Thursday, August 23, 2012

சலவை தொழிலாளி-( Iron-செய்பவர்) வாழ்க்கை அறியாத தகவல்கள்

லவை தொழிலாளிகள். ..நம் பாஷையில் சொல்ல வேண்டுமெனில் " அயர்ன் காரர்". இவர்கள் நம் வாழ்வை நிச்சயம் தொட்டு செல்கிறார்கள். எங்கள் ஊரான நீடாமங்கலம் துவங்கி, சென்னை வரை தெருவிற்கு ஒரு அயர்ன் கடை இருப்பதை பார்த்து வருகிறேன்.

இவர்கள் வாழ்வை பற்றி அறிய எங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் ஒரு பெரியவரை அணுகினேன். நான் ரெகுலராக துணி தருகிற கடை இல்லை இது. இருந்தாலும் மனம் விட்டு பேசினார். இனி அவர் வார்த்தைகளில்.....
" எங்க தொழில் ஒரு குல தொழில். வண்ணான் கம்மியூனிட்டி நாங்க. ஆரம்பத்தில் நான் சொந்த ஊரான மதுரையில் ஒரு துணி கம்பெனியில் வேலை பார்த்தேன். அது மூடின பிறகு வேற வேலை இல்லாம சென்னைக்கு வந்தேன். அப்பவே கல்யாணம் ஆகி மனைவியும் ஒரு குழந்தையும் இருந்தது. அவங்களை விட்டுட்டு நான் மட்டும் இங்கே வந்தேன்.


சென்னை வந்தவுடனே முதல்லே ஆந்திரா கிளப்பில் சலவை வேலை பார்த்தேன். அங்கே வந்து தங்குற ஆட்கள் துணி, பெட்ஷீட் இதெல்லாம் துவைச்சு சலவை பண்ணனும். ஒரு நாளைக்கு எண்பது ரூபா சம்பளம்  அப்புறம்  மனைவியை ஊரில் இருந்து கூட்டி வந்து மடிப்பாக்கத்தில் குடி வைத்தேன். அவரை வைத்து ஒரு கடை போட்டு, அண்ணன் பையனை வைத்து துணி அயன் செய்ய வைத்தேன். கொஞ்ச நாளில் வியாபாரம் நன்கு ஆனதும் நான் ஆந்திரா கிளப் வேலையை விட்டு விட்டு இதே கடைக்கு வந்துட்டேன்

எங்க குடும்பத்தில் எட்டு பேர் அண்ணன்-தம்பி. அஞ்சு பேர் சென்னையில் கடை வச்சிருக்கோம். மீதி மூணு பேர் ஊரில் இதே வேலை செய்யுறாங்க. எங்க மக்கள் படிச்சு வேற வேலைக்கும் போயிருக்காங்க. ஆனா அது ரொம்ப கம்மி தான். எனக்கு ஒரே பையன். அவன் டிகிரி படிச்சிட்டு போலிஸ் வேலைக்கு போகணும்னு முயற்சி பண்றான். நானும் அவனுக்கு எப்படியாவது ஒரு நல்ல வேலை வாங்கி குடுக்கணும்னு தான் அல்லாடுறேன் " மகனை பற்றி பேசும்போது சிந்தனையில் மூழ்குகிறார்

"உங்க மக்கள் தவிர வேறு யாரும் இந்த தொழில் செய்வாங்களா?"

"சில பேர் பெரிய அளவில் கடை போட்டு செய்யுறாங்க. அவங்க கூட முதல் போட்டு கடையை தான் பாத்துப்பாங்க. வேலை செய்ய எங்க ஆளுங்க தான் இருப்பாங்க.

