Sunday, January 5, 2014

வானவில் - பெங்களூரு -மண்ணில் இந்த காதலன்றி - இவன் வேற மாதிரி

பெங்களூரு பயணம் 

இரண்டு நாள் பயணமாக பெங்களூரு சென்று - ஷாப்பிங் (மட்டும்) செய்து வந்தோம்.

பெங்களூருவில் இம்முறை வியக்க வைத்த விஷயங்கள் :

எங்கள் அண்ணன் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட் - அடடா ! இது இந்தியாதானா . வெளிநாடா என வியக்க வைத்தது. அட்டகாசமான ஜிம், வெது வெதுப்பான தண்ணீரில் நீச்சல் குளம், அற்புதமாய் பூத்து குலுங்கும் ரோஜாக்கள்.................... அப்பார்ட்மெண்ட்டை ஒரு முறை ரவுண்ட் வந்தால் ஒரு கிலோ மீட்டர் தூரமாம். ஆள் ஆளுக்கு - 3 அல்லது 4 ரவுண்டாவது வருகிறார்கள்

அழகான சுவெட்டர், வெட்டி விடப்பட்ட முடி, எளிய மேக் அப் உடன் ஒருவர் வந்து சமையல் செய்து கொண்டிருந்தார். நான் கூட பக்கத்து வீட்டு பெண்மணி என நினைத்தேன். வீட்டு வேலை செய்பவராம் ! அடேங்கப்பா ! அவரை தனியாக பார்த்தால் அப்படி சொல்லவே முடியாது !

பகல் 12 மணிக்கு மக்கள் - உடலில் வெய்யில் நன்றாக உறைக்கும் படி அடிக்கட்டும் என சிமெண்ட் பெஞ்ச்களில் வந்து அமர்கிறார்கள். சென்னையில் பகல் 12 மணிக்கு உள்ள நிலையை நினைத்து பார்த்தது மனது ! ஹூம் !

"ஊரோடு ஒத்து வாழ்" என்ற பழமொழிக்கேற்ப அங்குள்ள மக்களை போல் உடையணிய வேண்டுமென்றால்- நிச்சயம் பல ஆயிரங்கள் செலவு செய்யணும்....

மனைவியும், மகளும் இங்குள்ள டிசைன்கள் சென்னையில் கிடைக்கவே கிடைக்காது என்று என் தலை மேல் அடித்து சத்தியம் செய்து உடைகளாக வாங்கி தள்ளினார்கள்.. எனக்கு வழக்கம் போல ஒரே ஒரு குண்டூசி கூட கிடைக்கலை  !

பார்த்த படம் - இவன் வேற மாதிரி 

சரவணன் இதற்கு முன்பு இயக்கியது " எங்கேயும், எப்போதும் " . அப்படத்தை மறந்து விட்டு பார்த்தால் - இப்படத்தை ஓரளவு ஓகே என கொள்ளலாம்.

" எங்கேயும், எப்போதும் " இயக்கிய சரவணனின் அடுத்த படைப்பு என்ற எண்ணத்துடன் பார்த்தால் - பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.சிட்டிசன்,  ஜென்டில் மேன் காலத்துக் கதை. லாஜிக் ஓட்டைகள் எக்கச்சக்கம். " எங்கேயும், எப்போதும் " படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் அதன் இயல்பான காமெடி. இங்கு ஹீரோயினை காமெடி செய்ய வைக்கிறேன் என ஜோக்கர் போல ஆக்கி விட்டார். (ஹீரோயின் சுரபி அழகாய் இருக்கிறார். தமிழில் அடிக்கடி நடித்தால் ஆதரவு தரலாம் )

சுஜாதா சொல்வது போல் இரண்டாவது படம் தான் எந்த இயக்குனருக்கும் பெரிய சவால். அந்த சவாலில் சரவணன் தோற்று விட்டார் என்று தான் வருத்தத்தோடு சொல்ல வேண்டியுள்ளது !

அழகு கார்னர்படித்ததில் பிடித்தது

நம்ம வாழ்க்கை மொத்தம் 360 டிகிரியில் சுத்திக்கிட்டு இருக்கு. ஆனா நாம எல்லோரும் நம்ம பாயிண்ட் ஆப் வியூவை மட்டும், அதாவது 90 டிகிரி காட்சிகளை மட்டுமே கவனிச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்.  இந்த விஷயம் எனக்கும் ரொம்ப தாமதமாக தான் புரிந்தது. 360 டிகிரியில் 90 ஐ கழிச்சு வர்ற 270 டிகிரி கோணத்தை நாம் கண்டு கொள்வதே இல்லை

விகடன் கேள்வி பதில் பகுதியில் நடிகர் சத்யராஜ்

முகநூலில் கிறுக்கியது

எந்த ஒரு செயலையும் தொடங்குவது தான் கடினம். தொடங்கிய பின் மற்றவை தானாகவே நடக்கிறது. நம்மில் பலரும் எத்தனையோ விஷயங்களை "அப்புறம் செய்யணும்" என்றே துவங்காமல் இருந்து விடுகிறோம்.

போலவே தொடங்கிய ஒரு நல்ல விஷயத்தை சரியாக முடிப்பது இன்னொரு பெரிய சாலஞ்ச். (மாடிக்கு ஒரு பீரோவை தூக்கி செல்லும்போது கடைசி சில படிகளில் நிரம்ப திணறுவோம்.. நினைவிருக்கா? எந்த ஒரு போட்டி ஓட்டத்திலும் கடைசி சில நிமிடம் இழுத்து பிடித்து ஓடுவது தான் மிக பெரிய சவால் !)

எப்படி தொடங்குவது, எங்கே சரியாக முடிப்பது இதை சரியாக செய்ய துவங்கினால் - நினைத்த எதையும் அடையலாம் !

