Monday, May 7, 2012

வழக்கு எண் 18 /9 : வழக்கறிஞர் விமர்சனம்

வழக்கறிஞர் அய்யாசாமி வழக்கு எண் 18 /9 பார்த்து விட்டு, நமக்காக தரும் ஸ்பெஷல் விமர்சனம் இதோ:

பாலாஜி சக்திவேல், தமிழில் சமூக பொறுப்புள்ள ஒரு சில இயக்குனர்களில் ஒருவர். "காதல்" என்கிற படம் பள்ளி மாணவர்கள் காதலை  சொல்கிறதே என   சிறு வருத்தம் இருந்த போதும், ஒரே பாடலில் அவர்கள் பணக்காரர்கள் ஆகி விடவில்லை. மாறாக அந்த வயதில் காதலித்து, வீட்டை விட்டு ஓடினால் என்ன விளைவுகள் வரும் என்று வலியுடன் சொன்னது. காதலிக்கும் பள்ளி மாணவிகளை சற்றேனும் யோசிக்க வைக்கும் அளவில் தான் இருந்தது அப்படம்.

வழக்கு எண் 18 /9 கூட பள்ளி காதல் பற்றி பேசுகிறது. ஆனால் இம்முறை பள்ளி மாணவர்கள் செய்யும் அக்கிரமங்களை தோலுரிக்கிறது. இந்த விதத்தில் பள்ளி மாணவிகள் அவசியம் பார்க்க வேண்டிய படம் தான் !

அது என்ன வழக்கு எண் 18 /9 ? வழக்கு எண்ணை சொல்லும் போது முதலில் வருவது வழக்கின் சீரியல் எண். அடுத்து வருவது அந்த வழக்கு பதிவு செய்யப்பட வருடம். இந்த பட பெயரான வழக்கு எண் 18 /9 ஐ எடுத்து கொண்டால், வழக்கின் வரிசை எண் :18;  வழக்கு பதிவு செய்யப்பட வருடம் 2009 என்பது புரியும் ! (ஓ ஓ இது தான் வழக்கறிஞர் டச்சா?)

கதை 

ஜோதி என்கிற இளம் பெண் முகத்தில் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சேர்வதில் துவங்குகிறது படம். இதற்காக வழக்கு பதிவாகி, இன்ஸ்பெக்டர் குமரவேல் விசாரிக்க துவங்குகிறார். அந்த பெண்ணை ஒரு தலையாய் காதலித்த பிளாட் பார டீ கடை பையன் வேலு மீது சந்தேகம் வருகிறது. போலிஸ் அவனை விசாரிக்க, அவனது கதை விரிகிறது.

அடுத்த பகுதியில் ஜோதி வேலை பார்த்த வீட்டில் உள்ள பணக்கார பள்ளி மாணவி ஆர்த்தி தன் கதையை பகிர்கிறாள். அவளோடு நட்பாக பழகி, ஏமாற்றி அவளை வீடியோவில் படமெடுக்கிறான் பணக்கார சிறுவன் தினேஷ். அவனது நிஜ குணம் தெரிந்து ஆர்த்தி விலக, அவளை பல விதத்திலும் கொல்ல முயல்கிறான் தினேஷ். ஆர்த்தி மீது ஊற்றுவ தாய் நினைத்து தவறுதலாய் வேலைக்கார பெண் மீது ஆசிட் ஊற்றி விடுகிறான் தினேஷ்.

போலிஸ் பணம் இருக்கும் பக்கம் சாய்ந்து ஏழை பையன் வேலுவை குற்றவாளியாக்க முயல்கிறது . முடிவு என்ன என இங்கு சொன்னால் சுவாரஸ்யம் போய் விடும். வெண் திரையிலோ சில மாதங்களில் சின்ன திரையிலோ பாருங்கள் !

படத்தின் முதல் பாதியில் பிளாட்பார கடையில் வேலை பார்க்கும் வேலுவின் கதையே பெரிதும் சொல்ல படுகிறது. இப்பகுதி ரொம்ப சுமார் தான் ! ஐம்பது நிமிடத்தில் முதல் பாதி முடிந்து விடுகிறது. " புதுசாய் ஒண்ணும் இல்லையே .. வழக்கமான காதல் கதை" போல தானே இருக்கு என நினைத்தவாறு மீண்டும் வந்து அமரும் போது தான், பிற்பாதியில் நம்மை திடுக்கிடவும், நெகிழவும், கோபப்படவும், அழவும் வைக்கிறார் இயக்குனர்.

