Monday, July 23, 2012

காய்கறி எப்படி பார்த்து வாங்கணும்? 31 குறிப்புகள்

ம்ம வீட்டம்மா அவ்வப்போது சில வீட்டு/ சமையல் குறிப்புகள் புத்தகத்தில் படித்தோ நண்பர்களிடம் கேட்டோ எழுதி வைத்திருப்பார். காய்கறி வாங்குவது எப்படி என ஏதோ புத்தகத்தில் வாசித்து சில குறிப்புகள் எழுதி வைத்திருந்தார். உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன்

என்னென்ன காய்கறி என்ன பார்த்து வாங்க வேண்டும்?

1. வாழை தண்டு : பொறியல், சூப் - ஆகியவை செய்யலாம். மேல் பகுதி நார் அதிகம் இருக்காது, உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்து இருப்பதாக பார்த்து வாங்கினால் நல்லது

2. வெள்ளை வெங்காயம்: ( Salad used in Chinese Food) நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

3. முருங்கைக்காய் : நல்ல முருங்கை முறுக்கினால் வளைந்து கொடுக்கும். முற்றவில்லை என்று அர்த்தம்

4. சர்க்கரை வள்ளிகிழங்கு : உறுதியான கிழங்கு இனிக்கும் அடிபட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்

5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் மெதுவாக சென்றால் நல்லது என்று அர்த்தம்

6.தக்காளி : நன்றாக சிவந்த தக்காளி கூட வாங்கலாம். பெங்களூர் தக்காளி ஒரு வாரம் அப்படியே இருக்கும். கெடாது.


7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்

9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்

11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது

13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போது தான் விதைப்பகுதி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்

15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்

16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிகிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக்கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார்த்து வாங்கவும்

18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

20. கத்திரிக்காய் : தோல் soft-ஆக இருப்பது போல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம் 

23. பீன்ஸ்  பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக்காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்

24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையான நீண்ட காய் நல்லது

26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

27. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌ சௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்

30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

31.  பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்

****
பெண்களுக்கு இவற்றில் பலவும் ஏற்கனவே தெரிந்திருக்கும் ! ஆண் நண்பர்கள் இனிமே கரீட்டா காய்கறி வாங்கி வீட்டம்மாவை அசத்துங்க !

இந்த குறிப்புகளை சீரியசாக படித்து சந்தேகம் எல்லாம் கேட்டதில் குடும்ப பொறுப்பு நிறைய வந்து விட்டது என மகிழ்வோடு சொல்லி தந்தார் நம்ம வீட்டம்மா. அவருக்கு என்ன தெரியும்... ஒரு பதிவு தேற்ற தான் நாம் அக்கறையாய் விசாரித்தது என ? :)

****

நேற்றைய பதிவு: சொல்லுங்கண்ணே சொல்லுங்க : இங்கே வாசிக்கலாம் 

64 comments:

  1. அடடா! ஒரு பிரிண்ட் எடுத்து வச்சுக்கலாம் போல இருக்கே.

    ReplyDelete
  2. சார்,
    இப்ப இருக்கிற சூப்பர் மார்க்கெட்ல எல்லாமே packed coverல போட்டு தான் தராங்க...
    காய்கறி மார்க்கெட் போகும் போது கண்டிப்பா உபயோக படும்.... நன்றி..

    ReplyDelete
  3. அனுபவம் போல.....? முரளி சார் சொன்னமாதிரி பிரிண்ட் எடுத்து வெச்சிக்கலாம் போல....!

    ReplyDelete
  4. இது நம்ம ஏரியா இல்லை. ஆமா, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கையெல்லாம் கை அரிக்காம வெட்டுறது எப்படின்னும் ஒரு அனுபவப் பதிவு போடுங்களேன்!! :-)))))))))))))