எதையும்.. எதையும்.. எதையும்... !

இதையே வடிவேலு பாணியில் சொல்லணும்னா " எதையும் ப்ளான் பண்ணி செய்யணும்... ஓகே?"

என்னா பாட்டுடே

ராஜாவின் மேஜிக்கில் இன்னொரு அற்புதமான பாட்டு - "மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?"

மூச்சு விடாமல் பாடுகிறார் SPB என்பது இப்பாடலையும், படத்தையும் செமையாக மார்கெட்டிங் செய்ய உதவியது. (படமும் அருமையாக இருந்தது.... )

சரணத்தை கேட்கும் போதெல்லாம் SPB எங்கேனும் மூச்சு விடுகிறாரா என்று தான் கவனிக்கிறோமே அன்றி -  பெண்ணின் அருமையை சொல்லும் இப்பாடலின் வரிகள் கவனிக்கப்படாமலே போய் விட்டது

பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா ? கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா என்று செல்லும் இப்பாடலை எழுதியது பாவலர் வரதராசன் என்று படத்தின் டைட்டில் சொன்னாலும், பின்னாளில் கங்கை அமரன் பாடலை எழுதியது தான் தானென்றும் படத்தின் மார்கெட்டிங் உத்திக்காக அப்போது வரதராசன் எழுதியதாக சொல்லப்பட்டது என்றும் சொன்னார்.

படம் வெளியான 1990- 91 ல் ரேடியோ மற்றும் டிவி யில் அதிக அளவு ஒளி /  ஒலி பரப்பப்பட்ட பாடல் இது. எங்கள் கல்லூரி நண்பன் ரவி இப்பாடலை மூச்சு விடாமல் "ஒப்பிப்பான்". எங்களுக்கு அது காமெடியாக இருக்கும் !

முதல் சரணம் முடிந்து இரண்டாவது சரணம் தொடங்கும் முன் ராஜா ப்ளூட்டில் மயக்கியிருப்பார் .. பார்த்து ரசியுங்கள் (அட்ட்டகாச ப்ளூட் இசை முடிகிற இடத்தில் தான் ராதிகா - ரஜினி ஸ்டைலில் நடந்து காண்பிப் பார் ...)சம்பவம் 

மகளுக்கு உயிரியல் பாடத்திற்காக குறிப்பிட்ட ஒரு பூ வேண்டுமென பல இடங்கள் தேடி அலைந்தோம். கடைசியாக காமாட்சி மெமோரியல் மருத்துவமனை இருக்கும் நூறடி சாலையில் அந்த பூ கிடைத்தது.

அந்த பூ ஒரு வித்யாசமான வீட்டின் (??) அருகே இருந்தது. அது ஒரு நடமாடும் வேன். அதன் அருகில் டென்ட் போல் அமைத்து ஒரு வடநாட்டு குடும்பம் ஏகப்பட்ட சிறு குழந்தைகளுடன் வசித்தனர். அதனை ஒட்டி தான் இந்த பூ கிடைத்தது.

சற்று தயக்கத்துடன் சென்று நாங்கள் பூவை பறிக்க உள்ளிருந்து ஒரு பெண்மணி - இடுப்பில் ஒரு குழந்தையுடன் வந்து " இன்னும் கொஞ்சம் பறித்து கொள்ளுங்கள் " என்று சைகை செய்தார். அழுக்கான குழந்தைகள் மூக்கில் சளி ஒழுக நின்று வேடிக்கை பார்த்தனர். குடும்ப கட்டுப்பாடே செய்து கொள்ள மாட்டார்கள் போலும் !

என் மனதை தொட்ட ஒரு விஷயம் - அவ்வளவு வறுமையில் இருக்கும் அவர்கள் ஒரு நாய் வளர்த்து வந்தது தான். அந்த நாயும் அவர்கள் ஏழ்மையை குறிப்பது போல் எலும்பும் தோலுமாய் இருந்தது.

இத்தகைய மனிதர்களை காணும் போது - அவர்களோடு பேசும்போது தான் கடவுள் நம்மை எவ்வளவோ மேலான நிலையில் வைத்துள்ளார் என தோன்றுகிறது !

9 comments:

 1. "மண்ணில் இந்த காதலன்றி" என்றும் ரசிக்க வைக்கும் பாடல்...

  சம்பவத்தில் "உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" என்ற பாடல் தான் ஞாபகம் வந்தது...

  ReplyDelete
 2. //எனக்கு வழக்கம் போல ஒரே ஒரு குண்டூசி கூட கிடைக்கலை !//

  :))

  வானவில் அருமை. தொடரட்டும்.

  ReplyDelete
 3. எப்போதும் போல் அருமை...

  ReplyDelete
 4. அனைத்துமே சுவையான சங்கதிகள்.

  ReplyDelete
 5. வெளிநாடு மாதிரியான வாழ்க்கை வாழ மாதந்திர பராமரிப்பு கட்டணம் ரூபாய் 6000கும் மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 6. Ivan Veramathiri is saravanan 3rd movie,
  2009 Ganesh Telugu
  2011 Engeyum Eppodhum Tami
  2013 Ivan Veramathiri Tamil

  ReplyDelete
 7. //சரவணன் இதற்கு முன்பு இயக்கியது " எங்கேயும், எப்போதும் " . அப்படத்தை மறந்து விட்டு பார்த்தால் - இப்படத்தை ஓரளவு ஓகே என கொள்ளலாம்.// correct correct

  ReplyDelete
 8. பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

  ReplyDelete
 9. "அந்த நாயும் அவர்கள் ஏழ்மையை குறிப்பது போல் எலும்பும் தோலுமாய் இருந்தது."

  :(

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...