Thursday, November 12, 2015

விபாசனா .. 10 நாளில் நம் கேரக்டரை மாற்றும் வித்யாச தியானம்...

ண்பர் பழனியப்பன்.. ஒரு பெரிய நிறுவனத்தில் கம்பனி செகரட்டரி மற்றும் சீனியர் மேனேஜர் பைனான்ஸ் ஆக பணியாற்றுகிறார். அண்மையில் விபாசனா  என்கிற 10 நாள் தியான வகுப்பில் கலந்து கொண்டார். இத்தியானம் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்தது இதோ..

10 நாள் பயிற்சி முடிந்து வீடுதிரும்பும் பழனியப்பன் 

10 நாளில் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள்..

இது 10 நாள் முழு நேரம் கலந்து கொள்ளும் பயிற்சி.. 10 நாள் அலுவகத்திற்கு மட்டுமல்ல, வீட்டிற்கும் விடுப்பு எடுத்து விட்டு தான் செல்லவேண்டும். 

இந்த 10 நாளும் யாரிடமும் பேசக்கூடாது. தியானம் குறித்த சந்தேகம் என்றால் மட்டுமே பயிற்சி தருபவரிடம் கேட்க அனுமதி.

மொபைல் அவர்கள் உள்ளே அனுமதிப்பதே இல்லை. அவசரம் என்றால்  நமது உறவினர்கள் - நாம் தங்கும் இடத்திற்கு லேண்ட் லைனில் தொடர்பு கொள்ளலாம்..

காலை 4.30 மணி முதல் தியான வகுப்பு துவங்குகிறது.. எனவே தினம் 3.30 க்கெலாம் எழ வேண்டும். 4.30 முதல் 7 முதல் தியான வகுப்பு மற்றும் பயிற்சி.. 7 மணி அளவில் காலை உணவு.. இட்லி, பொங்கல், உப்புமா போன்ற ஏதேனும் உணவு..குறிப்பிட்ட அளவு.. தேங்காய் சட்னியுடன் தருவார்கள். நாம் வரிசையில் நின்று உணவை வாங்கவேண்டும். சாப்பிட்ட பிறகு நமது தட்டை கழுவி வைத்து விட வேண்டும். ( சாப்பாடு ஸ்பைசி ஆக இல்லாதது போல் பார்த்து கொள்கிறார்கள்.. மேலும் உப்பும் சற்று குறைவாகவே இருக்கும்)  

பின் மீண்டும் வகுப்பு மற்றும் தியான பயிற்சி.

11 மணி அளவில் மதிய உணவு.. சாதம், குழம்பு, ரசம், கூட்டு ..

 மதியம் மீண்டும் தியான பயிற்சி.. 

மாலை 5 மணி அளவில் மசாலா  பொறி- ஒரு கப் , பால் மற்றும் ஒரு வாழைப்பழம் தரப்படுகிறது. இதன் பின் உணவு எதுவும் கிடையாது

நம் அறையில் இன்னொரு நபர் தங்கினாலும், அவருடனும் நாம் ஏதும் பேச கூடாது.

மற்றவர்களோடு சைகையிலோ- கண் பார்வையிலோ கூட பேசக்கூடாது. இதனை பின்பற்ற நாம் நடக்கும் போது கூட குனிந்த படி நடக்க சொல்கின்றனர்.  

ஆண்கள்- பெண்கள் இருவருக்கும் தனித்தனி தங்குமிடம்.. கணவன்- மனைவி இருவரும் பயிற்சிக்கு வந்துள்ளனர் என்றாலும் அந்த 10 நாள் ஒருவரை ஒருவர் பார்க்கவே முடியாது.

இந்த 10 நாள் நாம் இருக்கும் இடமே - பசுமையுடன் மிக அற்புதமாக உள்ளது. நடைபயிற்சி செய்யும் விதமாக 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பசுமையுடன் உள்ளது. தியானம் செய்யும் அறை ஏ. சி வசதி செய்யப்பட்டுள்ளது. இடம் முழுதுமே பவர் பேக் அப் செய்துள்ளனர். எனவே மின்சாரம் தடைபடாது.



தங்குபவருடன் கூட பேசக்கூடாது என்று சொல்ல காரணம் என்ன?

