Monday, February 27, 2012

சுஜாதா நினைவு நாள் : சுஜாதா கையெழுத்தில் வந்த கடிதம்

பிப்ரவரி -27- இன்று - எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவு நாள். அவரிடமிருந்து எனக்கு வந்த கடிதம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன் ப்ளாகில் பகிர்ந்திருந்தேன். மீண்டும் ஒரு முறை அந்த வரிகளை இன்று பகிர்கிறேன்.


சென்ற முறை செய்யாத ஒன்று இம்முறை செய்கிறேன். சுஜாதா கைப்பட எனக்கெழுதிய அந்த கடிதத்தை இம்முறை உங்கள் பார்வைக்கு தருகிறேன். சுஜாதா தீவிர ரசிகர்கள் இதனை மிக ரசிப்பார்கள் என நம்புகிறேன்.


*************
நான் சட்ட கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது கல்கியில் மத்யமர் என்ற சிறுகதை வரிசை வந்து கொண்டிருந்தது. அதில் பல controversy ஆன கதைகள்.. இவை பற்றி பிரசுரமாகும் விமர்சனங்களுக்கு சுஜாதா கையெழுத்திட்ட மத்யமர் புத்தகம் அனுப்பப்படும் என்று அறிவித்திருந்தனர். சுஜாதா கையெழுத்திட்ட புத்தகம் வாங்கவே விமர்சனம் எழுதினேன். பிரசுரமும் ஆனது. புத்தகம் வந்த பின், சுஜாதாவிற்கு நன்றி சொல்லி இரு பக்க கடிதம் எழுதினேன். 

சுஜாதா பதில் எழுத மாட்டார் என்பது பொதுவாய் அனைவரும் அறிந்தது. ஆனால் நம்ப முடியாமல் சில நாளில் பதில் வந்தது. 

அன்புள்ள மோகன் குமார்,

உங்கள் கடிதம்; வாசகர்களுக்கு நான் பெரும்பாலும் பதில்
 கடிதம் எழுதுவதில்லை; ஆனால் அதற்கான பல காரணங்களை ஒத்திப் போட்டுவிட்டு, உங்களுக்கு பதில் எழுத தூண்டியது உங்கள் கடிதத்தில் விரவியிருந்த ஸ்நேகம். நன்றாக படித்து முன்னுக்கு வந்து பெரிய லாயரானதும் எனக்கு மீண்டும் எழுதுங்கள் 

அன்புடன் 

சுஜாதா 

*******************
இந்த கடிதத்தை எத்தனை முறை வாசித்திருப்பேன்!! சில வரிகளில் பல விஷயம் உணர்த்தினார் வழக்கம் போல்..முதல் வரியை கவனித்தீர்களா? " உங்கள் கடிதம்" அவ்வளவு தான் "கிடைத்தது" இல்லை!! வார்த்தை சிக்கனம்!!

அடுத்த வரியில் யாருக்கும் எழுதாத நான் உனக்கு எழுதுறேன் என என்னை மகிழ வைத்து விட்டார்!!

கடைசி வரி தான் மிக முக்கியம்.. "நன்றாக படித்து முன்னுக்கு வந்து பெரிய லாயர் ஆனதும் .." இப்போ படிப்பது தான் உன் வேலை என எவ்வளவு அழகாய் சொல்லிட்டார்! இது என ஆதர்சம் மூலம் வந்ததால், நான் சீரியாசாகவே எடுத்து கொண்டேன்!

ஆனால் சுஜாதா சொன்னது போல் நான் லாயர் ஆகலை.. படிக்கும் போதிலிருந்தே கம்பனிகளில் லீகல் அட்வைசர் ஆக செல்லும் எண்ணம் தான்.பின் கூடவே Company Secretary course-ம் படித்து விட்டு வேலைக்கு வந்தேன். துவக்கத்தில் இருந்த கம்பெனியிலேயே சுஜாதா ஒரு Director!!

Company Secretary-தான் Board Meeting-கள் நடத்த வேண்டும். இதற்கான நோட்டீஸ் அனுப்புவது, மீட்டிங்குகளில் எடுக்கப்படும் முடிவுகளை (Minutes) பதிவு செய்வது இவை Company Secretary வேலையில் அடங்கும். எனவே சுஜாதாவை Board Meeting-கில் அருகிலிருந்து பார்க்க போகிறேன் என ஆர்வமாக இருந்தேன். ஆனால் நான் வேலை பார்த்த கம்பனிகளில், இந்த ஒரு கம்பனியில் மட்டும் தான் Company Secretary-ஐ வெளியே வைத்து விட்டு Board meeting நடத்துவார்கள்!! நான் இல்லாத மீட்டிங்கில் என்ன நடந்தது என நான் வெளியே இருந்து Minutes எழுத வேண்டும்!!

