Sunday, July 8, 2012

பல் டாக்டரிடம் - சில Dos & Dont's

மீபத்தில் பல் டாக்டரிடம் சென்று பல் பிடுங்க நேரிட்டது. பல் எடுக்கும் போது செய்ய வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நண்பர்களுக்கு பகிர்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

முதலில் இருந்து துவங்குவோமா?

உங்களுக்கு பல்லில் மிக அதிக வலி என்றால், டாக்டர் பல்லை முதலில் பார்த்து விட்டு, அது எந்த நிலையில் உள்ளது என தெரிய எக்ஸ் ரே எடுக்கிறார். பல் டாக்டரே இப்போது இதற்கான மெஷின் வைத்திருக்கார். எடுத்த சில நிமிடங்களில் எக்ஸ்ரே பார்த்து விட்டு Filling போதுமா அல்லது பல் எடுக்க வேண்டுமா என தெரிவிப்பார்.

கையில் பணம் + வலி தாங்கும் மனதுடன் தயாராய் இருந்தால் அன்றே எடுத்து கொள்ளலாம். அல்லது இன்னொரு நாள் வரலாம். நான் "எதற்கு இன்னொரு முறை அலையணும்?" என உடனே எடுத் து கொண்டேன் . வலி அடுத்த சில நாள் பின்னி விட்டது. பாதி உடைந்த பல் என்றாலும் மீதம் செம ஸ்ட்ராங்கா இருந்ததால் எடுக்க செம சிரமம் ஆக இருந்தது. ஆடும் பல் எனில் எடுப்பது சற்று ஈசி.

சரி மீண்டும் பல் எடுக்கும் மற்ற ஸ்டெப்களுக்கு வருவோம்.

பல் பிடுங்கும் முன் முதலில் டாக்டர் நமது வாய்க்குள் ஊசி போடுவார். கையில் போட்டாலே பொறுப்பது கஷ்டம் வாய்க்குள்ளா என பயப்பட வேண்டாம். ஊசியை நமது ஈறில் (gums) முதலில் குத்தும் அந்த நொடி மட்டும் தான் வலி தெரியும். அடுத்த நொடி வாய் மரத்து போக ஆரம்பித்து, ஊசி வலி தெரியாது. ஊசி போடுவதே மரத்து போகத்தானே !

அடுத்து தான் முக்கிய கட்டம். நமது பல் பிடுங்கும் துவக்க பணிகளில் மருத்துவர் இறங்குவார்.

கட்டிடடத்தை உடைக்கும் முறை தான். மெதுவாய் தட்டி தட்டி, ஆட்டி கொஞ்சம் கொஞ்சமாய் பிடுங்குவார். அநேகமாய் பல் கொஞ்சம் கொஞ்சமாய் உடைந்து வரும். கடைசி நிலையில் பல்லை வேரோடு பிடுங்கி விடுவார். இப்படி வேரோடு பிடுங்குவது ரொம்ப முக்கியம். மீதம் பல் உள்ளே இருந்தால் அது மிக கெடுதலை விளைவிக்கும்

பல் எடுக்க குறைந்தது அரை மணி முதல் ஒரு மணி வரை ஆகும் .

பல் பிடுங்கும் போது கிடுக்கி, சிறிய சுத்தியல் போன்ற சமாசாரங்களை டாக்டர்கள் உபயோகிப்பார்கள். பல் எடுத்த இடத்தை விடுங்கள். இந்த கிடுக்கி போன்றவை மற்ற இடத்தில் அழுத்தி அதனால் வரும் வலி தான் முடிந்த பிறகு பெரிதாய் தெரியும் !

இனி பல் எடுக்கும் போது செய்ய வேண்டியது மற்றும் செய்ய கூடாதது :

உங்களுக்கு சர்க்கரை நோய், இதய நோய், ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகள் இருக்கிறதா என்று பார்த்து விட்டு தான் பல்லை எடுக்க வேண்டும். மருத்துவர் ஒருவேளை கேட்கா விட்டாலும், உங்களுக்கு ஏதேனும் உடல் தொந்தரவு இருந்தால் பல் எடுக்கும் முன் அவரிடம் சொல்லி விடுங்கள்.