எத்தனையோ முறை " இளம் பெண் மீது ஆசிட் வீச்சு" என செய்தி தாளில் வாசித்து விட்டு பின் மறக்கிறோம். ஆனால் அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை உண்டு என்பதையும் அவர்கள் உலகை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதையும் முதல் முறை திரையில் இப்படம் மூலம் காண்கிறோம் .
அனைவரும் புதுமுகங்கள் என்பதால் பாத்திரங்களுடன் நம்மால் எளிதாக ஒன்ற முடிகிறது.

இது படத்தில் வரும் காட்சியல்ல 
படம் முடியும் போது நம் மனதில் பெரிதும் நிறைபவர் ஆசிட் வீசப்பட்ட பெண்ணான ஜோதி (ஊர்மிளா) தான். வட நாட்டில் பிறந்த வசதியான இந்த பெண்ணை ஒரு நிஜ வேலைக்கார பெண் போல ஆக்கிய இயக்குனருக்கு ஷொட்டு ! அதிகம் பேசாத, அமைதியான இந்த பெண் கண்களாலும், உணர்வுகளாலும் அசத்தி விடுகிறாள். படம் முடியும் அந்த கடைசி தருணத்தில் விழியோரம் நீர் துளிர்க்காதவர் கல் நெஞ்சக்காரர்களாய் தான் இருக்க முடியும் !

வேலுவாக நடித்த ஸ்ரீ, கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்தவர். மிக ஒல்லியாக அந்த பாத்திரத்துக்கு நன்கு பொருந்துகிறார். முதல் பகுதியில் இவர் கதை ரொம்ப மெலோ டிராமா. குறிப்பாய் அவர் தந்தையாய் வருபவருக்கு சுத்தமாய் நடிக்க தெரியலை.

தினேஷ் மற்றும் ஆர்த்தியாக வரும் இருவரும் கூட தங்கள் பங்கை செவ்வனே செய்துள்ளனர். ஆர்த்தி பாத்திரம் தவறுதலாய் சித்தரிக்கப்படாமல் நன்கு படிக்கிற பெண் லேசாய் சலனப்படுகிறாள் என அழகாய் காட்டியுள்ளார் இயக்குனர். ( ஆர்த்தியை விட அவர் தோழியாக வரும் ஸ்வேதா செம அழகு !)

படத்தின் செம சர்பிரைஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் தான் ! மிக இயல்பான நடிப்பில் நிஜ இன்ஸ்பெக்டரை கண் முன் கொண்டு வந்து விடுகிறார். போலிஸ் ஸ்டேஷனில் இருந்து கொண்டு ஜன்னல் வழியே அடிக்கடி வெளியே எச்சில் துப்புவதிலேயே இவர் என்ன மாதிரி ஆள் என உணர்த்தி விடுகிறார் இயக்குனர்.

வேலுவின் நண்பனாக வரும் வேலுசாமி என்கிற சிறுவன் அனைவர் மனதையும் கொள்ளை கொள்கிறான்

கதை நடைபெறும் இடமான அந்த தோஷி பிளாட்ஸ் கூட ஒரு கதாபாத்திரம் மாதிரி விரிவது அருமை.

மாணவர்கள் மொபைல் போன் வைத்து எப்படி கெட்டு சீரழிகிறார்கள் என்பதை சற்று மிகை படுத்தலோடு தான் காட்டுகிறார்கள். நிச்சயம் பள்ளி/ கல்லூரி மாணவிகளுக்கு, ஆண்கள் குறித்த எச்சரிக்கை மணி இந்த படம் ! அந்த விதத்தில் சற்று பெரிது படுத்தி சொன்னால் தான், மனதில் உறைக்கும் என்பது உண்மையே !
*********
தியேட்டர் நொறுக்ஸ்

ஐநாக்ஸில் சனிக்கிழமை மாலை காட்சி பார்த்தோம். 90 % தான் அரங்கம் நிரம்பி இருந்தது.

