Tuesday, September 27, 2016

நடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு

இன்று செப்டம்பர் 27..நாகேஷ் அவர்களின் பிறந்த நாள்  ! 
நான் நாகேஷ் : புத்தக விமர்சனம் 


சிரித்து வாழ வேண்டும் என்ற தலைப்பில் கல்கியில் வெளியான தொடர் " நான் நாகேஷ்" என்ற தலைப்பில் புத்தகமாக வந்துள்ளது. நாகேஷ் பேசுவது போலவே அமைந்த இந்த புத்தகத்தை எழுதியவர் எஸ். சந்திர மவுலி.

நாகேஷ் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் பிடித்தமான ஒரு நடிகர். பொதுவாய் அதிகம் பேட்டி தராத. தன் திரை உலக வாழ்க்கை பற்றி பேசாத இவர் வாழ்க்கை குறித்து புத்தகம் என்பது ஆச்சரியமான விஷயம் தான். புத்தகம் 250 பக்கங்கள் இருந்தாலும் மிக லைட் ரீடிங் என்பதால் விறுவிறுவென்று படித்து விட முடிகிறது. அதிகம் அலட்டி கொள்ளாமல் முதல் நாள் பாதியும், மறு நாள் மீதியுமாய் படித்து விடலாம்.

புத்தகத்தில் அவர் பகிர்ந்துள்ள சில சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கு.:

நாகேஷ் சிறு வயதில் மிக அழகாய் இருப்பாராம். வெள்ளையாக சற்று பூசியவாறு இருக்கும் நாகேஸ்வர ராவ் (அது தான் இயற் பெயர்) பள்ளி இறுதியில் படிக்கும் போது அம்மை போட்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் அம்மை மூன்று முறை வந்ததில் உருக்குலைந்து போயிருக்கிறார். கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து கதறி அழுதிருக்கிறார். இளைத்து போய், முகமெல்லாம் அம்மை தழும்பாக, மிக விரக்தி அடைந்திருக்கிறார். இதிலிருந்து மீண்டு வர ரொம்ப நாள் பிடித்திருக்கிறது. பரீட்சை எழுத முடியாமல் போய், படிப்பு பாதியிலேயே நின்று விட்டது.

பின் அப்பா பேச்சில் கோபித்துக்கொண்டு, ஒரு நாள் அம்மாவிடம் மட்டும் சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியிருக்கிறார். அப்போது அம்மா சொன்ன வார்த்தைகள் வாழ் நாள் முழுதும் மறக்க வில்லை என்கிறார்

அந்த வரிகள் "வெளி உலகத்துக்கு போய் விட்டால் நீ நிறைய பேரை சந்திக்க வேண்டும். அவர்கள் தம் வார்த்தைகளால் உன்னை கோப படுத்தலாம். உனக்கு கோபம் வந்து விட்டால் அவர்கள் வென்று விட்டதாக அர்த்தம் "

வீட்டை விட்டு வெளியேறிய நாகேஷ் பல வித வேலைகள் பார்த்திருக்கிறார். சப் ரிஜிஸ்தார் அலுவலகத்தின் வெளியே அமர்ந்து மனு எழுதி தருவது, ரேடியோ கடையில் விற்பனை பிரதிநிதி இப்படி பல வேலைகள் பார்த்து விட்டு ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கிருக்கும் போது நாடகங்களில் நடிக்க துவங்கி பின் சினிமா உலகிற்குள் நுழைந்திருக்கிறார்.

முதன் முதலாக இவர் நடித்த நாடகத்தில் வயிற்று வலி ஆசாமியாக டயலாக் ஏதும் இன்றி நடித்து அசத்தியிருக்கிறார். நாடகம் பார்க்க வந்த எம். ஜி. ஆர் இவரை பாராட்டி வெள்ளி கோப்பை பரசளித்தாராம். அதனை ரொம்ப பெருமையாக வைத்திருந்தாலும், ஒரு முறை இவருடன் தங்கியிருந்த அறை நண்பர் தனது அவசரத்திற்கு எடுத்து விற்று விட்டாராம். அதன் பின் எந்த படத்தில் வாங்கிய விருதும் தன்னை பெரிதும் கவர வில்லை, தன் வீட்டு வரவேற்பறையில் அவற்றை வைப்பதில்லை என்று கூறுகிறார்.

