Sunday, June 3, 2012

முன்னாபாய்: தவறவிடக்கூடாத ஹிந்தி படம் !

சூல் ராஜா எனக்கு மிக பிடித்தமான படம் . ஹிந்தியில் அதன் இரண்டாம் பகுதி Lage Raho Munna Bhai முதல் பார்ட்டை விட மிக நன்கு இருந்ததாக கூறினர். ஆங்கில சப் டைட்டிலுடன் இந்த பட டீவிடீக்காக ரொம்ப நாள் தேடி சமீபத்தில் தான் கிடைத்தது.

கதை

முன்னாவும் அவன் நண்பன் சர்க்யூட்டும் கடன் வாங்கி திரும்ப தராதவர்களை மிரட்டி பணம் வாங்கும் (அதே ) தொழில் செய்கின்றனர். முன்னா ஒரு ரேடியோ ஜாக்கியின் (வித்யா பாலன்) குரலில் மயங்கி கிடக்கிறான். அக்டோபர் 2 -அன்று அவள் ரேடியோவில் காந்தி பற்றி கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்வோரை ஸ்டூடியோவில் சந்திப்பதாக சொல்ல, அவளை சந்திக்க அந்த போட்டியில் கலந்து கொள்கிறான் முன்னா. சில ப்ரொபாசர்களை கடத்தி வந்து அவர்கள் மூலம், ரேடியோவில் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்கிறான். வித்யாவை நேரில் சந்திக்கும் போது தான் ஒரு பேராசிரியர் என்று பொய் சொல்கிறான்.

வித்யாவின் இல்லத்தில் சில வயதானவர்கள் உள்ளனர். அவர்களிடம் வந்து காந்தி பற்றி பேசுமாறு முன்னாவை அழைக்கிறாள் வித்யா. இதற்காக காந்தி பற்றி மூன்று நாள் உறங்காமல் படிக்கிறான் முன்னா. அவனது ஆர்வம் பார்த்து காந்தி நேரில் அவனுக்கு காட்சி தருகிறார். முன்னா தவிர வேறு யார் கண்ணுக்கும் காந்தி தெரிவதில்லை.

காந்தியை அருகில் வைத்து கொண்டு, அவர் மூலம் வித்யா வீட்டில் வயதானோர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தருகிறான் முன்னா. ரேடியோவில் வித்யாவுடன் முன்னா இணைந்து நடத்தும் காந்தி குறித்த நிகழ்ச்சி மிக பிரபலம் ஆகிறது. வித்யாவும் முன்னாவை காதலிக்க துவங்குகிறாள்.

வித்யா தங்கியுள்ள வீட்டை முன்னாவை வைத்து வேலை வாங்கும் " லக்கி" அபகரிக்கிறான். அந்த வீட்டை லக்கியிடம் இருந்து மீட்க அஹிம்சை வழியில் போராடுகிறான் முன்னா.

காந்தி முன்னாவிடம் "பொய் சொல்லி காதலிக்காதே. நீ யார் என்கிற உண்மையை காதலியிடம் சொல்" என்கிறார். மிக தயக்கத்துக்கு பின் வித்யாவிடம் தான் யார் என்கிற உண்மையை சொல்ல, அவள் பிரிகிறாள்.

லக்கி திருந்தினானா? வீடு திரும்ப கிடைத்ததா? வித்யா முன்னாவுடன் இணைந்தாளா?

அனைத்து கேள்விகளுக்கும் பதில் "ஆம்; ஆம்; ஆம்" ! எப்படி என்பதை படத்தில் பாருங்கள் !

நடிப்பு

தமிழில் வந்த முன்னாபாயில் கமல் நடிப்பு நன்றாக இருந்ததாக தான் நானும் நினைத்திருந்தேன்...இந்த படம் பார்க்கும் வரை ! சஞ்சய் தத் என்ன ஒரு இயல்பான நடிப்பு ! இந்த கேரக்டருக்காகவே பிறந்த மனிதர் போல் இருக்கிறார் ! முழுக்க முழுக்க முன்னாபாய் என்று தான் நினைக்க தோன்றுகிறது. நிச்சயம் சஞ்சய் தத்துக்கு இது Lifetime காரக்டர் தான் ! காமெடியாக இருந்தாலும் சரி உணர்வு பூர்வமான காட்சியாக இருந்தாலும் சரி அசத்தி இருக்கிறார் அசத்தி !

