Wednesday, December 3, 2025

அன்புள்ள அக்கா ..

உன்னுடைய பிறந்த நாளான இன்று உன்னுடனான நினைவுகளை எண்ணிப் பார்க்கிறேன் 


 நான்கு குழந்தைகள் உள்ளது நம் குடும்பம்.. முதல் இரண்டு ஆண்கள் (அண்ணன்கள்) மிக மிக நெருக்கம்-  நண்பர்கள் என்றே தான் சொல்லவேண்டும். அடுத்த இருவரான நாம் இதனாலேயே தனி கூட்டணி ஆனோம்.

நான் கைக்குழந்தையாய் இருந்த போது  - கொழு கொழு என்று இருப்பேன் (இன்னிக்கும் அப்படித்தான் ); அப்போது நான்கு புறமும் தலையணை வைத்து உட்கார வைப்பாய்- நான் பாலன்ஸ் இன்றி தலையணை மேல் சாய்வது உனக்கு செம குஷியாய் இருக்கும்.  உன்னைக் குறித்தான முதல் நினைவு என்றால் இது தான்.. 

உன் தோழிகளுடன் நம் வீட்டு ஊஞ்சலில் என்னை வைத்துக் கொண்டு ஆடுவீர்கள் - நீ கம்பியை பிடித்த படி ஊஞ்சலில் நின்றவாறு ஆடும் சித்திரம் இன்னும் நினைவில் இருக்கிறது 



இப்படி ஒரு முறை நீ உன் தோழிகளுடன் ஊஞ்சல் ஆட, வாசலில் சிறு குழந்தையான நான் மட்டும் அமர்ந்திருந்தேன். கையில் தங்கக்காப்பு அணிந்திருக்க - தள்ளு வண்டியில் பஞ்சு மிட்டாய் விற்கும் ஆள் - என்  வாயில் மிட்டாய் வைத்து விட்டு தங்கக்காப்பை கழட்டி சென்று விட்டான். எனக்கு பேச தெரியவில்லை; ஆனால் அழும் சத்தம் கேட்டு உன் தோழிகள் எல்லோரும் ஓடி வந்து, வாயில் இருந்த பஞ்சு  மிட்டாய் வைத்து - அதனை விற்கும் ஆளாய் இருக்கும் என தேட - அந்த ஆளும் சரி - பொருளும் சரி கிடைக்கவே இல்லை !

நீடாமங்கலத்தின் வீட்டினுள்ளேயே (வராண்டா அல்ல- நிஜ வீட்டின் உள்) நாம் இருவரும் மட்டும் கிரிக்கெட் ஆடுவோம்.  நான் பசங்களுடன் எப்பவும் விளையாடும் பையன். உனக்கோ விளையாடி பழக்கமே இருக்காது; இருந்தாலும் தோற்கக் கூடாது என வெறியுடன் ஆடுவாய் ; சில நேரம் தோற்கடிக்கவும் செய்வாய் ! Competitive to the core !


சிறு வயதிலேயே மிக நன்கு படிக்கக் கூடிய பெண்ணாய் நீ இருந்தாய்; 4 பேரில் மிக நன்கு படித்தது நீயே. 

நான் பள்ளி செல்ல ஆரம்பித்த பின் - ஒழுங்காய் படிக்க வேண்டும் - விளையாடி விட்டு ஆறு மணிக்குள் வீட்டுக்கு வரவேண்டும் என கண்டிஷன் போடுவாய்; 6 மணிக்கு மேல் தாமதமாய் வீடு திரும்பினால், கையில் ஸ்கேலால்  ஒரு நிமிட தாமதத்திற்கு ஒரு அடி ! அம்மா - அப்பாவிடம் என்றும் அடி வாங்காத நான்- அக்கா - அண்ணன் களின் கண்டிப்பில் தான் வளர்ந்தேன்


 

நம் இருவரின் சிறு வயது எதிரி - பெரிய அண்ணன் ! நமக்கு அவர் ஒரு டெர்ரர் ஆக இருந்தார்; சாப்பிட உட்கார்ந்த பின்- வீட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட ஹோட்டலில் ஏதேனும் வாங்கி வரச் சொல்லி உன்னை அனுப்புவார்; ரேடியோவில் ஒரு பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும் போது கிளம்பும் நீ, அந்தப் பாடல் முடிவதற்குள் திரும்ப வேண்டும். நீ எவ்வளவு வேகமாய் ஓடி, டிபன் வாங்கி வருவாய்.... பஸ் போனால் அதையும் கண்டு கொள்ளாமல் புகுந்து-  பறந்து வருவாய் என்பது குடும்பத்தில் மட்டுமல்ல - பக்கத்து வீடுகளுக்குக் கூட தெரியும் 

பத்தாவது முடித்த பின் +1, +2 மன்னார்குடி கான்வென்ட்டில் படித்து வந்தாய்; துவக்கம் முதலே நீ டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்பதே அப்பா மற்றும் உனது குறிக்கோளாய் இருந்தது; நீடாவில் இருந்து மன்னை பஸ்சில் சென்று வந்த நீ- +2  பஸ்ஸில் சென்று வருவது சிரமமாய் உள்ளது என மன்னார்குடியில் மாமா வீட்டில் தங்கினாய் - நீ வீட்டில் இல்லாததை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை- தினம் அழுகை- ஒரு வாரம் ஒழுங்காய்  சாப்பிடாமல் அழுதவாறே இருக்க, ஒரே வாரத்தில் உன்னை திரும்ப அழைத்து விட்டனர்- அப்புறம் வீட்டிலிருந்தே செல்ல ஆரம்பித்து விட்டாய் 

முதல் 2 அண்ணன்களை டாக்டர் ஆக்க நினைத்த அப்பாவால்- அது முடியாமல் போனாலும்- உனக்கு டாக்டர் சீட்டு கிடைத்தது குடும்பத்தில் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது ; அருகில் உள்ள தஞ்சையில் படிக்க துவங்கினாய். 

இப்போது ஹாஸ்டலில் தங்க ஆரம்பித்தாய் - நான் அப்போது எப்படி அழாமல் இருந்தேன் என தெரியவில்லை- சற்று பெரிய பையன் ஆனதால் புரிந்து கொண்டிருக்கலாம்.

அவ்வப்போது நீ உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் சிறுவனாக இருந்த நான் வந்து தங்கி உள்ளேன்; ஒரு முறை நீ தோழிகளுடன் அவர்கள் ரூமில் அரட்டை அடிக்கச்செல்ல - உனது ரூமில் நான் - பூட்டி கொண்டு தூங்கி விட்டேன். கதவை எவ்வளவோ தட்டியும் திறக்க வில்லை;  நீண்ட நேரம் தட்டி எல்லாரும் டென்சன் ஆகி கதவை உடைக்கும் முன் நானே திறந்து விட்டேன். இது பல முறை பேசி சிரித்த ஒரு சம்பவம் 

படிப்பு முடித்ததும் நம் ஊரிலேயே நமது மருந்து கடைக்கு நேர் எதிரில் க்ளினிக் வைத்தாய்  - அப்பாவின் நீண்ட நாள் கனவு நினைவேறியது; சில நேரம் அப்பா இல்லாமல் நான் கடையில் இருப்பேன்; உனது மருந்து சீட்டுகளுக்கு நான் மருந்து தந்தது - ஒரு அனுபவம் !

மருத்துவர் வாழ்க்கை என்பது எத்தனை கடினம் என்பது- அவரது குடும்பத்து உறுப்பினர்களுக்கு மட்டும் தான் தெரியும் ! பல நாள் நள்ளிரவு 1- 2 மணிக்கு வந்து வீட்டு கதவைத் தட்டுவர் ; அவர்கள் உண்மையில் நோயாளிகளா - இல்லை திருட வந்தவர்களா என மிக பயமாய் இருக்கும். 

வெளியூர் கிளம்பும் நேரம் சரியாக பேஷண்ட் வீட்டுக்கு வந்து விடும்; கிளம்ப சர்வ நிச்சயம் தாமதம் ஆகும் 

படிப்பு முடித்து ஓரிரு வருடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர்; உனது எதிர்பார்ப்பு "மாப்பிள்ளை நல்லவராக இருக்க வேண்டும்; கெட்ட பழக்கம் ஏதும் இருக்க கூடாது" என்பதாக இருந்தது; அத்தகைய ஒருவரே கணவராக வந்தார். பெண் பார்த்த சம்பவமும் அதில் முரளி அத்தான் டை கட்டி வந்ததும் இன்னும் நினைவில் இருக்கிறது 


உனது திருமண நிச்சயதார்த்தம் குறிப்பிட்ட ஒரு விஷயத்திற்காக என்னால் மறக்கவே முடியாது; சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்; எனது நண்பர்கள் நிச்சயதார்த்தத்திற்கு உதவி செய்ய முதல் நாள் இரவே வந்து விட்டனர்; ஏனோ இரவு ஏகப்பட்ட வேலைகள்.. எல்லாம் முடியவே நள்ளிரவுக்கு மேல் ஆகிவிட்டது; ஓரிரு மணி நேரம் தூங்கணுமா என குளத்தை பார்த்தவாறே அரட்டை அடித்து கொண்டிருந்து விட்டு, ஒரு நிமிடமும் தூங்காமல் நேரே காலை மீண்டும் அனைவரும் வேலை பார்க்க ஆரம்பித்தோம் 

தஞ்சையில் நடந்த உனது திருமணம் பெரிய அண்ணன் தான் முன்னின்று நடத்தினார். அடுத்த ஒரு வாரத்தில் சின்ன அண்ணன் பாலாஜி குமார் திருமணம் - குடும்பத்தில் ஒரே வாரத்தில் 2 திருமணங்கள் - மிக பிஸியான மாதமாக அனைவருக்கும் இருந்தது.  எத்தனையோ வருடங்கள் ஆனாலும் நிறையவே நினைவுகள் இவை இரண்டிலும்..  


திருமணத்திற்கு பின்னும்  உனது கிளினிக் நீடாமங்கலத்தில் இருந்ததால் - நம் தெருவிலேயே தனி வீட்டில் இருந்தாய்; இதனால் உன்னை எப்போதும் நாங்கள் மிஸ் செய்யவே இல்லை; அடுத்து பல வருடங்களுக்குப் பின் நெய்வேலியில் வேலை கிடைத்து நீ செல்லும் வரை நம் ஊரிலேயே இருந்தது அம்மா - அப்பாவிற்கு பெரும் சந்தோஷமாய் இருந்தது 

முதல் முறை நீ கன்சீவ் ஆன போது - உன் வீட்டுக்கு வந்த என்னிடம் சொன்னாய்; எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை; அடுப்படிக்கு ஓடி சர்க்கரை டபபாவை எடுத்து வந்து முதலில் உன் வாயில் சர்க்கரை போட்டேன் 

முதல் பையன் - நந்த கிஷோர் டெலிவரி திருச்சியில் நடந்த போது பெரும்பாலும் நானும் அம்மாவும் தான் கிளினிக்கில் உடன் இருந்தோம். டெலிவரி தாமதமாகிக் கொண்டே போக-ஒரு நாள் கிளினிக்கில் இருந்து நைஸ்  ஆக வெளியே வந்து - அருகில் இருந்த சோனா  தியேட்டரில் சின்ன கவுண்டர் பார்த்து விட்டு சென்றோம்- நீ சற்று டென்சன் ஆக இருந்ததால் மூட் டைவர்ட் செய்ய சென்றோம் என நினைக்கிறேன் 


"வளர்ந்ததும்  யாவரும் தீவாய் போகிறோம் .."என்ற நா. முத்து குமாரின் பாடல் வரி போல உடன் பிறந்தோர் - அவரவரும் காலப்போக்கில் குடும்பம், தத்தம் குழந்தைகள் என ஆகிப் போனாலும்,  அனைவருக்கும் நடு நிலையாக - எல்லோரையும் இணைக்கும் காரணியாக நீ எப்போதும் இருந்திருக்கிறாய் 



வீட்டுக்கு வந்த 2 அண்ணிகள் - தம்பி மனைவி அனைவரிடம் நல்ல நட்பு / உறவு எப்போதும் பார்த்து கொள்வாய் ; அனைவருக்கும் நிறைய செய்ய வேண்டும் என்பதே உன் எண்ணமாக எப்போதும், இப்போதும் இருக்கிறது 

"வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்யும் நபர்" என உன்னை கிண்டல் அடிப்பேன் நான். அந்த செலவு எப்போதும் உனது இரு குழந்தைகளுக்காக தான் இருக்கும்- உனக்காக இருக்காது 



அம்மா எத்தனையோ உடல் உபாதைகளுடன்  - 75 வயது வரை இருந்தது நிச்சயம் பெரிய அண்ணன் மற்றும் உனது கவனிப்பால் தான். 

