Saturday, April 21, 2012

ஐடி முடித்தவுடன் வேலையில் சேர்வது எப்படி?


கல்லூரி புராஜக்டுகளும், சர்டிபிகேட் படிப்புகளும் வெற்றியின் மாஜிக் ஃபார்முலா!

முத்து ராமலிங்கம்   புராஜக்ட் மானேஜர் - மெட்லைஃப் - நியூயார்க்

*************
நண்பர் முத்து ராமலிங்கம் Facebook மூலம் அறிமுகமானவர். கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பயன் தரும் இந்த பேட்டி கம்பியூட்டர் உலகம் மாத இதழுக்காக அவர் தந்தது. அவர் அனுமதியுடன் இன்னும் நிறைய இளைஞர்களுக்கு சேர வேண்டும் என்கிற எண்ணத்தில் இங்கு பகிரப்படுகிறது
*************
டி துறையில் அடிப்படை தெரிந்திருந்தாலே, கை நிறைய சம்பளம் என்கிற காலம் போயே போச்சு. இப்போது அனுபவஸ்தர்களுக்கு மட்டுமே அழைப்பு. ஐடி துறை தவிர அதைச் சார்ந்த வேறொரு துறை பற்றிய அறிவும் இருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு. ஆனால் ஒரு மாணவன் எப்படி அனுபவஸ்தனாக கல்லூரியை விட்டு வெளி வர முடியும்? ஐடி படிக்கிற மாணவன், வேறொரு துறையின் அனுபவத்தை பெறுவது எப்படி? ஐடி மாணவன் படிப்பு முடித்தவுடனே வேலை வாய்ப்பு பெறுவது எப்படி?

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்தக் கேள்விகளுக்கு மெட்லைஃப், நியூயார்கிலிருந்து பதில் சொல்லியிருக்கிறார் திரு. முத்து ராமலிங்கம்

சம்பிரதாயமான ஆனால் அவசியமான கேள்வி.  உங்களைப் பற்றி சொல்லுங்களேன்.

படித்தது டிப்ளோமா மற்றும் BCA பட்டப் படிப்பு. 15 சான்றிதழ் படிப்புகள். (15 International Certificates) IT இல் கடந்த 12 வருடங்களாக வேலை செய்கிறேன். என்னுடைய முதல் வேலையாக சாதாரண ஹார்ட்வரே எஞ்சினியராக ஆரம்பித்தேன். தற்போது இங்கு ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜராக வேலை செய்கிறேன்

உங்களுடைய பணி எப்படிப் பட்டது?

நிறுவனங்கள் உபயோகப் படுத்தும் மென்பொருள்கள், ஹார்ட்வேர்,நெட்வொர்க், பாலிசி மற்றும் வழிமுறைகளை பின்பற்றி தகுந்த (Security) பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்திக் கொடுத்து கண்காணிப்பதே என் வேலை. செக்யூரிட்டி என்றதும், போலீஸ் போல யூனிஃபார்ம் போட்டுக் கொண்டு, கையில் துப்பாக்கியுடன் வாசலில் நிற்கிற வேலை என்று நினைத்துவிடாதீர்கள் .

டேட்டா செக்யூரிட்டின்னு சொன்னா, ஏதோ யூனிஃபார்ம் மாட்டின அமெரிக்க காவல்காரன்னுதான் எங்கம்மாவும், சொந்தக்காரங்களும் நினைக்கறாங்க..(மீண்டும் சிரிப்பு). அவங்க  அப்படி நினைக்கறதுல தப்பு இல்ல. ஆனா மாணவர்களுக்கே ஐடி துறை பற்றிய புரிதல் கம்மியா இருக்குன்னு நினைக்கறேன்.

மாணவர்கள் ஐடி துறையைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவில்லைன்னு சொல்றீங்களா?