இந்த காலங்களில் அவருடன் Board meeting குறித்து போனில் பேசியிருக்கிறேன். அவர் எங்கள் கம்பெனி வந்து, நேரே மீட்டிங் ரூம் செல்வதை பார்த்துள்ளேன். அவ்வளவு தான்.

இதே காலத்தில் நண்பன் லக்ஷ்மணன் இறந்த பின் அவனது கவிதைகளை தொகுத்து புத்தகமாக போடும் முயற்சியில் நண்பர்கள் இறங்கினோம். ஒவ்வொருவரும் ஒரு வேலை செய்தோம். நான் புத்தகதிற்கான முன்னுரை, அட்டை படம் போன்றவை பிரபல எழுத்தாளர்/ ஓவியர்களிடம் வாங்கும் வேலையில் இருந்தேன்.

முன்னுரைக்கு கல்யாண்ஜியை அணுகி இருந்தோம். அவரும் எழுதி தந்திருந்தார். இந்நிலையில் சுஜாதா இருக்கும் அதே flat-ல் இருந்த வெங்கடேஷ் என்ற எனது Colleague, அவரிடம் நாங்கள் நண்பன் இறந்த பிறகு அவனது கவிதைகளை தொகுத்து வெளியிடுவது பற்றி கூறியிருக்கிறார். சுஜாதா மிக ஆர்வமாகி "அந்த கவிதைகளை வாங்கி வாருங்கள்; படிக்கணும்" என கூறியிருக்கிறார். வெங்கடேஷ் மூலம் லக்ஷ்மணன் கவிதைகள் சுஜாதாவை அடைந்தன. சுஜாதா சும்மா படிக்க தான் கேட்கிறார் என நினைத்திருக்க, அவரோ அற்புதமாக இரு பக்கம் கவிதைகள் பற்றி எழுதி அனுப்பி விட்டார். ஒரு பக்கம் அதை படித்து மகிழ்ச்சி. மறு பக்கம் கல்யாண்ஜியிடம் வேறு வாங்கி உள்ளோமே என குழப்பம். கல்யாண்ஜி தந்ததை முன்னுரையாக போட்டு விட்டு சுஜாதா தந்ததை கடைசியில் வெளியிட்டோம்.

புத்தகத்தை நேரில் தந்து நன்றி சொல்ல சுஜாதா இல்லம் சென்றேன். சுஜாதாவை நேரில் சந்தித்து பேசியது ஒரே முறை அது தான். புத்தகம் வாங்கி கொண்டு, " இந்த வார குங்குமத்தில் லக்ஷ்மணன் கவிதைகள் பத்தி எழுதிருக்கேன்; படிங்க" என்றார். " சரி" என்றேன். சட்ட கல்லூரியில் படிக்கும் போது அவரிடிமிருந்து வந்த கடிதம், அவர் மீதான எனது பிரேமை எதுவும் சொல்ல தோன்ற வில்லை. இதற்கு முன் பால குமாரனை பார்த்து மனம் நொந்த பிறகு பிடித்த எழுத்தாளரை நேரில் பார்த்து பேச கூடாது என்ற எண்ணம் அதிகமாகி இருந்தது . என்றாலும் எதுவும் எதிர் பார்க்காமல் அவர் தந்த முன்னுரைக்கு நேரில் நன்றி சொல்வதே மரியாதை என்பதால் சென்றிருந்தேன்

எங்களுக்குள் பேசி கொள்ள ஏதுமில்லாதது போல் இருந்தது அந்த சில நிமிடங்கள்...உடன் கிளம்பி வந்து விட்டேன்.

சுஜாதா இறந்த போது இரு நாட்கள் திரும்ப திரும்ப மனதில் பல நினைவுகள். அவர் இல்லம் மாறி விட்டதா என தெரிய வில்லை. அவர் இறந்த நிலையில் அவரை சென்று பார்க்க மனம் விரும்ப வில்லை.
அந்த பிம்பம் என் மனதில் பதிய மனம் ஒப்பு கொள்ள வில்லை. சுஜாதா,  சுஜாதாவாகவே என்னுள் இருக்கட்டும் !   

**********
ப்ளாகில் எத்தனையோ புத்தக விமர்சனங்கள் எழுதுகிறேன். புத்தக விமர்சனம் என்றாலே ஹிட்ஸ் மிக குறைவு தான். ஆனால் சுஜாதா எப்போதோ எழுதிய நாவல்கள் குறித்து, புத்தக விமர்சனம் சமீப காலமாக எழுதுகிறேனே .. அதற்கு புது சினிமா விமர்சனத்துக்கு வாசிக்கிற மாதிரி ஏராளமான மக்கள் வாசிக்கிறார்கள் !

