Tuesday, November 8, 2011

ஏழாம் அறிவு சறுக்கியது ஏன் ?இணையத்தில் துவைத்து காய போடப்பட்ட பின் தான் ஏழாம் அறிவு படம் பார்த்தேன். கதை போன்ற தகவல்கள் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. எனவே நேரடியே மற்ற விஷயங்களுக்கு...

எது நன்றாக இருந்தது?

நிச்சயம் ஒரு வித்யாசமான கதை களம். இத்தகைய வித்யாசமான கதைகள் வருவதே அரிது தான். அந்த வகையில் நிச்சயம் இந்த படம் வரவேற்கபட வேண்டிய ஒன்று.

சூர்யாவின் அர்ப்பணிப்பு போதி தர்மரில் நன்கு தெரிகிறது. உடலை (6 packs!!) என்னமாய் வைத்திருக்கிறார் !! ஆனால் சர்க்கஸ் கலைஞராக முதல் பாடலில் மட்டும் தான் கொஞ்சமாக ஏதோ செய்கிறார். அதன் பின் டென்ட் அருகே தான் சூர்யாவை பார்க்க முடிகிறது சர்க்கஸ் உள்ளே அல்ல.

ஸ்ருதி போட்டோக்களில் பார்க்கும் போது எனக்கு அவ்வளவாக ஈர்க்க வில்லை. அவரது அம்மா சரிகாவை பார்க்கிற மாதிரியே இருந்தது. ஆனால் படத்தில் நன்கு நடித்துள்ளார். சொல்ல போனால் படத்தில் அதிகம் பேசுவது இவர் தான். நடுவில் வரும் இரண்டு மணி  நேரத்திற்கு சூர்யாவை விட இவருக்கே அதிக வாய்ப்பு. ஒரு சில இடங்களில் தமிழ் சற்று இடறினாலும் பெருமளவு சரியாக செய்துள்ளார். நல்லதோர் புது வரவு.

யம்மா யம்மா, இன்னும் என்ன தோழா உள்ளிட்ட பாடல்களுக்காக ஹாரிஸ் ஜெயராஜுக்கு பாராட்டு. ஆனால் சில பாடல்கள் காப்பி அடித்தது ஏனோ?

இனி படம் சறுக்கியது எங்கே என பார்ப்போம்:

படம் துவங்கியதும் பின்னணியில் ஒலிக்கிற குரல் இருக்கிறதே ! எங்கிருந்து தான் பிடித்தார்களோ? "பீகாரில் வெள்ளம்" என முன்பெல்லாம் திரை அரங்குகளில் படம் துவங்கு முன் நியூஸ் ரீல் ஓட்டுவார்கள். அதே மாதிரி குரல் உள்ள நபரை கூட்டி வந்து, அதே தொனியில் பேச வைத்திருக்கிறார்கள். இது அந்த காலத்து டாக்குமெண்டரி பார்க்கும் உணர்வையே தருகிறது. போதி தர்மருக்காக உழைத்த அவ்வளவு உழைப்பையும் இந்த குரலால் கெடுத்து விட்டார்கள். அதிலும் அந்த குரல் அதே தொனியில் முதல் இருபது நிமிடமும் பேசி கொண்டே இருக்கிறது.

போதி தர்மர் போர்ஷன் முதலில் வந்திருக்க கூடாது. அவர் பற்றி எதிர்பார்ப்பை ஏற்றி சென்று பின்னர், பிளாஷ் பேக் ஆக வந்திருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பின்னணி குரல் சூர்யா அல்லது ஸ்ருதி பேசியிருக்கலாம்.

முதலில் தான் போதி தர்மர் போர்ஷன் வரணும் என்றால் கமல், பார்த்திபன் போன்ற நமக்கு தெரிந்த குரலில் யாரையாவது பேச வைத்திருக்கலாம். This is a big let down.

அடுத்து என்னை வெறுக்கடித்தது வில்லன் குறித்த பகுதிகள். அவர் ஒரு சில வினாடி பார்த்தாலே அனைவரும் அவரது கண்ட்ரோலில் வருவார்கள் என்பது மிக பெரிய ரீல். அதுவும் ஒரு நிமிடத்தில் பத்து பதினைந்து பேர் அவர் பார்த்ததுமே அவர் "நினைக்கிற மாதிரி" செய்வதெல்லாம் சாரி ரொம்ப ஓவர். ஹிப்னாடிசம் பற்றி அனைவரும் அறிந்த விஷயம் ஒருவரை ஹிப்னாடிஸ் செய்ய குறைந்தது ஓரிரு நிமிடங்கள் ஆகும் என்பது !! இப்படியா ஓவராக காண்பிப்பது?

க்ளைமாக்ஸ் தவிர்த்து ஹீரோ அரவிந்துக்கு (சூர்யா) பாட்டு பாடுவதையும் ஸ்ருதி வண்டி பின்னே உட்கார்ந்து போவதையும் தவிர வேறு எந்த வேலையும் இல்லை. படம் முழுதும் வில்லனின் டாமினேஷன் தான். இப்படி ஹீரோவை முக்கால் வாசி படம் டம்மி ஆக்கியது சாதாரண ரசிகனுக்கு எப்படி ஏற்புடையதாகும் என தெரிய வில்லை.

இறுதியாக படக்குழுவினர் இந்த படத்துக்கு தந்த பேட்டிகளும், ஓவர் பில்ட் அப்பும் தான் நிறைய எதிர் மறை விமர்சனங்கள் வர காரணமாக அமைந்து விட்டது.