ஸ்ரீ கடைசி காட்சியில் ஜோதியை நோக்கி " உனக்கு நான் இருக்கேன் ஜோதி" என கத்தும் போது தியேட்டரில் செமையாய் கை தட்டல் எழுகிறது.
நாங்கள் சென்ற அதே காட்சிக்கு நடிகர் எஸ்.வீ. சேகரும் தனியாக வந்திருந்தார். பல ஆண்டுகள் முன் பார்த்த மாதிரி அதே தொப்பை, சிரிப்பு, உருவம் !
படம் முடிந்த போது மக்கள் "நன்றாக இருந்தது " என்று தான் பேசி கொண்டு சென்றனர்

நாங்கள் ஐந்து பேர் சென்றோம். கணினி இஞ்சினியராக இருக்கும் என் அண்ணன் மகன் " இந்த டைரக்டர் ரொம்ப அழ வைப்பார். நான் வரலை" என்றான். வறுபுறுத்தி தான் கூட்டி சென்றேன். அவனுக்கும் படம் பிடிக்கவே செய்தது
*********
படத்தில் இரண்டு பாடல்கள். ஆனால் இசை இன்றி ஒலிப்பதால் பலரும் ஒரே பாடல் மறுபடி மறுபடி வருகிறது என்றே நினைக்கிறார்கள். பின்னணி இசை பல இடங்களில் அடக்கி வாசித்தாலும், வேலு ஜோதியை பார்க்கும் இடத்திலெல்லாம் சஸ்பென்ஸ் இசை மாதிரி போட்டது உறுத்துகிறது.

எல்லா பாத்திரங்களையும் பார்த்து பார்த்து செய்த இயக்குனர், பெற்றோர்களின் பாத்திரம் எதற்கும் ஒரு வடிவமின்றி, சும்மா வந்து போகிறவர்களாய் காட்டியிருக்கிறார். ஜோதியின் அம்மா பாத்திரத்துக்கு மட்டும் தான் Identity என ஒன்று சற்றேனும் உள்ளது !

நம் நாட்டில் பணம் உள்ளவர்கள் எந்த தப்பும் செய்யலாம் ! போலிசும் நீதிமன்றமும் அவர்களிடம் பணத்தை வாங்கி கொண்டு சுதந்திரமாய் விட்டு விடும் என்பது தான் சட்டத்தின் நிலை. இதை துல்லியமாக காட்ட முற்பட்ட இயக்குனருக்கு சபாஷ் ! படத்தில் கெட்டவர்களுக்கு தண்டனை கிடைத்து விடுகிறது. நிஜ உலகில் இப்படி நடப்பது இல்லை.

இப்படத்தை எத்தனையோ விதமாய் முடிக்க சாத்திய கூறுகள் உள்ளன. ஆனால் பார்வையாளர்கள் மகிழவும், நெகிழவும் இதை விட சிறந்த முடிவு இருக்க முடியாது !

படம் முடிந்து வெளியே வரும் போது, பொய் வழக்கில் உள்ளே இருக்கும் எத்தனையோ அப்பாவிகள் பற்றி யோசிக்கிறது மனது. இத்தகைய படங்கள் ஓட வேண்டும். தமிழ் சினிமாவிற்கு அது தான் நல்லது ! ஓட வைப்பார்களா நம் மக்கள்?
*********
வல்லமை மே 7, இதழில் வெளியான விமர்சனம்
*********
டிஸ்கி: அருண் என்கிற நண்பர் நமது பதிவுகள் ஈ மெயிலில் வருவதில்லை ஏன் என கேட்டுள்ளார். வராமல் இருக்கும் படி நான் ஏதும் செய்யலை. செட்டிங்க்ஸில் ஏதும் மாறி விட்டதா என நண்பர்களிடம் கேட்டு பார்க்கிறேன். ஈமெயிலில் பிற நண்பர்களுக்கு பதிவுகள் வருகிறதா என சொல்லவும். நன்றி !

38 comments:

  1. படம் முடிந்து வெளியே வரும் போது, பொய் வழக்கில் உள்ளே இருக்கும் எத்தனையோ அப்பாவிகள் பற்றி யோசிக்கிறது மனது ..
    nice..

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம்.
    அப்புறம் தோழி பேரு ஸ்வேதா வா..?நல்லா நோட் பண்ணி இருக்கீங்க..

