Tuesday, October 2, 2012

சென்னையில் பிடித்ததும், பிடிக்காததும்

சென்னை நல்லதும் கெட்டதும் கலந்த ஒரு ஊர். 16 வருடமாய் நமக்கு சென்னை வாசம் தான்.

சென்னை அனைவருக்கும் பிடிக்க, இதோ எமக்கு தெரிந்த பத்து காரணங்கள் :

1. இந்தியாவிலேயே அமைதியான ஒரு மாநிலம் தமிழகம் ! பல இடங்களில் வரிசையாக குண்டு வெடிப்பு நடந்த போது கூட சென்னை பக்கம் அநேகமாய் எந்த பிரச்னையும் இல்லை. ஊரடங்கு, கடை அடைப்பு, இன்ன பிற தொந்தரவுகள் இல்லாத அமைதி பூங்கா சென்னை.

2. சென்னையில் உள்ள நிறுவனங்களும், கடந்த பத்து ஆண்டுகளில் தொழில் துறை வளர்ச்சியும் பிரமிக்க வைக்கிறது. குறிப்பாய் ஆட்டோமோபைல் துறையில் சென்னை உலகிலேயே மிக சிறந்த ஒரு hub-ஆக உள்ளது. பெங்களூரு, மும்பை போன்ற ஊர்கள் விரிவடைவதில் புவியியல் ரீதியான சிரமங்கள் உண்டு. ஆனால் சென்னை மிக எளிதாக ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம் என விரிந்து பெரிய நிறுவனங்களுக்கு இடமளிக்கிறது.

3. உங்கள் திறமைக்கேற்ற வாய்ப்புகள் குவிந்து கிடப்பது மிக பெரிய பிளஸ். சினிமா, டிவி மீடியா, எழுத்து துறை என அனைத்திலும் உள்ள வாய்ப்புகள், அதை சரியே பயன்படுத்தி கொண்டால் பலரும் அறிந்த வி. ஐ. பி ஆக வைக்கும் இந்த சென்னை.

4. கல்விக்கு சென்னை மிக சிறந்த இடம் ! ஐ. ஏ. எஸ் துவங்கி சி. ஏ வரை எந்த படிப்புக்கும் மிக சிறந்த பயிற்சி கிடைப்பது சென்னையில் தான்... ! தனிப்பட்ட முறையில் ACS, ICWA என்கிற இரு கடினமான கோர்ஸ்கள் நான் முடிக்க சென்னையில் கிடைத்த exposure மற்றும் பயிற்சி தான் காரணம்.


5. சென்னையின் ரயில் சேவை குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று. எலெக்ட்ரிக் டிரெயின்,  பறக்கும் ரயில் மிக குறைவான கட்டணத்தில் மிக விரைவாய் எங்கும் கொண்டு சேர்க்கும். மெட்ரோ ரயிலும் வந்து விட்டால் சென்னையை அடிச்சிக்க முடியாது.

6. இங்குள்ள மனிதர்கள்- சென்னை வாசிகள் பொதுவாய் கடவுளுக்கு பயந்தவர்கள்- இதனால் தப்பு செய்யவும் தான். (சாமியார்கள் விதிவிலக்கு). அன்பானவர்கள். நீங்கள் கேட்டால் (ஆம் கேட்டால்) உதவும் தன்மை உள்ளவர்கள். சிக்கனமானவர்கள். சேமிப்பவர்கள். குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவர்கள். நிறுவனத்துக்கு உண்மையாய் (loyal) உழைப்பவர்கள்.

7. பொழுது போக்கு: சினிமா, டிராமா, இசை நிகழ்ச்சி துவங்கி, முதலை பண்ணை - குவீன்ஸ்லான்ட் என பொழுது போக்குக்கு பஞ்சமே இல்லை. சென்னையில் இருந்தால் காலை துவங்கி இரவு வரை நேரம் போவதே தெரியாது. ( சொந்த ஊர் போகும் போது தான் இதை நன்கு உணர முடியும். இரண்டு நாளுக்கு மேல் அங்கு என்ன செய்வதென்று தெரியாது. மனது சென்னையை தேட ஆரம்பிச்சிடும்)

