Thursday, November 15, 2012

சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ

ரையெல்லாம் செண்பகப்பூ .. சுஜாதாவின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்று. ஆனந்த விகடனில் தொடராக வந்து பின்னர் திரைப்படமாகவும் வந்தது. இப்படம் அவ்வப்போது டிவியில் போடுவர். துரதிர்ஷ்ட வசமாய் படம்  அப்படி  போடப்படும் போதெல்லாம், பாதியிலிருந்து தான் பார்ப்பேன்.  ப்போதும் முழுமையாய் பார்த்ததில்லை.


முன்பே இக்கதை படித்திருந்தாலும் இப்போது படிக்கையில் ஒரு வித்தியாச அனுபவம் கிடைத்தது. பொதுவாக ஒரு கதையை படிக்கும் போது நமக்கு அது மனதில் ஒரு சித்திரமாக விரியும். இந்த கதையை இப்போது படிக்கையில், யார் யார் அந்த பாத்திரத்தில் நடித்துள்ளனரோ அவர்களை உருவகபடுத்தியவாறு படிக்க முடிந்தது.

ஹீரோவாக பிரதாப், கிராமத்து பெண் வெள்ளியாக ஸ்ரீப்ரியா, பட்டண மங்கையாக சுமலதா, ஊர் கிழவியாக மனோரமா ஆகியோர் சினிமாவாக வந்தபோது நடித்திருந்தனர்
கதை

ஹீரோ கல்யாண ராமன் நாட்டுப்புற பாடல்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய திருநிலம் என்கிற கிராமத்துக்கு வருகிறான். அங்கு ஒரு பழைய ஜமீன் பங்களாவில் தங்கு ம் அவன் கிராமத்து பெண் வெள்ளியை நேசிக்கிறான். ஆனால் அவள் நேசிப்பதோ அவள் மாமன் மருத முத்துவை. (முக்கோண காதல் ஸ்டார்ட்டெட்)

அந்த கிராமத்துக்கு ஜமீனின் பேத்தியாக நாகரிக பெண் சினேகலதா வருகிறாள். கல்யாணராமன் தங்கும் அதே பங்களாவில் அவள் தங்க, பின் சில மர்மமான விஷயங்கள் நடக்கின்றன. பின் ஒரு கொலையும் நிகழ்கிறது.

அந்த கொலையை செய்தது யார், ஏன் கொன்றனர் , வெள்ளி யாரை மணந்தாள்..கல்யாணராமனையா.. மாமனையா போன்ற கேள்விகளை நாவலின் கடைசி அத்தியாயம் சொல்கிறது

****
பாசஞ்சர் போனால் போகிறது என திருநிலத்தில் நின்றது என முதல் வரியிலேயே புன்னகையுடன் நம்மை கதைக்குள் அழைத்து செல்கிறார் சுஜாதா. அடுத்த பாராக்களில் அவர் அந்த ரயில் நிலையத்தை விவரிக்கும் அழகு கதை எழுதுவோர் ஒவ்வொருவருக்கும் பால பாடம் ! சுஜாதா பல முறை சொல்லும் விஷயம் தான்.. டீடைலிங்.. எதையும் உற்று நோக்குதல். என்னை போன்ற ஆட்களுக்கு எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷன் தான் இதை வாசிக்கையில் கண்ணில் நிழலாடும்.

ஏராளமான பாத்திரங்கள். ஆனால் எந்த குழப்பமும் இல்லை. ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒரு தெளிவான ஸ்கெட்ச்/ குணாதிசயம் உள்ளது.

பல நாட்டுப்புற பாட்டுகள் கதையில் உபயோகம் செய்துள்ளார் சுஜாதா. கிராமத்து அனுபவம் இன்றியே, கிராமத்து கதையை தொட்ட சுஜாதாவின் தைரியம் வியக்க வைக்கிறது. அதனாலேயே ஹீரோவை சுஜாதா போல ஒரு நகரத்து மனிதனாக காண்பித்து, அவன் பார்வையில் கதை விரிவதாக வைத்து கொண்டார் போலும்.

கதை முடியும் போது வெள்ளியின் பாத்திரம் மனதில் பாரமாய் பதிகிறது. பெண்களுக்கு தங்கள் திருமணத்தில்,  நினைத்ததை பேசும் சுதந்திரம் கிராமங்களில் அவ்வளவு இல்லை தான்.