திரையில் நாம் பார்க்கும் நாகேஷ் போலவே நிஜ வாழ்க்கையிலும் மிக குறும்பு காரராய் இருந்திருக்கிறார். உதாரணமாய் ரயில்வேயில் இருந்த போது தன் மேலதிகாரியிடம் சொல்ல முடியாத காரணத்திற்காக லீவு வேண்டும் என்று எழுதி கேட்டுள்ளார். "அது என்ன சொல்ல முடியாத காரணம்; லீவு கிடையாது" என்று கூறப்பட, மறு நாள் அலுவலகம் வந்து விட்டு தனது உடைகளை ஸ்நூகர் விளையாடும் அறையில் கழற்றி வைத்து விட்டு பனியன், அண்டர்வேர் சகிதம் தன் சீட்டில் சென்று அமர்ந்துள்ளார். மேலதிகாரி அங்கு வர, இது தான் தன் பிரச்சனை, உடை இல்லாததால் தான் லீவு கேட்டேன் என்று கூறியுள்ளார். அவர் லீவு தந்ததும் ஸ்நூகர் விளையாடும் அறைக்கு சென்று தனது உடைகளை அணிந்து கொண்டு மகிழ்ச்சியாக ஸ்நூகர் ஆடி கொண்டிருந்திருக்கிறார். அதிகாரி அங்கு வந்து அவரை பிடித்து அவரது மேலதிகாரியிடம் கூட்டி செல்ல, அவரிடம் என்ன பேசி தப்பினார் என்பதை நான் சொல்வதை விட புத்தகத்தில் நீங்கள் படித்தால் நன்றாயிருக்கும்.

பல சுவாரஸ்ய சம்பவங்கள் சொல்லி கொண்டே போகிறார். உதாரணத்திற்கு சில:

தி.நகரில் கிளப் ஹவுஸ் எனும் இடத்தில இருந்த போது உடன் இருந்த நடிகர் ஸ்ரீ காந்த் நல்ல வேலை பார்க்க, தான் உள்ளிட்ட பலரும் அவர் சட்டை பையிலிருந்து பணம் எடுத்து செலவு செய்தது.

நடிகர் பாலாஜி அவர் மீது காட்டிய பாசம். அவர் வீட்டுக்கே கூட்டி சென்று தங்க வைத்து ராஜ உபசாரம் செய்தது

மேஜர் சுந்தர்ர்ராஜன் பல முறை தன் வீட்டுக்கு கூட்டி சென்று அருமையான சமையல் செய்து அசத்தியது ("சினிமா இல்லாட்டி நீ சமையல் செய்து பிழைச்சுப்பே.நான் என்ன பண்றது?" என்பாராம் நாகேஷ்)

அந்த காலத்தில் நடிகர்கள் ஷெவாலே கார் வைத்திருப்பதை பெருமையாக நினைப்பார்களாம். இதை கிண்டலடிக்க எம். ஆர். ராதா தனது ஷெவாலே காரில் பின் புறம் முழுதும் வைக்கோல் போரை போட்டு வண்டி ஓட்டி செல்ல, நடிகர்கள் எல்லாம் தலையில் அடித்து கொண்டனராம்.

திருவிளையாடல் தருமி காட்சி பெரும்பாலும் தானாகவே பேசி நடித்தது என்கிறார். சிவாஜிக்கு மேக் அப் செய்ய தாமதமாக, அந்த நேரத்தில் இவர் மட்டும் தனியாக " அவன் வர மாட்டான் நம்பாதே" என டயலாக் பேசி சூட் செய்தது. டப்பிங் முன் படம் பார்த்த சிவாஜி “நாகேஷ் காட்சி கொஞ்சம் கூட கட் செய்ய கூடாது” என்று இயக்குனரிடம் சொன்னது. அந்த படத்தின் நூறாவது நாள் விழாவிற்கு தனக்கு அழைப்பே வராதது (அது தான் திரை உலகம்)

காதலிக்க நேரமில்லை படத்தில் நாம் அனைவரும் ரசித்த, நாகேஷ் பாலையாவிடம் கதை சொல்லும் காட்சி. இது அந்த கால இயக்குனர் தாதா மிராசி என்பவரை பார்த்து செய்ததாம். அவர் கதை சொல்லும் போது இப்படி தான் சத்தங்களை எல்லாம் சேர்த்து கதை சொல்லுவாராம். அத்துடன் இயக்குனர் ஸ்ரீதர் "கதை இருக்கிற மாதிரி இருக்கணும், ஆனா இருக்க கூடாது " என்று சொல்ல, அதை வைத்து உருவானது தான் அந்த சீன் என்று நினைவு கூர்கிறார்.

