Saturday, January 11, 2014

புத்தக சந்தையும், நம்ம புக்கும்

சென்னையில் நேற்று முதல் தொடங்கிய புத்தக சந்தையில் முதன் முறையாக எனது புத்தகமும் கிடைக்க உள்ளது.

ப்ளாகில் எழுதும் நண்பர்களில் - சிலரேனும் என்றேனும் ஒரு நாள் புத்தகம் எழுதி வெளியிட வேண்டுமென்று விரும்புவர். அப்படித் தான் எனக்கும் இப்புத்தக வெளியீடு நிகழ்ந்தது !

வெற்றிக்கோடு புத்தகம் குறித்து சில தகவல்கள்/ அனுபவங்களை சிறிது தயக்கத்தோடு பகிர்கிறேன்...

தயக்கத்தின் காரணம் - முக நூலிலோ, பிளஸ்-சிலோ இப்படி எழுதுவது பற்றி கிண்டல் அடிக்கப்படலாம்..... ஆயினும், இங்கு பகிர்பவை எனக்கு நிகழ்ந்த அனுபவங்கள். நான் சொல்லா விட்டால் (குறிப்பாக இங்கு குறிப்பிடும் சம்பவங்கள் ) - வாசிக்கும் உங்களுக்கு தெரியாமல் தான் போகும். எனவே இப்பதிவுக்கு நண்பர்களின் கிண்டல்களை - பாசிடிவ் ஆக எடுத்து கொண்டு சிரித்த படி கடந்து செல்லும் மனபாவத்தை ப்ளாகாண்டவர் எனக்கு அளிக்கட்டும் !
*************
வெற்றிக்கோடு - 2013 ஆகஸ்ட்டில் வெளியான சுய முன்னேற்ற புத்தகம். மற்ற சுய முன்னேற்ற புத்தகங்களுடன் இது வேறுபடுவது தன் வாழ்க்கை அனுபவங்களை பெருமளவு அடிப்படையாய் கொண்டு எழுதியது தான்.



ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் ஒரு புத்தகம் எழுதுமளவு செய்திகள் (மெசேஜ்!) நிச்சயம் உண்டு. மேலும் வாழ்ந்து மறைந்த பின் - நாம் இங்கு இருந்தோம் என்பதன் சாட்சியாக ஒரு புத்தகம் அமையவேண்டும் என்பது ரொம்ப நாள் என் மனதில் பதிந்து போன ஒன்று.

மேலே சொன்ன இரண்டு எண்ணங்களும் தான் வெற்றிக்கோடு புத்தகம் வெளியாவதற்கு காரணம் !

வீடுதிரும்பல் ப்ளாகில் 10 அத்தியாயம் வரை வந்தது. அதன் பின் " எல்லாவற்றையும் இங்கு எழுதி விட்டால் - அப்புறம் புத்தகத்தை யார் வாங்குவார்? " என பிற அத்தியாயங்களை வெளியிடாமல் நிறுத்தி விட்டேன் :))

இயக்குனர் கேபிள் சங்கர் - அகநாழிகை வாசுவிடம் " இதை கண்டிப்பா புக்கா போடணும் " என பரிந்துரை செய்ய, பால கணேஷ் உதவியுடன் துரித காலத்தில் அச்சிடப்பட்டு  சென்ற ஆண்டு பதிவர் சந்திப்பில் வெளியானது.

முதல் 2 நாட்களில் 150 காப்பிகள் விற்றது நான் எதிபாராத விஷயம் தான் ! நண்பனின் புத்தகம் என்ற அன்பும், சுய முன்னேற்றம் மீது இருக்கும் சிறு ஈர்ப்பும்  தான் முதல் இரு நாட்கள் விற்பனைக்கு காரணம் என நினைக்கிறேன்

புத்தகம் வெளியான பின் கிடைத்த சில அனுபவங்களை பகிர விரும்புகிறேன்

சம்பவம் - 1

அண்ணன்கள் - அக்கா குடும்பத்துக்கு வெற்றிக்கோடு புத்தகம் கூரியரில் அனுப்பி வைத்திருந்தேன். ஒரு வாரம் கழித்து அக்காவிடமிருந்து போன்.

