Friday, October 26, 2012

மடிப்பாக்கம்-பகலில் கொலை-கொள்ளை- அதிர்ச்சியில் வியாபாரிகள்

நாங்கள் குடியிருக்கும் மடிப்பாக்கத்தில், பட்டப்பகலில் நகைக்கடையில் கொள்ளை நிகழ்ந்ததாக இணையத்தில் நேற்று மாலை தகவல் வந்தது. வீட்டுக்கு சென்றதும் தொலை காட்சியிலும் செய்தி காண முடிந்தது. மேலும் இதில் கடையிலிருந்த இளைஞர் மரணம் என்றும் தெரிய வந்தது.


இது குறித்த பத்திரிகை செய்தியை இங்கு வாசிக்கலாம்.

இன்று காலை அலுவலகத்துக்கு சதாசிவம் நகர் வழியே செல்லும் போது ஒரு இடத்தில் ஏகமாய் கூட்டமும் போலிஸ் ஜீப்பும் நிற்க, நமது நிருபர் புத்தி விழித்து, வண்டியை நிறுத்தி விட்டு கூட்டத்தில் சென்று ஐக்கியமானேன்.

தோளில் துண்டுடன் இருக்கிறார் கடை ஓனர்

 நேற்று கொலை/ கொள்ளை நடந்த பாலாஜி பேங்கர்ஸ் & ஜுவல்லர்ஸ் என்கிற கடைக்கு வெளியில் தான் நூற்று கணக்கான வியாபாரிகள் நின்று கொண்டிருந்தனர். அந்த ஏரியாவின் அனைத்து கடைகளும் மூட பட்டிருந்தன. பேசி கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் ஹிந்தியில் பேசி கொண்டதால் அவர்கள் அடகு கடை வைத்திருக்கும் மார்வாடிகள் என ஊகிக்க முடிந்தது. ஒரு சில தமிழ் வியாபாரிகளும் இருக்கவே செய்தனர்.

இந்த கடை மடிப்பாக்கத்தின் முக்கிய பகுதியில் உள்ளது. ஐம்பது மீட்டரில் சதாசிவம் நகர் பேருந்து நிறுத்தம் ! அங்கு எந்நேரமும் பத்துக்கும் மேற்பட்டோர் பேருந்துக்கு காத்திருப்பர் . கடைக்கு நேர் எதிரில் எப்போதும் கூட்டமாக இருக்கும் பெரிய டாஸ் மார்க் கடை. இந்த அடகு கடைக்கு வலப்பக்கம் ஒரு சிராக்ஸ் கடை, இடப்பக்கம் எலக்டிரிக்கல் கடை மிக மிக அருகில் உள்ளன.

மிக அருகில் கடைகள் 

நேற்று மாலை நான்கு மணிக்கு கடையில் வேலை செய்யும் மதன்சிங் என்கிற பையன் ( 16 வயது ) தனியாக இருந்துள்ளான். முதலாளி மோகன்லால் வெளியில் சென்றுள்ளார். அந்த நேரம் வந்த கொள்ளை கும்பல் மதன்சிங்கை லாக்கர் ரூமுக்கு இழுத்து சென்று அவனை கொன்று விட்டு அங்கிருந்து மூன்று கிலோ நகைகளை கொள்ளை அடித்து விட்டு சென்று விட்டது.

எப்படி ஒரு கடை வீதியில் பகலில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்று பலருக்கும் புதிராய் உள்ளது. "ரெண்டு மூணு பேரா வந்திருக்கணும். சத்தம் கேட்காமல் வாயை பொத்திருப்பாங்க; அதான் பக்கத்து கடையில் கூட பையனின் சத்தம் கேட்கலை" என அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்.


