Friday, November 13, 2015

கனமழை.. எப்படியிருக்கிறது சென்னை? சென்னை வாசிகள் பேட்டி + படங்கள்

சென்னை.. மழையின் (அன்பு) பிடியில் சிக்கி தவிக்கிறது.. ஜூன் முதல் செப்டெம்பர் வரை தென் மேற்கு பருவ மழை அதிகமில்லை; இதனால் தண்ணீர் பற்றாக்குறை வருமோ என்கிற பயம் என் போன்றோருக்கு வந்து விட்டது..

அக்டோபர் மத்தியில் துவங்கும் வட கிழக்கு பருவ மழையும் தாமதம் ஆனது.. ஆனால் தீபாவளி நேரம் மழை பிச்சு உதறி விட்டது. தீபாவளிக்கு முதல் நாள் செம்ம்ம்ம மழை.. பட்டாசு வியாபாரம் டமார் ஆனது. தீபாவளி அன்று மழையின்றி குட்டி பசங்க இருந்த வெடிகளை  வெடித்து கொண்டாட, ஓரிரு நாளில் மீண்டும் கன  மழை துவங்கி விட்டது. இம்முறை சோகம் என்னவெனில் - முன்பு பெய்த மழை நீர் வடியும் முன்பே அடுத்த மழை வந்ததால் - தெருக்கள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன..
சென்னை வாசிகள் சிலர் சென்னை மழை பற்றி தங்கள் அனுபவம் பகிர்கிறார்கள் :

லட்சுமி எனது வீடு வளசரவாக்கம்; அலுவலகம் இருப்பது நுங்கம்பாக்கம் ஸ்டேர்லிங் சாலை.

தினம் பஸ்ஸில் தான் செல்வேன். இன்று மழை அதிகம் என ஆட்டோ முயற்சித்தேன். ஒருவரும் வரவில்லை; அடுத்து கால் டாக்சி எடுக்க முயல, ஓலா, Uber, TaxiForSure என யாருமே கார் அனுப்ப தயாராய் இல்லை.

TaxiForSure 30 % டிஸ்கவுன்ட் தருவதாகவும், இந்த டிஸ்கவுன்ட் இன்று ( 13 நவம்பர்) வரை மட்டுமே என்றும் அறிவித்திருந்தது. ஆனால் கூப்பிட்டால் கார் வரவில்லை !!

வேறு வழியின்றி பஸ்ஸில் செல்ல முடிவு செய்தேன். வழக்கமாய் கிளம்புவதை விட 15 நிமிடம் சீக்கிரம் 8.45க்கு கிளம்பியும், 11 மணிக்கு தான் அலுவலகம் வர முடிந்தது. ( 3 மடங்கு அதிக நேரம் !!)

வரும் வழியில் சாலைகள் எங்கிலும் தண்ணீர்.. தண்ணீர்.. தண்ணீர். பஸ்ஸில் செல்கிறோமா அல்லது Underwater விளையாட்டு விளையாடுகிறோமா என சந்தேகம் வந்துவிட்டது..வடபழனி, கோடம்பாக்கம் பாலம் இவற்றை தாண்ட நீண்ட நேரம் ஆகிறது. மேலும் அலுவலகம் இருக்கும் ஸ்டேர்லிங் ரோடு தாழ்வான பகுதி... எனவே நீச்சல் குளம் போல் தண்ணீர். இதில் பல இடங்கள் தண்ணீர் செல்ல ஓட்டைகள் திறந்து வைக்க பட்டிருக்க அவற்றில் விழாமல் வருவது பெரும் சோதனை.. கிட்டத்தட்ட அப்படி ஒரு பள்ளத்தில் விழ வேண்டியது.. எப்படியோ தப்பி அலுவலகம் வந்தேன் !

