிறீர்கள். அதன் பேப்பர்களையும் பார்க்க வேண்டும்
நீங்கள் இது பற்றி சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் ஒரு மனு தரலாம். அதில் உங்கள் எதிராளிக்கு தவறான முறையில் பட்டா தரப்பட்டுள்ளது. உண்மையில் அதற்கு சொந்தக்காரர் உங்கள் தாயார்தான் என்றும், அந்தப் பட்டாவை நீக்கக் கோரியும் எழுத வேண்டும். ஒரு வேளை தாசில்தார் உங்களுக்கு எதிராகச் சொன்னாலும் கூட, அதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரலாம். அப்போது கோர்ட் யாருடைய Title documents சரியாக உள்ளதோ அவருக்குத் தான் சொத்தின் மீது உரிமை உண்டு என்று தீர்ப்பு கூறும்.

இன்னொரு வழி சொத்து உள்ள அதே ஏரியாவில் இருக்கும் மாவட்ட நீதிமன்றத்தில் உங்கள் எதிராளிக்கு வழங்கப்பட்ட பட்டா சரியானதல்ல ( Null and void) என வழக்கு தொடரலாம்".
*********
வல்லமை ஏப்ரல் 30 தேதியிட்ட இதழில் வெளியானது

*********
நண்பர்களே சட்டம் குறித்த உங்கள் கேள்விகளை பின்னூட்டத்திலோ, snehamohankumar@yahoo.co.in என்கிற மெயிலுக்கோ எழுதுங்கள்.  

18 comments:

 1. தலைப்பை மட்டுமே படித்துவ்டன் மனதில் தோன்றியவை..

  ஒரு மனிதன் பிறந்தபின்.. அவனிற்கு தேவையான கல்வியையோ.. ஒரு தொழிலையோ (நேர்மையான முறையில்) செய்து தருவதுடன் ஒரு பெற்றோரின் கடமை முடிந்து விடுகிறது. அதன் பின் தனது சொந்த உழைப்பால் நேர்மையாய நடந்து கொண்டு தனக்குத் தேவையானவற்றை அவனே பெறுதல் வேண்டும். ஒவ்வொருவருக்கும் கடமை என்பது இருக்கும்... அதனை செய்து அதற்கேற்ற பலனை பெறுவதுதான் ந்ஞாயம்.

  எதற்கு ஒருவர் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கிறார் என்பதே எனக்கு புதிராக உள்ளது. தனது உழைப்பை நம்பாமல் அந்த சொத்துக்களையே குறியாக, ஏன் ஒருவர் மனதில் எண்ணம் வர வேண்டும் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

  அளவிற்கு மீறிய ஆசை.... -- இதுதான் காரணமாக இருக்கக் கூடும்.

  ஒருவேளை சகோதர்களில் ஒருவர் நல்ல பொருளாதார நிலைமையிலும் மற்றவர் ஏதோ காரணத்தினால் பொருளின்றி கஷ்டப் படுவாராயின், அவருக்கு தந்தையில் சொத்தில் சற்று கூடுதலாக தருவது ஏற்றுக் கொள்ளப் படலாம்.

  இவ்வுலகளில் இருக்கும் வரை 'பொருள்/பணம்' தேவைதான்.. ஆனாலும் அதற்கும் ஒரு வரைமுறை / எல்லை இருக்க வேண்டும். இல்லையென்றால் கோடானுகோடி வைரமும், பொன்னும் பொருளும் இருந்தாலும் மனதில் 'மகிழ்ச்சி' இருக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை.

  ReplyDelete
 2. பதிவைப் படித்துவிட்டு எழுதுவது
  'விழிப்புணர்வு ஏற்படுத்தும்' தங்கள் பதிவிற்கு நன்றி..
  தொடரட்டும் தங்கள் சேவை.. வாழ்த்துக்கள் தங்கள் பணிக்கு..

  ReplyDelete
 3. உபயோகமான பதிவு மிக்க நன்றி...!!!

  ReplyDelete
 4. பார்வையாளர்களின் பிரச்சினைகளுக்கு விளக்கமான சட்டத்தீர்வுகளைத் தந்து கொண்டிருக்கும் விதம் அருமை! இனிய நன்றியும் கூட!!

  ReplyDelete
 5. மிகவும் உபயோகமான தகவல்கள். தொடர்ந்து பதில் எழுதுங்க,மோகன்குமார்.

  எங்க யாருக்காவது ஏதாவது சட்ட தீர்வு வேண்டும் என்றால் உங்களுக்கு தெரிவித்து பயன் பெறுகிறோம். நன்றி.

  ReplyDelete
 6. //"சொத்தை ஏமாற்றும் அண்ணன்- சட்ட தீர்வு என்ன?"//

  மிகவும் சங்கடமான விஷயம்.

  //இருவருக்கும் பொதுவான பெரியவர்கள் மூலம் பேசிப் பாருங்கள். அதில் அவர் வழிக்கு வராவிடில் விரைவில் வழக்கு பதிவு செய்யுங்கள்!//

  மிக நல்ல ஆலோசனை!

  ***************
  அண்ணன் தம்பி குறித்த எனது பதிவை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

  எப்படி உள்ளது அண்ணன் தம்பி உறவு?

  எந்தக் காலத்துக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 7. அக்கறையுடனான பதில்கள். நல்ல பணி. தொடருங்கள்.

  ReplyDelete
 8. மாதவா: சொத்து விஷயத்தில் மட்டும் பலரும் தன் உரிமையில் துளி கூட விட்டு தர மாட்டார்கள். கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 9. நன்றி மனோ

  ReplyDelete
 10. மனோ சாமிநாதன் மேடம்: நன்றி மகிழ்ச்சி

  ReplyDelete
 11. நன்றி ராம்வி. கேளுங்கள்

  ReplyDelete
 12. அமைதி அப்பா: அண்ணன் தம்பி குறித்த உங்கள் பதிவை ஏற்கனவே வாசித்துள்ளேன் நன்றி

  ReplyDelete
 13. ராமலட்சுமி: நன்றி

  ReplyDelete
 14. hello

  it is may fate .my elder brother do the same. i am younger. two weeks ago he told that he will kill me with some persons

  ReplyDelete
 15. nalla thagaval for me

  ReplyDelete
 16. Yennoda brother perula than land oda power of attorney irukku. Avanum yen thangachiyum sernthu yenakku eduvum kudukama land ah perichu sotha eduthukitangana naan yenna panradhu.

  ReplyDelete
 17. ஒரு வீ ட் டு மனை என் கணவர் பெயரில் உள்ளது பட்டா எல்லாமே உள்ளது இவர்
  பெயரில் ஆனால் என் கணவருக்கு
  பெரியப்பா பசங்க அதில் வீடு கட்டி உள்ளனர் அவர்கள் என்னுடைய என்று சொல்கின்றனர்
  வீடு கட்டி வாழ்வதால் மனை அவர்களுக்கு சொந்தம் ஆகுமா எனக்கு பதில் சொல்லுங்க sir please sir

  ReplyDelete
 18. Sir end kanavar peyaril oru vittu manai ullathu patta en kanavar peyarilthan ullathu anal en kanavarudaiya periyappa pasanga antha manaiyil vidu katti erukkirarkal avarkal ennudaiyathu endru kurukirarkal avarkal vidu katti vazhvathal manai avarkalukku sontham akiduma please reply me sir

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...