Thursday, May 5, 2016

மனிதன் - சினிமா விமர்சனம் - வக்கீலின் பார்வையிலிருந்து

ஜாலி LLB என்று ஹிந்தியில் வந்த படம்.. தமிழில் மனிதன் ஆக ..

நடிகர் சல்மான் கான் நடைபாதை வாசிகள் மீது கார் ஏற்றிய சம்பவம் தான் கதையின் அடிப்படை. அந்த சம்பவத்தை வைத்து தான் கதை துவங்குகிறது; அதை சுற்றியே சுழலுகிறது

விபத்திற்கு காரணமான பெரிய இடத்து பையனை காப்பாற்ற மாபெரும் வக்கீல் பிரகாஷ் ராஜ்; எதிரில் கத்து குட்டி உதயநிதி ஸ்டாலின்; தர்மம் தான் ஜெயிக்கும்; ஹீரோ தான் வெல்வார் என்பது தெரிந்த விஷயம் எனினும் திரைக்கதை நன்று .

ட்ரைலர் நிச்சயம் ரசிக்கும் படி இருந்தது; குறிப்பாக வக்கீல்கள் உலகம் பற்றி தான் படம் முழுக்க சுழல்கிறது  என்பதுவும் பார்க்க ஒரு காரணம்




வழக்கல் போல் சற்றே அதிகம் கத்தினாலும் பிரகாஷ் ராஜ் சரியான சாய்ஸ் ; அதை விட அதிகம் கவர்வது நீதிபதியாக வரும் ராதா ரவி. கிளைமாக்சில் 2 வக்கீல்களும் நிறைய வசனம் பேசுகிறார்கள்.. ஆனால் பெரிதும் கவனம் ஈர்ப்பது ராதா ரவி தான்.

பிரகாஷ் ராஜ் மீது சத்தம் போட்டு விட்டு " அப்பா .. என்னா டென்ஷன் .. ஒரு டீ சொல்லு; அப்படியே அவருக்கும் ஒரு டீ கொடு " என்று சொல்லும் இடத்தில் தியேட்டர் கை தட்டி ரசிக்கிறது

உதயநிதி - புலிக்கு முன் இருக்கும் எலி போல் தான் இருக்கிறார். அந்த பாத்திரத்துக்கு  அப்படியான ஆள்  தான் தேவை ; ஆனால் எதோ ஒன்று இன்னமும் குறைகிறது.. 

பாடல்கள் ஓரிரண்டை குறைத்திருக்கலாம்.. 

ஹன்ஷிகா கிராமத்தில் இருந்தாலும் கதைக்கு தேவை என்றால் உடனே சென்னையில் ஆஜர் ஆகிறார் :)



அஜயன் பாலாவின் வசனங்கள் ஷார்ப்; குறிப்பாக பணக்காரர்- ஏழை இரண்டு பக்க நியாயங்களையும் தொடர்ந்து திரைக்கதை மற்றும் வசனத்தில் காட்டி கொண்டே இருக்கிறார்கள்

அதிலும் அந்த வடக்கத்திய பிசினஸ் பாமிலி .. அவர்களின் பணத்திமிர், தெனாவெட்டு; பேசிய பணத்தை வக்கீலுக்கே தராமல் ஏமாற்றும் தந்திரத்தனம்... இவை ரொம்ப அழகாக காட்டுகிறார்கள் ...

கோர்ட் சம்பந்தமான காட்சிகளில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் .. சினிமாட்டிக் விஷயங்கள்....

எல்லா தமிழ் படத்திலும் வருவது போல் இந்த கேசை தான் காலையில் முதன் முதலில் எடுப்பார்கள்; அந்த கேஸ் முடிந்ததும் எழுந்து போய் விடுவார்கள்; இதென்ன சிறப்பு நீதி மன்றமா என்ன? ஒரே ஒரு கேஸ் பற்றி பேச?

