Wednesday, July 13, 2016

வானவில்- களி-உழவன் எக்ஸ்பிரஸ்-தஞ்சை ரயில் அனுபவங்கள்

பார்த்த படம்: களி (மலையாளம்) 

துல்கர் மற்றும் சாய் பல்லவி நடித்த களி கொஞ்சம் வித்யாசமான படம்.

துல்கர்- சாய் பல்லவி இளம் கணவன்- மனைவி. துல்கர் இயல்பிலேயே மிக கோபக்காரர். இதனால் அலுவலகத்திலும் சரி, தனி வாழ்க்கையிலும் சரி யாருக்கும் பிடிக்காதவராய் இருக்கிறார்.

ஒரு இரவின் கார் பயணத்தில் மோசமான ஒரு சாலையோர ஹோட்டலில் இந்த ஜோடி சாப்பிட நேருகிறது; சாப்பிட்டு முடிக்கும்போது கையில் பணம் இல்லை; எப்படி பணத்தை செட்டில் செய்தனர்; எப்படி அங்கிருந்து கிளம்பினார் என பதை பதைக்க வைத்து சொல்கிறது இரண்டாம் பகுதி..



நிச்சயம் வித்தியாச கதைக்களன் தான். ஆனால் முதல் பகுதியில் துல்கர் கோபக்காரர் என்கிற ஒரு வரிக்கு மேல் வேறு எதுவும் இல்லை; இரண்டாம் பகுதி தான் படத்தை தாங்கி நிற்கிறது.. நம்மையும் அந்த இருளுக்கு, பயணத்திற்கு அழைத்து சென்று விடுகிறார்கள்..Gripping !!

துல்கர்- சாய் பல்லவி நடிப்பு மற்றும் வித்தியாச கதைக்காக நிச்சயம் ஒரு முறை காணலாம் !

வாசித்த புத்தகம்: நிர்வாண நகரம்

சுஜாதாவின் க்ரைம் நாவல்.. துவக்கத்திலேயே சிவராஜ் என்கிற பாத்திரத்தை அறிமுகம் செய்து அவன் சென்னையை பழி வாங்க போகிறான் என்கிறார். பின் ஒவ்வொரு மரணமாக நிகழ்கிறது. மரணங்களுக்கு பொறுப்பேற்று சிவராஜ் போலீசுக்கு கடிதங்கள் எழுதுகிறான்.

கணேஷ்- வசந்த் அவனது திருமணத்தன்று அவனை நெருங்கி பிடிக்கிறார்கள். அப்போது தான் அக்கொலைகள் எதுவும் அவன் செய்தது இல்லை; அட்டென்சன் வேண்டி கொலைகள் நடந்த பின் இப்படி கடிதமெழுதுவது அவன் வேலை என தெரிகிறது.. அவனை எதுவும் செய்யாமல் விட்டு விட்டு நகர்கிறார்கள் கணேஷ் -வசந்த்.

சிவராஜ் அந்த கொலைகளை செய்யவில்லை என்கிற இறுதி சஸ்பென்ஸ் நம்மால்  ஊகிக்க முடியாத ஒன்று..

சென்னை 30-40  வருடங்களுக்கு முன் எப்படி இருந்தது என சுஜாதா வரிகளில் தொடர்ந்து வாசிப்பது செம சுவாரஸ்யம்..

அழகு கார்னர் 



ரயில் பயணம் - அனுபவம் : 1

தஞ்சைக்கு இம்முறை உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது எனக்கு, மனைவி மற்றும் மகள் மூவருக்கும் தனி தனி கம்பார்ட்மெண்ட்கள்  ஒதுக்கப்பட்டிருந்தது.இத்தனைக்கும் ஓரிரு மாதம் முன் நிறையவே டிக்கெட் இருக்கும் போது புக் செய்தது  தான்.  இறுதியில் மனைவி, மகள் வராமல் நான் மட்டும்  செல்ல வேண்டிய நிலை.. அவர்கள் டிக்கெட் கான்சல் செய்தாகி விட்டது  ..

ரயிலில் சென்றபின் பார்த்தால் - பல குடும்பங்களும் இதே வித பிரச்சனையில் உழன்று கொண்டிருப்பது தெரிய வந்தது.. ஒரே குடும்பம்.. ஒன்றாய் புக் செய்தவர்கள் வெவ்வேறு .. கம்பார்ண்ட்மெண்ட்டில்.என்ன தான் நடக்கிறது . IRCTC யில்.?

ரயில் பயணம் - அனுபவம் 2:

மேலே சொன்ன அதே காரணம்.. எனது சீட்டிற்கு  அருகில் ஒரு வயதான தம்பதியை பிரித்து விட்டனர். அந்த கணவர் கேட்டு கொண்டதால் கம்பார்ட்மெண்ட் மாறி அவரது இருக்கையை நான் எடுத்து கொண்டேன்..

நள்ளிரவு 12.15 மணி இருக்கும். தாம்பரத்தில் ஏறி ஒருவர் என்னை எழுப்பி, " இது என் சீட்டு " என்றார். "சந்திரசேகர் என் பேரு; பெர்த் நம்பர் 44 "  என சொல்லி கொண்டிருக்கும் போது டிக்கெட் செக்கர் வந்து  சேர்ந்தார்.

அவரிடம் நான் சீட் மாறி உறங்குவதை ஏற்கனவே சொல்லி, இந்த இருக்கைக்கு உரியவர் தனது டிக்கெட்டை காட்டி விட்டு தான் சென்றிருந்தார்.. இப்போது ஒரு புது குழப்பம்...

புது பயணியிடம் நான் " சார் உங்க டிக்கெட் காட்டுங்க " என்றேன்.. " அது என் Wife கிட்ட இருக்கு. அவங்க பக்கத்து கம்பார்ட்மெண்ட்டில் இருக்காங்க" என்றார். டிக்கெட் செக்கர் " SMS ஆவது காட்டுங்க" என்றார். மனிதர்  விழித்தார் !

அப்புறம் பார்த்தால் தேதி குழப்பம்.. இரவு 12.15 க்கு தாம்பரம் வரும் ரயில்.. எனவே தேதி மாற்றி புக் செய்து விட்டனர்.. இதை டிக்கெட் செக்கர் சொன்னதும் புது பயணி அசடு வழிந்து விட்டு கிளம்பினார்

எனக்கு தூக்கம் பறி போனது தான்  மிச்சம்.ஆயினும் "ஒரே பெர்த் நம்பர் இருவர் பெயரும் (சந்திர சேகர்) ஒன்று- அடுத்தடுத்த நாள் பயண சீட்டு என்பது ஆச்சரியமான ஒற்றுமையாய் இருந்தது.

ரயிலில் நமக்கு என்ன பெர்த் ஒதுக்கப்பட்டுள்ளதோ அதில் தூங்குவதே உத்தமம் என எண்ணி கொண்டேன் !

போஸ்டர் கார்னர் 

3 comments:

  1. I too experienced same problem while travelling. But if we don't adjust for senior citizens they start cursing us

    ReplyDelete
  2. நிர்வாண நகரம் குங்குமத்தில் தொடராக வந்த போது வாசித்தேன்(ஜெயராஜ் படங்களுடன்). கம்ப்யூட்டர்கள் பஞ்ச் கார்டு மூலம் இயங்கிய காலம் அது.

    ReplyDelete
  3. உழவன் எக்ஸ்பிரஸ் பயணம் திகில் கதை போல இருந்தது அண்ணா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...