Monday, April 29, 2013

பெயின்டர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்

துரைராஜ் என்ற அந்த பெயின்டர் எங்கள் ஏரியாவில் வசிப்பவர் என்ற முறையிலும், வீட்டுக்கு ஒரு முறை பெயின்ட் அடித்தவர் என்ற முறையிலும் சில வருடங்களாக தெரியும். சமீபத்தில் ஒரு நாள் அவரோடு பேசிய போது பெயிண்டர்கள் வாழ்க்கை பற்றி அறிய முடிந்தது.

அவர் பேசியதிலிருந்து

"எனக்கு இப்போ 50 வயசு ("என்னது 50 ஆ? பாத்தா சின்ன பையன் மாதிரி இருக்கீங்க சார் ") 30 வருஷமா பெயிண்டிங் வேலை செய்றேன். என்னோட அப்பா, தம்பி எல்லாரும் இதே பெயிண்டிங் தொழில் தான்.



ஏழாவது வரைக்கும் தான் படிச்சேன் அதுக்கு பிறகு படிப்பு ஏறலை. அப்பா கூட சேர்ந்து வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன். நாங்க Buவர் பாமிலி சார்.

அப்பா சென்னையில் விப்ஜியார் என்ற கம்பனியில் பெயிண்டரா வேலை பார்த்தார். என்னை ஹெல்பரா சேத்துகிட்டார். கொஞ்ச வருஷம் தொழில் கத்து கிட்டேன். கம்பனி ஓனர் லிபியாவில் ஒரு வேலை எடுத்தார். அதிலே எங்களை எல்லாம் வெளிநாட்டுக்கு அனுப்பினாங்க. அப்பா வயசாகிடுச்சுன்னு வரலை; மீசை கூட முளைக்காம 82 ஜனவரியில் லிபியா போனேன்

அங்கே போயி ரொம்ப கஷ்பட்டுட்டேன் சார். ஆயில் கிணத்தில் வேலை; அப்புறம் பெரிய ஷிப் யார்டில் பெயின்ட் அடிக்க வேண்டியிருக்கும். சில நேரம் பாலை வனத்தில் வேலை . வெயில்னா வெய்யில் அப்படி ஒரு வெய்யில். ஒரு நிலைமைக்கு மேலே எங்க முதலாளியால எங்களுக்கு சம்பளம் தர முடியலை. NOC தந்து வேற இடத்தில் வேலை செய்யுங்க என்றார். அதுக்கு பிறகு மால்ட்டா-ங்கிற பெரிய வெளி நாட்டு கம்பனியில் வேலை கிடச்சுது. அங்கே காப்பி, டீ குடுக்கும் வேலை தான். ஆனா நான் அதில் சேரலை . அம்மா, அப்பாவை பார்க்கனும்னு இருந்தது. ஊருக்கு வந்துட்டேன்.

கொஞ்ச நாள் கழிச்சு மறுபடி சவுதியில் ஆராம்கோ ஆயில் கம்பனியில் வேலை கிடைச்சு 4 வருஷம் போய் வேலை பார்த்தேன். அப்புறம் இந்தியா வந்தவன் தான். மறுபடி வெளிநாடு போகலை

எனக்கு 1 அக்கா 2 தங்கச்சி ஒரு தம்பி. அக்கா தங்கை எல்லாருக்கும் கல்யாண செலவு நான் தான் செஞ்சேன் அப்பா அவரோட 55 வயசில் இறந்துட்டார். தங்கச்சிங்க கல்யாணம் ஆக தாமதம் ஆனதால எனக்கு 32 வயசில் தான் கல்யாணம் ஆச்சு. எனக்கும் என் சம்சாரத்துக்கும் 10 வயசு வித்தியாசம்.

