Monday, May 1, 2017

சைக்கிளிங் : சுவாரஸ்ய உடற்பயிற்சி - ஒரு அறிமுகம்

ட்டம், நடை என துவங்கும் உடற் பயிற்சியில் அடுத்த கட்டம்.. சைக்கிளிங் !

தினமும் ஒரே வித பயிற்சி செய்து வந்தால் - உடல் அதற்கு எளிதாக பழகி விடும். எனவே வெவ்வேறு பயிற்சி செய்வது அவசியமாகிறது. மேலும் ரன்னிங் பயிற்சி மேற்கொள்வோர் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாள் மட்டுமே (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) ஓடுதல் நலம். மீதமுள்ள 3 நாட்களில் கிராஸ் ட்ரைனிங் என சொல்லப்படும் பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்துவார்கள் .. அதாவது சைக்கிளிங் அல்லது நீச்சல்..

நீச்சல் அனைவருக்கும் தெரியுமா என்பது சொல்ல முடியாது; மேலும் ஒவ்வொரு முறை நீச்சலுக்கும் பணம் தந்து  செல்ல வேண்டும். அல்லது மாதாந்திர/ வருடாந்திர சப்ஸ்கிருப்ஷன் கட்ட வேண்டும்..எனவே ரன்னிங்கில் இருந்து பல நண்பகட்டமாக சைக்கிளிங்கிற்கு நகர்கிறார்கள்..

நாம் வழக்கமாய் ஓட்டும் சைக்கிள்களையே ஓட்டலாம். தவறில்லை. ஆனால் சைக்கிளிங்கை வழக்கமாய் செய்வோர் இன்னும் சற்று அட்வான்சுட் சைக்கிள்கள் பயன்படுத்துவார்கள்.



3 வகை சைக்கிள்கள்   

சைக்கிள்களில் பல வகை உண்டு. முக்கியமான 3 வகைகள் பற்றி பார்ப்போம்

மௌண்டன் பைக்குகள் (சைக்கிள்களை பைக்குகள் என்றே அழைக்கிறார்கள். ஆரம்பத்தில் எனக்கும் குழப்பமாய் தான் இருந்தது......... சைக்கிளை பைக் என்று அழைத்தால் பைக்கை எப்படி அழைப்பார்கள் என ! இப்போது நானே மௌண்டன் பைக் என்று தான் இயல்பாக எழுதுகிறேன் ) ... ... பெயருக்கேற்ற படி மலையேற்றம் உள்ளிட்ட ஈவென்ட்டுகளுக்கு பயன்படும் சைக்கிள். இதே சைக்கிளில் சென்னை தெருக்களில் செல்வோரும் உண்டு. இவற்றின் டயர்கள் பெரிதாக இருக்கும். வெயிட்டும் அதிகம். எனவே 50 கி. மீ/ 100 கி. மீ செல்வோர் இதனை அதிகம் நாட மாட்டார்கள். மலையேற்றம் செய்யும் நண்பர்கள் இதனை அதிகமாக நாடுவர். நல்ல மௌண்டன் சைக்கிள்  10,000 லிருந்து கிடைக்கிறது.


ரோடி /ரோட் பைக் - 50 கிலோ மீட்டர் துவங்கி, 100, 200, 300 கி மீ என அதிக தூரம் சைக்கிளில் செல்வோர் விரும்பும் சைக்கிள் இது. சைக்கிள் வீரர்களில் பலரும் வைத்திருக்கும் சைக்கிள் இதுவே. இவற்றின் டயர் மிக மெலிதாக இருக்கும். மொத்த எடையும் கூட மிக குறைவே. எனவே சைக்கிள் வீரர்கள் ஒரு மணி நேரத்தில் சாதாரணமாக 20 முதல் 30 கிலோ மீட்டர் தூரம் வரை செல்வார்கள். மிக சிறந்த வீரர்கள் ஒரு மணி நேரத்தில் 40 கிலோ மீட்டர் செல்வதும் உண்டு. சைக்கிள்களில் இது கொஞ்சம் விலை அதிகம் தான். 50,000 துவங்கி ஒரு லட்சம், இரு லட்சம் என விலை நீண்டு கொண்டே போகிறது. பலரும் வாங்கும் சைக்கிள் 60,000 முதல் ஒரு லட்சத்திற்குள் இருக்கும்

மூன்றாவது - ஹைபிரிட் சைக்கிள் - இது மவுண்டன் பைக் - ரோடி இரண்டிற்கும் இடைப்பட்டது.. எல்லா விதத்திலும்.