முரளி அத்தான் உடல்நிலையை நீ பார்த்து கொண்டதும், அத்தனை வருடம் அவர் வாழவும் உனது கண்காணிப்பு தான் காரணம்  

உனது ரிட்டயர்மெண்ட்க்கு வந்த போது உன்னுடன் பணி புரிந்த அனைவரும் உன்னை பற்றி உயர்வாய் பேசியது கேட்டு மிக மகிழ்வாய் இருந்தது - கடும் உழைப்பைக் கொண்ட பெண்  - தனது வேலை மற்றும் வீடு இரண்டிலும்  நல்ல பேர் எடுக்க முடியும் என நீ நிரூபித்திருக்கிறாய் 

அத்தான் மற்றும் உனது நல்ல மனதுக்கேற்ற மாதிரி - உனது 2 குழந்தைகளும் வளர்ந்தனர் - போலவே அவர்களுக்கு அமைந்த துணைகளும் அற்புதமானர்களாய் இருக்கின்றனர்.  


நீ ரிட்டயர்ட்மெண்ட்க்கு பிறகு சென்னையில் இருக்கத் துவங்கியது எனக்கு பெரும் சந்தோஷத்தை தந்தது.. அடிக்கடி நாம் பார்க்கா விட்டாலும் கூட நினைத்தால் பார்த்து விடலாம் என்கிற தைரியம் தான் காரணம் ; நீ பெங்களூரு சென்றது எனக்கு ஒரு இழப்பே. ஏதேனும் அதிசயம் நடந்து நீ மீண்டும் சென்னை வந்தால் எல்லோருமே மகிழ்வோம் !

இறுதியாக -

முரளி அத்தான் மரணத்தை நீ எதிர்கொண்ட விதம் - மிக மிக போராடி விட்டீர்கள் - கடைசி வரை உனது முயற்சிகளை நீ விடவில்லை - எல்லா போராட்டமும் தாண்டி அவர் இறைவனடி சேர்ந்து விட்டார் 

நீ எவ்வளவு மன உறுதி படைத்தவர் என்பதை - உன்னை சிறு வயது முதல் பார்த்து வந்த நான் அன்று தான் கண்டேன்.   

கடவுளாலும் மாற்ற முடியாத விஷயம் ஒன்று உண்டு - நடந்ததை மாற்ற அவராலும் முடியாது என்பதை மருத்துவ துறையில் இருந்ததால் நீ உணர்ந்திருக்கலாம் 

உனது மன உறுதியில் 5 % இருந்தால் கூட மனிதர்கள் தைரியமாக வாழ்ந்து விடலாம் 

அக்கா
அம்மா
டீச்சர் 
முதல் தோழி
குடும்ப டாக்டர் 

- இப்படி பல விதமாய் எனக்கு  நீ இருக்கிறாய் - இது எத்தனை பேருக்கு சாத்தியம் ! நான் நினைத்து நினைத்து மகிழும் விஷயம் இது !

இதே விதமான மகிழ்வுதான் நீ நெருங்கி பழகும் எல்லோருக்கும் இருக்கும் !



நூறு ஆண்டுகளுக்கான உழைப்பை 60 வயதுக்குள் செய்து விட்டாய்.. இனியாவது உனக்கு உயிரான பேரன்களுடன் மகிழ்ச்சியாக விளையாடு ...ஓய்வெடு !

கடவுள் உனக்கு நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் தரட்டும் .. !





Friday, October 24, 2025

சூப்பர் சிங்கர் - சீசன் 11 - அம்மா ஸ்பெஷல் - ஒரு பார்வை

சூப்பர் சிங்கர் எபிசோடுகளை ஹாட்ஸ்டார் மூலம் தொடர்ந்து கண்டு வருகிறேன்; நா. முத்துக்குமார் ஸ்பெஷல், பின் இளையராஜா 50 வருட கொண்டாட்டம், இப்போது அம்மா ஸ்பெஷல்...என கான்செப்ட்கள் - தொடர்ந்து பார்க்க வைத்துவிட்டது .

                  

அம்மா ஸ்பெஷல் பாட்டுக்கள் பல இடங்களில் நெகிழ்த்தியது. கண்ணீர் சிந்த வைக்க ஏதுவாய் அனைத்து விஷங்களும் செய்தார்கள்; நமக்கும் கண்ணீர் அவ்வப்போது எட்டி பார்க்கவே செய்தது

இம்முறை வெகு சிலரை தவிர்த்து - பல போட்டியாளர்களும் மிக சாதாரண அல்லது ஏழ்மை குடும்பத்தில் இருந்து வந்திருக்கின்றனர்; அதிலும் பாதி பேராவது " சிங்கிள் மதர்" ! தனியாக குழந்தையை வளர்த்து இத்தகைய போட்டி வரை கொண்டு வருவது பெரிய விஷயம் தான்

சரண் என்கிற இளைஞர் எப்போதும் இளையராஜா பாடல்களையே பாடுவார்; இளையராஜா சுற்றில் பாடும் முன் " நான் ஏழை என்பதாலோ, தாழ்த்தப்பட்டவன் என்பதாலோ எல்லா இடங்களிலும் ஒதுக்க படுகிறேன். என்னை ஏன் எல்லாரும் ஒதுக்குகிறார்கள்? " என்று கேள்வி எழுப்பினார்; தன்னை சமமாய் நடத்தாத சில நிகழ்வுகளையும் கூற, மிஷ்கின் அவரை சமாதானம் செய்தார்

இம்முறை அவர் அம்மா முதலில் வரவில்லை என்று கூறிவிட்டு, அவர் பாடும்போதே வரவைத்து - அவரையும் பார்க்கும் பலரையும் அழ வைத்தனர்;

போட்டியாளர்களுக்குள் இருக்கும் நட்புணர்வு - இந்த கதைகள் சொல்லப்படும்போதெல்லாம் அவர்களில் பலரும் அழுகின்றனர்; அல்லது அழுபவர்களை மட்டும் காமிரா காட்டுகிறது

அம்மா குறித்தான இந்த எபிசோட் பார்க்கும் போது எனக்கு மறுபடி மறுபடி ஒரே விஷயம் தான் தோன்றிக் கொண்டே இருந்தது

அம்மா- அப்பா உயிருடன் இருப்போர் எவ்வளவு அதிர்ஷ்ட சாலிகள் ! அம்மா- அப்பா இருக்கும் வரை குழந்தைகளுக்கு இயல்பாகவே ஒரு பாதுகாப்பு வளையம் வந்துவிடும். பெற்றோர்க்கு முதல் குறிக்கோள் குழந்தைகள் நலன்  தான் - அதற்காக எந்த எல்லை வரையும் செல்வர்; இது தான் குழந்தைகளுக்கு மேற்சொன்ன பாதுகாப்பு வளையமாக செயல் படுகிறது !

என்னைப் போல பெற்றோரை இழந்தவனுக்கு தான் அந்த அருமையும் அவர்கள் இல்லாத வலியும் தெரியும். பெற்றோர் இருக்கும்போது - அவர்கள் அருமையை நாம் உணர்வதே இல்லை; மேலும் அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் ஏசலாம்; அவர்கள் திருப்பி தர போவதில்லை

பெற்றோர்- குறிப்பாக அம்மா ! அவரது ஒரு எக்ஸ்ட்டென்சன் தான் நாம். எனவே நமக்கு நடக்கும் பல விஷயங்கள் நாம் சொல்லாமலே கூட அவர்கள் உணர்வார்கள்; தனிப்பட்ட முறையில் எனக்கு மனதில் ஏதோ பிரச்சனை ஓடி கொண்டிருக்கும்; அது பற்றி அவரிடம் வெளிப்படையாய் பேசாவிட்டாலும் அம்மாவின் பேச்சில் அதற்கு ஏதோ ஒரு தீர்வு- ஒளி கிடைக்கும்; எப்படிம்மா என் மனசை படிச்ச மாதிரி பேசுறே என பல முறை யோசித்திருக்கிறேன்; ஒரு முறையும் சொன்னது இல்லை

சூப்பர் சிங்கருக்கு வருவோம்

எத்தனை எத்தனை கண்ணீர் கதைகள்

வடசென்னையில் சிறு இட்லி கடை வைத்திருக்கும் அம்மாவின் மகன் பூமணி -

                       
   
இம்முறை அனைத்து சுற்றிலும் தானே பாட்டெழுதி புதிய கானா பாட்டுக்களை பாடுகிறான். மிக ஏழ்மையான குடும்பம் - பல முறை இருப்பதிலேயே அதிக பாயிண்ட்கள் எடுக்கிறான் இந்த இளைஞன்

வெங்கடாச்சலம் என்னும் இளைஞர் - எல்லாரையும் விட சற்று வயதில் கூடியவர் (30-35 வயது) - மைக் சிஸ்டம் வாடகைக்கு விடும் கடையில் வேலை செய்பவர்- எப்படியோ இந்த அளவு வந்து விட்டார்

மனோ என்னும் இளைஞரின் தாய் ஏழ்மை காரணமாக அவரை பாட்டு டீச்சர் வீட்டிலேயே விட்டு விடுகிறார்- அங்கேயே மகன் போல தங்கி விடுகிறார் அவர்

ஆப்ரஹாம் - தான் சொந்த பிள்ளை இல்லை- வளர்ப்பு பிள்ளை - ஆனால் தனக்காக பின் அவர்கள் குழந்தையே பெற்று கொள்ளவில்லை - தன்னை எப்படி அன்புடன் வளர்த்தனர் என பேசினார்

இலங்கை தமிழ் பெண் திஷாதனா - - இவரும் மிக ஏழ்மை குடும்பம் - படிப்பு செலவிற்கு மிஷ்கின் முழுமையாய் உதவுவதாக சொன்னார்.

பொதுவாக ஜீ தமிழில் தான் இத்தகைய விளிம்பு நிலை மனிதர்களுக்கு மிக அதிக வாய்ப்புகள் தருவர்; இம்முறை விஜய் டிவியில் இது நிகழ்ந்துள்ளது

பாடகர்களில் தவசீலி குரல் மிக வசீகரிக்கிறது; அந்த கால ஜென்சி , சுவர்ணலதா போல தனித்துவம் வாய்ந்த குரலாக இருக்கிறது ;


பெரும்பாலும் நன்றாகவே பாடுகிறார்

ஆண்களில் ஹ்ருதை & ஆப்ரஹாம் குரல் அட்டகாசமாக இருக்கிறது.

ஆர்கெஸ்டரா நிஜமாகவே ரொம்ப அற்புதமாய் வாசிக்கின்றனர்;

அம்மாக்கள் அனைவரும் இருக்கும் போது எலிமினேஷன் இருக்காது என நினைத்தால், 2 பேரை எலிமினேட் செய்துவிட்டனர்.

OTT வந்த பிறகு டிவி பார்க்கும் வழக்கம் வெகுவாக குறைந்தாலும் இந்த சீசன் சூப்பர் சிங்கர் மட்டும் - வித்யாசமான கான்செப்ட்களால் OTT-ல் தொடர்ந்து பார்க்க வைக்கிறது !

************
அண்மை பதிவுகள் 
- - - - - -

Monday, October 20, 2025

சினிமா விமர்சனம் - Dude ! சில கேள்விகள்.. சில வருத்தங்கள்..

பிரதீப் ரங்கநாதன் முதல் மூன்று படங்களும் அட்டகாசமாய் தந்திருந்தார். இந்த தலைமுறையின் நாடி துடிப்பை நன்கு அறிந்தவராகவே அடையாளம் காணப்பட்டார். ஆனால்.. ஆனால்?


 
ஸ்பாய்லர் அலர்ட் - கதையின் சில மைய புள்ளிகள் பேசப்படும்.. கதை தெரிய வேண்டாம் என எண்ணினால் - அடுத்த சில பாராக்களை தவிர்த்து விடுதல் நலம் !

கே பாக்கியராஜின் அந்த ஏழு நாட்கள் - அப்டேட்டட் வெர்ஷன் தான் - Dude மையக்கதை ! அதன் கிளைமாக்ஸை மாற்றி - காதலனுடன் அந்த பெண் சென்றால் எப்படி இருக்கும்?

அப்படி செல்வது கூட தவறில்லை- எங்கேயோ சில இடங்களில் நடக்கவே செய்யும். பிடிக்காத ஒரு ஆணுடன் விருப்பமில்லாமல் ஒரு பெண் வாழ்வது பிற்போக்குத்தனம் என கொள்ளலாம்.

ஆனால் Dude ல் என்ன நடக்கிறது? பெண்ணின் காதலன் - திருமணத்திற்கு முன்பே - அவளை மணக்க போகிறவனிடம் மேடையில் வைத்து சொல்கிறான்.. நீ கல்யாணம் பண்ணிக்கோ- ஆனால் நாங்கள் ரெண்டு பேரும் ஒன்றாய் சேர்ந்து வாழ்ந்து கொள்கிறோம் என ! என்ன கருமம் இது !

இதை விட கொடூரம் - அந்த 3 பேரும் ஒரே வீட்டில் வாழ்வதாய் தான் காட்டுகிறார்கள் ! பழைய காதலன் மூலம் அந்த பெண் திருமணத்திற்கு பின் குழந்தையும் பெற்று கொள்கிறாள் !

