Saturday, November 24, 2012

தூக்கு தண்டனை தேவையா? ஒரு விவாதம்

ட்டக் கல்லூரியில் கடைசி வருடம் படிக்கையில் மாணவர்கள் அனைவரும் சனிக்கிழமைகளில் குறிப்பிட்ட தலைப்பில் விவாதம் செய்வோம். படிப்பு முடிந்து கோர்ட்டுக்கு செல்கையில், நீதிபதி முன் விவாதம் செய்ய உதவியாக இருக்கும் என்பதால், நாங்களாகவே செய்து கொண்ட ஏற்பாடு இது. ஒவ்வொரு வாரம் ஒரு மாணவன் தலைப்பு தந்து விட்டு நீதிபதி போல் அமர்ந்திருப்பான். இரு பக்க விவாதமும் கேட்டு இறுதியில் தீர்ப்பு கூறுவான். அப்படி நாங்கள் விவாதித்த தலைப்புகளுள் ஒன்று : “தூக்கு தண்டனை தேவையா? ” 20 ஆண்டுகள் கடந்தும் அதே விவாதம் தொடர்கிறது. அன்று நாங்கள் விவாதித்தது சண்டையிட்டது போல் இன்றும் இணையத்தில் நடக்கிறது. அப்போது பேசிய அதே காரணங்கள் தான் இன்றைக்கும் பேசப்படுகிறது. ஒவ்வொரு முறை இந்தியாவில் யாருக்கேனும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வந்தால் இந்த விவாதம் எழும்பும்.

இரண்டு பக்கமும் இருக்கும் நியாயத்தை முதலில் பார்த்து விடுவோம்

மரண தண்டனை தேவையில்லை என்று சொல்வோர் கூறும் காரணங்கள் :

ஒருவர் கையை இன்னொருவர் வெட்டி விட்டார் என்றால், வெட்டியவர் கையை வெட்டுகிறோமா என்ன ? உயிரை எடுத்தவர் உயிரை மட்டும் எடுப்பது ஏன்?

ஒரு அரசுக்கு ஒரு மனிதனின் உயிரை எடுக்க உரிமை இல்லை (இது மிக முக்கிய கேள்வி; உச்ச நீதிமன்றம் வரை இக்கேள்வி ஒலித்து, உச்ச நீதிமன்றம், மனித உயிர்களை காக்கும் பொறுப்பு கொண்ட அரசுக்கு, அதே உயிரை எடுக்கவும் உரிமை உண்டு என தீர்ப்பு கூறியது)

ஏராள நாடுகளில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஒரு மனிதன் நிச்சயம் திருந்தி விடுகிறான். அப்படி முழுதும் திருந்திய ஒருவனை கொல்வது எப்படி சரியாகும்?

மரண தண்டனை வேண்டும் என்று சொல்வோர் சொல்வது:

97 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது என்று சொன்னாலும் இன்னும் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் அது இருக்கிறது தானே !

இந்தியாவை பொறுத்த வரை அரிதிலும் அரிதான வழக்கில் தான் (Rarest of rare Cases) தூக்கு தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 1983-ல் கூறியதே வேதவாக்காக இருக்கிறது. நாம் சில நாடுகள் போல பெண்களை தவறாக அணுகினாலோ, திருடினாலோ கூட தூக்கு தண்டனை தருவதில்லையே.. !
****
இதனை எழுதும் எனது நிலை என்ன என்று கேட்கிறீர்களா?

இந்தியாவில் மரண தண்டனை குறித்தான இப்போதைய நிலைப்பாடு தான் மிகச் சரி என்று கருதுகிறேன்.

கொலை, நாட்டுக்கெதிரான போர் போன்ற மிக மோசமான குற்றசாட்டுகளுக்கு தான் மரணதண்டனை விதிக்கப்படுகிறது. கடந்த பல வருடங்களில் நிரபராதி யாரும் தூக்கிலிடப்பட்டதாக நினைவு இல்லை. மாறாக " இவருக்கு இந்த அளவு பெரிய தண்டனை தேவையில்லை- தூக்கே தேவையில்லை " என்ற குரலே எழுகிறது.

