Friday, February 1, 2013

கன்யாகுமரி :சில கசப்பான உண்மைகள்

ன்யாகுமரி பயணக்கட்டுரை இன்று துவங்குகிறது. மிக அதிக வாரங்கள் இழுத்து உங்கள் பொறுமையை சோதிப்பதும் தவறு. முக்கிய இடங்களின் சிறப்புகளை முழுமையாய் சொல்லாமல் போவதும் தவறு. எனவே ஒவ்வொரு பதிவிலும் 3-4 இடங்களை பார்க்க உள்ளோம்.
*******
ன்யாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களுக்கு  சுற்றுலா கிளம்பினோம்.  தங்க கன்யாகுமரியை தேர்ந்தெடுத்த காரணம் சுற்றி பார்க்க நிறைய இடங்கள் உண்டு. மேலும் சூரிய உதயம், அஸ்தமனம் பார்க்க வசதியாய் இருக்கும். (ஆனால் இரண்டே நாளில் ஏன் இங்கு தங்கினோம் என்று ஆகிப்போனது).

கன்யாகுமரி கடற்கரை - மற்ற கடற்கரைகளை விட வித்யாசப்படுகிறது.. கரையின் அருகில் நிறைய பெரும் கற்கள் / பாறைகள் கிடக்கின்றன. அதுவே ஒருவித அழகை கொடுக்கிறது. நாம் அதன் மேல் நின்று அலைகளை ரசிக்க முடிகிறது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஏகமாய் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்  !

துரதிர்ஷ்டவசமாய் இந்த மாதங்களில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பெரும்பாலும் காண முடிவதில்லை. காரணம் மேகங்கள் இந்த மாதங்களில் மிக அதிகமாக இருக்க, சூரியன் வானத்தில் தெரிகிறதே அன்றி கடலில் இருந்து கிளம்பி வரும் காட்சியை காண முடிவதில்லை.
சூரிய அஸ்தமனம்
சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதயம் இரு நேரங்களிலும் அங்கு சென்றிருந்தேன்.

இந்த வீடியோவில் சூரிய அஸ்தமனம் காணலாம் :காலை குளிரையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தது ஆச்சரியமாய் இருந்தது. அந்த இடமே பெரிய மார்கெட் போல இருந்தது. காலை 5 மணிக்கு ஐந்தாயிரம் மக்களாவது அங்கு நின்றிருந்தனர்.

காபி, பூஸ்ட், ஹார்லிக்ஸ் உட்பட எல்லாம் விற்பனை ஆகுது. குழந்தைகள் விளையாட்டு பொருட்கள துவங்கி வீட்டுக்கு தேவையான பொருட்களும் கூட காலை 5 மணிக்கு விற்கவும், வாங்கவும் ஆட்கள் இருப்பதை காண ஆச்சரியமாக இருந்தது.

சூர்ய உதயத்தின் போது கன்யாகுமரி இதோ :
கடற்கரை ஒட்டிய இடத்தில் கிடைக்க கூடிய சங்கு (வாங்கிய பிறகு எந்த பயனும் இன்றி தூங்குது) கிளிஞ்சலில் செய்த, நம் பெயர் பொறித்து தரும் கீ செயின் போன்றவை இங்கு பர்ச்சேஸ் செய்தோம்.

பீச் அருகே நின்றபடி புகைப்படம் எடுத்து தர புகைப்படக்கார்கள் நின்று கொண்டு கான்வாஸ் செய்கிறார்கள். " ஒரு போட்டோ நாப்பது ரூபா சார்"

கொஞ்சமல்ல நிறையவே மக்கள் போட்டோ எடுத்து விட்டு ஸ்டூடியோவில் அலை மோதுகிறார்கள். (ஒரு மணி நேரத்தில் டெலிவரி)

மாவட்டத்தின் மிக முக்கிய தொழில்கள் சுற்றுலா மற்றும் மீன் பிடி தொழில் தான். இம்மாவட்டத்தின் கடல் 68 கி.மி நீளமுள்ளது. 44 மீனவ கிராமங்கள் கடற்கரையை ஒட்டி உள்ளன. தமிழ் நாட்டு மீனவர்கள் 26 % கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ளனர்

ஒரு ஆண்டுக்கு குறைந்தது 75 லட்சம் சுற்றுலா பயணிகள் கன்யாகுமரி வருகிறார்களாம். (அதில் 2 லட்சத்க்கும் மேல் வெளி நாட்டவர்)