இரண்டாம் பாதியில் ஹீரோவின் மற்றொரு நண்பன் அவனை பார்க்கும் போதெல்லாம் காறி துப்புவதை பல முறை காண்பிக்கிறார் இயக்குனர்; மக்கள் இதையே தான் நம்மை பார்த்து செய்ய போகிறார்கள் என அவருக்கு ஏன் தோன்றவே இல்லை?

சினிமா என்பது ஒரு மிகப்பெரிய மீடியா.. சினிமா பார்த்து நல்லதை எடுத்து கொள்கிறார்களோ இல்லையோ - கெட்ட விஷயம் சர்வ நிச்சயமாய் இளம் தலைமுறை சிலராவது எடுத்து கொள்வர்.

இதே கதை ஒரு நாவலாக எழுதப்பட்டால் கூட - அது நன்கு படித்த - யோசிக்கும் தன்மையுள்ள மனிதர்களிடம் மட்டும் சென்றிருக்கும். சினிமா எனும்போது ஜெனரேஷன் Z - இது எல்லாமே இயல்பு தான் என்ற முடிவுக்கு வர மாட்டார்களா?

இவை அனைத்துக்கும் அடிப்படை ஆணவ கொலை என்கிறார்கள். ஆணவ கொலை தவறு தான் ! ஆனால் இரண்டாம் பாதியில் ஒரு மணி நேரம் வாந்தி வர வைக்கும் காட்சிகளை வைத்து விட்டு கடைசி 10 நிமிடம் ஆணவ கொலைக்கு பயந்தே இப்படி செய்தோம் என முடிப்பது என்ன நியாயமோ?

எனக்கு வருத்தமான இன்னொரு விஷயம் - இது பிரதீப் ரங்கநாதன் படம் + நீண்ட விடுமுறை என்பதால்- ஏற்கனவே போட்ட காசை எடுத்துவிட்டனர்; நிச்சயம் சில கோடி லாபத்துடன் அடுத்த 10 நாட்களுக்கு திரை அரங்கில் ஓடும் .. இது இயக்குனர் கீர்த்திஸ்வரன் மற்றும் பிரதீப்பிற்கு தாங்கள் செய்த தவறை உணர முடியாமல் செய்துவிடும் ..

பணம் தேவை தான் அதற்காக எப்படியும் சம்பாதிக்கலாமா பிரதீப் & கீர்த்தீஸ்வரன்? அடுத்த தலைமுறைக்கு எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என சொல்லி கொடுத்து/ கெடுத்து தான் சம்பாதிக்க வேண்டுமா?

பிரதீப் மற்றும் கீர்த்திஸ்வரன் - தங்கள் சோசியல் மீடியாவில் மிக மகிழ்வாக வெற்றியை கொண்டாடுகின்றனர்; இத்தகைய இயற்கைக்கு எதிரான படங்கள் தான் ஓடும் என ஒரு க்ரூப் நிஜமாகவே ரூம் போட்டு யோசிக்க வைத்து விடலாம்- இந்த படம் !

இந்தியாவை உலக அரங்கில் பலரும் மதிக்க ஒரு முக்கிய காரணம் -நமது குடும்ப அமைப்பு; திருமணத்திற்கு பின் - ஒரு மனைவி - ஒரே குடும்பம் என பெரும்பான்மை மக்கள் வாழ்வது பிற்போக்கு தனம் அல்ல ! அது தான் இந்தியாவை மதிக்க வைத்திருக்கிறது

இப்படி எல்லாம் நடக்கவே இல்லையா? எடுத்தால் என்ன தப்பு என்றால்- மாஸ் மீடியாவில் எதை எடுக்க வேண்டும் என ஒரு சுய கட்டுப்பாடு படைப்பாளிக்கு வேண்டும். குடும்ப உறவுகளில் கூட சில நேரம் - தவறான உறவுக்குள் சிலர் போயிருக்க கூடும்.. அதனை glorify / justify செய்து முழுசாய் ஒரு படம் எடுத்தால் - இன்னும் எத்தனையோ பேருக்கு இது தவறில்லை என்ற எண்ணம் வர வைக்கும். சிந்துசமவெளி என்றொரு படம் இப்படி குடும்ப உறவை தவறாக காட்டி எடுக்கப்பட்டு பலரும் அதனை கடுமையாய் கண்டித்தனர்; இக்காலத்தின் சிந்துசமவெளி - Dude !

சாதாரண பார்வையாளராக - நாம் செய்ய கூடியது ஒன்று தான்.. தயவு செய்து புறக்கணியுங்கள் இத்தகைய படைப்புகளை !

அண்மை பதிவுகள்:

Friday, October 17, 2025

என் இனிய ஸ்நேகா

என் இனிய ஸ்நேகா....

குடும்பத்தில் உள்ளோருக்கெல்லாம்,  பிறந்த நாள் போது சர்ப்ரைஸ் தருபவள் நீ.. உனது தனித்தன்மையில் சிறப்பான ஒன்று இது !

உனது பிறந்த நாளுக்கு உனக்கு என்ன சர்ப்ரைஸ் தருவது? உன் அளவு நான் புத்திசாலி இல்லை ! இருப்பினும் சில நினைவுகளை, எண்ணங்களை பகிர எண்ணுகிறேன்;

இது உனது 27 ஆவது பிறந்த நாள் என்பதால் - 27 விஷயங்கள் :)

1. உன்னை கடவுளின் பரிசு என்றே நானும் அம்மாவும் எண்ணுகிறோம். அம்மா கர்ப்பத்தின் போது வாமிட்டிங்கிற்கு எத்தனையோ ஊசிகள் போட்டும் நீ பாதிப்பின்றி பிறந்தது கடவுள் செயல் தான் என்பது முக்கிய காரணம்.


 நாம் எல்லோருமே எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் ! திருமணத்திற்கு பின் எந்த நாடு, எந்த ஊர் போவோம் என்றே தெரியாமல் வாழும் பல்வேறு பெண்கள் இடையே - கல்யாணத்திற்கு பின்னும் - அம்மா- அப்பா கூப்பிடு தூரத்தில் நீ இருப்பதும்- நினைக்கும் போதெல்லாம் உன்னை பார்க்க முடிவதும் எங்கள் வாழ்க்கையை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்கும் !

2. சிறு வயதில் விளையாட்டாய் சொன்ன விஷயங்களில் எத்தனை நடந்தே விட்டது.. !! நான் எப்படியும் வயதான பின் பிராக்டிஸ் ஆரம்பிப்பேன்; நீயும் இதே கோர்ஸ் படித்தால் - நாம் தினமும் பார்க்க முடியும் என சொன்னது அப்படியே நடந்தது ! எத்தனையோ பெற்றோர் தங்கள் தொழிலுக்கு மகன்/ மகள் வரவேண்டும் என நினைத்தாலும் பலருக்கும் இவ்வாறு நிகழ்வதில்லை ; ஆனால் நீ இதே தொழிலுக்கு வந்தது மிகப் பெரும் விஷயம்; சுய தொழிலில் இன்று சில வலிகள் இருந்தாலும் என்றோ ஒரு நாள் அவையெல்லாம் worth தான் என உனக்கு நிச்சயம் தோன்றும் !

3. கொரோனா வந்த காலத்தில் வீடு- அலுவலகம் இரண்டையும் நீ அசால்டாக சமாளித்த விதம்- உண்மையில் வேறு ஒரு ஸ்நேகாவை எங்களுக்கு காட்டியது.

சில விதத்தில் நீ பயங்கர தைரிய சாலி- ஈசியாக அழ மாட்டாய் ; ஆனால் சில விஷயத்திற்கு தேவையின்றி பயப்படவும் செய்வாய் (விடு.. கவலையோ, பயமோ இல்லாத மனிதர்கள் யாருமே இல்லை !)

4. நீ கடவுள் தந்த கொடை என்றால் - கூக்ளி - நீ எங்களுக்கு தந்த ஆக சிறந்த பரிசு ! 



ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாய் மனிதர்கள் இருக்கிறார்களா என்ன? ஆனால் சர்வ நிச்சயமாய் pet வைத்திருக்கும் மனிதர்கள் ஒவ்வொரு நாளும் சில மணித்துளிகளாவது சந்தோஷத்தை அடைகிறார்கள்; நீ இல்லாத வீட்டில் கூக்ளி தான் எங்களுக்கு ஆறுதல்; இதனை யோசித்து தான் நீ அவனை எங்களுக்கு அளித்துள்ளாய் ! 


பெற்ற குழந்தை கூட கடைசி காலம் வரை நம்முடன் படுத்து தூங்காது - ஆனால் உன் தம்பி இத்தனை வருடத்திற்கு பிறகும் எங்களோடு தான் உறங்குகிறான் !

5. ACS இன்ஸ்டிடியூட் மீட்டிங் ஒன்றிற்கு சென்ற நான்- மாலை மீட்டிங் முடிந்த பின்- வேறு நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்த விட்டு 11 மணி வரை இல்லம் வரவில்லை; நாள் முழுதும் உயிர்ப்புடன் இருந்த மொபைல் 10 மணிக்கு பாட்டரி தீர்ந்து ஆப் ஆகிவிட்டது. தாமதமாய் வருவேன் என்பதை சொல்லவும் இல்லை; எனது நம்பர் ரீச்சபிள் இல்லை என்றதும் - நான் டிரைவிங்கில் இருக்கும் போது - கவுன்சில் மெம்பர்கள் சிலருக்கு போன் அடித்து (இரவு 11.30 க்கு மேல்..!) அப்பாவுக்கு என்ன ஆச்சு; வீட்டுக்கு வரவில்லை என விசாரித்திருக்கிறாய். 

12 மணி அளவில் நான் வீடு வந்து சேர வீட்டுக்கு வெளியிலேயே நின்றிருந்த - உன் முதல் கேள்வி " போனுக்கு என்ன ஆச்சு? " " சார்ஜ் இல்லை ; ஆப் ஆகிடுச்சு " என சொல்ல, போனை வாங்கி சார்ஜ் இல்லாததைப் பார்த்து விட்டு-  வீசி தரையில் எறிந்து விட்டாய். எனக்கு கோபம் வராமல் சிரிப்பு தான் வந்தது..... உனக்கு என் மீது இருந்த அக்கறை பார்த்து...கோபமாய் இருந்த சித்ராவிடமும் சொன்னேன் " என் பொண்ணு என்னை எப்படி லவ் பண்றா பாத்தியா?"

6. "நீங்கள் ஹாலில் இல்லா விட்டால் வந்த உடனே....அப்பா எங்கே? என்று தான் கேட்பாள்" என்று சித்ரா சொல்வாள்.


என் அம்மா போலவே - என் முகம் பார்த்தே நான் மூட் அவுட் அல்லது டென்ஷனில் உள்ளேன் என புரிந்து கொண்டு என்ன விஷயம் - மூஞ்சே சரியில்லை என்பாய்

இவை எல்லாமே உன் அன்பை எனக்கு காட்டும் !

7. ACS தேர்தலில் நான் 3 மாதம்- வீடு ஆபிஸ் இரண்டையும் மறந்து சுற்றிக் கொண்டிருக்க ஆபிஸை நீ தான் சமாளித்தாய். ஆபிஸ் பக்கம் வராமல்  நான் தேர்தலுக்கு அலைவதால் நீ என் மேல் கோபமாய் இருப்பாய் என்று தான் நினைத்திருந்தேன்; ஆனால் தேர்தல் அன்று நீயும் களத்தில் இறங்கி ஒரு நாள் முழுதும் வேலை செய்தது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் + மகிழ்ச்சி !

8. ஒரு உண்மையை சொல்ல வேண்டும்; நீ வந்த பிறகு தான் நம் அலுவலகம் சரியான திசைக்கு செல்ல ஆரம்பித்தது. Placement, Valuation, POSH - இந்த மூன்று துறைகளில் நாம் விரிவாக்கம் செய்ததும் நீ வந்த பிறகு நடந்தவையே ! 



மிக முக்கியமாய் நமது trainees & associates இடம் நீ பழகும் விதம் ! எட்டரை வருடங்களாக நமது ஆபிஸை பார்த்தவன் என்ற முறையில் என்னால் இதை சர்வ நிச்சயமாக உணர முடிகிறது !

9. என்னோடு வண்டியில் வரும் பல நேரம் பின்னால் அமர்ந்து பாட்டு பாடிக் கொண்டே வருவாய்; அம்மாவிடம் கேட்டால் என்னோடு வரும்போது பாடவே மாட்டாளே என்று சொல்கிறார் .. அதென்ன அப்பாவுடன் வரும்போது மட்டும் குஷியோ தெரிய வில்லை !