உலகில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட முதல் நான்கு நாடுகளான சீனா, இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா ஆகிய நான்கிலுமே மரண தண்டனை ஒழிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

****

இந்தியாவில் கடந்த 18 ஆண்டுகளில் இதுவரை மூன்று பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

ஆட்டோ ஷங்கர் -1995 ல்
தனன்ஜய் சாட்டர்ஜி - 2004 ல்
கசாப் - 2012 ல்
(Source : http://en.wikipedia.org/wiki/Capital_punishment_in_India)
****
கசாப் வழக்கை விட்டு விடுவோம். அது மிக அசாதரணமான அரிதான வழக்கு. தனி நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு தந்தது.

ஒரு கொலை வழக்கை எடுத்து கொண்டு அதில் எப்படி தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது என்று பார்ப்போம்.

தஞ்சையை சேர்ந்த ஒருவர் குடும்ப பகை காரணமாக இன்னொரு குடும்பத்தில் ஏழு பேரை வெட்டி கொன்றார் எனில், இந்த வழக்கு முதலில் தஞ்சை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு,குற்றம் முழுமையாக நிரூபணமானால், தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. பின் சென்னை உயர் நீதி மன்றத்தில் அப்பீல் செய்யப்படும். அங்கும் தூக்கு உறுதியானால், உச்ச நீதி மன்றத்துக்கு வழக்கு செல்கிறது. அங்கும் உறுதி செய்தால், ஜனாதிபதி முன் கருணை மனு தாக்கல் செய்வர். உள்துறை அமைச்சம் பரிந்துரை அடிப்படையில் ஜனாதிபதி மனுவை ஏற்கிறார் அல்லது நிராகரிக்கிறார்.

இப்படி பல நிலைகளை கடந்தே தூக்கு உறுதியாகிறது. இந்த வழக்கில் தீர்ப்பு சொல்லும் ஒவ்வொரு நீதிபதியின் மனநிலையை யோசித்துப் பாருங்கள். ஒரு உயிரை எடுக்க சொல்லி, எந்த ஒரு நீதிபதியும் (அவரும் மனிதனே) அவ்வளவு எளிதில் சொல்லி விடுவதில்லை. அலட்சியமாக டீல் செய்யும் விஷயமல்ல இது.. அதன்பின் வாழ்நாள் முழுதும் அவர் குற்ற உணர்வில் புழுங்க வேண்டும். பல முறை பல விதத்திலும் யோசித்த பின் தான் தூக்கு தண்டனையை ஒரு நீதிபதி உறுதி செய்கிறார்.

மிக முக்கியமான விஷயம்: வழக்கு இப்படி ஒவ்வொரு நீதிபதியாக செல்லும் போது, ஒருவர் தூக்கை ரத்து செய்தாலும் அந்த மனிதன் பிழைக்க முடியும்..

நாமே மூன்று மாதங்களுக்கொரு முறை செஷன்ஸ் நீதிமன்றம் யாருக்கேனும் தூக்கு என தீர்ப்பு வழங்குவதை செய்தி தாளில் படிக்கிறோம். ஆனால் சராசரியாக ஆறு ஆண்டுக்கு ஒரு முறை தான் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்றால், செஷன்ஸ் கோர்ட்டால் தூக்கு விதிக்கப்பட்ட மற்றவர்கள்? அநேகமாய் அந்த வழக்கு உயர், உச்ச நீதி மன்றத்தில் ஆயுள் தண்டனையாய் மாற்றப்பட்டிருக்கும் !

தனது பதவி காலம் முடிய சற்று முன் பிரதீபா படீல் அம்மையார் ஏராள தூக்கு தண்டனை கைதிகளை ஆயுள் தண்டனையாக மாற்றினார். அப்படி அவர் மாற்றி உத்தரவிட்ட ஒருவர் - சிறுமியை கற்பழித்தவர் -அவர் ஆயுள் தண்டனையாக மாற்றும் முன்பே எயிட்ஸ் நோயால் இறந்து போயிருந்தார் !

ஐ.நா வில் ஐந்து நாடுகளுக்கு மட்டும் இருக்கும் வீட்டோ பவர் (Veto Power) போல ஒவ்வொரு நீதிபதிக்கும் அந்த வீட்டோ பவர் இருக்கிறது. அனைத்து நிலையில் உள்ள நீதிபதிகளும், உள்துறை அமைச்சகமும், ஜனாதிபதியும் ஆம் சொன்னால் மட்டுமே ஒரு மரணதண்டனை நிகழ்கிறது.