    ReplyDelete
  5. மோகன் குமார், நான் வெகுநாட்களாக உங்கள் ப்ளாக்கை வாசிக்கிறேன். நன்றாக எழுதுகிறீர்கள். காய்கறி வாங்குவதில் விட்டுப்போன இரண்டு தகவல்கள்.
    கத்திரிக்காய் வாங்கும்போது, காம்பிலிருந்து நீளும் தடிமனான தோல் (பாவாடை என்று நம் வீட்டுக்கார அம்மா சொல்வார்கள், ஏனென்று தெரியாது) நீளமாக காயின் மேல் பகுதியை நிறைய மூடியிருக்க வேண்டும். கருப்பு நிற புள்ளிகள் (பூச்சி) இருக்க கூடாது.
    வெண்டைக்காயை விட்டுவிட்டீர்களே? காம்பு ஒடித்து வாங்கவேண்டும். (ஒடித்தால் கடைக்காரர் திட்டுவார்! இல்லாவிட்டால் வீட்டில் திட்டு).

    அன்புடன் வெங்கட் (ஏகப்பட்ட வெங்கட்; பதிவர் உலகில்).
    http://tamizhnesan.blogspot.com/

    ReplyDelete
  6. காய்கறி தெரிவு செய்யத் தெரியாத்தால்
    மார்கெட் போகவே பயப்படும்
    என்போன்ற நபர்களுக்கு பயனுள்ள பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. அண்ணே இதுக்கு தலைப்பு வீட்டம்மாவை அசத்துவது எப்படின்னு வைத்திருக்கலாம்...

    இதை படிச்சிட்டு உங்களுக்கு பல மின்னஞ்சல் நிச்சயம் வரும்...

    அனுபவிச்சு எழுதி இருப்பீங்க போல...

    ReplyDelete
  8. உபயோகமான பதிவு!

    இருந்தாலும் இப்போது காய்கறி விற்கும் விலையில் காய்கறியைத் தொட்டாலே சண்டைக்கு வருகிறார்கள் காய்கறி விற்பனையாளர்கள்!!

    ReplyDelete
  9. என்னெல்லாம் பாடுபடவேன்டி இருக்கு பாருங்க.....

    ஒரு பதிவைத் தேத்தறது அத்தனை சுலபமில்லையாக்கும் கேட்டோ:-)))))

    வீட்டம்மாவுக்கு என் இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  10. பதிவுக்கு பதிவும் தேத்துனமாதிரி ஆச்சு....வீட்டுலயும் நல்ல பேறு எடுத்த மாதிரி ஆச்சு... இதைத்தான் ஒரு கல்லுல ரெண்டு மாங்காய்ன்னு வாங்களோ ஹி ஹி ஹி!

    ReplyDelete
  11. கீரை வகைகளையும் சேர்த்துருக்கலாம் :-))

    பதிவு தேத்தறதுங்கறது அத்தனை சுலபமா என்ன?..

    இப்போ இந்தக் குறிப்புகளையெல்லாம் நீங்களும் தெரிஞ்சுக்கிட்டதால் இனிமே வீட்டுக்கு நீங்கதான் காய்கறி வாங்கி வர வேண்டியிருக்கும் அபாயத்தையும் ஏற்படுத்திக்கிட்டீங்களே :-))

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. குட்.

    தண்ணீரே தொடாமல் கருணை கிழங்கு, சேனை,சேப்பக் கிழங்குகளை கட் செய்தால் கை அரிப்பு வரவே வராது ஹூஸைனம்மா..

    ReplyDelete
  14. @அமுதா, நானும் தண்ணீர் தொடுவதில்லை. தோல் சீவியபின்புதான் கழுவுவேன். (கழுவித்தானே ஆகணும்?) ஆனாலும் பிறகு கை அரிச்சுத் தள்ளிடும்.

    எண்ணெய் தேய்த்துக் கொண்டு செய்தால் கொஞ்சம் குறையும். இருந்தாலும் இப்பல்லாம், க்ளவுஸ் போட்டுட்டுதான் சீவுறது, வெட்டுறது எல்லாம்!! அவ்வ்வ்.....

    ReplyDelete
  15. என்ன சார் ! அனுபவமா ? ஆனாலும் பயனுள்ள தகவல்கள்... நன்றி ! (த.ம. 9)

    ReplyDelete
  16. பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் .
    (அடுத்த பதிவு போடும்போது வீட்டுக்கார அம்மாவுக்கு விசயம்
    தெரிஞ்சிடும் இல்ல :):) )

    ReplyDelete
  17. சார்..போற போக்க பாத்த அடுத்த பதிவு எப்படி/எந்த dish washla பாத்திரம் தேய்க்றது அப்படின்னு சொல்லி மாட்டி விடுவின்கிலோ?..இருந்தாலும் இந்த பதிவு அவசியம் தான்..