பல் எடுக்கவே ஒரு மணி நேரம் ஆகும். அதன் பின் ஒரு மணி நேரம் தண்ணீர் உட்பட எதுவும் சாப்பிட கூடாது. எனவே தண்ணீர் குடித்து விட்டு, முடிந்தால் சாப்பிட்டும் விட்டு சென்று விடுவது நல்லது

டாக்டர் பல முறை நமக்கு instructions தருவார்: நம்மை நிமிர சொல்வார், பின் குனிய சொல்வார். வாயை நன்கு பெருசா திறங்க; சின்னதா திறங்க என்றெல்லாம் மாற்றி மாற்றி சொல்வார். இவை அனைத்தும் அவர் சொல்கிற படி செய்வது முக்கியம். மேலும் பல்லை ஆட்டும் போதும், பிடுங்கும் போதும் வலி இருந்தால் கூட ஆடி விடக்கூடாது. ஆடினால் அருகில் இருக்கும் பல்லும் பாதிக்க பட சான்ஸ் உண்டு.

பயத்தில் நீங்கள் உடலை ஆட்டினால், நீங்கள் அப்படி செய்யாமல் இருக்கும் வரை மருத்துவர் தன வேலையை நிறுத்தி விடுவார். எனவே வலியைப் பொறுத்து கொண்டு ஆடாமல் இருப்பது அவசியம்.

பல் எடுத்து முடித்ததும் டாக்டர் அந்த இடத்தில் பஞ்சு வைத்து விடுவார். இதனை அடுத்த ஒரு மணி நேரம் கழித்து தான் எடுக்க வேண்டும். அதன் பிறகு தான் எந்த திரவமோ உணவோ சாப்பிடலாம்.

பல் எடுத்த பின் வலி இருக்க தான் செய்யும். அந்த இடத்தில லேசாக ரத்தம் வெளியாகும். இதனை துப்ப கூடாது. வேண்டுமானால் விழுங்கி கொள்ளுங்கள் என்கிறார் மருத்துவர். இதன் காரணம் பல் எடுத்த பின் அடிக்கடி எச்சில் துப்பினால் அந்த இடம் சீக்கிரம் ஆறாதாம்.

அடுத்த இரு நாளுக்கு திரவ உணவு சாப்பிட வேண்டும். குறிப்பாக சப்பாத்தி போன்ற நன்கு மென்று தின்னும் உணவு அடுத்த இரு நாளுக்கு சாப்பிட கூடாது. பல் எடுத்த அன்று இரவு கஞ்சி போல் குடித்தால் நலம். மறு நாள் ரசம் சாதம், தயிர் சாதம் போன்ற உணவு சாப்பிடலாம் .

மயக்கம் ஏதும் வர சற்று வாய்ப்பு உண்டு என்பதால் உடன் யாரைவாது அழைத்து செல்வது நல்லது. (உங்களுக்கு நடப்பதை பார்த்து அவருக்கு மயக்கம் வராமல் இருந்தால் சரி. மனைவி எனில் ரொம்ப பயந்து போய் தான் அமர்ந்திருப்பார். அன்னிக்கு வீட்டுக்கு வந்ததும் திட்டாமல் உங்களை அன்பாய் நடத்துவார் !)

பல் பிடுங்கிய பின் infection ஆகாமல் இருக்க ஆண்டிபயாட்டிக் மாத்திரை மருத்துவர் தருவார். சிலருக்கு பல் எடுத்ததும் ஜூரம் கூட வந்து விடும் (எனக்கும் இம்முறை வந்தது). டாக்டர் தந்த மாத்திரை சாப்பிட்டதால் பின் ஜூரம் சரியானது. ஜூரம், வலி இல்லா விட்டாலும் கூட ஆண்டிபயாட்டிக் மாத்திரை டாக்டர் எழுதி தந்த அளவு சாப்பிட்டு விட்டு தான் நிறுத்த வேண்டும்.

பல் எடுத்த அடுத்த இரு நாள் மிக குளிராய் அல்லது மிக சூடாய் எந்த உணவும் சாப்பிட கூடாது. இது பல் எடுத்த இடத்தை பாதிக்கும்.

பல் எடுத்து விட்டு புதிதாய் கட்டுகிறார்கள் எனில் ஏற்கனவே பல் எடுத்த இடம் நன்கு ஆறி வந்து விட்டதா என பார்த்து விட்டு தான் செய்ய வேண்டும். நன்கு ஆறாமல் செய்தால், பின் நிறைய வலி கொடுக்கும், மேலும் அந்த பல்லும் விழுந்து விட வாய்ப்புண்டு !

