Monday, July 11, 2016

டாப் ஸ்லிப்- பழங்குடி மக்கள் + மாணவர்கள் வாழ்க்கை-ஓர் அனுபவம்


டாப் ஸ்லிப்பில் யானை சவாரி சென்ற போது பாகன் சொன்ன சில தகவல்கள்:

20க்கும் மேற்பட்ட யானைகள் டாப் ஸ்லிப்பில் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் பார்த்து கொள்ள 2 பேர் வேலைக்கு உள்ளனர்.. மொத்தம் 40 ஆட்கள்.. அவர்களில் பலரும் தற்காலிக பணியாளர்கள் தான்.. வெகு சிலரே நிரந்தர  ஊழியர்கள்..

 யானையை குளிப்பாட்டுவது, சாப்பாடு தருவது போன்றவை இவர்களின் வேலைகள். மக்கள் யானை மேல் சவாரி செய்ய தினம் 2 அல்லது 3 யானைகள் வரும். மற்றவை பகல் முழுதும் காட்டில் ஊர் சுற்றி விட்டு மாலை 5 மணிக்கு சாப்பிட வந்து விடும். பின் அவற்றை கட்டி போட்டு விடுகின்றனர்.



இந்தியா முழுதும் யானைகளை இவ்வாறு பராமரிக்கும் இடங்கள் பல உள்ளன. எனவே இவர்களை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் அனுப்பி வைப்பர். அப்படி நாம் பேசிய பாகனும் பல இடங்கள் சென்று  வந்துள்ளார்.மழை, வெய்யில் என எல்லாவற்றிலும் யானையுடன் சேர்ந்து அலையனும்.. இது தான் இவர்களின் வாழ்க்கை.. இவர்களில் அநேகமாய் பலரும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள்தான்.



நமது பாகனுடன் அவர் மகனும் உதவிக்கு கூட வந்து கொண்டிருந்தார். " அவன் காலேஜ் படிச்சிருக்கான்; சும்மா இப்போதைக்கு என் கூட வர்றான். அவ்ளோ தான். இதே தொழிலுக்கு அனுப்ப மாட்டேன். அவனுக்கு தனியா ஒரு தொழில் செய்ய ஏற்பாடு செய்யணும்" என்றார் பாகன்.

யானை சவாரி செல்லும்போதே புலியின் கால் தடம் என காட்டுகிறார்; நேரில் பார்த்த அனுபவம் பகிர்ந்து  கொள்கிறார்.யானையை கண்டால் புலி ஒதுங்கி போய் விடுமாம். இவர்கள் இருக்கும் பக்கம் வராதாம். தள்ளி நின்று தான் பார்க்குமாம்.



ஒரு வெளி நாட்டு பெண்மணி தனியாய் வந்திருக்கும் போது இப்படி ஒரு புலியை கண்டு விட்டு நூறுக்கும் மேற்பட்ட படங்கள் எடுத்ததாகவும், புலி அன்றைய மூடில் - நகராமல் இருந்ததாகவும் ஆச்சரியத்துடன் கூறிக்கொண்டு போனார்.
**********
டாப் ஸ்லிப்பில் நாங்கள் சென்ற மற்றொரு இடம் பழங்குடி மாணவர்களுக்கான பள்ளி. நீண்ட காலமாக இருந்து வரும் இப்பள்ளிக்கு  இந்திரா காந்தி துவங்கி பல அரசியல் வாதிகளும் வந்து மாணவர்களுடன் உரையாடி சென்றுள்ளனர்.

படிப்பு, தங்கும் வசதி என முழுக்க முழுக்க அனைத்தும் இலவசம் ! மாணவர்களை அங்கு  முழு நேரம் தங்கவே பரிந்துரைக்கிறார்கள். வீட்டுக்கு சென்று திரும்புவதை இரு காரணங்களுக்காக அனுமதிப்பதில்லை.