ஒரு ஓரமாக கடை ஓனர் மோகன்லால் தோள் மீது ஒரு துண்டு போட்டபடி மிக சோகமாய் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த இரு பெண்கள் அவரிடம் பேசினார்கள்." ஐயா பையன் இப்படி போயிட்டானே !" என்று அந்த பெண்மணிகள் பேசவும் மோகன்லால் சேட் அழ ஆரம்பித்து விட்டார். நிற்க முடியாமல் கடை படிக்கட்டில் போய் அமர்ந்து கொண்டு துண்டால் முகத்தை மூடி கொண்டு குலுங்க, அந்த பெண்மணிகளும் அழுது கொண்டிருந்தனர்.

ஒருவர் அந்த பெண்களிடம் " நகை ஏதும் அடகு வச்சிருக்கீங்களா?" என கேட்க " ஆமா வச்சிருக்கோம். அது போனா போயிட்டு போகுது. பையன் போயிட்டானேப்பா. பச்ச புள்ளை. அவனை கொல்ல எப்படி மனசு வந்துச்சோ. நேத்து டிவியிலே பாத்ததுலே இருந்தது மனசே சரியில்லை. பாவம்யா அந்த புள்ளை !" 

அவர்கள் மட்டுமல்ல அங்கு நின்ற அனைவருமே அந்த பையன் இறப்புக்கு தான் மிக அதிகம் வருந்தினர். போலிஸ் யாரு செஞ்சதுன்னு கண்டுபிடிச்சா நகை திரும்ப கிடைக்கும். ஆனா பையன் கிடைப்பானா? " என்பதே பலரின் வருத்தமாய் இருந்தது. மேலும் இந்த விஷயத்தில் அரசிடமிருந்து சரியான அறிவிப்பு வராவிடில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் இறங்க வேண்டியது தான் என்றும், எப்போது வரை இதற்கு காத்திருப்பது என்றுமே அங்கு பேச்சாக இருந்தது

சற்று நேரத்தில் கருப்பு துணி (ரிப்பன் போல) கொண்டு வரப்பட, அதை நறுக்கி அனைவரும் கருப்பு ரிப்பன் சட்டையில் குத்தி கொள்ள துவங்கினர்.எனக்கும் ஒன்று தரப்பட, நானும் குத்தி கொண்டேன்

நின்று கொண்டிருந்த வியாபாரிகள் பலரும் பயத்தில் சற்று உறைந்து தான் போயிருந்தனர். ஒவ்வொருவரும் இந்நிலை தனக்கு வந்தால் என்ன ஆவது என்று உள்ளூர பயம் இருக்க கூடும் !

"CCTV காமிரா இருந்திருக்கு. ஆனா அதை கழட்டி எல்லாத்தையும் எடுத்து போயிட்டாங்க. அதனால யாரு செஞ்சதுன்னு தெரியலை எவ்ளோ பிளான் பண்ணி செஞ்சிருக்காங்க பாருங்க " என பேசி கொண்டனர்.

எதிரில் டாஸ்மார்க் வாசலில் போலிஸ் ஜீப் நின்று கொண்டிருந்தது. நான்கைந்து போலீசார் அதில் இருந்தனர்இறந்த பையனின் பெற்றோருக்கு ராஜஸ்தானுக்கு தகவல் தரப்பட அவர்கள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். போஸ்ட்மார்டம் ஆன பின் உடல் ஒப்படைக்க படும்.

உண்மையில் இந்த விஷயத்தில் அரசு முன்னெச்சரிக்கையாய் என்ன செய்திருக்க முடியும் என தெரியவில்லை. இணையத்தில் இந்த சம்பவம் குறித்த செய்திகளை படிக்கும் போது ஒன்று புரிகிறது. இது போல் பல சம்பவங்கள் சென்னையில் ஆங்காங்கு நடந்துள்ளது. இதன் பின் இருக்கும் குழு பிடிக்கப்பட்டால் இத்தகைய கொடூரங்கள் குறைய கூடும் !

நூற்றுகணக்கான முறை இதே ரோடில் பயணம் செய்தும் கூட இக்கடையை ஏறிட்டும் பார்க்காத என்னை போன்றோர் இனி இந்த வழியே போகும் போது இந்த கடையை ஒரு முறை பார்த்து விட்டு , அந்த சிறுவனுக்காக ஒரு பெருமூச்சுடன் கடக்க கூடும்.