***
மொத்தத்தில் : பல் எடுக்கிற நிலை வராத மாதிரி பற்களை நன்கு பராமரியுங்கள் நண்பர்களே ! நமது பற்கள் குறிப்பிட்ட வரிசையில், ஒரு ஒழுங்கான அமைப்பில் உள்ளன. முடிந்தவரை அவற்றை சரி செய்து அப்படியே வைத்து, பாது காப்பது நல்லது. பல் பிடுங்குவது என்பதும் வேறு பல் கட்டுவதும் வேறு வழி இல்லை எனும் பட்சத்தில் தான் இருக்க வேண்டும் !

***
அதீதம் ஜூலை 1 இதழில் வெளியானது
****

52 comments:

 1. நல்ல பதிவு.

  வருசத்துக்கு ஒருமுறை டெண்ட்டல் செக்கப் செஞ்சுக்கணும். ஆனா.... நம்மூரில் பல்வலி வந்தாலன்றி டெண்ட்டல் விஸிட் யாரும் போறதில்லை:(

  இன்னொன்னும் சொல்லிக்கறேன்..... சமீபத்திய இந்திய வாழ்க்கையில் அப்பல்லோ கிளினிக் போயிட்டு.... ரொம்பக் கஷ்டமாப்போச்சு.

  சரியான மருத்துவம் இல்லை:( கடைசியில் ஒரு ஸ்பெஷலிஸ்ட்டைப் பார்க்கும்படியா ஆச்சு.

  இதுலே ஆறுதல் என்னன்னா... சென்னையில் அப்பல்லோ க்ளினிக் போனபோது ஒன்னும் பிரச்சனை இல்லை. சண்டிகர் கிளையில்தான் பிரச்சனை:(

  சென்னைக்காரர்கள் சந்தோஷப்பட்டுக்கலாம்:-)

  நேரம் இருந்தால் இதைப் பாருங்க.

  http://thulasidhalam.blogspot.co.nz/2005/09/blog-post_06.html

  ReplyDelete
 2. நல்லதொரு பகிர்வு.எனக்கு இப்போதைக்கு மிகவும் அவசியமான பதிவு.நன்றி மோகன் குமார் சார்.

  ReplyDelete
 3. வலி தாங்கும் மனதுடன் //வலி அடுத்த சில நாள் பின்னி விட்டது//கையில் போட்டாலே பொறுப்பது கஷ்டம் // வலி தான் முடிந்த பிறகு பெரிதாய் தெரியும் !//பல்லை ஆட்டும் போதும், பிடுங்கும் போதும் வலி இருந்தால் கூட ஆடி விடக்கூடாது. ஆடினால் அருகில் இருக்கும் பல்லும் பாதிக்க பட சான்ஸ் உண்டு.//(உங்களுக்கு நடப்பதை பார்த்து அவருக்கு மயக்கம் வராமல் இருந்தால் சரி. //yappappaa...

  ReplyDelete
 4. எல்லோருக்கும் தேவையான, உபயோகமான பதிவு இது.

  உங்கள் அனுபவம் பொதுவானது என்றாலும், ஒவ்வொரு பல் டாக்டரும் ஒவ்வொரு முறையை தமிழ்நாட்டில் கடைபிடிக்கிறார்கள். பொதுவாய், தமிழ்நாட்டில் பற்களை சுத்தம் செய்தாலோ, பற்களை எடுக்கவோ, ஃபில்லிங் செய்ய நேரிட்டாலோ, ஆண்டி பயாடிக் மருந்துகள் தருகிறார்கள். இலேசான அல்சர் அல்லது அசிடிடி இருப்பவர்களுக்கு இது கடுமையாக பாதிக்கிறது. கடுமையான வயிற்று வலியால் துடித்து விடுவார்கள். [எனக்கும் இந்த வலியான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது] எனவே, ஆன்டி பயாடிக் மருந்துகள் பற்றி மருத்துவரிடம் சந்தேக்ம் தீர கேட்டறிவது நல்லது.

  ReplyDelete
 5. மிகவும் பயனுள்ள கட்டுரை.
  பாராட்டுக்கள்.
  வாழ்த்துகள்.

  ==========================

  பல்லினாலும், அதற்கான சிகிச்சைகளாலும் படாத பாடுபட்ட பஞ்சாமி என்பவரின் கதையை நான் நகைச்சுவையாக என் பதிவினில் எழுதியிருந்தேன்.

  தலைப்பு:

  “பல்லெல்லம் பஞ்சாமியின்
  பல் ஆகுமா?”