10. உனது கல்யாண ஏற்பாடுகளின் போது நமக்கு சிற்சில சண்டைகள் வந்த வண்ணம் இருந்தது; நீ தேவையின்றி மிக அதிக செலவு செய்கிறாய் என்பது என் எண்ணம். அவ்வப்போது நான்இதை சொல்லிக் கொண்டே இருந்தாலும் மண்டப அலங்காரம் உள்ளிட்ட சில விஷயங்களில் நீ விடாப்பிடியாய் நின்று grand ஆக செய்து விட்டாய். 



உண்மையில் திருமணம் முடிந்த பிறகு தான் நீ செய்த செலவுகள் எல்லாம் தேவையான ஒன்று- நான் தான் புரிந்து கொள்ளாமல் தடுக்க எண்ணினேன் என்று தோன்றியது

11. நீ, நான், அம்மா எத்தனையோ ஊர்களுக்கு பயணம் சென்றுள்ளோம்; அவை ஒவ்வொன்றுமே மறக்க முடியாத நினைவுகள்; கூக்ளி பயலால் இப்போது நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வெளியூர் செல்லவே முடிய வில்லை ! 




நாங்கள் தனியே பயணம் செய்யும் போது நிச்சயம் உன்னை நாங்கள் மிஸ் செய்யவே செயகிறோம்.. உன்னை போல் அட்டகாசமாய் பிளான் செய்ய எங்களால் முடியாது; அஷ்வின் இந்த விஷயத்தில் மிகக் கொடுத்து வைத்தவர் ! டூரில் அவர் ஜாலியாக உன் கூட வந்தால் போதும் !

12. நீயும் நானும் சேர்ந்து நடித்த ஸ்கிட் - கொடைக்கானலில் ஒரு முறை- சென்னையில் ஒரு முறை- இவை என்றுமே மறக்க முடியாத அனுபவங்கள்- இரண்டு முறையும் எத்தனையோ பேர் முடித்த உடன் வந்து பாராட்டினர்


 
நாம் நடித்த கொடைக்கானல் ஸ்கிட் இரண்டரை மணி நேரம்- சினிமா போல் ஓடியது; அது முடிந்து- அடுத்த சில நிமிடங்களில் டிரஸ் மாற்றி விட்டு வந்து Campfire - ல் நீ மற்ற பெண்களுடன் சேர்ந்து போட்ட ஆட்டம் - உண்மையில் நாங்களே திருஷ்டி வைக்கும் அளவு இருந்தது ! என்னடா இந்த பொண்ணு எல்லா பக்கமும் சிக்ஸர் அடிக்கிறா என்று பலரும் நினைத்திருக்க கூடும் !

13. நம் அலுவலகத்தில் இருந்த/ இருக்கும் பலரும் உன்னைப் பற்றி சொல்லும் ஒரு விஷயம்: "ரொம்ப ரொம்ப நல்லா சொல்லி தருவாங்க - ஈஸியா புரியிற மாதிரி - தெளிவா சொல்லி குடுப்பாங்க" ; நிச்சயம் இது ஒரு மிக நல்ல திறமை .. குறிப்பாய் பிறருக்குப் பயன் படும் விதமான திறமை !

உனக்கு பிடித்த ஒரு quote : We raise by lifting others !

14. சின்ன வயதிலிருந்தே சந்தோஷமாய் இருப்பதே வாழ்க்கையின் லட்சியம் என்கிற மாதிரி தான் நடந்து கொள்வாய் ! சந்தோஷமான சூழலை - நீயாகவே உருவாக்கிக் கொள்வாய்.. இன்னமும் இது தொடர்ந்தாலும், தற்போது அலுவலக பொறுப்புகளால் இது சற்றே குறைந்துள்ளது என எண்ணம் எனக்கு ..

15. அம்மா- அப்பாவிடமிருக்கும் பல நல்ல விஷயங்கள் உன்னிடம் உண்டு உதாரணமாய் - என்னிடம் இருக்கும் எழுத்து மற்றும் பேச்சு திறன், அம்மாவின் தைரியம் மற்றும் நல்ல டேஸ்ட் ! 



இருப்பினும் எங்களிடமிருந்து எடுத்துக் கொள்ள இன்னும் கூட சில குணங்கள் உண்டு.. யோசித்துப் பார் !

16. பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் : எனது சோசியல் மீடியாவின் அட்மின் நீ என்பது ! குறிப்பாய் வீடியோக்கள் - படங்கள் - சில நேரம் வார்த்தை கோர்வை -இவை உன்னையே சார்ந்தது- நேரில் பலரும் குறிப்பிடும் போது " என் பெண் தான் செய்தாள் " என பெருமையாய் சொன்னாலும், கேட்டவர்களிடம் மட்டும் தான் சொல்கிறேன்.. இந்த விஷயம் தெரியாதோர் தான் மிக அதிகம் !

17. சிவகார்த்திகேயன் fan ஆன உன்னுடன் அநேகமாய் அனைத்து சிவகார்த்திகேயன் படங்களும் முதல் நாளே பார்த்திருக்கிறேன் - சிவா நடித்ததால் மட்டும் மொக்கை படமான மிஸ்டர் லோக்கல் பார்த்து விட்டு கூட நல்லா இருக்கு என்பாய் நீ ! இதில் ரெமோ முதல் நாளே படம் பார்க்க இரவு நேரம் நெடுந்தூரம் பைக்கில் சென்று வந்தது இன்னும் நினைவில் இருக்கு ! 

ஏனோ இப்போது சிவகார்த்திகேயன் படங்கள் முதல் நாள் அல்ல- தியேட்டரில் சென்று பார்ப்பதே உனக்கு குறைந்து விட்டது ! (சிவகார்த்திகேயன் பிறந்தது கூட 17 ஆம் தேதி தான்- பிப்ரவரி - 17!)

18. எல்லாமே நல்ல விஷயமாய் சொல்லி விட்டால் எப்படி ? ஒரு விஷயத்தையாவது மாற்றிக் கொள்ள சொல்ல வேண்டும் இல்லையா? மொபைலுடன் - சோசியல் மீடியாவுடன் செலவிடும் நேரத்தை குறைத்து மனிதர்களிடம் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்து ; 50க்கு பிறகு தான் மனிதர்கள் தேவை எங்களுக்கு புரிகிறது; இவ்வளவு நாள் வேலை -வேலை என இருந்த நாங்கள் - இப்போது தான் மனிதர்களை தேடி செல்கிறோம் - நீயாவது முதலில் இருந்தே மனிதர்களுடன் நெருக்கமாய் இரு- உனக்கு பெயர் என ஸ்நேகா என வைத்ததே அப்படி இருப்பாய் என்பதற்காக தான் !

மிக மிக focus ஆக படிப்பு, படிப்பு என்றே இருந்து விட்டாய் - வெளி உலக அனுபவம் சற்று குறைவே (புது ஆட்களுக்கு - நீ பேசும் விதத்தில் இது தெரியாது ) - இதற்கு நேர் மாறாக அஷ்வின் மிக அதிக உலக அனுபவம் கொண்டவர்-

நீ நிறைய புதுப்புது அனுபவங்கள் பெறவேண்டும் - புது விஷயங்கள் - மனிதர்கள்- இவைகள் மூலம் தான் இவை கிடைக்கும்

19. தனிப்பட்ட முறையில் என் வாழ்க்கையில் மிக அதிக மகிழ்வான காலம் என்றால் அது நீ குழந்தையாக இருந்த காலம் தான்- ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை உன்னுடன் மட்டுமே செலவிடுவேன்- நீ பேசும் பேச்சுக்கள், விளையாட்டு இவற்றால் நான் சிரித்து கொண்டே இருந்த காலம் என்றால் அது மட்டும் தான் ! குறிப்பாய் நாள் முழுதும் பார்க்காமல் மாலை பார்க்கும் போது நீ ஓடி வந்து ஏறிக்கொள்வாய் - அந்த கணம் சந்தோஷத்தின் உச்சம் !

20. சிறு வயதில் எவ்வளவு கொஞ்சி முத்தங்கள் தந்துள்ளேன்- ஆனால் சற்று பெரியவள் ஆன உடனே அதை நிறுத்தி விட்டாய் ! 



ஏதேனும் நீ சாதித்தால் - பிறந்த நாள் கொண்டாட்டங்கள் போன்றவற்றில் மட்டும் நைசாக ஒரு முத்தம் கொடுப்பேன்; அதையே ஒழுங்காய் வாங்காமல் ஓடி விடுகிறாய் !

21. நீ பெரியவள் ஆனது ஒரு அரை ஆண்டுத் தேர்வின் போது நிகழ்ந்தது; தேர்வு பாதிக்காமல் - அதே நேரம் நெருங்கிய உறவினர்களை அழைத்து சிறு விழாவும் நடத்தி விட்டோம் - போலவே - நீடாமங்கலம் பாட்டி இறந்த நேரம் உனக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. இருப்பினும் தேர்வு பாதிக்காமல்- தஞ்சை சென்று வந்தோம் - இவை எல்லாமே இயற்கை மற்றும் கடவுளின் அருள் உனக்கு எப்போதும் இருப்பதையே காட்டுவதாக நினைக்கிறேன்

22. மன உறுதி உனக்கு ரொம்பவே அதிகம் ! மிக குறைவாக உண்பது - இரவில் அல்லது காலையில் சாப்பிடாமலே இருப்பது இதெல்லாம் என்னால் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்கள் !

23. உனக்கு உடன் பிறந்தவர்கள் இல்லையே என்ற வருத்தம் இருந்தாலும் - சுவாதி மற்றும் மகேஷ் உடன் உனக்கு இருக்கும் அழகான நட்பு நாங்கள் எப்போதும் ரசிக்கும் விஷயம்; 




கசின்-களான அவர்கள் சகோதரர்கள் இல்லாத குறையைப் போக்குவர் என நினைக்கிறேன்; போலவே வினோத்தும் கூட !


24. நன்றாகப் பாட தெரிந்தவள் நீ- ரசித்துப் பாடுவாய் - அதனாலேயே அது அருமையாய் இருக்கும்; இந்த கால பாட்டுக்கள் மட்டும் இன்றி எங்கள் கால இளையராஜா பாட்டுக்கள் வரை நீ விரும்பிப் பாடுவது ஆச்சரியமான விஷயம் !

25. பள்ளியில் படித்த போது உங்கள் வகுப்பில் நான் வந்து ACS கோர்ஸ் பற்றி பேசியது; 



நீ மதுரை சென்ற போது 10 நாள் பார்க்க முடியாமல் ஒரு நாள் EDP கிளாஸ் கேட்டு வந்து எடுத்தது..இந்த இரண்டு நிகழ்வுகளும் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- காரணம்- நான் ஆசிரியராக - நீ மாணவியாக இருந்த இடங்கள் இவை !

26. உனது திருமணம்.. எவ்வளவு விரைவாய் நடந்தது ! நம்பவே முடியவில்லை !


அதிலும் எல்லா விதத்திலும் நல்லவரான அஷ்வின் அமைந்தது எங்களுக்கு மிக மகிழ்ச்சியான விஷயம் ! நாம் பலருக்கும் முடிந்த நன்மைகள் செய்துள்ளதால் தான் இப்படி அமைந்தது என்பது அம்மாவின் நம்பிக்கை !

27. வாழ்க்கை இன்னும் என்னென்ன ஆச்சரியங்களை நமக்காக ஒளித்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை !

உன்னோடு சேர்ந்து அடுத்த நிமிடம் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்களை காண நாங்களும் ஆவலோடு காத்திருக்கிறோம் !

*******

Friday, January 27, 2023

"கரை வந்த பிறகே பிடிக்குது கடலை" - வாழ மறந்தவனின் வாக்குமூலம்

ஒரு நல்ல பாட்டு என்னவெல்லாம் செய்யும் ? 

நம்மை அதில் முழுவதுமாய் மூழ்கவைக்கும். ஏனைய சிந்தனைகள் இன்றி வேறொரு உலகிற்கு அழைத்து செல்லும். ஏறக்குறைய தியான நிலை !

பாடலை கேட்கும் எல்லா நேரத்திலும் இத்தைகைய அனுபவம் கிட்டி விடாது; அதற்கான மனநிலை தோதாக இருக்க வேண்டும்

அண்மையில் அத்தகைய மனநிலை வாய்க்கப்பட ஒரு காலை நேரம் இப்பாடலை பார்க்க துவங்கினேன். மனம் என்னவோ போல் ஆகி வீட மீண்டும், மீண்டும் லூப்பில் ஓடியது பாடல்.

எப்படி இந்த பாடலை இத்தனை வருடம் தவற விட்டேன்? 

96- தியேட்டரில் மட்டுமே இரண்டு முறை பார்த்த படம்; டிவியில் போடும்போதும் பார்ப்பதுண்டு. 


எங்கு இந்த பாடல் வித்தியாசப்படுகிறது?

தமிழில் வரும் பாடல்களில் 90 சதவீதம் காதல் பாடல்கள் தான். ஆண் பெண்ணை பற்றி பாடுவான். பெண் ஆணை நினைத்து உருகும் பாடலும் உண்டு. இருவரும் சேர்ந்து பாடும் டூயட் பாடல்களுக்கு கணக்கே இல்லை.