8. மருத்துவதுறை: இந்தியாவில் மருத்துவத்துக்கு சிறந்த சில இடங்களில் சென்னையும் ஒன்று. சங்கர நேந்திராலயா சென்றால் ஏராளமான வட இந்தியர்கள் சிகிச்சை எடுப்பதை காணலாம். இது பல மருத்துவ மனைகளுக்கும் பொருந்தும். சற்று காஸ்ட்லி என்றாலும், நல்ல மருத்துவம் சென்னையில் கிடைக்கும் என நினைக்க ஆரம்பித்து விட்டனர் மக்கள்

9. உணவு: பிற நாட்டு, பிற மாநில உணவை விட சென்னை உணவு தான் மிக சிறந்தது என்று அடித்து சொல்ல முடியும். நம் கம்பனிகளுக்கு வரும் வெளிநாட்டினர் " ஸ்பைசி..ஸ்பைசி " என்று சொல்லியவாறே நம் சாப்பாட்டை வெளுத்து கட்டி விட்டு " இது மாதிரி சாப்பாட்டை எங்கும் சாப்பிட்டதில்லை" என்பதே இதற்கு சான்று. வெளியூர் செல்லும் நாம் சிக்கி சின்னாபின்னமாகி எப்படா ஊரில் சாப்பிடலாம் எனசென்னைக்கு ஓடி வருவது இன்னொரு கொசுறு சான்று.

10. ஷாப்பிங்: நூறு ரூபாய் துவங்கி பத்தாயிரம் ரூபாய் வரை ரெடிமேட் சட்டை எடுக்க முடியும். பெண்களுக்கோ கொண்டாட்டம் தான். டி நகர் துவங்கி மயிலாப்பூர், வட சென்னையின் ஹோல்சேல் துணி கடை வரை... சென்னை ஒரு துணி கடல் ! நகை, புத்தகம், இப்படி என்ன வாங்கணும்னாலும், சென்னைக்கு வாங்க !

****
இனி சென்னையின் கருப்பு பக்கங்கள் :

1. அரசியல்வாதிகள்: தமிழகத்தில் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஆட்சி மாறுவதால் சென்னையில் எந்த ஒரு பாலிசி முடிவும் ஆட்டம் காண்கிறது. ஒருவர் மெட்ரோ ரயில் என்பார்.அடுத்தவர் வந்து, மோனோ ரயில் என மாற்றுவார். ஒருவர் கண்ணகி சிலையை எடுப்பார். இன்னொருவர் மீண்டும் சிலை வைப்பார். இப்படி எல்லா முடிவும் ஐந்தாண்டுக்கொரு முறை மாறி மாறி நடப்பதில் முன்னேற்றம் ரொம்பவும் தடைபட்டு விடுகிறது.

இரண்டு கட்சிகளும் லஞ்சத்தில் திளைத்தவை. ஒவ்வொரு கவுன்சிலரும் கண் முன்னே கார், வீடு என வாழ்நாளைக்கு தேவையான மொத்த பணமும் ஐந்தாண்டில் சம்பாதிப்பதை நாம் பார்த்தவாறு சும்மா இருக்கிறோம். படித்த மக்கள் படிக்காத இந்த ஆட்களிடம் பல்வேறு அப்ரூவல்களுக்கு காசும் தந்து விட்டு அலைய வேண்டிய சூழ்நிலை.

நம் வாழ்நாளில் இங்கு அரசியல் புனிதமாகும் என்ற நம்பிக்கை இல்லை !

2. ஆட்டோ கட்டணம் : சென்னை அளவு மிக அதிக ஆட்டோ கட்டணம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. பெங்களூரு, ஹைதராபாத், கேரளாவின் பல பகுதிகள், டில்லி என எங்கு சென்றாலும் மீட்டர் போட்டு அதில் வரும் காசு வாங்குகிறார்கள். அந்த ஊர்களில் வாங்குவதை விட குறைந்தது இரண்டு அல்லது மூன்று மடங்கு இங்கு கட்டணம் ! மீட்டர் போட்டு ஓட்ட சொல்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

3. மிக மோசமான சாலைகள்: சென்னையில் அடையார் போன்ற "வசதி வாய்ந்தவர்கள்" இருக்கும் இடங்களில் வேண்டுமானால் சாலைகள் நன்கு இருக்கலாம். ஆனால் தாம்பரம், மடிப்பாக்கம், வேளச்சேரி போன்ற பல இடங்களில் மிக மோசமான சாலைகள். சரியான பிளானிங் இல்லாமல் செய்யப்பட்ட லே அவுட்கள்.

