Saturday, February 4, 2012

வானவில் 74: விஜயகாந்த் Vs அம்மா + அனுஷ்கா

விஜயகாந்த் Vs  அம்மா 

விஜயகாந்த்துக்கும் முதல்வருக்கும் சட்டமன்றத்தில் நடந்த சண்டை டிவியில் பார்த்து ஆச்சரியம் ஆக இருந்தது. முதல்வருக்கு இவ்வளவு கோபம் பேச்சில் தெரிவதை இப்போது தான் பார்க்கிறேன். (அரசியல் மேடைகளில் எழுதி வைத்து படிப்பதை வைத்து,  யாரோ எழுதி தந்து தான் வாசிக்கிறார் என்பார்கள். ஆனால் சட்ட மன்றத்தில் உடனுக்குடன் பதிலடி தருகிறாரே !)

நிற்க. இந்த சண்டையில் என் ஆதரவு விஜய காந்துக்கு தான். இவ்வளவு நாள் எதிர் கட்சி என்ற பெயரில் தூங்கி விட்டு இப்போது தான் விழித்திருக்கிறார். மக்கள் பிரச்சனைகளை பேச ஆரம்பிக்கும் போதே அவரை அமைச்சர் பேசுகிறார் என உட்கார சொல்வதும், தே.மு. தி.க உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர் என உடனே உரிமை மீறல் குழுவுக்கு பரிந்துரைத்து அவர்களை சபைக்கு வர முடியாமல் நீக்குவதும் ஆளும் கட்சிக்கு அழகல்ல. எதிர் கட்சி என்றால் குரல் எழுப்ப தான் செய்வார்கள். அதற்காக ஒவ்வொரு முறையும் வெளியேற்றினால் மக்கள் பிரச்சனை எப்படி தான் வெளி வரும்? முதல்வரை பாராட்டி பேசினால் மட்டும் தான் பேச அனுமதிப்பார்கள் என்றால் நாட்டில் பாலாறும் தேனாறுமா ஓடுகிறது? ஆளும் கட்சியின் இந்த அணுகுமுறை தொடர்ந்தால் மக்கள் பிரச்சனைகள் சட்டமன்றத்தில் வெளி வர போவதே இல்லை.

இடை தேர்தலில் நாங்கள் தான் ஜெயிப்போம் என முதல்வர் சவால் விட்டதும், விஜய காந்த் " நீங்கள் ஆளும் கட்சியாக இருக்கும் போது ஜெயிப்பது பெரிதல்ல; எதிர் கட்சியாக இருக்கும் போது என்ன ஜெயித்தீர்கள்?" என்று கேட்டது சரியான கேள்வி. அதற்கு சின்ன பிள்ளை மாதிரி " உங்கள் தோல்வியை உடனே ஒப்பு கொண்டு விட்டீர்களா?" என நக்கல் விடுவதும், அதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கை தட்டி ஆரவாரம் செய்வதும் பழைய குருடி கதவை திறடி பழமொழியை தான் நினைவு படுத்துகிறது.

ஆட்சியை இழந்த பின் மீண்டும் ஆட்சிக்கு வர, அனைத்து கட்சியினரையும் அரவணைத்து, ஆட்சிக்கு வந்த பின் முதலில் அவர்களை உதறும் பாணி மாறவே இல்லை. தமிழகத்துக்கு இரண்டு கொடுமையான கழகங்களிடமிருந்து என்று தான் விடுதலை கிடைக்குமோ?

சம்பவம்- ரிவர்ஸ் எடுக்கும் போது உள்ள ரிஸ்க்


சமீபத்தில் வேளச்சேரி பேருந்து நிறுத்தம் அருகே பார்த்த சம்பவம். ஷேர் ஆட்டோ போல இயங்கும் வேன் ஒன்று ரிவர்ஸ் எடுத்து கொண்டிருக்கிறார்கள். அதன் பின்னால் ஒரு பெண் அந்த வேன் வருவது தெரியாமல் வேறு பக்கம் திரும்பியவாறு நிற்கிறார். திடீரென ஒரு நொடி அவர் நகர நூலிழையில் அவர் மேல் மோதாமல் ரிவர்சில் வந்தது வண்டி. அதிர்ந்து போன அந்த பெண் வண்டிக்காரரை நோக்கி சத்தம் போட ஆரம்பித்து விட்டார். " ஆள் நிற்பது தெரியாமல் இப்படி ரிவர்ஸ் எடுக்குறீங்க. மேலே ஏறியிருந்தா என்ன ஆவது?" என.