நாவல் 21 அத்தியாயங்கள் மட்டுமே. வார தொடராக வந்ததால் ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு செம சுவாரஸ்ய இடத்தில் கதையை நிறுத்துகிறார்.

சமீபத்தில் புயல் அடித்த நாளன்று டிவி & இணையம் இல்லாததால் இப்புத்தகத்தை கையிலெடுத்தேன். வழக்கம் போல் ஏக் தம் தான்.

நாட்டு புற பாட்டுகள் வரும் இடங்கள் தான் சற்று தொய்வு. மற்றபடி மிக சுவாரஸ்யமாக வழுக்கி கொண்டு ஓடுகிறது கதை.

சினிமாவாக வந்தபோது பெரும் தோல்வியை சந்தித்தது. அது பற்றி கூட சுஜாதா எழுதிய நியாபகம். நண்பர் பாலஹனுமான் போன்றோர் அதையும் நினைவு வைத்திருக்க கூடும் !

தல-யின் இந்த புத்தகத்தை வாய்ப்பு கிடைத்தால் அவசியம் வாசியுங்கள் !

***
நூலின் பெயர்: கரையெல்லாம் செண்பகப்பூ
ஆசிரியர்: சுஜாதா
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 216
விலை: ரூ 100

39 comments:

  1. அழகான நாவல். கடைசிவரை சஸ்பன்ஸ் சரியாக் கொண்டு சென்றிருப்பார். இந்தக்கதையை படித்தபிந்தான் டி.வி. யில் போட்ட படம் பார்த்தேன்.

    கதை படிக்கும் போது நான் உள்மனதில் ஒரு பிக்சரைஸேன் பண்ணி வைத்திருந்தேன், படம் பார்த்தபோது பெரும்பாலும் அது சரியாகவே இருந்தது.

    கதா பாத்திரங்கள் சரியாக தேர்வு, அதிலும் கிராமியப் பாடல்கள் பாடும் மனோரமா ஆச்சி சூப்பர்.

    :-)))

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. விகடனில் வெளிவந்த போது ஆவலுடன் வாசித்த தொடர்:)! படம் பார்த்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? வாரா வாரம் படிக்க செமையா இருந்திருக்கும்

      Delete
  3. படித்து பல வருடங்களாகி விட்டது. மீண்டும் படிக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. படியுங்கள் நன்றி வெங்கட்

      Delete
  4. படத்தின் பின்னணி இசையும் பாடல்களில் ’ஏரியில் எலந்த மரம் தங்கச்சி வச்ச மரம்’ பாட்டும் அருமையாக இருக்கும். நாவல் ஒரே ஒரு முறைதான், அதுவும் படம் பார்த்த பின்னர் தான், படித்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. அடேங்கப்பா.. பாட்டுல்லாம் நியாபகம் வச்சிருக்கீங்க நன்றி சீனி

      Delete
  5. இன்னும் படம் பார்க்கவில்லை ஆனால் நான் மிகவும் ரசித்த நாவல், நாட்டுபுறப் பாடல்கள் பற்றிய வாத்தியாரின் ஆராய்ச்சியும் ஆதியும் அந்தமும் பற்றி அவர் கூறும் வார்த்தைகளும் பிரமிப்பாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஆம் சீனு நன்றி

      Delete
  6. நாவலாக , தொடர்கதையாக படித்தபோது இருந்த சுவாரஸ்யம்
    திரைப்படமாகப்பார்த்தபோது இல்லை .

    ReplyDelete
  7. இவ்வளவு ஸ்பீடாகவா? அசத்தறீங்க. மீண்டும் ஒரு முறை நான் படித்து இது பற்றி விரிவாய் எழுதும் ஆவல் உங்கள் எழுத்தினால் அதிகரித்திருக்கிறது நண்பரே. நன்றி.

