Wednesday, July 24, 2013

வானவில் - ஸ்டேட் பேங்க் புது ரூல் - பதிவர் திருவிழா -Stiff Colar

ஸ்டேட் பேங்க் : இனி இல்லை டெபாசிட் ஸ்லிப், வித் டிராயல் ஸ்லிப் !

ஸ்டேட் பேங்கிற்கு சமீபத்தில் நண்பரின் வங்கி கணக்கிற்கு பணம் கட்ட சென்றிருந்தேன். ATM கார்ட் இருக்கா என்றனர். "கேஷ் கட்ட ஏங்க ATM கார்ட் ?" " இனிமே எல்லாம் அப்டித்தான் " என்று சொல்லி விட்டு அவர்கள் சொன்னது:

" இனி டெபாசிட் ஸ்லிப், வித் டிராயல் ஸ்லிப் போன்றவை கிடையாது. நீங்க கேஷ் கட்டணும் என்றால் கூட ATM கார்ட் எடுத்துட்டு வந்தால் தான் கட்ட முடியும். பணம் எடுக்கணும் என்றாலும் ATM கார்ட் எடுத்துட்டு வரணும் (ATM கார்ட் கையில் இருந்தா - ATM மிஷினில் எடுத்துட மாட்டோமா??)"

சரிங்க ; "என்கிட்டே SBI ATM கார்ட் இல்லை ஆனால் என் அப்பாவுக்கு ஊரில் உங்க பேங்க்கில் மட்டும் தான் அக்கவுன்ட் இருக்கு ; அப்ப என்ன செய்றது " என்றால் " அதுக்கு நீங்க கிரீன் கார்ட்ன்னு ஒண்ணு அப்ளை செய்து வாங்கிக்கணும்; வேற ஒரு அக்கவுன்ட்டுக்கு பணம் அனுப்பணும்னா அதுக்கு தனி கிரீன் கார்ட் வாங்கணும் " என்றதும் தலை சுற்றாத குறை தான் !

ஓரளவு படித்த நமக்கே இப்படி என்றால் - அதிகம் விபரம் இல்லாதவர்கள் எப்படி சமாளிப்பார்கள் என புரியலை !

சென்னையில் பல SBIகளில் இது அமலுக்கு வந்துடுச்சாம். சில SBI ப்ரான்ச்சில் மட்டும் டெபாசிட் ஸ்லிப், வித் டிராயல் ஸ்லிப் வாங்கி வருகிறார்கள் விரைவில் அதுவும் நிறுத்தப்படுமாம் ! இதே முறை மற்ற வங்கிகளுக்கும் வந்துடும் என்றார் அந்த அம்மணி !

முக நூல் கிறுக்கல்கள் 

ஒவ்வொரு மனுஷன் பண்ற தப்புக்கும் தண்டனை தினம் காலையிலேயே கிடைச்சிடுது .....................

இட்லி ! முடியல :(
**************
பெண்டாட்டி பிள்ளை வீட்டில் இல்லை
தடை போட யாரும் இல்லை
பதிவெழுதி கொல்லலாம் மக்களை ...
தில்லானா ..........

## சாட்டர்டே பீலிங்க்ஸ் !
**************
நெய் பொங்கல் சாப்பிட்டும் தூக்கம் வராட்டி - அந்த மனுஷனை தூக்க மாத்திரை கூட தூங்க வைக்க முடியாது ! பீலிங் ஸ்லீப்பி !!
**************
போஸ்டர் கார்னர் 


படித்ததில் பிடித்தது - காலில் புண்ணை விரைவில் ஆற்ற ஒரு புது முறை சிகிச்சை 

சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு காலில் அடிபட்டால் அவ்வளவு சீக்கிரம் ஆறாது இல்லையா? இதனை சரி செய்ய இப்போது புதிதாக ஒரு இயந்திரம்/ முறை வந்துள்ளது அதன் பெயர் ஹைபர்பேரிக் ஆக்சிஜன் தெரப்பி.

நாம் பொதுவாய் சுவாசிக்கும் போது உடலில் 20 % ஆக்சிஜன் தான் உள்ளே செல்கிறது. இது சிவப்பு அணுக்களில் சேர்ந்து உடலில் உள்ள திசுக்களுக்கு அனுப்புகிறது காயம் உள்ள இடத்துக்கு நிறைய ஆக்சிஜன் கிடைத்தால் சீக்கிரம் ஆறும்.