முன்னாவின் நண்பனாக வரும் சர்க்கியூட் அர்ஷத் வர்சி. தமிழில் பிரபு நடித்த பாத்திரம். பிரபுவை வைத்து நீங்கள் ஒப்பிடவே முடியாது. ரொம்ப அழகாய் நடித்துள்ளார் . முன்னா தன்னிடம் பொய் சொல்ல மாட்டான் என நம்புவதும், அவன் "காந்தி இங்கே இருக்கிறார்" என்றதும் " முன்னா பொய் சொல்ல மாட்டானே ? காந்தி எங்கே ?" என தேடுவதும் கியூட். ஒரு காட்சியில் முன்னா சர்க்கியூட்டை அடித்து விடுகிறான். காந்தி முன்னாவிடம் " அடிப்பது பெரிய விஷயம் கிடையாது. மன்னிப்பு கேட்பது தான் கஷ்டமானது. அவனிடம் மன்னிப்பு கேள்" என்று கூற, முன்னா சர்க்கியூட்டிடம் அவனது நட்பு எத்தனை உயர்ந்தது என்று சொல்லிவிட்டு மன்னிப்பு கேட்பான். நெகிழ்ச்சியில் சர்க்கியூட்டுக்கு மட்டுமல்ல நமக்கும் அழுகை வந்து விடும் ! இப்படி ஒரு நண்பன் கிடைப்பானா என எங்க வைக்கும் பாத்திரம் சர்க்கியூட் உடையது !

காந்தியாக நடித்தவர் என்னை பெரிதும் கவர வில்லை. ஒப்பனை பொருந்தாத மாதிரி எண்ணம். ஏனோ மனதில் ஒட்டவில்லை.

வித்யாவுக்கு சுவீட்டான பாத்திரம். இன்றைக்கு வித்யா ஹிந்தியில் சூப்பர் டூப்பர் ஹீரோயின். ஆறு வருடம் முன் இந்த படம் வந்த போது சாதாரண ஆள் தான். ஸ்பெஷலாக ஏதும் இல்லா விடினும் தன பாத்திரத்தை நிறைவாய் செய்துள்ளார்.

முதல் பார்ட்டில் வில்லனாக (டாக்டர்- ஹீரோயினின் தந்தை) வந்த அதே போமன் இராணி இதில் லக்கி என்கிற வில்லன் பாத்திரம். முதல் பார்ட் பாத்திரத்தின் சாயல் அல்லது நினைவு சிறிதும் வராத மாதிரி அருமையாக நடித்துள்ளார்.

காந்தி குறித்த படம் என்பதாலோ என்னவோ படத்தில் எந்த ஒரு சண்டை காட்சியும் இல்லை ! முதல் பாதியில் ரசித்து சிரிக்கிற மாதிரி காமெடி காட்சிகள் பல உண்டு.

படத்தின் மிக முக்கிய ஒரு காட்சி பற்றி சொல்ல வேண்டும். முன்னா ரேடியோ ஜாக்கியாக இருக்கும் போது ஒருவன் போன் செய்கிறான். தன் தந்தை பணத்தில் சில லட்சம் எடுத்து அவருக்கு தெரியாமல் தான் பங்கு சந்தையில் போட்டு முழுதும் லாஸ் ஆனதாகவும், இதனால் வெறுத்து போய் தற்கொலை செய்ய போவதாகவும் சொல்கிறான். அவனிடமும் அவன் தந்தையிடம் போனில் முன்னா பேசும் அந்த ஐந்து நிமிட காட்சி பார்க்கும் யாரையும் உருக்கி விடும்.

போலவே படத்தின் க்ளைமேக்ஸ். மிக இக்கட்டான சூழ்நிலையில் ஓர் உண்மையை சொல்ல வேண்டிய நிலை. இதனால் வில்லனின் மகள் திருமணமே நிற்கும் சூழல். உண்மையை சொன்னாலும் கூட அந்த திருமணம் நிற்காத படி, போராடி ஜெயிக்கிறான் முன்னா. இன்னொரு நெகிழ்வான காட்சி இது.

படத்தை எழுதி இயக்கிய ராஜ்குமார் ஹிராணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும் !

12 கோடியில் தயாரிக்க பட்ட இப்படம், அதை போல் பத்து மடங்கு வசூலை குவித்தது. காந்தியடிகளின் கருத்துக்களை இன்றைய இளைய சமுதாயத்திடம் எடுத்து செல்ல இந்த படம் உதவியது

நெகிழ்ச்சியில் உங்களை அழ வைக்கும் இந்த படத்தை, ஏதாவது ஒரு வார இறுதியில் நிதானமாய் பார்த்து ரசியுங்கள் !

##########
வல்லமை மே 11 இதழில் வெளியான விமர்சனம்

17 comments:

  1. கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் பார்ப்போம் ..!

    ReplyDelete
  2. சாஜன் தவிர சஞ்சய் தத் நடித்த எந்தப் படமும் பார்த்ததில்லை!

    ReplyDelete
  3. அருமையான விமர்சனம்.
    நன்றி.