" உன் புக்கை பார்த்துட்டு தாத்தா  (இவர் எங்கள் உறவினர் அல்ல - 82 வயதிலும் வீடு கட்டி விற்கும் கிராமத்து மனிதர் )  " உங்க தம்பி எழுதினதா?" அப்படின்னு வாங்கிட்டு போனார்; படிச்சுட்டு திரும்ப தர மாட்டேங்குறார். என் வாழ்க்கையில் நடந்த நிறைய விஷயம் இதுல இருக்கு .  இந்த புக்கை நானே வச்சுக்கிறேன் " னு சொல்லிட்டாரு.

பில்டர் தாத்தாவின் கருத்தை கேட்டபோது நெகிழ்ச்சியாக இருந்தது. அக்காவிற்கு அப்புறம் வேறு புத்தகம் அனுப்பி வைத்தேன்.

சம்பவம் - 2

ACS இன்ஸ்டிடியூட் சென்ற போது அங்கு பெரிய பொறுப்பிலிருக்கும் ராமகிருஷ்ணன் என்பவர் வெற்றிக்கோடு  படித்து விட்டு மிக சிலாகித்து பேசினார். அடுத்தடுத்த முறை செல்லும்போதும் நம்ம புக்கை டேபிள் மேலேயே வைத்திருந்தார்;  அது பற்றி கேட்க,

"மேலேயே புக்கை வச்சா தான் பார்த்துட்டு அது என்ன புக்குன்னு கேட்பாங்க ; நிறைய பேர் அப்படி கேட்டுட்டாங்க. ஆர்வமா கேட்குறவங்க கிட்டே -  புக்கை பத்தி டீடெயிலா பேசிருக்கேன். அவங்களுக்கு ரொம்ப ஆச்சரியம் !"

சம்பவம் -  3

ஒரு மீட்டிங்கில் கலந்து கொள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளேன். எஸ்கலேட்டரில் ஏறும்போது " மோகன் சார் " என ஒரு குரல். திரும்பி பார்க்க - அழைத்தது அதே மீட்டிங்கிற்கு வந்த ரவி என்ற நண்பர் - இருவரும் சற்று தள்ளி நின்றவாறு எஸ்கலேட்டரில் சென்றபடி இருக்க - " உங்க புக் படிச்சேன் சார்; அருமையா இருந்தது. கோபம் பத்தி எழுதுனது எனக்கு அப்படியே கரக்ட்டா இருந்துச்சு "

எஸ்கலேட்டரில் செல்லும்போது இப்படி ஒரு நேரடி பின்னூட்டம் கிடைத்தது காமெடியான அனுபவமாய் மனதில் பதிந்து விட்டது.

சம்பவம் -  4

சென்னையில் இயங்கி வரும்  உரத்த சிந்தனை அமைப்பில் நானும் ஒரு உறுப்பினர். அதன் தலைவர் ராஜசேகருக்கு புத்தகத்தின் ஒரு பிரதி அனுப்பியிருந்தேன். படித்து விட்டு மிகவும் பிடித்து போய் - அது பற்றி ஒரு விமர்சன / பாராட்டு கடிதம் எழுதியவர் - அடுத்து உரத்த சிந்தனை மூலம் பள்ளி ஒன்றில் நடந்த விழாவில் - முதல் மூன்று பரிசுகள்  பெற்ற மாணவர்களுக்கு தர இப்புத்தகம்  20 பிரதிகள் வாங்கினார்.

அதே உரத்த சிந்தனையை சேர்ந்த பிச்சம்மாள் என்ற வயதான பெண்மணி புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயம் பற்றியும் ஒவ்வொரு பாராவில் அலசி 5 பக்கத்தில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

சம்பவம் -5

இதனை சம்பவம் எனச் சொல்வதை விட சம்பவங்கள் என்று சொல்லணும்.

