Friday, October 5, 2012

ஆதாமிண்டே மகன் அபு--மலையாளம்-விமர்சனம்

யல்பான கதையும், இயற்கையான நடிப்பும் சேர்ந்த படங்கள் மொழியையும் தாண்டி நம்முள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விடும். அத்தகைய ஒரு படம் தான் மலையாளத்தில் வெளியான - ஆதாமிண்டே மகன் அபு !


இரண்டு கோடிக்கும் குறைவான செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் 2010-ல் வெளியாகி விமர்சகர்களின் பெரும் ஆதரவை பெற்றது.

கதை என்னவென்று பார்ப்போமா?

அபு - ஆயிஷம்மா என்கிற வயதான தம்பதி - கேரள கிராமத்தில் தனியே வசிக்கின்றனர். வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்கும் அவர்களின் மகன் இவர்களை வந்து பார்ப்பதோ இவர்களுடன் பேசுவதோ கூட இல்லை. இதில் பெற்றோர் இருவருக்கும் ஏகமாய் வேதனை.

அத்தர் என்கிற வாசனை திரவியம் மற்றும் சில புத்தகங்கள் விற்று பிழைப்பு நடத்துகிறார் அபு. மனைவி வீட்டில் மாடுகள் வளர்த்து சற்று பணம் ஈட்டுகிறார்.

இருவருக்கும் இந்த தள்ளாத வயதில் ஒரே லட்சியம் - ஒரு முறையாவது ஹஜ் பயணம் செல்ல வேண்டும் என்பதே ! ஹஜ் மானியம் பெற்று பயணம் செல்வது எந்த அளவு சாத்தியம் என தெரியாததால் தனியார் டிராவல்ஸ் மூலம் பயணிக்க முடிவு செய்கிறார்கள்

அவர்கள் இத்தனை வருட சேமிப்பு பணம், மனைவியின் நகைகள், மாடை விற்பது என பணம் திரட்டுகிறார்கள். மீதமுள்ள பணத்துக்கு தங்கள் வீட்டில் உள்ள பலா மரத்தை விற்க முடிவு செய்து அதே ஊரில் உள்ள கலாபவன் மணியிடம் பேசுகிறார்கள். அவர் இவர்கள் ஹஜ் பயணத்துக்கு உதவும் எண்ணத்தில் அறுபதாயிரம் தர ஒப்பு கொண்டு முன் பணமாக பத்தாயிரம் தருகிறார்.

பாஸ்போர்ட் வாங்குவதில் துவங்கி எல்லா ஏற்பாடுகளும் செய்கிறார்கள். ஹஜ் பயணத்துக்கான தடுப்பூசி போடுவது, ஒவ்வொரு நண்பராய் சந்தித்து அவர்களிடம் பிரியா விடை பெறுவது என அனைத்தும் சரியே நடக்கும் நிலையில் ஒரு விஷயம் இடியாய் வந்து இறங்குகிறது

பலா மரத்துக்கு மீதம் பணமான ஐம்பதாயிரம் தரும் கலாபவன் மணி, அந்த மரம் பட்டு போய் விட்டது என்று கூறி விட்டு - இருந்தாலும் நான் ஒப்பு கொண்ட படி இந்த பணம் தருகிறேன் என்று சொல்ல, அபு அந்த பணத்தை வாங்க மறுத்து விடுகிறார்.

" நான் செல்வது நல்ல காரியத்துக்கு- கடனாகவோ, தவறான முறையிலோ பணம் ஈட்டி செல்ல கூடாது" என்று கூறி விடுகிறார்.

வீட்டின் அருகில் இருக்கும் நண்பர் நெடுமுடி வேணு, டிராவல்ஸ் மேனேஜர் உள்ளிட்டோர் பணம் தர முன் வந்தாலும் "சொந்த ரத்த சம்பந்தத்தினர் மட்டுமே ஹஜ் பயணத்துக்கு உதவலாம்" என மறுக்கிறார்.

" மரம் வெட்டியது கூட அல்லாவிற்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம், அதுவும் ஒரு உயிர் தானே? அந்த மரத்தை நம்பி எத்தனை உயிர்கள் இருந்தன? அதனால் தான் ஹஜ் பயணம் வாய்க்க வில்லை; அடுத்த முறை நிச்சயம் செல்வோம் " என மனைவியிடம் கூறி விட்டு, பக்ரீத் அன்று புதிதாய் ஒரு பலா மரம் நடுவதுடன் படம் நிறைவடைகிறது.

சலீம் குமார் அபுவாக வாழ்ந்துள்ளார். சிறந்த நடிகருக்காக மத்திய அரசின் விருதும் கேரள அரசின் விருதும் பெற்று தந்த நடிப்பு. அந்த பாத்திரத்தின் எதிர்பார்ப்பு, ஏக்கம், கோபம், இயலாமை எல்லாமே மிக சரியே பிரதிபலிக்கிறது இவர் நடிப்பில். இவர் மட்டுமல்லாது குடை ரிப்பேர் செய்பவர் உள்ளிட்ட ஒழிந்து வரும் பல சிறு தொழில்கள் குறித்த வேதனை படத்தின் ஊடே தெரிகிறது.