நல்ல ரோடு போட்டால் ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சி ரோடு போட்டு காசு செய்ய முடியாதே என ஒவ்வொரு ஆண்டும் மறுபடி ரோடு போடுகிறது போலவே செய்து வைக்கிறார்கள். மழைக்காலத்தில் மக்கள் சாலைகள் நடுவே நடப்பார்கள். வேறு வழி இல்லை !

எந்த மேயர் வந்தாலும் சென்னை சாலைகள் அப்படியே தான் இருக்கிறது !

4. விலைவாசி: சமீபத்தில் விலைவாசி விண்ணை தொட்டு விட்டது. பஸ் கட்டணம், மின் கட்டணம், பால் விலை, வீட்டு வாடகை என அனைத்தும் உயர்ந்தததால், பத்தாயிரத்துக்கும் குறைவாய் சம்பாதிக்கும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகி போய் விட்டது. கஷ்டப்படும் சாதாரண மனிதர்கள் துயரத்துக்காய் சென்னை கவலைப்படுவதே இல்லை.

5. குப்பைகள்: தெருவில் ஒரு காலி மனை இருந்தால் அங்கு தெரு மக்கள் முழுதும் குப்பை கொட்டுவார்கள். இன்னொரு பக்கம் குப்பை எரிப்பு பெரிய அளவில் நடக்கும். கேரிபாகுகள் (Carrybags ) பயன்பாடு குறைந்த மாதிரியே தெரிய வில்லை.

6. சென்னையின் வெய்யில் : இங்கு மூன்று விதமான தட்ப வெப்பம் இருக்கும். ஹாட். ஹாட்டர். ஹாட்டஸ்ட்.. ! சென்னையில் பல வருடம் வாழ்ந்தவர்கள் கூட தாங்கி கொள்வார்கள். புதிதாய் சற்று நல்ல கிளைமேட் உள்ள இடங்களிலிருந்து வந்தவர்கள் புலம்பி தள்ளி விடுவார்கள்

7. பெயர் தெரியாத பக்கத்து வீட்டு காரர்: சென்னையை தாண்டி தமிழகத்தின் பிற ஊர்களுக்கு சென்றால், தெருவில் இருக்கும் அனைவர் பெயரும் தெரியும். அவர்கள் குடும்பத்தில் உள்ளவர் யார் என நிச்சயம் தெரியும். ஒருவருக்கு ஒரு தொந்தரவு என்றால் ஓடி வந்து உதவ தயாராய் இருப்பார்கள்.

கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு போகும் வீட்டில் காஸ் முதலியவை வாங்க உதவுவார்கள் என்று மட்டுமே பக்கத்து வீட்டில் பேசுகிறார்கள். இதை விட மோசம் சின்ன விஷயங்களில் சண்டை போட்டு கொண்டு ஒரு பிளாட்டில் இருப்போர் வேறு சிலருடன் பேச மாட்டார்கள். ஒரு பிளாட்டில் பத்து குடும்பம் இருந்தால் அனைவரிடமும் சண்டையின்றி பேசுவோர் ஒன்று அல்லது இரண்டு பேர் இருந்தாலே அதிகம் !

8. பார்க்கிங் : இது பெருநகரங்கள் அனைத்திலும் உள்ள பிரச்சனையா அல்லது சென்னையில் மட்டும் தான் உள்ளதா தெரியவில்லை. பிளாட்(Flat) களிலும் சரி, வெளி இடங்களிலும் சரி போதிய பார்க்கிங் வசதிகள் இருப்பதே இல்லை. வெளியில் போனால் வாகனம் நிறுத்துவதில் அடிக்கடி பிரச்சனை வருகிறது. அரசு நினைத்தால் இந்த விஷயத்தை ஓரளவு சரி செய்யலாம்.

****
நிறைவாக: எவ்வளவோ குறைகள் இருந்தாலும், வெளி மாநிலங்களில் தங்கள் படிப்புகேற்ற நல்ல வாய்ப்புகள் இருந்தாலும் ஏனோ சென்னையை விட்டு நிரந்தரமாய் நகர மனம் வருவதே இல்லை. இது தான் அக்மார்க் சென்னை வாசிகள் மனசு !
****
வல்லமை செப்டம்பர்  28,2012   இதழில் வெளியான கட்டுரை
****

31 comments:

  1. பிடித்த பத்து காரணங்களைப் படிக்கும் போது (சிலது) இவ்வளவு மாறி விட்டதா..? என்று தோன்றுகிறது...