இந்த புது முறையில் - குறிப்பிட்ட இயந்திரம் மூலம் ஆக்சிஜன் தெரப்பி தருகிறார்கள். இந்த இயந்திரத்தின் உள்ளே நோயோளியை அனுப்ப, அவர் நல்ல ஆக்சிஜனை 100 சதவீதம் சுவாசிப்ப்பார். ஆக்சிஜன் இங்கு இரண்டு மடங்கு அழுத்தத்தில் இருக்கும். 100 சதவீத ஆக்சிஜன் நோயாளி உடலில் கலப்பதால் புண் சீக்கிரம் ஆறும். இந்த சிகிச்சை புண்ணின் தன்மையை பொறுத்து ஓரிரு வாரங்கள் எடுத்தால் - புண் ஆறுகிறது என்கிறார்கள்

தற்சமயம் சென்னை ஆயிஷா மருத்துவமனையில் "Serious Wounds Healing Unit " என்ற பிரிவில் இந்த சிகிச்சை கிடைக்கிறது

ஆயிஷா ஹாஸ்பிட்டல் முகவரி:

Address: 91-A, Millers Road, Kilpauk, Chennai, Tamil Nadu 600010
Phone:044 2642 6930

அறிமுகம் - Stiff Color 

நண்பன் தேவா அண்மையில் எங்கள் அலுவலகம் வந்தபோது புது சட்டை அணிந்திருந்தான். "நல்லா இருக்கே; எங்கே வாங்கினே " என்றால் "இணையத்தில் புக் செய்து வாங்கினேன் - விலை 500 ரூபாய் " என்றான். 500 ரூபாய்க்கு அந்த சட்டை செம வொர்த் ! நம்ம ஊர் என்றால் அதே சட்டை 1000 ரூபாயாவது இருக்கும்

விபரங்கள் கேட்ட பின் Stiff Color என்ற அந்த சட்டை லிங்க் தந்தான். வெப்சைட் சென்று பார்த்தால் எல்லாம் 800 ரூபாய், 1000 ரூபாய் என்று தான் இருந்தது. வாரம் ஒரு முறையாவது டிஸ்கவுன்ட் போடுகிறார்கள். அநேகமாய் மதியம் 1 முதல் 4 வரை தான் இந்த டிஸ்கவுன்ட் தருகிறார்கள் தங்கள் முகநூல் பக்கத்தில் இதற்கான அறிவிப்பை சரியே அன்றைக்கோ அல்லது முதல் நாளோ தான் சொல்கிறார்கள்

பணம் முதலில் டிரான்ஸ்பர் செய்தால் நாம் சொல்லும் முகவரிக்கு சட்டை அனுப்புவர். மேலும் அதில் நமது இனிஷியல் (கைகளில்) போடணும் என்றாலும் செய்கிறார்கள்.

நான் இதுவரை வாங்கவில்லை (பல நேரங்களில் மதியம் முகநூலில் மட்டும் அறிவிக்கிறார்கள் அலுவலகத்தில் இருந்து பார்க்க முடியாமல் போகிறது) ; நண்பன் தேவா சில முறை வாங்கியிருக்கிறான். நம்பிக்கையான க்ரூப் என்று தான் தெரிகிறது .

இந்த பதிவு வெளியிடப்படும் இன்று மதியம் 1 முதல் 4 வரை மட்டும் ஆக்ஸ்போர்ட் சட்டைகளுக்கு 25 % டிஸ்கவுன்ட் என்று நேற்றிரவு முகநூலில் கூறியிருந்தார்கள் ! விருப்பமிருந்தால் எட்டி பாருங்கள் !

Stiff Colar Facebook page: https://www.facebook.com/StiffCollar

பதிவர் திருவிழா

சென்ற வருடம் போலவே, இந்த வருடத்துக்கான பதிவர் திருவிழா ஏற்பாடுகள் துவங்கி விட்டன. செப்டம்பர் 1 - ஞாயிறு காலை விழா நடக்க உள்ளது. காலை முதல் மாலை வரை விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஹால் புக் செய்யப்பட்டு விட்டதால் செப்டம்பர் 1 என்கிற தேதி உறுதியாகி விட்டது.