இவ்வளவு குறைகள் கூறினாலும் கூட ஏழாம் அறிவு தவிர்க்க பட வேண்டிய படம் அல்ல. வித்யாசமான கதை களம் என்பதால் ஒரு முறை பார்க்க கூடிய படம் என்று தான் சொல்ல வேண்டும்.

விகடனில் இந்த வருடத்தின் இரண்டாவது அதிக மதிப்பெண் பெற்ற படம் (48/100) ஏழாம் அறிவு என்பது ஒரு ஆச்சரியமான தகவல் !

இந்த வார பதிவுகள் சில:

சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா?

எஸ். ராமகிருஷ்ணன் சந்திப்பு படங்களுடன்

17 comments:

 1. மிக அழகான, மிகச் சரியான அலசல். அருமை.

  ReplyDelete
 2. பார்க்கலாம்! :-)

  ReplyDelete
 3. //ஏழாம் அறிவு தவிர்க்க பட வேண்டிய படம் அல்ல.//

  அதேதான்.

  ReplyDelete
 4. கிராபிக்ஸ்ம் சொதப்பல். முக்கியமாக நடு ரோட்டில் கார்கள் மோதும் காட்சி (வேலாயுதத்தில் ரயில் மோதும் காட்சியிலும் பார்க்க பரவாயில்லை)

  ReplyDelete
 5. நல்ல விமர்சனம்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. நன்றி கணேஷ்
  **
  மாதவி மேடம்: நன்றி
  **
  சத்ரியன்: நீங்களும் அவ்வாறே உணர்ந்தீர்களா? நன்றி
  **
  நன்றி வெங்கட்
  **
  வாசகன்: வேலாயுதம் நான் இன்னும் பார்க்கலை
  **
  ரத்னவேல் ஐயா நன்றி

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. >>படம் வெளியாகி ரெண்டு வாரமாகியும், எத்தனையோ பேர் விமர்சனம் எழுதிய பின்னும், இந்த பதிவை மிக அதிகம் பேர் தேடி தேடி வாசிக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது.

  அய்யாசாமி அந்த அளவு பாப்புலர் :-) என்ன, ஆஞ்சநேயர் போல் அவரது பலம் அவருக்கே தெரியவில்லை... அவ்வளவு தான்...

  நிச்சயமாக உங்கள் தலைப்பும் ஒரு காரணம்...

  ReplyDelete
 9. //பதிவு வெளியாகி முதல் ஒரு மணி நேரத்திற்குள் மட்டும் இருநூறுக்கும் அதிகம் பேர் வாசித்து விட்டனர். தலைப்பும் ஒரு காரணமோ என்னவோ?//
  நிச்சயமாக.... வேலாயுதம் வென்றது எப்படி (வென்றதா???) என்று ஒரு தலைப்பு போடுங்கள், ஒரு மணி நேரத்திற்குள் நானூறு comment கிடைக்கும் :-)

  ReplyDelete
 10. Anonymous6:34:00 AM

  /ஒருவரை ஹிப்னாடிஸ் செய்ய குறைந்தது ஓரிரு நிமிடங்கள் ஆகும்//

  இந்த வித்தையை ராம் ஜெத்மலானி தெரிந்து வைத்திருந்தால்.....இந்நேரம் ரெட் ஜெயன்ட் இல்லம் மகிழ்ந்திருக்கும்.

  ReplyDelete
 11. Anonymous6:37:00 AM

  இப்படத்தை போதுமான அளவுக்கு வாரிவிட்டு 48 குடுத்த விகடன், அகவை 84 ஆனாலாவது தன் முரண்பாட்டினை மாற்றிக்கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 12. நல்ல கருத்து.

  ReplyDelete
 13. ஏழாம் அறிவு மிக பெரிய வெற்றி படம்.
  உங்கள் கருத்து வேலாயுதம் பக்கம் சறுக்கி விழுந்தது ஏன்.?

  ReplyDelete
 14. one of best moview reviews for aezhaam arivu.

  ReplyDelete
 15. பால ஹனுமான்: நான் எழுதிய பதிவுக்கு ஏங்க அய்யா சாமியை எழுக்குறீங்க? :)) மற்ற படி தங்கள் கமெண்டுக்கு நன்றி
  **
  வாசகன்: சரிதான் நீங்க சொல்வது
  **
  சிவ குமார்: கமண்டிலேயே இவ்ளோ உள் குத்தா? ரைட்டு
  **
  அட ! கேபிள்: நன்றி
  **
  செந்தமிழ்: தங்கள் கருத்துக்கு நன்றி
  **
  மகிழ்ச்சியும் நன்றியும் டாக்டர் வடிவுக்கரசி

  ReplyDelete
 16. நான் என்ன நினைத்தேனோ அதையே தான் சொல்லியிருக்கிறீர்கள். ஆரம்பத்தில் அந்த குரலை கேட்டவுடன் அய்ய்யோ என்று கத்தத் தோன்றியது. ஆங்கில நகல் படங்களில் இது போன்ற நாராச குரலை கேட்டு கேட்டு கடுப்படைந்தவன் நான். இப்ப்ந்நெர் பட்ட படத்திற்கு இந்த குரலா?(உங்கள் சாய்ஸ் சரியான சாய்ஸ் கமல்/பார்த்திபன்) ஹிந்தியில் முக்கியமான படங்களுக்கு அமிதாப்பின் குரலை பயன்படுத்துவார்கள்(உ.தா.-lagaan). கண்டதிற்க்கில்லாம் நோக்கு வர்மம் நோக்கி சலிப்படைய வைத்தது என்னமோ உண்மை. அதே போல் செம பில்டப் கொடுத்தது.

  ReplyDelete
 17. நன்றி சென்னை பாய். தங்கள் பின்னூட்டம் என் உணர்வுகளையே பிரதிபலித்தது

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...