முதலில் - தூரம்; மலை பகுதியில் குறைந்தது 6-7 கிலோ மீட்டர் நடந்து தான் பள்ளியை அடைய வேண்டும். இதனால் மாணவர்கள் சோர்வாகி படிப்பை தொடர தோன்றாமல் பாதியில் விட வாய்ப்புகள் அதிகம். மேலும் காட்டு பகுதி என்பதால் மாலை வேளைகளில் விலங்குகள் நடமாட்டம் நிச்சயம் இருக்கும். மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் கூட இங்கேயே தங்க சொல்கிறார்கள்.

மாணவர்கள் வீட்டிலிருந்து தான் வருவேன் என நிரம்ப அடம் பிடித்தால் முடிந்த வரை பேசிப்பார்த்து விட்டு - அவர்கள் போக்கிற்கு விட்டு விடுகிறார்கள். அதை விட முக்கியம் - மாணவர்கள்- சில வாரமோ, சில மாதமோ பள்ளிக்கு வராமல் -  பின் மீண்டும் வந்தால் கூட மற்ற பள்ளிகள் போல பெயரை இவர்கள் ரிமூவ் செய்து விடுவது இல்லை; எப்படியேனும் படித்தால் சரி என மீண்டும் சேர்த்து  கொள்கிறார்கள்.



இந்த மாணவர்கள் பற்றி அங்கிருந்த ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்ட சில செய்திகள்:

பழங்குடி மாணவர்கள் உற்சாகமாக கவலையே இன்றி இருப்பார்களாம். அவர்கள் முகத்தில் சிரிப்பை எப்போதும் காணலாம். எதையும் செய்ய முடியாது என்று சொல்லவே மாட்டார்கள். நிச்சயம் முயற்சி செய்வார்கள். பெரும்பாலும் முடித்தும் விடுவார்கள்.

ஒற்றுமை மற்றும் அன்னியோன்னியம் மிகவும் அதிகம். ஒருவருக்கொருவர் தவறாமல் உதவி கொள்வார்கள். ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்றாலும் மற்றவர்கள் ஓடி, ஓடி உதவுவார்கள்.

படிப்பில் மிக கெட்டி என சொல்ல முடியாது. முடிந்தவரை படிப்பார்கள். இங்கு எட்டாம் வகுப்பு வரை தான் உள்ளது. பின் மலைக்கு கீழே பொள்ளாச்சி போன்ற ஊர்களில் சேர்ந்து படிக்க வேண்டும். அப்படி சென்று படிக்கும் மாணவர்கள் வெகு சிலரே.

இங்கு படித்து சில பெண்கள் - இன்ஜினியர் மற்றும் ஆசிரியை ஆகியுள்ளார். இங்கு படித்து விட்டு - பின் பொள்ளாச்சியில் கல்லூரி படிப்பை முடித்த ஒரு பெண்- இதே பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரிகிறார். அவரை தான் ரோல் மாடல் போல மற்ற மாணவர்களுக்கு  சொல்கிறார்கள்.

இவர்களுக்கு ஆசிரியர்கள் நேரில் பாடம் நடத்துவது தவிர, கணினி மூலம் - தூர தேசத்திலிருந்தும்  சில தமிழக பெண்கள் இவர்களுக்கு இலவசமாக பாடம் கற்று தருகிறார்கள். ஸ்கைப் மூலம் தினம் ஒரு மணி நேரம் இவர்களுக்கு பாடங்கள் போதிக்கிறார்கள். மேலும் படிப்பின் அவசியம் உள்ளிட்ட தன்னம்பிக்கை தரும் விஷயங்களும் அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த வசதியும் இதற்கான செலவும் காக்னிசன்ட் நிறுவனம் செய்து தருகிறது.




மாணவர்களோடு உரையாடிய போது, அரசு அளித்துள்ள சலுகையும் - அதை சரியாக பயன்படுத்தி கொண்டால் - எப்படி நன்மை பயக்கும் என்றும் கூறினேன். படிப்பை எட்டாவதுடன் நிறுத்த வேண்டாம் என்பதையும் அவசியம் கல்லூரி வரை படிக்குமாறும் வேண்டினேன்.