    ReplyDelete
  3. Anonymous10:19:00 AM

    அருமையான விமர்சனம் அண்ணே. இத்தனை நாள் நான் முதல் நாளே விமர்சனம் போட்டுக் கொண்டிருந்தேன். தற்போது ரயில்வேயில் சேர்ந்து விட்டதால் சினிமாவுக்கு செல்ல முடியவில்லை. இரண்டு நாள் கழித்து விமர்சனம் போட்டாலும் உங்களது விமர்சனம் அருமை தான்.

    ReplyDelete
  4. விமர்சனம் நன்று.

    ReplyDelete
  5. கல்லூரி எடுத்ததும் இவர்தானே.... அவசியம் பார்க்கணும். (ஹி...ஹி... தியேட்டரில் எங்கே போய்ப் பார்க்கறது... என் லிஸ்ட்டுல இருந்த தனுஷோட உத்தமபுத்திரன் இப்போதான் பார்த்தேன். அப்புறம் என்னென்ன படங்கள் விட்டிருக்கேன்னு ஒவ்வொன்றாகப் பார்க்கணும் - கிடைச்சதும்!)

    ReplyDelete
  6. இனிமெல் தான் படம் பார்க்க வேண்டும்.சாமுராய் படமும் இவர் எடுத்து தான்.அழ வைப்பதில் இந்த டைரக்டர் வல்லவர் தான் போல..

    ReplyDelete
  7. விமர்சனம் அருமை. படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலாய் ஏற்படுத்துகிறது ..!

    ReplyDelete
  8. மோகன் குமார்,

    katie-my beautiful faceஎன்ற 2009 இல் bafta விருது வாங்கின ஒரு நிஜ வாழ்கை சம்பவ ஆவணப்படத்தின் சற்றே தமிழ் திரை விரிவாக்கம் தான் இப்படம் எனலாம்.ஒரு தொ.கா மாடல் மீது அவளது முன்னாள் ஆண் நண்பன் அமிலம் வீச வைப்பதை விவரிக்கும்.

    தமிழ் நாட்டிலும் நிறைய அமில வீச்சுகள் உண்டு என்பதால் இதனை நமது கதை என்றே வைத்துக்கொள்ளலாம்.

    அரசியல் வில்லங்கம் எனில் மழுங்கலாகவே அனுகுவது நமது ஊடகங்களின் செயல்ப்பாடு, சந்திரலேகா என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மீதே அமிலம் வீசப்பட்டது ஆனாலும் பெரிதாக நீதி இங்கு கிடைக்கவில்லை.அதனை திரைப்படங்களும் பெரிதுப்படுத்தவில்லை,ஏதோ ஒரு செல்வமணிப்படத்தில் வந்து போகும் காட்சியாக மட்டுமே அச்சம்பவம் பதிவு செய்யப்பட்டது.

    18/9 என்பதை வழக்கு வரிசை எண் ஆண்டு என்பதை நானும் உணர்ந்தேன், பெரும்பாலும் எல்லாரும் ஊகித்திருக்க வேண்டும் .
    ---
    முழுசா படம் பார்த்துவிட்டு அடுத்த ரவுண்ட் வருகிறேன்.

    ReplyDelete
  9. //நம் நாட்டில் பணம் உள்ளவர்கள் எந்த தப்பும் செய்யலாம் ! போலிசும் நீதிமன்றமும் அவர்களிடம் பணத்தை வாங்கி கொண்டு சுதந்திரமாய் விட்டு விடும் என்பது தான் சட்டத்தின் நிலை. இதை துல்லியமாக காட்ட முற்பட்ட இயக்குனருக்கு சபாஷ் ! படத்தில் கெட்டவர்களுக்கு தண்டனை கிடைத்து விடுகிறது. நிஜ உலகில் இப்படி நடப்பது இல்லை. //

    சட்டம் பயின்ற ஒருவர் இதைச் சுட்டிக்காட்டுகிறார் என்றால் விமர்சனம் படிப்பவர்கள் இப்படத்தின் தரத்தை உணர்ந்துக்கொள்வது மிக எளிது தானே!

    சிறப்பான விமர்சனம் மோகன்குமார்.

    ReplyDelete
  10. விமர்சனம் மிக அருமை.

    ஆனாலும் ..
    //படம் முடிந்து வெளியே வரும் போது, பொய் வழக்கில் உள்ளே இருக்கும் எத்தனையோ அப்பாவிகள் பற்றி யோசிக்கிறது மனது.//
    இந்த ஒரு வரியில் மிக அழாகாக படத்தைப் பற்றி சொல்லிட்டீங்க. சிறப்பாக இருக்கு.