  இணைப்பு:

  http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_07.html

  http://gopu1949.blogspot.in/2011/08/2-of-2.html

  நேரம் இருந்தால் படித்துவிட்டு கருத்துக்கூறுங்கள்.

  அன்புடன்
  vgk

  ReplyDelete
 6. பல்வலி அவஸ்தை. பலருக்கும் பலவித அனுபவம். அவசியமான பதிவு. மொத்தத்தில்.. சொல்லப்பட்டவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

  ReplyDelete
 7. தேவையான பகிர்வு. துளசி டீச்சர் சொன்னது போல வருடத்திற்கு ஒரு முறையாவது ”பல்”லரிடம் சென்று வருவது நல்லது!

  தமிழ்மணம் தொடர்ந்து முதலிடம் - வாழ்த்துகள் மோகன்.

  ReplyDelete
 8. எல்லாருக்கும் உபயோகமான பயனுள்ள பதிவு. காமெடியாக சுவாரஸ்யமாக இருந்ததது.

  இரண்டு வாரத்திற்கு முன்பு தான் பல் டாக்டரிடம் சென்றேன். கொஞ்சம் க்ளீனிங் செய்து விட்டு ரெண்டு ஃபில்லிங் செய்யவேண்டி இருக்குன்னு சொல்லிட்டார். பல் புடுங்குவதை விட ரொம்ப வலிக்குமோன்னு போக பயமா இருக்கு. அது பற்றியும் எழுதுங்களேன்.

  ReplyDelete
 9. பயனுள்ள பதிவு பாராட்டுக்கள் மோகன்.

  ReplyDelete
 10. Vaayunul aayuthangalai vittu, thatti thatti, 'Inge valikkutha?' enra kettu, thalaiyai aattinal ethenum kuththi vidumo enru bayandha anupavam undaa?!!

  ReplyDelete
 11. ம்ம்ம்ம் இதையும் தெரிந்து கொள்ள தாங்கள் பதிவு இட்டமைக்கு நன்றி மக்கா....!

  ReplyDelete
 12. அனுபவத்தை பகிர்ந்து எங்களை எச்சரித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
 13. மிக நல்ல அருமையான தேவையான பதிவு! நன்றி!

  ReplyDelete
 14. //உங்களுக்கு நடப்பதை பார்த்து அவருக்கு மயக்கம் வராமல் இருந்தால் சரி. மனைவி எனில் ரொம்ப பயந்து போய் தான் அமர்ந்திருப்பார். அன்னிக்கு வீட்டுக்கு வந்ததும் திட்டாமல் உங்களை அன்பாய் நடத்துவார்//

  வாழ்க்கையில் முப்பத்திரண்டு நாட்கள் திட்டு வாங்காமல் இருக்க யோசனை சொல்லியமைக்கு நன்றி!

  ***************

  //பல் எடுக்கிற நிலை வராத மாதிரி பற்களை நன்கு பராமரியுங்கள் நண்பர்களே!//

  சரியாச் சொன்னீங்க!

  ReplyDelete
 15. பயனுள்ள அருமையான பதிவு
  பதிவுக்கு மனமார்ந்த நன்றி
  தொடர்ந்து முதலிடத்தில் தொடர்வது
  மகிழ்ச்சியளிக்கிறது
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. Anonymous7:52:00 PM

  பல் டாக்டரிடம் சென்ற என் நண்பர் வாயைச் சிறிது பெரிதாகவே திறந்து விட்டார் போலும்.

  டாக்டர் "கூல் நான் வெளியில் இருந்து தான் கிளீன் செய்யப் போகிறேன்" என்றாரே பார்க்கலாம் :-)

  ReplyDelete
 18. துளசி மேடம் : அப்பல்லோ குறித்து சமீபமாய் நீங்கள் சொல்வது போலவும், இன்னும் மோசமாகவும் நிறைய காதில் விழுகிறது :(

  உங்கள் பதிவை அவசியம் வாசிக்கிறேன் ;

  ReplyDelete
 19. ஸாதிகா மேடம்: ரொம்ப பயமுறுத்தி விட்டேனோ? பயப்படாதீங்க. பல்வலி பிரச்சனை சீக்கிரம் பார்ப்பது நல்லது. அந்த குறிப்பிட்ட நேரம் மட்டும் தான் பிரச்சனை மற்றபடி நினைத்து நினைத்து பயப்பட தேவையில்லை

  ReplyDelete
 20. மனோ சாமிநாதன் மேடம்
  //ஆன்டி பயாடிக் மருந்துகள் பற்றி மருத்துவரிடம் சந்தேக்ம் தீர கேட்டறிவது நல்லது. //

