Sunday, January 12, 2014

தூம்-3, பாண்டிய நாடு & விடியும்முன் - சினிமா விமர்சனம்

வ்வொருவரும் வீரம் அல்லது ஜில்லாவுக்கு விமர்சனம் எழுதும் போது ரீலீஸ் ஆகி கொஞ்ச காலமான வேறு சில படங்களுக்கு எழுதுகிறேன்.. பொறுத்தருள்க !
***********
தூம் - 3

எனது அபிமான நடிகர் அமீர்கான் மற்றும் நம்ம தலைவிகளில் ஒருவரான காத்ரீனா இணைந்து கலக்கும் தூம் - 3 சமீபத்தில் கண்டேன்.

கடந்த சில வருடங்களில் வந்த அனைத்து ஹிந்தி பட ரிக்கார்டுகளை முறியடித்துள்ளதாக சொல்கிறார்கள்.. அந்த அளவு படத்தில் அப்படி என்ன இருக்கு என்று தான் தெரியலை...நிச்சயம் ஒரு முறை பார்க்கத்தக்க படம். அவ்வளவே !



அமீரின் உழைப்பு, சர்க்கஸ் என்ற பின்னணி, இடைவேளைக்கு பின் வரும் செம டுவிஸ்ட், காத்ரினாவின் டான்ஸ் போன்றவை பலம். கொட்டாவி வர வைக்கும் பின்பகுதி, அபிஷேக் பச்சன் அசிஸ்டெண்ட்டாக வருபவர் ஜோக் என்ற பெயரில் போடும் மரண மொக்கை போன்றவை படத்தை மிக சுவாரஸ்ய படம் என்று சொல்ல விடாமல் தடுக்கிறது !

போகட்டும்.... காத்ரீனா அறிமுக காட்சியில் போடுகிறார் பாருங்கள் ஒரு டான்ஸ்... அதுக்கே காசு சரியா போச்சு. மற்ற படி படத்தின் பிற காட்சிகளும் அவை தரும் entertainment -ம் வெறும் போனஸ் மட்டுமே !

கத்ரினா ஆடும் "கமலி - கமலி" என்கிற அந்த பாட்டு இதோ...



பாண்டிய நாடு

கிட்டத்தட்ட டிவி யில் போடும் நிலைக்கு வந்த பின் இங்கு எழுதுவது பற்றி மன்னிக்க ! இப்போது தான் பார்க்க சந்தர்ப்பம் வாய்த்தது.



அருமையான, ஜாலியான டிபிகல் தமிழ் மசாலா படம் ! நல்ல பாட்டு, 3 பைட்டு,  குடும்ப செண்டிமெண்ட், கிச்சு கிச்சு மூட்டும் காமெடி என வெற்றிகரமான தமிழ் படத்தில் என்னென்ன வேண்டுமோ அவற்றை சொல்லி அடித்து வெற்றி கண்டுள்ளார் சுசீந்திரன். ஒரு இயக்குனராக இவரது வெற்றி சதவீதம் ஆச்சரியமூட்டுகிறது. ( விக்ரம் வைத்து செய்த ராஜபாட்டை படம் மட்டுமே தோல்வி என நினைக்கிறேன் ). வெண்ணிலா கபடி குழு, நான் மகான்  அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர் மற்றும் பாண்டிய நாடு - அனைத்தும் ஹிட் படங்களே !

கடைசியில் வரும் இரு சண்டைகள் தவிர விஷால் படம் முழுதும் பயந்தவராய் வருவது  ஆச்சரியமான விஷயம். ஹீரோ கண்ணுக்கு முன் இன்னொருவர் (விக்ராந்த்) ஹீரோ போல சண்டை போடுகிறார் !

பாரதிராஜாவின் நடிப்பு- மெலோ டிராமா. ஆனாலும் இயக்குனர் இமயம் இனி இந்த வேலையில் பிஸி ஆகி கொள்ளலாம்.  நாமும் அவரது படங்களிலிருந்து தப்பிப்போம் .

பாடல்கள் - பலவும் கேட்கும்படி உள்ளது. இமான் தமிழ் திரை உலகில் நன்கு காலூன்றி விட்டார்.

படம் - சுமாரான வெற்றி என்றே நினைக்கிறேன். வெற்றிக்கு முழு காரணம் - இயக்குனர் சுசீந்திரன் மட்டுமே !

நல்ல டைம் பாஸ் படம் .. நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.

விடியும் முன்

அண்மையில் என்னை ரொம்ப ஆச்சரியப்படுத்திய தமிழ் படம் இது  தான். பல விதங்களில் வழக்கமான தமிழ் சினிமா பாணியை தைரியமாக உடைத்துப் போட்டுள்ளனர்.

ஒரு 30 வயது பெண்மணி மற்றும் - 12 வயது பெண் குழந்தை - இருவரும் யாரிடமிருந்தோ தப்பி ஓடியபடி இருக்க - அவர்களை தேடி அலையும் இரண்டு வில்லன்கள்... இதிலேயே கதை நகர்கிறது. ஹீரோ என்ற ஒருவர் இல்லை என்பதே நமக்கு உறைக்காத படி செல்ல, கடைசியில் ஹீரோ என்று ஒருவரும் இருக்கிறார் என அறியும் போது செம சுவாரஸ்யம் !