என் மாமனார் சின்ன வயசில் வீட்டை விட்டு ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடி போனவர். அப்புறம் என்ன ஆனார்னே இன்னி வரைக்கும் தெரியலை. மாமனார் ஏர் போர்ட்டில் வேலை பார்த்தார். அந்த வேலையை என் மாமியாருக்கு குடுத்தாங்க. அவங்களுக்கு ரெண்டு பொண்ணு. பசங்க இல்லை. நான் தான் அவங்களுக்கு பையனா கூட இருந்து பாத்துக்குறேன். நாங்க இருக்கிறது மாமியாரோட சொந்த வீடு தான் கீழ் போர்ஷன் என் மனைவியோட தங்கச்சிக்கு. மேல் போர்ஷன் எங்களுக்கு. மாமியார் எங்க கூட தான் இருக்காங்க

இந்தியா வந்த பிறகு பல இடத்தில் பெயிண்டரா வேலை பார்த்துட்டு அப்புறம் தனி காண்டிராக்டரா இப்ப 15 வருஷமா வேலை செய்யுறேன். இந்த ஏரியாவில் ஒரு 5 பேரு நம்ம கிட்டே வேலை பார்க்குறாங்க. தினம் வேலை இருக்கும்னு சொல்ல முடியாது. வேணுங்கும் போது கூப்பிட்டுக்க வேண்டியது தான்

ஒரு உண்மைய சொல்றேன். இந்த ஏரியா ஆளுங்க பெயின்டிங்கில் அவ்ளோ சுத்தம் கிடையாது. நம்ம தம்பி பூந்தமல்லியில் இருக்கான். அவன் கூட இருக்க ஆளுங்க தங்கமானவங்க. அவங்க வேலை செஞ்சா வீடு கண்ணாடி மாதிரி இருக்கும். பக்கத்திலே இருக்காங்க பஸ் செலவு கம்மின்னு தான் இவங்களை கூப்பிட்டுக்குறேன். பெரிய வேலை என்றால் தம்பியின் ஆளுங்களை வரவழைச்சுப்பேன்

சாமிநாதன்னு ஒரு பில்டர் நமக்கு ரெகுலரா வேலை தர்றார். 12 வருஷ பழக்கம். உங்களை மாதிரியே தான் அவரு (!!!??) எதையும் ஓப்பனா,. நேரா பேசிடுவார். நம்ம கிட்ட வேலை பாக்குற ஆளுன்னு நினைக்காம ஒரு பிரண்டு மாதிரி ஜாலியா பழகுவார். அவரோட எல்லா வீட்டுக்கும் நாம் தான் பெயின்ட் அடிக்கிறது

நமக்கு தெரிஞ்ச வீடுகளில் நம்மை ரெகுலரா கூப்பிடுறாங்க. நான் எல்லார் கிட்டேயும் குடும்பத்தில் ஒருத்தனா பழகிடுவேன். அதனால் எல்லாரும் நம்மை மறுபடி மறுபடி கூப்பிடுவாங்க எந்த வேலைன்னாலும் மறுக்காமல் செய்வேன்.

சின்ன சின்ன வேலைன்னா ஆளே வச்சிக்காம நானே பார்த்து முடிச்சுடுவேன்.

நம்ம கீழே வேலை செய்பவர்களை எப்பயோ ஒரு தடவை தான் கூப்பிடுறோம் இல்லையா? அதனால ஒரு ஆள்க்கு ஒரு நாளைக்கு 550 ரூபா கூலி தர்ரேன். தவிர பஸ் கூலி 50 ரூபா தரணும். இதே பில்டர்கள் என்றால் 300 ரூபா தான் தின கூலி தருவாங்க. அவங்களிடம் தினம் வேலை இருக்கும்னு பெயிண்டர் ஆளுங்க கம்மி சம்பளம் என்றாலும் தொடர்ந்து போவாங்க

என்னை பொருத்தவரை நான் யாரிடமும் போய் வேலை கேட்கவே மாட்டேன். அது தானா நம்மை தேடிகிட்டு வரும். வாரத்தில் எனக்கு ரெண்டு மூணு நாலு தான் வேலை இருக்கும். சில நேரம் ஒரே வேலை 10 நாள் இருக்கும். அப்புறம் 10 நாள் எந்த வேலையும் இருக்காது. இப்படி மாசத்துக்கு 10 அல்லது 15 நாள் தான் வேலை இருக்கும்

நானும் ஒரு ஆளா நின்னு வேலை பார்த்தா தான் என்னால ஆயிரம் ரூபா சம்பாதிக்க முடியும். இல்லாட்டி மெட்டிரியல், லேபருக்கே எல்லாம் போயிடும்.

