Tuesday, November 8, 2011

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் -ஓர் சந்திப்பு

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்தது குறித்து சொல்லும் முன் சிறு முன் கதை சுருக்கம் பார்த்து விடலாம்.

 நண்பன் தேவா ஒரு முறை எஸ். ரா அவர்களுக்கு மெயில் அனுப்பியிருக்கிறான். அதில் பூமா. ஈஸ்வரமூர்த்தி என்கிற எழுத்தாளர் குறித்து விசாரித்து "அவர் ஏன் இப்போது எழுதுவதில்லை? " என கேட்டிருக்கிறான். அவரிடமிருந்து அந்த எழுத்தாளர் தற்போது என்ன செய்கிறார் என்ற விபரத்துடன் மெயில் வர தேவாவிற்கு ஆச்சரியம் !! மேலும் தன் கடிதத்தில் சென்னை வரும் போது தங்களை சந்திக்கலாமா என தேவா கேட்க அவசியம் சந்திக்கலாம் என தன் இல்ல போன் நம்பர் தந்துள்ளார். இம்முறை சென்னை வந்த தேவா, அவருக்கு தொலை பேச, கடந்த அக்டோபர் 16 அன்று காலை 10.30 க்கு அவர் இல்லத்தில் சந்திக்க முடிவானது.

அவர் இல்லம் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பை அடைந்தோம். D-1 என்பது அவரது வீட்டு எண். D ப்ளாக் அடைந்தால், கீழே இருக்கும் முதல் வீடு பூட்டியிருந்தது. (அது தான் D-1 ஆக இருக்கும் என நாங்கள் நினைத்தோம்). "என்ன அண்ணே இந்த எழுத்தாளரும் உங்களை பீர் அடிக்க வச்சிடுவார் போல இருக்கே" என்றான் தேவா. (பால குமாரன் சந்தித்த முன் அனுபவம்).

இந்த சந்திப்பிற்கு கிளம்பி செல்லும் போது பல முறை எனக்கு பால குமாரனை பார்த்த சம்பவம் நினைவில் வந்து கொண்டே தான் இருந்தது. அதனோடு பல விஷயம் ஒப்பிட்டவாறு இருந்தேன். அப்போது நான் வெளியூரில் இருந்து சென்னைவந்திருந்தேன். சென்னையில் இருந்த நண்பன் நந்து என்னுடன் பால குமாரனை பார்க்க வந்தான்.இம்முறை வெளியூரில் இருக்கும் தேவா சென்னைக்கு வர, இங்கிருக்கும் நான் உடன் செல்கிறேன். இப்படி பல ஒப்பீடுகள் மனசுக்குள் !!

அவர் வீடு மாடியில் இருந்தது. வீடு திறந்திருப்பதை பார்த்து சற்று நிம்மதி. அவர் மனைவி எங்களை நேராக அவர் அறைக்கு அழைத்து சென்றார். கணினியில் அவர் தட்டச்சு செய்து கொண்டிருந்தார். "உட்காருங்க. ரெண்டு நிமிஷம்" என சொல்லிவிட்டு கணினியில் வேலையை தொடர்ந்தார். அமர்ந்து சுற்றிலும் கவனித்தோம். அதை அவர் அறை என்பதா அல்லது நூலகம் என்பதா?


சுற்றி இருந்த ஷெல்ப்கள் முழுக்க புத்தகங்கள் நிறைத்திருந்தது. ஒரு அலமாரியில் ஒரு வரிசை முழுதும் அவர் எழுதிய புத்தகங்கள். சிறிய அறையில் சுவர் முழுதும் ஆங்காங்கு சில படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. புத்தர், பாரதி ஆகியோரின் படங்கள் / சிலைகள் நிறையவே இருந்தது. ஒரு சில காந்தி படங்களும் ஒரு பெரியார் படமும் கூட காண முடிந்தது.

இன்னமும் கூகிள் Transliterator மூலம் தமிழில் டைப் அடிக்கும் எனக்கு அவர் வேர்ட் டாகுமெண்ட்டில் நேரடியாக தமிழில் டைப் செய்து கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அதை விட ஆச்சரியம் கூகிள் மெயிலில் பதில் அனுப்பும் போது கூட "ரிப்ளை" அழுத்தி விட்டு நேரடியாக டைப் அடிக்க, மெயில் தமிழில் டைப் ஆனது!!