சரஸ்வதி பிரியதர்ஷினி முகப்பேர் இல்லத்திலிருந்து புழலில் இருக்கும் அலுவலகத்திற்கு - ஆபிஸ் காரில் வருவது வழக்கம். ஆபிஸ் கார் என்பதால் - தவிர்க்க முடியாமல் கார் வந்து விட்டது. வீட்டிலிருந்து கார் பிக் அப் செய்யும் இடம் வரை தினம் ஆட்டோவில் வருவேன்; இன்று எந்த ஆட்டோவும் வர தயாராய் இல்லை; ரொம்ப கஷ்டபட்டு ஒரு ஆட்டோ காரரை சம்மதிக்க வைத்தேன் (ம்ம்ம் ! டபிள் ரேட் தான் !!)

நாங்கள் கார் ஏறும் திருமங்கலம் ஜங்க்ஷன் கொடுமையான நிலையில் இருந்தது. வேறு இடத்தில் எங்களை அழைத்து கொள்வதாக சொல்லி விட்டு கார் டிரைவர் - அந்த இடத்திற்கு வந்தார். ஆபிஸ் வர 20 நிமிடம் வழக்கமாய் ஆகும்.. இன்று ஒரு மணி நேரம் ஆனது.. பயணத்தில் எடுத்த படங்கள் சில இதோ..

க்றிஸ்டினாஎனது அலுவலகம் - மவுண்ட் ரோடு; வீடு- கோவிலம்பாக்கம். மழை காரணமாக ஒரு வாரமாய் கால் டாக்சி மூலம் தான் சென்று வருகிறேன். இன்று ஆபிஸ் செல்ல 3 மணி நேரம் ஆனது. (வழக்கமாய்: 45 நிமிடங்கள்)சென்னை சாலைகளை பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது; தண்ணீர் தான் கண்ணுக்கு தெரிந்தது,.... சாலைகள் அல்ல.. மேலும் சாலைகளில் ஆங்காங்கே பல Pathholes திறந்து கிடப்பதை காண அதிர்ச்சியாக இருந்தது.

போலவே பணக்காரர்கள் ஏரியா என கருதப்படும் கோட்டூர் புரத்தின் கொடுமையான மறுபக்கத்தை இன்று கண்டேன்..  !

அம்பரீஷ் வேளச்சேரியில் வீட்டிலிருந்து கிண்டியில் உள்ள ஆபீசுக்கு பைக்கில் தான் செல்வேன். இன்று மழை அதிகம் என்பதால் காரில் செல்லலாம் என எண்ணி முயன்றால் - எந்த கால் டாக்சியும் வர தயாராய் இல்லை.

வேறு வழியின்றி பைக்கில் சென்றேன்.. நீந்தி சென்றேன் என்று தான் சொல்லவேண்டும்..15 நிமிட பயணம் - இன்று ஒரு மணி நேரம் ஆனது. சாலைகளில் மழை  நீர் ஓடும்போது, அப்படி ஓடாத சாலைகளாக பார்த்து நீங்கள் மாறி மாறி பயணிக்க வேண்டும்.. இதனாலும், அதிக ட்ராபிக் - காரணமாகவும் - பயண நேரம் அதிகமாகிறது

சென்னையில் கழிவு நீர் மற்றும் மழை நீர் வெளியேற போதுமான அளவு வசதிகள் இல்லை. இது தான் மழை நீர் அதிகம் தேங்க காரணம். இப்படி மழை நீர் தேங்கும் போது, அதில் கழிவு நீர் (Drainage water) சேர்ந்து கொள்ள, தோற்று நோய்கள் பரவும் வாய்ப்பு மிக அதிகம்..

கிண்டி மற்றும் ஆதம்பாக்கம் NGO காலனி போன்ற இடங்களில் மரங்கள் விழுந்து கிடப்பதால் - பைக்கில் மட்டுமல்ல காரில் செல்வோரும் கூட - பாதிக்க படுகின்றனர்.

மிக  அதிகம் பாதிக்க படுவது நடந்து செல்வோர் தான். திறந்து கிடக்கும் ஓட்டைகள், மின்சார ஒயர்கள் இருக்குமோ என்ற பயம் வேறு..