நான் சம்பாதிக்கிறது பசங்களை படிக்க வைக்கவே சரியா இருக்கு . பையன் காலேஜில் மூணாம் வருஷம் படிக்கிறான். பொண்ணு கவர்ன்மெண்ட் ஸ்கூலில் எட்டாவது படிக்குது

மூணாவது வீட்டில் ஒரு வேலை மெட்டீரியல், லேபர் சேர்த்து எடுத்தேன். 10 நாள் வேலை.மொத்த காண்டிராக்ட் 50 ஆயிரம் ரூபா. எனக்கு ஒரு எட்டாயிரம் தங்குச்சு. மிச்சம் எல்லாம் கூலி, மெட்டேரியலுக்கு சரியா போச்சு

மெட்டேரியல் பற்றி பேச்சு வரும்போது சில பெயிண்டர்கள் மெட்டேரியலில் செமையா காசு பார்க்கிறார்களே என்று கேட்க அது பற்றி விளக்குகிறார் " ஆமா அது மாதிரி ஒரு விஷயம் நடக்க தான் செய்யது; சில பேர் மெட்டீரியல் நாங்க வாங்கி தர்றோம். நீங்க லேபர் காண்டிராக்ட் வேலை மட்டும் செய்யுங்கன்னு சொல்லுவாங்க. அப்ப மெட்டிரியல் வாங்குற கடையில் முதலிலேயே சொல்லி வச்சு 2 % கமிஷன் வாங்கிடுவாங்க சில பெயிண்டருங்க. இதெல்லாம் இந்த தொழிலில் நடக்குறது தான். நான் பெரும்பாலும் தெரிஞ்சவங்களுக்கு தான் செய்றேன். என்னை நம்பி விடுறாங்க மெட்டிரியல் மற்றும் லேபர் சேர்த்து தான் பெரும்பாலும் எடுப்பேன். அதனால் இந்த பிரச்சனை நம்ம கிட்டே கிடையாது

பெயிண்டிங் தொழில் உள்ள சிரமங்கள் பற்றி கேட்க, " தொடர்ந்து வேலை இல்லாம இருக்கிறது தான் பெரிய கஷ்டம். உடல் கஷ்டம்னு பார்த்தா வீட்டுக்கு அடிக்கிற வாட்டர் கலர் பெயின்ட் எல்லாம் பெரிய பிரச்சனை இல்லை. பெரிய பெரிய வேலையில் சில வகை பெயின்ட் தான் ரொம்ப படுத்திடும். கண் எரிய ஆரம்பிச்சிடும். சில நேரம் மயக்கம் கூட வரும்".

"மாசத்தில் பாதி நாளில் வேலை இல்லாட்டி எப்படி பொழுது போகும் ? சும்மா இருப்பது பெரிய சுமை ஆயிற்றே?" என்று கேட்டால், " சும்மா இருந்தா தானே சார்? எனக்கு எப்பவும் எங்க வீட்டு வேலை ஏதாவது இருந்து கிட்டே இருக்கும். ஒண்ணுமே இல்லாட்டி எங்க வீட்டுக்கு நானே பெயின்ட் அடிச்சிகிட்டு இருப்பேன். என் வீட்டு உள்ளே உள்ள அறைகளை பாத்தீங்கன்னா, ஒவ்வொரு வருஷம் ஒரு கலரா இருக்கும். வருஷா வருஷம் மாத்திடுவேன் எல்லாம் நான் சும்மா இருக்க நேரத்தில் அடிச்சவை தான் " என்று சிரிக்கிறார்

