Thursday, November 10, 2011

ஜென் கதைகள்

நீங்கள் ஜென் கதைகள் வாசித்திருக்கிறீர்களா?

ஜென் கதை அளவில் மிக சிறியது. சில நேரம் அதில் கதை ஏதும் இல்லாத மாதிரி கூட தோன்றும்.. ஆனால் அந்த கதை உங்கள் மனதின் ஓரத்தில் எங்கோ தங்கி விட்டு, பிறகு உங்களுக்கு நடக்கும் எதோ ஒரு அனுபவத்தில் கதையின் அர்த்தம் சட்டென்று புரியும். மேலும், இக் கதைகள் அவரவர்க்கும் வெவ்வேறு அர்த்தங்களும் தரக்கூடும்!

ப்ளாக் எழுத ஆரம்பித்த புதிதில் தமிழ் மணம், இன்ட்லி என எதிலும் இணைக்காமல், Followers பட்டையும் இல்லாத போது எழுதிய பதிவு இது. ஆனால் இந்த பதிவிற்கு ஒரு சிறப்பு உண்டு. இப்படி எப்போதோ எழுதிய ஒரு பதிவு தினம்தோறும் சில பேராலாவது இன்றும் வாசிக்க படுகிறது. இது வரை 1200 பேருக்கு மேல் வாசித்த பதிவு இது !  எப்போதும் மிக அதிக பேர் வாசித்த பதிவுகளில் டாப் டென்னில் இருக்கும் ! இதற்கு முக்கிய காரணம் ஜென் கதைகள் வாசிக்கும் ஆர்வம் உள்ளோர் கூகிளில் தேடி விட்டு அங்கிருந்து ரீ-டைரக்ட் ஆகி இங்கு வருவது தான் !!

எனக்கு மிக பிடித்த 3 ஜென் கதைகள் முதலிலும், அவை என்ன உணர்த்தின என பின்பும் தருகிறேன்..

ஜென் கதை - 1

ஜென் குருவை பார்க்க ஒருவர் வந்தார்.. குரு, "நாம முன்பே பார்த்திருக்கோமா?' என்றார்... "ஆம்" என்றார் வந்தவர்.. " அப்படியா? அப்படின்னா வாங்க டீ சாப்பிடலாம்" என்றார் குரு...

அடுத்து இன்னொருவர் வந்தார். அவரிடமும் குரு, "நாம முன்பே பார்த்திருக்கோமா?' என்றார்... "இல்லை" என்றார் இப்போது வந்தவர்.. " அப்படியா? அப்படின்னா வாங்க டீ சாப்பிடலாம்" என்றார் குரு...

ஜென் கதை -2

ஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான்... ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது.. அப்போது மல்யுத்த வீரன் டீ கடை காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்... அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லா விடில் அது பெரும் அவமானம்.. எனவே டீ கடை காரன் ஒப்பு கொண்டான்.

ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான்.. அறிவுரைக்காக ஒரு ஜென் துறவியை நாடினான்..

அவனது கதை முழுதும் கேட்ட அவர், " சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன" என்று கேட்டார். " 30 நாட்கள்" என்றான் அவன். " இப்போது நீ என்ன செய்கிறாய்?" என்று பின்பு கேட்டார். " டீ ஆற்றுகிறேன்" என்றான் அவன்.. " அதையே தொடர்ந்து செய்" என்றார் அவர்..

ஒரு வாரம் கழித்து வந்தான் டீ கடை காரன்.. " இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று" என்றார் ஜென் துறவி..

இரண்டு வாரம் ஆனது.. அப்போதும் அதே அறிவுரை..

போட்டி நாள் அருகில் வந்து விட்டது.. டீ கடை காரன் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம், " நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.. "போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு" என்றார் துறவி...