ஆசிரியைகள் பழங்குடிகள் வாழ்க்கை பற்றியும் பல்வேறு ஆச்சரிய தகவல்கள் பகிர்ந்து கொண்டத்தில் சில பகுதிகள் மட்டும் இதோ:



பழங்குடிகள் மிக கடுமையான உழைப்பாளிகள்; தனி குடித்தனம் என்கிற விஷயம் அவர்களை எட்டவே இல்லை; இன்னும் கூட்டு குடித்தன முறையை தான் கடை பிடிக்கிறார்கள். இவர்களில் பலர் இங்கு யானை பாகன் அல்லது வனத்துறை தரும் வேலையை செய்கிறார்கள்.

மிகுந்த சுய மதிப்பு கொண்டவர்கள். தங்களை யாரும் தவறாக பேசுவதோ, பார்ப்பதோ அவர்களுக்கு பிடிக்காது.

எதிர்காலம் பற்றி நிறைய யோசிப்பது, அதற்காக சேர்த்து வைப்பது - இதிலெல்லாம் அவர்களுக்கு சுத்தமாக ஈடுபாடு இல்லை; வாழும் வரை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அவ்வளவு தான் அவர்களது பிலாசபி. இன்றைக்கு- இந்த வாரத்துக்கு சாப்பிட பொருளும், பணமும் இருந்தால் போதும் என்பதே இவர்களின் மனநிலை.

உணவு முறை, வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்வது, மகிழ்ச்சியுடன் எப்போதும் இருப்பது, கடுமையான உழைப்பு என இவர்களிடம் நாம் கற்று கொள்ள ஏராளம் உண்டு; அதே நேரம் சில அதிர்ச்சிகரமான - நம்மால் ஜீரணிக்க முடியாத சில விஷயங்களும் உண்டு. உதாரணமாக விவாகரத்து மிக எளிதில் நடக்குமாம். இரண்டு பேருக்கும் ஒத்து போகவில்லை என்றால்- ஊர் பெரியவர்கள் கூடி பேசி - பின் பிரிவது என முடிவானால்,  வீட்டின் கூரையில் உள்ள ஒரு குச்சியை எடுத்து இரண்டாக உடைத்து போட்டால் விவாகரத்து ஆகி விட்டது என்று அர்த்தம். இருவரும் பிரிந்து விட வேண்டியது தான் !



கணவர் இல்லாமல் குழந்தையுடன் வாழும் பெண்கள் ஒரு புறம்; மனைவி பிரிந்த பின் - கணவரே குழந்தைகளை வளர்க்கும் பழக்கமும் பரவலாக உள்ளது. சிறிதும் மனம் தளராமல் குழந்தைகளை நல்ல படி வளர்த்து விடுவார்களாம். வரதட்சணை என்கிற ஒன்று சுத்தமாக இல்லை என்பதும் நல்ல விஷயமே !

இந்த பள்ளி  ஆசிரியர்கள், குறிப்பாக மாணவர்களுடன் ஓரிரு மணி நேரங்கள் செலவிட்டது இப்பயணத்தில் ஒரு மறக்க முடியாத நிகழ்வு.

(அடுத்த இறுதி பகுதியில் பரம்பிக்குளம்)

தொடர்புடைய பதிவுகள்

டாப்ஸ்லிப்- என்ன பார்க்கலாம்? எங்கு தங்கலாம்?

பொள்ளாச்சி- டாப்ஸ்லிப்- பரம்பிகுளம் பயணம் -புகைபடங்கள் 


5 comments:

  1. superb ji... pl write further about accomodation at top-slip..

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே எழுதி விட்டேன் ; இங்கு வாசியுங்கள் கணேஷ்

      டாப்ஸ்லிப்- என்ன பார்க்கலாம்? எங்கு தங்கலாம்?

      http://veeduthirumbal.blogspot.com/2016/06/blog-post_26.html

      Delete
  2. நல்ல அனுபவ பகிர்தல்.

    ReplyDelete
  3. நல்ல அனுபவம். அலுவலக விஷயமாக ஒரு முறை உத்திராகண்ட் மாநிலத்தின் ஒரு கிராமத்துப் பள்ளிக்குச் சென்ற போது கிடைத்த அனுபவம் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...