விழா நடக்கும் இடம்: 

CINE MUSICIAN’S UNION HALL 
கமலா தியேட்டர் அருகில் வட பழனி 
தேதி: செப்டம்பர் 1, 2013, ஞாயிறு காலை (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)


இந்த மாநாட்டிற்காக ஆகும் செலவுகளை சமாளிக்க விருப்பமுள்ள பதிவர்களிடம் அன்பளிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் அன்பளிப்பு தர இயலாமல் இருக்கும் பதிவர்கள், தங்களின் வருகையையே அன்பளிப்பாக தருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

உங்களது பெயர், உங்கள் வலைதளமுகவரி, ஊர்/நாடு, தொலைபேசி எண்(optinal)தெரிவித்தால், உணவு தயார் செய்ய, வெளியூர் எனில் தங்கும் இட வசதி செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.

பதிவர் மாநாட்டிற்கான தங்களது வருகையை தெரிவிக்க, தொடர்புகொள்ள வேண்டிய பதிவர்கள் :

மதுமதி – kavimadhumathi@gmail.com
பட்டிகாட்டான் ஜெய் – pattikattaan@gmail.com
சிவக்குமார் – madrasminnal@gmail.com
ஆரூர்மூனா.செந்தில்குமார் – senthilkkum@gmail.com
அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com
பாலகணேஷ் – bganesh55@gmail.com
சசிகலா - sasikala2010eni@gmail.com

முதல் நாளே வெளியூர் நண்பர்கள் பலர்  வந்து விட, சனி, ஞாயிறு 2 நாளும் செம குதூகலமாய் இருக்கும். நீண்ட இடைவேளைக்கு பின் பல நண்பர்களை சந்திக்க, ஜாலியாய் அரட்டை அடிக்க போகும் அந்த இரு நாட்களுக்காக காத்திருக்கிறேன் !

விழா பற்றிய மேலும் விபரங்களுக்கு : இங்கு வாசியுங்கள் !

************
அய்யாசாமி கார்னர்

ஆகஸ்ட் மாதம் கல்யாண நாள் வருவதால் Mrs. அய்யாசாமி இப்பவே புடவை வாங்கணும் என சொல்லி மனிதரை கடைக்கு அழைத்து சென்றார். இரண்டு புடவைகள் எடுத்து வைத்து கொண்டு, எதை செலக்ட் செய்வது என நீண்ட நேரம் யோசிக்க, அய்யாசாமி " ரொம்ப பிடிச்சா ரெண்டையும் எடுத்துக்க " என்று பெர்மிஷன் (!!!??) தர , " அப்டி வா வழிக்கு " என ரெண்டு புடவையும் வாங்கி முடித்தார் Mrs. அய்யாசாமி.

பர்ச்சேஸ் எல்லாம் முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் இப்படி புலம்பினார் Mrs. அய்யாசாமி

" எங்க கம்பனி வேற சீக்கிரம் மூடிடுவான் போலருக்கு ; ரெண்டு புடவையும் சீக்கிரம் கட்டிடணும் "

" என்னாது ! கம்பனி சீக்கிரம் மூடிடுவானா ? என்னாடி சொல்றே? தெரிஞ்சா 2 புடவை எடுக்க சரின்னு சொல்லிருக்க மாட்டேனே ? " என்று அய்யாசாமி சொல்ல, Mrs. அய்யாசாமி, அவரை ஏமாற்றிய வெற்றி களிப்பில் ஜாலியாக சிரித்தார்.

அய்யாசாமி மைண்ட் வாய்ஸ்  :

" கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆச்சுது; ஆனா 16 வருஷமா இந்த கம்பனி சீக்கிரம் மூடிடுவாங்க; அதுக்கப்புறம் நான் வேலைக்கு போக மாட்டேன்னு சொல்லிக்கிட்டே தான் இருக்கா ; ஒண்ணும் நடக்க மாட்டேங்குது ; நீ வண்டியை ஓட்டுடா சூனா பானா "

என்னா பாட்டுடே 

"வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே " ரஹ்மான் இசை அமைத்து பாடிய இந்த பாடல் எப்போது கேட்டாலும் மனம் என்னவோ போல் ஆகி விடும்

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் டைட்டில் சாங் இப்பாடல். இவ்வளவு மெதுவாக ஒரு பாடல் அமைத்து அதை நம்மை ரசிக்கவும் வைக்க எத்தனை இசை அமைப்பாளருக்கு தைரியம் இருக்கும்? கதை களன் பற்றிய நினைவின்றி பாடலை கேட்டால் - இசையை ரசிக்கும் பலரும் மயங்கி போவார்கள் ...அற்புதம் !