ஆனால் - இந்தப்பாட்டு -  ஒரு மனிதன் தன்னை பற்றியே பாடுகிறான். தனது கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலம் மூன்றையும் பற்றி பாடுகிறான்.

சுய புரிதல் (Self realization ) வகை பாடல்கள் 1970,80- களில் கண்ணதாசன் மற்றும் வாலி நிறைய எழுதியிருக்கின்றனர். இந்த ஜெனரேஷனில் அந்த வகை - அருகி போய் விட்டது

கார்த்திக் நேத்தா - இந்த பெயரை இதுவரை நான் கேள்விப்பட்டதேயில்லை -  இப்பாடலை எழுதியவர் இந்த இளைஞர்தான்!  தமிழில் பத்துக்கும் குறைவான சினிமா பாடல்களே எழுதியுள்ளார். எண்ணிக்கை முக்கியமல்ல - "யாதும் ஊரே யாவரும் கேளீர்" எழுதிய கணியன் பூங்குன்றனார் மிகப் பிரபலம். ஆனால் இந்த ஒரு பாடல் தவிர அவர் எழுதிய வேறு எந்த பாடலும் இன்று நம்மிடம் இல்லை.

ஒரே ஒரு சிறந்த படைப்பு போதும் ஒரு மனிதன் - தான் வாழ்ந்ததை மறக்கவே முடியாமல் பதிவு செய்து விட்டு போக..!

பாடலுக்குள் நுழைவோம்.

அநேகம் பேருக்கு - பள்ளியில் படிக்கும் போது அக்காலம் மிகுந்த சிறப்பாய் இருந்திராது. படி, படி என தொடர் துன்புறுத்தல், தேர்வு எனும் கசப்பு மருந்து - இவை மாணவனை தொடர்ந்து துரத்துகிறது. ஆயினும் பள்ளியில் கடைசி நாள் முடிந்து வெளியே வரும்போது "பல வருடம் எத்தனையோ நினைவுகள் சுமந்த இந்த பள்ளிக்கு நாளை வரமாட்டோம்" என எண்ண, ஒரு துக்கம் தொண்டையை அடைக்கும். பள்ளியின் மீதும், பள்ளி காலத்தின் மீதும் ஒரு பெரும் அன்பு கவிழும்.

ஏன் இது நிகழ்கிறது ?

எனக்கு ஒரு நண்பன். குறைந்தது ஏழெட்டுக்கு நிறுவனத்தில் வேலை செய்திருப்பான். எங்கு வேலை செய்தாலும் சற்று புலம்பிய படியே இருப்பான். ஆயினும் எப்போதும் சொல்வான் " போன கம்பெனி மாதிரி வரவே வராதுடா - அந்த வாழ்க்கை ஒரு சொர்க்கம் !" உடனே நான் சொல்லுவேன் " டேய் - நீ போன கம்பெனியில் வேலை பாத்தப்போ எவ்ளோ புலம்பினேன்னு எனக்கு தாண்டா தெரியும் !" பெரிதாக சிரித்து விட்டு " ஆமாம் அப்டி தான் " என்பான்

நாம் யாருமே நிகழ் காலத்தை, அதன் அழகை, சிறப்பை மதிப்பதே இல்லை. ஒரு காலத்தை கடந்து வந்த பின்பே அதன் மகத்துவத்தை உணர்கிறோம்

கரை வந்த பிறகே
பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே
புரியுது உலகை

நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

After reaching the shore…
I love the sea.
After the hair greys…
I understand the world.
Yesterday’s joys come together…
Today, at this moment, they find meaning.
Today’s joys will come together…
To find their meaning tomorrow.

ஏதோ ஒரு நேரத்தில் - வாழ்க்கையை வாழ தவறி விட்டேன் என்று உணர்ந்த பிறகு வெளிப்படும் வரிகளை கவனியுங்கள்.

வாழா என் வாழ்வை வாழவே
தாளாமல் மேலே போகிறேன்
தீரா உள் ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இன்றே இங்கே ஆழ்கிறேன்

To live my life that I never lived.
Unable to bear this, upwards I go…
To kindle my never ending passion.
Here and now, I am coming out of it…
Here and now, I immerse into the depths…

இதில் கடைசி இரு வரிகளும் - இனி மீண்டுவிடுவேன் எனும் நம்பிக்கையை கவித்துவமாய் சொல்வது அழகு !

தன்னை தானே தள்ளி நின்று பார்க்கிறான் அவன் - தியானத்தில் நிகழ்வது போல் ..

யாரோ போல் நான் என்னை பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே.. இயல்பாய்.. சுடர் போல் தெளிவாய்

I look at myself as someone else.
Not with any reason, just naturally.
With clarity, like that of a sun ray!

" இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா "

பாடலின் மிக அற்புதமான வரி இது.. 

இதுவரை வாழ தவறியவன்/ வாழ மறந்தவன் என்ன விதமான வாழ்க்கை கேட்கிறான் பாருங்கள்




நடந்து செல்லும்போது உள்ளங்கால்களுக்கு இடையே பூனை வந்து விளையாடிய அனுபவம் கிட்டியிருக்கிறதா ? மிக சிறிய சந்தோஷம் தான் இது. ஆனால் இத்தகைய சின்னச்சின்ன சந்தோஷங்கள் போதாதா - இனிமையான ஒரு வாழ்க்கைக்கு ?

இதே போன்ற ஒரு தருணத்தை மறைந்த எனது நண்பன் இலட்சுமணன் ஒரு கவிதையில் பதிவு செய்திருந்தான் :

பேருந்து பயணத்தில்
யாரோ ஒருவரின் தோளில் இருக்கும்
குழந்தையின் கால்கள்
என்மீது படும்படி
ஆசீர்வதிக்கப்படுவேனாக !

சரி .. இனி எப்படியான வாழ்வை வாழ உத்தேசம்?

நானே நானாய் இருப்பேன்
நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறக்கிறேன்


I will always be myself.
Every day I will live to the fullest,
Will object, a life of conventions.

எதிர்காலம் பற்றிய எந்த கனவுகளும் இல்லாமல், வாழ்க்கையை அது காட்டும் போக்கில் வாழ முடியாதா என்ன ?

காற்றோடு வல்லூறு தான் போகுதே
பாதை இல்லாமலே அழகாய் , நிகழ்வே அதுவாய்
நீரின் ஆழ்த்தில் போகின்ற கல் போலவே
ஓசை எல்லாம் துறந்தே
காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்

With the wind flies the Hawk.
Beautifully, without a path.
It being its own reality.
Like the rock that goes to the depth of the waters…
With a renouncing of sound…
I drown in the sights I see.

மீண்டும் ஒரு முறை அறைகூவல் விடுக்கிறான் - என்ன விதமாய்,  தான் வாழ போகிறேன் என ..

திமிலேறி காலை மேல் தூங்கும் காகமாய்
பூமி மீது நடப்பேன்
புவி போகும் போக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன்

Like the bird that rides on the bull’s hump…
I will live upon the Earth.
I would join hands, and walk along with the Earth.

பாடல் இப்படியாக முடிகிறது..

ஏதோ ஏகம் எழுதே
ஆஹா ஆழம் தருதே
தாய் போல் வாழும் கணமே
ஆரோ பாடுதே - ஆரோ ஆரிரோ

Some kind of ecstasy is flowing…
That provides depth!!!
This moment envelops like a mother…
Singing a lullaby.

கவிஞர் (கார்த்திக் நேத்தா), பாடகர் (பிரதீப்) , இசை (கோவிந்த் வசந்தா) மூவருக்குமே அவர்களின் மிகசிறந்த படைப்பில் ஒன்றாக இது இருக்கும்

படமாக்கம் - மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பு - இரண்டும் அற்புதம் !  

அண்மையில் பிரதீப்பின் லைவ் ஷோவில் இப்பாடலை அவர் பாடியபோது - மக்கள் சேர்ந்து பாடியது அற்புதமான இன்னொரு காட்சி !

இப்பாடல் - 2018ஆம்- வருடத்தின் சிறந்த பாடலாக (கார்த்திக் நேத்தா & பிரதீப்) - ஆனந்த விகடன் துவங்கி, பிலிம்பேர் வரை - பல விருதுகளை வென்றிருக்கிறது

விருதுகள் ஒரு பக்கம் இருக்கட்டும். யூ டியூபில் பாடலின் கீழ் உள்ள கமெண்டுகளை வாசியுங்கள் . எத்தனை பேர் வாழ்வில் இனிமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது !


திரைப்பாடல் ஒன்று இலக்கியமாக மிளிர்வது மிக அரிதான ஒரு தருணம் !

காலத்திற்கும் ரசிக்கும்படி - ஒரு பாடல் தந்த - இயக்குனர் ப்ரேம், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, கவிஞர் கார்த்திக் நேத்தா மற்றும் பாடகர் பிரதீப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் !

Saturday, August 7, 2021

சப்போர்ட்- கிராமத்து ஓட்ட பந்தய வீரர்

ஒலிம்பிக்ஸ் நடக்கும் இந்நேரம் - எங்கள் ஊர் மாரத்தான் வீரர் பற்றிய நினைவுகள் ..

அவர் பெயர் - சப்போர்ட் ! நிஜப்பெயர் சுப்பிரமணியன் என்று நினைவு.. (தவறாகக்  கூட இருக்கலாம்). 

அதென்ன சப்போர்ட்? அவர் ஓடும்போது ஊர் முழுக்க அவருக்கு தான் சப்போர்ட் செய்யும் ! அவருக்காகவே கூச்சலிடும்!  

சாதாரண தோற்றம்.. ஆறடிக்கு சற்று குறைவான உயரம். மிக அமைதியாக தான் இருப்பார். ஒரு கூட்டத்தில் வைத்து பார்த்தால் சராசரி மனிதர் போல தான் தெரியும்..

ஆனால் மைதானத்தில் அவரது வீச்சு.. அதனை சற்று விளக்குகிறேன் 

சப்போர்ட் ஒரு பக்கா விளையாட்டு வீரர் - பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வார். பரிசுகள் வெல்வார். ஆனால் ரொம்ப ஸ்பெஷல் - மாரத்தான் ஓட்டம் தான்.. 

சப்போர்ட் என்று நினைத்தாலே உடனே நினைவுக்கு வருவது அவர் ஓடும் மாரத்தான் ஓட்டம்.. மற்றும் அப்போது கூடி நின்று பார்க்கும் மக்களின் ரீ ஆக்ஷன் 

மாரத்தான் ஓட்டத்தில் - எங்கள் ஊர் மைதானத்தை 10 அல்லது 11 ரவுண்ட் ஓடி வரவேண்டும். துவக்கத்தில் சப்போர்ட் கடைசி ஆட்களில் ஒருவராக தான் இருப்பார். மக்கள் எந்த டென்ஷனும் ஆகாமல் "இது தெரிந்த கதை தானே" என்று பேசாமல் இருப்பார்கள். கடைசி சில ரவுண்ட் இருக்கும்போது சப்போர்டின் - சப்போர்ட்டகளுக்கே  டென்சன் வந்து விடும். அப்போது தான் சப்போர்ட் வார்ம் அப் ஆகி சற்று வேகமெடுக்க உத்தேசிக்கிறார் என தெரியும் 

கடைசி ரவுண்ட் ! அது தான் கிளைமாக்ஸ் .. மக்கள் அனைவரும் "சப்போர்ட்டு ! சப்போர்ட்டு !" என்று கத்த துவங்கி விடுவர்.. எங்கிருந்து தான் சேர்த்து வைத்திருப்போரோ அவ்வளவு எனர்ஜியை ! வெறி பிடித்த மாதிரி ஒரு ஓட்டம் 




"சப்போர்ட்டு ! சப்போர்ட்டு !" குரல்கள் அரங்கை அதிரவைக்க, கடைசியிலிருந்து ஒவ்வொரு வீரராய் தாண்டி மக்கள் கைதட்டல், விசில்கள் இடையே - எப்போதும் மாரத்தானில் முதல் ஆளாய் தான் வருவார் சப்போர்ட் !

தமிழ் சினிமாவில் பார்க்க தகுந்த அட்டகாசமான காட்சியாய்  இருக்கும். மக்கள் ஒவ்வொருவருக்கும் எதோ தானே வென்ற மாதிரி ஒரு மகிழ்ச்சி முகத்தில் தெரியும்.. 

100 மீட்டர் ஓட்டம், லாங் ஜம்ப், ஹை ஜம்ப் இவற்றிலும் அவர் கலந்து கொள்வார். பரிசுகள் வெல்வார். ஆனால் அவற்றில் எப்போதும் முதல் பரிசு வெல்வார் என சொல்ல இயலாது. அவற்றில் அவருக்கு மக்கள் ஆதரவும் மரத்தானில் இருக்கும் அளவு இருக்காது 

மாரத்தானில் மட்டும்.. அந்த அரங்கில் பிற ஓட்ட காரர்களின் குடும்பத்தினர் எவரேனும் இருந்தால் அவர்களை தவிர, மீதம் அத்தனை பேரின் ஒட்டு மொத்த ஆதரவும் சப்போர்டுக்கு தான் !