நான் முன்பு வேலை பார்த்த கேல்டேக்ஸ் (Caltex ) என்கிற நிறுவனத்தில் பாதுகாப்புக்கு தான் அதிக முக்கிய துவம் தருவார்கள். அங்கு அடிக்கடி சொல்லும் விஷயம்: சிறியதும் பெரியதுமாக நடக்கும் கார் விபத்துகளில் பாதிக்கு மேல் ரிவர்ஸ் எடுக்கும் போது நடப்பவை என்பது. பின்னால் என்ன இருக்கிறது என தெரியாமல் ரிவர்ஸ் எடுப்பது மிக பெரிய ரிஸ்க். காரில் இருக்கும் யாரையாவது சிரமம் பார்க்காமல் இறங்கி பார்க்க சொல்லி விட்டு ரிவர்ஸ் எடுக்கலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் நிற்கும் காரின் பின் புறம் போய் நிற்க கூடாது. ரிவர்ஸ் எடுத்தால் பிரச்சனை என்பதை சொல்லி தர வேண்டும் !

நீங்க ரசிக்கும் பாட்டு எங்கே படம் பிடித்தார்கள் தெரியுமா?  

தமிழ் சினிமாவில் பாடல்களை எந்த ஊரில் / நாட்டில் படம் பிடித்தார்கள் என அறிய நினைப்பது சினிமாவை ரசிக்கும் பலருக்கும் இருக்கும் சிறு ஆர்வம். இதை பூர்த்தி செய்யும் வகையில், தமிழ் மட்டுமல்லாது இந்திய மொழியின் படங்களில் பாடல் எங்கு படமாக்கினார்கள் என்ற விபரம் சொல்கிறது இந்த வெப்சைட். நாம் ரசித்த பல பாடல்கள் எங்கு படமாகியது என அறிய முடிகிறது. சக பதிவர் ஆதி மனிதன் முன்பு குறிப்பிட்டதன் மூலம் தான் எனக்கும் இந்த வெப்சைட் தெரிய வந்தது. ஒரு முறை பாருங்கள் !ஆனந்த் கார்னர்


Don't spoil what you have by desiring what you dont have.
Because
what you have now is one of the many things you once prayed for.சூப்பர் சிங்கர் கார்னர்

ஹிஹி. இது புது கார்னர். ஒவ்வொரு நாளும் பார்க்கா விட்டாலும் அவ்வப்போதாவது பார்க்கிறேன். இந்த கார்னரும் வாரா வாரம் இல்லா விட்டாலும் அவ்வப்போது வெளி வரும் !

இருபது குட்டி பசங்க சூப்பர் சிங்கரில் பாடி கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவராய் வெளியேறுகிறார்கள். இப்போது உள்ளவர்களில் நான் அதிகம் ரசிப்பது ஸ்ருதிகா என்கிற குட்டி பெண். கருப்பாய் இருந்தாலும் கலையாய் இருக்கும் இந்த ஓட்டை பல் அழகியை ரசிக்க முக்கிய காரணம் இவள் செம வாலு ! தான் பாடாத போதும் இவள் அடிக்கும் லூட்டி கேமரா நகரும் போது பார்த்து ரசிக்கலாம். மற்றபடி இவள் பாடுவது சுமார் தான். பாடுவதில் ஸ்ரிஷா என்ற பெண்ணின் குரல் அருமை. செமையாய் பாடுகிறார். முதல் பத்துக்குள் வருவார் என நினைக்கிறேன்.

ஜட்ஜ்களில் சந்தேகமே இன்றி, பாடுவதை நன்கு அனலைஸ் செய்வது சித்ரா மட்டுமே ! மனோ ஜோக் அடிக்க தான் நிறைய பயன் படுகிறார். சுபா எல்லாரையும் பாராட்டுவார். மற்றபடி ரொம்ப அருமையான analysis- எல்லாம் அவர் செய்வதில்லை.

நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்கலை. போக போக பார்க்கலாம் !