பதிவர் நண்பர்கள் என்ற குழுவுக்கு அடுத்து - இப்புத்தகத்தை அதிகம் வாங்கிய/ படித்த இன்னொரு நண்பர் குழு  - மனைவி அலுவலகத்தில் வேலை செய்வோர் தான்.

" இலவசமாக புத்தகத்தை யாருக்கும் தராதே; பணத்துக்காக சொல்லலை; இலவசம் என்றால் படிக்கவே மாட்டார்கள் " என மனைவியிடம்  சொல்லியிருந்தேன். 50 ரூபாய்க்கு தான் மனைவி அனைவருக்கும் புத்தகத்தை தந்திருக்கிறார்.

குறைந்தது இருபதுக்கும் மேற்பட்ட மனைவியின் சக ஊழியர்கள் புத்தகம் பற்றி போனில் பேசியிருக்கிறார்கள்.

குறிப்பாக - மிக வறுமை நிலையிலிருக்கும் - ஒரு அட்டெண்டர் பெண்மணி  புத்தகத்தை  படித்து விட்டு " இவருக்கு நான் ஏதாவது பரிசு தரணும்" என இரண்டு பேனாக்கள் வாங்கி எனக்கு மனைவி மூலம்  அனுப்பியிருந்தார். மிக நெகிழ்வான தருணம் அது. ஏனோ அவற்றை வைத்து எழுதவே தோன்றவில்லை  - அப்பேனாக்களை அப்படியே வைத்துள்ளேன்

***********
மேலே சொன்னவற்றில் பெரும்பாலானவை நிகழ்ந்தது புத்தகம் வெளியான முதல் சில வாரங்களில்.

வெற்றிக்கோடு புத்தகம் அகநாழிகை பதிப்பக வெளியீடு. புத்தக சந்தையில் ஸ்டால் எண் - 666 மற்றும் 667 -ல் (புதுப்புனல் ) வெற்றிக்கோடு உட்பட - அகநாழிகையின் அனைத்து படைப்புகளும் கிடைக்கும்.

எண்பது ரூபாய் விலை கொண்ட இப்புத்தகம் புத்தக சந்தையில் பதிவர் நண்பர்களுக்கு - ரூ. 50 க்கு  அகநாழிகை ஸ்டால் எண் 666 மற்றும் 667 -ல் (புதுப்புனல் ) கிடைக்கும்.



வெற்றிக்கோடு புத்தகம் ஏன் வாங்க வேண்டும் ?

1. சிறு கிராமத்தில் பிறந்து இன்று சென்னையில் கம்பனி செகரட்டரி துறையில் அனைவருக்கும் தெரியும் வண்ணம் வர எப்படி முடிந்தது - இதன் பின் இருந்த உழைப்பு, திட்டமிடல் - இப்புத்தகம் மூலம் உங்களுக்கு தெரிய வரும்.

2. வெற்றி பெற 100 % நல்லவனாகவோ, 100 % திறமைசாலியாகவோ இருக்க  வேண்டுமென்று அவசியமில்லை. மனிதர்களுக்கே உரித்தான சின்னச் சின்ன குறைகளுடன் இருந்தாலும், தம் இலக்கில் எப்படி முன்னேறுவது என்பதையும், ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை எத்தனையோ மறு வாய்ப்புகள் வழங்குவதையும் இப்புத்தகம் சொல்கிறது.

3. சுய முன்னேற்ற புத்தகம் என்ற போதும் எளிமையான பாணியில் சொல்லப்பட்டதால் - இரண்டு மணி நேரத்தில் இப்புத்தகத்தின் 17 அத்தியாயங்களை நீங்கள் வாசித்து விடலாம் !

4. நீங்கள் அறிந்த ஒரு நண்பனின் வாழ்க்கைக்  குறிப்பு என்ற அளவிலும் இது வாசிக்க படலாம் !

5. புத்தக சந்தையில் 50 ரூபாய்க்கு இப்புத்தகம் கிடைக்கிறது... !
***********
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றி !
***********
தொடர்புடைய பதிவுகள் :

சுய முன்னேற்ற புத்தகங்கள் அவசியமா ?