முதலில் சொன்ன மாதிரி படத்தின் டைட்டில் மற்றும் படகாட்சிகள் உடன் கூடிய பாடல் இங்கு; பார்க்கும்போது இலங்கை பிரச்சனை நினைவிற்கு வந்து கண்கள் கலங்குவதை தவிர்க்க முடிய வில்லை.

ஆமாம் இவ்வளவு அற்புதமான படங்கள் எடுத்த மணிரத்னம் கடைசி 2 படங்களில் ஏன் காணாமல் போனார் ?


17 comments:

  1. இனி டெபாசிட் ஸ்லிப், வித் டிராயல் ஸ்லிப் போன்றவை கிடையாது. நீங்க கேஷ் கட்டணும் என்றால் கூட ATM கார்ட் எடுத்துட்டு வந்தால் தான் கட்ட முடியும். பணம் எடுக்கணும் என்றாலும் ATM கார்ட் எடுத்துட்டு வரணும் (ATM கார்ட் கையில் இருந்தா - ATM மிஷினில் எடுத்துட மாட்டோமா??)"

    பல தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி ..!

    ReplyDelete
  2. //ஆக்சிஜன் இங்கு இரண்டு மடங்கு அழுத்தத்தில் இருக்கும்//. The patient can't survive if the pressure is twice the atmospheric pressure... at the best it could be 2" WC higher than the atmospheric pressure.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே - இந்த செய்தி ஒரு வார பத்திரிக்கையில் வெளி வந்திருந்தது. இது பற்றி ஒரு மருத்துவரின் பேட்டியை அவர்கள் வெளியிட அதன் முக்கிய பகுதிகளை தான் நான் இங்கு அப்படியே எழுதியிள்ளேன் இரு மடங்கு அழுத்தம் என்பது அந்த பேட்டியில் இருந்த வார்த்தைகள் தான்; நீங்கள் சொல்வது உண்மை என்றால் பேட்டி எடுத்த நிருபர் தவறுதலாக புரிந்து கொண்டாரா என்பது தெரியலை !

      Delete
  3. ஆக்சிஜன் புதிய தகவல்...

    ReplyDelete
  4. ஆக்சிஜன் பற்றி புதிய தகவல்........ உங்களுக்கு தெரியுமா, நான்கு வருடத்திற்கு முன்பு சென்னையில் ஆக்சிஜன் பார்லர் என்று ஒன்று வந்தது. நறுமணம் மிக்க ஆக்சிஜனை நீங்கள் காசு கொடுத்து சுவாசிக்கலாம் என்று, விகடனில் கூட வந்தது, ஆனால் பிரபலமாகாமல் கடையை சாத்தி விட்டனர். இந்த இடம் நன்கு பிக் அப் ஆக வாழ்த்துக்கள் !

    பதிவர் திருவிழாவை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் !

    ReplyDelete
  5. https://www.facebook.com/TheStiffCollar

    ReplyDelete
  6. வர வர இந்த பேங்க் காரங்க தொல்லை தாங்க முடியலை! அருமையான பாடல்! நல்லதொரு பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. இதனால் சகல உலக தமிழ் பதிவாளர்களுக்கும் சென்னை வாழ் பதிவாளர்களுக்கும் பெரியோருக்கும் சிறியோருக்கும், சிரிப்போருக்கும் , சீறுவோர்க்கும் , அடிப்போருக்கும் அணைப்போருக்கும், சிந்திப்போர்க்கும் நிந்திப்போர்க்கும் , எனது வலைக்கு வருவோர்க்கும் வராது என்னை வருவாரா வருவாரா என காலமெல்லாம் காத்திருக்கச் செய்யும் வாராதவர்க்கும் , அன்பாளர்களுக்கும் பண்பாளர்களுக்கும், காய்தல் உவத்தல் இன்றி காலமெல்லாம் தமிழ்ப்பணி செய்வோர் அனைவ ருக்கும் ,

    அறிவிப்பது யாதெனில்,

    சுப்பு ரத்தினம் என்கிற சுப்பு தாத்தா ,

    பதிவுத் திருவிழாவுக்கு ,

    வருவார்.
    அது சரி. அன்னிக்கு கமலா தியேட்டர்லே என்ன படம் ?
    இப்படிக்கு,
    சுப்பு தாத்தா.
    நியூ ஜெர்சி. யூ. எஸ். ஏ.
    நானும் என் வலைலே செய்தி தருவேன்.

    ReplyDelete
  8. நல்ல தகவல்கள்.... ஸ்டேட் பாங்க் - :( எப்பவுமே இவங்க கொஞ்சம் அதிகமாகவே படுத்துவாங்க!