    ReplyDelete
    Replies

    1. Draft -ல் ஏற்கனவே இருந்தது; நேற்று நாம் பேசிய பின் இன்று வெளியிட்டு விட்டேன் நன்றி

      Delete
  8. படம் பார்த்திருக்கேன் சார்.ஒரு மாதிரி த்ரில்லாக போனாலும் இளையராஜா பாட்டு ரெண்டு மட்டுமே ஞாபகம் இருக்கு .பிரதாப் கிடார் வைத்துக்கொண்டு சின்ன பசங்களோடு பாடும் ஏரியிலே ஒத்த மரம் பாட்டு நன்றாக இருக்கும்.சில கடைகளில் இந்த புத்தகம் பார்த்தும் பொதுவாக சுஜாதா கதைகள் படமாக வந்தவற்றை(பிரியா,விக்ரம்,கரையெல்லாம்,காயத்ரி ) படிக்க ஆர்வமில்லை சார்.

    ReplyDelete
    Replies
    1. சரியாய் சொன்னீர்கள் நன்றி; தலைவரின் கடைசி காலத்தில் மணிரத்னம் & Shankar படங்களில் தான் சினிமாவில் தலைவர் மின்னினார்

      Delete
  9. படம் பாத்திருக்கிறேன் தோழரே..

    ReplyDelete
  10. My review on this...


    http://simulationpadaippugal.blogspot.in/2010/11/blog-post_09.html

    ReplyDelete
    Replies
    1. படித்தேன் அருமை

      Delete
  11. படமும்,கதையும் மறந்திடுச்சு.ஆனால் தலைப்பு மறக்கலை.நல்ல தலைப்பு.

    ReplyDelete
    Replies
    1. ஆம் நன்றி மேடம்

      Delete
  12. நானும் அரைகுறையாக படம் பார்த்திருக்கிறேன்! நாவல் வாசிக்கவில்லை! வாசிக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  13. படம் மட்டும் பார்த்திருக்கேன். நாவலாய் வந்ததைத்தான் படமா எடுத்திருக்காங்கன்னும் தெரியும். ஆனா, இதுவரை நாவலை படிச்சதில்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜி.
      படியுங்கள் நிச்சயம் பிடிக்கும்

      Delete
  14. நாவலை வாசிக்க சந்தர்ப்பம் கிடைக்கலை. ஆனா படம் பார்த்திருக்கேன். பொதுவா நாவல்ல இருக்கற சுவாரஸ்யம் அதைப் படமாப் பார்க்கறப்ப இருக்காதுன்னு சொல்லுவாங்க. படத்தை விட நாவல் எவ்ளோ சுவாரஸ்யமா இருக்கும்ன்னு வாசிச்சாத்தான் சொல்ல முடியும் :-))

    அருமையான விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. சரியாய் சொன்னீர்கள் நீங்க சொன்னது தலைவர் நாவலுக்கு ரொம்ப பொருந்தும்

      Delete
  15. படம் பார்த்திருக்கிறேன்... நாவல் படித்ததில்லை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்

      Delete
  16. படித்த புத்தகம். பிடித்த புத்தகம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம்.

      Delete
  17. Anonymous8:00:00 PM

    நான் மிகவும் ரசித்த நாவல்...

    ReplyDelete
  18. Anonymous9:55:00 PM

    கரையெல்லாம் செண்பகப் பூ 1981-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கதையாகப் படித்தபோது அடைந்த Feel படத்தில் கிடைக்காததால் படம் வெற்றி அடையவில்லை.

    இனி கரையெல்லாம் செண்பகப் பூ பற்றி….

    சுஜாதாவின் மிகப் பிரபலமான நாவல்களில் ஒன்று ‘கரையெல்லாம் செண்பகப்பூ’. நாட்டுப்புறப் பாடல் ஆராய்ச்சிக்காக திருநிலம் கிராமத்துக்கு வரும் நகர்ப்புற இளைஞன் சந்திக்கும் சம்பவங்களின் மர்மமும், பழிவாங்கலும் நிறைந்த பின்னணியில் தமிழக நாட்டுப்புறப் பாடல்களை ஊடாடவிட்டிருக்கிறார். இந்த நாவலுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் நாட்டுப்புறப் பாடல்கள் மேல் நிறைய கவனம் திரும்பியது. கிராமப்புர கவிதை வரிகளோடு கதையோட்டம் தெளிந்த நீரோடை போல் செல்லும்.

    நாட்டுப்புற பாடல் ஆராய்ச்சிக்கு கிராமம் செல்கிறான் நாயகன் (பிரதாப் போத்தன்). அங்கு அவன் தங்கும் பழைய வீட்டில் ஒரு புதையல். அதை எடுக்கும் திட்டத்துடன் ஒரு இளம்பெண், அவளுக்கு உதவியாளர்கள். அந்த கிராமத்துப்பெண் வெள்ளி (ஸ்ரீபிரியா). அவளை ஒரு தலையாக காதலிக்கும் நாயகன். அவளுக்கோ முறைப்பையன் மேல் ஆசை.