சப்போர்ட் என்ன ஆனார்? என்ன வேலைக்கு சென்றார் ? எந்த தகவலும் இல்லை. முறையான பயிற்சியும் ஊக்குவிப்பும் இருந்திருந்தால் சப்போர்ட் இன்னும் உயரங்களை அடைந்திருப்பார் ..

நிஜமான Raw talent - தலை நகரங்களுக்கு வெளியே - இத்தகைய கிராமங்களில் தான் இருக்கிறது . 

சப்போர்ட்.. எனது இளமை கால ஹீரோக்களில் மறக்க முடியாத ஒருவர் !

Saturday, July 24, 2021

சர்பேட்டா - சினிமா விமர்சனம்

பா.ரஞ்சித் படங்களில் என்னை கவர்ந்தது அட்ட கத்தி. அதற்கடுத்து சொல்ல வேண்டுமெனில்- மெட்ராஸ் - இதற்கு இணையான படமாக வர்ந்துள்ளது சர்பேட்டா 




பாசிட்டிவ் 

பல்வேறு வகையான பாத்திரங்கள்.. கபிலன் (ஆர்யா), மாரியம்மா (ஹீரோ மனைவி), டாடி, டான்சிங் ரோஸ்,  ரங்கன் வாத்தியார், பீடி வாத்தியார் இப்படி அசத்தலான பாத்திரங்கள். அவற்றிற்கு சரியான நடிகர்கள்..நிஜ மனிதர்கள் போல் வளம் வருகிறார்கள்..

Dangal, இறுதி சுற்று போன்ற ஸ்பார்ட்ஸ் டிராமா என்றாலும், ஏதோ ஒரு புள்ளியில் இது வித்தியாசப்படுகிறது.. 

அநேகமாய் குஸ்தி சண்டை காட்சிகள் விறுவிறுவிப்பாய்  எடுக்கப்பட்டுள்ளது 

சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை கச்சிதம் 

பசுபதி, ஆர்யா, டான்சிங் ரோஸ்  உள்ளிட்டோரின் நடிப்பு படத்தை நிலை நிறுத்துகிறது. பசுபதி செம்மையாக நடித்ததில் ஆச்சரியமே இல்லை. எந்த முகபாவமும் காட்ட தெரியாத ஆர்யாவை கோபப்படவும்,  அழவும், இயலாமையை காட்டவும் வைத்த விதத்தில் இயக்குனர் மிளிர்கிறார் 

டான்சிங் ரோஸ் பாத்திரம் - வில்லன் அணியில் இருந்தாலும் நேர்மையானவாக காட்டியது .. அழகு  !

சிலர் முதல் பாதி போல் இரண்டாம் பாதி இல்லை என எழுதியதை கண்டேன். இப்படம் பாக்சிங், பரம்பரை பெருமை இவற்றுக்கு எவ்வளவு முக்கியத்துவம்  தருகிறதோ, அதற்கு அடுத்து சொல்லும் செய்தி - வீழ்கிற எந்த மனிதனாலும் மீண்டும் எழ முடியும் என்பது தான். இது சினிமாவில் சொல்லப்பட்டதே இல்லையா என்றால் - சொல்லப்பட்டிருக்கிறது; அப்படி பார்த்தால் காதலும், பழி வாங்கலும் கூட தான் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருக்கிறது 

70 வருடம் வாழ்கிற ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் வீழ்வது நடந்து கொண்டே தான் இருக்கும். போதாக்குறைக்கு குடி, கேம்பளிங், பெண் பழக்கம் என மனிதன் கேட்டு போக எத்தனையோ வழிகள் இருக்கிறது. இதில் ஒன்றில் வீழ்ந்த  ஒருவன் மீண்டு வருவதையே இரண்டாம் பகுதி காட்டுகிறது   

இப்படம் ஒரு 3 மணி நேர அனுபவம். 3 மணி நேரம் முதலில் உங்களை முழுதும் free ஆக்கி கொண்டு  அப்புறம் பாருங்கள். 

நெகட்டிவ் 

 அதிகம் இல்லை. இருந்தாலும் பசுபதி பாத்திரம் - ஆர்யாவின் இறங்கு முகத்தில் முழுதும் ஒதுங்கி இருந்து விட்டு இறுதியில் வந்து இணைவது அந்த பாத்திரத்தை சறுக்க வைத்து விடுகிறது. 

வெற்றி பெறும் ஆர்யா " நான் ரங்கன் வாத்தியார் சிஷ்யன்டா" என கூவுகிறார். உண்மையில் அம்முறை அவர் வெல்ல பீடி வாத்தியார் தான் காரணம் - ஏன் அவர் பெயர் அமுங்கி போகிறது !

சண்டை காட்சிகள் அருமை என்றாலும் சில நேரங்களில் அடி மேலே பட வில்லை என்பது நன்றாக தெரிகிறது 

இறுதி காட்சியில் ஏறக்குறைய அனைவருமே நல்லவர்கள் ஆனது போல்;காட்டுவது ஏன் என்றும் விளங்க வில்லை 

மொத்தத்தில் - கடந்த 2 வருடங்களில் வந்த தமிழ் படங்களில் - குறிப்பாக OTT ரிலீஸில் சூரரை போற்றுக்கு அடுத்த சிறந்த படம் - சர்பேட்டா !

சர்பேட்டா  - அவசியம் காணுங்கள் !

Sunday, November 8, 2020

Exam (2009)- ஆங்கில பட விமர்சனம்

ஓர் அறையில் குழுமியிருக்கும் 8 பேர் ஒரு தேர்வுக்காக காத்திருக்கிறார்கள். பல நிலைகளை கடந்து வந்து இறுதி கட்ட தேர்வு இது. அவரவர் இருக்கையில் அவரது எண் போடப்பட்ட தேர்வு தாள் இருக்கிறது. Invigilator அவர்களிடம் வந்து தேர்வு மற்றும் அதன் விதிகள் பற்றி விளக்குகிறார். ஒரு கேள்வி- ஒரு பதில் - அது தான் தேவை என்றும் - தன்னிடமோ அங்கிருக்கும் செக்கியூட்டியிடமோ பேசினால் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்கிறார். மேலும் தத்தம் தேர்வு தாளை கிழித்தாலோ, அந்த அறையை விட்டு வெளியே சென்றாலோ தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்கிறார் .

80 நிமிட தேர்வு துவங்குகிறது. எந்த கேள்வி தாளும் யாருக்கும் தரப்படவில்லை. முதலில் கேள்வி தாளை கண்டுபிடிக்கவேண்டும்..

அந்த 8 பேர் அதனை எப்படி எதிர் கொண்டார்கள்- யார் தேர்வானார்கள் என்பதைத்தான் 2009ல் வெளியான இந்த படம் சொல்கிறது

கேள்வி தாளே இல்லாமல் ஒரு தேர்வு - ஒரு அறைக்குள் 90 நிமிடத்திற்குள் நடக்கும் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் - என்ற கான்செப்ட் அசத்துகிறது

குறிப்பாக ஒரே அறை என்பது நமக்கு அதிகம் உறுத்தாமல் திரைக்கதை விறுவிறுவென்று செல்கிறது

வித்தியாச சூழலில் மனிதர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் - எப்படி மாறுகிறார்கள் என்பது திரைக்கதையின் ஒரு பகுதி . 

எனக்கு உறுத்திய ஒரு விஷயம் - ஒரு வேலைக்காக ஒருவர் மற்றவரை துப்பாக்கி எடுத்து சுடும் அளவு செல்வாரா என்பது தான் 

இறுதியில் வேலை ஒரு சரியான நபருக்கு கிடைப்பது நிறைவு 

இந்த பரபரப்பான வித்தியாச ஆங்கில படத்தை நிச்சயம் பார்க்கலாம் !

Saturday, March 28, 2020

கொரோனா @ சென்னை

கொரோனா குறித்த தகவல்கள் வந்த துவக்கத்தில் அது இவ்வளவு பெரிய பிரச்சனை ஆகும் என நினைக்கவில்லை

இந்தியா முழுதும் மட்டுமல்ல உலகின் பல நாடுகளும் ஒட்டு மொத்தமாக லாக் அவுட் ஆகியிருப்பது சரித்திரத்தில் முதல் முறையாக இருக்கலாம் (உலக போரின் போது இப்படி மக்கள் வெளிவராமல் இருந்தனரா .. தெரியவில்லை )



ஆறுதலான விஷயங்கள்

1. இந்தியாவிற்கு மிக தாமதமாக வந்தது, மற்றவர்களிடமிருந்து நாம் ஓரளவு பாடம் கற்று கொள்ள முடிந்தது ; இருப்பினும் நமது நடவடிக்கை துவங்க சற்று தாமதம் தான்

2. பொதுவாகவே இந்நோயால் இறப்போர் எண்ணிக்கை 2 % தான் என்பது பெரும் ஆறுதல். மிக எளிதாக பரவுவது தான் பெரும் பிரச்சனை. இப்போது self quarantine செய்வது பரவுவதை ஓரளவு குறைக்கலாம்

சில குழப்பங்கள் - பிரச்சனைகள்

1. சென்னையை பொறுத்தவரை அரசு பல விஷயங்களில் மாறி மாறி அறிவிப்புகள் வெளியிடுவது பெரும் குழப்பம்.

முதலில் - மளிகை கடைகள், காய்கறி கடைகள் திறந்திருக்கும். பின் காலை 6 to  10 தான் திறந்திருக்கும். மறுபடி இல்லை இல்லை நாள் முழுதும் திறந்திருக்கும். இன்று மீண்டும் அதனை மாற்றி அறிவிப்பு

ஆவின் பால் காலை 10 மணி வரை மட்டுமே கிடைக்கும் என ஒரு அறிவிப்பு - பின் நாள் முழுதும் கிடைக்கும் என்று தகவல்

மக்கள் ரோட்டிற்கு வர இந்த அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை வந்து விடுமோ என்ற ஐயமே காரணம்

எங்கள் ஏரியாவில் மளிகை பொருட்கள் பல கடைகளில் விரைவாக காலியாவதால், அடுத்து எப்போது மளிகை பொருட்கள் கடைகளுக்கு வரும் என்ற கேள்விக்குறி உள்ளது. காய்கறி கிடைப்பதில் இதுவரை பிரச்சனை இல்லை

2. ரெசிடென்ஷியல் ஏரியாவில் வாகனங்கள் வழக்கமான அளவு போய் வந்த வண்ணம் உள்ளது. போலீஸ் தடுப்பதெல்லாம் மெயின் ஏரியா தான். மக்களுக்கு இன்னும் தீவிரத்தை உணர வில்லையா என்று தான் எண்ண வேண்டியுள்ளது

3. எங்கள் ஏரியாவிலேயே ஒரு வயதான பெண்மணி தனியாக அமெரிக்காவிலிருந்து ஒரு சில வாரம் முன்பு வந்துள்ளார். அவர் எந்த விதத்திலும் தனிமை படுத்த வில்லை. இது போன்று இன்னும் எத்தனை பேர் என்று தெரியவில்லை

4. ஏப்ரல் 14 உடன் இது முடியுமா என்றால் ..வாய்ப்புகள் மிக குறைவு என்று தான் தோன்றுகிறது

காரணம் .. மிக எளிதான ஒன்று. நோய் பரவல் குறைந்தால் தான் மறுபடி அனைத்தும் திறக்க முடியும். ஆனால் இந்தியா தமிழ் நாடு இரண்டு இடத்திலும் தினமும் கவுண்ட் கூடி கொண்டே போகிறது . நோய் கட்டுக்குள் வந்தால் தான் மறுபடி நார்மல் நிலை வர வாய்ப்புகள் உண்டு.


5. ஆந்திராவில் இருக்கும் நண்பர் ஒருவர் ஏராள விவசாய நிலம் அறுவடைக்கு தயாராக இருப்பதாகவும், அறுவடை செய்யாவிடில் நெல் முழுதும் கொட்டி விடும் என்றும் கூறினார். இது வருத்தப்படவைத்தது என்பதோடு , பின்னர் பஞ்சம் வரவும் இவை காரணமாக அமையும் என்ற ஐயமும் வருகிறது

எப்படி போகிறது பொழுது

வீட்டுக்குள் தான். அரிதாக காய்கறி வாங்க சென்றதையும் இனி குறைக்க யோசனை

சினிமா, டிவி, பாட்மிண்டன், வீட்டு மாடியில் நடை என கழிகிறது பொழுது

முடிந்த அளவு பாசிட்டிவ் ஆக இருக்க தான் பார்க்கிறோம். விரைவில் நிலைமை சரியாகவேண்டும் என்ற வேண்டுதல் மட்டுமே .. மனதினுள் !

