Saturday, October 31, 2015

சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் ஒரு அனுபவம்

ஆனந்த விகடனில் சுஜாதா பல ஆண்டுகள் எழுதிய கற்றதும் பெற்றதும் புத்தக வடிவில் வாசிக்கும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது.

இதன் பல பாகங்கள் வந்துள்ளது; நான் படித்தது குறிப்பிட்ட ஒரு பாகம் மட்டுமே.

இந்த கால கட்டத்தில் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்துள்ளார்.. சில இடங்களில் அரசாங்கத்தை மென்மையாகவும், சுருக் என்றும் விமர்சிக்கும் சுஜாதா வேறு பல இடங்களில் கலைஞர் என்று குறிப்பிட்டு பாராட்டவும் செய்கிறார்..விகடனில் வாரா வாரம் வரும்போதே ஏனோ என்னால் எல்லா பத்தியும் வாசிக்க முடியாது. குறிப்பாக அறிவியல் சார்ந்து விரிவாக அவர் எழுதுவது நமக்கு சம்பந்தமில்லாத விஷயம் என ஜம்ப் செய்து என்று விடுவது வழக்கம். இம்முறையும் அவ்வாறே....

இதனை தாண்டியும் கற்றதும் பெற்றதும் - ஒரு நூலாக படிப்பது - இனிய அனுபவமே தந்தது. இதற்கு முக்கிய காரணம் சுஜாதாவின் நகைச்சுவை.. எதையும் சுவை பட சொல்லும் லாவகம்..

ஒவ்வொரு வாரமும் தனக்கு பிடித்த கவிதை, மேற்கோள், புத்தகம் என தேடித்தேடி அறிமுக படுத்த - இன்னொரு நல்ல மனது கிடைக்குமா? சுஜாதாவின்  மோதிர கையால் குட்டு பட்டாலே அந்த நபர் மேல் தனி வெளிச்சம் விழ துவங்கி விடும்..

சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலி பற்றி சொல்லும் போது உலகம் முழுதும் பாராட்டப்பட்ட அந்த படம் - அதன் நாவலாசிரியருக்கு திருப்தி தர வில்லை என்ற தகவலை சொல்கிறார். கூடவே நீதி: வாழ்வில் எல்லோரையும் திருப்தி படுத்தி விட முடியாது.

போலிஸ் அதிகாரி கார்த்திகேயனுடன் விபசார விடுதிக்கு ஒரு முறை ரைடு சென்றதும், அங்கிருந்த ஒரு தமிழ் பெண் அந்த நேரத்திலும் அவரிடம் வந்து " உங்க புக்கெல்லாம் படிச்சிருக்கேன். ரொம்ப புடிக்கும் " என்பதில் - தான் சற்று அதிர்ந்து போனதையும் சொல்கிறார். மேலும் மறு நாள் கோர்ட்டில் நீதிபதி, அந்த பெண்கள் எல்லாருமே - இதெல்லாம் ரொம்ப சாதாரணம் அடிக்கடி நடப்பது தான் என்கிற தொனியில் பேசி பழகியதை வியப்புடன் பகிர்கிறார்..

காஷ்மீர் பிரச்சனை பற்றி .. இதற்கு ஒரே தீர்வு " எக்கேடு கெட்டு போ" என காஷ்மீரை துறந்து விடுவதே " என்று அவர் எழுத.. ஏராள எதிர்ப்புகள்.. பின் மீண்டும் தனது நிலைக்கு காரணத்தை விரிவாக, பொறுமையாக எடுத்து சொல்கிறார்..

நினைத்தாலே இனிக்கும் சினிமா உருவான நேரம் - கண்ண தாசனுடன் "எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் " பாடல் உருவான விதத்தை சுவை பட சொல்கிறார்...

சுஜாதா அவார்டுகள் என்பவை - எத்தனை எத்தனை தளங்களில் இருந்துள்ளது.. எவ்வளவோ படித்து கொண்டு, எழுதி கொண்டு எப்படி கர்நாடக சங்கீதம் துவங்கி, ரேடியோ, டிவி என அனைத்து துறைகளையும் கவனித்துள்ளார் என்ற வியப்பு மேலிடுகிறது...

கற்றதும், பெற்றதும்.. Recommended For Diehard fans of Sujatha !!

1 comment:

  1. விகடனில் தொடர்ந்து வாசித்த எனக்கு மிகவும் பிடித்த பகுதி இது! நூலாக வாசிக்கவில்லை! வாங்க வேண்டும்! நன்றி!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...