35 comments:

 1. நிஜமாகவே அந்த பையனின் பெற்றோர் பாவம்.16 வயதில் மகனை இழக்க வேண்டும் என்றால். அந்த பையனுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் சத்தமே இல்லாமல் இந்த காரியத்தை செய்திருக்கலாம் .

  ReplyDelete
  Replies
  1. // அந்த பையனுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் சத்தமே இல்லாமல் இந்த காரியத்தை செய்திருக்கலாம் .//

   அப்படி தோனலைங்க . பணத்துக்காக/ நகைக்காக நடந்த கொலை - அவன் ஆளை காட்டி கொடுக்க கூடாது என கொன்றிருக்க கூடும்

   Delete
 2. கொடுமை...

  பாவம் அந்தப் பையன்...

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் தனபாலன்

   Delete
 3. என்னோட எதிரிக்கும் இந்த நிலை வரக்கூடாது..............

  ReplyDelete
 4. தனி மனிதனுக்கு உணவினில் ஜகத்தினை அழித்துடுவோம்! - பாரதி!
  இந்தியாவிற்கு அழிவு இப்படித்தான்!
  Digital Divide - எல்லோருக்கும் எல்லாம் வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. //எல்லோருக்கும் எல்லாம் வேண்டும்!//

   ம்ம் நடக்கிற விஷயமா அது.. அதுவும் இந்தியாவில் ?

   Delete
 5. இதைவிடக் கொடுமை வேறில்லை! பாவமந்த பையன்! இப்படிச் செய்தவர்கள் உருப்படவே மாட்டார்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா வணக்கம். மிக வருத்தமாக தான் உள்ளது. மாலை அந்த கடை அருகே பையனின் படம் போட்ட அஞ்சலி போஸ்டர் துணியாக கட்டப்பட்டிருந்தது. முதல் நாள் உயிருடன் இருந்த சிறுவன் இப்படி ஆவான் என்றும், தன் கடை பூட்டப்பட்டு இப்படி ஒரு அஞ்சலி போஸ்டர் கடை வாசலில் ஒட்டப்படும் என்றும் அந்த கடைக்காரரும் நினைத்திருக்க மாட்டார்

   Delete
 6. கொடுமை. என்னோட எதிரிக்கும் இந்த நிலை வரக்கூடாது.

  ReplyDelete
  Replies
  1. முத்து குமார்: ஆம்

   Delete
 7. கொடுமையான விசயம்! விரைவில் இது போன்ற கொள்ளை நடவடிக்கைகளுக்கு அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்

  ReplyDelete
 8. மனித நேயம் மறைந்துகொண்டு இருக்கிறது. இறந்த அந்த மதன் சிங் என்ற இளைஞனின் ஆத்மா சாந்திய அடைய பிரார்த்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துக்கு நன்றி சார்

   Delete
 9. Anonymous5:57:00 PM

  Nice reporting...Hopefully the cops will find the culprits...

  ReplyDelete
 10. பாவம் அந்தப் பையன். இரக்கப்படத்தான் முடிகின்றது.

  எங்கும் கொள்ளையும் கொலையும் தான் மனிதம் செத்துவிட்டது.

  ReplyDelete
 11. அவசரம் அவசரம் ஆம் குறுக்குவழியை தேடிக்கொள்ளும் கூட்டம் அதிகமாகி விட்டது
  தேவை தேவை பணம் தேவை பண்பையே மாற்றி விடுகிறது என்ன செய்ய?