பதிவர் ரகுவுடன் ஒரு சந்திப்பு

பதிவர் ரகுவுடன் சில வருடங்களாகவே தொலை பேசி மற்றும் மெயிலில் உரையாடி வந்தாலும், நேரில் சந்தித்ததில்லை. அவர் வீடு நான் வேலை செய்யும் வேளச்சேரியில் தான் உள்ளது என்பதால் அவ்வப்போது சந்திப்பது பற்றி பேசுவோம். சமீபத்தில் " இருவரிடமும் உள்ள சுஜாதா புக் exchange பண்ணிக்கலாம்" என்று பேசினோம். பேசி சில நாட்களில் நான்கு புக்ஸ் பார்சலில் எனக்கு அனுப்பி விட்டார். நான் " பார்சல் செய்ய மாட்டேன்; நேரில் பார்த்தால் தான் தருவேன்" என அடம் பிடிக்க, மூன்று ஆண்டுகளாக பார்க்க நினைத்து இப்போது சந்தித்தோம். சுஜாதா எழுத்து, சத்யம் தியேட்டரில் மட்டுமே படம், தளப்பாக்கட்டி பிரியாணி என்று இருக்கும் ரசனையான மனிதர். இவரின் ரசனைக்கு இன்னொரு உதாரணம் சொல்லலாம். சொன்னா நம்ப மாட்டீங்க. இருந்தாலும் சொல்றேன். இவருக்கு பிடித்த பதிவர் " வீடு திரும்பல் மோகன் குமார் " :)))

தளப்பாக்கட்டியில் இருவரும் சென்று மதியம் பிரியாணி சாப்பிட்டோம். செம tasty! நிறைவான சந்திப்பாக இருந்தது இது. இனி அடிக்கடி சந்திப்போம் என நினைக்கிறேன்.

அய்யாசாமியும் அனுஷ்காவும்
                                                      

குமுதம் பத்திரிக்கையில் சில வாரங்களுக்கு முன் " அனுஷ்காவின் வயது -32 " என படித்தது முதல் அய்யாசாமி மிக அப்செட் ஆகிட்டார். "என்ன ஒரு பொய் பாருங்க ! "அந்த பாப்பாவுக்கு 23-வயசு தாங்க இருக்கும். 23 அப்படிங்கறது உல்டாவா 32-ன்னு பிரின்ட் ஆகிடுச்சு" என்று சமாதானம் சொல்லி கொண்டிருந்தார். மீண்டும் அரசு பதில்களில் ஒருவர் அய்யா சாமி மாதிரியே " அனுஷ்காவுக்கு 32 வயது மாதிரி தெரியலையே" என கேட்க, அதுக்கும் நக்கல் பதில் சொல்லிட்டார் அரசு. கொந்தளிச்சுட்டார் அய்யா சாமி.

உடனே தன் வக்கீல் நண்பனுக்கு போன் செய்தார். எடுத்தவுடன் இந்த விஷயம் எப்படி பேசுவது என வேறு சமாச்சாரம் பேசி விட்டு அனுஷ்காவுக்கு வந்தார். " ஏம்பா. தலைவி பத்தி இப்படி எழுதிட்டாங்க. அவங்க மேலே ஒரு லீகல் நோட்டிஸ் அனுப்பினா என்னா? " என கேட்க, மறுமுனையில் உள்ள நண்பர்" ஏண்டா.காலேஜ் டேசில் இருந்த மாதிரியே இருக்கியே. .. அனுஷ்கா உனக்கு எத்தனையாவது தலைவின்னு சொல்லு. அப்புறம் நோட்டிஸ் அனுப்புறது பத்தி பேசலாம்" என சொல்ல, "ஹி ஹி " ன்னு போனை வைத்து விட்டார் அய்யா சாமி.

26 comments:

 1. A'kshka matter..

  சார்.. ரொம்ப வழியுது.. பாத்து.. பாத்து.... கண்ட்ரோல் ப்ளீஸ்..

  ReplyDelete
 2. இவரின் ரசனைக்கு இன்னொரு உதாரணம் சொல்லலாம். சொன்னா நம்ப மாட்டீங்க. இருந்தாலும் சொல்றேன். இவருக்கு பிடித்த பதிவர் " வீடு திரும்பல் மோகன் குமார் " :)))

  அய்யா சாமி தாங்கல..

  ReplyDelete
 3. //விஜயகாந்த் Vs அம்மா//

  அரசியல்ல இதெல்லாம் யதார்த்தம். இப்படி தான் நடக்குமுன்னு ஏற்கனவே நினைத்ததால். அதிர்ச்சி ஒன்றுமில்லை.