சைக்கோ, Chappak, பக்ரீத் - விமர்சனங்கள்

சைக்கோ 

இன்று மாலை விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது சைக்கோ

த்ரில்லர் வகை படங்கள் பிடிக்கும் என்பதால் பார்த்தேன்.


பெண்களை தொடர்ந்து கொள்ளும் ஒரு சைக்கோவை - physically challenged ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பிடிக்கும் கதை.

கண் தெரியாத ஹீரோ நீண்ட தூரம் கார் ஓட்டுவது போன்ற லாஜிக் மீறல்களை கூட பொறுத்து கொள்ளலாம். அத்தனை கொலைகள் செய்தவனை -அவன் ஒரு குழந்தை என்ற ரீதியில் கடைசி நிமிடம் பேசுவதை தாங்கவே முடியவில்லை. அன்புக்கு ஏங்குகிறான் என்பதை establish செய்ய எந்த காட்சியும் அமைக்கப்படவில்லை

கடைசி இரு நிமிடத்தையும், சற்று கோர காட்சிகளையும் பொறுத்து கொண்டு த்ரில்லர் விரும்பிகள் மட்டும் காணலாம்

Chappak -ஹிந்தி 

தீபிகா படுகோனே ஆசிட் விக்டிம் சர்வைவர் ஆக நடித்த இப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது

அந்த பெண்ணின் போராட்டம் இண்டியன் பீனல் கோடில் ஆசிட் வீசுவோருக்கென்று தனி செக்ஷன் வரவும், தண்டனை அதிகமாகவும் காரணமாக அமைந்தது



தீபிகா அற்புதமான நடிப்பு ! படத்தின் தயாரிப்பாளர்களில் இவர் ஒருவர். சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ஓரளவு லாபமும் சம்பத்தாதிருக்கிறது இப்படம்

இரண்டே மணி நேரம் கொண்ட இப்படம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று !

பக்ரீத் - தமிழ் 

சென்ற ஆண்டு இறுதியில் ஒரு தமிழ் சானலில் 2019ல் வெளிவந்த நல்ல சிறு படங்கள் என ஒரு 10 படங்களை கூறினர் .. அதில் ஒரு படமாக பக்ரீத் இடம் பெற்றிருந்தது



படம் ஒட்டகம் வளர்க்கும் ஒரு குடும்பத்தின் கதை. ஒட்டகம் எதிர் பாராத விதமாக இக்கும்பத்திடம் வந்து சேர்கிறது. அதற்கு ஒரு முறை உடல்நிலை சரியில்லாமல் போக, மருத்துவர் அது ராஜஸ்தானில் இருப்பது தான் சரி, இங்கு தட்பவெப்பம் ஒத்து கொள்ளாது என சொல்ல, ஹீரோ விக்ராந்த் அதனை ராஜஸ்தான் அழைத்து செல்வதும், அவர் அதனை அங்கேயே விட்டாரா என்பதும் தான் படம்

படத்தின் சுவராஸ்யங்களில் ஒன்று .. துவக்கத்தில் நெகட்டிவ் ஆக காட்டப்படும் சில பாத்திரங்கள் - பின் அவர்களின் நல்ல தன்மையில் வெளிப்படுத்துவது தான்

நாய் , பூனை, கிளி என செல்ல பிராணிகள் விரும்பும் இவ்ருக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்



Wednesday, March 25, 2020

ஓ மை கடவுளே & 375 - இரு நல்ல படங்கள் விமர்சனம்

நாடு முழுதும் கரோனா பற்றியே பேச்சிருக்க, நாம் சில நல்ல படங்கள் பற்றி பேசுவோம்

ஓ மை கடவுளே

நல்லதொரு நாட்..அதனை அழகாக திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். அசோக் செல்வன் மற்றும் ரித்திகா - Just perfect ! வாணி போஜன் தான் மிக சுமாரான பேர்பார்மன்ஸ் ..



நாம் வாழும் வாழ்வில் விருப்பமே இன்றி எதோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பதை நாம் உணர்வதே இல்லை.

போலவே, நம் மீது அன்பு செலுத்துவோரை ரொம்ப ஈசியாக எடுத்து கொள்கிறோம். அவர்களின் அன்பும் அதன் ஆழமும் நமக்கு புரிவதே இல்லை

கடவுள் என்கிற சுவாரஸ்ய பாத்திரம் மூலம் வாழ்வை மறுபடி வேறு மாதிரி வாழ்ந்து பார்க்க வாய்ப்பு தருவதே செம கான்செப்ட். அதனை வீணடிக்காமல் ரசிக்கும் வண்ணம் திரைக்கதை செய்துள்ளனர்.

அவசியம் பாருங்கள்.. இந்த கடவுளை !

Section 375 (ஹிந்தி)


ஒரு அட்டகாசமான படம் ! கோர்ட் ரூம் டிராமா !

375 என்பது இந்தியன் பீனல் கோட் செக்ஷனை குறிப்பது. கற்பழிப்பு குறித்த சட்டப்பிரிவு.

ஒரு நடிகர் - ஓர் இளம்பெண்ணிடம் தவறாக நடந்ததாக, கற்பழித்ததாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது

விசாரணை- வாக்கு வாதங்கள் - இவை தாண்டி இறுதியில் உண்மை தெரியும் போது திடுக்கிட்டு போவோம்...

375 செக்ஷனில் இருக்க கூடிய ஓட்டைகளை எடுத்து காட்டும், இந்த பற பற படத்தை காண தவறாதீர்கள் !

Tuesday, December 31, 2019

2019- சிறந்த 10 படங்கள்

இவ்வருடம்  175 க்கும் மேல் தமிழ் படங்கள் வெளியானது. அவற்றில் போட்ட பணத்தை எடுத்த படங்கள் 20 அல்லது 25 இருக்கலாம்.

இவ்வருடம் சின்ன படங்கள் - தியேட்டரும் கிடைக்காமல், வெளியானாலும் ஒரே வாரத்தில் எடுக்கப்பட்டு, பணத்தை இழந்தது மிக அதிகமாக இருந்தது. வெற்றி பெற்ற - மக்கள் வரவேற்பை கண்ட பல படங்கள் நல்ல ஸ்டார் காஸ்ட் உள்ள படங்களாக மட்டுமே உள்ளது. இவ்வருடம் LKG, ராட்சசி, 100 (அவசர உதவிக்கு நாம் கூப்பிடும் அதே 100) என வெகு சில சின்ன பட்ஜெட்  படங்கள் ரசிக்க வைத்தன.

1. அசுரன்

சந்தேகமே இன்றி இவ்வருடத்தின் மிகசிறந்த படங்களில் ஒன்று அசுரன்.


வெக்கை நாவலை படமாக்கிய வெற்றி மாறன் - தமிழின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முக்கியமானவர்.

கதை- திரைக்கதை- நடிப்பு- வசனம் - இயக்கம் என அனைத்திலும் கச்சிதமான ஒரு படைப்பு.

அசுரன் விமர்சனம் இங்கு

2. தடம்

எனக்கு இவ்வருடம் ரொம்ப பிடித்த 2 படங்கள் என்றால் தடம் மற்றும் அசுரன் இவற்றை தான் சொல்வேன்.

தடம் - ஏதேனும் ஆங்கில/ வேற்று மொழி படத்தின் தழுவலா என தெரிய வில்லை. அப்படி இல்லாமல் இருந்தால் -  இயக்குனருக்கு சல்யூட் வைக்க வேண்டும்.

எப்படி இந்த மாதிரி கதையை யோசித்துள்ளார் ! அபாரம் ! படத்தின் இறுதி பகுதியில் அனைத்து கேள்விக்கும் விடை கிடைக்கும் போது நமக்கு பல இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார் இயக்குனர்.

இதுவரை பார்க்காவிடில் நிச்சயம் பார்த்து விடுங்கள் தடம் படத்தை.. அட்டகாசமான த்ரில்லர் !

********
தடம் விமர்சனம் இங்கு

3. விஸ்வாசம்

அஜீத்- சிவா காம்பினேஷனில் இன்னொரு படமா என்ற தயக்கத்துடன் பார்த்தாலும், முழுதும் திருப்தி படுத்தி அனுப்பினார் சிவா.

ரொம்ப சுமாரான முதல் பாதி- செண்டிமெண்ட் மற்றும் ஆக்ஷன் சரி விகிதத்தில் கலந்த இரண்டாம் பாதி அதனை ஈடு கட்டி விடுகிறது. அஜீத்திற்கு இந்த வருடம் வந்த 2 படங்களும் நன்கு ஓடி, தல ரசிகர்கள் ரொம்ப ஹாப்பி !

4. பேட்ட

ஸ்டைலிஷ் ரஜினியை காண்பித்து ஜாலியாக கொண்டு செல்லும் படத்தை - பின் பழி வாங்கல் - ரத்தம் என சினிமா ட்ரெண்டுக்குள் கொண்டு வருகிறார் இயக்குனர்.

படத்தின் முடிவில் தன் அக்மார்க் டிவிஸ்ட் வைத்து - சிரிப்புடன் நம்மை திரும்ப அனுப்பினார்.

அனிருத் இசையில் சில பாடல்கள் - கியூட்

ரஜினிக்கு ரொம்ப நாள் கழித்து ஒரு ஹிட் படம் !
********

பேட்ட விமர்சனம் இங்கு

5. நேர் கொண்ட பார்வை

பிங்க் படத்தை தமிழுக்கேற்றவாறு மாற்றம் செய்து அழகாக தந்திருந்தார் இயக்குனர் வினோத். கூடவே அஜீத்தின் ஹீரோயிசத்திற்கேற்ற சில காட்சிகள் சேர்த்திருந்தார். நீட் அண்ட் க்ளீன் படம் ! வெல் டன் டீம் நேர் கொண்ட பார்வை !

****
நேர் கொண்ட பார்வை விமர்சனம் இங்கு 

6. கைதி

பிகிலுடன் நேரடியாக வெளியாகி வெல்லவும் செய்தது கைதி. ஓரிரவில் நடக்கும் கதை. பெரும்பகுதி பயணத்தில் செல்கிறது. ஏராள சண்டை காட்சிகள் - தவிர்க்க முடியாத படி கதை.

திரைக்கதையின் பெரும் சுவாரஸ்யம் - போலீஸ் ஸ்டேஷன்   காட்சிகள் தான். ஒரு சின்ன போலீஸ் காரக்டரை ஹீரோ ரேஞ்சுக்கு அமர்க்களமாய் ப்ரெசென்ட் செய்த விதம் செம அழகு.

7. பிகில்

இவ்வருடத்தின் மிக அதிக வசூல் செய்த தமிழ் படம் என்று விக்கிப்பீடியா சொல்கிறது (300 கோடி).

கால்பந்துடன்   பழி வாங்கும் கதையும் சேர்த்து அட்லீ செய்த கலவை. விஜய் ஸ்க்ரீன் ப்ரஸான்ஸால் மட்டுமே ஓடியது. தீபாவளி நேரம்- நீண்ட வீக் எண்டில் ரிலீஸ் ஆகி ஹிட் அடித்தது. படம் ஓஹோ இல்லை; ஓகே
*******
பிகில் விமர்சனம் இங்கு

8. கோமாளி

இவ்வருடத்தின் சர்ப்ரைஸ் ஹிட். செமையாக சிரிக்க வைத்தனர். கூடவே மெசேஜ்-ம் இறுதியில் கூறினர் . மெசேஜ் தவிர்த்து முழு நீள ஜாலியான படமாக தந்திருக்கலாம் என்பது என் கருத்து. மக்கள் படத்தை கொண்டாடவே செய்தனர்.

கோமாளி விமர்சனம் இங்கு

9. மான்ஸ்டர் 


ஈயை வைத்து "நான் ஈ" சில வருடங்கள் முன்பு வந்து ஹிட் அடித்தது. எலியை வைத்து இப்படம் செய்துள்ளார் இயக்குனர். அதிலும் நிஜ எலி வைத்து சுவாரஸ்யமாக தந்துள்ளார்கள்..வள்ளலாரின் ஜீவ காருண்ய அடிப்படையில் அமைந்த கதை மற்றும் படமாக்கல் ரசிக்க வைத்தது








10. LKG 

தமிழக அரசியல் நிலையை பகடி செய்து - நிமிடத்திற்கொரு முறை சிரிக்க வைக்க முயன்று அதில் பெரிதும் வெற்றியும் பெற்றனர் LKG படக்குழுவினர். "ஜாலியான படம். சிரிச்சுட்டு போங்க" என தெளிவான ஐடியாவுடன் வந்து சைலன்ட் வெற்றி பெற்றது LKG.
*******
2018 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே

2016 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே

2015 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே 

2012 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

2011ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

2010ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

2009 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

Thursday, December 26, 2019

அஞ்சலி: சோலையப்பன் சார்

மரணங்கள் அநேகமாய் என்னை அழ வைத்ததில்லை.

" எங்கும் யாருக்கும் எதுவும் நடக்கலாம்" என்று துவங்கும் ஜெயந்தனின் கவிதை வரி உள்ளுக்குள் மிக ஆழ பதிந்து போன ஒன்று.