  உண்மை. இவை சாப்பிட்டால் பொதுவாய் வயிற்று வலி வரும் எனில் டாக்டரிடம் சொன்னால் Zinetac போன்ற மாத்திரை தருவார். இதனால வயிற்று வலி ( Acidity ) வராது

  ReplyDelete
 21. வை. கோபால கிருஷ்ணன் ஐயா: தங்கள் வருகைக்கு நன்றி வாசிக்கிறேன்

  ReplyDelete
 22. நன்றி ராமலட்சுமி மேடம் அதீதத்தில் பிரசுரித்தமைக்கும்

  ReplyDelete
 23. ஹாலிவுட் ரசிகன்: கருத்துக்கும் தமிழ் மணத்தில் வாக்களிதமைக்கும் மிக நன்றி.

  Filling- மிக எளிதான வேலை தான். சற்று கூச மட்டும் தான் செய்யும். பல் பிடுங்குவது போல வலிக்காது சீக்கிரம் பில்லிங் செய்து விடுங்கள், மிக ஓட்டை ஆனால் பின் பல் எடுக்கிற மாதிரி ஆகிடும். என்ன ஒன்று பில்லிங் சில பல மாதங்கள் தான் தாங்கும் மீண்டும் பில்லிங் செய்யணும். இருப்பினும் நமது பல்லை பிடுங்காமல் பில்லிங் மூலம் இருக்கிற பல்லை முடிந்த வரை காப்பாற்றுவது நல்லதே

  ReplyDelete
 24. நன்றி சரவணன்

  ReplyDelete
 25. மாதவி மேடம்: பல் பிடுங்கும் போது தான் அந்த பயம் இருந்தது அதனால் ஒழுங்காய் ஒத்துழைத்தேன் !

  ReplyDelete
 26. நன்றி வரலாற்று சுவடுகள்

  ReplyDelete
 27. நன்றி சுரேஷ்

  ReplyDelete
 28. அமைதி அப்பா : நன்றி

  ReplyDelete
 29. ரமணி சார்: சென்னை வந்துள்ளீர்கள் என அறிகிறேன். சந்திப்போம் !

  ReplyDelete
 30. பால ஹனுமான்: சீரியஸ் காமன்டுகளுக்கு இடையே உங்கள் நகைச்சுவை கமன்ட் ரசிக்க வைத்தது

  ReplyDelete
 31. I AM (ALSO??) ONE OF THE REGULAR CUSTOMER OF DENTAL DOCTORS

  :-(

  ReplyDelete
 32. அருமையான, பய்னுள்ள பதிவு.
  நான் இப்போது தான் பயந்து, பயந்து போய்க் கொண்டிருக்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete
 33. பல் வலியால் பலமுறை அவதிப் பட்டிருக்கிறேன். பல் டாக்டரிடம் ஆண்டுக்கு ஒருமுறையாவது பற்களை பரிசோதிக்கவேண்டும் என்று நினைப்பதுண்டு.சோம்பல் காரணமாக அவ்வாறு செய்ய முடிவதில்லை.
  பெரும்பாலும் எல்லோருக்கும் பயன்படும் பதிவு என்பதில் ஐயமில்லை.

  ReplyDelete
 34. //
  இனி பல் எடுக்கும் போது செய்ய வேண்டியது மற்றும் செய்ய கூடாதது :
  //

  டாக்டரிடம் செல்லும் முன் பல் துலக்குவது. முக்கியமாக வெங்காயப் பச்சடியுடன் பிரியாணி சாப்பிடாமல் செல்வது.

  ReplyDelete
 35. பல் பத்தின தகவல்களுக்கு நன்றி...நானும் என் பல் பிடுங்கினது பத்தி எழுதி இருக்கேன்...http://www.kovaineram.com/2012/03/blog-post_19.html

  ReplyDelete
 36. ஆண்களை விட பெண்களுக்குத்தான் பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிக என நினைக்கிறேன் என் 26 ஆவது வயதில் முதல் அபார்ஷனுக்குப்பின் சரியாக கவனிக்காததன் விளைவு விழுப்புரம் Dr.ராஜ்குமாரிடம் தொடர்ந்து 6மாதங்கள் சிகிச்சை எடுத்து 2பற்களை இழந்து மற்ற பற்களை காப்பாற்றினேன். நீங்க சொன்னது போன்ற எந்த பயமும் வலியும் அனுபவித்த் நினைவில்லை தாங்கிக்கொள்ள முடிந்த வலிதான்.23 வருடங்களுக்கு முன் அவர் வயதில் குறைந்தவராக இருப்பினும் ஒரு கைதேர்ந்த அனுபவத்துடன் அருமையாக சிகிட்சை அளித்தார்.