கன்யாகுமரி சில கசப்பான உண்மைகள் 

தமிழ் நாட்டிலேயே அதிகம் படித்தவர்கள் வாழும் மாவட்டம் எனினும் வளர்ச்சி சொல்லி கொள்ளும்படி இல்லை. மக்கள் வேலை தேடி வெளியூர் செல்லும் நிலை தான்.கன்யாகுமரிக்கு வந்து விட்டு மிக அதிக புகழ்பெற்ற விவேகானந்தர் பாறையை காணாமல் செல்வோர் மிக குறைவு. ஆனால் விவேகானந்தர் பாறையில் ஒரு படகு மட்டுமே நிறுத்த முடிகிறது. ஒரு படகு சென்று ஆட்களை இறக்கி விட்டு வந்த பிறகே இன்னொரு படகு செல்கிறது. இதனால் ஏராளமான பயணிகள் மணிக்கணக்கில் காத்திருக்க நேரமில்லாமல் ஏமாற்றத்துடுடன் திரும்புகிறார்கள். இரண்டு படகாவது நிறுத்தும் படி வசதி செய்தால் மக்கள் காத்திருக்கும் நேரம் பெரிதும் குறையும்.

கன்யாகுமரியில் மிக மோசமான விஷயம்: சாப்பாடு. அதுவும் இது மாதிரி  பீக் சீசனில், தரம் பற்றி எந்த கவலையும் இன்றி மிக மோசமான முறையில் இருக்கு சாப்பாடு. எங்கள் மூவருக்கும் அவ்வப்போது வயிற்று போக்கு, வாந்தி என படுத்தி எடுத்து விட்டது. பின் உள்ளூரை சேர்ந்த நண்பரிடம் விசாரித்து நல்ல கடையாக விசாரித்து 2 வேளையும் இட்லி மட்டுமே சாப்பிட்டோம். அதிக infection இருக்காது என்பதுடன் உணவு செரிக்கவும் எளிதாய் இருக்கும் என்பதால் ! மதிய சாப்பாடு தேடுவது இன்னொரு பாடு. கன்யாகுமரியில் சுத்தமாய் பிடிக்காத விஷயம் சாப்பாடு தான்

விலை இங்கு எல்லாமே மிக அதிகம். இணையம் 1 மணி நேரம் உபயோகிக்க சில கடைகளில் 40, சில கடைகளில் 60 வாங்குகிறார்கள். (சென்னையில் வெறும் 20 தான்)

கன்யாகுமரியில் ஹோட்டல்கள் அதிகம்; ஆனால் ப்ரோக்கர்கள் புகுந்து விளையாடுகிறார்கள். ப்ரோக்கர்களுக்கும் ஹோட்டல் காரர்களுக்கும் செம கனக்ஷன் இருக்கு. ஒரு ஹோட்டலில் நீங்கள் நேராய் சென்று கேட்டால் ரூம் இல்லை என்பார்கள். அதுவே ஒரு ப்ரோக்கரை அழைத்து கொண்டு அடுத்த அரை மணியில் சென்றால் ரூம் கிடைக்கும். கமிஷன் சார் கமிஷன் ! போலவே, ஒரே மாதிரி ரூம் ஒவ்வொருத்தருக்கும் ஒரு ரேட் ! வாழ்க சுற்றுலாத்துறை !

பல ஹோட்டல்களில் படுக்கை மற்றும் தலையணை தருகிறார்கள். போர்வை தருவதே இல்லை. மேலும் சுடுதண்ணீர் உண்டா என கேட்டு கொள்வதும் அவசியம். சில அறைகளில் மட்டுமே சுடுநீர் வருகிறது !

*****
கன்யாகுமரியில் பிளாஸ்டிக் அனுமதியில்லை என்பது நல்ல விஷயம். இட்லி, சாம்பார் எல்லாமே பேப்பரில் கட்டி தருகிறார்கள் (சாம்பாரை ஆவின் பால் கவரில் ஊற்றி, பின் பேப்பரில் மடிக்கிறார்கள்)

பல ஹோட்டல்கள் மோசம் எனினும், 2 ஹோட்டல்களை உங்களுக்கு அங்கு ஓரளவு ஓகே என சிபாரிசு செய்கிறேன்:

1. சன்னதி தெருவில் இருக்கும் ஹோட்டல் சரவணா

2. பகவதி அம்மன் கோவில் தெருவில் இருக்கும் அன்னபூர்ணா

 

கன்யாகுமரி தெருக்களில் இருக்கும் குட்டி குட்டி ஓட்டு வீடுகள் மிக வசீகரிக்கின்றன. மிக சிறிய வீடு ஆயினும் , திண்ணை, முற்றம் எல்லாம் வைத்து தீப்பெட்டி மாதிரி இருக்கிறது. ஒவ்வொரு தெருவிலும் தவறாது குட்டி குட்டி கோவில்கள் உள்ளன

############
காமராஜர் மணிமண்டபம்

மிக பரிதாபமான நிலையில் உள்ளது காமாராஜர் மணிமண்டபம். வெளியே இருக்கும் போர்டில் மணிமண்டபம் என்கிற பெயரிலேயே " ணி" யை காணும் !


