Monday, June 18, 2012

எழுத்தாளர் சுஜாதாவின் நில் கவனி தாக்கு

நில் கவனி தாக்கு தின மணி கதிரில் தொடராக வெளி வந்த ஜேம்ஸ் பான்ட் டைப் கதை. எழுபதுகளின் துவக்கத்தில் எழுதப்பட்ட இக்கதை இன்றைய சூழலுக்கும் பெரிதும் பொருந்துவது ஆச்சரியம் !

கதை முழுதும் இரண்டே நாளில் நடக்கிறது. அதனால் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. சிட்டாய் பறக்கின்றன பக்கங்கள். ஒரு மணி நேரத்தில் முழுதும் வாசித்து விடலாம்.

கதை

ஹீரோ விமான நிலையத்தில் விஞ்ஞானி ஒருவரை  வரவேற்று அழைத்து வர போகிறான். மத்திய அரசில் வேலை செய்யும் அவனது பாஸ் (நடேசன்) அவனை அனுப்பி உள்ளார். அழைத்து வரும் போது விஞ்ஞானி கடத்தபடுகிறார். "அவரை எப்படியும் 24 மணி நேரத்தில் தேடி கண்டு பிடி; இல்லா விடில் நம் இருவருக்கும் வேலை போய் விடும்" என்கிறார் பாஸ்.

ஹீரோ மிக சிரமப்பட்டு 24 மணி நேரத்தில் அந்த விஞ்ஞானியை மீட்கிறார். ஆனால் தனது தொலை பேசி எண்ணே தன் அலுவலகத்தில் யாருக்கும் தெரியாதே; நம் அலுவலகத்தில் உள்ள கருப்பு ஆடு யார் என கண்டு பிடிக்க முயல்கிறார். இந்த கேள்விக்கு அவர் விடை தேடும் போது அவரது பாஸ் நடேசன் தான் வெளி நாட்டு ஆட்களுடன் கூட்டு சேர்ந்து இப்படி செய்துள்ளார் என தெரிய வருகிறது. பாஸ் கைது செய்ய படுகிறார். ஹீரோ அந்த நிறுவனத்தில் தலைவன் ஆகிறார். ஆனால் நடேசன் காவலிலிருந்து தப்பி வெளி நாடு ஓடி விடுகிறார். அவர் சென்ற மறு நாள் ஹீரோவுக்கு நடேசனிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அந்த கடிதத்தில் உள்ள விஷயங்கள் ஹீரோவுக்கு மட்டுமல்ல நமக்கும் செம ஆச்சரியம் தருகிறது. அதில் என்ன இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முயலுங்கள். சற்று நேரத்தில் சொல்கிறேன்.

நில் கவனி தாக்கு என்கிற பெயர் இந்த கதைக்கு பல விதங்களிலும் பொருந்தும். சினிமாவில் உள்ளது போல் நிறையவே சண்டை காட்சிகள் உண்டு ! கதையை சுஜாதா பிற்காலத்தில் சினிமாவிற்கு கொடுக்கலாம் என்கிற எண்ணத்தில் எழுதினாரோ என்னவோ !

ஒரு பெண்ணை பற்றி விவரிக்கும் போது இப்படி விவரிக்கறார்.

"எக்ஸ்கியூஸ் மீ என்று குரல். "அந்த எக்ஸ்கியூஸ் மீ " எனக்கு "ஆரஞ்ச் ஜூஸ் மீ" போல இனிமையாக ஒலித்தது. அவள் அழகாக இருந்தால் என்று சொன்னால் அது இந்த வருடத்தின் மிக பெரும் அண்டர் ஸ்டேட்மன்ட். பிரம்மா அல்லது அவள் பெற்றோர் தடுக்கி விழுந்த மகத்தான கலவை".

டிஸ்கோதேவில் உள்ள சூழலும் பெண்ணின் நடனம் மற்றும் அவள் ஆடைகளை களைவதை தனது பாணியில் சொல்லி செல்லும் போது அந்த இருட்டான அறைக்குள் நாமே அமர்ந்திருக்கும் உணர்வு.

விமான நிலையம் சுஜாதா வரிகளில் :

"விமான நிலையம் ஒரு வினோதமான இடம். பணக்காரர்கள் பிரியும்,  சேரும் இடம். பணக்காரர்கள் அழுவதை இங்கே தான் பார்க்கலாம். அதோ பாருங்கள் அந்த இளைஞன் நெற்றியில் குங்குமம் அணிந்து கொண்டு புது சூட்டில் பாரின் போகிறான். அவன் அவசரமாக மணந்த அந்த பெண் ஜரிகை புடவையின் நிழலில் பவுடர் கலையாமல் அழுகிறாள்".