  *****************

  //சம்பவம்- ரிவர்ஸ் எடுக்கும் போது உள்ள ரிஸ்க் //
  நிச்சயம் யோசிக்க வேண்டிய விஷயம்.


  **********

  //நீங்க ரசிக்கும் பாட்டு எங்கே படம் பிடித்தார்கள் தெரியுமா?//

  நல்ல தகவல். பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி.

  **********

  //பதிவர் ரகுவுடன் ஒரு சந்திப்பு //

  வாரம் ஒரு பதிவர் சந்திப்பு. நல்லா இருக்கே! தொடருங்கள்.

  ReplyDelete
 4. அமைதி அப்பா Said:

  //பதிவர் ரகுவுடன் ஒரு சந்திப்பு //

  வாரம் ஒரு பதிவர் சந்திப்பு. நல்லா இருக்கே! தொடருங்கள்.
  ***
  அப்படி எல்லாம் இல்லீங்க சார். பதிவுலகில் இருப்போரை நான் சந்திப்பது மிக குறைவே. புத்தக வெளியீடு மாதிரி சந்தர்ப்பங்களில் இயலும் போது மட்டும் கலந்து கொண்டு அப்போது தான் பெரும்பாலும் சந்திப்பது வழக்கம். இம்முறை அடுத்தடுத்த வாரம் இரு பதிவர்களை சந்தித்தது தற்செயலானது தான். இரு சந்திப்புகளும் நெடு நாளாக பேசி, நடக்காமல் இப்போது நடந்துள்ளது . அவ்வளவே !

  ReplyDelete
 5. Madhavan Srinivasagopalan said...
  A'kshka matter..

  சார்.. ரொம்ப வழியுது.. பாத்து.. பாத்து.... கண்ட்ரோல் ப்ளீஸ்

  ***

  மாதவா. இந்த விஷயத்தில் கொஞ்சம் உண்மையும் நிறைய்ய்ய்ய கற்பனையும் இருக்கு. நகைச்சுவைக்காக தான் எழுதியுள்ளேன். பிறரை நக்கலடித்து ஜோக் பண்ணாமல் அய்யாசாமியை தானே (பொய்யாக) நக்கல் அடித்துள்ளேன். அக்கறைக்கு நன்றி

  ReplyDelete
 6. ரிஷபன் said...
  இவரின் ரசனைக்கு இன்னொரு உதாரணம் சொல்லலாம். சொன்னா நம்ப மாட்டீங்க. இருந்தாலும் சொல்றேன். இவருக்கு பிடித்த பதிவர் " வீடு திரும்பல் மோகன் குமார் " :)))

  அய்யா சாமி தாங்கல..

  ***

  ரிஷபன் சார்: நன்றி

  இந்த தகவல் ரகு பின்னூட்டத்திலும் போனிலும் சில முறை சொன்னது தான்.

  ReplyDelete
 7. Rathnavel Natarajan said...
  நல்ல பதிவு.
  வாழ்த்துகள்.

  ******

  நன்றி ஐயா

  ReplyDelete
 8. அனுஷ்கா - அய்யாசாமி தொல்லை தாங்கலைன்னு ஒரு லீகல் நோட்டீஸ் அனுப்பலாமான்னு யோசிக்கறாங்களாம்!

  :)))

  ReplyDelete
 9. சட்டசபை நிகழ்வை நானும் பார்த்தேன். சரியோ தவறோ, எனக்கு இரண்டு பேரின் தைரியமும் பிடித்திருந்தது, குறிப்பாக விஜயகாந்த். ஆனால் இவர் ஒரு சிறந்த தலைவராக உருவெடுப்பார் என்பதில் நம்பிக்கை இல்லை.

  அவசியம் மீண்டும் சந்திப்போம், மேலும் சில புத்தகங்களுடன் :)

  அனுஷ்கா 32 - விட்டு தள்ளுங்க, நாம ஆண்ட்டி ஹீரோவாவது இருந்துட்டு போவோம் ;))

  ரிஷபன் - பதிவுலக அரசியல், குழு என்று எதிலும் சேராமல், டீசன்ட்டாக, எளிமையாக எழுதுவதாலேயே வீடு திரும்பல் நான் ரசித்து வாசிக்கும் ஒரு சில வலைப்பூக்களில் ஒன்று. Nothing exaggerated.