உள்ளே ஆட்கள் மிக குறைவு தான். வெளிச்சமும் போதுமான அளவு இன்றி ஆங்காங்கு இருண்டு கிடக்கிறது.

மணிமண்டபத்துக்கு கலைஞர் அடிக்கல் நாட்டினார் என்கிறது நுழைவு வாயில். இதை உறுதிபடுத்தும் விதத்தில் துவக்கத்திலேயே கலைஞர் மற்றும் முரசொலி மாறனுடன் காமராஜர் அவர்கள் இருக்கும் புகைப்படம் உள்ளது. கொஞ்ச தூரத்திலேயே எம். ஜி ஆருடன் காமராஜர் இருக்கும் படமும் !சில வித்தியாச போஸ்களில் காமராஜரை பார்க்க முடிகிறது. கிரிக்கெட் ஆடும் காமராஜர், தொப்பி அணிந்த படி, சில உலக தலைவர்களுடன்.. .இது முழுக்க முழுக்க காமராஜரில் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி தான். அரசாங்கம் பெருந்தலைவர் நினைவிடம் மேல் சற்று அக்கறை காட்டி இதனை சரி செய்தால் நன்றாயிருக்கும்.

3 முறை முதல்வராய் 
காமராஜர் நினைவகம் அருகில் தமிழ் அன்னை பூங்கா என்ற சிறிய குழந்தைகளுக்கான பார்க்கும் (இங்கு பவுண்டேன் உள்ளிட்ட குழந்தைகள் விளையாட்டு சமாச்சாரங்கள் உண்டு) அருகில் அக்குவாரியம் ஒன்றும் உள்ளன.
*********
பகவதி அம்மன் கோவில் 

கன்யாகுமரியின் மிக புகழ் பெற்ற கோவில் இது. எப்போதும் அதிக கூட்டம் நிரம்பி வழிகிறது.

ஒரு காலத்தில் கன்யாகுமரி கேரள எல்லைக்குட்பட்டு இருந்தது. பின் சில இடங்களை கேரளா தமிழகத்துக்கு விட்டு தர, பதிலுக்கு தமிழகம் சில இடங்களை தாரை வார்த்தது. அந்த ஒப்பந்தத்தின் படி கன்யாகுமரி தமிழகத்துக்கு வந்தது. இதன் பாதிப்பில் இன்றும் இக்கோவில் கேரள முறைப்படியே இருக்கிறது.  முக்கியமாய் ஆண்கள் சட்டையை கழற்றி விட்டு தான் கோவிலுக்குள் செல்ல வேண்டும். உள்ளே தரப்படும் அரவன பாயசம், 5 விளக்கு ஏற்றுதல்.. இப்படி பல விஷயத்தில் கேரள பாதிப்பு   !

காமிரா கோவிலுக்குள் அனுமதி இல்லை. இது ஓகே தான். ஆனால் காமிராவை வெளியில் வைத்து விட்டு போக சொல்லி, அதற்கு 10 ரூபா வாங்குகிறார்கள். எந்த ரீசீப்ட்டும் தருவதில்லை.

வேறொன்றுமில்லை. கோவில் நிர்வாகம் அதற்கு பணம் வசூலிக்க சொல்ல வில்லை. அங்கிருக்கும் ஆசாமிகள் காமிராவுக்கு பணம் என்று சொல்லி பிடுங்குகிறார்கள். வேறு வழியின்றி காசு தந்து விட்டு தான் சென்றோம் (இதுக்குன்னு ரூம் வரை மறுபடி நடக்க முடியாது)

நாங்கள் சென்ற டிசம்பர் மாதம் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. ஒரு மணி நேரமாவது கியூவில் நிற்கணும் என்கிற நிலை. நமது கன்யாகுமரி நண்பர் பெயரை சொல்லியதும் வி.ஐ. பி ரூட்டில் நம்மை அனுப்பி விட்டனர் :)

மிக குறுகிய சந்நிதி. அதனுள் செல்ல கியூ வளைந்து, வளைந்து செல்கிறது. சற்று தூரத்தில் இருக்கும் போது கடவுளை தரிசிக்கலாம்.  மீண்டும் வளைந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு பின் அம்மன் அருகே போக வேண்டும். அருகே அதிக நேரம் நிற்க அனுமதியில்லை. குங்குமம் வாங்கி கொண்டு உடன் நகர்ந்து விட வேண்டும்.