தான் மிக பிரபலமாக இருந்த நாட்களில் ஒரே நாளில் இரண்டு படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள பயன்படுத்திய டெக்னிக்குகளை மனம் திறந்து சொல்லியுள்ளார். அவற்றில் ஒன்று செட்டில் உள்ள எலக்ட்ரிசியனிடம் பணம் தந்து கரண்ட் கட் செய்து விடுவது; அந்த நேரத்தில் போய் அடுத்த படப்பிடிப்பில் கலந்து கொள்வது. மேலும் இப்படி ஒரே நேரம் இரண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள பல வித வழிகளை கையாண்டுள்ளார்.

அன்னை இல்லம் என்ற படத்தில் நடித்த போது சாஸ்திரி என்ற சென்சார் அதிகாரி அவரை நேரில் அழைத்து " இப்போ வர்ற படங்களில் தொண்ணூறு சதவீதம் நீ இருக்கே. நல்லா நடிக்கிறே ஆனா இந்த படத்தில் ஏன் திக்குவாய் காரனா காமெடி செஞ்சே? அது நல்லா இல்லை. திக்குவாய் காரர்களுக்கு மனம் வருத்தப்படும் இல்லையா? இனி இப்படி உடல் ஊனத்தை வைத்து காமெடி செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்; அப்போது தான் அன்னை இல்லம் படத்தை கிளியர் செய்வேன்" என நாகேஷிடம் சத்தியம் வாங்கினாராம்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் உடன் மிக நெருக்கம். ஜெயகாந்தன் எவ்வளவு வித்யாசமான நபர் என்பதற்கு ஒரு உதாரணம். ஒரு முறை காரில் சென்ற போது ரயில்வே கேட் போடப்பட்டிருக்க, "சும்மா காரில் உட்கார்ந்து என்ன செய்வது; வா ! ரயில்வே கேட் எடுக்கும் வரை பிச்சை எடுக்கலாம்" என சட்டை, வேட்டியை கழட்டி விட்டு கேட் அருகே உட்கார்ந்து பிச்சை எடுத்தனராம். அதிலும் ஜெயகாந்தனுக்கு தான் அதிகம் சில்லறை கிடைத்தது என்கிறார் குறும்புடன்.

***
இப்படி எத்தனையோ சுவாரஸ்ய சம்பவங்கள் .. கடைசி சில பகுதிகளில் கமல் பற்றி ஒரு அத்தியாயம், பின் அடுத்தது ரஜினி பற்றி என சம்பிரதாயமாக செல்வது தான் சற்று அலுப்பூட்டுகிறது.

நாகேஷை மட்டுமல்ல, சிவாஜி, எம். ஜி. ஆர் படங்களை பார்த்த மக்கள் நிச்சயம் ரசிக்க கூடிய புத்தகம் இது. நாகேஷ் திரை உலக வாழ்க்கையை மட்டுமல்லாது, அந்த கால கட்ட சினிமா உலகையும் அறிய முடிகிறது

**திண்ணை செப்டம்பர் 17-தேதியிட்ட இதழில் பிரசுரமான விமர்சனம்

நூலின் பெயர்:  : " நான் நாகேஷ் ":
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
ஆசிரியர்: எஸ். சந்திர மவுலி
விலை: ரூ. 175

13 comments:

  1. Anonymous9:35:00 AM

    நூல் சுவாரஸ்யமாக இருக்குமா இல்லையா என்று தெரியாது... ஆனால் உங்கள் பதிவு மிக சுவாரஸ்யம்

    ReplyDelete
  2. இம்மாதிரி புத்தகங்கள் நிறைய வர வேண்டும். எல்லா துறை வல்லுனர்கள், சாதனையாளர்கள் பற்றியும். விமர்சனம் நன்று.