ரேணு என்கிற பெண் திடீரென வில்லன் கூட்டத்திலிருந்து கட்சி மாறி எப்படி ஹீரோவுக்கு உதவுகிறாள் என்பதற்கு எந்த லாஜிக்கும் இல்லை. (அவள் அப்படி உதவா விடில் கதையை நகர்த்துவது சிரமம் !)  இந்த ரேணுவுக்கும் ஹீரோவுக்கும் இடையே கசமுசா காட்சியும் கடைசியில் ரிஜிஸ்தர் ஆபிசில் மாலை மாற்றி கொண்டனர் என்கிற அளவுக்கு சினிமா நாயகன் -நாயகி போல் எழுதியிருக்கிறார் சுஜாதா. ஒரு காட்சியில் கடத்தப்பட்ட ஆள் இவர்கள் இருவரையும் பார்த்து சொல்கிறார் " ஹீரோ -ஹீரோயின் ஜோடி சேர்ந்தாச்சா? என்னை மீட்டுட்டிங்க; அடுத்து என்ன உங்களுக்குள் டூயட்டா ? "

இந்த கதையில் ஹீரோ ஒரு சி. ஐ. டி மாதிரி என்பதால் தன் பெயரையே சொல்ல வில்லை. முழுக்க தன்னிலையில் ஹீரோ கதை சொல்வது போல் இருந்தாலும் மற்றவர்கள் கூட ஹீரோவை பெயர் சொல்லி அழைக்க வில்லை. நமக்கும் அது உறுத்தவில்லை.

கடைசி அத்தியாயத்துக்கு முன் வரை ஜேம்ஸ் பான்ட் படம் பார்க்கிற மாதிரியே இருந்தாலும் (புத்தகத்தின் அட்டையில் கூட ஜேம்ஸ் பான்ட் துப்பாக்கி தான் போட்டுள்ளனர்) , கடைசி அத்தியாயத்தில் உள்ள ஆச்சரியம் நம்பவே முடியாதது. இந்த அத்தியாயத்தில் கதை ஜேம்ஸ் பான்ட் தளத்திலிருந்து சுஜாதா ஸ்டைலுக்கு வந்து விடுகிறது. கடைசி அத்தியாயம் போகும் முன் சுஜாதா "இதன் கடைசி பகுதியை நீங்கள் ஊகிக்க முடிந்தால் நீங்கள் நிஜமாகவே கில்லாடி" என சவாலாகவே சொல்கிறார்!

நானும் கூட நிறுத்தி விட்டு சில பல விதமாய் யோசித்தேன். ஆனால் அவர் சொன்ன முடிவு செம வித்யாசம் !

அந்த இறுதி கடிதம் சொல்வது இது தான்: இந்திய அணுசக்தி ரகசியங்களை வெளிநாடு (சீனா) தெரிந்து கொள்ள முயல, அதற்கு நடேசன் உதவியை நாடுகின்றனர். அரசின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டு ஒரு ஸ்பை போல அவர்களுடன் செல்கிறார் நடேசன்  "அவர்கள் உடன் சென்று அவர்கள் ரகசியத்தை கண்டு பிடிப்பேன். அல்லது அங்கேயே இறந்து விடுவேன்" என்று நடேசன் கடிதமும், கதையும் முடிகிறது

வில்லன் போன்ற நடேசன் கேரக்டரை ஹீரோவை விட பெரிய சைசில் நல்லவராக்கி முடிப்பது வெரி இன்டரெஸ்டிங்.

சுஜாதா இந்த கதையின் பின்புலமாய் எடுத்து கொண்ட இந்திய -சீன கோல்ட் வார் இன்றும் கூட இருக்க தானே செய்கிறது !

துப்பறியும் கதை அல்லது சுஜாதா இவ்விரண்டில் எந்த ஒன்று உங்களுக்கு பிடிக்கும் என்றாலும் நீங்கள் நில் கவனி தாக்கு நிச்சயம் படிக்கலாம் !

புத்தக பெயர்: " நில் கவனி தாக்கு "
ஆசிரியர் : சுஜாதா
பதிப்பகம் : கிழக்கு
பக்கங்கள் : 126
விலை Rs. 75

அதீதம் ஜூன 2, 2012 இதழில் வெளியானது ! 

17 comments:

 1. வில்லன் போன்ற நடேசன் கேரக்டரை ஹீரோவை விட பெரிய சைசில் நல்லவராக்கி முடிப்பது வெரி இன்டரெஸ்டிங்.