    சென்னையின் கருப்பு பக்கங்கள் : உண்மை...

    மற்றபடி சென்னை : எல்லாமுமே அவசரம்...

    ReplyDelete
  2. நான் சென்னை யில் 22 வருஷமாய் இருக்கிறேன் எங்கும் அவசரம் எங்கும் இயந்திரத்தனம் என்ற நிலை, நம் ஊர் வரும் போது கிடைக்கும் அமைதி அங்கு எனக்கு கிடைப்பதில்லை இருந்தும் நமக்கு வாழ்வளித்த ஊர் எனும் போது அது எனது மரியாதைக்குரிய ஊர்

    எனக்கு பீச், திரையரங்கம்,shopping mal, பிடிக்கும்

    ReplyDelete
  3. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்ன்னு பாட்டு பாடாத குறைதான் போல

    ReplyDelete
  4. கருப்பு இன்னும் எவ்வளவோ இருக்கு சார்.ஸ்கூல் பீஸ் கொல்லை,கேபிள் டி.வி ,உணவகங்களில் அடிக்கும் கொள்ளைகள் இப்படி சொல்லி கொண்டே போகலாம்.மொத்தத்தில் சென்னை எனக்கு சுத்தமாக பிடிக்காது.இருந்தாலும் இன்னும் ஒரு இருபது வருஷத்திற்கு (அதுவரை நான் இருந்தால் ) சென்னை தான்.விதி.அந்த இருபது வருடத்தின் முடிவை எதிர்பார்த்து காத்திருந்து பின் சொந்த ஊரில்(காஞ்சிபுரம் அருகில்) செட்டில் ஆகும் எண்ணம்.
    மற்றபடி நல்ல கட்டுரை.தொடரட்டும்.

    ReplyDelete
  5. சென்னை மக்கள் சகமனிதர்களை நடத்தும் விதம் மிகவும் மோசமானது. பஸ் கண்டக்டர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் இன்னும் பல சேவைப் பணியாளர்கள் யாரையும் ஒருமையில் அழைப்பது, வேண்டா வெறுப்பாய், அலட்சியமாய், திமிராய் நடந்து கொள்வது இதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான்.

    ReplyDelete
  6. உங்களுக்காவது பிடித்தது பிடிக்காதுனு சொல்ல செய்தி இருக்கு எனக்கு வாழவேண்டிய நிர்பந்தமே இந்த சென்னை வாழ்க்கையை வாழ்நதுகொண்டிருக்கிறேன் என்பதே உண்மை.

    ReplyDelete
  7. சென்னை மக்களைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கும். இப்படியொரு ஊரில் வாழ்கிறார்களே என்று.

    ReplyDelete
  8. சென்னையின் நிறை குறைகள் பற்றி.சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். பள்ளி வயது காலத்தில் இருந்தே சென்னயில் இருப்பதால் குறைகள் அதிகமாகத் தெரியவில்லை. குப்பை ஒன்றைத் தவிர. நான்கைந்து ஆண்டுகளாகவே குப்பைகள் காரணமாக சென்னை மீது வெறுப்பு ஏற்படுகிறது. எங்கள் வீட்டின் முன் உள்ள குப்பையைப் பார்த்தாலே தெரியும்.மக்களின் பொறுப்பற்ற தன்மையைப் பார்க்கும்போது எரிச்சல் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.

    ReplyDelete
  9. சரியான பார்வை மோகன் குமார்.

    ReplyDelete
  10. அருமையான அலசல் சார்.டிராஃபிஜாம் பற்றி சொல்லவே இல்லையே.//சென்னை மக்களைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கும். இப்படியொரு ஊரில் வாழ்கிறார்களே என்று.// ஹுஸைனம்மா ஏன் இந்த கொலவெறி.ஜஸ்ட் ரெண்டு மூன்று நாட்கள் இருந்து பார்த்து விட்டு இப்படி சொல்லப்படாது.உங்கள் அபுதாபியை விட எங்கள் சென்னை தவுஸண்ட் டைம் பெட்டர்..:)குடும்பத்துடன் வெளியில் சென்றால் மனைவி மக்களை வீட்டு வாசல் அருகே இறக்கி விட்டு ,கணவர் காரை பார்க் செய்யப்போனாரானால் வீட்டுக்கு போன மனைவி சமைத்து வைத்து ரெடியாகி இருப்பார்.காரை பார்க் பண்ண அத்தனை கஷ்டம்.இதற்கு சென்னை எவ்வளவோ மேல்.அபுதாபியில் இருந்த ஐந்து நாட்களும் நான் நொந்து வெந்து போய்விட்டேன்.