  ReplyDelete
  Replies
  1. கண்ணதாசன்: தங்கள் கருத்துக்கு நன்றி

   Delete
 12. நகை போனாலும் பரவாயில்லை, பையன் உயிர் வருமா என்று கவலைப் பட்ட மக்களின் மனிதம் மனதைத் தொடுகிறது. மிருகங்களின் எண்ணிக்கைக் குறைவுதான். அவை சீக்கிரம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பொது மக்களும் விழிப்பாக இருந்து சந்தேகப் படும் வகையில் யார் இருந்தாலும், எது நடந்தாலும் எதையும் ஆராய வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. //நகை போனாலும் பரவாயில்லை, பையன் உயிர் வருமா என்று கவலைப் பட்ட மக்களின் மனிதம் மனதைத் தொடுகிறது.//

   எனக்கும் அதே தான் அங்கு நிற்கும் போது தோன்றியது

   Delete
 13. அந்த பையனின் நிலை தான் பரிதாபம்....:((

  ReplyDelete
  Replies
  1. ஆம் கோவை டு தில்லி

   Delete
 14. ஒரு செய்தியை நன்கு விளக்கமாக படங்களுடன் பகிர்ந்து இருக்கிறீர்கள். அந்த பையன் செய்த பாவம் என்ன? கொலைகாரர்களைக் கண்டுபிடித்து தூக்கில் போட வேண்டும்.

  கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
  களைகட் டதனோடு நேர்.
  - திருக்குறள் - 550
  டாக்டர் மு.வ உரை: கொடியவர் சிலரைக் கொலைத் தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைக் களைவதற்கு நிகரான செயலாகும்.

  ReplyDelete
  Replies
  1. //அந்த பையன் செய்த பாவம் என்ன? கொலைகாரர்களைக் கண்டுபிடித்து தூக்கில் போட வேண்டும்.//

   இது மாதிரி நேரங்களில் தான் தூக்கு தண்டனை வேண்டும் என தோன்றுகிறது :(

   Delete
 15. பணம் ஒரு மனுஷன எப்படி எல்லாம் மாத்திடுது.. "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டையும் ஒழிக்க முடியாதுன்னு" எவ்ளோ சரியாய் சொல்லிடு போயிருக்காங்க...

  வர வர கொலை கொள்ளை அதிகமாகுதே தவிர குறைவதில்லை தங்கத்தின் விலை போல!!!

  பணத்தோட போயிருந்தாலும் பரவாயில்லை.. உயிரையும் சேர்த்து எடுத்துட்டு போறது தான் மிக கொடுமை...

  ReplyDelete
 16. அந்தப் பையனின் பெற்றோர் பாவம் - 16 வயது மகனை இழப்பது எவ்வளவு பெரிய சோகம்....

  சீக்கிரமே குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் படவேண்டும் - பார்க்கலாம்.

  ReplyDelete
 17. நண்பர்களே, இன்று இந்த கொலை வழக்கு துப்பு துலக்கப்பட்டு விட்டது

  அலி மற்றும் தினேஷ் என்கிற இரு இளைஞர்கள் தான் இதனை செய்துள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். அலியின் வீட்டில் நகைகள் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ரத்த கறை கூட இருந்ததாம் :((

  இவர்கள் இருவரும் அறுபது முறைக்கு மேல் கடைக்கு அடகு வைக்கிற மாதிரி வந்து சென்றனராம். கடை முதலாளிக்கு நன்கு அறிமுகம் ஆனவர்களாம். கஞ்சா பழக்கமும் உண்டு என கூறப்படுகிறது

  விரைந்து நடவடிக்கை எடுத்து கண்டு பிடித்துள்ளது போலிஸ். ஆனால் முன்பே சொன்னது தான்... போன உயிர் போனது தான். அந்த சிறுவனை இழந்து விட்டோம் :(

  ReplyDelete
 18. கொடுமையிலும் மகா கொடுமை இது, பெற்றோருக்கு எப்படி ஆறுதல் சொல்லமுடியும்...!

  ReplyDelete
 19. நமது நாட்டில் சட்டம் அவ்வளவு கடுமையாக இருக்கிறது.மற்ற வெளிநாடுகளை போல் இல்லாமல் .எத்தனை கொலை செய்தாலும் அதிகம் போனால் சில வருடங்கள் சிறை மட்டுமே .இந்த பையனின் விலை மூன்று கிலோ தங்கம் ,அந்த இளைஞனின் பெற்றோருக்காக வருத்தப்படுகிறேன் .

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...