இந்த தொழில் குறிப்பிட்ட வயசு வரைக்கும் தான் செய்ய முடியும். 45 வயசுக்கு மேலே இந்த தொழில் செய்ய முடியாது இப்பவே எனக்கு கையில் உள்ள எலும்பு எல்லாம் (கையை திருப்பி பின்பக்கத்தை காட்டுகிறார்) தேஞ்சு போச்சு. டாக்டர்கிட்டே போனேன். என்ன வேலை செய்றே என்று கேட்டார். அயன் பொட்டி தேய்க்கிறேன் என்றதும் "அவ்வளவு தான். இதுக்கு எந்த மருந்தும் கிடையாது. உன் காலம் முடிஞ்சு போச்சு; இனி வேற வேலை பாரு" அப்படிங்கிறார். நின்னு கிட்டே தேய்ப்பதால் கால் முட்டி ரெண்டும் தேஞ்சு போயிடும். கழுத்து எலும்பும் தேஞ்சுடும். என்ன ஒன்னு எங்க ஆளுங்க யாருக்கும் எலும்பு சம்பந்தமான வியாதி மட்டும் தான் வரும். சுகர், ரத்த கொதிப்பு மாதிரி எந்த வியாதியும் வராது. காலையிலிருந்து ராத்திரி வரை கடும் உடல் உழைப்பு செய்யுறோம் இல்லியா?"

"அப்போ 45 , 50 வயசுக்கு மேல் எப்படி வாழ்க்கை நடத்துவீங்க? வருமானம் ?"

" அதுக்கு தான் பசங்களையும் இதே தொழிலில் போடுறோம். எங்களுக்கு முடியாதப்ப அவங்க செய்ய ஆரம்பிச்சுடுவாங்க. நாங்க வீட்டுக்கு போய் துணி வாங்கிட்டு வர்றது மாதிரி வேலைகள் மட்டும் செய்ய வேண்டியது தான். இல்லாட்டி ஏதாவது கொஞ்சம் காசு சேத்து வச்சிக்கிட்டு ஊர் பக்கம் போயி கிடைக்கிறதை வச்சி வாழ வேண்டியது தான் "

இந்த தொழில் செய்பவர்களில் பலரும் குடிக்கிறார்களே என்று கேட்க, " ஆமா. நூத்துக்கு தொண்ணூறு பேர் குடிக்க தான் செய்வாங்க. இது கட்டிடம் கட்டுற மேஸ்திரி மாதிரி கஷ்டமான தொழில். நைட்டு படுத்தா ரெண்டு தோள்பட்டையும் பின்னி எடுக்கும். கழுத்து நரம்பை பிடிச்சு இழுக்கும். காலையில எழுந்து வேலை பாக்கணும்னா குடிச்சா தான் தூங்க முடியும். பெரும்பாலான ஆளுங்க தினம் நைட்டு குடிச்சிட்டு தான் தூங்குவாங்க"

"பெண்கள் இந்த தொழில் செய்றாங்களா?"

" பெரும்பாலும் செய்ய மாட்டாங்க. தெலுங்கு வண்ணான் அப்படின்னு ஒரு மக்கள் இருக்காங்க. அவங்கள்ளே மட்டும் தான் பெண்கள் துணி இஸ்திரி போடுவாங்க. மத்த படி குளத்துக்கு துணி சலவை செய்ய போனா பெண்கள் கூட வந்து ஹெல்ப் பண்ணுவாங்க"

துணிகளை துவைத்து பின் சலவை செய்வது பற்றி பேச்சு திரும்புகிறது

" சில பேர் வெள்ளிக்கிழமை அன்னிக்கு துணி அயன் பண்ண கூடாதுன்னு செண்டிமெண்ட் வச்சிருக்காங்க. அதனால வெள்ளிக்கிழமை கடை லீவு. அன்னிக்கு தான் துணி சலவைக்கு போவோம். எங்க தொழிலில் மட்டும் எப்பவும் ரெண்டு ஆள் இருந்தா தான் காரியம் நடக்கும். ஒரே ஆள் கடை போட முடியாது. சலவையும் பண்ண முடியாது.

நாங்க வெள்ளி கிழமை ஆனா, காலையில் பல்லாவரம் ஏரிக்கு போய் துணிங்களை துவைப்போம். அப்புறம் அங்கேயே பாறை மேலேயோ, கயிறு கட்டியோ துணிகளை உலர்த்துவோம். அப்புறம் காய வச்சு எடுத்துட்டு வந்துடுவோம்"

"சனி ஞாயிறுகளில் தான் துணி அதிகம் வருமா?"