ஆமாம். ஐடி தொடர்பான படிப்பு என்றால், ஹார்டுவேரா? சாஃப்டுவேரா? என்று இரண்டே கேள்விகளைத்தான் கேட்கிறார்கள். ஆனால் ஐடி துறை இப்போது இந்த இரண்டையும் எப்போதோ தாண்டி மிகப் பரவலாகிவிட்டது. ஹார்டுவேர் என்று எடுத்துக் கொண்டால் Networking, Routing, Firewall என்று நீண்டு கொண்டே போகும். அதே போல சாஃடுவேர் என்றால் Coding, Tester, Database Administrater என்று ஏகப்பட்ட பிரிவுகள். மாணவர்களுக்கு இதில் எது தனக்கு விருப்பம் என்பதை படிக்கும்போதே உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப சான்றிதழ் (Certificate) படிப்புகளையும் முடிக்க வேண்டும்முன்பெல்லாம் BCA, MCA, BE Computer Science முடித்தாலே வேலை கிடைத்துவிடும். ஆனால் தற்போதைய நிலை வேறு. மாணவர்களுக்கு அவர்களுடைய டிகிரி தவிர, சான்றிதழ் படிப்புகளும் கட்டாயம் தேவைப்படுகிறது.

சான்றிதழ் (Certificate) படிப்புகள் என்றால் என்ன?

முன்பு பட்டங்களை தகுதியாக வைத்து (Degree based) வேலை தந்தார்கள். தற்போது திறமைகளை அடிப்படையாக வைத்துதான் (Skill based) வேலை. CISCO, Microsoft, Linux, ORACLE போன்றவை மிகப்பெரிய சர்வதேச ஐடி நிறுவனங்கள். இவர்களுடைய மென்பொருள்கள் அல்லது வன்பொருள்கள்தான் தற்போது உலகெங்கும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே ஐடி துறையில் வேலை தேடும்போது, இவர்களின் மென்பொருள் அல்லது வன்பொருள் பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டும். இதற்கென சான்றிதழ் (Certificate) தேர்வுகள் உள்ளன. உங்கள் விருப்பம் மற்றும் திறமைகளின் அடிப்படையில் அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். அதை எடுத்துக் கொண்டு ஜாப் மார்கெட்டுக்குள் நுழைய வேண்டும். போகப் போக ஒன்றுக்கு மேற்பட்ட சர்டிபிகேட்டுகளை படித்து வாங்கிக் கொள்ளலாம். இதற்காக கல்லூரி முடிக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. கல்லூரியில் படிக்கும்போதே ஈடுபடலாம்.

சான்றிதழ் படிப்புகள் இவ்வளவுதானா? இன்னமும் இருக்கின்றனவா?

நான் சில உதாரணங்களைத்தான் கூறியுள்ளேன். இது போல எவ்வளவோ சான்றிதழ் படிப்புகள் உள்ளன. PCI for ATM Cards, .Net, Java, Share Point, Web logic என்று சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். எப்போதெல்லாம் மைக்ரோசாஃப்ட், ஆரகிள் போன்ற நிறுவனங்கள் புதிய மென்/வன் பொருள்களை அறிமுகப்படுத்துகின்றனவோ அப்போதெல்லாம் அது குறித்த ஒரு சான்றிதழ் படிப்பும் உருவாகிவிடும். சுருக்கமாகச் சொன்னால் பட்டப்படிப்பு மட்டும் போதவே போதாது. சான்றிதழ் படிப்புகளை கட்டாயம் மாணவர்கள் படிக்க வேண்டும்.

சான்றிதழ் படிப்புகளைப் படித்தால் மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆரகிள் யாஹீ போன்ற நிறுவனங்களில் வேலை கிடைக்குமா?

நீங்கள் திறமைசாலியாக இருந்தால் நிச்சயம் கிடைக்கும். அதைவிட முக்கியமாக இன்று ஐடி என்பது எல்லா துறைகளிலும் இருக்கிறது. மருத்துவமனைகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வங்கிகள், தொலை தொடர்பு துறை, விண்வெளி, சூப்பர் மார்கெட், விமானத் துறை, பங்கு வர்த்தகத் துறை என எல்லா துறைகளிலும் ஐடி உள்ளது. எனவே இவற்றில் ஏதாவது ஒரு துறை பற்றிய அடிப்படை அறிவும், அங்கு பயன்படுத்தப்படும் மென்பொருள், வன்பொருள் பற்றிய அறிவும் தற்போதைய தேவை. அதற்கேற்ப உங்கள் சர்டிபிகேட் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். அப்படிப் படித்தால் ஐடி துறையில் மட்டுமல்ல, ஐடியை சார்ந்திருக்கும் எல்லா துறைகளிலும் உலகமெங்கும் வேலை வாய்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இதைச் சொல்லிக்கொண்டிருக்கும் நான் தற்போது ஒரு சர்வதேச இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஐடி துறையை நிர்வகித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் ஒரு மாணவனுக்கு எப்படி புதிய துறை பற்றிய அடிப்படை அறிவும், அனுபவமும் கிடைக்கும்?