ட்ராபிக் போலிசை பெரிதும் குறை சொல்ல முடியாது. மழையில் நின்ற படி - முடிந்த வரை சரியான பாதைகளை சொல்லி தான் அனுப்புகிறார்கள்.

தெருவில் வசிக்கும் விலங்குகள் நிரம்ப பாதிக்க படுகின்றன. அவற்றிற்கு இந்த நேரம் சாப்பிட எதுவும் கிடைப்பதில்லை. சில நாள் முன் நான் மழையில் செல்லும் போது - ஒரு பைக் ஓட்டி - ஒரு பூனை மீது ஏற்றி விட்டு நேரே சென்று விட்டார். தலையில் நல்ல அடி.. பின்னாலேயே வந்த நான் - அதனை ப்ளூ க்ராஸ் எடுத்து சென்றும் அந்த பூனை இறந்து விட்டது. மழையும் காரணமாக இத்தகைய விபத்துகள் - மனிதர்களுக்கும் நடக்கிறது

வேளச்சேரி- தரமணி லிங்க் ரோடு - படகு விடும் நிலையில் தான் உள்ளது; இன்னும் முன்னேற்றம் இல்லை

Velachery- Tharamani link Road...

மிக முக்கியமாக சொல்ல  வேண்டியது - சென்னையில் டிரைனேஜ் சிஸ்டம்- இதனை நாம் இம்ப்ரூவ் செய்தே ஆக வேண்டும்.. இது தான் மழையின் போது வரும் தொந்தரவுகளுக்கு  நல்ல தீர்வை தரும். .
************

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் ! (Thanks: Tamil Hindu - For this part...)


தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் அறிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்.

தெற்கு அந்தமானில் நிலை கொண்டிருந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலையானது மேலும் நகர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் வங்கக்கடலில் தென் கிழக்கே நிலை கொண்டது. இந்த தாழ்வு நிலையானது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். என்பதால் தமிழகத்தில் மழை தொடரும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 34 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புழல் பகுதியில் 21 செ.மீ, மீனம்பாக்கத்தில் 15 செ.மீ., தரமணி, கொலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது." என்றார்.

அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை:
அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய பகுதிகளிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யும். சென்னையில் தொடர்ந்து மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
***********
தொடர்புடைய பதிவு:

சென்னை மழை: நவம்பர் 2015... பல்வேறு இடங்கள்.. பிரத்யேக படங்கள்..

அண்மை பதிவு:

வேதாளம் - விமர்சனம் 

6 comments:

 1. அருமையான தொகுப்பு... உங்க உழைப்புக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. பிளாக் ரிப்போர்ட்டிங் தளமாக மாறுகிறதோ?

  போட்டோக்களை பார்த்தால் பாவமாகதான் இருக்கிறது உங்கள் நிலைமை

  ReplyDelete
 3. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் குப்பைகளால் கழிவுநீர்க்கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகள்தான் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதின் காரணம். மக்களும் சரி, அரசும் சரி இது பற்றி அலட்டிக்கொள்வதே இல்லை. எல்லாற்றிலும் அலட்சியமே.

  ReplyDelete
 4. சென்னை மழையின் அனுபவம் தந்தீர்கள். நன்றி

  ReplyDelete
 5. ஆறு, குட்டை, ஏறி எல்லாவற்றையும் அழித்துவிட்டு குத்துது குடையுது என்றால் என்ன செய்வது இயற்க்கை கொடுத்த பாடம் திருந்தினால் சரி இல்லையென்றால் வரும்காலங்களில் சென்னை வேறு ஒரு இயற்கையின் அனுபவத்தை பெரும், நன்றி

  ReplyDelete
 6. சாறல் மழைக்கே சென்னை தத்தளிக்கும்! இப்போது சொல்ல வேண்டியது இல்லை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...