    ReplyDelete
  18. இதெல்லாம் செஞ்சு , வாங்கி இப்படிதான் அசத்த றீங்களா உங்க வீட்டு அம்மணிய ...

    ReplyDelete
  19. ரைட்... நீங்க சொல்ற மாதிரி கீறி , நசுக்கி பார்த்தா கடைக்காரன் எதுவும் சொல்லாம இருக்கனுமே...
    அதுக்கு என்ன டிப்ஸ்...???

    ReplyDelete
  20. அடேங்கப்பா..எத்தனை எத்தனி குறிப்புகள்.காய்கறி வாங்கப்போகும் பொழுது மிகவும் உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
  21. பயணுள்ள குறிப்புக்கள்! இனி வீட்டம்மாவை அசத்திட வேண்டியதுதான்! நன்றி!

    ReplyDelete
  22. நல்ல உபயோகமான் பகிர்வு மோகன் சார் நான் சரியான காய்கறிகள் வாங்க தெரியாமல் அம்மா, மனைவியிடம் டோஸ் வாங்கியிருக்கிறேன்

    ReplyDelete
  23. சர்க்கரை வள்ளிக் கிழங்கு எல்லாம் வாங்குவதில்லை. பீர்க்கங்காய் சிறு வயதில் வாங்கியது! காலிபிளவர் மஞ்சள்நிறம் இருந்தால் வாங்கக் கூடாது! பரங்கிக்காயில் பிஞ்சை வாங்கி வெல்லக்கூட்டு செய்வோம்! கருணைக்கிழங்கு என்று நீங்கள் சொல்வது சேனைக்கிழங்காக இருக்க வேண்டும். ஏனெனில் கருணைக்கிழங்கு என்று சேப்பங்கிழங்குக்கு டூப் ஒன்று - மூலத்துக்கு நல்லது - இருக்கிறது! கத்திரிக்காய் காம்பு கனமாக இருக்க வேண்டும், பூச்சி இருக்கக் கூடாது!!

    ReplyDelete
  24. காய்கறிகள் வாங்குவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

    ReplyDelete
  25. Anonymous7:17:00 PM

    வெண்டைக்காயை விட்டுவிட்டீர்களே மோகன்?

    பிடிக்காதோ அந்த BRAIN FOOD?

    ReplyDelete
  26. ஒவ்வொரு காய்கறிக்கும் இவ்வோளோ விஷயமா? நிச்சயம் ஆண்கள் (சில பெண்களும்)படிக்க வேண்டிய பதிவு .இது தெரியாமல் இத்தனை நாள் வாங்கி வந்து அது சரி இல்லை ,இது சரி இல்லை என்று ஒரே பாட்டு வாங்கி கொண்டிருந்தேன்.இனி நிம்மதி.நன்றி மோகன் சார்.--

    ReplyDelete
  27. உங்களைப் பாராட்டுவதை விட உங்க வீட்டு அம்மாவைப் பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  28. நல்ல குறிப்புகள்... உபயோகமாக இருக்கும்... :)))

    //அவருக்கு என்ன தெரியும்... ஒரு பதிவு தேற்ற தான் நாம் அக்கறையாய் விசாரித்தது என ? :)//

    அடாடா... என்ன ஒரு தன்னிலை விளக்கம்... தொடருங்கள்...

    ReplyDelete
  29. அடேங்கப்பா ! இன்னிக்கு ஒரு மீட்டிங் போயிட்டேன் வந்து பார்த்தா இம்புட்டு கமண்ட்ஸ் !