ஒரு துறை சார்ந்த அறிவும், அனுபவமும் பெற வேண்டும் என்பதற்காகத்தான் கல்லூரிகளில் புராஜக்ட் தருகிறார்கள். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு அந்த துறையில் சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின் அந்த நிறுவனத்தில் தற்காலிக பயிற்சிக்கு அனுமதி பெற்று அங்கு உள்ள ஐடி தேவைகளை உணர்ந்து அதில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் நான் பார்த்தவரை மாணவர்கள் இந்த பயிற்சியை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.

மாணவர்கள் தங்கள் புராஜக்டுகளை விளையாட்டாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று குற்றம் சுமத்துகிறீர்களா?

பெரும்பாலான மாணவர்கள் விளையாட்டாகத்தான் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் புராஜக்டுகளை செய்வதே இல்லை. பணம் கொடுத்து வேறு யாராவது செய்து வைத்திருக்கும் புராஜக்டுகளை வாங்கி, தங்கள் பெயர் போட்டு கல்லூரியில் சமர்ப்பிக்கிறார்கள். தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்பதை பல மாணவர்கள் உணர்வதே இல்லை. புதிதாக ஒரு துறை பற்றிய அடிப்படை அறிவு, நிறுவனங்கள் இயங்கும் விதம், அங்கு பயன்படுத்தப்படும் மென்/வன் பொருள்கள் பற்றிய அடிப்படை அறிவை பெறும் வாய்ப்பை தாங்களே உதறுகிறார்கள். பணம்பெற்றுக் கொண்டு அவர்களுக்கு புராஜக்டுகளை விற்கிற நிறுவனங்களை உதாசீனப்படுத்த வேண்டும். கஷ்டப்பட்டு எப்படியாவது தங்கள் புராஜக்டுகளை தாங்களே முடிக்க வேண்டும். அங்கு கிடைக்கும் அனுபவத்துக்கு ஏற்ப, விருப்பத்துக்கு ஏற்ப சான்றிதழ் படிப்புகளையும் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் ஐடி படித்து விட்டு மாரக்கெட்டிங், கணக்கு வழக்கு என்று தொடர்பில்லாத வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும். பல மாணவர்கள் இந்த தவறைத்தான் செய்கிறார்கள்.

மாணவர்கள் உங்கள் அறிவுரையை ஏற்று பணம் கொடுத்து புராஜக்ட் வாங்காமல், தாங்களே செய்து முடிப்பார்கள் என்று அவர்கள் சார்பில் உறுதி அளிக்கிறோம். ஆனால் புராஜக்டுகளால் ஒரு பிரயோஜனமும் இல்லையென்று சில மாணவர்கள் புலம்புகிறார்களே...

யார் சொன்னது? இன்றைக்கு உலகத்தையே கட்டிப் போட்டிருக்கும் ஃபேஸ்புக் ஒரு கல்லூரி புராஜக்ட்தான். கல்லூரி நண்பர்கள் அனைவரும் ஒரே இடத்தில் வந்து பேசிப்பழகும் எண்ணத்தில் உருவாக்கப்பட்டதுதான் ஃபேஸ்புக். மார்க் ஜீகர்பர்க் என்கிற மாணவர் உருவாக்கிய இந்த புராஜக்ட்தான் இந்த நூற்றாண்டின் மிகப் பரபரப்பான புராஜக்ட். இது போல ஒவ்வொரு மாணவரும் க்ரியேட்டிவாக புராஜக்டுகளை சிந்திக்க வேண்டும். அதை கூட்டாகச் சேர்ந்து செய்து முடிக்க வேண்டும். இன்று முதலீட்டாளர்கள் சிறந்த புராஜக்டுகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் செய்து முடிக்கிற புராஜக்ட் ஃபேஸ்புக் போல ஒன்றாக அமைந்துவிட்டால் . . . யோசித்துப் பாருங்கள். நாளை உலகமே உங்கள் பின்னால் அணிவகுக்கும்.