பிறருடன் பேசும்போது நாம் - நம்மை உயர்த்தி காட்டி கொள்ளவே விரும்புகிறோம்.. எனவே தியானம் பாதிக்கப்படலாம். மேலும் ஒவ்வொருவர் தியானம் கற்பதும், அது அவருக்கு கை வசம் வருவதும் பெரிதும் வித்தியாச படும். ஆனால் நாம் பிறரிடம் அவர்களுக்கு தியானம் எப்படி வருகிறது என நிச்சயம் கேட்போம்.. பின் அவர் அளவுக்கு நமக்கு வரவில்லையே என நினைப்போம்... இந்த காரணங்களால் தான் பிறருடன் பேசகூடாது என விதிமுறை உள்ளது 

இதை மீறினால் - உதாரணமாய் உங்கள் அறையில் தங்குபவருடன் நீங்கள் பேசினால் யாருக்கும் தெரியப் போவதுமில்லை; தடுக்க போவதுமில்லை; ஆனால் தியானத்தின் பலன் முழுதும் கிடைக்காமல் போய் விடும்.

10 நாள் தியானம் செய்வதன் காரணம் என்ன? என்னென்ன வித தியானம் மேற்கொள்கிறீர்கள் ?

முதல் சில நாட்கள் நமது மூச்சை மட்டுமே கவனிக்க சொல்லி தருவார்கள்.. பின் உடலில் தெரியும் உணர்வுகளை அடுத்த சில நாட்களுக்கு கவனிக்க சொல்வார்கள்.. இப்படி ஒவ்வொரு படியாக கற்க - தியானம் வசப்பட 10 நாள் தேவைப்படுகிறது 

சென்னையில் எங்கு நடக்கிறது? வருடத்திற்கு எத்தனை முறை நடக்கிறது ?

சென்னையில் திருமுடிவாக்கம் என்கிற இடத்தில் நடக்கிறது. (தொலை பேசி எண் : 94442 90953) அநேகமாய் மாதம் ஒரு முறை - 10 நாள் இந்த வகுப்பு நடக்கிறது. கலந்து கொள்ள வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பலர் வருகின்றனர்.. 

அவர்கள் இணைய தளம் இது - http://www.setu.dhamma.org/

ஒரு முறை மட்டும் சென்றால் போதுமா? மறுபடி மறுபடி செல்லவேண்டுமா ? 

தியானம் கற்று கொள்ள ஒரு முறை சென்றால் போதும். ஆனால் முதல் முறை வந்த சிலர் - மீண்டும் வருவதையும் அறிய முடிகிறது. இறுதி நாளில் பிறருடன் பேசலாம் என விதி தளர்த்தப்படும் - அப்போது மீண்டும் வந்தவர்களுடன் - தனியாக பேசியபோது இதன் பலனை கூறினர்.

குறிப்பாக CA [படிக்கும் 24 வயது மாணவன் இந்த வருடதுவக்கத்தில் ஒரு முறை வந்துவிட்டு மீண்டும் அக்டோபரில் வந்துள்ளான். அவனிடம் பேசும்போது இந்த தியானம் கற்ற பின் எனது கேரேக்டர் பெரிதும் மாறிவிட்டது. அதற்கு முன் வீட்டில் அதிக கோபம் வரும். பாத்திரங்கள் பறக்கும். ஆனால் தியானம் கற்றபின் கோபப்படுவதே இல்லை; வீட்டில் இது நான் தானா என ஆச்சரியபடுகிறார்கள். இது தரும் இந்த பலனுக்காக தான் மறுபடி வந்தேன் என்றார் . 

இதற்கு கட்டணம் எவ்வளவு? 

எந்த வித கட்டணமும் இல்லை. முழுக்க டொனேஷன் மூலம் இது நடக்கிறது. இறுதி நாள் - நீங்கள் விரும்பினால் டொனேஷன் தரலாம் என்று சொல்ல, அப்போது சிலர் டொனேஷன் தந்தனர். இப்படி தருவதால் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் எதுவம் கிடையாது. சென்ற முறை டொனேஷன் தந்தேன் என அடுத்த முறை முன்னுரிமை கேட்க முடியாது. 

இரவு சாப்பிடாமல் இருப்பது சிரமம் இல்லையா? 

சிலருக்கு கஷ்டம் தான். சொல்ல போனால் வெகு சிலர் சாப்பாடு காரம் இல்லை; இரவு உணவு இல்லாமல் உறங்குவது  கடினமாக உள்ளது என 10 நாள் முன்பே சென்று விட்டனர். 

ஆனால் எனக்கு அதிக கஷ்டமாக தெரியவில்லை; தியானம் சரியாக செய்ததால் பசி எடுக்கவில்லை என நினைக்கிறேன் 

ஒரு சிலர் மட்டுமே கஷ்டப்பட்டனர். பெரும்பாலானோர் இரவு சாப்பிடாமல் இருக்க பழகி விட்டனர். 