"அப்படி இல்லை எங்களுக்கு தினம் துணி நிறைய வரும். அதுவும் இப்ப கரண்ட் பில் அதிகமானதால, நிறைய பேர் வீட்டில் அயன் பண்ணாம துணியை எங்ககிட்டே குடுக்குறாங்க சனி ஞாயிறுகளில் ஸ்கூல் பசங்க யூனிபார்ம் அதிகம் வரும். அதை மட்டும் நிறுத்தவே மாட்டோம். எங்க கிட்டே அயன் பண்ண குடுத்த பேன்ட், சட்டை இல்லாட்டி நீங்க வேற கூட போட்டுட்டு போயிடுவீங்க. ஆனா பசங்க கிட்டே இருக்கிறதே கொஞ்சம் யூனிபார்ம் தான். அதை உடனே தேச்சு குடுத்துடுவோம்"

ரொம்ப சின்ன பசங்களோட கலர் டிரஸ் கூட அயனுக்கு வருவதை பார்த்து நான் ஆச்சரியப்பட "பசங்க ஒண்ணுக்கு போன துணி துவைச்சாலும் கூட அதிலே கிருமி இருக்கும். ஆனா நாங்க சூடா அதை தேய்ச்சா எல்லா கிருமியும் செத்துடும். அதான் ரொம்ப சின்ன பசங்க துணி கூட அயனுக்கு வருது"

" வீட்டுக்கு போய் தான் துணி வாங்கணுமா ?"

" எல்லாரும் எதிர்பாக்குறாங்களே ! சில பேர்,  தானே கொண்டு வந்து குடுத்துட்டு தானே வாங்கி போறாங்க. ஆனா நிறைய பேர் வந்து வாங்கணும்னு சொல்றாங்க. "ஏன் வர முடியாதா?" அப்படின்னு போன் பண்றாங்க. போட்டி வேற இருக்கே ! ஆனா ஒண்ணு,  ஒருத்தர் ரெகுலரா துணி வாங்குற வீட்டுக்கு இன்னொருத்தர் போக மாட்டோம் “

நமக்கு பேட்டி தந்த பெரியவர் 
அவர்கள் சலவை பெட்டி பற்றி கேட்டதும் " இது ஒவ்வொண்ணும் 4500 ரூபா. ஏழெட்டு மாசம் தான் வரும் அப்புறம் ரிப்பேர் ஆகிடும் அதை ரிப்பேர் பண்ண சைதாப்பேட்டையில் ஒரு கடை இருக்கு. ஆனா ரிப்பேருக்கு ஆயிரம் ரூபா செலவாகும். அதுக்கு பதிலா பெட்டியை போட்டுட்டு புது பெட்டி எடுத்தா பாதி காசுக்கு எடுத்துப்பாங்க. மீதி பணம் போட்டா போதும். கவர்மென்ட்டு எங்களுக்கெல்லாம் அப்பப்ப பெட்டி குடுத்தால் நல்லாருக்கும் "

"உங்களுக்குன்னு சங்கம் இருக்கா?"

"இருக்கு. அவங்க அரசாங்கத்து கிட்டே போயி பெட்டி குடுங்க. இது இதெல்லாம் செய்யுங்கன்னு மனு குடுக்குற வேலை செய்வாங்க. நான் கூட சங்கத்தில் ஒரு பொறுப்பில் இருந்தேன் ஆனா வியாபாரத்தை பாக்காம இதுக்குன்னு அலைஞ்சா அப்புறம் நம்ம வீட்டை யாரு பாப்பாங்க? அதான் விட்டுட்டேன் " 

" அயனு-க்கு வர்ற துணி கிழிஞ்சா என்ன பண்ணுவீங்க?"