நீங்கள் கூறுவது போல புராஜக்டை முடித்துவிட்டு, சான்றிதழ் படிப்பையும் முடித்துவிட்டு பணிக்குச் செல்லும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது?
நான் ஏற்கனவே சொன்னதுதான். இந்த இரு அடிப்படை தகுதிகள் இல்லாதவர்கள்தான் தடுமாறுவார்கள். மற்ற அனைவருக்கும் மிகப் பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது

பிசினஸ் அனலிஸ்ட் -->ப்ரீ சேல் --> டெவலப்மெண்ட் டீம் ---> டீம் மேனேஜர்  ---> ஹாக்கிங்  --->  சானிடைசிங்  --->  டெஸ்டிங்  --->  குவாலிட்டி அனலைசிஸ்.  இது போல ஒவ்வொரு நிறுவனத்திலும் பல பிரிவுகள் உள்ளன. ஒரு உதாரணத்திற்கு நான் இவற்றை குறிப்பிடுகிறேன். உங்கள் திறமையும், விருப்பமும் உங்களை தாமாகவே இதில் ஏதாவது ஒரு பிரிவில் கொண்டு சேர்க்கும்.

நீங்கள் பணிபுரியும் துறையான Information Security பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். Information என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள்?

 Information என்று நான் குறிப்பிடுவது தகவல். ஐடிக்கும், தகவலுக்கும் என்ன தொடர்பு என்று தோன்றும். அதை விளக்கி விடுகிறேன். ஒரு நிறுவனத்திற்கும் எப்படி அசையும்/அசையா சொத்துக்கள் உண்டோ, அதே போல தகவல் என்ற மிகப் பெரிய சொத்து உண்டு. சொல்லப் போனால் தகவல்கள் இல்லையென்றால் நிறுவனங்கள் இல்லை, வியாபாரம் இல்லை. அவற்றை நிர்வகிக்க சிறந்த ஐடி சொல்யூஷன் இல்லையென்றால், அந்த தகவல்கள் பத்திரமாக இருக்கும் என்ற உத்தரவாதம் இல்லை.

எனவே தகவல்களை வாங்கவும், சேமிக்கவும், பாதுகாக்கவும் சிறந்த ஐடி வழிமுறைகள் (Process) வேண்டும். அவற்றை தகவல் திருடர்களின் வைரஸ் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் வழி முறைகள் வேண்டும்

மாணவர்களுக்கு புரியும் வகையில் கொஞ்சம் எளிமைப்படுத்துவோமே... எத்தனை வகையான தகவல்கள் உள்ளன? அல்லது தகவல்களை எப்படி பிரிக்கலாம்?

ஒரு நிறுவனமோ அல்லது வங்கியோ அல்லது ஒரு மருத்துவமனையோ அவர்களின் தேவைகளைப் பொறுத்து தகவல்களில் பல வகைகள் உள்ளன..

ஆனால் சில தகவல்கள் (General) பொதுவான தகவல்கள்உதாரணமாக வாடிக்கையாளர்களின் தகவல்கள், அவர்களின் தயாரிப்புகள், பணப் பரிமாற்றங்கள்,வேலை செய்யும் நபர்களின் தகவல்கள், அவர்களின் ஆண்டு திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் மற்றும் மிக முக்கியமாக அவர்கள் உபயோகிக்கும் கணினிவிபரங்கள். சில தகவல்கள் வெளி ஆட்கள் யாருக்கும் தெரியக் கூடாது(Confidentiality) கோகோ கோலா சீக்ரட் ஃபார்முலா போல. சில தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்(Partially), உதாரணமாக ATM பாஸ்வேர்டுகள். சில தகவல்கள் பொதுமக்களுக்கு(Public), இதற்கு உதாரணமாக ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் விதம் விதமான திட்டங்கள். .