அந்த அறையில் அவர் ஒரு தாளில் முடிக்க வேண்டிய வேலைகள் என எழுதி ஒட்டியிருந்தார். கிட்டத்தட்ட 15 வேலைகள் அதில் இருந்தன. அவை அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு எங்களுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் செலவிட்டார்.

இங்கு தருபவை அவர் பேசியதை நாங்கள் புரிந்து கொண்ட அளவில் தான் தரப்பட்டுள்ளது ! எங்கள் புரிதலில் சிறிது தவறு இருந்தால் அது எங்கள் தவறே.

ஆங்காங்கு நாங்கள் கேட்ட கேள்விகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

****

எழுத்தாளர்கள் பலருக்கு சொந்த வாழ்க்கை கொடுமையான ஒன்றாக இருந்திருக்கிறது. அவர்களுக்கு எழுத்து மட்டுமே ஆறுதலான ஒன்றாக, சந்தோஷம் தருவதாக இருந்திருக்கிறது. எனக்கு அப்படி இல்லை. குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை இவற்றில் எனக்கு எந்த பிரச்னையும் இருந்ததில்லை. என் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோரும் நான் எழுத்தாளன் ஆவதை எப்போதும் தடை செய்ய வில்லை.

எழுத்தாளர் ஆக இருந்தும் நன்கு பேசவும் செய்கிறீர்களே எப்படி?

பள்ளி பருவம் முதலே மேடைகளில் பேசி வருகிறேன். படிப்பில் எப்போதும் முதல் சில இடத்தில் வரும் மாணவனாக இருந்தேன்.  படிப்பு முழுதும் மெரிட் ஸ்காலர்ஷிப்பில் தான் படித்தேன். அப்பாவிற்கு செலவே வைக்க வில்லை. (இந்த செய்தி எனக்கும் தேவாவுக்கும் ஆச்சரியமாக இருந்தது. இப்படி ரொம்ப படிப்ஸ் ஆக உள்ளவர்கள் வேலை, சம்பளம் போன்றவற்றில் தான் கவனம் வைப்பார்கள்.முழு நேர எழுத்தாளன் என தானே தேர்வு செய்வது அரிது).

எஸ். ரா வின் புத்தக கலக் ஷனை பார்வையிடும் தேவா
எந்த ஒரு விஷயத்திலும் முன்னால் தான் இருக்க வேண்டும் என நினைப்பேன். ஆசிரியர்கள் எதற்காவது கூப்பிட்டால் முதல் ஆளாய் போய் நிற்பேன். இதனால் அவர்கள் என்னை எல்லா போட்டிக்கும் அனுப்பினார்கள. பேச்சு போட்டியில் தமிழகம் முழுமைக்கும் நடந்த போட்டிகளில் பரிசு வாங்கியுள்ளேன். இது நிறைய படிக்கவும், நிறைய பேரை சந்திக்கவும் தெரிந்து கொள்ளவும் உதவியது.

படிப்பில் ஒரு குறிப்பிட்ட தூரம் சென்ற பின் தான் படித்து நான் ஏதும் செய்ய போவதில்லை என உணர்ந்தேன். கிட்டத்தட்ட Ph.D முடிக்கும் தருவாயில் தான் எனது வாழ்க்கை எழுத்தாளனாக தான் இருக்க போகிறது என உணர்ந்தேன். அதுவரை படித்து பெற்ற அத்தனை Certificate-களையும் என் தந்தையிடம் கொண்டு சென்று குடுத்து விட்டேன். எனது படிப்பை வைத்து மனிதர்கள் என்னை பார்த்தால் அதை வைத்தே எனக்கு மரியாதை தருகிறார்கள். என் படிப்பை விடுத்து ஒரு   சாதாரண மனிதனாக அவர்கள் என்னிடம் பழக வேண்டும் என நினைத்தேன். என் வாழ்க்கையில் இருந்து எழுத விஷயங்கள் அதிகம் இல்லாததால் நான் சந்திக்கும் மனிதர்களும் அவர்களின்  வாழ்க்கையும் தான் எனக்கு எழுத பின் புலமாக இருந்தது. நான் நிறைய பயணம் செய்யவும் இதுவே காரணம்.