கலாபவன் மணி, நெடுமுடி வேணு, முகேஷ் போன்ற பல பெரிய நடிகர்கள் முக்கியமான சிறு பாத்திரங்களில் நடித்துள்ளனர். அபுவின் மனைவியாக வருபவர் சலிமை விட நிச்சயம் மிக இளமையாக தெரிகிறார்.

படம் மெதுவாக ஒரு ஆர்ட் பிலிம் போல துவங்கும் போது மிக போர் அடிக்குமோ என்று தோன்றுகிறது. போக போக அவர்களின் பயணத்தில் நாமும் இணைந்து விடுகிறோம். " எப்படியாவது அவர் ஹஜ் சென்றால் நன்றாயிருக்கும்" என ஒரு பக்கம் நினைத்தாலும், மறு பக்கம் " இது மலையாள படம்; நிச்சயம் அப்படி முடிக்க மாட்டார்கள்" என்று தெளிவாக புரிகிறது.

படத்தில் வில்லன் என்று யாரும் கிடையாது. வரும் அத்தனை பாத்திரங்களும் நல்லவர்களே. ஒரு விதத்தில் பார்த்தால் கதை முழுக்க முழுக்க அபுவின் பார்வையில் சொல்லப்படுகிறது. அவர் மற்றவர்களிடம் நல்ல விதமாய் நடந்து கொள்வதால், மற்றோரும் அப்படியே நடந்து கொள்கிறார்கள்.

கடைசியில் எல்லாரும் அபுவிற்கு உதவ தயாராய் இருந்தும் கூட, யார் உதவியும் அவர் பெற்று கொள்ளாத போது படம் பார்க்கும் நமக்கு அவர் மீது தான் கோபம் வருகிறது. ஒவ்வொருவர் உதவியும் பெறாமல் இருக்க ஒவ்வொரு காரணம் சொல்கிறார் அபு. " நல்லவனாய் இருக்கலாம். ரொம்ப நல்லவனாய் இருக்கவே கூடாது" (Too good is bad ) என்பார்கள் அது தான் நினைவிற்கு வந்தது.

படத்தில் உஸ்தாத் என்று ஒரு ஞானி பாத்திரம். அவரிடம் அபு சென்று " உங்களுக்கு தான் எல்லாம் தெரியுமே ! நாங்கள் இந்த முறை ஹஜ் செல்வோமா?" என்று கேட்க, அதற்கு உஸ்தாத் ஆம் என்றோ இல்லை என்றோ சொல்லாமல் " முயற்சி செய்" " முயற்சி செய்" என்றே மறுபடி மறுபடி சொல்கிறார். நமக்கு இங்கேயே கூட அவர்கள் ஹஜ் செல்ல போவதில்லை என உணர்த்தப்படுகிறது

உண்மையில் தங்களிடம் சிறு சிறு குறைகள் இருக்க, ஒவ்வொரு நியாயம் சொல்வார்கள் மனிதர்கள். " ஆண்டவன் நல்லவங்களை தான் சீக்கிரம் கூட்டிப்பான்" என்பது உதாரணத்துக்கு ஒன்று ! ஆனால் நல்லவனாய் இருப்பது சாதாரண விஷயமில்லை. அது முள் மேல் படுப்பது போன்ற ஒரு விஷயம். நல்லவர்களுக்கு தான் தொடர் சோதனைகள் வந்து கொண்டே இருக்கும். அவற்றை மீறி நல்லவனாய் தொடர்ந்து இருப்பது சாதாரண விஷயமில்லை.

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள், மத நல்லிணக்கம் (அபுவிற்கு உதவுவோர் இந்து அல்லது கிறித்துவர்கள்), சுற்று சூழல் பாதுகாப்பு (மரங்களை வெட்டாதீர்கள் ) போன்ற பல விஷயங்களை பூடகமாய் பேசி போகிறது படம். மத்திய அரசின் பல விருதுகளை தட்டி செல்ல இவையும் காரணமாய் இருந்திருக்கலாம்.

படத்தை இந்த லிங்கில் பார்க்கலாம் என்று நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளார்
http://www.youtube.com/watch?v=elwhu4wzmj4

மொத்தத்தில்

மனதை கனக்க செய்யும் இந்த படம் - ஒரு வித்தியாச அனுபவம். நீங்களும் ஒரு முறை இந்த படம் பார்ப்பதன் மூலம் இதனை அனுபவியுங்கள் !

34 comments:

  1. தமிழ் படமே எனக்கு புரியாது. இதுல மலையாளமா?! அவ்வ்வ் மீ எஸ்கேப். நாளைக்கு வரேன்

    ReplyDelete
  2. நேரம் கிடைக்கும் போது பார்க்க வேண்டும்...