  ReplyDelete
 10. பல்சுவை பதிவு ! வாழ்த்துக்கள் ! நன்றி !

  ReplyDelete
 11. //வெங்கட் நாகராஜ் said

  அனுஷ்கா - அய்யாசாமி தொல்லை தாங்கலைன்னு ஒரு லீகல் நோட்டீஸ் அனுப்பலாமான்னு யோசிக்கறாங்களாம்!

  :)))
  //
  ஹா ஹா உங்க கமென்ட் மிக ரசித்தேன் வெங்கட் . நன்றி

  ReplyDelete
 12. ர‌கு said...
  எனக்கு இரண்டு பேரின் தைரியமும் பிடித்திருந்தது, குறிப்பாக விஜயகாந்த். ஆனால் இவர் ஒரு சிறந்த தலைவராக உருவெடுப்பார் என்பதில் நம்பிக்கை இல்லை.

  ****
  Very well said ரகு ! Fully agree with your last statement!

  ***

  ரிஷபன் நண்பர் தான். உரிமையில் காமெடியாக கிண்டலடித்துள்ளார். :))

  ReplyDelete
 13. திண்டுக்கல் தனபாலன் said...
  பல்சுவை பதிவு ! வாழ்த்துக்கள் ! நன்றி !
  **
  மிக நன்றி தனபாலன் !

  ReplyDelete
 14. >>நீங்க ரசிக்கும் பாட்டு எங்கே படம் பிடித்தார்கள் தெரியுமா?
  நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி.

  >>ஜட்ஜ்களில் சந்தேகமே இன்றி, பாடுவதை நன்கு அனலைஸ் செய்வது சித்ரா மட்டுமே ! மனோ ஜோக் அடிக்க தான் நிறைய பயன் படுகிறார். சுபா எல்லாரையும் பாராட்டுவார். மற்றபடி ரொம்ப அருமையான analysis- எல்லாம் அவர் செய்வதில்லை.

  மனோவும் சுபாவும் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றாங்க ? அவங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான் :-)

  அனுஷ்கா - அய்யாசாமி
  வர வர அய்யாசாமியின் லூட்டிக்கு ஒரு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது... அய்யாசாமி ஒரு ரசனையான மனிதர் என்பது மட்டும் புரிகிறது.

  அய்யாசாமியின் கவனத்திற்கு... (மிஸ்டர் மியாவ் - இந்த வார ஜூனியர் விகடனில்)
  அனுஷ்காவுக்கு மேக்கப் போடுகிறவர், திருநங்கை நிக்கி. இவர் வேலைக்குச் சேர்ந்த பிறகுதான், தான் சினிமாவில் உச்சத்துக்கு வந்ததாக நம்புகிறார் அனுஷ். அதனால் அதிர்ஷ்ட தேவதையாக நினைக்கும் நிக்கியிடம்தான் குடும்ப விவகாரம் குறித்தும் ஆலோசனை நடத்துகிறாராம்.

  ReplyDelete
 15. வானவில் சுவாரசியம்.

  சூப்பர் சிங்கரும் வானவில்லில் சேர்ந்து விட்டதா? நல்லது.

  ஆனந்த் கார்னர் அருமை.

  //இவருக்கு பிடித்த பதிவர் " வீடு திரும்பல் மோகன் குமார் " :)))//--வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. //சக பதிவர் ஆதி மனிதன் முன்பு குறிப்பிட்டதன் மூலம் தான் எனக்கும் இந்த வெப்சைட் தெரிய வந்தது. ஒரு முறை பாருங்கள் !//

  Thanks for your referral.

  //பின்னால் என்ன இருக்கிறது என தெரியாமல் ரிவர்ஸ் எடுப்பது மிக பெரிய ரிஸ்க்.//


  If you follow the below rules while taking your car, you can avoid 99% of accidents occurring due to reversing the car.

  Please go around the car anti-clock wise to get into the driver seat if you are approaching the car from the front. If you approach the car from the back, please go around the car clock-wise direction to get into the driver seat. This will make sure that you go around the car every time before you reverse your car.

  ReplyDelete
 17. //விஜயகாந்த் Vs அம்மா//
  அம்மாவையே எதிர்த்துக் குரல் கொடுக்கீறார் என்பதால் ஒரு ஆச்சர்யம். மற்றபடி இவரும் மற்ற கழகங்கள் போலத்தான்!!