இவ்வாறு தகவல்களின் தேவைகள் பொறுத்து(Availability) அதன் பாதிப்புகள் (Impact) பொறுத்து தகவல்களை வகை பிரிக்கலாம்

நீங்கள் சொல்லும்போதுதான் தகவல்கள் மிக முக்கியமானவை என்று புரிகிறது. தகவல்களை ஐடி எப்படி பாதுகாக்கிறது?

மிகச் சுருக்கமாகச் சொல்கிறேன். Information Security என்பது பெரிய குடை போல. அதன் கீழ் பல பிரிவுகள் இயங்குகின்றன.  தகவல்களை சேதப்படுத்துவது அல்லது திருடுவதுதான் ஹாக்கர்கள் மற்றும் வைரஸ் பரப்புவர்களின் நோக்கம். அவற்றை தடுக்க மிக முக்கியமாக மூன்று பிரிவுகள் உள்ளன. 1. உடனடி காவல் (IR Instant Response Team). ஆம்புலன்ஸ் போல இயங்கும் பிரிவு 2. வரும் முன் காவல் (Before attack). தடுப்பு மருந்து கொடுப்பது போன்ற பிரிவு. 3. சேத மதிப்பீட்டுப் பிரிவு (Risk assesment)

Information Security Management - இந்த துறைக்கென்ற சான்றிதழ் படிப்புகள் உள்ளனவா?
எக்கச்சக்கமாக உள்ளன. CEH,CISM, CISSP என்று சிலவற்றைக் குறிப்பிடலாம்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு உங்களுடைய ஸ்பெஷல் டிப்ஸ் என்ன?
மாணவர்கள் கல்லூரியில் தரப்படும் புராஜக்டுகளை காப்பியடிக்காமல், தாங்களே சிந்தித்து, தாங்களே செய்ய வேண்டும். ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தபின்னும் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். நிறைய சான்றிதழ் படிப்புகள் உள்ளன. விருப்பம், திறமை மற்றும் அப்போதைய வேலை டிமாண்டுக்கு ஏற்ப படித்து தங்கள் பயோடேட்டாவை மதிப்பு மிக்கதாக மாற்றிக் கொள்ள வேண்டும். எப்போது ஆலோசனை தேவைப்பட்டாலும் என்னை hithisisms@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக அணுகலாம். ஆல் பெஸ்ட்!

13 comments:

  1. உபயோகமான விவரங்களுடன் பேட்டி. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. Very good one. Want to see more posts like this. Even as a IT guy I see a lot of information in this post.

    ReplyDelete
  3. மிக உபயோகமான விவரங்கள். ஒரு காலத்தில் எஸ் எஸ் எல் சி படித்தவர்களுக்கு வேலை, அப்புறம் பட்டப் படிப்பு, அப்புறம் மருத்துவம், எஞ்சினியரிங், வக்கீல் படிப்புகள்...இப்போது இந்த என்ஜினீயரிங் படிப்புதான் எந்தெந்த எல்லைகளைத் தொட்டுக் கொண்டிருக்கிறது? ஆச்சர்யம். அதிலும் வெறும் டிகிரி போதாது என்பதையும் அழகாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு.

    [பதிவு இப்போது வரையிலும் டேஷ்போர்டில் அப்டேட் ஆகவில்லையே. என்னவெனக் கவனியுங்கள்.]

    ReplyDelete
  6. அப்பாதுரை: உங்கள் பாராட்டு சென்று சேர வேண்டிய இடம் முத்து ராமலிங்கத்துக்கு நன்றி !

    ReplyDelete
  7. நன்றி அருணா

    ReplyDelete
  8. நன்றி ஆதிமனிதன். அவரிடமிருந்து இத்தகைய விஷயங்கள் வாங்கி அவ்வப்போது பப்ளிஷ் செய்ய முயல்கிறேன்

    ReplyDelete
  9. நன்றி ஸ்ரீராம் மிக சரியாக சொல்லி உள்ளீர்கள்

    ReplyDelete
  10. நன்றி ராமலட்சுமி ; அடுத்த பதிவு வெளியிடும் போது பிரச்சனை சரி ஆகி விட்டது நன்றி

    ReplyDelete
  11. பயனுள்ள பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  12. தகவல்கள் அருமை

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...