கன்யாகுமரியின் மிக புகழ் பெற்ற கோவில் என்ற வகையிலும், கேரள பாணி கோவிலை காணவும், கன்யாகுமரி செல்லும்போது இக்கோவிலுக்கு அவசியம் சென்று வாருங்கள்.
*****
அண்மை பதிவு 

29 comments:

 1. நாங்கள் நிறையவே அனுபவித்தோம் கன்யாகுமரி அழகை. பொதுவாக, சுத்தமாக இருக்கிறது ஊர். சாப்பாடு மோசம். வாயில் வைக்க வழங்கவில்லை! அம்மனின் மூக்குத்தி அழகை சொல்ல மறந்துவிட்டீர்களே!

  ReplyDelete
 2. முன்பு இரண்டு படகு போக்குவரத்து இருந்தது... இப்போது ஒன்று தானா...?

  ReplyDelete
  Replies
  1. சுனாமியின் காரணமாக ஒரு படகு கடலினுள் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறது

   Delete
 3. அழகான கன்னியாகுமரி பற்றி சிறப்பான அனுபவப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

  ReplyDelete
 4. விரிவான தகவல்களுடன் பகிர்வு நன்று. சூரியோதயம் அஸ்தமனம் காண வரும் மக்கள் எண்ணிக்கை ஆச்சரியப் படுத்துகிறது.

  ReplyDelete
 5. படங்களுடன் அருமையாக தகவல்களை தொகுத்து தந்திருக்கிறீர்கள்... நன்றி...

  ReplyDelete
 6. எனக்கும் கன்னியாகுமரி போக ரொம்ப ஆசை சார்.. அந்த ஊரை சேர்ந்த அலுவலக நண்பர், கன்னியாகுமரியை விட அதை சுற்றி இருக்கும் இடங்கள் பார்க்க நன்றாக இருக்கும் என சொல்கிறார்....

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. நாங்களே சுற்றுலா சென்றது போல இருந்தது பயணக்கட்டுரை. மிகவும் அருமை!!!!

  ReplyDelete
 9. எங்க மாவட்டத்துக்கு வந்திருக்கீங்க. நல்வரவு :-)

  நாங்க போயிருந்தப்பவும் அன்னபூர்ணாதான் அன்னமிட்டது. நேரமிருக்கும்போது ரிவர்ஸில் இங்கிருந்து போனா வாசிக்கலாம்

  http://amaithicchaaral.blogspot.com/2010/05/7.html

  //தமிழ் நாட்டிலேயே அதிகம் படித்தவர்கள் வாழும் மாவட்டம் எனினும் வளர்ச்சி சொல்லி கொள்ளும்படி இல்லை. மக்கள் வேலை தேடி வெளியூர் செல்லும் நிலை தான்.//

  வேலை வாய்ப்புகள் கொட்டித்தான் கிடக்குது. முந்திரித்தொழிற்சாலையும், மணலிலிருந்து தனிமங்கள் பிரிச்செடுக்கும் தொழிற்சாலையும் வந்தா நிறையப்பேருக்கு வேலை கிடைக்கும். வரவிடாம அரசியல் தடுக்குதுன்னு கேள்வி.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. கிழக்கில் IRE நிறுவனமும் பெரியதாழை, திசையன்விளை பக்கம் BMC , V V
   நிறுவனங்களும் மணலிலிருந்து தனிமங்கள் பிரித்தெடுக்கும்
   வேலையை தான் செய்து வருகின்றன. ஆனால் பலருக்கு வெளிநாட்டு வேலையில்தான் ஈடுபாடு.

   Delete
 10. அருமையான பகிர்வு. கடந்த 2004ல் நான் முதன் முறையாக கணவருடன் கன்யாகுமரிக்கு சென்றேன். சங்கில் நாங்களும் பெயர் பொறித்து வாங்கிக்கொண்டோம். அன்று என் கணவரின் பிறந்தநாள் அதனால் தேதியும் உள்ளது. அது இன்றும் பத்திரமாக உள்ளது....:)

  கி.வா.ஜ அவர்கள் எழுதிய குமரியின் மூக்குத்தி என்ற புத்தகத்தில் மூக்குத்தி அம்மனுக்கு எப்படி வந்தது. அதன் சிறப்பு என்ன என்று எழுதப்பட்டிருக்கும். இந்த புத்தகத்தை பற்றி நானும் எழுதியிருக்கிறேன்.
  http://kovai2delhi.blogspot.in/2012/11/blog-post_20.html