மரண தண்டனை பெறுவோரில் அநேகமாய் அனைவரும் இறுதி காலத்தில் மனம் திருந்தி விடுகிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் “தான் நிச்சயம் இறக்க போகிறோம் “என்று தெரிவதால் நிகழ்கிற மாறுதல் தான் இது. மரண தண்டனை பெறாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால் அந்த மனமாற்றம் நிகழுமா என்பது கேள்விக்குறியே.

தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் கொடுப்போர் சொல்லும் மற்றொரு விஷயம்: எல்லா குற்றவாளிக்கும் தண்டனை கிடைக்கிறதா? அவரை போல தவறு செய்தோர் எத்தனையோ பேர் இருக்க, அதெப்படி ஒரு சிலரை மட்டும் தூக்கில் போடலாம்?

நண்பரே, ஒருவன் திருடுகிறான். கையும் களவுமாய் மாட்டி கொள்கிறான் என்றால், அவன் உடனே " நாட்டில் திருடி விட்டு கைதாகாமல் இருக்கும் அத்தனை பேரையும் கைது செய்து விட்டு அப்புறம் என்னை கைது செய்யுங்கள் " என்று சொல்ல முடியாது. சட்டம் ஒருவன் செய்தது தவறா என்று மட்டும் தான் பார்க்குமே ஒழிய, அதே தவறு செய்து விட்டு வெளியே இருப்போரை பற்றி நினைத்தால் நாட்டில் ஒருவருக்கும் சிறு சிறை தண்டனை கூட கொடுக்க முடியாது.

மரண தண்டனை என்கிற பயம் இருப்பதால் தான் சமூகத்தில் குற்றங்கள் ஓரளவாவது கம்மியாய் இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் தூக்கு தண்டனை இல்லை என்றால் எந்த தவறும் செய்யாத ஐநூறு பேராவது ஒவ்வொரு வருடமும் அதிகமாக பலியாகக்கூடும். ஆறாண்டுக்கு ஒரு முறை சர்வநிச்சயமாக தவறு செய்த ஒருவர் தூக்கில் இடப்படுவது பரவாயில்லையா அல்லது தூக்கு தண்டனை இல்லை என்ற நிலையினால் வருடம் ஐநூறு உயிர்கள் போவது பரவாயில்லையா?

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால்: என்னை பொறுத்த வரை : யாரையும் தூக்கில் கூட போடவேண்டாம். ஆனால் தூக்கு தண்டனை என்கிற ஒன்று சட்டத்திலும், பேப்பரிலுமாவது இருக்க வேண்டும். மரண பயம் என்பது குற்றம் புரிய நினைப்போருக்கு நிச்சயம் சற்று யோசிக்க வைக்கும். (அந்த கணத்தில் கோபப்பட்டு குற்றம் புரிவோருக்கு சட்டமே தூக்கு தருவதில்லை. திட்டமிட்டு, பல நாள் குற்றம் புரியும் மனநிலையை sustain செய்வோருக்கு தான் தூக்கு கிடைக்கும்) பெண் குழந்தைகளை கற்பழிப்போர், பணத்துக்காக குழந்தைகளை கடத்தி,  கொல்வோருக்கெல்லாம் மரண தண்டனை அவசியமே !

இந்தியாவில் மரண தண்டனை விஷயத்தில் நான் விரும்பும் ஒரே மாறுதல்: மரண தண்டனை நிறைவேற்றப்படும் முறை தான் ! தூக்கில் தொங்க விட்டு ஒரு மனிதனை கொல்வதை விட, விஷ ஊசி போட்டு கொல்வது , அந்த மனிதன் அதிகம் துன்பப்படாமல் இறக்க முடியும்.

மரண தண்டனை நிறைவேற்றப்படுவோர் தூக்கில் போடும் நேரம் எப்படி துன்பப்படுவோம் என்பதற்கு தான் மிக அதிகம் பயப்படுவதாக, சி. ஏ பாலன் எழுதிய தூக்கு மர நிழலில் என்ற நூலில் வாசித்துள்ளேன்.

இந்தியாவில் சில பிராந்திய கட்சிகளை தவிர, காங்கிரஸ், பா. ஜ. க போன்ற முக்கிய கட்சிகள் தூக்கு தண்டனை தேவை என்றே நினைப்பதால், மக்களில் ஒரு சாரார் என்ன தான் தூக்கு தண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்று எழுதினாலும், பேசினாலும், அவ்வளவு சீக்கிரம் அது ஒழிக்கப்படும் என்று தோன்றவில்லை.