வீடு திரும்பல்' மோகன்குமாரின் "வெற்றிக்கோடுகள்" : ஒரு விமர்சன‌ பார்வை

14 comments:

 1. இரண்டு எண்ணங்களும் நிறைவேறியதற்கு வாழ்த்துக்கள்...

  எஸ்கலேட்டர் சம்பவம் சிறந்த நேரடி பின்னூட்டம்...! பாராட்டுக்கள்...

  ReplyDelete
 2. புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் கட்டுரை ஏற்படுத்துகிறது. பாங்க் அக்கவுண்ட் விபரம் சொல்லுங்கள். பணம் செலுத்துகிறேன் (முழு 80 ரூபாயும்). புத்தக்த்தை எனக்கு தபாலில் அனுப்பி வையுங்கள் அன்புடன் சேதுராமன் சாத்தப்பன், மும்பை

  ReplyDelete
 3. sethuraman.sathappan@gmail.com

  ReplyDelete
 4. உங்க புத்தகத்தை நான் படிக்கவே இல்லண்ணா! தூயா கொண்டுப் போனாள் இன்னும் திருப்பி தரவே இல்ல.

  ReplyDelete
 5. உங்கள் புத்தகத்தை வாங்க புத்தகத்திருவிழாவிற்கு வரமுடியாது. நான் ஒரிஸாவில் இருக்கிறேன். எனக்கு அனுப்ப முடியுமா. வங்கி எண்ணைக் குறிப்பிட்டால் பணம் ஆன்-லைன் பேங்கிங் மூலம் அனுப்புகிறேன். எனக்கும் உங்கள் புத்தகத்தை படிக்க ஆவலாக இருக்கிறது நண்பரே!

  ReplyDelete
 6. மன்னிக்கவும், இப்போதுதான் ''இணையத்தில் வாங்க'' இணைப்பைப் பார்த்தேன். வாங்கிப் படித்துவிட்டு வருகிறேன்.

  ReplyDelete
 7. வாழ்த்துகள் மோகன். அடுத்த புக்கு எப்போ?

  ReplyDelete
 8. வெற்றிக்கோடுகள் அருமையான புத்தகம்! பதிவர் சந்திப்பில் வாங்கி ஒரே மூச்சில் படித்து முடித்தேன்! உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் மூலம் அருமையாக வாழ்வில் எப்படி முன்னேற வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தவிதம் அருமை! மேலும் பல புத்தகங்கள் எழுதவும், இப்புத்தகம் இன்னும் பல்லாயிரம் விற்கவும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. எனது மனைவி மறைந்தபின் நான் தற்போது அஸ்ஸாமில், எனது மகள் வீட்டில் இருக்கிறேன். தங்கள் புத்தகம் வெளியாவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு (ஜோராட்) தமிழ் பேசக்கூட ஆள் இல்லை. ஆன் லைனில் உங்கள் புத்தகம் வாங்க இயலுமா? - பலராமன் (orbekv.blogspot.in)

  ReplyDelete
 10. பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்

  லக்கி: அடுத்த புக் துறை சார்ந்து இருக்கலாம்; எப்போ வரும் என தெரியவில்லை

  ReplyDelete
 11. வெளியீட்டு விழாவிலேயே வாங்கிவிட்டேன். படித்தும்விட்டேன். இன்னொரு இளைஞருக்குக் கொடுத்துவிட்டேன். இளைய தலைமுறைக்கு இது மிகவும் உதவிகரமான புத்தகம்.

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் சார் நல்ல நூலை இனித்தான் வாங்க வேண்டும்.

  ReplyDelete
 13. வாழ்த்துகள் மோகன்...... படித்து விட்டேன். புத்தகம் திருச்சியில் இருப்பதால் இன்னும் அதைப் பற்றி என் பக்கத்தில் எழுத வில்லை. அடுத்த முறை திருச்சி செல்லும் போது எடுத்து வந்து எழுத நினைத்திருக்கிறேன்.....

  மேலும் பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துகள்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...