நீங்கள் வாழ்க  வளமுடன் இயக்கத்தில் தியானம் கற்றவர் என தெரியும்; அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? 

வாழ்க  வளமுடன் நிகழ்வில் சொல்லி தரும் பல விஷயங்கள் ( Concept) இங்கும் உள்ளது. உண்மையில் வாழ்க  வளமுடன் பயிற்சியில் இதை விட இன்னும் அதிக விஷயங்கள் உண்டு. 

இந்த முறையைப் பொறுத்த வரை தொடர்ந்து 10 நாள் மட்டும் பயிற்சி எடுத்து கொண்டு பின் வீட்டில் தொடர்வோருக்கு இது சரியாக இருக்கும் 

10 நாள் பயிற்சிக்கு பின் தினசரி வாழ்வில் தியானம் எப்படி செய்ய சொல்கிறார்கள் ? 

10 நாள் பயிற்சிக்கு பின் - தினம் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் தியானம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என அறிவுறுத்துகிறார்கள்.


இரண்டு மணி நேரம் என பயப்பட வேண்டாம். 2 மணி நேரம் தியானம் செய்யும் போது உறங்கும் நேரம்சற்று குறையும். பின் 6 மணி நேரம் தூங்கினாலே கூட நிச்சயம் போதும் 


இங்கு கற்று கொண்ட முக்கிய விஷயங்கள் என்ன ?

இந்த 10 நாளில் போதிக்கப்பட்ட சில விஷயங்கள் :

பிரச்சனைகள் என்பது எல்லா மனிதருக்கும் இருக்கிறது. ஒருவர் பணக்காரன் என்பதாலோ, பெரிய பதவியில் இருப்பதாலோ அவருக்கு பிரச்சனையே இல்லை என்று அர்த்தம் இல்லை. நிச்சயம் அவர்களுக்கும் பிரச்சனைகள் இருக்கும். பிரச்சனைகளை எப்படி அணுகுகிறிர்கள் என்பது மட்டுமே நபருக்கு நபர் மாறுபடும். தியானம் பிரச்சனைகளை சற்று தள்ளி நின்று பொறுமையாய் அணுகிட உதவும். 


நமது தீராத ஆசைகளும், மனிதர்கள் மேல் இருக்கும் அதீத வெறுப்பும் மனதின் ஆழத்தில் ( Sub conscious mind) சென்று தங்கி விடும். இப்படி தங்குவது நிச்சயம் அதன் பலனை காட்டவே செய்யும். இத்தகைய கடின உணர்வுகளை களைய தியானம் உதவும்..



அன்பு மட்டுமே பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும்.

அன்பு எதையும் எதிர்பாராத அன்பாய் இருக்க வேண்டும். இவரிடம் அன்பாய் இருந்தால் - நமக்கு இந்த பலன் கிடைக்கும் என்கிற விதத்தில் அல்ல.  குழந்தைகளிடம் கூட நாம் நினைக்கும் விதத்தில் அவர்கள் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் செலுத்தினால் அதற்கு  பெயர் அன்பே அல்ல. நாம் எதிர்பாராமல் பிறர் மீது செலுத்தும் அன்பு - பல மடங்கு பெருகி நமக்கு திரும்ப கிடைக்கவே செய்யும்.

*********
நண்பர் பழனியப்பன் சொன்னது போல் தியானம் பல நல்ல விஷயங்களை நமக்கு உணர்த்தும்; நமது கேரக்டரை நல்ல விதத்தில் மாற்றும் என எண்ணுவோர் நிச்சயம் விபாசனாவில் தியானம் கற்பது பற்றி யோசிக்கலாம் !

3 comments:

  1. வித்தியாசமாகத்தான் இருக்கிறது! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. பொதுவில் இந்த தியான முறை என்னேரமும் சிந்தித்துத் கொண்டே இருக்கும் மனதை ., வாள்வீசிக்கொண்டே இருக்கும் மனதை அதன் உறையில் இட்டு தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தக்க்கற்றுத்தரும். இயல்பாக்கும்..

    மனம் தேவையான மட்டும் இயங்குவதால் புலன்கள் கட்டுப்பாடு எளிதில் வசப்படும்.

    தியான முறைகளில் ஆர்வம் உள்ளோர்க்கு இது வரப்பிரசாதம். உள் அமைதி என்பது இயல்பாகும்..

    ReplyDelete
  3. மிக அருமையான பயிற்சி. விபாசனா மையங்கள் இங்கு கென்யாவிலும் இருக்கின்றன.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...