****
இந்த விவாதம் எவ்வளவு நாள் வேண்டுமானால் விவாதிக்கலாம். இரண்டு பக்கமும் பேச ஓராயிரம் காரணங்கள் இருக்கும். இந்த பதிவின் இறுதியில் நீங்கள் உங்கள் கருத்துகளை தாராளமாய் சொல்லலாம். ஒவ்வொன்றுக்கும் நான் பதில் விவாதம் செய்ய வேண்டும் என்று மட்டும் தயவு செய்து எதிர்பார்க்க வேண்டாம் !
**
கட்டுரையை துவங்கிய இடத்திலேயே முடிக்கலாம்.

சட்ட கல்லூரியில் அன்றைய விவாதத்தில் தூக்கு தண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்று ஆணித்தரமாய் பேசிய ஒருவரை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆம்..! இந்த கட்டுரையை இன்று எழுதியது அவர் தான் !

மாறுதல் ஒன்றே மாறாத ஒன்று!

34 comments:

 1. மனச்சாட்சி விட சிறந்த தண்டனை எதுவும் கிடையாது...

  ஆனால் மனச்சாட்சியே இல்லாதவர்களை வேறு என்ன செய்வது...?

  விளக்கங்களுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன்

   Delete
 2. ஒரு உருப்படியான இடுகை மோகன், வாழ்த்துக்கள்

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம்

   Delete
 3. உங்கள் புரிதல் சரியில்லை. ஆட்டோ ஷங்கர் செய்த அதே கொலைகளை செய்திருந்து, முழுவதும் நிரூபிக்கப்பட்டாலும், அவருக்கு "மரனதண்டனை" கொடுக்க முடியாது அமெரிக்காவில்..இந்த மாகானங்களில்:
  The following seventeen U.S. states do not currently have an enforceable death penalty statute:
  Alaska
  Hawaii
  Illinois
  Iowa
  Maine
  Michigan
  Minnesota
  New Jersey
  North Dakota
  Rhode Island
  Vermont
  West Virginia
  Wisconsin
  Massachusetts
  Connecticut
  New Mexico
  New York
  The District of Columbia also has no death penalty. The current law in Arkansas was overturned on separation of powers issues but the death penalty was not ruled unconstitutional.[24]

  இதில் சொல்வது என்னவென்றால், பொத்தாம் பொதுவாக, அமெரிக்காவில் மரண தண்டனை உண்டு என்று சொல்வது தவறு. மேலே கூறியுள்ள மாகானங்களில் "ஆட்டோ ஷங்கர் வசித்து அவர் ஓராயிரம் கொலைகள் செய்தாலும்" அவருக்கு மரண தண்டனை வழங்க முடியாது!
  அதிக பட்சம் ஆயுள் தண்டனை தான்! அதான் அமேரிக்கா...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நம்பள்கி

   அப்போ அங்கு மீதமுள்ள 37 மாகாணங்கள்? 37 மாகாணங்களில் ஒழிக்கப்படவில்லை என்றால் அங்கும் அது தானே மெஜாரிட்டி கருத்தாய் உள்ளது?

   அதிக மக்கள் தொகை கொண்ட நான்கு நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்படவில்லை என்கிற வரி விக்கிபீடியா மூலம் தான் எனக்கு தெரிந்தது. அந்த நான்கு நாடுகள் பெயரோடு விக்கிபீடியா எழுதியதை இங்கு பகிர்ந்திருந்தேன்

   http://en.wikipedia.org/wiki/Capital_punishment

   அமெரிக்காவில் சில மாகாணங்களில் ஒழிக்கப்பட்டது என்ற தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி !

   Delete
 4. மரண தண்டனை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி கொடூர குற்றங்கள் பண்ணுபவர்கள் அதை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.தூக்கில் போட்டுவிடுவார்கள் என பயந்து யாரும் குற்றம் பண்ணாமல் இல்லை. கோயமுத்தூர் குழந்தைகள் கடத்திகொலை சம்பவத்தைப்போல் இன்னும் 10 என்கவுண்டர் போட்டால் கொஞசம் பயம் வரும்

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி உமா

   Delete
 5. என்னதான் அரசாங்கம் சட்டம் கொண்டுவந்தாலும் நாட்டில் தவறு செய்கிறவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் இப்போது இருக்கும் காலகட்டத்தில் இன்னும் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. வாங்க தொழிர்களம் கருத்துக்கு நன்றி

   Delete
 6. தவறு மோகன்; இது மெஜாரிட்டி இல்லை; இது இந்தியா இல்லை; இது United States of America; தமிழில் சொல்வதென்றால், மாகானங்னகள் ஒன்றாக குடும்பம் நடத்துகிறோம்; பிடிக்கவில்லை என்றால் ரத்து செய்தவிடுவோம்.

  இந்தியா மாதிரரி article 356 or 365 புடல்னகா இங்கு கிடையாது. எப்படி புரியவைக்கிறது; சரி இப்ப தமிழ் நாட்டை இந்தியா நடதுகிராமாதிரி நடத்தினால் நாங்க என்னிக்கோ அமெரிக்காவை விட்டு வெளியேறி கனடா உடன் கூட சேர்ந்து கொள்வோம்! இல்லை தனியாக வாழ்வோம். மேலும், உங்க கணக்குப் படி 33 மாகானனகள் 37 அல்ல!

  Our federal govt. has very limited powers.
  Even divorce laws, marriage laws, alimony laws, criminal proceedings, child support laws, statute of limitations, etc differ from state to state.


  [[மோகன் குமார்9:29:00 AM

  நன்றி நம்பள்கி

  அப்போ அங்கு மீதமுள்ள 37 மாகாணங்கள்? 37 மாகாணங்களில் ஒழிக்கப்படவில்லை என்றால் அங்கும் அது தானே மெஜாரிட்டி கருத்தாய் உள்ளது?]]

  ReplyDelete
  Replies
  1. அண்ணாச்சி: 37 மாகாணங்கள் என்று சொன்னதும் விக்கியில் இருந்து தான்

   http://en.wikipedia.org/wiki/Capital_punishment_in_the_United_States

   //The death penalty is currently a legal sentence in 37 states and in the federal civilian and military legal systems.//

   தங்கள் விளக்கத்துக்கு மீண்டும் நன்றி

   Delete
 7. \\தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஒரு மனிதன் நிச்சயம் திருந்தி விடுகிறான்.\\ என்ன சொல்ல வர்றீங்க? அதெப்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதாலேயே ஒருத்தன் திருந்தியவனாவான்? இது எனக்கு புரியவில்லை.

  \\மரண தண்டனை பெறுவோரில் அநேகமாய் அனைவரும் இறுதி காலத்தில் மனம் திருந்தி விடுகிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் “தான் நிச்சயம் இறக்க போகிறோம் “என்று தெரிவதால் நிகழ்கிற மாறுதல் தான் இது.\\ இதை நம்புவதற்கில்லை. கசாப்பை வெளியில் விட்டால் அவன் இன்னும்நூறு குண்டு வேண்டுமானாலும் வைப்பான்.

  \\ இந்தியாவில் மரண தண்டனை விஷயத்தில் நான் விரும்பும் ஒரே மாறுதல்: மரண தண்டனை நிறைவேற்றப்படும் முறை தான் ! தூக்கில் தொங்க விட்டு ஒரு மனிதனை கொல்வதை விட, விஷ ஊசி போட்டு கொல்வது , அந்த மனிதன் அதிகம் துன்பப்படாமல் இறக்க முடியும்.\\ மன்னர்கள் காலத்தில் கழுவேற்றுதல் என்ற முறை இருந்திருக்கிறது. உயரமான கூரான கம்பியில் மேல் குற்றவாளியை அவனது ஆசனத்தில் கம்பி நுழையுமாறு உட்கார வைத்து விடுவார்கள், அவன் எடை காரணமாக கம்பியில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்குவான், அப்படியே அவன் சாவான், உணவு தண்ணீர் எதுவும் தரப்பட மாட்டாது. இது ஒரு கொடுமையான முறைதான், ஆனாலும் இது எல்லோரும் பார்க்கும் வண்ணம் நிறைவேற்றப் படும். இதை பார்க்கும் மற்ற prospective குற்றவாளிகள் எவனும் குற்றம் புரிய வேண்டுமென்று நினைக்க மாட்டான். ஒருத்தன் சித்திரவதைப் பட்டு செத்தான் என்பது உணமை ஆயினும் நூற்றுக் கணக்கான் பெண்கள் கற்ப்பு காக்கப் படும், ஆயிரக் கணக்கான உயிர்கள் மடிவது தடுக்கப் படும் என மன்னர்கள் நம்பினார்கள். நீ எத்தனை குண்டு வேண்டுமானாலும் வை, உனக்கு நூற்றுக்கணக்கான கோடிகள் செலவு செய்து பாதுகாப்பு குடுப்பேன், அப்புறம் நோகாம சாகடிப்பேன் என்றால் இன்னமும் நூறு கசாப்புகள் தான் வருவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. எளிதில் மரணம் என்றால் மரண தண்டனை மீதான பயமே போய்விடும் என்பது ஒரு வித்யாசமான கோணம் !