    என்னடா இதுவரை மோகனின் தளத்தில் பதிவர் சந்திப்பு பற்றி ஒன்றும் எழுதலையே என நினைத்திருந்தேன்...

    இந்த முறையும் வரமுடியாது என நினைக்கிறேன்.... பார்க்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. போன வருடம் எனது நண்பர் இன்கம் டேக்ஸ் டிபர்த்மேன்ட்டில் கமிஷனர் ஆக இருந்து ஒய்வு பெற்றவர், ஸ்டேட் பாங்கிக்கு சென்று, தனக்கு புதிதாக வழங்கப்பட்ட செக் புத்தகத்தில் தனது பெயர் தப்பாக இனிசியல் பிரிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. என்றாராம்.

      அதற்கு அவர்கள், நீங்கள் உங்கள் பெயரை ஒவ்வொரு செக் லீப்லேயும் அடித்து சரியான பெயரை எழுதிக்கொள்ளுங்கள் என்றார்களாம்.

      அதுமாதிரி பெயரை கரெக்ட் செய்வது தவறு என்று சொன்னபோது, அந்த ஊழியரே வாங்கி முதல் செக்கில் இருந்த பெயரை அடித்து, சரியான் இனிசியல் போட்டு, இப்ப சரிதான என்றாராம்.

      சார், இது அதை விட தவறு, நீங்கள் திருத்தும் ஒவ்வொரு கரெகஷனும் என்னுடைய செக் புக்கில் ஆதேண்டிகேத் செய்யப்படவேண்டும். என்று சொல்ல, அவர்,

      உங்களை எல்லாம் இந்த வங்கிலே கணக்கு ஓபன் பண்ணு அப்படின்னு நாங்க வந்து கேட்டோமா, எங்களை ஏன்யா இப்படி
      தொந்தரவு செய்யறிங்க... போய் மேனேஜர் கிட்டே சொல்லுங்க.

      என்றாராம்.

      பப்ளிக் செக்டார் வங்கி வாழ்க.

      சுப்பு தாத்தா.

      Delete
  9. அண்ணே ட்வீட் எல்லாம் அருமை தில்லானா

    ReplyDelete
  10. ம்ம் மணிரத்தினம் வழி மாறினாலும் இந்தப்பாடல் இன்னும் ஏக்கம் தான் நாமக்கு!!

    ReplyDelete
  11. https://www.facebook.com/TheStiffCollar - Pl. Correct

    ReplyDelete
  12. பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

    ReplyDelete
  13. நீங்க சொன்ன ஸ்டேட் பாங்க் தகவலைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள அவர்களுடைய இணையதளத்தைச் சென்று பார்த்தேன். இதைப் பற்றிய தகவல் ஒன்றும் இல்லை. ஒருவேளை உங்களுக்கு தகவல் கூறியவர் தவறாக கூறினாரா என்று தெரியவில்லை. ஏனெனில் புதிய தலைமுறை வங்கிகள் எனப்படும் ICICI,AXIS,HDFCவங்கிகளிலேயே இத்தகைய நடைமுறை இன்னும் அமலுக்கு வரவில்லை.

    ReplyDelete
  14. ஜோசப் சார் : இல்லை 2 ப்ராஞ்ச்களில் எனக்கு இதே அனுபவம் தான்; மறுநாள் ATM கார்ட் எடுத்து வந்து தான் பணம் கட்டினேன் ; முகநூலில் பகிர்ந்த போது இன்னொரு நண்பரும் இதே போன்ற அனுபவம் கிடைத்ததை சொன்னார். அவர்கள் தங்கள் வெப் சைட்டில் போடலை போல இருக்கு

    நன்றி !

    ReplyDelete
  15. SBI-ல் 2 வருடத்திற்கு முன்பு கிரீன் சேனல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரே ஒரு கவுண்டரில் மட்டும் swipe machine வைத்திருப்பார்கள். செல்லான் மூலம் செய்யப்படும் சேவைகளுக்கு டோக்கன் எடுக்க வேண்டும் அல்லது Q-ல் வர வேண்டும். ஆனால் ATM card வைத்திருப்பவர்கள் நேரடியாக கிரீன் சேனல் கவுண்டரில் சென்று பண பரிவர்த்தனைகளை செய்யலாம்.
    குறிப்பாக நம்முடைய கணக்கில் செய்யும் பரிவர்த்தனைகளை கால விரயம் இன்றி செய்து முடிக்கலாம்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...