மல்ல்யுத்த வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான்.. "வா.. முதலில் டீ சாப்பிடு" என்றான் கடை காரன். "சரி" என்று அமர்ந்தான் வீரன்... டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் விட்டான்.. இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான் இப்போது என்ன ஒரு வேகம்! ஒரு சாதாரண டீ ஆற்றும் விஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால், போட்டிக்கு எந்த அளவு தயார் செய்திருப்பான் என எண்ணுகிறான்.. போட்டியே வேண்டாம் என சென்று விடுகிறான்..

ஜென் கதை -3

சிறுவன் ஒருவன் சிறிய குருவி ஒன்றினைப் பிடித்து தனக்கு பின்புறம் கைக்குள் வைத்து மறைத்துக் கொண்டான். ஜென் குருவிடம் அவன், "குருவே, என்னுடைய கைக்குள் வைத்திருக்கும் பறவை உயிருடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா?" என்று கேட்டான். குரு "இறந்து விட்டது" என்று கூறினால் தன்னுடைய கையில் இருக்கும் குருவியினை சுதந்திரமாக பறக்க விட்டு விடுவது, அப்படி இல்லாமல் குரு "உயிருடன் உள்ளது" என்று கூறினால் தன்னுடைய கைகளால் குருவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவது என்று மனதிற்குள் முடிவெடுத்தான்.

ஜென் ஆசிரியர், "இந்தக் கேள்விக்கு பதில் உன்னுடைய கைகளில்தான் உள்ளது" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

கதை - 1 உணர்த்தியது


நமக்கு தெரிந்தவர், தெரியாதவர் இருவரையும் ஒரே விதமாய் நடத்த வேண்டும் என்பதே இந்த கதை சொல்லும் செய்தி என கருதுகிறேன்..

கதை - 2 உணர்த்தியது

அநேகமாய் இந்த கதைக்கு விளக்கம் தேவை இல்லை.. எனினும் சில வரிகள்.. நாம் செய்யும் செயலையே ஈடுபாடோடு செய்யும் போது அந்த செயலும், நாமும் ஒரு உன்னத நிலையை எட்டுகிறோம்.. (ஜென் கதைகளில் டீ சாப்பிடுவது அடிக்கடி நிகழும்.. ஜப்பானில் இன்றைக்கும் டீ சாப்பிடும் திரு விழா என்றே ஒரு விழா உண்டு.. இதில் ஒவ்வொரு மிடக்கும் நிதானமாய், மகிழ்ச்சியாய் அனைவரும் டீ அருந்தி கொண்டாடுவர்.. வாழ்க்கையை இவ்வாறு துளி துளி ஆக enjoy - செய்ய வேண்டும் என்கிறது ஜென் ...)

கதை 3 - உணர்த்தியது

அந்த குருவி நம் வாழ்க்கையையும், அந்த சிறுவன் நம்மையும் எனக்கு உணர்த்துகிறது ! நம் வாழ்க்கையை அழிப்பதும், சிறக்க வைப்பதும் நம் கையில் தானே உள்ளது!!

இந்த வார பதிவுகள் சில:


சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா?

எஸ். ராமகிருஷ்ணன் சந்திப்பு படங்களுடன்

ஏழாம் அறிவு சறுக்கியது ஏன்?

8 comments:

 1. கதைகளும் அருமை. அதற்கு உங்கள் விளக்கங்களும் அருமை....

  ReplyDelete
 2. very nice. i am a great lover of zen stories. the word 'zen'is the Japanese word for 'dyan'. there was a vairamuthu s poem on drinking tea , in kumudam, years back. iraiyanbu IAS has written a poetry book on zen thoughts.... i think the title is mugathil theliththa saaral.i ll have to check facts again. kindly ignore if you had known these already.

  ReplyDelete
 3. "peyyena peyyum mazhai" was the topic for vairamuthu s collection, published in kumudam years back.

  ReplyDelete
 4. நல்ல பகிர்வு.

  ReplyDelete
 5. 3 கதைகளுமே அருமையான படிப்பினை. பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 6. நீங்கள் சொன்ன மாதிரியே நானும் கூகுளாண்டவர் துனையுடன் தான் உங்கள் பக்கம் வந்தேன் அருமையான பகிர்வு நண்பரே

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...