எங்கள் வீட்டில் உடன் பிறந்தோர் ஒவ்வொருவரும் தங்கள் வழியை தாங்களே தேர்ந்தெடுத்தனர். அது பற்றி யாரும் தடை சொல்வதில்லை. ரெண்டு விஷயம் மட்டும் கேட்பார்கள். "எழுத்தாளன் ஆக, குறிப்பிட்ட காலத்திற்குள் உன்னை establish செய்ய முடியா விட்டால், அதை விட்டு வேறு ஏதும் விஷயத்துக்கு சென்று விட வேண்டும் " அடுத்தது. "உனக்கு இதற்கு நாங்கள் எந்த விதத்தில் உதவுவது?" அவ்வளவு தான் !! எனது முதல் கதை பிரசுரம் ஆகி அதற்கு ஒரு விருது கிடைத்தது. உடனேயே எனக்கு எழுத்தாளன் ஆக திறமை இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு, அதன் பின் எந்த கேள்வியும் கேட்க வில்லை.
 
பள்ளி மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடுகிறீர்களே?

ஆம். ஆறு முதல் பன்னிரண்டு வரை வயதுள்ள மாணவர்களை சந்தித்து கதை சொல்வது, அவர்களை கதை சொல்ல வைப்பது என்னுடைய வழக்கம். அதற்கு மேல் உள்ள மாணவர்களிடம் சொன்னால் அவர்கள் கதையை கதையாக பார்க்காமல் லாஜிக் கேட்பார்கள்.

உலகின் எந்த விஷயத்தையும் கதையின் மூலம் சொல்லலாம். அது அறிவியலின் எந்த விஷயமாக இருக்கட்டும்,வேறு எந்த பாடமாகட்டும் கதை மூலம் சொன்னால் அவர்கள் அதை எளிதில் நினைவில் வைத்து கொள்வார்கள். இதனை அடிப்படையாக வைத்து நானும் என் மகனும் சேர்ந்து சிறுவர்களுக்கு ஒரு கதை தொகுப்பே எழுதி இருக்கிறோம். (அந்த எட்டு புத்தகங்களை எடுத்து எங்களிடம் காட்டுகிறார்)

திருச்சியில் உள்ள எஸ். ஆர். வி பள்ளியில் அதன் ஆசிரியர்களுக்கு இந்த பாடமுறை பற்றி தொடர்ந்து சொல்லி தருகிறேன். பொதுவாக படிப்பிறகே முக்கியத்துவம் பள்ளி தான் அது எனினும், எப்படியோ இந்த முறையை அனுமதித்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் குறைந்தது பத்து நாட்கள் அந்த ஆசிரியர்களுடன் செலவிடுகிறேன்.
 
எஸ். ரா..... அவரது அறையில் அவரது கணினி முன்பு

நான் மட்டுமல்ல இந்தியாவில் சிறந்த பல்வேறு expert-களும் ஆசிரியர்களுக்கு அந்த பத்து நாட்கள் வந்து பயிற்சி தருகிறார்கள். இதனால் அந்த ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் மிக சிறந்து விளங்குகிறார்கள். எளிதாக பாடம் எடுப்பதன் அனைத்து டெக்னிக்குகளும் அவர்களுக்கு தெரிந்து விடுகிறது. பாடம் என்பது சுமையான விஷயமாக இல்லாமல் சுவாரஸ்யமான ஒன்றாக மாணவர்களுக்கு மாறி விடுகிறது.

கோடை விடுமுறை நேரம் பொதுவாக நாற்பது நாளைக்கு எந்த வேலையும் எடுத்து கொள்வதில்லை. கதை வசனம் எழுதும் படங்களுக்கும் முன்னரே எழுதி குடுத்து விட்டு, இந்த மாதத்தில் இருக்க மாட்டேன் என சொல்லி விடுவேன். அந்த ஒரு மாதம் குடும்பத்துடன் நண்பர்கள் மற்றும் உறவினர்களை பார்க்க செல்வோம். அப்போது இது மாதிரி பள்ளி வேலைகள் கொஞ்சம் செய்வதுண்டு.