    ReplyDelete
  11. விமர்சனம் நன்று.

    வழக்கு எண் விளக்கம், 'அட, ஆமாம் இல்ல' என்கிற ரகம்.


    //நம் நாட்டில் பணம் உள்ளவர்கள் எந்த தப்பும் செய்யலாம் ! போலிசும் நீதிமன்றமும் அவர்களிடம் பணத்தை வாங்கி கொண்டு சுதந்திரமாய் விட்டு விடும் என்பது தான் சட்டத்தின் நிலை.//

    மொத்தமாக, ஆம் என்று சொல்ல முடியாது. நேற்றைய பங்காரு லக்ஷ்மன் முதல் இன்றைய சமச்சீர் கல்வி வரை நீதிமன்றத்தின் பங்கை அறிவோம்.

    'வழக்கறிஞர் மற்றும் போலீஸ் வேலையை' என்று கௌரவமாக நினைத்து மக்கள் அதன் பக்கம் திரும்புகிறார்களோ அன்று இந்தப் பிரச்னை தீரும்.

    எனக்கு நம்பிக்கை உள்ளது. உங்களுக்கும் நம்பிக்கை இருக்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  12. பணம் உள்ளவர்கள் மட்டுமல்ல சில மோசமான போலீசாரிடம் இலவசமாக பழமும், சிகரெட்டும் கொடுப்பவன் கூட எந்த தப்பும் செய்யலாம் என்ற அளவில் ஒரு வில்லங்கமான ஆளுக்கு போலீஸ் சப்போர்ட் செய்ய நினைத்தது. அப்படி ஒரு பொதுப்பிரச்சனையில் நியாயம் பேசிய நாங்கள் போலீசாரல் சில சங்கடங்களுக்கு ஆளான அனுபவம் உண்டு.

    மௌனகுரு, வர்ணஜாலம் போன்ற படங்களும் போலீசார் தங்கள் சர்வீஸ் ரெக்கார்டில் சின்ன கரும்புள்ளி விழுந்துவிடக்கூடாது என்று அப்பாவிகளின் வாழ்க்கையையே இருட்டாக்கும் அவலத்தை சுட்டிக்காட்டியவைதான். பொதுவாக போலீசாரைப் பார்த்து பயப்படவேண்டிய குற்றவாளி ஜாலியாக இருக்கிறான். சட்டம் ஒழுங்கை பெரிதும் மதிக்கும் அப்பாவி, காவல் நிலையம் செல்லவே பயப்பட வேண்டியிருக்கிறது. இந்த லட்சணத்தில் காவல்துறை மக்களின் நண்பனாம். என்ன கொடுமை சார்.

    ReplyDelete
  13. படத்தைப் பார்க்கத் தூண்டும் உற்சாகமான விமர்சனம்.நன்றி மோகன் குமார் !

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. நன்றி ராஜ ராஜேஸ்வரி

    ReplyDelete
  16. கோவை நேரம் said...

    தோழி பேரு ஸ்வேதா வா..?நல்லா நோட் பண்ணி இருக்கீங்க.

    *********

    ஹிஹி.. சினிமால அந்த பேரு. நிஜ பேரு தெரியலை சார்

    ReplyDelete
  17. செந்தில்: வேலையில் சேர்ந்து விட்டீர்களா? மிக மகிழ்ச்சி உங்கள் மனம் திறந்த பாராட்டும் பின்னூட்டம் மிக மகிழ்ச்சி தருகிறது

    ReplyDelete
  18. அட முரளி ! வாங்க ! மகிழ்ச்சி

    ReplyDelete
  19. ஸ்ரீராம்: தியேட்டர் போகாத உங்களை போன்றோருக்காக கூடிய சீக்கிரம் டிவியில் போட்டுடுவாங்க

    ReplyDelete
  20. அமுதா மேடம்: உண்மை தான். நெகிழ வைப்பதிலும் என்று சொல்லலாம்

    ReplyDelete
  21. வரலாற்று சுவடுகள் : நன்றி பாருங்கள்

    ReplyDelete
  22. வவ்வால் : படத்தின் ஆங்கில மூலம் பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி. விக்கி பீடியாவில் அந்த படம் பற்றி வாசித்து பார்கிறேன்