   ஆட்டோ ஷங்கர் பற்றி பல விஷயங்களை வெளிக்கொண்டு வந்த ஜூனியர் விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியம் அவன் இறக்கும் முன் அவனை சந்தித்து விட்டு " அவன் மிக திருந்தி விட்டான்; திருந்தியவனை தூக்கில் போடுகிறோம்" என எழுதினார்

   தான் இறக்க போகிறோம் என்பது முடிவானதும் மனிதன் தன் தவறுகளை உணர்ந்து வருந்துகிறான் திருந்துகிறான் என்ற எண்ணத்தில் தான் அப்படி எழுதினேன்

   Delete
 8. மரண தண்டனையில்லை என்று கூறும் மதவாத நாடுகளில் ஒருவன் நாத்திகம் பேசினாலோ..!கடவுளைப் பழித்தாலோ......!மதவாதிகளோ,தீவிரவாதிகளோ அவனைக் கொல்வார்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரேஷ் நன்றி

   Delete
 9. Anonymous10:41:00 AM

  சில விதிவிலக்குகளை தவிர்த்து மரண தண்டனை தேவைதான்.

  ReplyDelete
 10. தூக்கு தண்டனையை ரொம்ப வருடங்கள் தள்ளி போடுவது தான் மிக தவறான ஒன்றாகும்.......இதனால் ஒருவன் எத்தனை பேரை கொன்றாலும்,அவனுக்கு எப்படியும் குறைந்தது 5 அல்லது 6 வருடம் நம்மை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் அவன் மீண்டும் யார் மூலமாவது அதை திருப்பியும் செய்வான்.....அதற்கு ஒரே தண்டனை அவன் தப்பு செய்த அதே இடத்திலேயே உடனடியாக அவனுக்கு மிக சரியான தண்டனை கிடைக்க வேண்டும்...அப்படி நடந்தால் மட்டுமே இது போன்ற தவறுகளை எல்லாம் ஒழிக்க முடியும.......

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 11. தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தான் தவறுகள் குறையும் என்கிறார்கள். என்னதான் நம் பேசினாலும் தவறுகள் குறைந்தபாடில்லை.. தவறுகளின் பாதை தான் நவீனமயமாகிகொண்டே போகிறது..

  தெரியாமல் செய்யவேண்டி, பல உன்னத(?) முறைகளை கையாள்கிறார்கள். இந்த லட்சணத்தில் தூக்கு என்பது பேப்பரில் கூட இல்லையென்றால், நம் ஆட்கள் பகிரங்கமாகவே கொடுமைகளை செய்வார்கள்...
  மேலும் இருக்கவே இருக்கிறது ஆயிரம் தலைவர்கள் பிறந்த நாள், நினைவு நாள்.. வெளியே வர வழியா இல்லை??...

  ReplyDelete
  Replies
  1. சமீரா: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 12. கசாப்புக்கு தூக்கு என்றதுமே, இந்த காந்தியவாதிகள் கிளம்பிவிடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். நடந்தது.

  ஒரு சிறுமியை சீரழித்து கொன்றவனை, என்கவுன்ட்டரில் போட்டு தள்ளியதையே எதிர்த்தவர்கள் வாழும் ஊர் இது. தனக்கு வந்தாதான் தெரியும் தலைவலி எப்படி இருக்கும்னு.