டயர் ...மவுண்டன் பைக்கை விட மெல்லியது.. ரோடியை விட பெரியது. விலையும் இரண்டிற்கும் இடைப்பட்டது. 30,000 முதல் ஹைபிரிட் சைக்கிள் கிடைக்கிறது

முக்கிய விஷயம்: இந்த மூன்று வகையும் அநேகமாய் கியர் சைக்கிள்கள் !

பலரும் முதலில் ஹைபிரிட் வாங்கி விட்டு கொஞ்ச காலம் கழித்து ரோடிக்கு நகர்கிறார்கள். நான் வாங்கியதும் ஹைபிரிட் சைக்கிள் தான்.

வைப்ரன்ட் வேளச்சேரி நடத்திய சைக்கிளிங் ஈவெண்ட்டில் டிஜிபி சைலேந்திர பாபு அவர்களுடன் 

எதற்கு கியர்?

செல்லும் வேகத்திற்கேற்ப கியர் மாற்றி கொள்ளலாம். கியர்  சைக்கிள் இன்னும் சற்று வேகமாய் செல்லும். பாலங்களில் சாதாரண சைக்கிள் மிதிக்க நிரம்ப சிரமப்படுவோம். கியர் சைக்கிளில் எளிதாக ஏறலாம்.

சைக்கிள் ஓட்டுவதே கலோரி எரிக்க/ எனர்ஜியை செலவழிக்க.. அப்புறம் கியர் எதற்கு? சாதாரண சைக்கிள் போதாதா என்று நானும் யோசித்ததுண்டு.

சாதாரண சைக்கிளில் 50,100 ஏன் ஆயிரம் கிலோ மீட்டர் கூட பயணிக்கும் /  போட்டிகளில் கலந்து கொள்ளும் நபர்கள் உண்டு. ஆனால் இவர்கள் மிக சின்ன கேட்டகரி.

சைக்கிளிங் ஈவென்ட்களும் BMR எனப்படும் நெடூந்தூர பயணங்களும் சரி 50,100,200,300 கி மீ என அதிகரித்து கொண்டே செல்லும்.

துவங்கும் போது வெறும் உடற் பயிற்சி என துவங்கினாலும் - ஏதேனும் குழுவில் இணைந்தால் பின் 50ல் துவங்கி அடுத்தடுத்து செல்ல துவங்குவோம். இங்கு தான் கியர் சைக்கிள் பயன்பட துவங்குகிறது

கலோரி எரிப்பு 

கலோரி எரிப்பை பொறுத்த வரை நடையை விட சைக்கிளிங் நிச்சயம் அதிக Calorie எரிக்கும். வேகமான ரன்னிங்கை விட கலோரி எரிப்பு சைக்கிளிங்கில் குறைவாக இருக்கும்.

பொதுவாகவே அடுத்தடுத்த இரண்டு ஒர்க் அவுட் ஒரே விதமாய் இல்லாமல் பார்த்து கொள்ள சொல்வார்கள். ஒரு நாள் ரன்னிங் - மறு  நாள் சைக்கிளிங் என்றால் நிச்சயம் அதிக கலோரிகள் எரிக்க முடியும். தொடர்ந்து இரு நாள் ரன்னிங் அல்லது சைக்கிளிங் செய்வதை விட உடல் எடை குறைப்புக்கு இது அதிக பலன் தரும்

வாடகை சைக்கிள் 

ஜஸ்ட் பை சைக்கிள், ப்ரோ பைக்ஸ் போன்ற பிரபல கடைகளில் சைக்கிள்கள் வாடகைக்கு தருகிறார்கள். ஒரு நாள் வாடகை 300 ருபாய் என்கிற அளவில் இருக்கும்.