" பழசா இருந்தா பிரச்சனை இல்லை. புதுசுன்னா பாதி பணம் வரை தாங்க என கேட்டு வாங்கும் ஆட்கள் இருக்காங்க. ஆடி மாசம் - காத்து காலத்தில் தான் பொறி பறந்து சட்டையில் விழுந்துடும் "

பேச்சு அவர்கள் திருமணங்கள் பற்றி திரும்புகிறது: 

"எங்க மக்கள் கிட்டேயும் வரதட்சணை பிரச்சனை ரொம்ப அதிகமா இருக்கு. நாங்க எல்லாம் அஞ்சு பவுன் போடுறதே கஷ்டம். ஆனால் சாதாரண ஆளே 15 பவுன் கேக்குறாங்க எங்கே போறது நாங்க? இப்போ இந்த கடையை வச்சு நடத்த, எனக்கு என்ன கிடைக்கும்னு நினைக்கிறீங்க? 5000 ரூபாய் மாசா மாசம் கடன் தான் ஆகிடுது "

அவர் மனைவி வர, அவரை அறிமுகம் செய்கிறார். கடையிலிருக்கும் பையனிடம் " அனைவருக்கும் டீ வாங்கிட்டு வா தம்பி" என நான் பணம் தர, "நீங்க ஏன் தர்றீங்க? எங்க கடைக்கு வந்தா நான் தானே தரனும்?" என அன்புடன் கோபித்தார்.

தேநீர் வருகிறது. அயன் செய்யும் இருவரும் நின்று கொண்டே தேநீர் அருந்துகின்றனர். " அந்த டீ குடிக்கிற நேரம் உட்கார கூடாதா? " என்கிறேன். "உட்கார்ந்தா தான் தம்பி கால் வலி அதிகமா தெரியும். அப்புறம் எந்திரிக்க கஷ்டமாயிடும்" என்கின்றனர்.

அமர்ந்திருந்த நான் எழுந்து கொண்டு, விடைபெற்றேன். அரை மணி நேரம் அவர்களுடன் பேசியதில் சொந்தக் காராரை வழியனுப்புவது போல் அனைவரும் சேர்ந்து வழியனுப்பினர்.

*****
பேட்டி அதீதம் ஆகஸ்ட் 15  இதழில் வெளியானது 
*****
ஆகஸ்ட் 26 - பதிவர் மாநாடு வருகிறீர்கள் தானே? உங்கள் பெயர் இந்த பட்டியலில் உள்ளதா என பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள் நன்றி !

47 comments:

 1. காலை வணக்கம்...தொழிலாளர் களோட அனுபவங்களை பத்தி போடுவது புதிதாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அதிதம் இதழில் எழுதும்போதே ப்ளாக் லயும் ஒரு காப்பி எடுத்து வச்சிடுவிங்க போல...டூ இன் ஒன்...

  ReplyDelete
 3. Vithiyasamana pathivu vaalthukkal

  ReplyDelete
 4. உடலுழைப்பு செஞ்சு சம்பாதிக்கும் மக்களுக்கு வேலை கஷ்டமுன்னாலும் தங்கள் உழைப்புலே வாழும் பெருமை இருக்கு கவனிச்சீங்களா?

  நாங்க சென்னைக்கு வந்திருந்தப்ப நம்ம வீட்டுக்கு எதிரில் தள்ளுவண்டி வச்சு இருக்கும் மோகன் என்ற இளைஞர் (வயசு ஒரு 18 இருக்கும்)தான் எல்லா உடுப்புகளையும் வாரம் ஒருமுறை வந்து எடுத்துப்போய் அயர்ன் பண்ணித்தருவார்.

  எந்த துணிகளையும் பாழாக்கலை:-)

  சபரிமலைக்குப் போனப்ப நான் கொஞ்சம் செலவுக்குக் காசு கொடுத்தேன். உண்டியலில் போட வேண்டாம். நல்ல சாப்பாடா வாங்கிச் சாப்பிட்டுக்கோன்னுதான்.

  அங்கிருந்து வந்தவுடன் சமி பிரசாதம் கொண்டுவந்து தந்தார்.

  ReplyDelete
 5. வழக்கம் போல் சிறப்பான பதிவு. பாராட்டுகள்

  ReplyDelete
 6. அருமையான பகிர்வு...