    இயல்பான நடையில், திடுக்கிடும் திருப்புமுனைகள் வரும் கட்டங்களிலும், ஒரே வரியில் அதன் ஆழத்தை சொல்லும் பாங்கு சுஜாதாவுடையது. உதாரணம் கரையெல்லாம் செண்பகப்பூவில் வரும் அந்த முடிவு
    ”என்ன சொல்ல நினைத்தாய் வெள்ளி?”
    சொல்லாமல் போன காதலின் சுமையாய் இந்த ஒரு வரிக்குள் அடக்கிவிடுகிறார்.

    ‘பழையனூர் நீலி’ கதை, ஜமீந்தாரிணி ரத்னாவதியின் உடைந்த ஆங்கிலக் குறிப்புகள் (‘Rathna not happy…’) – படிக்கும்போதே மனம் கரைந்து போகும். சிநேகலதாவின் கொலை, அப்புறம் கதையின் உச்சமாகப் புதையல் கண்டுபிடிப்பு…chilling.

    ReplyDelete
  19. Anonymous9:57:00 PM

    சுஜாதா கூறுகிறார்….

    ஆனந்த விகடனில் ‘கரையெல்லாம் செண்பகப்பூ‘ எழுதினேன். நாட்டுப்புறப் பாடல்களின் பின்னணியில் கிராமத்தில் வைத்து ஒரு த்ரில்லர் (இந்த யோசனை இளையராஜா தந்தார். வாசர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மக்கள் த்ரில்லரை மறந்துவிட்டார்கள். நாட்டுப்புறப் பாடல்களை இப்போதும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.
    நா.வானமாமலை இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் மட்டுமின்றி, நாட்டார் வழக்காற்றியல் பற்றியே பன்னிரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவர் செய்த பணி சிறப்பானது.

    வரலாறு, விஞ்ஞானம், ஆராய்ச்சி, அரசியல், தமிழில் முடியும் போன்ற தலைப்புக்களில் சுமார் நாற்பது புத்தகங்கள் எழுதியுள்ள இந்தப் பேராசிரியரிடம், நான் விகடனில் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ தொடங்குவதற்கு முன், அவரது ‘தமிழர் நாட்டுப் பாடல்கள்’ புத்தகத்திலிருந்து (இப்போது அதை என்.சி.பி.ஹெச். ‘தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்’ என்று பதிப்பிக்கிறார்கள்) சில பாடல்களைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டேன். அவர் ‘இந்தப் பாடல்கள் மக்கள் சொத்து. நீங்கள் தாராளமாக அவற்றைப் பயன்படுத்தலாம்’ என்று கார்டு போட்டிருந்தார்.

    என் தொடர் கதைகள் ஆரம்பமாகும் போதோ, அல்லது, முடியும் போதோ, சினிமா உலகத்துக்கு ஒரு விதமான ஆவேசம் வரும். அந்தக் கதையை சினிமா எடுத்தே ஒழிப்பது என்று வலுக்கட்டாயமாக ஒரு கோஷ்டி கிளம்பும். “கரையெல்லாம் செண்பகப்பூ” ஆரம்பித்த போது, என் தோட்டத்தில் ஒரு கிரிக்கெட் டீம் அளவுக்கு தயாரிப்பாளர்கள் கூடி விட்டார்கள்.

    கரையெல்லாம் செண்பகப்பூ தொடர்கதையாகத் துவங்கின உடனேயே, பலர் அதை சினிமா எடுத்தே தீருவேன் என்று பிடிவாதமாக என்னை அணுகினார்கள். ஆசிரியர் சாவி, பாலுமகேந்திரா, பிரமிட் நடராஜன், இசைஞானி இளையராஜா, புவியரசு, பஞ்சு அருணாசலம் இவர்களிடையே தீர்மானிக்க முடியாமல் திணறினேன். பாலுமகேந்திரா கோகிலா படப்பிடிப்புக்காக பெங்களூர் வந்திருந்தார். மறைந்த நடிகை ஷோபா, பிரதாப் போத்தன் இருவரையும் வைத்து அந்தக் கதையை எடுக்கப் போவதாகச் சொன்னார். பிரமிட் நடராஜன் தயாரிப்பதாக இருந்தது. அவர் ‘சரத்பாபுவை வைத்துப் பண்ணுங்கள்’ என்றார். பாலுமகேந்திரா விலகிவிட்டார்.