ஒரு நாள் வாடகைக்கு எடுத்து ஒட்டி பார்த்து விட்டு கூட சைக்கிளிங்க் நமக்கு பிடிக்கிறதா - எந்த சைக்கிள் வாங்கலாம் என முடிவெடுக்கலாம்

எனது அனுபவம் 

ஓட்டம் துவங்கிய பின் சைக்கிள் ஓட்ட பலரும் அறிவுறுத்த - முதலில் வீட்டில் இருந்த பெண்ணின் லேடி பேர்ட் சைக்கிள் எடுத்து 3 மாதம் ஓட்டி வந்தேன். வாரம் சில முறையாவது சைக்கிள் ஓட்டுவது வழக்கமானது.



முதலில் 6 கிலோ மீட்டர், பின் 10 கிலோ  மீட்டர் ,15, 25 என 40 கிலோ மீட்டர் வரை 3 மாதத்தில் லேடி பேர்ட் சைக்கிளில் ஒட்டிவிட்டேன். அப்புறம் தான் சைக்கிளிங் நமக்கு பிடிக்கிறது - சைக்கிள் வாங்கலாம் என முடிவு செய்து எனக்கான கியர் சைக்கிள் வாங்கினேன். பணம் போட்டு வாங்கி வீணாய் போயிடக்கூடாது என்ற பயம் தான் !

சைக்கிள் டு ஒர்க் 

தினமும் அலுவலகத்துக்கு சைக்கிளில் செல்வது என்பது ஒரு இயக்கமாகவே நடந்து வருகிறது. டைடல் பார்க் உள்ளிட்ட பல பெரும் அலுவலக வளாகங்களில் இத்தகைய சைக்கிள்கள் பார்க்கிங் தனியாக வைத்துள்ளனர்.

மேலும் மிக அதிக தூரத்தில் இருந்து வந்தால் குளிக்க, உடை மாற்றி கொள்ள வசதியும் பல நிறுவனங்கள் செய்கின்றன

மோட்டார் பைக் அல்லது கார் இரண்டிற்குமே பெட்ரோல் அல்லது டீசல் தேவை. அவை காற்றை மாசு படுத்தவே செய்கின்றன.  மாறாக சைக்கிள் சுற்று சூழலுக்கு மிக நல்லது-எந்த விதத்திலும் மாசுபடுத்த வில்லை

மேலும் அண்மையில் நடந்த ஒரு ஆய்வில் - தினமும் அலுவலகத்திற்கு சைக்கிளில் செல்வோருக்கு பெரிய நோய்கள் வரும் அபாயம் பெரிதும் குறைகிறது என கண்டு பிடித்துள்ளனர்.

இந்த ஆய்வில் சொல்லும் முக்கிய விஷயம்: எந்த உடற் பயிற்சியும் தினமும் செய்வதில் இருந்து பலர் தவறலாம். ஆனால் ஆபிஸ் செல்வது தினமும் நடக்கும் ஒரு விஷயம்.இத்துடன் சைக்கிளிங்கை இணைத்து விடும்போது தினமும் சைக்கிளிங் செல்வதும் வழக்கமாகி விடுகிறது. எனவே தான் அலுவலகத்திற்கு சைக்கிளில் செல்வோர் பெரும் பலன் அடைகிறார்கள் என கூறுகிறது !

வைப்ரன்ட் வேளச்சேரி உள்ளிட்ட பல குழுவில் அங்கிருக்கும் மெம்பர்கள் வாரத்திற்கு எத்தனை நாள் சைக்கிளில் வேலைக்கு செல்கிறார்கள் என்பதை ஒரு போட்டியாக வைத்து வாரா வாரம் யார் வெற்றி பெறுகிறார் என அறிவிக்கிறார்கள்

சென்னை சைக்கிளிங் குழுக்கள்

சென்னையை பொறுத்தவரை WCCG (Chennai cyclists ) என்கிற குழு முக்கிய பங்காற்றி வருகிறது. இவர்களுக்கு தாம்பரம், அசோக் நகர், வேளச்சேரி, அண்ணா நகர் என பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது.