    ReplyDelete
  23. சத்ரியன்: நன்றி மகிழ்ச்சி

    ReplyDelete
  24. வாங்க ராம்வி. நலமா? நன்றி

    ReplyDelete
  25. அமைதி அப்பா: நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் அனைவருக்கும் 100 % நீதி கிடைப்பதில்லை. பணம் உள்ளவர்கள் தவறு செய்து விட்டு சுதந்திரமாய் சுற்றி வரத்தான் செய்கிறார்கள் :((

    ReplyDelete
  26. மௌனகுரு, வர்ணஜாலம் போன்ற போலிசாரின் அக்கிரமம் காட்டிய படங்களை நினைவு கூரந்தமைக்கும் விரிவான பின்னூட்டத்துக்கும் நன்றி சரவணன்

    ReplyDelete
  27. நன்றி ஹேமா. முடிந்தால் பாருங்கள்

    ReplyDelete
  28. //நம் நாட்டில் பணம் உள்ளவர்கள் எந்த தப்பும் செய்யலாம் ! போலிசும் நீதிமன்றமும் அவர்களிடம் பணத்தை வாங்கி கொண்டு சுதந்திரமாய் விட்டு விடும் என்பது தான் சட்டத்தின் நிலை.//

    சல்மான் கான். இரவில் குடியில் காரை ஓட்டியதில் , ஒரு பேக்கரி முன் வெளியே படுத்திருந்த மூவர் படுகாயமடைந்து, இன்னொருவர் உயிரிழந்தார். இது நடந்தது 28 செப்டம்பர் 2002 . பின்னர், சாட்சி இல்லையென கூறி சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டார். என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே தெரியும்.

    ReplyDelete
  29. உங்களின் கூர்மையை வியக்கிறேன்... வழக்கைப்பற்றி நல்லவிதமாய் சொன்னீர்கள்.
    1. ஜோதியின் தந்தையைப்பற்றி இயக்குனர் ஒற்றை புகைப்படம் நான்கு புத்தகம் மூலம் சொல்லியிருப்பார் அதை நீங்க கவனிக்க வில்லையா?
    2. இன்றைய மேல்தட்டு வர்க்கம் நவீன செல்பேசியை வைத்து இப்படியெல்லாம் செய்வதை நீங்கள் அறியாதவராய் இருக்கிறீர்கள். காட்சியில் சொல்லப்பட்டது முற்றிலும் நடைமுறையில் காணகிடைப்பதுதான். அதி மிகையாக சொல்லப்பட்டது அல்ல.
    3.வேலுவி நண்பன் பெயர் வேலுசாமி அல்ல சின்னசாமி.

    எப்படியோ இந்த அளவி தங்களின் கருத்து கவர்கிறது நன்றி.

    ReplyDelete
  30. நல்ல விரிவான விமர்சனம்! நன்று!

    ReplyDelete
  31. நல்ல விரிவான விமர்சனம்,..

    ReplyDelete
  32. வழக்கு எண் பற்றிய வழக்கறிஞரின் விமர்சனம் அருமை. எதார்த்த வாழ்வையொட்டி அமைந்த படம் என்பது பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
  33. ரகு: சல்மான் கான் வைத்து நீங்கள் சொன்ன உதாரணம் மிக சரி நன்றி

    ReplyDelete
  34. விரிவான கருத்துக்கு மிக நன்றி கருணாகரசு. படம் உங்களை வெகுவாக கவர்ந்ததை உணர முடிகிறது

    ReplyDelete
  35. அமைதி சாரல்: மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  36. நன்றி ராமலட்சுமி நீங்கள் தியேட்டர் சென்று பார்க்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். சில மாதங்களில் டிவியில் போடும்போது அவசியம் பாருங்கள்

    ReplyDelete
  37. வழக்கு எண் :18/9 படத்தை பாராட்டி எழுதிய எல்லா பத்திரிகை நண்பர்களுக்கும் , மீடியா நண்பர்களுக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி . - லிங்குசாமி

    ReplyDelete
  38. நல்ல விமர்சனம் மோகன். பார்க்க வேண்டும்...... நிறைய பேர் இந்தப் படத்தைப் பற்றிச் சொன்னார்கள் எனது தமிழக வருகையின் போது. அங்கே பார்க்க முடியவில்லை. :(

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...