  இன்டரெஸ்டிங் விமர்சனம்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. சுஜாதா என்றைக்குமே ஒரு பல்கலைகழகம் என்பதை மறுப்பதற்கு இல்லை இல்லையா...!!!

  ReplyDelete
 3. நல்ல விமர்சனம் மோகன்... சுஜாதாவின் புத்தகங்கள் ஒவ்வொன்றாய் உங்கள் விமர்சனங்கள் மூலம் நினைவுக்குக் கொண்டு வருகிறேன்.... :)

  ReplyDelete
 4. சுஜாதாவின் கதைகளில் விறுவிறுப்புக்கு
  பஞ்சம் ஏது? கதையைப் படிக்கத் தூண்டும் பதிவு.இந்தக் கதையை படித்ததில்லை நிச்சயம் படித்ஹு விடுவேன்.

  ReplyDelete
 5. Anonymous12:14:00 AM

  அன்புள்ள மோகன் குமார்,

  நல்ல விமர்சனம். நீங்கள் சஸ்பென்சை சொல்லாமல் இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. இது உங்கள் சினிமா விமர்சனங்களுக்கும் பொருந்தும்... சமீபத்திய உதாரணம் கஹானி விமர்சனம்...

  ReplyDelete
 6. நல்ல விமர்சனம்.!

  ReplyDelete
 7. //ரேணு என்கிற பெண் திடீரென வில்லன் கூட்டத்திலிருந்து கட்சி மாறி எப்படி ஹீரோவுக்கு உதவுகிறாள் என்பதற்கு எந்த லாஜிக்கும் இல்லை.//

  இருக்குன்னு நினைக்கிறேன். வில்லன் கூட்டத்திலேயே அவளை கொலை பண்ண தயக்கம் காட்டமாட்டார்கள். அதன் பின்புதான் அவள் மனம் மாறும்....என்று நினைக்கிறேன். வாசிச்சு ரொம்ப நாளாச்சு. ஞாபகம் இல்லை :(


  கதையின் முடிவை சொல்லாமல் இருந்திருக்கலாம் மோகன். முதல் முறை வாசிப்பவர்களுக்கு செம த்ரில்லிங்காக இருக்கும்.

  ReplyDelete
 8. நன்றி திரு மோகன் குமார்.
  இந்த கதை குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. படித்திருக்கிறேன்.
  கதாநாயகனின் பெயர் எந்த இடத்திலும் வராது.
  அதில் பிடித்த வரிகள்.
  ஏன் இப்படி? நீங்கள் படித்த புத்தகங்கள் நல்ல விஷயம் சொல்லவில்லையா?
  அருமை. வழமை போல் எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. நன்றி ராஜ ராஜேஸ்வரி

  ReplyDelete
 10. ஆம் வெங்கட் நன்றி

  ReplyDelete
 11. பால ஹனுமான் & ரகு: விமர்சனம் படிப்போர் புத்தகத்தை படிக்கும் சதவீதம் மிக குறைவு. வெகு நாள் கழித்து படிக்கும் போது நாம் எழுதியதெல்லாம் நினைவில் இருப்பதில்லை. நானும் கூட இந்த புத்தகம் பல ஆண்டுகள் முன் படிதேன். ஆனால் இப்போது படிக்கும் போது அந்த சஸ்பென்ஸ் நினைவில் இல்லை

  விமர்சனம் மட்டும் படிப்போர் சஸ்பென்ஸ் ஆக நாம் விட்டு விட்டால், அதை சொல்ல்யிருக்கலாமே முழு கதை அப்போ தானே தெரியும் என்றும் பின்னூட்டம் இடுகிறார்கள் அதனால் தான் சொன்னேன்

  ReplyDelete
 12. நன்றி T.N. முரளி

  ReplyDelete
 13. நன்றி ரத்னவேல் ஐயா மகிழ்ச்சி

  ReplyDelete
 14. வரலாற்று சுவடுகள் நன்றி நண்பரே

  ReplyDelete
 15. படித்திருக்கிறேன். குருதிப்புனல் கொஞ்சம் இதன் பாதிப்பில் இருக்கும்!(end part)

  ReplyDelete
 16. Anonymous9:19:00 PM

  நல்ல விமர்சனம் மோகன்...

  கதையின் முடிவை...HA HA...

  இத்தனை வருடம் சுஜாதாவை படிக்காதவர்கள் இனி படித்து ஒன்னும் ஆகப்போவதில்லை...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...