சுஜாதா குறித்த இப்பதிவும் மிக அதிகம் பேரால் வாசிக்கப்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதில் எனக்கு எந்த பெருமையும் இல்லை. பதிவின் உள்ளே வருவோர், வாசிப்போர் அனைவரும் சுஜாதா என்கிற மந்திர சொல்லுக்காக தான் வருகிறார்கள் !
**********
எத்தனையோ பேருக்கு ரோல் மாடலாக இருந்தவர் சுஜாதா !.. எனக்கு தெரிந்து இவருக்கு இருந்த அளவு ரசிகர்கள், வேறு எந்த தமிழ் எழுத்தாளருக்கும்  இதுவரை இருந்ததில்லை. இனி இருக்க போவதும் இல்லை  .

தமிழின் மீது எத்தனையோ பேருக்கு ஆர்வம் வர காரணமாக இருந்தது சுஜாதாவின் எழுத்துக்கள்!

தமிழ் இலக்கிய உலகம் என்றென்றும் சுஜாதாவை நினைவு கொள்ளும் !

27 comments:

 1. சுஜாதா.. வாழ்க நீ எம்மான்!!

  :-)

  ReplyDelete
 2. சுஜாதா : நாவல்கள் என்றாலே ஆகாத எனக்குள் வாசிக்கும் பழக்கத்துக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தவர்...அவரது எழுத்துக்களுக்கு கடந்த ஒரு வருடமாக ரசிகன் என்பதில் மனம் மகிழ்கிறேன்..தங்களது பதிவு நல்ல பகிர்வு..நன்றி.
  அந்த கடிதம் பொக்கிஷத்தை போன்றது..அதனை இங்கு பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றிகள்.

  ReplyDelete
 3. //புத்தகத்தை நேரில் தந்து நன்றி சொல்ல சுஜாதா இல்லம் சென்றேன். சுஜாதாவை நேரில் சந்தித்து பேசியது ஒரே முறை அது தான்.//

  உங்க மேல ஒரு சின்ன பொறாமை வருது மோகன் :)

  ReplyDelete
 4. நல்லதொரு பகிர்வு.

  ReplyDelete
 5. Very proud of you. Hope this (Sujatha's letter) would be one of the framed photos in your home.

  ReplyDelete
 6. சுஜாதா என்ற பெயர்ருக்காக,அவரின் எழுத்துகளுக்காக கட்டுண்டு கிடப்பவர்கள் பலர்.
  அவர் கைப்பட கடிதம் எழுத வைத்த உங்கள் சாமர்த்தியம் அசாத்தியமானது.

  ReplyDelete
 7. //இவருக்கு இருந்த அளவு ரசிகர்கள், வேறு எந்த தமிழ் எழுத்தாளருக்கும் இதுவரை இருந்ததில்லை. இனி இருக்க போவதும் இல்லை .//

  உண்மை.

  சிறப்பான அனுபவ பகிர்வு.

  ReplyDelete
 8. நல்லதொரு பகிர்வு.

  பொக்கிஷமாக வைத்திருக்கும் கடிதத்தை எங்களிடமும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.

  சுஜாதா...சுஜாதா... தான்....

  ReplyDelete
 9. சுஜாதா - வாத்தியார் வாத்தியார் தான் மோகன்....

  உங்களுக்கு வந்த கடிதத்தினை பார்க்க எங்களுக்கு கொடுப்பினை இருந்திருக்கிறது...

  நல்லதோர் பகிர்வுக்கு மிக்க நன்றி மோகன்...

  ReplyDelete
 10. சுஜாதாவையே பதிலளிக்கவைத்த உங்கள் கடிததின் பிரதி உங்களிடம் உள்ளதா? அதையும் பிரசுரித்திருக்க்லாமே?

  //பதிவின் உள்ளே வருவோர், வாசிப்போர் அனைவரும் சுஜாதா என்கிற மந்திர சொல்லுக்காக தான் வருகிறார்கள் !
  //

  நிச்சய்மாக இல்லை.... உங்களது எழுத்துக்காகவே வருகின்றனர்.

  ReplyDelete
 11. வெளங்காதவன் : வாழ்க நீ எம்மான் என்றால் " அவர் புகழ் என்றென்றும் ஓங்குக " என்று தானே அர்த்தம். நன்றி !

  ReplyDelete
 12. Kumaran said...
  அந்த கடிதம் பொக்கிஷத்தை போன்றது..அதனை இங்கு பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றிகள்.

  ***

  ஆம். குமரன். 21 வருடத்துக்கு முன் வந்த கடிதம். இன்னும் பத்திரமாக வைத்துள்ளேனே !