    கொஞ்ச நாள் கரையெல்லாம் செண்பகப்பூ யாரெடுப்பார்கள் என்கிற தீர்மானமில்லாமல் கிடப்பில் இருந்தது. இறுதியில், கதையை எல்லாரும் மறந்து போன பின் ஜி.என்.ரங்கராஜன் அதை எடுத்தார். கதாநாயகன் அதே பிரதாப் போத்தன், கதாநாயகி ஸ்ரீப்ரியா. மனோரமா திறமையாக நடித்தார்.

    படம் சித்ரா தியேட்டரில் ஒரு வாரம் போல் ஓடியது. எப்போதாவது டிவியில் அந்தப் பாடத்தைக் காட்டுகிறார்கள். அதைப் பார்த்தவர்கள் ‘இப்போது வரும் படங்களுக்கு அது பரவாயில்லை’ என்றுதான் சொல்கிறார்கள்.

    கரையெல்லாம் செண்பகப்பூ திரைப்படத்துக்கு எனக்குக் கிடைத்த வருமானம் எவ்வளவு என்பதை அறிந்துகொள்ள வாசகர்கள் ஆவலாக இருக்கலாம். அந்தக் காலங்களில் எல்லாமே வாய் வார்த்தைதான். ‘நீங்க போங்க, பின்னாலயே ஒரு செக் அனுப்புகிறேன்’ என்பார்கள். அனுப்பிய செக்கை அடுத்த வெள்ளிக்கிழமை போடுங்கள் என்பார்கள். சிலர் டோக்கன் அமௌன்ட் கொடுப்பார்கள். குறிப்பாக இந்த நாவலுக்கு ஒரே ஒரு தயாரிப்பாளர் ஐயாயிரம் ரூபாய் தந்தார். இதில் செய்தி — படத்தை அவர் எடுக்காததால் போன் பண்ணி கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டார். வங்கியில் அந்த செக் மாறினதுக்கு பத்து ரூபாய் சார்ஜ் செய்தார்கள். எனவே கசெபூ படமாக வந்ததற்கு நான் பத்து ரூபாய் செலவு செய்தேன். என் மனைவி எனக்கு வராத பணம் அனைத்துக்கும் கணக்கு வைத்திருக்கிறாள்.

    ஜி. என்.ரங்கராஜன் கடைசியில் அதை எடுத்து ஒரு வழி பண்ணினார். இப்போதுகூட ஒரு டைரக்டர் அந்தக் கதையை ரீ-மேக்காக மறுபடி எடுக்கலாம் என்று என்னை அணுகினார். ‘என்னங்க… அவன் நாட்டுப்பாடல் ஆராய்ச்சிக்கு சுவிட்சர்லேன்ட் போறதா வச்சிக்கிட்டு அங்க ஒரு சாங் வெக்கலாங்க’ என்றார். நான் ‘எஸ்கேப்’ என்று ஓடிவந்துவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசம் ! மிக ரசித்தேன் நன்றி நன்றி நன்றி !

      Delete
  20. Anonymous9:58:00 PM

    த.ம. 16

    ReplyDelete
  21. கரையெல்லாம் செண்பகப் பூ நானும் தற்போது மீண்டும் படித்தேன்.கதை சுவாரசியமாக இருந்தது. ஆனல் அவர் எடுத்துக் கொண்ட நாட்டுபுறப் பாடல்கள் அவ்வளவாகக் கவரவில்லை.

    ReplyDelete
  22. நான் நூலகத்தில் படித்த கதைகள் பிடித்திருந்தால் சொந்தமாக அந்தபுத்தகத்தை வாங்கிவிடுவேன் கரையெல்லாம் செண்பகப்பூவும் என் அலமாரியில் உள்ளது.. கதை அருமை.. படமும் கூட ஓரளவு ஈடு கொடுத்திருந்த்தது.

    ReplyDelete
  23. வாசிக்க வேண்டும். நல்ல விமர்சனம்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...