  ReplyDelete
 11. படங்களுடன் கன்னியாகுமரியின்
  யதார்த்த நிலையை மிகச் சரியாக[
  பதிவு செய்துள்ளீர்கள்
  நிச்சயம் அங்கு போக இருப்பவர்களுக்கு
  இந்தப் பதிவு அவசியம் அதிகம் பயன்படும்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. சூர்யோதயம் அநேகமா இப்படித்தான் இருக்கு போல! நாங்கள் ஃபிப்ரவரி மாதம் போனோம். நாலு வருசம் ஆச்சு. தங்கிய இடமும் அதிலிருக்கும் உணவகமும் அருமையாக இருந்துச்சு.

  நேரம் கிடைச்சால் இங்கே பாருங்க.

  http://thulasidhalam.blogspot.co.nz/2009/05/2009-22.html

  பயணத்தொடரின் ஒருபகுதி இது. வெறும் 36 பகுதிகள்தான்:-))))

  ReplyDelete
 13. you have to stay in the nager koil thats the best for food and stay

  ReplyDelete
 14. பயண அனுபவம் அருமை! நிறைய தகவல்கள்! நன்றி!

  ReplyDelete
 15. கன்னியாகுமரி மீண்டும் காணக்கிடைத்தது. படிக்கும்போதே பழைய நினைவுகள் வந்து சென்றது. .

  ReplyDelete
 16. அடுத்த மாசம் போக வாய்ப்பிருக்கு...உங்க பதிவு பயன்படும்.நன்றி. :)

  ReplyDelete
 17. அருமை திரு மோகன் குமார்.
  கன்யாகுமரியை மிகவும் மோசமான வியாபார ஸ்தலமாக மாற்றி விட்டார்கள். எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி & வாழ்த்துகள் திரு மோகன் குமார்.

  ReplyDelete
 18. திரு மோகன்குமார் சார் அவர்களுக்கு வணக்கம்,கன்னியாகுமரி சுற்றுலா அனுபவம் நன்றாக இருந்தது,நானும் நெல்லை மண்ணின் மைந்தன் தான், கன்னியாகுமரி பற்றிய தங்களது பதிவுக்கு மிக்க நன்றி

  நேரம் இருந்தால் என் தளத்திற்கும் கொஞ்சம் வந்து செல்லுங்களேன்

  ReplyDelete
 19. தள முகவரி www.Velkr.blogspot.com

  ReplyDelete
 20. Good informative travel trip.But one revision .Hotels atrocities as said by you is not held responsible by Tourism .In Kanniyakumari and other all places in Tamilnadu Tourism has no role right from construction.operation, rent,etc.All are under administration of Local bodies concerned.Also Tourism has not any powers vested.They are now only information body there.

  ReplyDelete
 21. அண்ணா தங்களுக்கு மட்டுமல்ல நம் தமிழர்களுக்கும் கன்னியகுமரியிலுள்ள விவேகானந்த கேந்திரா பற்றி தெரியவில்லை. அங்கு தரமான உணவு மற்றும் உறைவிடம் இருக்கிறது. வட இந்தியர்களால் அதிக பயன்பாட்டில் இது உள்ளதால் முன் பதிவு மிகமிக அவசியப்ப்டுகிறது.அடுத்தமுறை சென்றால் கேந்திராவில் தங்கி விபரம் பகிருங்கள். மேலும் படகு போக்கு வரத்து தமிழக அரசால் நிர்வகிக்கப்படுகிறது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன். மொத்தத்தில் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 22. தங்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை - நாங்கள் காலையில் சென்று இரவு திருநெல்வேலி திரும்பி விட்டோம்.....

  மீண்டுமொரு முறை செல்லவேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் - பார்க்கலாம்!

  ReplyDelete
 23. எதிர்ப்பார்த்ததை விட மிக அதிகம் பேர் வாசித்தனர் கமண்ட் தந்துள்ளனர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி !

  விவேகானந்தா கேந்திரா தங்க மிக நல்ல இடம் அங்கு எங்களுக்கு இடம் கிடைக்கலை மற்றவர்கள் சற்று பிளான் செய்து சென்று தங்கலாம்

  நன்றி !

  ReplyDelete
 24. கன்னியாக்குமரி வாழ்வில் எனக்கு மிக மிக பிடித்த இடம். விழிப்புணர்வு பதிவு போல் எழுதியது மகிழ்ச்சி

  ReplyDelete
 25. அழகான கன்னியாகுமரி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...