  செய்யும் தொழிலை சிறப்பாக செய்பவர்கள்...

  நன்றி... (TM 3)

  ReplyDelete
 7. இம்மாதிரி விளிம்பு நிலை மனிதர்களின் செய்திகள்தான் உண்மையான இலக்கியம்.

  ReplyDelete
 8. நல்ல விவரமான பேட்டி.

  வாழ்த்துகள்...

  ReplyDelete
 9. நல்ல பதிவு.
  அயராத உழைப்பு, மிகுந்த மனத் தைரியம், அடக்கம், மரியாதை போன்ற வாழ்க்கை பாடங்களை இவர்களை போன்ற நேர்மையான உழைப்பாளர்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள முடியும்.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 10. //அவர்கள் சலவை பெட்டி பற்றி கேட்டதும்//

  இஸ்திரி பெட்டியைச் சொல்கிறீர்களா?
  அதன் விலை 4500-ஆ? ஏயப்பா... பார்க்க சிம்பிளாத் தெரியும் அதன்விலை இவ்வளவா?

  அந்தப் பெட்டியை எப்படி ஆன் -ஆஃப் செய்வார்கள் (அதாவது, கரியைப் பற்றவைப்பது, அணைப்பது) என்றும், துணிகளின் வகைகளைப் பொறுத்து சூடு கூட்ட-குறைக்க எப்படிச் செய்வார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வம். ஊருக்கு வரும்போது, வீட்டருகில் அயர்ன் செய்பவர்கள் யாரும் இல்லாததால், இதுவரை தெரிந்துகொள்ள முடியவில்லை.

  ReplyDelete
 11. ஹுஸைனம்மா said...

  இஸ்திரி பெட்டியைச் சொல்கிறீர்களா? அதன் விலை 4500-ஆ?
  *****

  ஆம் அதனை விலை தான் 4500. எனக்கும் அதே ஆச்சரியம் வந்தது

  //அந்தப் பெட்டியை எப்படி ஆன் -ஆஃப் செய்வார்கள் (அதாவது, கரியைப் பற்றவைப்பது, அணைப்பது) என்றும், துணிகளின் வகைகளைப் பொறுத்து சூடு கூட்ட-குறைக்க எப்படிச் செய்வார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வம். //

  அவரிடம் கேட்கலை; நான் பார்த்த வரை சொல்கிறேன். கரியை சாம்பிராணி போட உபயோகிப்போம் அல்லவா அது மாதிரி உபகரணத்தில் வைத்து நெருப்பு பற்ற வைப்பார்கள்; நன்கு தணல் வந்ததும் பெட்டிக்குள் போடுவார்கள்

  கரியை கடைசியில் கீழே கொட்டி தண்ணீர் ஊற்றி அனைத்து விடுவார்கள்

  சூடு பொறுத்த வரை நன்கு சூடாய் இருக்கும் போது எந்த துணிக்கு அதிக சூடு தேவையோ அதை தேய்ப்பார்கள் என நினைக்கிறேன். அதில் சூடு அதிகம் செய்ய, குறைக்க வேறு டெக்னிக் இருக்கா தெரியலை

  ReplyDelete
 12. நல்ல பகிர்வு. பல தகவல்கள் புதிது.

  தொடர்ந்து அசாதாரண மனிதர்களின் வாழ்வை அறியத் தந்திடுங்கள்.

  ReplyDelete
 13. 4500 ரூபாய் என்பது எனக்கும் வியப்பாக இருந்தது. அது போலவே ரிப்பேர் செலவும்! நல்ல பகிர்வு.

  ReplyDelete
 14. நல்ல பதிவு மோகன்.  சூடு அதிகமாக்கவும் குறைக்கவும் அவர்கள் உபயோகிப்பது தண்ணீர்.  பெட்டி எப்போதும் ஒரே சூட்டில் இருக்கும். குறைந்த சூடு தேவைப்படும் துணிகளுக்கு தண்ணீர் அதிகம் தெளிப்பார்கள். 