    ReplyDelete
  3. நாகேஷ் அவர்களை பிடிக்காதோர் உண்டா!

    நல்ல நூல் விமர்சனம். படிக்கத் தூண்டுகிறது.

    ReplyDelete
  4. நாகேஷ் ரசிகன்தான் நானும். புத்தகம் வாங்கி விடுவேன். இன்று அவர் பிறந்த நாளா...அவருக்கு ஏதும் விருது கிடைக்காதது குறித்து கேபி சமீபத்தில் கூட வருத்தப் பட்டுப் பேசினார். அவரை மறக்க முடியுமா?

    ReplyDelete
  5. நாகேஷ் அவர்களின் பிறந்த நாள் அன்று நல்லதொரு நூல் விமர்சனம் மோகன். படிக்கத்தூண்டியது உங்கள் விமர்சனம்.... மிக்க நன்றி.

    ReplyDelete
  6. நாகேஷ் பிறந்த நாளை நினைவு வைத்து பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  7. கிட்டதட்ட ஒரு வருடம் முன்பே இந்த புத்தகத்தை வாசித்திருக்கிறேன். என்னுடைய மோஸ்ட் ஃபேவரைட் லிஸ்ட்டில் இதுவும் ஒன்று.

    //புத்தகம் 250 பக்கங்கள் இருந்தாலும் மிக லைட் ரீடிங் என்பதால் விறுவிறுவென்று படித்து விட முடிகிறது.//

    மிகச்சரி. காலையில் வாசிக்க ஆரம்பித்து மதியம் முடித்துவிட்டேன். எதிர் நீச்சல், நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல்....எதை சொல்வது எதை விடுவது என்றே தெரியவில்லை. நாகேஷ் நாகேஷ்தான்!

    ReplyDelete
  8. திண்ணையில் வெளியான அன்றே வாசித்து விட்டிருந்தேன். நாகேஷ் அவர்களது பிறந்தநாளன்று சிறப்புப் பதிவாக வெளியிட்டுருப்பது நன்று. நல்ல பகிர்வு. அவர் நடித்தவற்றில் எதிர் நீச்சல் மிகப் பிடித்தமானது.

    ReplyDelete
  9. வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_29.html உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். முடிந்த போது பார்க்கவும்

    ReplyDelete
  10. ஷீ நிசி: நூலும் சுவாரஸ்யம் தான். வாசியுங்கள் ஷீ நிசி
    **
    //ஆதி மனிதன் said...
    இம்மாதிரி புத்தகங்கள் நிறைய வர வேண்டும். எல்லா துறை வல்லுனர்கள், சாதனையாளர்கள் பற்றியும்.//

    ஆம் அதே தான் என் கருத்தும் ஆதி மனிதன்

    **
    கோவை டு தில்லி மேடம்: நன்றி
    ***
    ஸ்ரீராம்: மகிழ்ச்சி நன்றி
    **
    வெங்கட் நாகராஜ் : நன்றி

    ReplyDelete
  11. கோகுல்: முன்பே புத்தகம் வாசித்தாலும் இப்போது தான் பகிர்கிறேன். நன்றி
    **
    ரகு: அட ! இந்த புத்தகம் வாசித்துள்ளீர்களா? மகிழ்ச்சி.
    **
    ராமலட்சுமி: நாகேஷ் படங்களில் பிடித்தவை எனக்கு பெரிய லிஸ்ட் உள்ளது. தில்லானா மோகனாம்பாள், மகளிர் மட்டும் (பிணம்), சர்வர் சுந்தரம்..இன்னும் நிறைய சொல்லலாம்
    **
    மாதவி மேடம்: மகிழ்ச்சி. நன்றி

    ReplyDelete
  12. நாகேஷ் மிக அருமையான நடிகர்.புத்தக விமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  13. நாகேஷ் அவர்களின் பிறந்த நாள் அன்று நல்லதொரு நூல் விமர்சனம்

    படிக்கத்தூண்டியது உங்கள் விமர்சனம்.... மிக்க நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...