உயர் நீதி மன்றத்தில் சாட்சிகள் அநேகமாய் இருக்காது; சாட்சிகள் கீழ் கோர்ட் ( செஷன்ஸ் ) உடன் முடிந்து விடும்; நேரடியே  உயர் நீதி மன்றத்தில் மட்டுமே தாக்கல் செய்தால் தான் சாட்சி இங்கு தர வேண்டியிருக்கும்..

கோர்ட் ஹாலுக்குள் நுழையும் போது பிரகாஷ் ராஜ் போடும் கோட் மற்றும் உள் கோட் - வக்கீல்கள் போடுவது அல்ல.. நுழையும் போதும் வெளி வரும்போதும் இப்படி வருபவர், வாதிடும் போது சரியாக  உடை அணிந்துள்ளார் :)




தியேட்டர் நொறுக்ஸ்

ரிலீஸ் ஆகி ஒரு வாரம் கழித்து தியேட்டர் போய் பார்ப்பது சற்று அரிது தான். இம்முறை ஹவுஸ் பாஸ் பிறந்த நாள் என்பதால் அது நிகழ்ந்தது.

வீட்டுக்கருகில் உள்ள நல்ல தியேட்டர் என்பதால் வேளச்சேரி PVR பல நேரம் எங்கள் விருப்பமாக உள்ளது. என்ன ஒன்று.. சத்யம் க்ரூப் போல இல்லாமல் ரிசர்வேஷன் சரியான நேரத்தில் துவங்குவதில்லை. மேலும் ஓரிரு நாளுக்கு தான் எப்பவும் டிக்கெட் புக்கிங் நடக்கிறது. 4 நாள் கழித்து பார்க்க இப்போதே புக் செய்ய முடியாது. புதிதாய் ரிலீஸ் ஆகும் வீக் எண்டு படங்களுக்கும் எப்போது புக்கிங் ஓபன் ஆகும் என்பது சிதம்பர ரகசியமே !

நேரில் சென்று புக் செய்யலாம் என்றால் - பிசியான மாலை நேரம் ஒரே ஒரு கவுண்டர் மட்டும் திறந்து வைத்திருப்பார்கள். அத்தனை தியேட்டருக்கும் அந்த ஒரே கவுண்டர் !! அட்வான்ஸ் புக்கின்குக்கும் அதே கவுண்டர் தான்.. டிக்கெட் வாங்கவே 20 நிமிடம் கியூவில் நிற்கணும்.. கொடுமை.. !! பார்க்கிங் சார்ஜ் பார்க்காமல் பீனிக்ஸ் பக்கம் ஒதுங்குவதே சால சிறந்தது !

வார நாள் மாலை ஷோ- தியேட்டர் முக்கால் வாசி  நிரம்பியிருந்தது; தெறி தான் குடும்ப மக்களின் தேர்வாக இருக்கிறது; கோடை விடுமுறையில் தெறி அள்ளு அள்லென்று அள்ளுகிறது.

மனிதன் படம் முடிந்து வரும் போது ஒரு கணவன்- மனைவி- அவர்கள் 15 வயது சிறுவன் எஸ்கலேட்டரில் பேசி கொண்டு போகிறார்கள் " படத்தில் எந்த பாட்டுமே யாரும் வாயை திறந்து பாடலை கவனிச்சியா? எல்லாமே பேக் கிரவுண்டில் தான் வருது"

பையன் " ஆமா.. கவனிச்சேன் "

மக்கள் படத்தை எவ்வளவு உன்னிப்பாக பார்க்கிறார்கள்.. ஆச்சரியமாக இருந்தது !
***************
பைனல் வெர்டிக்ட் : சூர்யாவின் 24 படம் வந்ததும் இப்பட கூட்டம் குறைய துவங்கி விடும். படம் கமர்ஷியல் ஹிட் ஆவது கடினமே..

தியேட்டர் அல்லது டிவி யில் நிச்சயம் ஒரு முறை பார்க்க தகுந்த படம் ! A decent family entertainer !

**********

தெறி படம் எப்டி பேபி ?சினிமா விமர்சனம்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...