  ReplyDelete
 15. சலவை தொழிலாளிகளை பற்றிய பதிவுக்கு முதலில் நன்றி...சில இடங்களில் சலவை தொழிலும் நலிவடைய தொடங்கி உள்ளது...

  ReplyDelete
 16. அயர்ன் செய்வதை எங்கள் பகுதியில் 'பெட்டிபோடுதல்' என்பார்கள். இப்பொழுது, அது வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை.

  நின்று கொண்டே வேலை செய்பவர்களுக்கு வெரிகோஸ் வெயின்(காலில் ரத்தக் குழாய் பெரிதாகி விடும்) என்னும் வியாதி வந்துவிடும். இது டீ மாஸ்டர்களுக்கு அதிகம் வரும். இவர்களுக்கும் வருவதற்கு வாய்ப்புண்டு.

  அயர்ன் செய்வது மிகவும் கடினமான வேலை. பெரும்பகுதியினர் செய்ய விரும்புவதில்லை. ஆனால், இன்றுவரை நாங்கள்தான் அயர்ன் செய்கிறோம். எனக்கு ஒரு சட்டை அயர்ன் செய்ய குறைந்தது ஏழு நிமிடங்கள் ஆகும். அதற்குள் வேர்வை தாங்க முடியாது.
  இந்த மாதிரி அயர்ன் செய்பவர்கள் கோடைக்காலத்தை எப்படி சமாளிக்கிறார்கள் என்று நினைத்து கவலைப்படுவதுண்டு.

  நிறைய தகவல்களைத் தந்துள்ளீர்கள். தொடர்ச்சியாக இம் மாதிரியான மக்களைப் பற்றி தங்களின் எழுத்தில் படிக்கும் பொழுது, அடுத்த பதிவர் மாநாட்டில் இந்தத் தொகுப்பு புத்தகாமாக வெளியாக வேண்டும் என்கிற விருப்பத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

  ReplyDelete
 17. //கடையிலிருக்கும் பையனிடம் " அனைவருக்கும் டீ வாங்கிட்டு வா தம்பி" என நான் பணம் தர, "நீங்க ஏன் தர்றீங்க? எங்க கடைக்கு வந்தா நான் தானே தரனும்?" என அன்புடன் கோபித்தார்.//

  எல்லோரையும் தங்களின் அன்பால் வீழ்த்தி விடுகிறீர்கள். அது எப்படி சார்? எங்களுக்கும் அந்த ரகசியத்தை சொல்லக் கூடாதா?

  ReplyDelete
 18. இனிய பகிர்வு. உழைக்கும் மனிதர்களுடன் நாம் பேசும்போது அவர்களுக்கும், நமக்கும் கிடைக்கும் உற்சாகம் அளவிடமுடியாததுதான்....

  தொடரட்டும் சக மனிதர்களின் பேட்டிகள்.

  ReplyDelete
 19. நல்லா தொகுத்து இருக்கீங்க மோகன்குமார்.. எளிமையான, நட்பான எழுத்து நடை உங்களிடம் இருக்கு, தொடருங்கள்.. வாழ்த்துகள்!

  உழைக்கும் மக்களின் வெள்ளந்தித் தனமான அன்பும், வாழ்க்கையை எதிர் நோக்கும் விதமும் நெகிழ வைக்கிறது..

  உங்களுக்கு நட்பான ஆலோசனை ஒன்றை எனது தளத்தில் சில நாட்களுக்கு முன் எழுதி இருந்தேன்.. நேரமிருக்கும் போது பாருங்கள், நன்றி!

  ReplyDelete
 20. சலவைத் தொழிலாளியின் மனம் திறந்த பேட்டி நன்று.தொடருங்கள்.

  ReplyDelete
 21. அருமை.
  எங்கள் வீடிடருகிலும் இருவர் குடி இருக்கின்றனர். காலில், வெரிகோஸ் வந்து , அப்ரேஷன் செய்து கொண்டார். இப்பவும் உழைப்பு தான்.