    வீட்டம்மா ஒரு நோட்டு முழுக்க தன் அம்மாவிடமும் மற்றவர்களிடமும் கேட்டு சமையல் குறிப்பு எழுதி வச்சிருக்காங்க. அது ஒண்ணு ஒண்ணா அப்பப்போ எடுத்து விட்டுடலாம் போலருக்கே :)

    ReplyDelete
  30. முரளி சார்: நல்ல ஐடியா; நானும் அப்படியே பண்றேன். (சொன்னதெல்லாம் மண்டபத்தில் உள்ள ஆள் தானே; நமக்கு என்ன தெரியும்? )

    ReplyDelete
  31. ராஜ் நன்றிங்க. இங்கு சூப்பர் மார்கெட்டிலும் நாங்களே பார்த்து எடுக்கும் முறை தான் உள்ளது

    ReplyDelete
  32. வீடு சுரேஸ்குமார் said...

    அனுபவம் போல.....?

    நாட் மீ. வீட்டம்மா !வீட்டம்மா !

    ReplyDelete
  33. வெங்கட்: அதிகப்படியான தகவல்கள் தந்தமைக்கு மிக நன்றி; அதை விட பெரிய நன்றி நம் பதிவுகளை நீங்கள் தொடர்ந்து படிப்பதுக்கு. விட்டுடாதீங்க. கண்டினியூ...:)

    ReplyDelete
  34. நன்றி ரமணி சார்

    ReplyDelete
  35. சங்கவி: காய்கறிகளின் பலன் பற்றி எழுதுபவர் ஆயிற்றே நீங்கள் நன்றி

    ReplyDelete
  36. மனோ சாமிநாதன் said...

    இருந்தாலும் இப்போது காய்கறி விற்கும் விலையில் காய்கறியைத் தொட்டாலே சண்டைக்கு வருகிறார்கள் காய்கறி விற்பனையாளர்கள்!!

    ஆமாம் மேடம் :(

    ReplyDelete
  37. துளசி கோபால் said...

    ஒரு பதிவைத் தேத்தறது அத்தனை சுலபமில்லையாக்கும் கேட்டோ:-)))))

    அப்படி சொல்லுங்க டீச்சர்.

    //வீட்டம்மாவுக்கு என் இனிய பாராட்டுகள்.//

    நன்றி மேடம். இந்த பதிவில் மட்டும் அவங்க டிபார்ட்மென்ட் என்பதால் கமன்டும் முழுக்க படிச்சாங்க. மேடம் இஸ் வெரி ஹாப்பி; டேங்க்ஸ்

    ReplyDelete
  38. வரலாற்று சுவடுகள் : ஹிஹி ரைட்டு

    ReplyDelete
  39. அமைதிச்சாரல் said...

    இனிமே வீட்டுக்கு நீங்கதான் காய்கறி வாங்கி வர வேண்டியிருக்கும் அபாயத்தையும் ஏற்படுத்திக்கிட்டீங்களே :-))


    இதை கேட்டா கொஞ்சம் பயமா தான் இருக்கு


    :)


    :(

    ReplyDelete
  40. நன்றி அமுதா கிருஷ்ணா மேடம்

    ReplyDelete
  41. ஹுஸைனம்மா said...

    இப்பல்லாம், க்ளவுஸ் போட்டுட்டுதான் சீவுறது, வெட்டுறது எல்லாம்!! அவ்வ்வ்.....


    நினைச்சு பார்த்தாலே காமெடியா இருக்கு ! ஒவ்வொருத்தருக்கு ஒத்துக்கும்; சிலருக்கு அரிக்கும் போலும்

    ReplyDelete
  42. அம்பாளடியாள்: ஆமாங்க நன்றி

    ReplyDelete
  43. ஸ்ரீ அப்பா: ம்ம் என்னமோ ஓட்டுறோம்

    ReplyDelete
  44. ராமலட்சுமி மேடம்: நன்றி தன்யனானேன்

    ReplyDelete
  45. கோவை நேரம்: அப்படியே அசந்துட்டாலும் :)

    ReplyDelete
  46. ஜெட்லி: கடைக்காரர் பார்க்காத போது மட்டும் திருட்டு தனமா பண்ணணும். அதான் டிப்ஸ்

    ReplyDelete
  47. ஸாதிகா: நெம்ப நன்றிங்க.

    ReplyDelete
  48. சுரேஷ்: அசத்துங்க சார் நன்றி

    ReplyDelete
  49. r.v.saravanan said...