    ReplyDelete
  11. எனக்கும் பிடித்த ஊர் சென்னை aka மெட்ராஸ் .நான் அதிகம் ரசிப்பது மீனம்பாக்கம் ஏர்போர்ட் போகும் வழியில் காரில் இரவு பனிரெண்டு மணி வேளையில் அமைதியான உறக்கத்திலிருக்கும் சென்னையை ..சென்னையை விட்டு வந்தபின்தான் அதன் அருமை தெரிகிறது :(
    ஐ மிஸ் my சென்னை

    ReplyDelete
  12. ஹுசைனம்மா சொன்ன மாதிரி எனக்கு சென்னைல வசிப்பவர்களை பார்த்தால் ரொம்பவும் பரிதாபமாக இருக்கும். 'மரியாதை தெரியாத மக்கள்' என்று சில சமயம் கோபமும் வந்ததுண்டு இருந்தாலும் இப்ப என்னோட தங்கமணி ஊர் ஆயிட்டதால 'மெட்ராஸ் மாதிரி வருமா?'னு பீலா விடவேண்டியது தான்! :))

    ReplyDelete
  13. வந்தாரை வாழ வைக்கும் சென்னையின் நிறை குறைகளை அலசிய விதம் அருமை! நன்றி!

    ReplyDelete
  14. சென்னையின் மிகப்பெரிய பலவீனம் மரியாதை தெரியாத மக்கள்.

    ReplyDelete
  15. மிகப்பெரிய பலம் கல்வி

    ReplyDelete
  16. அழகிய புகைப்படம்! ரயில்வே ஸ்டேஷன் உள்ளேயே நிற்பது போலப் ப்ரமை! மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கும் நாளை எதிர்பார்த்துதான் ஒவ்வொரு சென்னைத் தமிழனும் இருப்பார்! நம் வாழ்நாளில் இல்லை, இனி அரசியல் புனிதமாகவே ஆகாது! சென்னையின் வெய்யிலுக்கு மெட்ரோ ரயிலுக்காகவும், சாலை விரிவாக்கத்துக்காகவும் மரங்களை வெட்டித் தள்ளியதும் காரணம் என்கிறது இன்றைய தினசரி ஒன்று.

    "குறைநாடி, நிறைகளும் நாடி அவற்றில்
    மிகை நாடி மிக்கக் கொளல்!"

    ReplyDelete
  17. நீங்க சொன்ன + எல்லாம் ஒ.கே சார். மைனஸ்ல 5,7 -ஐ நான் ஒத்துக்கவே மாட்டேன். குப்பைகள் கண்ட கண்ட இடங்களில் போடுவது எல்லா நகரத்திலும் இருக்கு சார், நீங்க வேணுமின்னா பெங்களூர் எப்படி இருக்குன்னு போய்ப் பாருங்க. மத்தவங்க பேசுவது இருக்கட்டும், நீங்க மத்தவங்க கிட்ட பேச முயற்சி பண்ணியிருக்கீங்களா? சண்டையில்லாத ஊரே இல்லை. ஏன் சென்னையை குறிப்பிட்டு சொல்றீங்க? நீங்க எழுதுவதை நிறைய பேர் படிக்கிறாங்க, சென்னை குப்பை நகரம்னு நினைப்பாங்க, அதனால 5,7 -ஐ நீக்கிடுங்க. [ஒரு முறை கே.கே. நகர் வந்து பாருங்க]

    L Indira, KK Nagar

    ReplyDelete
  18. நல்ல அலசல்.
    ஒரு கோர்ஸ் படிப்பதற்காகவும், வேலை தேடியும் சேர்ந்தாற் போல ஆறு மாதங்கள் சென்னையில் இருந்திருக்கிறேன். மற்றபடி ஓரிரண்டு நாட்கள் தான்.... சென்னையின் கருப்பு பக்கங்கள் மாறினால் எல்லோருக்கும் நன்றாக இருக்கும். பார்க்கலாம்.