  ReplyDelete
 22. கோவை நேரம் said...
  தொழிலாளர் களோட அனுபவங்களை பத்தி போடுவது புதிதாக இருக்கிறது

  **
  ஆம் ஜீவா. எனக்கும் பெரும் மன நிறைவை தருகின்றன, இவர்களை சந்திப்பதும், இவர்கள் பற்றி எழுதுவதும்

  ReplyDelete
 23. கவி அழகன்: நன்றி

  ReplyDelete
 24. துளசி மேடம்:

  //உடலுழைப்பு செஞ்சு சம்பாதிக்கும் மக்களுக்கு வேலை கஷ்டமுன்னாலும் தங்கள் உழைப்புலே வாழும் பெருமை இருக்கு கவனிச்சீங்களா? //

  *********
  மிக உண்மை நன்றி

  ReplyDelete
 25. நன்றி கோவி.கண்ணன். இந்த வரிசையில் வரும் பேட்டிகளை நீங்கள் விரும்பி வாசிப்பது தெரிகிறது நன்றி

  ReplyDelete
 26. தனபாலன் சார்: ஆம் நன்றி

  ReplyDelete
 27. மதுரை அழகு said...

  இம்மாதிரி விளிம்பு நிலை மனிதர்களின் செய்திகள்தான் உண்மையான இலக்கியம்.

  **********
  ஆம் மிக மகிழ்ச்சி மதுரை அழகு

  ReplyDelete
 28. நன்றி சீனி

  ReplyDelete
 29. மாசிலா said...

  அயராத உழைப்பு, மிகுந்த மனத் தைரியம், அடக்கம், மரியாதை போன்ற வாழ்க்கை பாடங்களை இவர்களை போன்ற நேர்மையான உழைப்பாளர்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள முடியும்.
  ***********
  ஆம் மிக அழகாய் சொன்னீர்கள் நன்றி

  ReplyDelete
 30. நன்றி ராமலட்சுமி மேடம். அதீதத்தில் எழுத சொன்னதால் தான் இவர்களை தொடர்ந்து சந்திக்கிறேன். உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்

  ReplyDelete
 31. ஸ்ரீராம்: ஆம் இரண்டும் எனக்கும் வியப்பாய் இருந்தது

  ReplyDelete
 32. அமர பாரதி //சூடு அதிகமாக்கவும் குறைக்கவும் அவர்கள் உபயோகிப்பது தண்ணீர். பெட்டி எப்போதும் ஒரே சூட்டில் இருக்கும். குறைந்த சூடு தேவைப்படும் துணிகளுக்கு தண்ணீர் அதிகம் தெளிப்பார்கள். //
  *****
  அப்படியா? மிக நன்றி

  ReplyDelete
 33. நன்றி ஹாஜா

  ReplyDelete
 34. அமைதி அப்பா: வெரிகோஸ் வெயின் பற்றி சொன்னதற்கு மிக நன்றி

  //எல்லோரையும் தங்களின் அன்பால் வீழ்த்தி விடுகிறீர்கள். அது எப்படி சார்? எங்களுக்கும் அந்த ரகசியத்தை சொல்லக் கூடாதா? //

  உங்களுக்கு நான் சொல்லி தர்றதா? உங்க வீட்டுக்கு வந்த போது ஸ்நாக்ஸ் என்று சொல்லி விட்டு சாப்பாடே போட்டவர் நீங்கள் ; அப்புறம் பாதி வழி வரை கூட வந்து எங்கள் வீட்டுக்கு வழி காட்டி விட்டு போன், மெயில் எல்லாவற்றிலும் " உங்களை நான் சரியா கவனிக்கலை" என்று சொன்னவர் நீங்கள்! உங்களுக்கா மற்றவர்களிடம் அன்பாய் இருக்க சொல்லி தரணும்?