படத்தின் ஒரிஜினல் DVD -தற்போது வந்து விட்டது. அதில் தான் இரவு 8 மணிக்கு பார்க்க துவங்கினோம். பின் படம்  தந்த படபடப்பான மன நிலையில் சாப்பிடவே தோன்றவில்லை.  ஒரு வழியாய் படம் பார்த்தவாறே சாப்பிட்டாலும் - கை கழுவ கூட எழ முடியவில்லை.. !

40 வயதுக்கு மேற்பட்ட ஆணோ, பெண்ணோ பார்க்கும்போது நமது குழந்தை இப்படி பட்ட கும்பலிடம் சிக்கினால் என்ன ஆவது என்ற எண்ணம் மனதின் ஓரம் ஓடிய படியே இருக்கும். கிட்டத்தட்ட அஞ்சாதே படத்தில் மிஸ்கின் பயன்படுத்திய உத்தி இது. 

ஆங்காங்கு மிஸ்கின் படம் பார்க்கும் உணர்வு வந்த படி இருந்தது. இதனை குறையாக அல்ல - பாராட்டாகவே சொல்கிறேன்.

 மிக அழகான பூஜா - ராசி இல்லா நடிகை என - தமிழ் திரை உலகம் அதிகம் பயன்படுத்தி கொள்ள வில்லை. இப்படத்தில் ரொம்ப  apt -ஆன  நடிப்பு அவருடையது. 

அந்த குட்டி பெண் பேச்சிலும், முக பாவத்திலும் - அசத்துகிறாள். 

குறுந்தாடி வைத்த (படத்தின் துவக்கத்தில் ஒரு பெண் இவருக்கு ஷேவிங் செய்து விடுவார்) வில்லன் யார்? இயக்குனர் ஜனநாதன் முகஜாடையில் இருந்தார். இவரும் - இன்னொரு வில்லனான ஜான் விஜய் - இருவரும் நம் திட்டுகளை மொத்தமாக வாங்கி கட்டி கொள்கிறார்கள் 

இந்த கதை - இரண்டு அடுக்குகளை கொண்டது. குழந்தைகள் கடத்தும் கும்பல் -  விபசாரம் உள்ளிட்ட கருப்பு பக்கங்கள் - நிஜமாக - நடக்கும் சாத்தியம் உள்ளவை.

படத்தின் கடைசி 15 நிமிடத்தில் காட்டப்படும் பழி வாங்கும் படலம் பார்க்க மிக சுவாரஸ்யம் எனினும் - படம் முடிந்ததும் யோசித்தால் முழுக்க சினிமாட்டிக் என உறைக்கிறது 

இயக்குனர் பாலாஜி குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ! 

இது போன்ற வித்தியாச படங்கள் தான் தமிழ் திரை உலகம் மீது நம்பிக்கை கொள்ள செய்கிறது. 

5 comments:

  1. அந்த குறுந்தாடி வைத்த வில்லன் பெயர் அமரேந்திரன்... ஆங்கிலத்திலும் ஃபிரெஞ்சிலும் சில நாடகங்களை இயக்கி நடித்திருக்கிறார்... தமிழில் ஏற்கனவே பலே பாண்டியா படத்தில் நடித்திருக்கிறார்... Life of pi படத்தில் ஸ்கூல் வாத்தியார் வேடத்தில் ஒரு சில நொடிகள் தோன்றியிருக்கிறார்...

    ReplyDelete
  2. Thank you Philosophy....

    ReplyDelete
  3. Anonymous11:26:00 AM

    பாண்டியநாடு படத்தில் தன் நண்பனுக்காக (உண்மையிலேயே நெருங்கிய நண்பர்கள்) அருமையான வாய்ப்பு கொடுத்த விஷால் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்..விஜய் தனது தம்பிக்காக ஒரு படத்தில் கூட வாய்ப்பு கொடுக்காதது ஏன் என்று தெரியவில்லை..

    ReplyDelete
  4. பாண்டிய நாடு தீபாவளிக்கு மறுநாள் என் மகனுடன் ஏஜிஎஸ்-ல் பார்த்தேன். ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. விடியும் முன் ரிலீசான அன்றே பார்த்தோம். எந்த ரிவியூவும் படிக்கும் முன்பும், பூஜாவை ரொம்ப பிடிக்கும் என்பதாலும் முதல் நாளே...இருந்தாலும் மனசு மிக கஷ்டமாகி போச்சு.

    ReplyDelete
  5. நல்ல விமர்சனம்......

    தூம் 3 ஹிந்தியில் பலத்த வெற்றியைப் பெற்று எதிர்பாராத அளவு வசூலில் சாதனை புரிந்து விட்டதாக நாளிதழ்களில் பார்த்தேன்.....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...