"என்னை பொறுத்த வரை எப்பவும் வேலை இருக்கணும்னு நினைக்க மாட்டேன். அதே மாதிரி பெருசா எதுவும் ஆசைப்பட மாட்டேன். இன்னிக்கு ஆயிரம் ரூபா கிடைச்சுதா; அதை வச்சு 5 நாள் ஓட்டு ; அடுத்த வேலை அதுக்குள் வரும்னு போயிக்கிட்டே இருப்பேன்

நாளைக்கு என்ன ஆகும்னு யாருக்கும் தெரியாது சார். இன்னிக்கு பத்தி கவலை பட்டா போதும். நாளை பத்தி பயந்து கிட்டே இருந்தா உடம்பு தான் சார் கெட்டு போகும்" என்று முடித்தார் 30 வயது மதிக்கத்தக்க இந்த 50 வயசு மனிதர்.

**********
அதீதம் ஏப்ரல் இதழில் வெளியானது. 

9 comments:

  1. யதார்த்தமான பதிவு . . .



    பகிர்வுக்கு நன்றி . . .

    ReplyDelete
  2. Anonymous11:14:00 AM

    சுவாரஸ்யமாக கூறியுள்ளீர்கள்..நன்றி.

    ReplyDelete
  3. பெயிண்டர்கள் பெரும்பாலும் ஏமாற்றுக் காரர்கள் என்ற பெயர் உண்டு. துரைராஜ் வித்தியாசமானவர்தான்.வெளியில் இருந்து பார்க்கும்போது அவர்களின் பிரச்சனைகள் நமக்கு தெரிவதில்லை. விளக்கமான பேட்டி

    ReplyDelete
  4. நல்ல யாதார்த்தமான பதிவு. அந்த பெயிண்டர் மாதிரிதான் எங்கள் வீட்டில் கலர் மாறிக் கொண்டே இருக்கும். இங்கு பெயிண்ட் அடிப்பது மிகவும் எளிது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொழுது போகாவிட்டால் அவர்களும் இதை செய்வார்கள்

    ReplyDelete
  5. பல இடங்களில் இவர்களுக்கு கெட்ட பெயரே...

    தில்லியில் பெரும்பாலான பெயிண்டர்கள் மொத்த காண்ட்ராக்ட் எடுத்துதான் செய்வார்கள். மெட்டீரியல் நாம் வாங்கித் தருகிறோம் எனச் சொன்னால் நீங்க வேற ஆள வெச்சு வேலை வாங்கிக்கோங்க என கராராக சொல்லி விடுவதைப் பார்த்திருக்கிறேன்.....

    நல்லதோர் பேட்டி.... பாராட்டுகள்.

    ReplyDelete
  6. what a man! துரைராஜின் பின்புலம் வியக்கவைத்தது. கொஞ்சம் சிலிர்க்க வைத்தது. எதையும் தாங்கும் இதயம் சிலருக்கு எப்படியோ அமைந்துவிடுகிறது. அடுத்த முறை சந்திக்கையில் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவியுங்களேன்? நன்றி.

    ReplyDelete
  7. நாளைய பொழுதை பற்றி கவலை படாமல் இருப்பதாலோ என்னவோ இன்னும் 30 வயது மனிதர் போல் தென்படுகிறார். சிறப்பான பதிவு.

    ReplyDelete
  8. வாங்க குரங்கு பெடல் நன்றி மகிழ்ச்சி

    நன்றி கலியம் பெருமாள்

    ஆம் முரளி சார்; நானும் அப்படி தான் நினைத்திருந்தேன்

    மகிழ்ச்சி கிருஷ்ணமூர்த்தி நன்றி

    வாங்க அவர்கள் உண்மைகள் : நன்றி

    வெங்கட்: டில்லி அனுபவம் பகிர்ந்தமைக்கு நன்றி

    வாங்க அப்பாதுரை சார். மகிழ்ச்சி அவசியம் சொல்கிறேன்

    நிஷா: நன்றிங்க

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...