    ReplyDelete
  3. நல்ல படம்!!

    காமெடியனாகவே நடித்து வந்த சலீம்குமார் அபுவாக வாழ்ந்திருப்பார்!

    கடன் வாங்கியாவது ஹஜ் பயணம் செல்லவேண்டுமென்ற கட்டாயமில்லை! என்று சிம்பிளாக எடுத்துக்கொள்ளலாம்!!

    //அபு - ஐஷு// "ஐஷு" அல்ல "ஆயிஷும்மா"

    ReplyDelete
  4. அருமையான, இயல்பான நடிப்புள்ள படம்.

    உங்கள் விமரிசனமும் அருமை!

    ReplyDelete
  5. நல்லதொரு படம்.இதைப்பார்த்து கண்கலங்கியிருக்கிறேன். இதை யூடியூபில் பார்க்கலாம்.http://www.youtube.com/watch?v=elwhu4wzmj4

    ReplyDelete
  6. பார்த்துவிட்டேன் தோழரே..நல்ல படம்..

    ReplyDelete
  7. Anonymous10:56:00 AM

    ஆஸ்காருக்குப் போகும் ஆதாமிண்ட மகன் அபு...

    http://solvanam.com/?p=17106

    ReplyDelete
  8. அருமையான படத்தைப் பற்றிய அழகிய பகிர்வு.. நிச்சயம் பார்க்கணும்.

    ReplyDelete
  9. ரொம்பவே நல்ல படம்..அனுபவித்தது எழுதி உள்ளீர்கள்..

    ReplyDelete
  10. Anonymous11:30:00 AM


    தனுஷ்(ஆடுகளம்) உடன் சேர்ந்து சிறந்த நடிகருக்கான விருதை சலீம் இப்படம் மூலம் பகிர்ந்து கொண்டார். இதுவரை நான் பார்த்ததில் சிறந்த மலையாளப்படமிது. ஆஸ்கருக்கு சென்றாலும் வெற்றி பெறவில்லை.

    ReplyDelete
  11. மென்மையான படம். விமர்சனம் அருமை.

    ReplyDelete
  12. நல்லதொரு படம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. உருக்கமான கதை. உங்கள் விமர்சனம் அருமை.

    ReplyDelete
  15. நல்ல அருமையான படம் நானும் பார்த்திருக்கிறேன் , சலீம் குமாரின் நடிப்பு அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  16. அருமையான படம் பற்றிய விமர்சனம்... பார்க்க முயல்கிறேன் மோகன்.

    ReplyDelete
  17. விமர்சனம் படிக்கும்போது படம் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  18. ராஜி: சப் டைட்டிலோட படங்கள் கிடைக்குது நல்ல படங்கள் மொழி தாண்டியும் பாருங்க

    ReplyDelete
  19. ராஜி: சப் டைட்டிலோட படங்கள் கிடைக்குது நல்ல படங்கள் மொழி தாண்டியும் பாருங்க

    ReplyDelete
  20. ரியாஸ்: நன்றி மாற்றிட்டேன்

    ReplyDelete

  21. நன்றி துளசி மேடம். நீங்களும் பார்த்தது அறிந்து மகிழ்ச்சி

    ReplyDelete
  22. யூ டியூப் லிங்க் தந்தமைக்கு நன்றி பாலா அவர்களே

    ReplyDelete
  23. நன்றி மதுமதி தோழரே

    ReplyDelete
  24. ஆம் பாலஹனுமான். தகவலுக்கு நன்றி

    ReplyDelete

  25. நன்றி அமைதி சாரல் இயலும் போது பாருங்கள்

    ReplyDelete

  26. வாங்க ராஜ். மிக மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  27. சிவா: நன்றி நீங்கள் இப்படம் பற்றி எழுதிருக்கீன்களா ? நான் படித்த நினைவில்லை

    ReplyDelete
  28. நன்றி கோவை டு தில்லி

    ReplyDelete

  29. வாங்க ஸ்ரீராம் நன்றி

    ReplyDelete
  30. நன்றி ராமலட்சுமி நன்றி

    ReplyDelete
  31. அசீம் பாஷா: நன்றி சார்

    ReplyDelete
  32. நன்றி வெங்கட் மகிழ்ச்சி

    ReplyDelete
  33. ஆம் முரளி சார் நன்றி

    ReplyDelete
  34. நானும் பார்த்தேன். நல்ல படம். நீங்கள் எழுதியதுபோல, நல்லவர்களே நிறைந்த கதை.

    இதேபோல, ஒரு ஆங்கிலப்படம் - தந்தை ஹஜ் செல்வதற்காக, ஃப்ரான்ஸ்லிருந்து சவூதிக்கு காரில் டீனேஜ் மகன், கட்டாயத்தின்பேரில் வேண்டாவெறுப்பாக அழைத்துச் செல்கிறான். பயணம் போகப்போக அவன் எண்ணங்கள் மாறும். நல்லாருக்கும். பேரு ”Le Grand Voyage”.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...