    நான் சரியான காய்கறிகள் வாங்க தெரியாமல் அம்மா, மனைவியிடம் டோஸ் வாங்கியிருக்கிறேன்

    டோன்ட் வொர்ரி. நீங்க தனியாள் இல்லே. நம்ம எல்லாரும் அதே குருப்பு தான்

    ReplyDelete
  50. ஸ்ரீராம்: செம அனுபவஸ்தர் போல. மிக நன்றி தகவலுக்கு. மைண்டுல வச்சிக்கிறேன்

    ReplyDelete
  51. ரசீம் கசாலி : நன்றிங்க

    ReplyDelete
  52. ரெவரி: மண்டபத்தில் எழுதி தந்தது அவ்வளவு தான்

    ReplyDelete
  53. சீன் கிரியேட்டர் : போங்க நீங்க ரொம்ப புகழுறீங்க வெக்கமா இருக்கு

    ReplyDelete
  54. AROUNA SELVAME said...

    உங்களைப் பாராட்டுவதை விட உங்க வீட்டு அம்மாவைப் பாராட்டுகிறேன்.

    பெண்கள் எல்லாரும் அவங்களை தான் பாராட்டுறாங்க. ரைட்டு !

    ReplyDelete
  55. வேறு யாரும் இதைப் பற்றிச் சொன்னார்களா என்று தெரியவில்லை! ஓரீரு இடங்களில் கிள்ளிப் பார்ப்பது கீறிப் பார்ப்பது என்று போட்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்களது நகங்களை வைத்து கீறி மற்றும் கிள்ளிவிட்டு வாங்காமல் வந்தால் அந்தக் காய்கறிகளுக்கும், கடைக்காரருக்கும், அதை அடுத்து வாங்கிச் செல்பவர்களுக்கும் தானே பாதிப்பு? வெண்டைக்காயைக் கூட காம்பை ஒடிக்க முற்படாமல், தொட்டுப் பார்த்து மென்மையா அல்லது முற்றலா என்று உணர்ந்து, வாங்க இயலும். அதைப் போலவே தொடுதல் மூலம் மட்டுமே காயை உணர முயன்று பாருங்களேன்?

    ReplyDelete
  56. Anonymous10:55:00 PM

    அன்புள்ள மோகன் குமார்,

    அருமையான பதிவு. ரங்கமணிகளுக்கு உபயோகமாக இருக்கும் :-)

    ஒரு ஜோக் ஞாபகத்துக்கு வந்தது...

    பையன் அம்மாவிடம்: 'அம்மா, எனக்கு ஒரு சந்தேகம். கறிகாய்க் கடையில் மீந்து போன காய்கறிகளை எல்லாம் என்ன செய்வார்கள் ?'

    அம்மா: 'உன் அப்பா தலையில் கட்டி விடுவார்கள்!!'

    ReplyDelete
  57. சார் நல்ல தகவலுக்கு நன்றி! இதெல்லாம் மனப்பாடம் (கொஞ்சம் கஷ்டம்) செய்து வைத்துகொண்டால் பிறகு உதவும்!!!
    ஒரு சந்தேகம்.. இப்படியே எல்லாரும் ஒரு காய நசுக்கி கீறி முறுக்கிட்ட பாவம் கடக்காரன், கடன்காரன் தான் ஆகிடுவன்!!!

    ReplyDelete
  58. உபயோகமான் பகிர்வு மோகன்
    நானெல்லாம் இப்போ இரண்டு மாதங்களாகத்தான் காய்கறி வாங்க கடைக்கு போகிறேன். அம்மாவும், கணவரும் வீட்டுக்குள்ளேயே வைச்சி வளர்த்துட்டாங்க.இந்த நேரத்துல ரொம்ப உபயோகமான தகவல் எனக்கு..மனப்பாடம் பண்ணிட்டேன். நன்றி மோகன் குமார்!

    ReplyDelete
  59. குடும்பப் பொறுப்பு நல்லாகவே வந்திருக்கிறது :)))

    பொறுமையாகப் பகிர்ந்ததுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  60. மோகன்,

    நிறைய சொல்லியிருக்கிங்க, சிலதில் மட்டும் கொஞ்சம் மாற்றங்கள் இருக்கு.