எஸ். ஆர். வி பள்ளி எழுத்தாளர்களை, மாணவர்கள் நூல்கள் வாசிப்பதை எப்போதும் ஊக்குவிக்கிறது. வருடா வருடம் எழுத்தாளர் ஒருவருக்கு விருது வழங்குகிறது. மேலும் வருடம் ஒரு முறை பள்ளி வளாகத்தில் புத்தக கண்காட்சி நடத்துகிறது. குறைந்தது லட்ச ரூபாய்க்கு மேல் மாணவர்களே புத்தகம் வாங்குகிறார்கள்

நீங்கள் எதிர் காலத்தில் என்ன நிகழும் (Futuristic) என எழுதினால் என்ன
என்கிற  தேவாவின் கேள்விக்கு

நான் எப்போதும் கடந்த காலம் பற்றியே எழுதுகிறேன். நடந்து முடிந்த நிகழ்வு என்பது தான் என் எழுத்துக்கு அடி நாதமாக உள்ளது. Futuristic ஆக என்னால் எழுத முடியாது .

அடுத்த பகுதியில்

விகடனில் எழுதிய பின் கிடைத்த வெளிச்சம்

ப்ளாக் வாசிக்கிறீர்களா?

சினிமா இயக்குவீர்களா?

ஐந்து வருடத்தில் பணக்காரர் ஆகும் மனிதர்கள்...

இன்னும் பல விஷயங்கள் மனம் திறந்து பேசுகிறார் எஸ். ரா

29 comments:

 1. அலுக்காமல் மிக சுவாரஸ்யமான பேச்சுக்கு சொந்தக்காரர். அவ்ர். எனக்கு ஒரு மூன்று மணி நேர சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.

  ReplyDelete
 2. நல்ல பகிர்வு மோகன். அடுத்த பகுதிகளைப் படிக்க ஆவலுடன்....

  ReplyDelete
 3. அருமையான சந்திப்பு மோகன்.
  திரு எஸ்.ரா. அவர்களை பற்றி தெரிந்து கொள்ள எங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.தொடருங்கள். படிக்க ஆவலாக இருக்கிறோம்.

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றி.

  ரொம்பவே எளிய மனிதர். பழக இனியவர். அவர் பேச்சை அலுக்காமல் கேட்கலாம். அதி சுவாரஸியம்!

  ReplyDelete
 5. அருமையான சந்திப்பு... அருமையான பகிர்வு....

  ReplyDelete
 6. சுவாரஸ்யமாய் எழுதியிருக்கீங்க.

  ReplyDelete
 7. அருமையான பதிவு... அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  அப்புறம் முதல் புகைப்படத்தை யார் எடுத்தது? யாரேனும் சிறுவரா? அல்லது உட்கார்ந்திருந்து எடுத்ததா? ஒரு ஆர்வம் தான். :-)

  ReplyDelete
 8. அடுத்த போஸ்ட் எப்போ தல?

  ReplyDelete
 9. எழுத்தும் தகவல்களும் மிகுந்த சுவாரஸ்யம்!

  ReplyDelete
 10. ஒரு நல்ல,சுவாரஸ்யமான சந்திப்பு.
  தொடருங்கள்!

  ReplyDelete
 11. ரொம்ப சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். சீக்கிரம் அடுத்த பகுதியைப் பதிவிடுங்கள்.

  ReplyDelete
 12. நீங்கள் எழுதுவதை வைத்து பார்த்தால்,எஸ்.ரா.ஒரு அற்புத மனிதராக தான் இருக்க வேண்டும்.
  "படிப்பில் ஒரு குறிப்பிட்ட தூரம் சென்ற பின் தான் படித்து நான் ஏதும் செய்ய போவதில்லை என உணர்ந்தேன். எனது படிப்பை வைத்து மனிதர்கள் என்னை பார்த்தால் அதை வைத்தே எனக்கு மரியாதை தருகிறார்கள். என் படிப்பை விடுத்து ஒரு சாதாரண மனிதனாக அவர்கள் என்னிடம் பழக வேண்டும் என நினைத்தேன்."
  இதே போன்றொதொரு மனநிலையில் நானும் இருந்திருக்கிறேன். இது தான் எஸ்.ராவின் வெற்றி என்று நினைக்கிறேன். in all his openness he has the ability to connect with the readers.

  ReplyDelete
 13. அருமையான பகிர்வு.

  //அவர்கள் கதையை கதையாக பார்க்காமல் லாஜிக் கேட்பார்கள்.//

  நன்றாகச் சொன்னார். மாணவர் மட்டுமின்றி வளர்ந்தவரும் கூட:)!