மரணம் ... மனிதர்களுக்கு அவர்களது துன்பங்களில் இருந்து ஒரு விடுதலை. இறந்தோர்க்கு துன்பமில்லை என்பர். இவையெல்லாம் உள்ளுக்குள் ஊறிய விஷயங்கள்

மேற்சொன்ன அநேக விஷயங்கள் -பொய்த்து போனது சோலையப்பன் சார் மரணத்தில்.

79 வயது பெரியவர். மிக நன்றாக வாழ்ந்து விட்டார். ஆயினும் அவர் மரணம் என்னை தனிமையில் அழ வைத்து விட்டது.

அவர் ஒரு தலைவர். நிஜமான லீடர். தமது மக்கள் மீது மாறாத அன்பும் மிகுந்த அக்கறையும்  கொண்டவர்.



சேலம் நகரில் முதன்முதலில் கம்பெனி செகரட்டரி சாப்டர் துவங்க காரணமாக இருந்த சிலருள் அவரும் ஒருவர்.

சேலம் சாப்டர் துவங்கியது முதல் இன்று வரை அதன் ஒவ்வொரு நிகழ்விலும் அவரது பங்களிப்பு பெருமளவில் இருக்கும்.

இத்தகைய சிறு ஊரில் தொடர்ந்து சாப்டர் நடத்துவது மிகப்பெரும் சவால். சேலம் சாப்டருக்கு 10 ஆண்டுக்கும் மேல் சேர்மனாக இருந்தார். அவரிடம் ட்ரைனிங் எடுத்த ஏராள மாணவர்கள் இன்று வெவ்வேறு ஊர்களில் கம்பெனி செகரட்டரி ஆக  உள்ளனர்

2014 ஆம் ஆண்டு நான் சென்னை மேற்கு ஸ்டடி சர்க்கிளில் கன்வீனர் ஆக இருந்த போது சாரை பேச அழைத்திருந்தோம். நாங்கள் பேச்சாளர்கள் குறித்த தகவல்களை PPT யில் பல்வேறு புகைப்படங்களுடன் கலர்புல் ஆக காட்டுவது வழக்கம். இதனை வெகுவாக ரசித்தார் சார். அடுத்த முறை வேறொரு நிகழ்வுக்கு சேலம் சென்ற போது பேச்சாளர் தகவல்கள் PPT மூலம் புகைப்படங்களுடன் காண்பிக்க ஏற்பாடு செய்திருந்தார் சார்.இந்த வயதிலும் நல்ல விஷயங்களை புதிது புதிதாக கற்று கொள்ளும் அவரது ஆர்வம் வியக்க வைத்தது   



சேலம் சென்ற போது அவரது இல்லத்தில் தங்கியிருக்கிறேன். காலை நேரம்- வெளியில் (ஹோட்டலில்) சாப்பிடுவோம். அந்த நேரம் சில கம்பெனி செகரட்டரிகளை வர சொல்லிவிடுவார். சாப்பிடும் நேரத்திலேயே நான்கைந்து நண்பர்களுடன் பேசிவிடும்படியும் செய்வது அவரது வழக்கம்

இம்முறை தென் இந்திய கம்பெனி செக்ரட்டரி அமைப்பிற்கு நான் தலைவர் ஆனபோது வாழ்த்து சொல்ல தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டவர் -சேலத்தில் நிச்சயம் இவ்வருடம் பெரிய கான்பரன்ஸ் ஒன்று நடத்த வேண்டும் என்றார். தனக்காக எப்போதும் எதுவும் கேட்டவர் அல்ல. மாறாக சேலம் சாப்டருக்காகத்தான் எப்போதும் பேசுவார்

அவர் கேட்டு கொண்டதிற்கிணங்க, தமிழக  கம்பெனி செகரெட்டரிகள் கான்பரன்ஸ் சென்ற மாதம் சேலத்தில் நடந்தது.

ரயிலில் சென்று அதிகாலை 5 மணிக்கு இறங்கியபோது  சேலத்தின் தற்போதைய சார்மன் பூபாலனுடன் எங்களை வரவேற்க .பூங்கொத்துடன் வந்து விட்டார். "சார் இவ்வளவு காலையில் நீங்க வரணுமா?" என்றால் புன்னகை மட்டுமே பதில்

அந்த புன்னகை தான் எப்போதும் அவரது அடையாளம். அந்த கான்பரன்ஸில் தான் அவரை கடைசியாக பார்த்தது.

சென்ற மாதம் கான்பரன்ஸில் கேள்வி கேட்கிறார் சார்..


டிசம்பர் 23 அதிகாலை மதுரையிலிருந்து சேலம் வந்த அவர் - சற்று அசந்து தூங்கி விட்டார். சேலத்தில் அவர்  இறங்கும் முன் ரயில் நகர  துவங்கி விட்டது. மெதுவாக ரயில் நகரும்போது அவர் இறங்க முயல, தவறி விழுந்து இறந்து விட்டார்.

எத்தனையோ பேரின் வாழ்வில் ஒளியேற்றியவர் அவர். அவருக்கு இத்தகைய மரணமா என மனம் ஆறாமல் தவிக்கிறது

தனது இறப்பிலும் அவர் பாடம் சொல்லிக்கொடுத்து விட்டு தான் சென்றிருக்கிறார்

பேருந்தோ, ரயிலோ - ஒரு போதும் -அவசரமாக ஓடி சென்று  ஏறவோ, இறங்கவோ செய்யாதீர்கள். அடுத்த ஸ்டேஷன் வரும். அடுத்த ரயில்/ பஸ் வரும். இன்னொரு வாழ்க்கை வராது....

நூறாண்டு வாழ்வார் என்று நினைத்திருந்தேன்.. அவர் மரணம்  சேலம் கம்பெனி செகரட்டரி குழுமத்திற்கு மிகப்பெரும் இழப்பு !

*************
சோலையப்பன் சார் குறித்து அவருடன் பழகிய இன்னும் சிலரின் நினைவேந்தல் :

திரு பூபாலன், சார்மன் கம்பெனி செகரட்டரி சாப்ட்டர், சேலம்


திரு. சோலையப்பன் அவர்கள் சில நிறுவனங்களில் கம்பெனி செகரட்டரி ஆக பணியாற்றி விட்டு பின் பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்தார். அவர் பிராக்டிஸ் துவங்கிய காலத்தில் நிறுவனம் துவங்கவும், அது தொடர்பான விஷயங்களுக்கும் CA முடித்த ஆடிட்டர்களை அணுகுவதே வழக்கமாக இருந்தது. இருப்பினும் சேலத்தில் அவர் ஒரு முன்னோடியாக தனது ப்ராக்டிஸை துவக்கினார்.

 சோலையப்பன் அவர்கள் எந்த வேலையை துவங்கினாலும் அதில் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுபவர். மிக எளிமையான மனிதர்.. அவர் செய்யும் எந்த செயலிலும் ஒரு human touch இருப்பதை நிச்சயம் உணர முடியும்.

20 ஆண்டுகளாக சேலம் கம்பெனி செகரட்டரி சாப்ட்ருக்காக அவர் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்கு உரியது. சேலம் சாப்டர் துவங்கியது தொடங்கி - அதன் பல்வேறு நிலைகளிலும் அவர் - சார்மன் ஆக இருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி, தொடர்ந்து இயங்கினார்

அவரது மறைவு - சேலம் வாழ் கம்பெனி செகரட்டரிகளுக்கு ஒரு மிக சிறந்த வழிகாட்டியை இழந்த - பெரும் வலியை தருகிறது. சேலம் சாப்டரோ தனது மாபெரும் தூண்களில் ஒன்றை இழந்து நிற்கிறது
***********

திருமதி. பூர்ணிமா, கம்பெனி செகரட்டரி, சேலம்

சோலையப்பன் சாரை கடந்த 10 வருடங்களாக அறிவேன். எளிமையும், அடக்கமும் ஒன்று சேர்ந்தவர். எந்த வயதினராக இருந்தாலும் - இளைஞர்கள் என்றாலும் கூட எளிதில் அவர்களுடன் பழகுவார்.  கம்பெனி செகரட்டரி கோர்ஸ் படிக்க எத்தனையோ மாணவர்களுக்கு (நான் உட்பட) அவர் உந்துதல் ஆக இருந்தார். சேலம் சாப்டர் துவங்க காரணமாக இருந்தது மட்டுமல்ல, சேலத்தில் இருந்து எத்தனையோ பேர் கம்பெனி செகரட்டரி ஆனதிலும் அவர் பங்களிப்பு இருந்தது.

தொடர்ந்து இயங்க வயது ஒரு தடையில்லை என்பதை தனது செயல்களின் மூலம் நிரூபித்தவர் சோலையப்பன் சார்

திருமதி சரண்யா, கம்பெனி செகரட்டரி, சேலம்  


சோலையப்பன் சாரிடம் 15 மாதங்கள் பயிற்சி (Training) எடுத்த மாணவி நான். அவர் ஒரு வழிகாட்டி (Mentor) மட்டுமல்ல, சிறந்த குருவாகவும், எப்போதும் நமது நலனை மட்டுமே விரும்புபவராகவும் இருந்தார்

Nothing is so strong as Gentleness, and nothing is so gentle as real strength.


மேற்சொன்ன வரிக்கு சோலையப்பன் சாரை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது

தென் இந்தியாவில் இருக்கும் மிக சீனியர் கம்பெனி செகரெட்டரிகளில் ஒருவர் அவர். குறைந்தது 15 கம்பெனி செகரட்டரிகளாவது அவர் மூலம் வாழ்க்கையை துவங்கியிருப்பர். மென்மையாக பழகுதல், ஆழ்ந்த அறிவு, நல்ல நினைவாற்றல், எப்போதும் மிகுந்த உற்சாகம், சிறந்த விருந்தோம்பல்.. இவை அனைத்தும் ஒரு சேர பெற்றவராக அவர் இருந்தார்

துளசி ராமன், ப்ராக்டிஸிங் கம்பெனி செகரட்டரி,  சேலம்


கம்பெனி செக்ரட்டரி சர்க்கிளில் - சேலம் என்று சொன்னால், அடுத்து வரும் வாரத்தை- சோலையப்பன் சார், செகரட்டரி என்பதாக இருக்கும்.

எனது குருவுடன் கடந்த 10 வருடம் பழகியதில் - தொழிலில் எப்படி இருக்க வேண்டும் என்பதை மட்டுமல்ல, குடும்பத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும், பொது வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டேன் 

6 / 7 செப்டம்பர் 2013-ல் ஏற்காட்டில் - தென் இந்திய ப்ராக்டிஸிங் கம்பெனி செகரட்டரிகள் கான்பரன்ஸ் நடந்தது. சோலையப்பன் சார் தான் அப்போது சேலம் சாப்டர் தலைவர்.

தனது மேனேஜிங் கமிட்டி மெம்பர்களோடு பல்வேறு வேலைகளை கவனித்து கொண்டிருந்தார்.

துரதிஷ்ட வசமாக நிகழ்வுக்கு ஓர் வாரம் முன் அவருக்கு ஹிரண்யா ஆப்பரேஷன் நடக்கிற சூழல். மருத்துவர்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறிய போதும் எந்த வேலையும் தொய்வின்றி நடக்கும்படி  பார்த்து கொண்டார். நிகழ்ச்சிக்கு 2 நாள் முன்பே ஏற்காடு வந்த அவர் அணைத்து வேலைகளையும் முன் நின்று கவனித்தார். பல முறை மாடிப்படியில் அவர் ஏறி இறங்கியதை காண எங்களுக்கு தான் கஷ்டமாக இருந்தது

இரவு முழுதும் தூங்காத அவர் மறு நாள் காலை தன் புன்னகை குறையாமல் வந்து நின்றார். அது தான் சோலையப்பன் சார் !

அவருடன் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் எத்தனையோ கற்று கொள்ள முடிந்தது. கம்பெனி சட்டத்தில் தொடர்ந்து விவாதித்து-  அறிந்து கொள்ள என்னை தூண்டிய வண்ணம் இருப்பார்

தொழிலில் சின்னசின்ன விஷயத்திலும் அவருக்கிருந்த ஈடுபாடு, சிக்கனமான வாழ்க்கை முறை, அலுவலகம், சாப்டர் என அனைத்து  நபர்களிடமும் அவர் காண்பித்த அன்பு, எந்த விழாவிலும் தவறாமல் கலந்து கொள்ளும் பாங்கு, உதவி தேவைப்படுவோருக்கு தயங்காமல் சென்று உதவும் மனது என அவரது நற்குணங்கள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்

அவர் எப்போதும் ஒரு மிக சிறந்த ஆல் ரவுண்டர் ஆக இருந்தார். அவரிடம் எனது துவக்க கால பயிற்சியை கற்றதில் மிகுந்த  பெருமிதம் கொள்கிறேன்..

Related Posts Plugin for WordPress, Blogger...