  //ரிவர்ஸ்//
  இந்த விஷயத்தில் டிரைவர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு பாதசாரிகளும் பொறுப்போடு இருப்பது அவசியம். வண்டிகளில் ரிவர்ஸ் லைட் கட்டாயம் கவனிக்கணும். நிறைய வண்டிகள்ல ரிவர்ஸ் எடுக்கும்போது அதிர்கிற மாதிரி மீஜிக் போடுவாங்களே!!

  அமீரகத்திலும், குழந்தைகள் இதிலேதான் அதிகம் பலியாவது. சொந்த தந்தையாலேயே ரிவர்ஸ் எடுக்கும் சமயத்தில் அடிபட்டு இறக்கும் குழந்தைகள் அவ்வப்போது கேள்விப்படுவதுண்டு. ரொம்பவே கவனமாக இருக்கவேண்டும், இரு தரப்பும்.

  //ஜூனியர் சிங்கர்//
  //அனுஷ்கா//

  கொஞ்ச நாளா காணோமேன்னு ஒரு (நல்ல) நம்பிக்கை வந்திருந்தது... :-)))))))

  //நன்கு அனலைஸ் செய்வது சித்ரா மட்டுமே//
  நம்ம சின்னக்குயில் சித்ராவா? நல்லபடி மீண்டு வந்துவிட்டார் என்பது நல்ல செய்தி.

  ReplyDelete
 18. முடிந்தால் எனது இடுகைகளில் வரும் புத்தகங்களை படித்து பாருங்கள், சுவராசியம் கேரண்டி உள்ள புத்தகங்களை மட்டுமே அதில் சொல்லியிருப்பேன் .

  ReplyDelete
 19. அம்மா + விஜயகாந்தோடு அனுஷ்காவை சேர்க்கலாமோ?

  தலைவியைப் பற்றி தனிப் பதிவாகவே போடுவதுதானே தொண்டனுக்கு அழகு:))))

  ReplyDelete
 20. BalHanuman said...
  மனோவும் சுபாவும் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றாங்க ? அவங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான் :-)

  **

  ஹா ஹா. கரக்டு தான் பால ஹனுமான். சித்ரா மாதிரி நல்ல ஜட்ஜெஸ் இருக்கலாம் என்பதே ஆதங்கம்.

  **

  தலைவி பற்றிய மேலதிக தகவல்களுக்கு நன்றி

  ReplyDelete
 21. ராம்வி மேடம்: பல பகுதிகள் குறித்து எழுதியமைக்கு மிக நன்றி !

  ReplyDelete
 22. ஆதி மனிதன்: ரிவர்ஸ் எடுக்கும் முன் செய்ய வேண்டிய விஷயம் பற்றி நீங்கள் சொன்னது மிக நன்று. நன்றி !

  ReplyDelete
 23. ஹுசைனம்மா:

  அவ்வப்போது வந்தாலும் பல பகுதிகளை நன்கு அலசுவது உங்களிடம் மிக பிடித்த விஷயம்.

  //ஜூனியர் சிங்கர்//
  //அனுஷ்கா//

  கொஞ்ச நாளா காணோமேன்னு ஒரு (நல்ல) நம்பிக்கை வந்திருந்தது... :-)))))))
  **
  அதெப்படி வரலாம்? நாங்கல்லாம் யாரு? அவ்ளோ சீக்கிரம் மாறிடுவோமா?
  **
  சூப்பர் சிங்கரில் வருவது சின்ன குயில் சித்ரா தான். ஆம். நீங்கள் எழுதியது போல் அவர் சிறிது சிறிதாக தன் துக்கத்திலிருந்து வெளி வருகிறார்

  ReplyDelete
 24. ஷர்புதீன்: வாசிக்கிறேன் ; நன்றி !

  ReplyDelete
 25. வித்யா said...
  அம்மா + விஜயகாந்தோடு அனுஷ்காவை சேர்க்கலாமோ?

  தலைவியைப் பற்றி தனிப் பதிவாகவே போடுவதுதானே தொண்டனுக்கு அழகு:))))

  **

  I liked this comment ; நீங்க ரொம்ப நல்லவங்க வித்யா :))

  ReplyDelete
 26. Anonymous10:43:00 AM

  சட்டசபைல பெஞ்ச் தட்டியே காதை கிழிக்கறாங்க.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...