  நிற்க, என்னை பொறுத்த வரை அந்த கடையில் வேலை செய்யும் சிறுவனும் சரி நானும் சரி அனைவரும் ஒன்று தான். அனைவரும் மனிதர்களே. எனக்கு இருக்கும் ஆசை, உணர்வுகள் அந்த சிறுவனுக்கும் இருக்கும். அனைவரிடமும் ஒரே மாதிரி நடந்து கொள்வதும் சிறிதளவு அன்பு காட்டுவதுமே அவர்களை நம்மிடம் நெருக்கமாக்கி விடும் என்று நம்புகிறேன் ஓரளவுக்கு (முழுதுமல்ல) இப்படி நடந்து கொள்ள பார்க்கிறேன்

  ReplyDelete
 35. வெங்கட் நாகராஜ் said...

  உழைக்கும் மனிதர்களுடன் நாம் பேசும்போது அவர்களுக்கும், நமக்கும் கிடைக்கும் உற்சாகம் அளவிடமுடியாததுதான்....

  *****
  உண்மை வெங்கட் நன்றி

  ReplyDelete
 36. பழூர் கார்த்தி/ உங்களுக்கு நட்பான ஆலோசனை ஒன்றை எனது தளத்தில் சில நாட்களுக்கு முன் எழுதி இருந்தேன்.. நேரமிருக்கும் போது பாருங்கள், நன்றி!/

  *****

  அப்படியா? பார்க்கலையே? லிங்க் தந்திருந்தால் எளிதாய் இருந்திருக்கும். பார்க்க முயல்கிறேன்

  ReplyDelete
 37. நன்றி முரளி சார்

  ReplyDelete
 38. Pattu Raj said...


  எங்கள் வீடிடருகிலும் இருவர் குடி இருக்கின்றனர். காலில், வெரிகோஸ் வந்து , அப்ரேஷன் செய்து கொண்டார். இப்பவும் உழைப்பு தான்.
  **
  அப்படியா? தங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி பட்டு ராஜ்


  ReplyDelete
 39. சிறப்பான பகிர்வு நன்றி!

  இன்று என் தளத்தில்
  அஷ்டமி நாயகன் பைரவர்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

  ReplyDelete
 40. அந்த ஆலோசனையின்
  லிங்க் இதோ ..

  அந்த பதிவின் பின்னூட்ட விவாதங்கள் ஏற்கனவே சூடாக இருந்ததால், அங்கே பின்னூட்டம் இட விரும்ப வில்லை..

  தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!

  ReplyDelete
 41. This comment has been removed by the author.

  ReplyDelete
 42. Nanri.... thankal pathivukkuu.....

  Nanaum oru salavai thozhilaliyin mahan than. Enathu thanthaiyin kadina uzhaippal nan software engineer (@bangalore) aha work pannitu iruken...

  Engal samugamum konja konjamaha munnerikondu varukirathu......

  ReplyDelete
 43. உங்களுடைய அத்தனை பேட்டிகளும் அற்புதம்... சுவாரிஸ்யமாக இருக்கின்றது.

  ReplyDelete
 44. நண்பர் திரு மோகன் குமார் அவர்களின் 'சலவைத் தொழிலாளி ' பற்றிய அருமையான பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  எப்போதாவது மின்சாரம் காரணமாக நிறைய படிப்பதை இழக்கிறேன்.

  ReplyDelete
 45. சலவைத் தொழிலாளி பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தனி இட ஓதுக்கீடு தர அரசு ஆவண செய்ய வேண்டும்

  ReplyDelete
 46. //சலவைத் தொழிலாளி பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தனி இட ஓதுக்கீடு தர அரசு ஆவண செய்ய வேண்டும்//correct

  ReplyDelete
 47. அருமை திரு மோகன் குமார் அவர்களின் சலவைத் தொழிலாளிகள் (அயர்ன் செய்பவர்கள்) பற்றிய பதிவு. ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். மறுபடியும் பகிர்கிறேன்.
  திரு பூமணி அவர்களின் 'அஞ்ஞாடி' என்ற நாவலில் அருமையாக சலவைத்தொழிலாளிகள் வாழ்க்கை பற்றி எழுதியிருக்கிறார்.
  நன்றி & வாழ்த்துகள் திரு மோகன் குமார்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...