    ReplyDelete
  4. இந்தப் படம் பார்த்திருக்கிறேன். உங்க விமரிசனம் படத்தை விட நல்லா இருக்குங்க :)

    ReplyDelete
  5. எங்க வீட்டுத் தியேட்டர்ல பார்ட்-1, பார்ட்-2 ரெண்டுமே நூறு நாள் ஓடியிருக்குது :-))))

    காந்திகிரி ஜிந்தாபாத் :-))))

    ReplyDelete
  6. முன்னாபாய் இரண்டுமே ஹிந்தியில் பார்த்திருக்கிறேன். உங்கள் விமர்சனம் அருமை.

    நிச்சயம் கமல்-பிரபு வசூல் ராஜாவில் செய்ததை விட சஞ்சய்தத் - அர்ஷத் வார்சி நன்றாகவே செய்திருந்தார்கள்....

    லகே ரகோ முன்னாபாயும் நல்ல படம். நிச்சயம் பார்க்கலாம். முன்னாபாய் சலே அமெரிக்கா என்று மூன்றாவதாக ஒன்று வரவிருந்தது ஆனால் வரவில்லை என நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. மோகன்,

    என்னமோ இப்போ தான் தியேட்ட்ர்ல ஓடிக்கிட்டிருக்க படம் போல தவறவிடாதிங்க சொல்றிங்க :-))

    மூன்றாவது பகுதியும் வரப்போவதாக தகவல் ஓடிக்கிட்டு இருக்கு.

    முன்னா பாய் கதாபாத்திரம் சஞ்சய் தத்துக்கு நன்றாக பொருந்தக்காரணம் இயல்பாகவே இருக்கிற ஒரு முரட்டு இமேஜ் எனவும் சொல்லலாம்.

    படம் வெற்றியடைய முக்கியமான காரணம், மொழி தெரியாதவர்களுக்கும் படம் புரியும் வகையில் இருப்பதே.

    // மிக தயக்கத்துக்கு பின் வித்யாவிடம் தான் யார் என்கிற உண்மையை சொல்ல, அவள் பிரிகிறாள். //

    லக்கி சிங்க் முன்னா என்னோட ஆள் நான் அனுப்பி தான் வந்தான் என்பதாக சொல்லவே தான் பிரிவதாக வரும் என நினைக்கிறேன்.கோவா போய் வந்ததும் வீடு அபகரிகப்பட்டது நடக்கும் அதனை தொடர்பு படுத்தி சொல்லிவிடுவார் லக்கி சிங்க்(பொமன் இரானி)

    லக்கி சிங்கை திருத்த "கெட்வெல் சூன் லக்கி "என எல்லாரும் மெசேஜ் சொல்லுவதும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  8. நன்றி வரலாற்று சுவடுகள். பாருங்கள்

    ReplyDelete
  9. ஸ்ரீராம்: வசூல் ராஜா படம் ரெண்டு பார்த்தும் முடியும் போது பாருங்கள். நிச்சயம் சஞ்சய் தத்தை ரசிப்பீர்கள்

    ReplyDelete
  10. நன்றி ரத்னவேல் ஐயா

    ReplyDelete
  11. நன்றி அப்பா துரை. மகிழ்ச்சி

    ReplyDelete
  12. அமைதி சாரல் : அப்படியா? நான் முதல் பார்ட் இன்னும் ஹிந்தியில் பாக்கலை

    ReplyDelete
  13. மேலதிக தகவல்களுக்கு நன்றி வெங்கட்

    ReplyDelete
  14. வவ்வால் : லக்கி முன்னா பற்றிய உண்மையை சொல்கிறேன் என மிரட்ட, அதற்கு முன் முன்னாவே சொல்லி விடுவான். நல்ல படம் என்பதால் லேட் ஆனாலும் எழுதினேன். DVD-ல் எப்போது வேண்டுமானாலும் வாங்கி பாக்கலாமே என்ற எண்ணம் தான்

    ReplyDelete
  15. Anonymous10:55:00 PM

    தியேட்டரில் நான் பார்த்த முதல் முழுநீள ஹிந்தி நகைச்சுவை படம் இதுதான். ‘முன்னாபாய் சலே அமெரிக்கா’ எனும் டைட்டிலுடன் மூன்றாம் பாகம் எடுக்க முடிவு செய்து கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    ReplyDelete
  16. அருமையான விமர்சனம் ! நன்றி !

    ReplyDelete
  17. //நான் முதல் பார்ட் இன்னும் ஹிந்தியில் பாக்கலை//

    கிடைச்சா தவற விடாதீங்க, முதல் காட்சியிலிருந்து கடைசிக்காட்சி வரைக்கும் சிரிச்சுச்சிரிச்சு வயித்து வலி வந்துரும் :-)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...