    ReplyDelete
  19. சென்னை அளவு மிக அதிக ஆட்டோ கட்டணம்

    It should be "மிக.. மிக......"

    ReplyDelete
  20. ......வேண்டாம், இது குறித்து ஏற்கனவே ஈரோட்டில் வைத்து நான் உங்களிடம் நிறையவே பேசிவிட்டேன்...

    எனது தனிப்பட்ட கருத்து ., வாழ்வதற்கும் , வசிப்பதற்கும் வித்தியாசம் உண்டு., என்னால் கோவையில் வாழ முடிகிறது, சென்னையில் வசிக்க முடிகிறது! உங்களுக்கும் இது போன்று ஒரு கருத்து இருக்கும், இருக்கணும்!

    :-)

    ReplyDelete
  21. நல்ல பதிவு மோகன். பிடிக்கிறது பிடிக்கவில்லை என்பதைத் தாண்டி கட்டாயக் காரணிகளே வசிப்பிடத்தைத் தீர்மானிக்கின்றன. இருக்கும் இடத்தில் நிறைகளை கண்டு வாழ்வைக் கழிப்பது தான் நியதி.

    "குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்" என்பது அய்யனின் குறள். அதை குறை நாடி நிறை நாடி என்று எழுதியிருக்கிறார்கள். மக்கள் கண்டு பிடிப்பு வேட்கை திருக்குறள் வரை நீண்டு விட்டது.

    ReplyDelete
  22. பரபரப்பே உன் பெயர்தான் சென்னையா,
    நன்றி உங்கள் பதிவு அருமையாக இருந்தது. எனக்கு சென்னை மிக அதிகமாக பிடித்து போனது ஏனென்றால் உங்களைப்போல எத்தனை காலம் வசித்தாலும் சொந்த ஊரை மறக்காத நல்லவர்களும் வசிப்பதால்.

    ReplyDelete
  23. சென்னை குறித்து தாங்கள் எழுதிய சில விஷயங்களில் முற்றிலும் மாறுபடுகிறேன். விரைவில் எனது பார்வையில் மெட்ராஸ் பற்றி பதிவிட முயற்சிக்கிறேன்!!

    ReplyDelete
  24. @ஸாதிகாக்கா,

    அபுதாபியில் பார்க்கிங் மட்டுமே பிரச்னை (அதுவும் இப்போ கட்டண முறை கொண்டுவந்ததும் நிறைய மாறிவிட்டது). ஆனா,சென்னையில் எதுதான் பிரச்னை இல்லை சொல்லுங்க? சுவாசிக்கும் காற்று முதல் சமைக்கும் வாயு வரை எல்லாமே பிரச்னைதான்!! :-))))))

    ReplyDelete
  25. பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்களில் சிலருக்கு மாற்று கருத்து உள்ளது புரிகிறது. தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி !

    ReplyDelete
  26. சென்னையின் நிறைகுறைகளை நல்லா அலசியிருக்கீங்க. குறைகளையும் பொறுத்துக்கிட்டுத்தான் ஒவ்வொரு ஊரிலும் வாழ வேண்டியிருக்கு. என்ன செய்யறது :-)

    ReplyDelete
  27. அண்மையில் வந்ததில்லை. வந்து பார்த்துவிட்டால் சரிதான் :)))

    ReplyDelete
  28. இப்போதுதான் பார்த்தேன். வலைபதிவுகள் படிப்பது அவ்வளவாகக் கிடையாதென்பதால்.

    நான் மூன்றாண்டுகள் சென்னையில் வசித்தேன். என் முதல் வேலையை விட்டுவிட்டு இரண்டாவது வேலைக்குச் சென்னைக்கு நகர்ந்தேன்.

    வாலிபம். 24. சென்னையின் அழகுப்பெண்கள் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். நோக்க நோக்க களியாட்டம் என்று பாரதியார் சொன்னதை உணர்ந்தேன். நன்றாக பவுசான உடைகளில். கலர் கலராக. வடநாட்டில் நிறம். இங்கே எல்லாமே. நன்றாக என்னிடம் பேசினார்கள். நான் பார்ப்பதற்கு அப்புக்குட்டி. என்னிடம் பேசி இரசித்தார்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும்.

    இன்னொன்று நீங்கள் சொன்ன மறந்தது. பின்னூட்டங்களில் எவருமே உங்களுக்கு அதை நினைவுபடுத்தவில்லை.
    கலாச்சார வாழ்வு.