இவர்களின் இணைய முகவரி :

https://www.facebook.com/groups/wccgisthebest/

உங்கள் வீட்டின் அருகே உள்ள கிளை நண்பர்களுடன் இணைந்து கொண்டால் - சைக்கிளிங் செல்ல எளிதாக இருக்கும் !

நிறைவாக ...

சைக்கிளிங்கில் அதிக தூரம் செல்லும்போது பல இடங்களை சுற்றி பார்க்க ஒரு வாய்ப்பு ! டிராவலிங்கில்   விருப்பம் உள்ள சிலர் .... சைக்கிளில் பயணம் செய்தபடி பல இடங்களை சுற்றி பார்ப்பதை வழக்கமாய் கொண்டுள்ளனர்.

மேலும், சைக்கிளிங் - ரன்னிங் போல கடினமான ஒன்றல்ல - மராத்தான் ஓடும்போதும் சரி, ஓடி முடிக்கும் கடைசி நிமிடமும் சரி மிக கடினமான ஒன்றாய் இருக்கும்.சைக்கிளிங் அப்படி அல்ல...பெருமளவு சோர்வாகாமல் செய்யும் உடற் பயிற்சி இது.அவ்வப்போது ரெஸ்ட் எடுத்து கொண்டு பயணித்தால் எவ்வளவு தொலைவும் பயணிக்கலாம்

Happy Cycling !

****
தொடர்புடைய பதிவுகள் :

முதல் மாரத்தான் அனுபவங்கள் 

மராத்தான் ..சில தவறான புரிதல்கள்

உடல் எடை குறைப்பு: உணவாலா? உடற் பயிற்சியாலா: ஒரு நேரடி அனுபவம்

சென்னையின் மாபெரும் - விப்ரோ மாரத்தான்.. சில பாசிட்டிவ் & நெகட்டிவ்

முதல் அரை மாரத்தான் -கற்றதும் பெற்றதும்

6 comments:

  1. அருமையான, ஆரோக்கியம் குறித்தான சைக்கிளிங் பயணம் எத்தகையது, என்பதை விளக்கங்களுடன் கூடிய குறிப்பு.. தொடர்ந்து எழுதுங்கள் மோகன், வாசிக்க காத்திருக்கிறோம்..

    ReplyDelete
  2. நெய்வேலியில் இருந்த வரை ஊர் முழுவதும் சைக்கிளில் சுற்றி வருவேன். இந்த மாதிரி கியர் சைக்கிள் ஒரிரு முறை பயன்படுத்தி இருக்கிறேன்.

    ReplyDelete
  3. உற்சாகமான உங்களுடைய ஈடுபாடும், பகிர்வும் மகிழ்ச்சி. சுற்றுச் சூழல் மாசு படாமல் காக்க எடுக்கும் முயற்சிகள் குறித்து வாசிக்கும் போது சந்தோஷமாக உள்ளது.

    ReplyDelete
  4. சைக்கிளிங் எனக்கும் பிடித்தது.சைக்கிளில் ஹெல்மட்டுடன் கண்டதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. ஒரு காலத்தில் சைக்கிளிலேயே தஞ்சையையும், மதுரையையும் அளந்தவன் நான்! ஆனால் இப்போது நடைப்பயிற்சி கூட இல்லை. விதம் விதமான சைக்கிள்கள் பற்றிச் சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  6. நன்றி கணேஷ். முகநூலில் தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்தமைக்கும்

    நன்றி வெங்கட் & ஸ்ரீராம் : சைக்கிளிங் இப்போது கூட துவங்கலாம். ஓட்டம் போல அதிக சிரமமில்லை

    நல்வார்த்தைகளுக்கு நன்றி திரு பாண்டியன்

    நன்றி வேகநரி ; சைக்கிளிங் ஈவென்ட்களில் ஹெல்மெட் இருந்தால் மட்டுமே பங்கு கொள்ள அனுமதிப்பார்கள்


    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...