    தக்காளி வாங்குவது புளிப்பு சுவைக்காக, ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும் நாட்டு தக்காளியில் தான் புளிப்பு சுவை நன்றாக இருக்கும், பெங்களூர் நவீன் தக்காளி சீக்கிரம் வீணாகாது ஆனால் சுவை குறைவே, நாட்டு தக்காளியில் சாம்பார் வச்சு பாருங்க வித்தியாசம் தெரியும்.

    முட்டைகோஸ்,காலிப்பிளவர் எல்லாம் நல்லா அழுத்தமாக இருக்கணும்.

    வெட்டிய் சேப்பங்கிழங்கு பிங்க் கலரில் இருந்தால் வெட்டி ரொம்ப நேரமாக திறந்து இருக்குன்னு அர்த்தம், காரணம் ஆக்சிடேஷன் , எனவே கலர் மாறாமல் இருக்கும் கிழங்கே பிரஷ்.

    சின்ன வெங்காயத்திலும் பழசு விட புதுசே நல்ல சுவை இருக்கும், வெங்காயம் நாள் ஆக ஆக நீர்ச்சத்து குறையும்,காரம் போய்விடும்.

    நமக்கு வரும் வெங்காயமே பெரும்பாலும் பழைய வெங்காயமாகவே இருக்கும்.எல்லாம் பட்டரை போட்டோ அல்லது கோல்ட் ஸ்டோரோஜிலோ வைத்தது தான்.

    உருளை கிழங்கும் தோல் கீறினால் வரணும் என்பதும் சரியல்ல,அது நீண்ட நாள் கோல்ட் ஸ்டோரேஜில் இருந்து இருக்கலாம்.

    உருளைக்கிழங்கை அழுத்தினால் கல்லு போல இருக்க கூடாது ,கொஞ்சம் அழுந்தனும், வதங்காமல் இருக்கணும்.

    மெல்லிய ஊசி மிளகாய் தான் காரமாக இருக்கும், நீங்க குண்டு மிளகாய்னு சொல்லுறிங்க வித்தியாசமாக.

    ஒரு பாதுகாப்பு குறிப்பு:

    எந்த காய்கறிகளாக இருந்தாலும் சமைப்பதற்கு முன்னர் ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு வைக்கவும், ஏன் எனில் "ஸ்டோரெஜ் பெஸ்ட்" தாக்காமல் இருக்க சரக்கு ஏற்றும் முன்னர் பூச்சு மருந்து கரைசலில் முக்கி எடுத்தே மூட்டை கட்டுவார்கள்.

    முக்கியமாக முட்டைக்கோஸ்,காலிப்பிளவர், கேரட், உருளைக்கிழங்கு போன்றவைக்கு இந்த டிரீட்மெண்ட் உண்டு. மேலும் உருளையில் முளைவிடுதலை தடுக்க ஜெர்மினேஷன் அரெஸ்ட்டெர் என தனி ரசாயன குளியல் அல்லது ஃபியுமிகேஷன் செய்வார்கள்.

    ReplyDelete
  61. எந்த காய்கறிகளாக இருந்தாலும் சமைப்பதற்கு முன்னர் ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு வைக்கவும், ஏன் எனில் "ஸ்டோரெஜ் பெஸ்ட்" தாக்காமல் இருக்க சரக்கு ஏற்றும் முன்னர் பூச்சு மருந்து கரைசலில் முக்கி எடுத்தே மூட்டை கட்டுவார்கள்.--உபயோகமான தகவல் நன்றி வவ்வால் (இந்தபெயரை எழுதும்போது கொஞசம் சங்கடமாக இருக்கு)

    ReplyDelete
  62. நல்லக் குறிப்பு. என் கணவருக்கு கொடுக்க வேண்டும். அவர்
    காய்கறிக்காரர் கொடுப்பதை வாங்கி வருவார்.

    உங்களுக்கு தெரிந்து இருப்பதால் உங்கள் மனைவிக்கு நல்ல காய்கறி கிடைக்கும் சமைக்க.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...