  தொடருங்கள். வாசிக்கக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 14. Anonymous1:30:00 PM

  'ப்ளாக் வாசிக்கிறீர்களா?' என்ன சொன்னார்? காத்திருக்கிறோம்..

  ReplyDelete
 15. நல்ல பகிர்வு மோகன்.

  NHM Writer பயன்படுத்தினால் வேர்ட் ஃபைலில் நேரடியாக தமிழில் டைப் செய்யலாம். மெயிலில், பின்னூட்டப் பெட்டியில் என எல்லா இடத்திலும் தமிழிலேயே தட்டச்சலாம்.

  ReplyDelete
 16. கேபிள்: ஆம் அலுக்காமல் இருக்கிறது இவரிடம் மணிக்கணக்கில் பேசினாலும்
  **
  நன்றி வெங்கட் விரைவில் அடுத்த பகுதி வெளியாகும்
  **
  ராம்வி மேடம் : நன்றி
  **
  துளசி மேடம்: ஆம் நன்றி
  **
  வாங்க சங்கவி. நன்றி

  ReplyDelete
 17. நன்றி வித்யா.
  **
  சரவண குமரன்: நன்றி !

  ஒரு பாதி சரியாய் கண்டு பிடித்தீர்கள். அந்த படம் தரையில் உட்கார்ந்து எடுத்தது தான். எஸ். ரா வின் உதவியாளர் அந்த படம் எடுத்தார் !
  **
  முரளி வியாழன் அல்லது வெள்ளி அடுத்த பகுதி வெளியாகும்
  **
  மனோ மேடம்: மகிழ்ச்சி நன்றி
  **
  நன்றி கோகுல்

  ReplyDelete
 18. மாதவி மேடம்: அடுத்த பகுதி தயார் தான் !விரைவில் வெளியிடுகிறேன்
  **
  வடிவுக்கரசி: ஆம் அவர் ஓர் அற்புத மனிதர் தான். நீங்களும் அவர் சொன்னது போல் உணர்ந்தது ஆச்சரியம் !
  **
  ராம லட்சுமி: நன்றி. விரைவில் அடுத்த பகுதி வெளியாகும் !
  **
  சிவகுமார்: நாம் மகிழும் படி சொல்ல வில்லை :((
  **
  சரவணா: நன்றி; கூகிள் Transliterator பயன்படுத்தி பழகி விட்டது. இனி மாறுவது சற்று கடினமே

  ReplyDelete
 19. பாலகுமாரனின் சந்திப்பு பற்றிய லிங்கை மறுபடியும் கொடுக்கமுடியுமா? எப்படியோ தவறவிட்டுவிட்டேன்

  ReplyDelete
 20. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. நன்றி ரத்னவேல் ஐயா
  **
  வாசகன்: தொடர் வாசிப்புக்கும் கமெண்டுக்கும் நன்றி. பால குமாரன் சந்திப்பிற்கான லிங்க் பதிவில் இப்போது சேர்த்துள்ளேன். கீழே அந்த லிங்க் உள்ளது

  http://veeduthirumbal.blogspot.com/2011/02/blog-post_15.html

  ReplyDelete
 22. அருமையான சந்திப்பு... சுவாரஸ்யமான பகிர்வு....

  ReplyDelete
 23. //http://veeduthirumbal.blogspot.com/2011/02/blog-post_15.html // நன்றி. எட்ட வைத்துப் பார்த்தால்தான் எதுவும் அழகு

  ReplyDelete
 24. Anonymous12:00:00 AM

  சுவாரஸ்யமான சந்திப்பு...தொடருங்கள்...அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  ReplyDelete
 25. நன்றி பால ஹனுமான். எஸ். ரா தங்களுக்கும் பிடித்த எழுத்தாளர் என நினைக்கிறேன்
  **
  வாசகன்: ஆம் உண்மை நன்றி
  **
  ரெவெரி: நன்றி விரைவில் அடுத்த பகுதி வெளியாகும்

  ReplyDelete
 26. https://www.facebook.com/groups/151312211556811/291913080830056/

  ReplyDelete
 27. https://www.facebook.com/groups/151312211556811/291913080830056/

  ReplyDelete
 28. His "Desaanthiri " is superb work...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...