    எனக்கு கலாரசனை அதிகம். அதற்கு சென்னை வாழ்க்கை அபரிதமான வாய்ப்புக்களை வழங்கியது. என் மாலை நேரங்கள் பெரும்பெரும் காலரிக்களில்தான். ஓவியக்காட்சிகள். பிரிட்டிஸ் கவுன்சில் பெம்பர்சிப்பை வைத்து அங்கு நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தேவநாயப்பாவாணர் அரங்கிலும் செருமன் அரங்கிலும் நான் கேட்ட தமிழறிஞர்கள்; எழுத்தாளர்கள் ஏராளம். பெரும் தமிழறிஞர் சிலரை நேரில் பார்த்து உசாவும் பாக்கியத்தைச் சென்னை வழங்கியது. (எ.கா பேராசிரியர் ந சஞ்சீவி) ஆங்கிலத்தில் பலரைக்கேட்கும் இன்பம் கிடைத்தது. Nani Phalkiwaala, Krishna Iyer. பலகலைக்கழக அரங்குகளில் மற்றவரங்குகளிலும். டிசம்பர் சீசன் இசை மேதைகளையும் கேட்டு ஆன்ந்தித்தேன். பார்த்தசாரதி நாடக சபாவின் மனோகரின் வரலாற்று நாடகங்கள்; கலைவாணர் அரங்கில் மற்றவர்களின் நாடகங்கள் என்று என விடுமுறை மாலைகள் கழிந்தன. எல்லா இரவுகளிலும் படித்துத் திளைக்க பிரிட்டிஸ் கவுன்சில் நூலகமும், தேவநேயப்பாவாணர் நூலங்களும் ஈந்த நூல்கள். என அலுவலகம் மவுண்ட்ரோடில் இருந்தது. அங்கிருந்து திருவல்லிக்கேணி நடையில்தான்.

    கோயில்கள் எனக்குப் பிடித்த சமாச்சாரம். பெண்களுக்காக மட்டுமன்று; தெய்வத்துக்காக மட்டுமன்று. அங்கு நடக்கும் உபன்யாசங்களுக்காகவும்தான். நான் வாழ்ந்தது திருவல்லிக்கேணியில். பாரதியாரின் வீட்டையே நாளும் கடப்பேன்.

    விடியலில் (5 மணிக்கு) காலை நடை அத்தெருக்களின் வழியாகச் சென்று கடற்கரையை அடைந்து கடற்காற்றை சுவாசிப்பது அலாதி ஆனந்தம்.

    மக்கள்? சாதி வெறி இல்லை. அது போதுமே !

    இவையெல்லாம் எப்படி சாத்தியமானது? என் நேரம் எனக்கு மட்டுமே செலவழிக்க முடிநதனால். மணமாகாதவன் வாழ்க்கைக்கு அபரிதமான வாய்ப்புக்களை வழங்குகிறது சென்னை. அப்படிப்பட்ட வாழ்க்கையை சென்னையில்தான் கழிக்க, களிக்க வேண்டும்.

    ReplyDelete
  29. தஞ்சம் கொடுத்திடும் சென்னை
    இவள் நெஞ்சம் சுரந்திடும் அன்னை.
    i always love my chennai :)

    ReplyDelete
  30. பிடித்த படிக்காத விஷயங்கள் சமமாகவே உள்ளன. அப்பப்போ உறவினர் வீடுகளுக்கு மட்டுமே வந்துபோகும் என்னைப்போன்றவர்களுக்கு பிடித்தது-- யாரைக்கேட்டாலும் நின்று பொறுமையாக அட்ரஸ், வழி சொல்வார்கள்.ஆச்சரியம்-- எங்கு பார்த்தாலும் எல்லோரும் இவ்வளவு அவசரமாக எங்கே ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் என்று.

    ReplyDelete
  31. நல்ல அலசல் மோகன்.

    வசிக்குமிடம் எதுவென்பது வேலை என்பதால் நிச்சயக்கப்படுகிறது. பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ இருந்து தான் ஆக வேண்டிய கட்டாயம்....

    எனக்கு என்னமோ சென்னை பிடிப்பதில்லை.... :) இருபத்தி இரண்டு வருடங்களாக தில்லியில் இருந்துவிட்டதால் இருக்கலாம்! :))

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...