  ReplyDelete
 13. ர‌கு said...
  //புத்தகத்தை நேரில் தந்து நன்றி சொல்ல சுஜாதா இல்லம் சென்றேன். சுஜாதாவை நேரில் சந்தித்து பேசியது ஒரே முறை அது தான்.//

  உங்க மேல ஒரு சின்ன பொறாமை வருது மோகன் :)

  ***

  ரகு: ஹா ஹா. இதை பாராட்டா எடுத்துக்குறேன் நண்பா !

  ReplyDelete
 14. ராமலக்ஷ்மி said...
  நல்லதொரு பகிர்வு.

  **
  நன்றி ராமலட்சுமி !

  ReplyDelete
 15. ஆதி மனிதன் said...
  Very proud of you. Hope this (Sujatha's letter) would be one of the framed photos in your home.

  ***

  நன்றி ஆதி மனிதன். நீங்கள் சொன்ன பின் தான் பிரேம் போட்டு மாட்டினால் என்ன என்று தோன்றுகிறது ! செய்ய முயல்கிறேன் !

  ReplyDelete
 16. சுஜாதா விருது பெற்ற யுவா : நன்றி !

  ReplyDelete
 17. கோகுல் said...
  சுஜாதா என்ற பெயர்ருக்காக,அவரின் எழுத்துகளுக்காக கட்டுண்டு கிடப்பவர்கள் பலர்.
  அவர் கைப்பட கடிதம் எழுத வைத்த உங்கள் சாமர்த்தியம் அசாத்தியமானது.

  ***
  நன்றி கோகுல். கல்லூரி காலத்தில் எழுத்து திறமை இப்போது இருந்ததை விட நன்கு இருந்ததாக நினைக்கிறேன். அது கடிதத்தில் வெளிப்பட்டிருக்கலாம்.

  ReplyDelete
 18. ராம்வி: இந்த பதிவு (அவரின் கடித நகல் தவிர) முன்பே பகிர்ந்துள்ளேன். நீங்கள் அப்போது படிக்க வில்லை என நினைக்கிறேன் நன்றி

  ReplyDelete
 19. கோவை2தில்லி said...

  பொக்கிஷமாக வைத்திருக்கும் கடிதத்தை எங்களிடமும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.

  ***
  நன்றி கோவை டு தில்லி மேடம்

  ReplyDelete
 20. நன்றி வெங்கட். தமிழ் மணம் பட்டை இணைத்தமைக்கும் தான் !

  ReplyDelete
 21. ஒரு வாசகன் said...
  சுஜாதாவையே பதிலளிக்கவைத்த உங்கள் கடிததின் பிரதி உங்களிடம் உள்ளதா? அதையும் பிரசுரித்திருக்க்லாமே?

  //பதிவின் உள்ளே வருவோர், வாசிப்போர் அனைவரும் சுஜாதா என்கிற மந்திர சொல்லுக்காக தான் வருகிறார்கள் !
  //

  நிச்சய்மாக இல்லை.... உங்களது எழுத்துக்காகவே வருகின்றனர்.

  ****

  வாசகன்: ஏஏஏஏன்? நல்லா தானே போய் கிட்டு இருக்கு ? Why this Kola veri??

  என்னோட கடிதமா? நாம் எழுதும் கடிதம் நாமே பிரதி எடுத்து வைப்பதில்லையே நண்பா ! இப்படி சரித்திரத்தில் சின்னதாய் ஒரு இடம் பிடிக்கும் என தெரிந்தால் எடுத்து வைத்திருக்கலாம் :((

  ReplyDelete
 22. சுஜாதா குறித்த இப்பதிவும் மிக அதிகம் பேரால் வாசிக்கப்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதில் எனக்கு எந்த பெருமையும் இல்லை. பதிவின் உள்ளே வருவோர், வாசிப்போர் அனைவரும் சுஜாதா என்கிற மந்திர சொல்லுக்காக தான் வருகிறார்கள் !- Exactly-- Sujatha You cant be replaced by anyone

  ReplyDelete
 23. நல்லதொரு பகிர்வு.

  ReplyDelete
 24. Poornima: Thanks. Yes. There can be only one Sujatha !!

  ReplyDelete
 25. பெரிய ஆள் தான் நீங்கள்.. வாழ்த்துகள்

  ReplyDelete
 26. அவர் கூட சிநேகம் என்றுதான் எழுதியிருக்கிறார்..நீங்கள் ஏன் ஸ்'நேக்கை பிடிக்கிறீர்கள்?

  ReplyDelete
 27. இதில் எனக்கு எந்த பெருமையும் இல்லை. பதிவின் உள்ளே வருவோர், வாசிப்போர் அனைவரும் சுஜாதா என்கிற மந்திர சொல்லுக்காக தான் வருகிறார்கள் !

  உண்மை! உங்கள் பெருந்தன்மை; வாழ்க பல்லாண்டு!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...