  ReplyDelete
 37. கீழ் பல்லில் வலி என்றால் அது கழுத்து நரம்புகளில் தெரியும். மேல் பற்களில் குறிப்பாக கடைவாய் பல் என்றால் அது நெற்றிப் பொட்டு நரம்பில் தெரியும்.
  ’பற்பல’ வலிகளையும் விடக் கொடுமையானது ’பல்’ வலியே.

  சென்னையில் சிறுவயதில் பல் பிடுங்கிய பொழுது ஒரு பிரச்சனையும் இல்லை. அது கீழ் பல்.

  ஆனால், தில்லியில், மேல் பல்லை எடுக்கும் பொழுது அதன் வேர் அங்கேயேத் தங்கிவிட அடுத்த இரண்டுநாட்களுக்கு அதன் வலி நேராக தலைக்கு மேலே ’விண்’ என்று தெரிக்க எனக்கும் சரி டாக்டருக்கும் சரி என்ன செய்வது என்றேத் தெரியவில்லை.

  கடைசியில், ஆனது ஆகட்டும் என்று முரட்டு வைத்தியமாக நானே என் கையால் அந்த வேர் நுனியைப் பற்றி இழுத்து வெளியேற்றிய பின் சரியாகிவிட்டது.

  ஆக, மருத்துவரின் திற்மை தான் இதில் முக்கியம்.

  ReplyDelete
 38. This comment has been removed by the author.

  ReplyDelete
 39. Anonymous8:27:00 PM

  பல் டாக்டரா விடு ஜூட்...

  க்ளவ் போடாம நாலஞ்சு பேர் வாயுக்குள்ள கைய விடுற தூத்துக்குடி பல் டாக்டர் **** இப்பவும் கனவுல வந்து பயம் காட்டுறார் மோகன்...

  ReplyDelete
 40. டிப்ஸ்லாம் அருமை. எனக்கென்னமோ பல் டாக்டர பாத்தா பயம்மா இருக்கு...!

  ReplyDelete
 41. ஷர்புதீன்: என்ன இப்படி சொல்லிட்டீங்க :((

  ReplyDelete
 42. நன்றி ரத்னவேல் ஐயா

  ReplyDelete
 43. இந்தியன்: காமெடியா சொன்னாலும் நீங்கள் சொல்வது உண்மை தான்

  ReplyDelete
 44. உமா said

  //23 வருடங்களுக்கு முன் அவர் வயதில் குறைந்தவராக இருப்பினும் ஒரு கைதேர்ந்த அனுபவத்துடன் அருமையாக சிகிட்சை அளித்தார்.//

  ஆம். நாங்களும் சில இளம் வயதிலேயே நன்கு சிகிச்சை தரும் டாக்டர்களை சந்திக்கிறோம்

  ReplyDelete
 45. வெங்கட ஸ்ரீநிவாசன் : உங்கள் அனுபவம் பயங்கரமா இருக்கு ! அடேங்கப்பா !

  ReplyDelete
 46. நன்றி ரெவரி ; க்ளவ்ஸ் போடாம வாய்க்குள் கை விடுவாரா? என்னென்ன நடக்குது !!

  ReplyDelete
 47. துரை டேனியல் சார்: நீண்ட நாள் கழித்து தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 48. பல் பிடுங்கிய பின்னர் ஐந்து நாட்கள் முடிந்துவிட்டது தலை வலி மற்றும் பல் வலி உள்ளது என்ன செய்வது.

  ReplyDelete
 49. This comment has been removed by the author.

  ReplyDelete
 50. தயவுசெய்து சிறிய பல் பிரச்சினையானாலும் ஆரம்பத்திலேயே வைத்தியரிடம் காட்டி சரி செய்து கொள்ளுங்கள்.பல்லை அகற்றும் நிலை வரும் வரை காத்திருக்க வேண்டாம்.ஏன் என்றால் அது மிகுந்த வலியை தர கூடியது.நான் இன்று காலை பல்லை அகற்றிய பின்னர் இந்த பதிவை இப்போது வாசிக்கிறேன்.இதே அனுபவம் தான் எனக்கும்.from srilanka.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...