  இந்த தப்பு பண்ணா, உயிர் போயிடுங்கற பயம் இருக்கணும். அப்போதான், ஒவ்வொருத்தருக்கு உள்ளேயும் இருக்கற மிருகம் வெளியே வர பயப்படும்.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி ரகு நீங்கள் சொல்வது உண்மையே

   Delete
 13. பயமில்லாத உலகத்தில் ஒழுங்கு, கட்டுப்பாடு இருக்காது. கொஞ்சம் கொஞ்சமாகவேனும் குறைந்து விடும். ஜெ.தாஸ் கருத்தும் சரிதான்.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்

   Delete
 14. மன்னிக்க வேண்டும் நண்பரே. பொதுவாக இந்தியாவில் உயிரிக்கு மரியாதை கிடையாது. உதாரண்ங்களுக்கு குறைவே இல்லை. அதே சந்திப்பிலோ, ரயில் க்ராஷிங்கிலோ சாலை விபத்தாக்ட்டும், கட்டிடங்களில், பால பள்ளிகளில் தீ விபத்தாகட்டும், கட்டிடங்கள், பாலங்கள் இடிவதாகட்டும், போலி மருந்தால் ஆயிரக்கணக்கில் மடிவோராகட்டும், வெள்ளம் புயலால் சாவாராகட்டும், சமுதாயத்தின், அரசு ஊழியர் மெத்தனதால் பசியால், பட்டினியால் மண்ணாவார் ஆகட்டும், மருத்துவரின் தவறுகளினால், அறியாமைகளினால், அலட்ச்சியத்தால் பரலோகத்துக்கு டிஷ்சார்ச் ஆவோராகட்டும், ரவுடிகளினால், தீவிரவாதிகளினால் தீர்துக்கட்டபடுபவர்களாக இருக்கட்டும், திருவிழாக்களில் மிதிபட்டு மோட்சமடைவோராகட்டும், தீ குளிக்க வைக்கபடுவோராகட்டும், திட்டமிடாததால் இலட்ச்ச கணக்கில் கருவறையாம் திருவறையில் கொல்லப்படும் சிசுக்களாகட்டும் கணக்கே இல்லை.
  In India we come to accept that a bridge will fall this week, lorries will drive into 10 motor bikes in the city today, 10 huts will burn this week with people in them, பல்லி will fall and poison a school full of kids this year etc.
  We never value life enough find out who is liabile and how it can be prevented in other cases.

  Even when it is our own loss, we just cry and moan and say it's fate because we are intellecutally lazy and bankrupt or lack the courage to speak out.

  It is not a human failing, it is Indian failing. In some parts of the world, people simply won't accept it and will fight to get it fixed.

  I agree we cannot solve all the problems before addressing any one problem. However, the moral outrage assigned to death penalty by the elite is disproportionately high compared to the number of innocents killed in these other ways.

  If you ask the common man, they will say fix all these other unnecessary deaths first then be outraged as mush as you want about death penalty.

  ReplyDelete
  Replies
  1. ஷன்முகநாதா: விரிவான உன் குருத்துக்கு மிக மிக நன்றி

   Delete
 15. படு பாதக செயல்களுக்கு மன்னிப்பு தந்து கொண்டிருந்தால் பயமில்லாமல் போய் குற்றம் அதிகரித்து விடும். சில விதிவிலக்குகள் தவிர்த்து மரணதண்டனை தேவையே! கசாப்பிற்கு மரண தண்டனை விதித்ததும் நியாயமாகவே தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்

   Delete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. விழிப்புணர்ச்சியுடன் தகுந்த நேரத்தில் தரமான பதிவு ௧,புள்ளி விபரங்களுடன் தகவல்கள் தந்தமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்க கண்ணதாசன் சார் கருத்துக்கு மிக்க நன்றி

   Delete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. சாகாவரம் பெற்ற debate topicகளில் ஒன்று.

  அமெரிக்காவில் பல மாகாணங்களில் தூக்குத் தண்டனை கிடையாது. சுப்ரீம் கோர்ட் இந்தத் தண்டனையை இன்னும் ஒடுக்கவில்லை.

  சில குற்றங்களின் motive மற்றும் social impact பொறுத்து தூக்குத்தண்டனை வழங்கப்பபட வேண்டும். redemptionக்காகத் தண்டனை இல்லை.

  தூக்குத்தண்டனை எதிர்ப்பின் பின்னணியில் மதம்/கடவுள் கொள்கைகள் இருப்பதைப் பற்றிச் சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...